“அநுதினமும்” நம் ஒப்புக்கொடுத்தலுக்கேற்ப வாழ்தல்
“ஒருவன் என் பின்னே வர விரும்பினால் அவன் தன்னைத்தான் வெறுத்து, தன் சிலுவையை அநுதினமும் எடுத்துக்கொண்டு, என்னைப் பின்பற்றக்கடவன்.”—லூக்கா 9:23.
1. கிறிஸ்தவர்களாக நம்முடைய வெற்றியை மதிப்பிடுவதற்கு ஒரு வழி என்ன?
நாம் சுய-தியாகமுள்ள பக்தியைக் காண்பிக்கும் ஆட்களாக இருந்திருக்கிறோமா? அரசாங்கத்தில் பொறுப்புள்ள ஸ்தானங்களை வகிப்பவர்களின் வெற்றியை மதிப்பிடுவதற்கு இக்கேள்விக்குரிய பதில் ஒரு காரணியாக இருக்கிறது என்று ஐக்கிய மாகாணங்களின் 35-வது ஜனாதிபதி ஜான் எஃப். கென்னடி சொன்னார். இக்கேள்வி, கிறிஸ்தவ ஊழியர்களாக நம்முடைய வெற்றிக்கு ஒரு சோதனையாக இருப்பதில் அதிக ஆழமான முக்கியத்துவமுடையதாய் இருக்கக்கூடும்.
2. “ஒப்புக்கொடுத்தல்” என்ற சொல்லை ஒரு அகராதி எவ்வாறு விளக்குகிறது?
2 ஆனால், ஒப்புக்கொடுத்தல் என்றால் என்ன? “ஒரு தெய்வீக நபரிடமோ அல்லது ஒரு பரிசுத்த உபயோகத்துக்கென்றோ ஒப்புக்கொடுக்கும் ஒரு செயல் அல்லது சடங்கு,” “ஒரு குறிப்பிட்ட நோக்கத்துக்காக அர்ப்பணிப்பது அல்லது ஒதுக்கி வைப்பது,” “சுய-தியாகமுள்ள பக்தி” என்று வெப்ஸ்டர்ஸ் நைன்த் நியூ காலேஜியேட் டிக்ஷ்னரி அதை விளக்குகிறது. ‘சுய-தியாகமுள்ள பக்தியை’ அர்த்தப்படுத்தி அந்த வார்த்தையை ஜான் எஃப். கென்னடி உபயோகித்தது போல் தோன்றுகிறது. ஒரு கிறிஸ்தவனுக்கு ஒப்புக்கொடுத்தல் இன்னுமதிகத்தைக் குறிக்கிறது.
3. கிறிஸ்தவ ஒப்புக்கொடுத்தல் என்றால் என்ன?
3 இயேசு கிறிஸ்து தம் சீஷர்களிடம் கூறினார்: “ஒருவன் என்னைப் பின்பற்றி வர விரும்பினால், அவன் தன்னைத் தான் வெறுத்து, தன் சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றக்கடவன்.” (மத்தேயு 16:24) தெய்வீக உபயோகத்துக்காக ஒதுக்கி வைப்பது என்பது, ஞாயிற்றுக்கிழமையிலோ அல்லது ஏதாவது வணக்க ஸ்தலத்தை விஜயம் செய்யும்போதோ ஒரு வணக்கத்துக்குரிய செயலை செய்வதை மட்டும் வெறுமனே உட்படுத்துவதில்லை. அது ஒருவருடைய முழு வாழ்க்கை பாணியையும் உட்படுத்துகிறது. ஒரு கிறிஸ்தவனாக இருப்பது, இயேசு கிறிஸ்து சேவித்த கடவுளாகிய யெகோவாவை சேவிக்கையில், தன் சொந்தம் கைவிடுவது அல்லது தன்னலம் துறப்பது என்பதை அர்த்தப்படுத்தும். கூடுதலாக, கிறிஸ்துவைப் பின்பற்றுவதன் காரணமாக ஏற்படும் எந்த வகையான துன்பத்தையும் சகித்துக்கொள்வதன் மூலம் ஒரு கிறிஸ்தவன் தன் “சிலுவையை” எடுத்துக்கொள்கிறான்.
பரிபூரண முன்மாதிரி
4. இயேசுவின் முழுக்காட்டுதல் எதை அடையாளப்படுத்தியது?
4 ஒருவர் யெகோவாவுக்குத் தன்னை ஒப்புக்கொடுப்பதில் என்ன உட்பட்டிருக்கிறது என்பதை இயேசு பூமியிலிருக்கையில் நடைமுறைப்படுத்திக் காட்டினார். அவருடைய ஆர்வமுள்ள கருத்துக்கள் இவை: “பலியையும் காணிக்கையையும் நீர் விரும்பவில்லை, ஒரு சரீரத்தை எனக்கு ஆயத்தம்பண்ணினீர்.” அடுத்து அவர் கூடுதலாக சொன்னார்: “தேவனே, உம்முடைய சித்தத்தின்படி செய்ய, இதோ, வருகிறேன், புஸ்தகச்சுருளில் என்னைக் குறித்து எழுதியிருக்கிறது.” (எபிரெயர் 10:5-7) ஒப்புக்கொடுக்கப்பட்ட தேசத்தின் ஒரு அங்கத்தினராக, அவர் பிறப்பிலேயே யெகோவாவுக்குத் தம்மை ஒப்புக்கொடுத்திருந்தார். இருந்தபோதிலும், தம் பூமிக்குரிய ஊழியத்தின் ஆரம்பத்தில், யெகோவாவின் சித்தத்தைச் செய்வதற்கு அடையாளமாக முழுக்காட்டுதல் பெற தம்மையே அளித்தார், அது ஒரு கிரய பலியாக தம் ஜீவனை அளிப்பதை அவருக்கு உட்படுத்தும். யெகோவா விரும்பும் எதையும் கிறிஸ்தவர்கள் செய்யவேண்டும் என்பதில் அவர் ஒரு முன்மாதிரியை வைத்தார்.
5. பொருளுடைமைகளைப் பற்றி ஒரு பின்பற்றத்தக்க நோக்குநிலையை இயேசு எவ்வாறு நடைமுறைப்படுத்திக் காட்டினார்?
5 முழுக்காட்டுதலுக்குப் பின்பு, தம் ஜீவனையே பலியாக கொடுக்கும் மரணத்துக்கு இறுதியில் வழிநடத்திய ஒரு வாழ்க்கைப்போக்கை இயேசு பின்பற்றினார். அவர் பணம் சம்பாதிப்பதிலோ அல்லது வசதியான வாழ்க்கையை வாழ்வதிலோ அக்கறையுள்ளவராய் இல்லை. மாறாக, அவருடைய வாழ்க்கை அவருடைய ஊழியத்தைச் சுற்றி இயங்கியது. “முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள்,” என்று அவர் தம் சீஷர்களுக்குப் புத்திமதி கொடுத்தார், அவர் தாமே இந்த வார்த்தைகளுக்கு இசைவாக வாழ்ந்து காட்டினார். (மத்தேயு 6:33) ஏன், அவர் ஒரு சமயம் இப்படியும்கூட சொன்னார்: “நரிகளுக்குக் குழிகளும் ஆகாயத்துப் பறவைகளுக்குக் கூடுகளும் உண்டு; மனுஷகுமாரனுக்கோ தலை சாய்க்க இடமில்லை.” (மத்தேயு 8:20) தம்மைப் பின்பற்றுபவர்களிடமிருந்து பணம் பிடுங்குவதற்காக அவர் தம்முடைய போதனைகளை மாற்றியமைத்திருக்கக்கூடும். அவர் தச்சனாக இருந்தபடியால் தம் ஊழியத்திலிருந்து நேரம் எடுத்துக்கொண்டு, அழகான மரச்சாமான்கள் செய்து, அதை விற்று கூடுதலான வெள்ளிக்காசுகளைப் பெற்றிருக்கலாம். ஆனால் பொருளாதார செழுமையை நாடுவதற்கு அவர் தம் திறமைகளைப் பயன்படுத்தவில்லை. கடவுளின் ஒப்புக்கொடுக்கப்பட்ட ஊழியர்களாக, பொருளுடைமைகளைக் குறித்ததில் சரியான நோக்குநிலையைக் கொண்டிருப்பதில் நாம் இயேசுவைப் பின்பற்றுகிறோமா?—மத்தேயு 6:24-34.
6. சுய-தியாகமுள்ள ஒப்புக்கொடுக்கப்பட்ட கடவுளின் ஊழியர்களாய் இருப்பதில் நாம் எவ்வாறு இயேசுவைப் பின்பற்றலாம்?
6 கடவுளுக்குச் சேவை செய்வதை முதலாவது வைக்கையில், இயேசு தம் சொந்த அக்கறைகளை நாடவில்லை. பொது ஊழியத்தில் மூன்றரை வருடங்கள் ஈடுபட்டிருந்தபோது, அவருடைய வாழ்க்கை சுய-தியாகமுள்ள வாழ்க்கையாக இருந்தது. ஒரு சமயம், சாப்பிடுவதற்குக்கூட நேரம் எடுத்துக்கொள்ளாமல் அதிக வேலையாயிருந்த பிறகு, “மேய்ப்பனில்லாத ஆடுகளைப்போலத் தொய்ந்துபோனவர்களும் சிதறப்பட்டவர்களுமாய் இருந்த” ஜனங்களுக்குப் போதிக்க இயேசு மனமுள்ளவராயிருந்தார். (மத்தேயு 9:36; மாற்கு 6:31-34) “பிரயாணத்தினால் இளைப்படைந்தவராய்” இருந்தபோதிலும், சீகாரில் இருந்த யாக்கோபுடைய கிணற்றுக்கு வந்த சமாரியப் பெண்ணிடம் பேசுவதற்கு அவர் முன்வந்தார். (யோவான் 4:6, 7, 13-15) அவர் எப்போதும் தம்முடைய நலனைக் காட்டிலும் மற்றவர்களின் நலனை முதலாவதாகக் கருதினார். (யோவான் 11:5-15) கடவுளையும் மற்றவர்களையும் சேவிப்பதற்கு நம்முடைய சொந்த அக்கறைகளைத் தாராளமாக தியாகம் செய்வதன் மூலம் நாம் இயேசுவைப் பின்பற்றலாம். (யோவான் 6:38) நம்மிடம் கேட்கப்படும் மிகக் குறைந்த அளவை மட்டும் செய்வதற்குப் பதிலாக, நாம் எவ்வாறு கடவுளை உண்மையாகவே பிரியப்படுத்த முடியும் என்பதன் அடிப்படையில் சிந்திப்பதன் மூலம் நம்முடைய ஒப்புக்கொடுத்தலுக்கு ஏற்றபடி வாழ்வோம்.
7. எப்போதும் யெகோவாவுக்குக் கனம் செலுத்துவதில் நாம் எவ்வாறு இயேசுவைப் பின்பற்றலாம்?
7 ஜனங்களுக்கு உதவி செய்வதன் மூலம் இயேசு தம் பேரில் கவனத்தை ஈர்க்க ஒருபோதும் முயற்சி செய்யவில்லை. அவர் கடவுளுடைய சித்தத்தைச் செய்ய கடவுளுக்கு தம்மை ஒப்புக்கொடுத்திருந்தார். செய்யப்பட்ட எல்லா காரியங்களுக்கும் அவருடைய தகப்பனாகிய யெகோவா எல்லா மகிமையும் பெற்றுக்கொள்ளும்படி எப்போதும் நிச்சயித்துக் கொண்டார். தலைவன் ஒருவன் அவரை நோக்கி “நல்ல போதகரே” என்றழைத்து “நல்ல” என்ற சொல்லை ஒரு பட்டப்பெயராக பயன்படுத்தியபோது, “தேவன் ஒருவர் தவிர நல்லவன் ஒருவனும் இல்லையே” என்று சொல்லி இயேசு அவனைத் திருத்தினார். (லூக்கா 18:18, 19; யோவான் 5:19, 30) நாமும் இயேசுவைப் போல் நம்மிடமாக அல்லாமல், உடனடியாக யெகோவாவுக்குக் கனத்தைச் செலுத்தக்கூடியவர்களாக இருக்கிறோமா?
8. (அ) ஒரு ஒப்புக்கொடுத்த மனிதனாக, இயேசு எவ்வாறு உலகத்திலிருந்து தம்மை பிரித்து வைத்துக்கொண்டார்? (ஆ) நாம் எவ்வாறு அவரைப் பின்பற்ற வேண்டும்?
8 பூமியின் மீது தம்முடைய ஒப்புக்கொடுக்கப்பட்ட வாழ்க்கை முழுவதுமாக, தெய்வீக சேவைக்காக ஒதுக்கி வைத்திருந்தார் என்பதை இயேசு நடைமுறைப்படுத்திக் காட்டினார். “குற்றமில்லாத மாசற்ற ஆட்டுக்குட்டி”யாக மீட்கும் பலியாக அளிப்பதற்காக அவர் தம்மையே சுத்தமாக வைத்துக்கொண்டார். (1 பேதுரு 1:19; எபிரெயர் 7:26) அவர் மோசேயின் நியாயப்பிரமாண சட்டத்தின் எல்லா கட்டளைகளையும் கடைப்பிடித்து, அந்தச் சட்டத்தை நிறைவேற்றினார். (மத்தேயு 5:17; 2 கொரிந்தியர் 1:20) ஒழுக்கங்களின் பேரில் தம்முடைய சொந்த போதனைக்கு ஏற்ப அவர் வாழ்ந்து காட்டினார். (மத்தேயு 5:27, 28) கெட்ட உள்நோக்கங்களுக்காக எவருமே அவரை நியாயமாக குற்றஞ்சாட்ட முடியாது. உண்மையிலேயே அவர் ‘அக்கிரமத்தை வெறுத்தார்.’ (எபிரெயர் 1:9) கடவுளின் அடிமைகளாக, நம்முடைய வாழ்க்கையையும் நம்முடைய உள்ளெண்ணங்களையும் யெகோவாவின் பார்வையில் சுத்தமாக வைத்திருப்பதன் மூலம் நாம் இயேசுவைப் பின்பற்றுவோமாக.
எச்சரிப்பு தரும் உதாரணங்கள்
9. பவுல் என்ன எச்சரிப்பு தரும் உதாரணத்தைக் குறிப்பிட்டார், நாம் ஏன் இந்த உதாரணத்தை சிந்திக்க வேண்டும்?
9 இயேசுவின் முன்மாதிரிக்கு வேறுபட்டதாக, நமக்கு இஸ்ரவேலரின் எச்சரிப்பு தரும் உதாரணம் உள்ளது. யெகோவா தங்களுக்குச் சொன்னவற்றையெல்லாம் செய்வோம் என்று அவர்கள் அறிவித்த பிறகும், அவர்கள் அவருடைய சித்தத்தைச் செய்ய தவறினர். (தானியேல் 9:11) இஸ்ரவேலருக்கு நிகழ்ந்த காரியங்களிலிருந்து கற்றுக்கொள்ள அப்போஸ்தலனாகிய பவுல் கிறிஸ்தவர்களை உற்சாகப்படுத்தினார். கொரிந்தியருக்கு எழுதிய தன் முதல் கடிதத்தில் பவுல் குறிப்பிட்ட சில சம்பவங்களை நாம் ஆராய்ந்து, நம்முடைய நாளில் ஒப்புக்கொடுக்கப்பட்ட கடவுளுடைய ஊழியர்கள் தவிர்க்க வேண்டிய ஆபத்துக்களைக் காண்போம்.—1 கொரிந்தியர் 10:1-6, 11.
10. (அ) ‘பொல்லாங்கான காரியங்களை’ இஸ்ரவேலர் எவ்வாறு இச்சித்தனர்? (ஆ) இஸ்ரவேலர் இரண்டாவது முறை உணவைப் பற்றி முறுமுறுத்த போது ஏன் அதிக பொறுப்புள்ளவர்களாக இருந்தனர், இந்த எச்சரிப்பு தரும் உதாரணத்திலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?
10 முதலாவது, ‘பொல்லாங்கானவைகளை இச்சியாமல்’ இருக்க வேண்டும் என்று பவுல் நமக்கு எச்சரிப்பு கொடுத்தார். (1 கொரிந்தியர் 10:6) இஸ்ரவேலர்கள் உண்பதற்கு மன்னாவை மட்டும் கொண்டிருந்ததைப் பற்றி குறைகூறிய சமயத்தை அது உங்களுக்கு நினைப்பூட்டக்கூடும். யெகோவா அவர்களுக்குக் காடையை அனுப்பினார். சுமார் ஒரு வருடத்துக்கு முன்பு, இஸ்ரவேலர் யெகோவாவுக்குத் தங்களுடைய ஒப்புக்கொடுத்தலை அறிவித்ததற்கு சற்று முன்பு, சீன்வனாந்தரத்தில் அதற்கு ஒத்த ஒரு சம்பவம் நடந்திருந்தது. (யாத்திராகமம் 16:1-3, 12, 13) ஆனால் அந்தச் சூழ்நிலைமை அதேபோன்று இருக்கவில்லை. யெகோவா முதல் முறையாக காடையை அனுப்பிய போது, இஸ்ரவேலர் முறுமுறுத்ததற்காக அவர்களைக் கணக்குக் கேட்கவில்லை. ஆனால் இந்தச் சமயம் சூழ்நிலைமை வித்தியாசமாக இருந்தது. “தங்கள் பற்கள் நடுவே இருக்கும் இறைச்சியை அவர்கள் மென்று தின்னுமுன்னே கர்த்தருடைய கோபம் ஜனங்களுக்குள்ளே மூண்டது; கர்த்தர் ஜனங்களை மகா பெரிய வாதையால் வாதித்தார்.” (எண்ணாகமம் 11:4-6, 31-34) என்ன மாற்றம் ஏற்பட்டு விட்டது? ஒப்புக்கொடுக்கப்பட்ட தேசமாக இருந்தபடியால், அவர்கள் இப்போது தங்கள் செயல்களுக்குப் பொறுப்புள்ளவர்களாய் இருந்தனர். யெகோவாவின் ஏற்பாடுகளின் பேரில் அவர்களுடைய போற்றுதல் குறைவுபட்டதானது, யெகோவா சொன்ன எல்லாவற்றையும் செய்வதாக அவர்கள் வாக்குக்கொடுத்திருந்தபோதிலும் யெகோவாவுக்கு விரோதமாக குறைகூறும்படி அவர்களை வழிநடத்தியது! இன்று யெகோவாவின் மேஜையைக் குறித்து குறைகூறுவதும்கூட அதே போன்று இருக்கிறது. “உண்மையும் விவேகமுமுள்ள ஊழியக்காரன்” மூலமாய் வரும் யெகோவாவின் ஆவிக்குரிய ஏற்பாடுகளின் பேரில் சிலர் போற்றுதலைக் காண்பிக்க தவறி விடுகின்றனர். (மத்தேயு 24:45-47) என்றபோதிலும், யெகோவா நமக்காக செய்திருப்பவற்றை நன்றியோடு மனதில் வைத்து, யெகோவா கொடுக்கும் ஆவிக்குரிய உணவை ஏற்றுக்கொள்ளும்படி நம்முடைய ஒப்புக்கொடுத்தல் தேவைப்படுத்துகிறது என்பதை நினைவில் வையுங்கள்.
11. (அ) இஸ்ரவேலர் எவ்வாறு யெகோவாவின் வணக்கத்தை விக்கிரக வணக்கத்தோடு அசுத்தப்படுத்தினர்? (ஆ) நாம் எப்படி ஒரு வகையான விக்கிரக வணக்கத்தால் பாதிக்கப்படக்கூடும்?
11 அடுத்து, பவுல் இவ்வாறு எச்சரிக்கிறார்: “அவர்களில் சிலர் விக்கிரகாராதனைக்காரர் ஆனது போல நீங்களும் ஆகாதிருங்கள்.” (1 கொரிந்தியர் 10:7) சீனாய் மலையில் யெகோவா இஸ்ரவேலரோடு உடன்படிக்கை செய்து முடித்தவுடனேயே, அங்கு நடைபெற்ற கன்றுக்குட்டி வணக்கத்தை அப்போஸ்தலன் குறிப்பிட்டார் என்பது தெளிவாகத் தெரிகிறது. ‘யெகோவாவுக்கு ஒப்புக்கொடுத்த ஊழியனாக, நான் ஒருபோதும் விக்கிரக வணக்கத்தில் ஈடுபட மாட்டேன்,’ என்று நீங்கள் ஒருவேளை சொல்லலாம். என்றபோதிலும், இஸ்ரவேலரின் நோக்குநிலையின்படி, அவர்கள் யெகோவாவை வணங்குவதை நிறுத்திவிடவில்லை என்பதை கவனியுங்கள்; இருப்பினும், அவர்கள் கன்றுக்குட்டியை வணங்கும் பழக்கத்தைக் கொண்டு வந்தனர்—கடவுளுக்கு அருவருப்பான ஒரு காரியம். இந்த விதமான வணக்கம் எதை உட்படுத்தியது? ஜனங்கள் கன்றுக்குட்டிக்கு முன்பாக பலிகள் செலுத்தினர், அதற்குப் பிறகு, “ஜனங்கள் புசிக்கவும் குடிக்கவும் உட்கார்ந்து, விளையாட எழுந்தார்கள்.” (யாத்திராகமம் 32:4-6) இன்று சிலர் தாங்கள் யெகோவாவை வணங்குவதாக உரிமைபாராட்டிக் கொள்ளலாம். ஆனால் அவர்களுடைய வாழ்க்கை யெகோவாவை வணங்குவதன் பேரில் அல்லாமல் இவ்வுலகக் காரியங்களை அனுபவிப்பதன் பேரில் மையங்கொண்டிருக்கலாம், அவர்கள் இவற்றைச் சுற்றி யெகோவாவுக்குத் தங்கள் சேவையைப் பொருத்த முயற்சி செய்கின்றனர். ஒரு பொன் கன்றுக்குட்டியின் முன் தலைவணங்குவதைப் போன்று அந்த அளவுக்கு வினைமையானதாக இல்லையென்றாலும், அது நியமத்தின் அடிப்படையில் அதிக வித்தியாசமானதாய் இல்லை. ஒருவர் தன் சொந்த விருப்பத்தைக் கடவுளாக ஆக்கிக்கொள்வது, யெகோவாவுக்குத் தன்னை ஒப்புக்கொடுத்திருப்பதற்கு ஏற்றபடி வாழ்வதிலிருந்து அதிக தூரமாய் உள்ளது.—பிலிப்பியர் 3:19.
12. பாகால்பேயோரோடே இஸ்ரவேலர் கொண்டிருந்த அனுபவத்திலிருந்து, நம்மையே சொந்தம் கைவிடுவதைப் பற்றி என்ன கற்றுக்கொள்கிறோம்?
12 பவுல் அடுத்ததாக குறிப்பிட்ட எச்சரிப்பு தரும் உதாரணத்தில் ஒருவிதமான பொழுதுபோக்கும்கூட உட்பட்டிருந்தது. “அவர்களில் சிலர் வேசித்தனம்பண்ணி, ஒரே நாளில் இருபத்துமூவாயிரம் பேர் விழுந்துபோனார்கள்; அதுபோல நாமும் வேசித்தனம்பண்ணாதிருப்போமாக.” (1 கொரிந்தியர் 10:8) மோவாபிய குமாரத்திகள் அளித்த ஒழுக்கயீனமான இன்பத்தினால் இஸ்ரவேலர்கள் கவரப்பட்டு, சித்தீமிலே பாகால்பேயோரை வணங்கும்படி வழிநடத்தப்பட்டார்கள். (எண்ணாகமம் 25:1-3, 9) யெகோவாவின் சித்தத்தைச் செய்வதற்கென்று நம்மையே சொந்தம் கைவிடுவது என்பது, ஒழுக்கசம்பந்தமான சுத்தத்தைப் பற்றிய அவருடைய தராதரங்களை ஏற்றுக்கொள்வதை உட்படுத்துகிறது. (மத்தேயு 5:27-30) சீரழிந்துகொண்டேபோகும் தராதரங்கள் நிறைந்த இந்தச் சகாப்தத்தில், எது நல்லது, எது கெட்டது என்பதைத் தீர்மானிக்க யெகோவாவின் அதிகாரத்துக்கு நம்மைக் கீழ்ப்படுத்தி, எல்லா விதமான ஒழுக்கயீன நடத்தையிலிருந்தும் நம்மை சுத்தமாக வைத்திருக்க வேண்டியதன் அவசியத்தைக் குறித்து நாம் நினைப்பூட்டப்படுகிறோம்.—1 கொரிந்தியர் 6:9-11.
13. யெகோவாவுக்கு நம்மை ஒப்புக்கொடுப்பதில் என்ன உட்பட்டிருக்கிறது என்பதை விளங்கிக்கொள்ள பினெகாஸின் உதாரணம் நமக்கு எப்படி உதவி செய்கிறது?
13 சித்தீமிலே வேசித்தனம் என்ற கண்ணிக்குள் அநேகர் விழுந்துபோன போதிலும், யெகோவாவுக்குச் செய்த தேசிய ஒப்புக்கொடுத்தலுக்கு ஏற்றபடி சிலர் வாழ்ந்தனர். அவர்களில் பினெகாஸ் என்பவர் வைராக்கியத்தில் முதன்மையானவராக இருந்தார். இஸ்ரவேலத் தலைவன் ஒருவன் ஒரு மீதியானிய ஸ்திரீயைத் தன் கூடாரத்துக்குள் கொண்டுசெல்வதைக் கண்டபோது, பினெகாஸ் உடனடியாக தன் கையில் ஈட்டியை எடுத்து அவர்களை உருவக்குத்திப்போட்டான். யெகோவா மோசேயிடம் சொன்னார்: “நான் என் எரிச்சலில் இஸ்ரவேல் புத்திரரை நிர்மூலமாக்காதபடிக்கு, . . . பினெகாஸ், என் நிமித்தம் அவர்கள் நடுவில் பக்திவைராக்கியம் காண்பித்ததினால், இஸ்ரவேல் புத்திரர் மேல் உண்டான என் உக்கிரத்தைத் திருப்பினான்.” (எண்ணாகமம் 25:11) யெகோவாவிடமாக எந்தப் போட்டியையும் பொறுத்துக்கொள்ளாமலிருப்பது—அது தான் ஒப்புக்கொடுத்தலை அர்த்தப்படுத்துகிறது. நம்முடைய இருதயங்களில் யெகோவாவுக்கென்று ஒப்புக்கொடுத்திருக்கும் இடத்தை வேறு எதுவும் எடுத்துக்கொள்ள நாம் அனுமதிக்க முடியாது. பெரும் ஒழுக்கயீனத்தைப் பொறுத்துக்கொள்ளாமல் அதை மூப்பர்களிடம் அறிவிப்பதன் மூலம் யெகோவாவின் பேரில் நமக்கிருக்கும் வைராக்கியம் சபையைச் சுத்தமாக வைத்திருக்கும்படியும்கூட நம்மை உந்துவிக்கிறது.
14. (அ) இஸ்ரவேலர் எவ்வாறு யெகோவாவை பரீட்சைக்கு உட்படுத்தினார்கள்? (ஆ) “சோர்ந்துபோகாமல்” இருப்பதற்கு யெகோவாவுக்கு நம்மை முழுவதுமாக ஒப்புக்கொடுப்பது எவ்வாறு நமக்கு உதவி செய்கிறது?
14 பவுல் மற்றொரு எச்சரிப்பு தரும் உதாரணத்தைக் குறிப்பிட்டார்: “அவர்களில் சிலர் யெகோவாவைப் பரீட்சைபார்த்து, பாம்புகளால் அழிக்கப்பட்டதுபோல நாமும் அவரைப் பரீட்சைபாராதிருப்போமாக.” (1 கொரிந்தியர் 10:9, NW) இஸ்ரவேலர் ‘வழியினிமித்தம் மனமடிவடைந்த’ போது, கடவுளுக்கு விரோதமாக மோசேயிடம் அவர்கள் குறைகூறிய சமயத்தைப் பற்றி பவுல் இங்கே பேசிக்கொண்டிருக்கிறார். (எண்ணாகமம் 21:4) நீங்கள் எப்போதாவது அந்தத் தவறைச் செய்திருக்கிறீர்களா? நீங்கள் உங்களை யெகோவாவுக்கு ஒப்புக்கொடுத்த போது, அர்மகெதோன் மிகவும் அருகாமையில் உள்ளது என்று நினைத்தீர்களா? நீங்கள் எதிர்பார்த்ததைக் காட்டிலும் யெகோவாவின் பொறுமை அதிக நீண்டதாக இருக்கிறதா? யெகோவாவுக்கு நம்மை ஒரு குறிப்பிட்ட காலப்பகுதி வரை அல்லது வெறுமனே அர்மகெதோன் வரை ஒப்புக்கொடுக்கவில்லை என்பதை ஞாபகத்தில் வையுங்கள். நம்முடைய ஒப்புக்கொடுத்தல் என்றென்றுமாக தொடர்ந்திருக்கும். ஆகையால், “நன்மைசெய்கிறதில் சோர்ந்துபோகாமல் இருப்போமாக; நாம் தளர்ந்துபோகாதிருந்தால் ஏற்றகாலத்தில் அறுப்போம்.”—கலாத்தியர் 6:9.
15. (அ) இஸ்ரவேலர் யாருக்கு விரோதமாய் முறுமுறுத்தனர்? (ஆ) யெகோவாவுக்கு நம்மை ஒப்புக்கொடுத்திருப்பது, தேவராஜ்ய அதிகாரத்துக்கு மரியாதைக் கொடுக்க எவ்வாறு நம்மை உந்துவிக்கிறது?
15 இறுதியில், யெகோவா நியமித்திருக்கும் ஊழியர்களுக்கு எதிராக ‘முறுமுறுப்பவர்களாக’ ஆகிவிடாமல் இருப்பதைக் குறித்து பவுல் எச்சரித்தார். (1 கொரிந்தியர் 10:10) கானான் தேசத்தை வேவு பார்ப்பதற்கு சென்ற 12 வேவுகாரர்களில் 10 பேர் கெட்ட அறிக்கைகளைக் கொண்டு வந்தபோது, இஸ்ரவேலர் மோசேக்கு விரோதமாக அதிகக் கடுமையாக முறுமுறுத்தனர். மோசேக்குப் பதிலாக மற்றொருவரைத் தங்கள் தலைவராக ஏற்படுத்தி, எகிப்துக்குத் திரும்பிப் போவதைக் குறித்தும்கூட அவர்கள் பேசினர். (எண்ணாகமம் 14:1-4) இன்று யெகோவாவின் பரிசுத்த ஆவியின் செயல்பாட்டின் மூலம் நமக்குக் கொடுக்கப்படும் தலைமைத்துவத்தை ஏற்றுக்கொள்கிறோமா? உண்மையும் விவேகமுமுள்ள அடிமை வகுப்பாரின் மூலம் அளிக்கப்படும் நிரம்பி இருக்கும் ஆவிக்குரிய மேஜையைக் காண்கையில், “ஏற்றவேளையிலே போஜனங்” கொடுப்பதற்கு இயேசு யாரை உபயோகித்துக் கொண்டிருக்கிறார் என்பது தெளிவாயிருக்கிறது. (மத்தேயு 24:45) யெகோவாவுக்குச் செய்திருக்கும் நம்முடைய முழு ஆத்துமாவோடுகூடிய ஒப்புக்கொடுத்தல், அவர் நியமித்திருக்கும் ஊழியர்களுக்கு மரியாதைக் காண்பிக்கும்படி நம்மைத் தேவைப்படுத்துகிறது. சில நவீன நாளைய முறுமுறுப்பவர்களைப் போல நாம் ஒருபோதும் ஆகிவிடக்கூடாது, சொல்லப்போனால் அவர்கள் இந்த உலகத்துக்குள் திரும்பவுமாக வழிநடத்திச் செல்லப்படுவதற்குத் தங்கள் கவனத்தை ஒரு புதிய தலைவரிடமாகத் திருப்பியிருக்கின்றனர்.
நான் செய்யக்கூடிய மிக அதிக அளவு இதுதானா?
16. கடவுளுடைய ஒப்புக்கொடுக்கப்பட்ட ஊழியர்கள் என்ன கேள்விகளைத் தங்களையே கேட்டுக்கொள்ள விரும்பலாம்?
16 இஸ்ரவேலர்கள் தாங்கள் யெகோவாவுக்குச் செய்திருந்த ஒப்புக்கொடுத்தல் நிபந்தனையற்றது என்பதை நினைவுகூர்ந்திருந்தால் இத்தகைய துன்பம் தரும் தவறை செய்திருக்க மாட்டார்கள். உண்மைத்தன்மையற்ற அந்த இஸ்ரவேலர்களைப் போலின்றி இயேசு கிறிஸ்து முடிவுபரியந்தம் தம் ஒப்புக்கொடுத்தலுக்கு ஏற்றபடி வாழ்ந்தார். கிறிஸ்துவைப் பின்பற்றுபவர்களாக நாம் அவருடைய முழு ஆத்துமாவோடுகூடிய பக்தியுள்ள முன்மாதிரியைப் பின்பற்றி, ‘இனி நமக்கென்று பிழைத்திராமல் கடவுளுடைய சித்தத்திற்கென்று பிழைத்திருப்பவர்களாக’ நம் வாழ்க்கையை வாழ்கிறோம். (1 பேதுரு 4:2; 2 கொரிந்தியர் 5:15-ஐ ஒப்பிடுக.) இன்று யெகோவாவின் சித்தம் “எல்லா மனுஷரும் இரட்சிக்கப்படவும், சத்தியத்தை அறிகிற அறிவை அடையவும்” வேண்டும் என்பதே. (1 தீமோத்தேயு 2:4) இதைக் குறிக்கோளாகக் கொண்டு நாம் முடிவு வருவதற்கு முன் ‘ராஜ்யத்தினுடைய இந்தச் சுவிசேஷத்தைப்’ பிரசங்கிக்க வேண்டும். (மத்தேயு 24:14) இந்தச் சேவையில் எவ்வளவு முயற்சியை நாம் உட்படுத்துகிறோம்? ‘நான் செய்யக்கூடிய மிக அதிக அளவு இதுதானா?’ என்று நம்மை நாமே கேட்டுக்கொள்ள விரும்பலாம். (2 தீமோத்தேயு 2:15) சந்தர்ப்பச் சூழ்நிலைமைகள் வித்தியாசப்படுகின்றன. “ஒருவனுக்கு . . . இல்லாததின்படியல்ல, அவனுக்கு உள்ளதின்படியே” செய்யும் சேவையில் யெகோவா மகிழ்ச்சியடைகிறார். (2 கொரிந்தியர் 8:12; லூக்கா 21:1-4) எவரும் மற்றொருவருடைய ஒப்புக்கொடுத்தலின் ஆழத்தையும் உண்மைத்தன்மையையும் நியாயந்தீர்க்கக்கூடாது. ஒவ்வொருவரும் தனிப்பட்ட விதமாய் யெகோவாவின் பேரிலுள்ள தங்கள் சொந்த பக்தியின் அளவை மதிப்பிட வேண்டும். (கலாத்தியர் 6:4) யெகோவாவின் பேரிலுள்ள நம்முடைய அன்பு ‘நான் எவ்வாறு யெகோவாவை சந்தோஷப்படுத்த முடியும்?’ என்று கேட்கும்படி நம்மைத் தூண்ட வேண்டும்.
17. பக்தி மற்றும் போற்றுதல் ஆகியவற்றுக்கு இடையே உள்ள உறவு என்ன? விளக்குக.
17 யெகோவாவுக்கான போற்றுதலில் நாம் வளருகையில் அவர் பேரிலுள்ள நம் பக்தி அதிகரிக்கிறது. ஜப்பானிலுள்ள ஒரு 14 வயது பையன் யெகோவாவுக்குத் தன்னை ஒப்புக்கொடுத்து இந்த ஒப்புக்கொடுத்தலை தண்ணீர் முழுக்காட்டுதலின் மூலம் அடையாளப்படுத்தினான். பின்னர் ஒரு விஞ்ஞானியாக ஆவதற்கு அவன் உயர்கல்வியைத் தொடர விரும்பினான். முழுநேர ஊழியத்தைப் பற்றி அவன் ஒருபோதும் எண்ணிப் பார்க்கவில்லை. ஆனால் ஒப்புக்கொடுக்கப்பட்ட ஒரு ஊழியனாக இருந்த அவன் யெகோவாவையும் அவருடைய காணக்கூடிய அமைப்பையும் விட்டுவிட விரும்பவில்லை. தன்னுடைய கல்வியின் இலக்கை அடைய அவன் ஒரு பல்கலைக்கழகத்துக்குச் சென்றான். அங்கு பல்கலைக்கழக பட்டதாரிகள் தங்கள் முழு வாழ்க்கையையும் தங்கள் கம்பெனிகளுக்கோ அல்லது தங்கள் படிப்புகளுக்கோ ஒப்புக்கொடுக்கும்படி நிர்ப்பந்தப்படுத்தப்படுவதைக் கண்டான். ‘நான் இங்கு என்ன செய்து கொண்டிருக்கிறேன்? அவர்களுடைய வாழ்க்கை முறையை உண்மையிலேயே பின்பற்றி உலகப்பிரகாரமான வேலைக்கு என்னை ஒப்புக்கொடுக்க முடியுமா? நான் ஏற்கெனவே யெகோவாவுக்கு ஒப்புக்கொடுத்திருக்கிறேன் அல்லவா?’ என்று அவன் எண்ணினான். புதுப்பிக்கப்பட்ட போற்றுதலுடன் அவன் ஒரு ஒழுங்கான பயனியராக ஆனான். தன்னுடைய ஒப்புக்கொடுத்தலைப் பற்றிய அவனுடைய புரிந்துகொள்ளுதல் அதிகரித்து, அவன் தேவை அதிகமிருக்கும் இடத்திற்குச் செல்ல தன் இருதயத்தில் தீர்மானிக்க அவனை உந்துவித்தது. அவன் ஊழியப் பயிற்சி பள்ளிக்குச் சென்று மற்றொரு தேசத்தில் ஒரு மிஷனரியாக சேவை செய்யும்படி நியமிப்பைப் பெற்றுக்கொண்டான்.
18. (அ) யெகோவாவுக்கு நம்மை ஒப்புக்கொடுப்பதில் எவ்வளவு உட்பட்டிருக்கிறது? (ஆ) யெகோவாவுக்கு நம்மை ஒப்புக்கொடுத்திருப்பதிலிருந்து என்ன வெகுமதியை நாம் பெற்றுக்கொள்ளலாம்?
18 ஒப்புக்கொடுத்தல் நம் முழு வாழ்க்கையையும் உட்படுத்துகிறது. நாம் நம்மை சொந்தம் கைவிட்டு இயேசுவின் சிறந்த முன்மாதிரியை “அநுதினமும்” பின்பற்ற வேண்டும். (லூக்கா 9:23) நாம் நம்மை சொந்தம் கைவிட்ட பிறகு, யெகோவாவிடம் அதிலிருந்து விடுப்பு பெற்றுக்கொள்வதில்லை. யெகோவா தம் ஊழியர்களுக்கு நிர்ணயித்துள்ள நியமங்களுக்கு இணக்கமாக நம் வாழ்க்கை ஆகிறது. தனிப்பட்டத் தெரிவு செய்துகொள்ளும் அம்சங்களிலும்கூட யெகோவாவுக்கு ஒப்புக்கொடுத்த வாழ்க்கையை வாழ நம்மால் ஆன மிகச் சிறந்ததை நாம் செய்கிறோமா என்று பார்த்துக்கொள்வது நமக்குப் பிரயோஜனமுள்ளது. நாம் அவருக்கு அனுதினமும் சேவை செய்து, அவரைப் பிரியப்படுத்த நாம் செய்யக்கூடிய மிக அதிகத்தைச் செய்து வருகையில் கிறிஸ்தவர்களாக நாம் வெற்றியடைந்து நம் முழு ஆத்துமாவோடுகூடிய பக்திக்குப் பாத்திரரான யெகோவாவின் அங்கீகார புன்னகை மூலம் ஆசீர்வதிக்கப்படுவோம்.
உங்களால் விளக்கமுடியுமா?
◻ இயேசு கிறிஸ்துவுக்கு ஒப்புக்கொடுத்தல் எதை உட்படுத்தியது?
◻ யெகோவாவுக்கு விரோதமாக முறுமுறுப்பதை நாம் ஏன் தவிர்க்க வேண்டும்?
◻ விக்கிரக வணக்கம் தந்திரமாக நம்முடைய வாழ்க்கையில் சிறிது சிறிதாக உட்புகுவதை எந்த விதத்தில் தவிர்க்கலாம்?
◻ கடவுளுடைய சித்தத்தைச் செய்கையில் “சோர்ந்துபோகாமல்” இருப்பதற்கு எதை நினைவில் வைப்பது நமக்கு உதவி செய்யும்?
[பக்கம் 17-ன் படம்]
ஒப்புக்கொடுத்த கிறிஸ்தவர்கள் “நன்மைசெய்கிறதில் சோர்ந்துபோகாமல்” இருக்கின்றனர்