ஆசீர்வாதங்கள் அல்லது சாபங்கள்—ஒரு தெரிவு உள்ளது!
“நான் ஜீவனையும் மரணத்தையும், ஆசீர்வாதத்தையும் சாபத்தையும் உனக்கு முன் வைத்தேன் . . . பிழைப்பதற்கு நீ ஜீவனைத் தெரிந்துகொள்.”—உபாகமம் 30:19,தி.மொ.
1. மனிதர்கள் என்ன திறமை அளிக்கப்பட்டனர்?
யெகோவா தேவன் நம்மை—அவருடைய அறிவுக்கூர்மையுள்ள மனித சிருஷ்டிகளை—நன்மைதீமை தெரிந்துகொள்ளும் சுயாதீனராக இருக்கும்படி உருவாக்கினார். நாம் அறிவின்றி வெறும் தன்னியக்கமுள்ளவர்களாக, அல்லது இயந்திர மனிதராகப் படைக்கப்படவில்லை, ஆனால் தெரிவுகளைச் செய்வதற்கான சிலாக்கியமும் பொறுப்பும் அளிக்கப்பட்டோம். (சங்கீதம் 100:3) முதல் மனிதர்—ஆதாமும் ஏவாளும்—தங்கள் நடத்தைப் போக்கைத் தெரிந்துகொள்வதற்குச் சுயாதீனராக இருந்தனர், மற்றும் தங்கள் தெரிவினிமித்தமாக கடவுளுக்குப் பதில் சொல்லவேண்டிய பொறுப்புடையோராகவும் இருந்தனர்.
2. ஆதாம் என்ன தெரிவு செய்தான், அதன் விளைவென்ன?
2 பரதீஸான பூமியில் என்றென்றும் நீடித்திருக்கக்கூடிய ஆசீர்வாதமான மனித வாழ்க்கைக்கு வேண்டியவற்றை சிருஷ்டிகர் ஏராளமாக அளித்திருக்கிறார். அந்த நோக்கம் ஏன் இன்னும் நிறைவேறவில்லை? ஏனெனில் ஆதாம் தவறானத் தெரிவு செய்தான். யெகோவா மனிதனுக்கு இந்தக் கட்டளை கொடுத்திருந்தார்: “நீ தோட்டத்திலுள்ள சகல விருட்சத்தின் கனியையும் புசிக்கவே புசிக்கலாம். ஆனாலும் நன்மைதீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியைப் புசிக்கவேண்டாம்; அதை நீ புசிக்கும் நாளில் சாகவே சாவாய்.” (ஆதியாகமம் 2:16, 17) ஆதாம் கீழ்ப்படியத் தெரிந்துகொண்டிருந்தால், நம்முடைய முதல் பெற்றோர் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பார்கள். கீழ்ப்படியாமை மரணத்தைக் கொண்டுவந்தது. (ஆதியாகமம் 3:6, 18, 19) ஆகையால் பாவமும் மரணமும் ஆதாமின் சந்ததி முழுவதற்கும் கடத்தப்பட்டிருக்கின்றன.—ரோமர் 5:12.
ஆசீர்வாதங்கள் கிடைக்கக் கூடியவையாக்கப்பட்டன
3. மனிதவர்க்கத்திற்கான தம்முடைய நோக்கம் நிறைவேற்றப்படுமென்று கடவுள் எவ்வாறு உறுதியளித்தார்?
3 மனிதவர்க்கத்தை ஆசீர்வதிப்பதற்கானத் தம்முடைய நோக்கம் முடிவில் நிறைவேறும்படி யெகோவா தேவன் ஒரு வழிவகையை ஏற்படுத்தினார். அவர்தாமே ஒரு வித்தைப் பற்றி முன்னறிவித்து, ஏதேனில் இவ்வாறு தீர்க்கதரிசனம் உரைத்தார்: “உனக்கும் ஸ்திரீக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகை உண்டாக்குவேன்; அவர் உன் தலையை நசுக்குவார், நீ அவர் குதிங்காலை நசுக்குவாய்.” (ஆதியாகமம் 3:15) ஆபிரகாமின் சந்ததியில் ஒருவரான இந்த வித்தின் மூலம், கீழ்ப்படிதலுள்ள மனிதவர்க்கத்திற்கு ஆசீர்வாதங்கள் உண்டாகும் என்று கடவுள் பின்னால் வாக்குக்கொடுத்தார்.—ஆதியாகமம் 22:15-18.
4. மனிதவர்க்கத்தை ஆசீர்வதிப்பதற்கான என்ன ஏற்பாட்டை யெகோவா செய்திருக்கிறார்?
4 ஆசீர்வாதத்துக்குரிய அந்த வாக்குக்கொடுக்கப்பட்ட வித்து இயேசு கிறிஸ்துவாக நிரூபித்தார். மனிதவர்க்கத்தை ஆசீர்வதிப்பதற்கான யெகோவாவின் ஏற்பாட்டில் இயேசு வகிக்கும் பாகத்தைக் குறித்து, கிறிஸ்தவ அப்போஸ்தலனாகிய பவுல் இவ்வாறு எழுதினார்: “நாம் இன்னும் பாவிகளாயிருக்கும்போதே கிறிஸ்து நமக்காக மரித்ததினால் கடவுள் நம்மேல் வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணுகிறார்.” (ரோமர் 5:8, தி.மொ.) பாவமுள்ள மனிதவர்க்கத்தினரில், கடவுளுக்குக் கீழ்ப்படிந்து, இயேசு கிறிஸ்துவினுடைய மீட்புக் கிரய பலியின் மதிப்பைத் தங்களுக்குப் பயன்படுத்திக்கொள்பவர்கள் ஆசீர்வாதங்களை அனுபவித்து மகிழ்வர். (அப்போஸ்தலர் 4:12) கீழ்ப்படிதலையும் ஆசீர்வாதங்களையும் நீங்கள் தெரிந்துகொள்வீர்களா? கீழ்ப்படியாமையானது, முற்றிலும் வேறுபட்ட ஒன்றில் விளைவடையும்.
சாபங்களைப் பற்றியதென்ன?
5. “சாபம்” என்ற சொல்லின் பொருளென்ன?
5 ஆசீர்வாதத்திற்கு எதிரிடையானது சாபம். “சாபம்” என்ற இந்தச் சொல், எவரைப் பற்றியாவது தீங்காகப் பேசுவது அல்லது அவருக்கு விரோதமாகப் பொல்லாங்கை பழிசாட்டுவது என்பதைக் குறிக்கிறது. இந்த எபிரெய சொல்லாகிய க்வெல்லாலா (qela·lahʹ) என்பது மூல வினைச்சொல்லாகிய க்வாலல் (qa·lalʹ) என்பதிலிருந்து வருவித்து உருவாக்கப்பட்டிருக்கிறது, “அற்பமாயிரு” என்ற சொற்பொருளுடையது. எனினும், அடையாளக் கருத்தில் பயன்படுத்துகையில், ‘தீங்கு வரும்படி கூறுவதை’ அல்லது ‘அவமதிப்பாய் நடத்துவதைக்’ குறிக்கிறது.—லேவியராகமம் 20:9; 2 சாமுவேல் 19:43; NW.
6. எலிசாவை உட்படுத்திய என்ன சம்பவம் பூர்வ பெத்தேலுக்கருகில் நடந்தது?
6 சாபம் உட்பட்ட உடனடியான ஒரு திடீர் நிகழ்ச்சிக்குரிய ஓர் உதாரணத்தைக் கவனியுங்கள். கடவுளுடைய தீர்க்கதரிசியாகிய எலிசா எரிகோவிலிருந்து பெத்தேலுக்கு நடந்து செல்கையில் இது சம்பவித்தது. அந்த விவரம் இவ்வாறு சொல்கிறது: “அவன் வழிநடந்துபோகையில் பிள்ளைகள் பட்டணத்திலிருந்து வந்து, அவனைப் பார்த்து: மொட்டத்தலையா ஏறிப்போ, மொட்டத்தலையா ஏறிப்போ என்று சொல்லி நிந்தித்தார்கள். அப்பொழுது அவன் திரும்பி அவர்களைப் பார்த்து: கர்த்தரின் [“யெகோவாவின்,” NW] நாமத்திலே அவர்களைச் சபித்தான்; உடனே காட்டிலிருந்து இரண்டு கரடிகள் புறப்பட்டு வந்து, அவர்களில் நாற்பத்திரண்டு பிள்ளைகளைப் பீறிப்போட்டது.” (2 இராஜாக்கள் 2:23, 24) நிந்தித்துக்கொண்டிருந்த அந்தப் பிள்ளைகளைச் சபித்தபோது, எலிசா என்ன கூறினார் என்பது திட்டமாய் வெளிப்படுத்தப்பட்டில்லை. இருப்பினும், வாயினால் சொல்லப்பட்டது நிகழ்ந்தது. ஏனெனில் அது கடவுளுடைய சித்தத்துக்கிசைய செயல்பட்டுக்கொண்டிருந்த அவருடைய தீர்க்கதரிசி ஒருவரால் யெகோவாவின் பெயரில் பேசப்பட்டது.
7. எலிசாவை நிந்தித்த அந்தப் பிள்ளைகளுக்கு என்ன சம்பவித்தது, ஏன்?
7 எலியா பொதுவாக அணிந்திருந்த தீர்க்கதரிசிக்குரிய ஆடையை எலிசா அணிந்திருந்தார், அந்தத் தீர்க்கதரிசியின் இடத்தை ஏற்கும் எவரும் அங்கிருக்க அந்தப் பிள்ளைகள் விரும்பாதது அந்த நிந்திப்புக்கு முக்கிய காரணமாக இருந்திருக்கலாமெனத் தோன்றுகிறது. (2 இராஜாக்கள் 2:13) தான் எலியாவின் இடத்தை ஏற்றிருக்கும் சவாலுக்குப் பதிலளிக்கவும், யெகோவாவின் தீர்க்கதரிசிக்குத் தகுந்த மதிப்பு காட்டும்படி இந்த இளைஞருக்கும் அவர்களுடைய பெற்றோருக்கும் புத்தி கற்பிக்கவும், எலிசா, எலியாவின் கடவுளுடைய பெயரில், அந்த நிந்திக்கும் கூட்டத்தின்மீது சாபத்தைக் கூறினார். அந்த இரண்டு பெண் கரடிகள் காடுகளிலிருந்து வந்து, அவமதிப்பாய்க் கேலிசெய்தவர்களில் 42 பேரை துண்டுதுண்டாகக் கிழித்துப் போடச் செய்ததன்மூலம், யெகோவா, எலிசாவைத் தம்முடைய தீர்க்கதரிசியாக அங்கீகரித்ததை வெளிப்படுத்திக் காட்டினார். அந்தக் காலத்தில் பூமியில் யெகோவா பயன்படுத்திக்கொண்டிருந்த செய்திபரிமாற்றத்திற்கான வழியாக இருந்தவரை அவர்கள் தெளிவாக அவமதித்ததால் யெகோவா அவர்கள்பேரில் முடிவான நடவடிக்கை எடுத்தார்.
8. இஸ்ரவேல் ஜனங்கள் என்ன செய்வதற்கு ஒப்புக்கொண்டார்கள், என்ன எதிர்பார்ப்புகளுடன்?
8 பல ஆண்டுகளுக்கு முன்னால், இஸ்ரவேலர், கடவுளுடைய ஏற்பாடுகளுக்கு இதைப்போன்ற அவமதிப்பைக் காட்டினர். அது இவ்வாறு உருவாகியது: பொ.ச.மு. 1513-ல், யெகோவா இஸ்ரவேல் ஜனங்களை, “கழுகுகளுடைய செட்டைகளின்மேல் சுமந்து” கொண்டுவந்ததுபோல், எகிப்திய அடிமைத்தனத்திலிருந்து விடுவித்துக் கொண்டுவருவதன்மூலம் அவர்களுக்குத் தயவு காட்டினார். அதன்பின் சீக்கிரத்திலேயே அவர்கள், கடவுளுக்குக் கீழ்ப்படிவதாக வாக்குறுதி செய்தனர். கடவுளுடைய அங்கீகாரத்தைப் பெறுவதுடன் கீழ்ப்படிதல் பிரிக்க முடியாத வகையில் எவ்வளவு நெருங்க இணைந்திருந்ததென்பதைக் கவனியுங்கள். மோசேயின்மூலம் யெகோவா இவ்வாறு சொன்னார்: “நீங்கள் என் சொல்லை உள்ளபடி கேட்டு என் உடன்படிக்கையைக் கைக்கொள்வீர்களானால் சகல ஜாதிகளிலும் நீங்களே எனக்குச் சொந்த சம்பத்தாயிருப்பீர்கள்; பூமியெல்லாம் என்னுடையது.” அதன்பின், அந்த ஜனங்கள் அதற்கு உடன்பட்டு: “யெகோவா சொன்னவைகளையெல்லாம் செய்வோம்,” என்று பதிலுரைத்தனர். (யாத்திராகமம் 19:4, 5, 8, தி.மொ.; 24:3) யெகோவாவை நேசிப்பதாக இஸ்ரவேலர் பாராட்டினர், அவருக்கு ஒப்புக்கொடுத்திருந்தனர், அவருடைய சொல்லுக்குக் கீழ்ப்படிவதாக உறுதிமொழி கூறியிருந்தனர். அவ்வாறு கீழ்ப்படிவது மிகுந்த ஆசீர்வாதங்களில் பலன் தரும்.
9, 10. மோசே சீனாய் மலையின்மேல் இருந்தபோது, இஸ்ரவேலர் என்ன செய்தார்கள், அதன் விளைவுகள் என்ன?
9 எனினும், அந்த ஒப்பந்தத்தின் அடிப்படை கூற்றுகள் “தேவனுடைய விரலினால்” கல்லில் செதுக்கப்படுவதற்கு முன்பாக, கடவுளுடைய சாபங்கள் தேவைப்படலாயின. (யாத்திராகமம் 31:18) ஏன் அத்தகைய பெரும் வருத்தந்தருகிற விளைவுகள் தகுதியாயிருந்தன? யெகோவா பேசினவற்றையெல்லாம் செய்வதற்கான ஆவலை இஸ்ரவேலர் காட்டியிருந்தனர் அல்லவா? ஆம், வார்த்தையில் அவர்கள் ஆசீர்வாதங்களைத் தேடினர், ஆனால் தங்கள் செயல்களில் சாபங்களைப் பெறுவதற்குத் தகுதியான போக்கைத் தெரிந்துகொண்டனர்.
10 மோசே சீனாய் மலையின்மேல் பத்துக் கற்பனைகளைப் பெற்றுக்கொண்டிருந்த 40 நாள் காலப்பகுதியின்போது, இஸ்ரவேலர், கடவுளுக்கு உண்மைத்தவறாதிருப்பதாகக் கொடுத்த தங்கள் முந்தின வாக்கை மீறினர். விவரப்பதிவு இவ்வாறு சொல்கிறது: “மோசே மலையிலிருந்து இறங்கிவரத் தாமதிக்கிறதை ஜனங்கள் கண்டபோது, அவர்கள் ஆரோனிடத்தில் கூட்டங்கூடி அவனைப் பார்த்து: எகிப்துதேசத்திலிருந்து எங்களை அழைத்துவந்த மனுஷனுக்கு, அந்த மோசே என்பவனுக்கு, என்ன சம்பவித்ததோ அறியோம்; நீர் எழுந்து எங்களுக்கு, முன்செல்லும் தெய்வம் ஒன்றை எங்களுக்காக உண்டாக்கும்.” (யாத்திராகமம் 32:1, தி.மொ.) இது, தம்முடைய ஜனங்களை வழிகாட்டி நடத்துவதற்கு யெகோவா அப்போது பயன்படுத்திக்கொண்டிருந்த மனித செயற்கருவியினிடமாக அவமதிப்பான மனப்பான்மையைக் காட்டினதற்கு மற்றொரு உதாரணமாக இருக்கிறது. இஸ்ரவேலர், எகிப்திய விக்கிரக வணக்கத்தைப் பின்பற்றுவதற்குக் கவர்ந்திழுக்கப்பட்டு, ஒரே நாளில், ஏறக்குறைய 3,000 பேர் பட்டயத்தால் கொல்லப்பட்டபோது, அதன் பயங்கர விளைவுகளை அனுபவித்தனர்.—யாத்திராகமம் 32:2-6, 25-29.
ஆசீர்வாதங்களும் சாபங்களும் அறிவிக்கப்படுதல்
11. ஆசீர்வாதங்களையும் சாபங்களையும் பற்றிய என்ன கட்டளைகளை யோசுவா நிறைவேற்றினார்?
11 இஸ்ரவேலின் 40 ஆண்டுகால வனாந்தர பயணத்தின் முடிவு சமயத்தில், மோசே, கடவுளுக்குக் கீழ்ப்படியும் போக்கைத் தெரிந்துகொள்வதன் பலனாக உண்டாகும் ஆசீர்வாதங்களை வரிசையாகக் கூறினார். யெகோவாவுக்குக் கீழ்ப்படியாமற்போவதை இஸ்ரவேலர் தெரிந்துகொண்டால் அவர்கள் அனுபவிக்கவிருந்த சாபங்களையும் அவர் விவரமாகக் கூறினார். (உபாகமம் 27:11–28:10) வாக்குக்கொடுக்கப்பட்ட தேசத்தில் இஸ்ரவேலர் பிரவேசித்த சிறிது காலத்துக்குப் பின், இந்த ஆசீர்வாதங்களும் சாபங்களும் உட்பட்ட மோசேயின் கட்டளைகளை யோசுவா நிறைவேற்றினார். இஸ்ரவேலின் ஆறு கோத்திரத்தார் ஏபால் மலையின் அடிவாரத்தில் நின்றார்கள், மற்ற ஆறு கோத்திரத்தார் கெரிசீம் மலைக்கு முன்னால் நின்றனர். இடையிலுள்ள பள்ளத்தாக்கில் லேவியர்கள் நின்றார்கள். ஏபால் மலைக்கு முன்னால் நிறுத்தப்பட்ட கோத்திரங்கள், அந்தத் திசையை நோக்கி வாசிக்கப்பட்ட சாபங்களுக்கு “ஆமென்” சொன்னதாகத் தெரிகிறது. மற்றவர்கள், கெரிசீம் மலைக்கு அடிவாரத்தில், தங்கள் திசையை நோக்கி லேவியர் வாசித்த ஆசீர்வாதங்களுக்குப் பதில் சொன்னார்கள்.—யோசுவா 8:30-35.
12. லேவியர்கள் அறிவித்த சாபங்களில் சில யாவை?
12 லேவியர் இவ்வாறு சொல்வதை நீங்கள் கேட்பதாகக் கற்பனைசெய்து பாருங்கள்: “யெகோவாவுக்கு அருவருப்பானதை, தொழிலாளிகளின் கைவேலையாகச் செய்யப்பட்டதும் வார்ப்பிக்கப்பட்டதுமான யாதொரு விக்கிரகத்தை, செய்து ஒளிப்பிடத்திலே வைக்கிறவன் சாபத்துக்குரியவன் . . . தன் தகப்பனையும் தன் தாயையும் அசட்டை செய்கிறவன் சாபத்திற்குரியவன். . . . அயலான் எல்லையை ஒற்றிப்போடுகிறவன் சாபத்திற்குரியவன். . . . குருடனை வழிதப்பச்செய்கிறவன் சாபத்திற்குரியவன். . . . பரதேசி, திக்கற்ற பிள்ளை, விதவை ஆகிய இவர்கள் நியாயத்தைப் புரட்டுகிறவன் சாபத்திற்குரியவன். . . . தன் தகப்பன் மனைவியோடே சயனிக்கிறவன் தன் தகப்பனுக்கு அவமானத்தை உண்டாக்கினபடியால் அவன் சாபத்திற்குரியவன். . . . எந்த மிருகத்தோடாயினும் புணர்ச்சிசெய்கிறவன் சாபத்திற்குரியவன். . . . தன் சகோதரியோடே, தன் தகப்பனுடைய குமாரத்தியானாலும் சரி தாயுடைய குமாரத்தியானாலும் சரி அவளோடே சயனிக்கிறவன் சாபத்திற்குரியவன். . . . தன் மாமியோடே சயனிக்கிறவன் சாபத்திற்குரியவன். . . . இரகசியமாய்ப் பிறனைக் கொலைசெய்கிறவன் சாபத்திற்குரியவன். . . . குற்றமில்லாதவனைக் கொலைசெய்யும்படி பரிதானம் வாங்குகிறவன் சாபத்திற்குரியவன். . . . இந்த நியாயப்பிரமாண வார்த்தைகளையெல்லாம் கைக்கொண்டு நடவாதவன் சாபத்திற்குரியவன்.” ஒவ்வொரு சாபத்துக்குப் பின்பும், ஏபால் மலைக்கு முன்னிருக்கும் கோத்திரங்கள் “ஆமென்” என்று சொல்லுகிறார்கள்.—உபாகமம் 27:15-26, தி.மொ.
13. லேவியர்கள் அறிவித்த சில ஆசீர்வாதங்களை உங்கள் சொந்த வார்த்தைகளில் நீங்கள் எவ்வாறு சொல்வீர்கள்?
13 இப்போது, கெரிசீம் மலைக்கு முன்னாலிருப்பவர்கள், லேவியர்கள் சத்தமிட்டு சொல்லும் ஒவ்வொரு ஆசீர்வாதத்திற்கும் குரலெழுப்பி பதில் சொல்வதை நீங்கள் கேட்பதாகக் கற்பனைசெய்து பாருங்கள்: “நீ பட்டணத்திலும் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பாய்; வெளியிலும் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பாய். உன் கர்ப்பத்தின் கனியும், உன் நிலத்தின் கனியும், உன் மாடுகளின் பெருக்கமும், உன் ஆடுகளின் மந்தைகளுமாகிய உன் மிருகஜீவன்களின் பலனும் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கும். உன் கூடையும், மாப்பிசைகிற உன் தொட்டியும் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கும். நீ வருகையிலும் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பாய், நீ போகையிலும் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பாய்.”—உபாகமம் 28:3-6.
14. என்ன ஆதாரத்தின்பேரில் இஸ்ரவேலர் ஆசீர்வாதங்களைப் பெறுவார்கள்?
14 இந்த ஆசீர்வாதங்களைப் பெறுவதற்கு எது ஆதாரமாக இருந்தது? இந்த விவரம் இவ்வாறு சொல்கிறது: “இந்நாளில் நான் உனக்குப் போதிக்கிற கட்டளைகளின்படியெல்லாம் ஜாக்கிரதையாய்ச் செய்யும்படி உன் கடவுளாகிய யெகோவாவின் சப்தத்திற்கு உண்மையாய்ச் செவிகொடுப்பாயானால் உன் கடவுளாகிய யெகோவா பூமியிலுள்ள சகல ஜாதிகளிலும் உன்னை மேலானவனாக்குவார். நீ உன் கடவுளாகிய யெகோவாவின் சப்தத்திற்குச் செவிகொடுக்கும்போது, இப்பொழுது சொல்லப்படும் ஆசீர்வாதங்களெல்லாம் உனக்குக் கிடைக்கும்.” (உபாகமம் 28:1, 2, தி.மொ.) ஆம், கடவுளுக்குக் கீழ்ப்படிவதே அவருடைய ஆசீர்வாதங்களை அனுபவித்து மகிழ்வதற்கு முக்கிய அம்சமாயிருந்தது. ஆனால் இந்நாளைப் பற்றியதென்ன? தனிப்பட்டவர்களாய் நாம் ஒவ்வொருவரும், ‘யெகோவாவின் சப்தத்திற்குத் தொடர்ந்து செவிகொடுத்து’ வருவதால், ஆசீர்வாதங்களையும் ஜீவனையும் தெரிந்துகொள்வோமா?—உபாகமம் 30:19, 20.
மேலும் நுட்பமாகப் பார்வை செலுத்துதல்
15. உபாகமம் 28:3-ல் பதிவுசெய்யப்பட்டுள்ள ஆசீர்வாதத்தில் என்ன குறிப்பு செய்யப்பட்டது, அதிலிருந்து நாம் எவ்வாறு பயனடையலாம்?
15 யெகோவாவுக்குக் கீழ்ப்படிந்ததால் ஓர் இஸ்ரவேலன் அனுபவித்து மகிழக்கூடிய சில ஆசீர்வாதங்களை நாம் சிந்தித்துப் பார்க்கலாம். உதாரணமாக, உபாகமம் 28:3 இவ்வாறு சொல்கிறது: “நீ பட்டணத்திலும் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பாய்; வெளியிலும் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பாய்.” கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பது இடத்தின்பேரிலோ வேலை நியமிப்பின்பேரிலோ சார்ந்தில்லை. சிலர் தங்கள் சூழ்நிலைமைகளில் சிக்கிக்கொண்டிருப்பதாக உணரலாம். இது, பொருள் சம்பந்தமாய்ப் பாழாக்கப்பட்ட ஓர் இடப்பகுதியில் அல்லது போரால் நாசமடையும் ஒரு நாட்டில் வாழ்வதனால் ஒருவேளை இருக்கலாம். மற்றவர்கள் வேறொரு இடத்தில் யெகோவாவைச் சேவிக்க ஆவலுடையோராக இருக்கலாம். கிறிஸ்தவ ஆண்கள் சிலர், தாங்கள் உதவி ஊழியராக அல்லது மூப்பராக சபையில் நியமிக்கப்பட்டிராததனால் மனச்சோர்வுற்றிருக்கலாம். சில சமயங்களில், கிறிஸ்தவ பெண்கள், பயனியர்களாக அல்லது மிஷனரிகளாக முழுநேர ஊழியத்தில் ஈடுபடுவதற்கான ஒரு நிலையில் தாங்கள் இராததனால் மனச்சோர்வுற்றவர்களாக உணருகின்றனர். எனினும், ‘யெகோவாவின் சப்தத்திற்குச் செவிகொடுத்து அவர் கேட்பவற்றையெல்லாம் கவனமாய்ச் செய்கிற’ ஒவ்வொருவரும் இப்போதும் நித்திய காலத்துக்கும் ஆசீர்வதிக்கப்படுவர்.
16. உபாகமம் 28:4-ல் உள்ள நியமம், இன்று யெகோவாவின் அமைப்பால் எவ்வாறு அனுபவிக்கப்படுகிறது?
16 உபாகமம் 28:4 இவ்வாறு சொல்கிறது: “உன் கர்ப்பத்தின் கனியும், உன் நிலத்தின் கனியும், உன் மாடுகளின் பெருக்கமும், உன் ஆடுகளின் மந்தைகளுமாகிய உன் மிருகஜீவன்களின் பலனும் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கும்.” இது, கீழ்ப்படிதலுள்ள ஓர் இஸ்ரவேலனின் சொந்தத் தனி அனுபவமாக இருக்கும் என்பதை, “உன்” என்று மொழிபெயர்க்கப்பட்டிருக்கிற எபிரெய ஒருமை சுட்டுப்பெயர் பயன்படுத்தியிருப்பது காட்டுகிறது. இன்று யெகோவாவின் கீழ்ப்படிதலுள்ள ஊழியர்களைப் பற்றியதென்ன? யெகோவாவின் சாட்சிகளுடைய அமைப்பில், உலகமெங்கும் தொடர்ந்து ஏற்பட்டுக்கொண்டிருக்கும் அதிகரிப்பும் விரிவும், ராஜ்ய நற்செய்தியை அறிவிப்போரான 50,00,000-த்திற்கு மேற்பட்டவர்களின் ஊக்கமான முயற்சிகளின்மீது கடவுளுடைய ஆசீர்வாதத்தின் பலன்களாக இருக்கின்றன. (மாற்கு 13:10) மேலும், 1995-ல் கர்த்தருடைய இராப்போஜன ஆசரிப்புக்கு 1,30,00,000-த்திற்கு மேற்பட்டவர்கள் வந்திருந்ததால், இன்னும் மிகுந்த அதிகரிப்புக்கான வாய்ப்பு இருப்பதும் தெளிவாகத் தெரிகிறது. ராஜ்ய ஆசீர்வாதங்களை நீங்கள் அனுபவித்து மகிழ்கிறீர்களா?
பலனின் வேறுபாடு இஸ்ரவேலின் தெரிவில் சார்ந்திருந்தது
17. ஆசீர்வாதங்கள் அல்லது சாபங்கள் ‘பலித்திருப்பது’ எதன்பேரில் சார்ந்திருந்தது?
17 செயல்முறையளவில், கீழ்ப்படிதலுள்ள இஸ்ரவேலனுக்கு ஆசீர்வாதங்கள் தொடரும். இவ்வாறு வாக்குக் கொடுக்கப்பட்டது: “இப்பொழுது சொல்லப்படும் ஆசீர்வாதங்களெல்லாம் உன்மேல் வந்து உனக்குப் பலிக்கும்.” (உபாகமம் 28:2) அவ்வாறே, சாபங்களைப் பற்றியும் சொல்லப்பட்டது: “இப்பொழுது சொல்லப்படும் சாபங்களெல்லாம் உன்மேல் வந்து, உனக்குப் பலிக்கும்.” (உபாகமம் 28:15) பூர்வ காலங்களின் ஓர் இஸ்ரவேலனாக நீங்கள் இருந்திருந்தால், உங்களுக்கு ஆசீர்வாதங்களா அல்லது சாபங்களா எது ‘பலித்திருக்கும்’? நீங்கள் கடவுளுக்குக் கீழ்ப்படிந்தீர்களா அல்லது கீழ்ப்படியவில்லையா என்பதன்பேரில் அது சார்ந்திருக்கும்.
18. இஸ்ரவேலர் சாபங்களை எவ்வாறு தவிர்த்திருக்கலாம்?
18 கீழ்ப்படியாமையின் வேதனையான விளைவுகள் சாபங்களாக, உபாகமம் 28:15-68-ல் குறிப்பிட்டு வைக்கப்பட்டுள்ளன. இவற்றில் சில, உபாகமம் 28:3-14-ல் வரிசையாகக் கொடுக்கப்பட்டுள்ள கீழ்ப்படிதலுக்கான ஆசீர்வாதங்களுக்கு நேர் எதிராக உள்ளன. அடிக்கடி, இஸ்ரவேல் ஜனங்கள், பொய் வணக்கத்தில் ஈடுபடுவதற்குத் தெரிந்துகொண்டதால், சாபங்களின் கடுமையான விளைவுகளை அனுபவித்தார்கள். (எஸ்றா 9:7; எரேமியா 6:6-8; 44:2-6) எத்தகைய துயரார்ந்த முடிவு! நல்லதையும் கெட்டதையும் தெளிவாக விளக்கிக் காட்டும், யெகோவாவின் ஆரோக்கியமான சட்டங்களுக்கும் நியமங்களுக்கும் கீழ்ப்படிவதான, சரியானத் தெரிவைச் செய்வதன்மூலம் அத்தகைய விளைவுகளைத் தவிர்த்திருக்கலாம். இன்று பலர், பொய் மதத்தை அனுசரிப்பது, பாலின ஒழுக்கக்கேட்டில் ஈடுபடுவது, சட்டவிரோதமான போதைப்பொருட்களைப் பயன்படுத்துவது, வெறி மயக்கமுண்டாக்கும் பானங்களை மிதமீறி குடிப்பது, போன்றவற்றைப் பழக்கமாய்ச் செய்து வருவதால், பைபிள் நியமங்களுக்கு எதிர்மாறாக நடக்கத் தெரிந்துகொண்டிருப்பதன் காரணமாக, வேதனையையும் துயர முடிவையும் அனுபவிக்கின்றனர். பூர்வ இஸ்ரவேலிலும் யூதாவிலும் நடந்ததுபோல், அத்தகைய கெட்ட தெரிவுகளைச் செய்வது, கடவுளுடைய அங்கீகாரத்தை இழப்பதிலும் தேவையற்ற இருதய வேதனையிலும் விளைவடைகிறது.—ஏசாயா 65:12-14.
19. யூதாவும் இஸ்ரவேலும் யெகோவாவுக்குக் கீழ்ப்படியத் தெரிந்துகொண்டபோது அனுபவித்து மகிழ்ந்த நிலைமைகளை விவரியுங்கள்.
19 இஸ்ரவேலர் யெகோவாவுக்குக் கீழ்ப்படிந்தபோது மாத்திரமே ஆசீர்வாதங்கள் ஏராளமாகவும் அமைதி நிலவியதாகவும் இருந்தன. உதாரணமாக, அரசன் சாலொமோனின் நாட்களைக் குறித்து நாம் இவ்வாறு வாசிக்கிறோம்: “யூதாவும் இஸ்ரவேலும் கடற்கரை மணலத்தனை ஏராளமாயிருந்து, புசித்துக் குடித்து மகிழ்ந்துகொண்டிருந்தார்கள். . . . சாலொமோனுடைய நாளெல்லாம் தாண் துவக்கிப் பெயெர்செபாமட்டும், யூதாவும் இஸ்ரவேலும் அவரவர் தங்கள் தங்கள் திராட்சச்செடியின் நிழலிலும், தங்கள்தங்கள் அத்திமரத்தின் நிழலிலும் சுகமாய்க் குடியிருந்தார்கள்.” (1 இராஜாக்கள் 4:20-25) கடவுளுடைய சத்துருக்களிடமிருந்து மிகுந்த எதிர்ப்பு உண்டாகியிருந்த அரசன் தாவீதின் காலத்திலுங்கூட, அந்த ஜனம், சத்தியத்தின் கடவுளுக்குக் கீழ்ப்படிய தெரிந்துகொண்டபோது, யெகோவாவின் ஆதரவையும் ஆசீர்வாதத்தையும் உணர்ந்தது.—2 சாமுவேல் 7:28, 29; 8:1-15.
20. மனிதரைக் குறித்து கடவுள் என்ன நம்பிக்கையுடையவராக இருக்கிறார்?
20 நீங்கள் கடவுளுக்குக் கீழ்ப்படிவீர்களா, அல்லது அவருக்குக் கீழ்ப்படியாமலிருப்பீர்களா? இஸ்ரவேலருக்கு ஒரு தெரிவு இருந்தது. ஆதாமிலிருந்து பாவ மனச்சாய்வை நாம் எல்லாரும் சுதந்தரித்திருக்கிறபோதிலும், தெரிவு சுயாதீன வரத்தையும் நாம் பெற்றிருக்கிறோம். சாத்தானும், இந்தப் பொல்லாத உலகமும், நம்முடைய அபூரணங்களும் இருப்பினும், சரியானத் தெரிவை நாம் செய்யக்கூடும். மேலும், எல்லா இக்கட்டுகளுக்கும் சோதனைகளுக்கும் எதிரில், வார்த்தையில் மட்டுமல்ல செய்கையிலும், சரியானத் தெரிவைச் செய்பவர்கள் இருப்பார்களென்று நம்முடைய சிருஷ்டிகர் நம்பிக்கையுடையவராக இருக்கிறார். (1 பேதுரு 5:8-10) நீங்கள் அவர்களுக்குள் ஒருவராக இருப்பீர்களா?
21. அடுத்தக் கட்டுரையில் என்ன ஆராயப்படும்?
21 அடுத்தக் கட்டுரையில், கடந்தகால முன்மாதிரியானவர்களின் துணைகொண்டு பார்த்து நம்முடைய மனப்பான்மைகளையும் செய்கைகளையும் சரிசெய்யக்கூடியவர்களாக இருப்போம். மோசேயின்மூலமாகப் பேசின கடவுளுடைய இவ்வார்த்தைகளுக்கு நாம் ஒவ்வொருவரும் நன்றியறிதலோடு செயல்படுவோமாக: “நான் ஜீவனையும் மரணத்தையும், ஆசீர்வாதத்தையும் சாபத்தையும் உனக்கு முன் வைத்தேன் . . . பிழைப்பதற்கு நீ ஜீவனைத் தெரிந்துகொள்.”—உபாகமம் 30:19, தி.மொ.
நீங்கள் எவ்வாறு பதிலளிப்பீர்கள்?
◻ எவ்வாறு யெகோவா, பாவிகளான மனிதருக்கு ஆசீர்வாதங்கள் கிடைக்கக்கூடும்படி செய்திருக்கிறார்?
◻ சாபங்கள் யாவை?
◻ எவ்வாறு இஸ்ரவேலர், சாபங்களுக்குப் பதிலாக ஆசீர்வாதங்களைப் பெற்றிருக்கக்கூடும்?
◻ கடவுளுக்குக் கீழ்ப்படிந்ததற்காக என்ன ஆசீர்வாதங்களை இஸ்ரவேலர் அனுபவித்து மகிழ்ந்தனர்?
[பக்கம் 15-ன் படம்]
இஸ்ரவேலர் கெரிசீம் மற்றும் ஏபால் மலைகளின் முன் கூடிவந்தனர்
[படத்திற்கான நன்றி]
Pictorial Archive (Near Eastern History) Est.