“வெளிப்படுத்தப்பட்டவைகள் நமக்கு உரியவைகள்”
“மறைவானவைகள் நம்முடைய தேவனாகிய யெகோவாவுக்கே உரியவைகள்; வெளிப்படுத்தப்பட்டவைகளோ நமக்கு உரியவைகள்.”—உபாகமம் 29:29.
ஒரு மனிதன் சுரங்கங்கள் நிறைந்த ஒர் இடத்தில் தான் இருப்பதை உணர்ந்து, ஆனால் சுரங்கங்களிடையே வெளியே போவதற்குரிய வழியைக் காண்பிக்கும் ஒரு நிலப்படம் அவனிடம் இருக்குமானால், அவன் எவ்வளவு கவனமாக அந்த நிலப்படத்தை ஆராய்ந்து அதிலுள்ள எல்லா அறிவுரைகளின்படியும் செய்வான் என்பதை உங்களால் கற்பனைச் செய்ய முடிகிறதா? அல்லது தீராத வியாதியில் அவதிப்படும் ஒரு நபரைப் பற்றி சிந்தித்துப் பாருங்கள். கடைசியாக நோய் தீர நம்பிக்கையை அளிக்கும் அண்மைக் கால மருத்துவ கண்டுப்பிடிப்புகள் அனைத்தையும் கூர்ந்து கவனித்து அதைப் பயன்படுத்திக் கொள்வதில் அவனுடைய ஆழ்ந்த அக்கறையை உங்களால் கற்பனைச் செய்ய முடிகிறதா? ஆம் அவலமான உண்மை என்னவெனில், நாம் இவ்விரண்டு நிலைமைகளிலும் இருக்கிறோம். நம்மை அழித்துவிடக் கூடிய கண்ணிகளும் படுகுழிகளும் நிறைந்த ஒரு உலகில் நாம் வாழ்ந்து வருகிறோம். மேலும் மனிதனால் சுகப்படுத்த முடியாது சுதந்தரிக்கப்பட்ட அபூரணத்தின் நோயினால் நாம் மரித்துக் கொண்டிருக்கிறோம். (1 யோவான் 2:15-17; ரோமர் 7:20, 24) கண்ணிகளை அடையாளங் கண்டுகொண்டு அவைகளைத் தவிர்க்க கடவுள் மாத்திரமே நமக்கு உதவி செய்ய முடியும். மேலும் நம்முடைய அபூரணத்துக்குப் பரிகாரம் அவரிடம் மாத்திரமே இருக்கிறது. அதன் காரணமாக நமக்கு யெகோவாவின் வெளிப்படுத்துதல்கள் தேவையாக இருக்கின்றன.
2 ஆவியால் ஏவப்பட்ட நீதிமொழிகள் புத்தகத்தின் எழுத்தாளனுங்கூட அதன் காரணமாகப் பின்வரும் இந்தப் புத்திமதியைக் கொடுத்தான்: “உன் செவியைச் சாய்த்து, ஞானிகளுடைய வார்த்தைகளைக் கேட்டு என் போதகத்தை உன் இருதயத்தில் வை.” (நீதிமொழிகள் 22:17) அதே விதமாகவே நீதிமொழிகள் 18:15-ல் நாம் பின்வருமாறு வாசிக்கிறோம்: “புத்திமானுடைய மனம் அறிவைச் சம்பாதிக்கும்; ஞானியின் செவி அறிவை நாடும்.” ஆகவே யெகோவா நமக்குக் கிடைக்கும்படியாகச் செய்யும் எந்த அறிவையும் நாம் தள்ளிவிட முடியாது.
யெகோவாவின் வெளிப்படுத்தப்பட்ட இரகசியங்கள்
3 யெகோவா அறிவை வெளிப்படுத்துவதில் மிகவும் தாராள குணமுள்ளவராக இருந்திருப்பது மகிழ்ச்சியைத் தருகிறது. சிருஷ்டிப்பின் சமயம் முதற்கொண்டு, பல்வேறுபட்ட சூழ்நிலைமைகளின் கீழும் தம்முடைய வணக்கத்தாருக்கு தேவையாக இருக்கும் அனைத்துத் தகவலையும் கடவுள் படிப்படியாக கொடுத்து வந்திருக்கிறார். (நீதிமொழிகள் 11:9; பிரசங்கி 7:12) ஆரம்பத்தில், பூமியும் அதில் குடியிருக்கும் மிருகங்களும் ஆதாம் ஏவாளுக்கும் அவர்களுடைய சந்ததிக்கும் கீழ்ப்பட்டிருக்கும் என்பதாக விளக்கினார். (ஆதியாகமம் 1:28, 29) என்றபோதிலும் சாத்தான், ஆதாமையும் ஏவாளையும் பாவம் செய்யும்படியாகச் செய்தான். அப்பொழுது இந்தத் தெய்வீக நோக்கம் எவ்விதமாக கடவுளுடைய மகிமைக்காக நிறைவேறக்கூடும் என்பதைக் காண்பது கடினமாக ஆனது. ஆனால் உடனடியாகவே யெகோவா காரியங்களை விளக்க ஆரம்பித்தார். அவர் சாத்தானுடைய மற்றும் அவனைப் பின்பற்றுகிறவர்களுடைய கிரியைகளை அழிக்கப்போகும் ஒரு நீதியுள்ள சந்ததி அல்லது வித்து குறித்த காலத்தில் தோன்றும் என்பதாக வெளிப்படுத்தினார்.—ஆதியாகமம் 3:15.
4 கடவுள் பயத்துடன் வாழ்ந்துவந்த ஆண்களுக்கும் பெண்களுக்கும் அந்த வித்தைப் பற்றி அநேக கேள்விகள் இருந்திருக்க வேண்டும். அவர் யாராக இருப்பார்? எப்பொழுது அவர் வருவார்? அவர் எவ்விதமாக மனிதவர்க்கத்துக்கு நன்மை செய்வார்? நூற்றாண்டுகள் கடந்து சென்றபோது, யெகோவா தம்முடைய நோக்கங்களைப் பற்றிய கூடுதலான வெளிப்படுத்தல்களைக் கொடுத்து, கடைசியாக இந்த எல்லா கேள்விகளுக்கும் பதிலளித்தார். பிரளயத்துக்கு முன்பாக, சாத்தானுடைய வித்துக்கு வரப்போகும் அழிவைக் குறித்து தீர்க்கதரிசனம் உரைக்கும்படியாக அவர் ஏனோக்கை ஆவியால் ஏவினார். (யூதா 14, 15) வாக்குப்பண்ணப்பட்ட வித்து வரும் சமயத்தில் பிரதான முக்கியத்துவமுள்ளதாக இருக்கப் போகும் ஒரு சத்தியத்தை நம்முடைய பொது சகாப்தத்துக்குச் சுமார் 2400 வருடங்களுக்கு முன்பாக நோவாவுக்கு வெளிப்படுத்தினார். மனித உயிரும் இரத்தமும் பரிசுத்தமானது என்பதே அந்தச் சத்தியமாகும்.—ஆதியாகமம் 9:1-7.
5 நோவாவின் நாளுக்குப் பின்பு யெகோவா மற்ற உண்மையுள்ள முற்பிதாக்களின் மூலமாக இன்றியமையாத அறிவை வெளிப்படுத்தினார். பொ.ச.மு. 20-ம் நூற்றாண்டில் ஆபிரகாம், வாக்குப் பண்ணப்பட்ட வித்து தன்னுடைய சந்ததியாரில் ஒருவராக இருப்பார் என்பதைத் தெரிந்து கொண்டான். (ஆதியாகமம் 22:15-18) இந்த வாக்கு, ஆபிரகாமின் குமாரனாகிய ஈசாக்குக்கும் அவனுடைய பேரனாகிய யாக்கோபுக்கும் (பின்னால் இஸ்ரவேல் என்று பெயரிடப்பட்டான்.) விலைமதிக்க முடியாத உடைமையாயிற்று. (ஆதியாகமம் 26:3-5; 28:13-15) பின்பு யெகோவா யாக்கோபின் மூலமாக, இந்த வித்தாகிய ஷைலோ, அவனுடைய குமாரனாகிய யூதாவின் வம்ச வழியில் பிறக்கும் வல்லமையுள்ள அரசராக இருப்பார் என்பதை வெளிப்படுத்தினார்.—ஆதியாகமம் 49:8-10.
6 பொ.ச.மு. 16-வது நூற்றாண்டில், யெகோவா இஸ்ரவேல் புத்திரரை ஒரு தேசமாக ஒழுங்குபடுத்தி அமைத்தார். பின்பு தொடர்ந்து வெளிப்படுத்தப்பட்ட சத்தியங்கள் யாருக்கு உரியவையாக இருந்தன? புதிதாக தோன்றியிருந்த தேசத்தினிடமாக பேசுகையில் மோசே இந்தக் கேள்விக்குப் பின்வரும் வார்த்தைகளில் பதிலளித்தான்: “மறைவானவைகள் நம்முடைய தேவனாகிய யெகோவாவுக்கே உரியவைகள்; வெளிப்படுத்தப்பட்டவைகளோ, நமக்கும் நம்முடைய பிள்ளைகளுக்கும் என்றென்றைக்கும் உரியவைகள்.” (உபாகமம் 29:29) ஆம், பொ.ச.மு. 1513-ல் இஸ்ரவேல் தேசம் பிறந்த பின்பு, அது “தேவனுடைய வாக்கியங்கள் ஒப்புவிக்கப்படுவதற்கு “ஒரு கருவியாகப் பயன்படுத்தப்படலானது. (ரோமர் 3:2) எத்தனை ஏராளமான அதிகாரப்பூர்வமான அறிவிப்புகள்! தேவன் இஸ்ரவேலரை ஒரு நியாயப்பிரமாண உடன்படிக்கைக்குள் கொண்டு வந்தார். இது, அவர்கள் ஆசாரியர்களும் ராஜாக்களுமான ஒரு தேசமாக ஆவதற்கு வாய்ப்பை அளித்தது. (யாத்திராகமம் 19:5, 6) பாவத்தின் படுகுழிகளை அடையாளங் கண்டுகொண்டு அதைத் தவிர்ப்பதற்கு அவர்களுக்கு உதவிய, நடத்தைக்குரிய சட்டத் தொகுப்பு நியாயப் பிரமாணத்தில் இருந்தது. மேலுமாக அவர்களுடைய பாவங்களை அடையாள அர்த்தத்தில் மூடுவதற்கு, மிருகங்களின் பரிசுத்த இரத்தத்தைப் பயன்படுத்திய பலிகளின் ஒரு ஏற்பாடும் இதில் இருந்தது.
7 காலம் சென்றபோது, யெகோவா வித்தைப்பற்றி அதிகமான விஷயங்களைத் தெளிவுப்படுத்தினார். சங்கீதக்காரனின் மூலமாக ஜாதிகள் அவருடைய வித்தைத் தள்ளிவிடுவார்கள் என்றும், ஆனால் வித்து யெகோவாவின் உதவியால் வெற்றியடைவார் என்றும் தேவன் வெளிப்படுத்தினார். (சங்கீதம் 2:1-12) ஏசாயாவின் மூலமாக, வித்து “சமாதானப் பிரபு”வாக இருப்பார் என்பதையும், ஆனால் அவர் மற்றவர்களுடைய பாவங்களுக்காக பாடுபடுவார் என்றும் வெளிப்படுத்தினார். (ஏசாயா 9:6; 53:3-12) பொ.ச.மு. எட்டாவது நூற்றாண்டில், யெகோவா வித்து பிறக்க இருந்த இடத்தையும் பொ.ச.மு. ஆறாவது நூற்றாண்டில் அவருடைய ஊழியத்தின் கால அட்டவணையையுங்கூட வெளிப்படுத்தினார்.—மீகா 5:2; தானியேல் 9:24-27.
8 கடைசியாக, “வெளிப்படுத்தப்பட்டவைகள்” எபிரெய வேதாகமத்தின் 39 புத்தகங்களில் தொகுக்கப்பட்டன. ஆனால் அநேக சந்தர்ப்பங்களில் அது வெறுமென ஒரு முதல் படிப்பாக மாத்திரமே இருந்தது. எழுதப்பட்ட காரியங்களை, அநேகமாக அவற்றை எழுதுவதற்காக பயன்படுத்தப்பட்டவர்களுக்குங்கூட புரிந்துகொள்வது கடினமாக இருந்தது! (தானியேல் 12:4-8; 1 பேதுரு 1:10-12) என்றபோதிலும் கடைசியாக விளக்கங்கள் கிடைத்தபோது, அது ஒரு மனிதனைச் சார்ந்ததாக இருக்கவில்லை. தீர்க்கதரிசன சொப்பனங்களின் விஷயத்தில் இருந்ததுபோலவே, “சொப்பனத்துக்கு அர்த்தம் சொல்லுதல் தேவனுக்குரிய”தாக இருந்தது.—ஆதியாகமம் 40:8.
ஒரு புதிய கருவி
9 இயேசு கிறிஸ்து பூமியில் இருந்தபோது, இஸ்ரவேலே இன்னும் கடவுளுடைய கருவியாக இருந்து வந்தது. யெகோவாவை சேவிக்க விரும்பும் எவரும் அவருடைய தெரிந்துகொள்ளப்பட்ட ஜனத்தோடு சேர்ந்தே அவ்விதமாகச் செய்ய வேண்டியவர்களாக இருந்தனர். (யோவான் 4:22) ஆனால் “வெளிப்படுத்தப்பட்டவைகளின்” உக்கிராணக்காரராக இருக்கும் சிலாக்கியத்தோடு, பொறுப்புகளும் இருப்பதை மோசே காண்பித்திருந்தான். அவன் சொன்னான்: “வெளிப்படுத்தப்பட்டவைகளோ இந்த நியாயப்பிரமாணத்தின் வார்த்தைகளின்படியெல்லாம் செய்யும்படிக்கு நமக்கும் நம்முடைய பிள்ளைகளுக்கும் என்றென்றைக்கும் உரியவைகள்.” (உபாகமம் 29:29) அந்த “என்றென்றைக்கும்” என்ற காலம் பொ.ச. 33-ல் முடிவுக்கு வந்தது. ஏன்? ஏனென்றால் ஒரு தேசமாக, யூதர்கள் “நியாயப் பிரமாணத்தின் வார்த்தைகளின்படியெல்லாம் செய்யத்” தவறினார்கள். குறிப்பாக, வித்தாகிய இயேசு கிறிஸ்துவை அவர்கள் வரவேற்கத் தவறினார்கள். உண்மையில் நியாயப்பிரமாணம் “கிறிஸ்துவினிடத்தில் வழிநடத்துகிற உபாத்தியாய்” இருந்தபோதிலும் அவர்கள் அவரை வரவேற்கவில்லை. (கலாத்தியர் 3:24) இந்தக் குறையின் காரணமாக, “வெளிப்படுத்தப்பட்டவை”களுக்கு வேறு ஒரு கருவியை யெகோவா தெரிந்து கொண்டார்.
10 இந்தக் கருவி என்னவாக இருந்தது? பவுல் எபேசியருக்குப் பின்வருமாறு எழுதுகையில் அதை அடையாளங் காண்பித்தான்: “அவருடைய அந்த ஞானமானது சபையின் மூலம் இப்பொழுது தெரியவரும் பெருட்டாக, இயேசு கிறிஸ்துவைக் கொண்டு . . . ஆதிகாலங்கள் முதல் மறைந்திருந்த இரகசியத்தை . . . வெளிப்படையாய்க் காண்”பித்தார். (எபேசியர் 3:10, 11) ஆம், இப்பொழுது பொ.ச. 33-ல் பெந்தெகொஸ்தேவின் போது தோன்றிய கிறிஸ்தவ சபையினிடமே “வெளிப்படுத்தப்பட்டவைகள்” ஒப்படைக்கப்பட்டன. ஒரு தொகுதியாக அபிஷேகம் பண்ணப்பட்ட கிறிஸ்தவர்கள் ஏற்ற வேளையில் ஆவிக்குரிய உணவை அளிப்பதற்கு நியமனம் செய்யப்பட்ட “உண்மையும் விவேகமுமுள்ள அடிமை”யாக சேவித்தார்கள். (மத்தேயு 24:45) கிறிஸ்தவர்கள் இப்பொழுது “தேவனுடைய இரகசியங்களின் உக்கிராணக்காரராக” இருந்தார்கள்.—1 கொரிந்தியர் 4:1.
11 வாக்குப்பண்ணப்பட்ட வித்தாகிய இயேசு கிறிஸ்து வந்துவிட்டார் என்பதே இந்தப் புதிய “இரகசியங்களின்” முக்கிய உண்மையாக இருந்தது. (கலாத்தியர் 3:16) இயேசு, மனிதவர்க்கத்தை ஆளுகைச் செய்ய உரிமையுள்ளவராக இருந்த “ஷைலோ”வாக இருந்தார். இந்தப் பூமியை கடைசியாக பரதீஸாக மாற்றவிருக்கும் ராஜ்யத்தின் ராஜாவாக யெகோவா அவரை நியமனம் செய்தார். (ஏசாயா 11:1-9; லூக்கா 1:31-33) தம்முடைய கறையற்ற பரிபூரண ஜீவனை மனிதவர்க்கத்துக்கு மீட்பின் பலியாகக் கொடுத்த இயேசு, யெகோவாவால் நியமிக்கப்பட்ட பிரதான ஆசாரியனாகவுங்கூட இருந்தார். இரத்தத்தின் பரிசுத்தத் தன்மையின் நியமம் இங்கு வெகு மகத்தான வகையில் பயன்படுத்தப்பட்டது. (எபிரெயர் 7:26; 9:26) அப்போதிருந்து, விசுவாசமுள்ள மனிதவர்க்கத்துக்கு, ஆதாம் இழந்துவிட்ட பரிபூரண மனித ஜீவனை மீண்டும் பெற்றுக்கொள்ளும் நம்பிக்கைப் பிறந்தது.—1 யோவான் 2:1, 2.
12 அந்த வாக்குப்பண்ணப்பட்ட வித்து, பழைய நியாயப்பிரமாண உடன்படிக்கைக்குப் பதிலாக ஏற்படுத்தப்பட்ட புதிய உடன்படிக்கைக்கு மத்தியஸ்தராகவுங்கூட இருந்தார். இந்த உடன்படிக்கை, இயேசுவை பின்பற்றியவர்களுக்கும் அவருடைய பரலோக தகப்பனுக்குமிடையே செய்யப்பட்டது. (எபிரெயர் 8:10-13; 9:15) இந்தப் புதிய உடன்படிக்கையின் அடிப்படையில், மாம்ச பிரகாரமான இஸ்ரவேல் ஜனத்தாரின் இடத்தைப் புதிதாக தோன்றிய கிறிஸ்தவ சபை எடுத்துக் கொண்டது. இயேசுவும் “வெளிப்படுத்தப்பட்டவைகளின்” உக்கிராணக்காரரும் சேர்ந்து ஆவிக்குரிய “ஆபிரகாமின் வித்தாகிய“ ஆவிக்குரிய இஸ்ரவேலை உண்டுபண்ணினார்கள். (கலாத்தியர் 3:29; 6:16; 1 பேதுரு 2:9) மேலுமாக புறஜாதிகள் அந்தப் புதிய ஆவிக்குரிய இஸ்ரவேலின் பாகமாவதற்கு அழைக்கப்பட்டனர். இது யூதர்களால் நினைத்துப் பார்க்க முடியாத ஒன்றாக இருந்தது. (ரோமர் 2:28, 29) யூதரும், யூதரல்லாதவர்களுமாகிய ஆவிக்குரிய இஸ்ரவேலர் ஒன்று சேர்ந்து பூமி முழுவதிலும் இயேசுவுக்குச் சீஷர்களை உண்டுபண்ணும் வேலை கொடுக்கப்பட்டனர். (மத்தேயு 28:19, 20) இவ்விதமாக “வெளிப்படுத்தப்பட்டவைகள்” ஒரு சர்வ தேசீய அம்சத்தைக் கொண்டிருக்கலாயின.
13 காலப்போக்கில், கிறிஸ்தவ சபையின் மூலமாக “வெளிப்படுத்தப்பட்டவைகள்” கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தின் 27 புத்தகங்களில் பதிவு செய்யப்பட்டன. இதோடு ஆவியால் ஏவப்பட்ட பைபிள் பூர்த்தியானது. ஆனால் மறுபடியுமாக பல நூற்றாண்டுகளுக்குப் பின்னால் மாத்திரமே முழுமையாக புரிந்துகொள்ளப்பட இருந்த யெகோவாவின் நோக்கங்களைப் பற்றிய அநேக தீர்க்கதரிசனங்கள் இந்தப் புத்தகங்களில் பதித்து வைக்கப்பட்டிருந்தன. மறுபடியுமாக இந்த வேத வசனங்களின் எழுத்தாளர்கள் உண்மையில் இன்னும் பிறவாத சந்ததிகளுக்கு ஊழியஞ்செய்து கொண்டிருந்தார்கள்.
இன்று “வெளிப்படுத்தப்பட்டவைகள்”
14 அப்போஸ்தலர்களின் மரணத்துக்குப் பின்பு, முன்னுரைக்கப்பட்டிருந்த விதமாகவே கிறிஸ்தவர்களென உரிமைப் பாராட்டியவர்களின் மத்தியில் பெரும் விசுவாச துரோகம் வளர ஆரம்பித்தது. (மத்தேயு 13:36-42; அப்போஸ்தலர் 20:29, 30) உண்மையுள்ளவர்களாக நிலைத்திருக்க நாடியவர்களை இயேசு புறக்கணிக்காவிட்டாலும் இதைத் தொடர்ந்து வந்த பல நூற்றாண்டுகளில் ”வெளிப்படுத்தப்பட்ட”வைகளைப் பற்றிய புரிந்து கொள்ளுதல் மங்கலாக ஆனது. (மத்தேயு 28:20) என்றபோதிலும் என்றுமாக இதே நிலைமை தொடர்ந்து இருக்காது என்பதாக இயேசு உறுதியளித்திருந்தார். காரிய ஒழுங்கின் முடிவிலே, பொல்லாதவர்களும் நீதிமான்களும் மறுபடியுமாக காணக்கூடிய வகையில் பிரிக்கப்பட்டு, “நீதிமான்கள் தங்கள் பிதாவின் ராஜ்யத்திலே சூரியனைப் போலப் பிரகாசிப்பார்கள்.” (மத்தேயு 13:43) தானியேல் தீர்க்கதரிசனம் உரைத்தது போலவே, “முடிவு காலத்திலே அறிவு பெருகிப் போம்.” (தானியேல் 12:4) “வெளிப்படுத்தப்பட்டவைகள்” மீது மறுபடியுமாக வெளிச்சம் பிரசாசிக்கும்.
15 1914 முதற்கொண்டு, இந்தக் காரிய ஒழுங்கின் முடிவு காலத்தில் நாம் வாழ்ந்து வருகிறோம். ஆகவே இந்தப் புதிய ஆவிக்குரிய வெளிச்சத்துக்கு யெகோவா இன்று யாரை ஒரு கருவியாகப் பயன்படுத்தி வருகிறார் என்பதைத் தெரிந்துகொள்வது முக்கியமாகும். நிச்சயமாகவே, கிறிஸ்தவ மண்டலத்தின் ஸ்தாபிக்கப்பட்ட மதங்களை அவர் பயன்படுத்திக் கொண்டில்லை. விசுவாச துரோக காலத்தின் போது சேர்த்துக்கொண்ட தவறான போதகங்களை உதறி தள்ள இவைகளுக்கு மனமில்லாதிருப்பதை இவைகள் நிரூபித்துவிட்டிருக்கின்றன. இன்று, அவர்களுடைய மதத்தலைவர்களில் அநேகர் பாரம்பரியங்களிலும் கோட்பாடுகளிலும் அவ்வளவாக ஊறிப்போய் விட்டிருப்பதால் புதிய அறிவை அவர்கள் ஏற்றுக்கொள்வதில்லை அல்லது ஐயுறவாத கோட்பாட்டினால் அவ்வளவாக பாதிக்கப்பட்டிருப்பதால் பைபிள் ஆவியால் ஏவப்பட்டு எழுதப்பட்டதா என்பதையும் அதன் ஒழுக்க தராதரங்கள் செல்லுபடியாகுமா என்பதையுங்கூட அவர்கள் சந்தேகிக்கிறார்கள்.
16 தேவனுடைய ராஜ்யம் யூதர்களிடமிருந்து நீக்கப்பட்டு, “அதற்கேற்ற கனிகளைத் தருகிற ஜனங்களுக்குக் கொடுக்கப்படும்” என்பதாக இயேசு சொன்னார். (மத்தேயு 21:43) முதல் நூற்றாண்டில் இது அப்போதுதானே தோன்றியிருந்த ஆவிக்குரிய இஸ்ரவேலாகிய கிறிஸ்தவ சபையாக இருந்தது. இன்று, ஒரே ஒரு தொகுதி மாத்திரமே, பூர்வ சபை பிறப்பித்தது போன்ற கனிகளைப் பிறப்பிக்கிறது. இந்த ஆவிக்குரிய இஸ்ரவேலர்கள் மத்தேயு 24:45-47-லுள்ள “உண்மையும் விவேகமுமுள்ள” அடிமை வகுப்பின் அங்கத்தினர்களாக இருக்கிறார்கள். முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்களைப் போலவே பிற்காலத்திய இந்தக் கிறிஸ்தவர்களும் ‘தங்கள் வெளிச்சத்தைப் பிரகாசிக்கச் செய்ய’ பயப்படுவது கிடையாது. (மத். 5:14-16) 1919 முதற்கொண்டு, இவர்கள் ராஜ்யத்தின் நற்செய்தியைப் பூலோகமெங்கும் சாட்சியாக பிரசங்கிக்கும் வேலையைத் தைரியமாக எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். (மத்தேயு 24:14) தேவனுடைய ராஜ்யத்தின் கனிகளை இவர்கள் பிறப்பித்திருக்கும் காரணத்தால் காலத்துக்கு ஏற்ப “தேவனுடைய ஞானத்தில் “அவர்களைக் கொண்டு வருவதன் மூலம் யெகோவா அவர்களை நிறைவாக ஆசீர்வதித்திருக்கிறார்.—எபேசியர் 3:10.
17 1923-ல் செம்மறியாடுகளையும் வெள்ளாடுகளையும் பற்றிய இயேசுவின் பெரிய தீர்க்கதரிசனம் சரியாக புரிந்து கொள்ளப்பட்டது. மேலும் முழு உலகமும் நியாயத்தீர்ப்பின் கீழிருப்பது தெரிய வந்தது. (மத்தேயு 25:31-46) 1925-ல் கடவுளுடைய பூமிக்குரிய ஊழியர்கள், வெளிப்படுத்தின விசேஷம் 12-ம் அதிகாரத்தைத் திருத்தமாக புரிந்துகொண்டு முன்குறித்து வைக்கப்பட்ட வருடமாகிய 1914-ல் என்ன நடந்தது என்பதைத் துல்லிபமாக உணர்ந்து கொண்டார்கள். 1932-ல் அவர்கள் இன்னும் ஆழமாக காரியங்களைப் புரிந்து கொண்டார்கள். எருசலேமுக்கு யூதர்கள் திரும்பக் கொண்டு வரப்படுவது சம்பந்தமாகச் சொல்லப்பட்ட தீர்க்கதரிசனங்கள் வெகு காலத்துக்கு முன்பாகவே, உண்மையற்றவர்களாக நிரூபித்து அதன் காரணமாக தள்ளப்பட்டுவிட்ட மாம்ச பிரகாரமான இஸ்ரவேலைக் குறிக்காமல் கிறிஸ்தவ சபையாகிய ஆவிக்குரிய இஸ்ரவேலையே குறிக்கிறது என்பதை யெகோவா வெளிப்படுத்தினார். (ரோமர் 2:28, 29) பின்னர் 1935-ல் வெளிப்படுத்தின விசேஷம் 7-ம் அதிகாரத்திலுள்ள “திரளான கூட்டமாகிய ஜனங்களைப்” பற்றிய யோவானின் காட்சியைத் திருத்தமாக புரிந்துகொண்டபோது இன்னும் அவர்களுக்கு முன்னால் மாபெரும் கூட்டிச் சேர்க்கும் வேலை இருந்ததை அபிஷேகம் பண்ணப்பட்டவர்கள் உணர்ந்து கொண்டார்கள்.—வெளிப்படுத்தின விசேஷம் 7:9-17.
18 கடைசியாக “பூலோகத்திலிருக்கிறவைகள்” அக்கறையோடு சேர்க்கப்பட ஆரம்பித்தபோது, உலகம் முழுவதிலும் பிரசங்க வேலைச் சுறுசுறுப்பாக செய்யப்படலாயிற்று. (எபேசியர் 1:10) 1939-ல் யுத்த மேகங்கள் ஐரோப்பாவின் மீது திரண்டு வந்தபோது, நடுநிலைமைப் பற்றிய விஷயம் முன்னொரு போதுமிராத வகையில் வெகு தெளிவாக்கப்பட்டது. 1950-ல் ஏசாயா 32:1, 2-லுள்ள “பிரபுக்கள்” தெளிவாக அடையாளங்கண்டு கொள்ளப்பட்டார்கள். 1962-ல் “மேலான அதிகாரங்கள்” திருத்தமாக அடையாளங் கண்டுகொள்ளப்பட்டு, அவைகளோடு கிறிஸ்தவனின் சரியான உறவுங்கூட “வெளிப்படுத்தப்பட்டவை”களிலிருந்து அதிக தெளிவாக புரிந்து கொள்ளப்பட்டது. (ரோமர் 13:1, 2) 1965-ல் பூமிக்குரிய உயிர்த்தெழுதலைப் பற்றியும் அதிலிருந்து யார் நன்மையடைவர் என்பது பற்றியும் தெளிவான விளக்கம் கிடைத்தது.—யோவான் 5:28, 29.
19 மேலுமாக, இந்த 20-ம் நூற்றாண்டில் அபிஷேகம் பண்ணப்பட்ட கிறிஸ்தவ சபை “வெளிப்படுத்தப்பட்டவை”களின் எழுத்துருவிலுள்ள தொகுப்பான கடவுளுடைய வார்த்தைக்குச் சரியான காவலனாக தன்னை நிரூபித்திருக்கிறது. இந்தச் சபையின் பிரதிநிதி அங்கத்தினர்கள் பைபிளை நவீன ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யும் வேலையை எடுத்துக் கொண்டார்கள். இன்று வரையாக, பரிசுத்த வேதாகமத்தின் புதிய உலக மொழி பெயர்ப்பு 11 மொழிகளில் 4,00,00,000 பிரதிகள் அச்சடிக்கப்பட்டுள்ளது. அபிஷேகம் பண்ணப்பட்ட கிறிஸ்தவர்களாலான “அடிமை” வகுப்பு சர்வ தேசீய போதனா திட்டங்களுக்கு முன்நின்று ஏற்பாடு செய்து, பைபிளை அடிப்படையாகக் கொண்ட பாட புத்தகங்களையும் பத்திரிகைகளையுங்கூட பிரசுரித்து வருகிறது. அது வாராந்தர கூட்டங்களுக்கும், ஒழுங்கான அசெம்ளிகளுக்கும் பல்வேறு பள்ளிகளுக்கும் ஏற்பாடு செய்கிறது. வெளிப்படுத்தப்பட்டவை”களைப் பற்றிய திருத்தமான அறிவை பெற்றுக்கொள்வதற்கு சத்தியத்தைத் தேடுகிறவர்களுக்கு உதவி செய்யவே இவை அனைத்தும் திட்டமிடப்பட்டிருக்கின்றன. மெய்யாகவே “நீதிமான்கள்” இப்பொழுது ஆவிக்குரிய கருத்தில் “சூரியனைப் போல பிரகாசித்து” அவர்களுடைய உக்கிராணக்காரருடைய வேலையில் தகுதியுள்ளவர்களாக நிரூபித்து வருகிறார்கள்.—மத்தேயு 13:24.
நம்முடைய உத்திரவாதம்
20 ஆகவே சுரங்கங்கள் நிறைந்த இந்த உலகில் யெகோவா நம்மை இக்கட்டான ஒரு நிலையில் விட்டுவிடவில்லை. மாறாக, நம்முடைய பாதைக்கு வெளிச்சமாக தம்முடைய வார்த்தையைக் கொடுத்து ஆவிக்குரிய ஆபத்தைத் தவிர்ப்பதற்கு நமக்கு உதவி செய்கிறார். (சங்கீதம் 119:105) பாவத்தினாலும் அபூரணத்தினாலும் நாம் மரித்துப் போகும்படியாக யெகோவா நம்மைப் புறக்கணித்துவிடவுமில்லை. மாறாக அவர் பரதீஸிய பூமியின் மீது நித்திய ஜீவனோடு வாழ்வதற்கு வாய்ப்பைத் திறந்து வைத்து, இந்த வாய்ப்பைப் பற்றிய அறிவு தடையில்லாமல் கிடைக்கும்படியாகவும் செய்திருக்கிறார். (யோவான் 17:3) சங்கீதக்காரன் தன்னுடைய நாளில் “வெளிப்படுத்தப்பட்டவைகளைக்” குறித்து பின்வருமாறு வியந்து கூறியதில் ஆச்சரியப்படுவதற்கு எதுவுமில்லை: “உமது வேதத்தில் நான் எவ்வளவு பிரியமாயிருக்கிறேன்! நாள் முழுதும் அது என் தியானம்.”—சங்கீதம் 119:97.
21 யெகோவாவால் வெளிப்படுத்தப்பட்டவைகளையும் நம்முடைய நாளில் புரிந்துகொள்ளப்பட்டவைகளையும் குறித்து இவ்விதமாகவே நீங்கள் உணருகிறீர்களா? நீங்கள் கற்றுக்கொண்டுள்ள சத்தியங்களை ஆழமாக போற்றுகிறீர்களா? தீர்மானங்களைச் செய்வதற்கும், சோதனைகளைத் தவிர்ப்பதற்கும், யெகோவாவைச் சேவிப்பதற்கும் உதவி செய்வதில் இந்தச் சத்தியங்கள் தேவைப்படுவதை நீங்கள் காண்கிறீர்களா? இந்த “வெளிப்படுத்தப்பட்டவைகளை” வாசிப்பதற்கும் படிப்பதற்கும் உண்மையில் எவ்வளவு நேரத்தை நீங்கள் செலவழிக்கிறீர்கள்? உங்களுடைய படிப்பு பழக்கங்களை முன்னேற்றுவிப்பதற்கு ஏதாவது ஒரு வழி இருக்கிறதா? இந்த விஷயங்கள் அடுத்த கட்டுரையில் சிந்திக்கப்படும். (w86 5/15)
உங்களுக்கு நினைவிருக்கிறதா?
◻ இயேசுவின் காலத்துக்கு முன்பு “வெளிப்படுத்தப்பட்டவைகளுக்கு” கருவியாக இருந்தவைகளில் சில யாவை?
◻ பொ.ச. 33-க்குப் பின்பு, “வெளிப்படுத்தப்பட்டவைகள்” யாருக்கு உரியவையாக இருந்தன?
◻ இந்தப் புதிய கருவியின் மூலமாக வெளிப்படுத்தப்பட்ட சில இன்றியமையாத காரியங்கள் யாவை?
◻ இன்று ஏன் வெளிப்படுத்தப்பட்டவைகள் ஆவிக்குரிய இஸ்ரவேலருக்கே உரியவையாக இருக்க வேண்டும்?
◻ அபிஷேகம் பண்ணப்பட்ட கிறிஸ்தவ சபை எவ்விதமாக யெகோவாவின் வார்த்தைக்குச் சரியான காவலனாக நிரூபித்திருக்கிறது?
[கேள்விகள்]
1, 2. (எ) மனிதவர்க்கத்துக்கு ஏன் யெகோவாவின் வெளிப்படுத்தல்கள் வெகுவாக அவசியமாயிருக்கிறது? (பி) யெகோவா நமக்கு கிடைக்கும்படியாகச் செய்திருக்கும் தகவலைக் குறித்து நம்முடைய மனநிலை என்னவாக இருக்க வேண்டும்?
3. யெகோவா ஆதாமுக்கும் ஏவாளுக்கும் தம்முடைய நோக்கத்தைப் பற்றிய என்ன வெளிப்படுத்தல்களைக் கொடுத்தார்?
4, 5. வேறு என்ன வெளிப்படுத்தல்களை யெகோவா செய்தார்? இதற்காக அவரால் பயன்படுத்தப்பட்ட கருவிகள் யார்?
6. பொ.ச.மு. 16-வது நூற்றாண்டில் “வெளிப்படுத்தப்பட்டவைகளுக்குக் கருவியானது யார்? அவர்கள் கற்றுக்கொண்ட புதிய காரியங்களில் சில யாவை?
7, 8. (எ) யெகோவா வர இருந்த வித்தைப்பற்றி என்ன கூடுதலான தகவலை வெளிப்படுத்தினார்? (பி) வெளிப்படுத்தப்பட்டவைகள்” எவ்விதமாக பாதுகாத்து வைக்கப்பட்டது? இப்படிப்பட்ட காரியங்களின் சரியான பொருளை வெளிப்படுத்தியது யார்?
9. “வெளிப்படுத்தப்பட்டவைகளுக்குக்” கருவியாக இருக்கும் சிலாக்கியத்தை மாம்சபிரகாரமான இஸ்ரவேலர் இழந்ததற்குக் காரணம் என்ன? இது எப்பொழுது நடந்தது?
10. யெகோவாவின் வெளிப்படுத்தல்களுக்குப் புதிய கருவியாக இருந்தது யார்?
11, 12. இந்தப் புதிய கருவியின் மூலமாக வெளிப்படுத்தப்பட்ட மகத்தான காரியங்களில் சில யாவை?
13. “வெளிப்படுத்தப்பட்ட” இந்தப் புதிய காரியங்கள் எதிர்கால சந்ததிக்காக எவ்விதமாக பாதுகாத்து வைக்கப்பட்டது?
14. பெரும் விசுவாச துரோகத்தைத் தொடர்ந்து, “வெளிப்படுத்தப்பட்டவைகள்” மீது யெகோவா மறுபடியுமாக எப்பொழுது வெளிச்சத்தைப் பிரகாசிக்கச் செய்வார்?
15. “வெளிப்படுத்தப்பட்டவைகளின்” அண்மைக் கால விளக்கங்களுக்கு ஒரு கருவியாக பயன்படுத்தப்படுவதற்கு கிறிஸ்தவ மண்டலத்தின் மதங்கள் ஏன் தகுதியற்றவையாக நிரூபித்துவிட்டிருக்கின்றன?
16. யெகோவாவின் நவீன கால கருவியாக நிரூபித்திருப்பது யார்?
17, 18. தம்முடைய நவீன கால கருவியின் மூலமாக யெகோவா படிப்படியாக என்ன காரியங்களைப் புரிந்து கொள்வதைக் கூடிய காரியமாக்கியிருக்கிறார்?
19. யெகோவாவின் “அடிமை” வகுப்பு இன்று எவ்விதமாக கடவுளுடைய வார்த்தைக்குச் சரியான காவலனாக நிரூபித்திருக்கிறது?
20, 21. (எ) சங்கீதக்காரன் யெகோவாவின் வெளிப்படுத்தப்பட்ட வார்த்தைக்கு எவ்விதமாக பிரதிபலிக்கும்படியாக தூண்டப்பட்டான்? (பி) அடுத்த கட்டுரையில் என்ன விஷயங்கள் சிந்திக்கப்படும்?
[பக்கம் 22-ன் சிறு குறிப்பு]
யெகோவா பூர்வ காலத்திலிருந்த உண்மையுள்ள மனிதர்களின் மூலமாக இன்றியமையாத அறிவை வெளிப்படுத்தினார்
[பக்கம் 24-ன் சிறு குறிப்பு]
அபிஷேகம் பண்ணப்பட்ட கிறிஸ்தவ சபை யெகோவாவின் வெளிப்படுத்தல்களுக்குப் புதிய காவலனாக ஆனது
[பக்கம் 25-ன் சிறு குறிப்பு]
அபிஷேகம் பண்ணப்பட்ட சாட்சிகளடங்கிய யெகோவாவின் “அடிமை” வகுப்பு கடவுளுடைய வார்த்தையின் காவலனாக சிறப்பாக பணியாற்றியிருக்கிறது.