“வீணானவற்றை” வெறுத்து ஒதுக்குங்கள்
“வீணானவற்றைத் தேடியலைவோர் அறிவு அற்றவர்.”—நீதி. 12:11, பொது மொழிபெயர்ப்பு.
1. நம்மிடமுள்ள மதிப்புமிக்க காரியங்கள் சில யாவை, அவற்றைப் பயன்படுத்துவதற்கு மிகச் சிறந்த வழி எது?
கிறிஸ்தவர்களாகிய நம் எல்லாரிடமும் மதிப்புமிக்க ஏதோவொன்று இருக்கத்தான் செய்கிறது. அது ஒருவேளை நல்ல ஆரோக்கியமாக இருக்கலாம், புத்திக்கூர்மையாக இருக்கலாம், அல்லது பண வசதியாக இருக்கலாம். யெகோவா மீதுள்ள அன்பின் காரணமாக, இவற்றையெல்லாம் அவருடைய சேவையில் பயன்படுத்த மனமார விரும்புகிறோம். இப்படிச் செய்வதன் மூலம் பின்வரும் தெய்வீக அறிவுரைக்குக் கீழ்ப்படிகிறோம்: ‘உன்னிடமுள்ள [“மதிப்புமிக்க,” NW] பொருளால் . . . கர்த்தரைக் கனம்பண்ணு.’—நீதி. 3:9.
2. வீணான காரியங்களைக் குறித்து பைபிள் தரும் எச்சரிப்பு என்ன, இது நேரடியாக நமக்கு எப்படிப் பொருந்துகிறது?
2 மறுபட்சத்தில், வீணான காரியங்களைப் பற்றியும் பைபிள் சொல்கிறது. அவற்றை அடைவதற்காக நம்முடைய வாய்ப்பு வளங்களை விரயமாக்குவதைக் குறித்தும் அது எச்சரிக்கிறது. இதைப்பற்றி நீதிமொழிகள் 12:11 (பொ.மொ.) சொல்வதைக் கவனியுங்கள்: “உழுது பயிரிடுவோர் மிகுந்த உணவு பெறுவர்; வீணானவற்றைத் தேடியலைவோர் அறிவு அற்றவர்.” இந்த நீதிமொழி நேரடியாக நமக்கு எப்படிப் பொருந்துகிறது என்பதைப் புரிந்துகொள்வது கடினமல்ல. ஒருவர் தன் குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காக இராப்பகலாய் பாடுபடுகிறார் என்றால் பொருளாதார தேவைகளைக் குறித்து அவரும் அவருடைய குடும்பத்தாரும் ஓரளவுக்கு கவலையின்றி இருப்பார்கள். (1 தீ. 5:8) என்றாலும், வீணான காரியங்களை அடைவதற்காக அவர் தன்னுடைய செல்வத்தை விரயமாக்குகிறார் என்றால், அவர் ‘அறிவற்றவராக’ இருக்கிறார் என்பதையே அது காட்டுகிறது. அதாவது, நன்கு யோசித்து முடிவெடுக்கத் தெரியாதவராயும் நல்லெண்ணம் இல்லாதவராயும் இருக்கிறார் என்பதையே காட்டுகிறது. அப்படிப்பட்ட நபர் வறுமையில் வாடுவது நிச்சயம்.
3. வீணான காரியங்களைக் குறித்து பைபிள் தரும் எச்சரிப்பு கடவுளை வழிபடுவதில் எப்படிப் பொருந்துகிறது?
3 ஆனால், இந்த நீதிமொழியிலுள்ள நியமத்தை கடவுளை வழிபடும் விஷயத்தில் நாம் எப்படிப் பொருத்தலாம்? ஊக்கமாயும் உண்மையாயும் யெகோவாவைச் சேவிக்கும் ஒரு கிறிஸ்தவர் உண்மையான பாதுகாப்பை அனுபவிக்கிறார் என்பது நமக்குத் தெரிகிறது. கடவுளுடைய ஆசீர்வாதம் இப்போதே இருக்கிறது என்ற நம்பிக்கையும், எதிர்காலத்தைக் குறித்த பலமான நம்பிக்கையும் அவருக்கு இருக்கிறது. (மத். 6:33; 1 தீ. 4:10) ஆனால், வீணான காரியங்களிடம் தன் கவனத்தைத் திருப்புகிற ஒரு கிறிஸ்தவர், யெகோவாவுடனுள்ள தன் பந்தத்தையும் என்றென்றும் வாழும் எதிர்பார்ப்பையும் இழக்கும் நிலையில் இருக்கிறார். அதை நாம் எப்படித் தவிர்க்கலாம்? நம்முடைய வாழ்க்கையில் ‘வீணானவையாக’ இருக்கிற காரியங்கள் என்னென்ன என்பதைப் பகுத்துணர்ந்து அவற்றை ஒதுக்கித்தள்ள நாம் திடத்தீர்மானமாய் இருக்க வேண்டும்.—தீத்து 2:11, 12-ஐ வாசியுங்கள்.
4. பொதுவாகச் சொன்னால், வீணான காரியங்கள் எவை?
4 அப்படியென்றால், வீணான காரியங்கள் எவை? பொதுவாகச் சொன்னால், யெகோவாவை முழு ஆத்துமாவோடு சேவிப்பதிலிருந்து நம்மைத் திசைத்திருப்பும் எதுவாகவும் அவை இருக்கலாம். உதாரணத்திற்கு, பல்வேறு விதமான பொழுதுபோக்குகள் அவற்றில் உட்படலாம். அவ்வப்போது பொழுதுபோக்கில் ஈடுபடுவது நமக்கு நல்லதுதான். ஆனால், நம்முடைய வழிபாடு சம்பந்தப்பட்ட காரியங்களைப் புறக்கணித்துவிட்டு ‘ஜாலியாக’ இருப்பதற்கு நாம் எக்கச்சக்கமான நேரத்தைச் செலவிடும்போது, அப்படிப்பட்ட பொழுதுபோக்கு வீணான காரியமாக ஆகிவிடும். அது கடவுளோடு உள்ள நம் பந்தத்தையும் முறித்துவிடும். (பிர. 2:24; 4:6) இதைத் தவிர்ப்பதற்கு, ஒரு கிறிஸ்தவர் சமநிலையைக் காத்துக்கொள்ள முயலுகிறார்; தன்னுடைய பொன்னான நேரத்தை எப்படிச் செலவிடுகிறார் என்பதை நன்கு கவனிக்கிறார். (கொலோசெயர் 4:5-ஐ வாசியுங்கள்.) என்றாலும் பொழுதுபோக்கைவிட ஆபத்துமிக்க வீணான காரியங்களும் இருக்கின்றன. பொய் கடவுட்கள் அவற்றில் ஒன்று.
வீணான கடவுட்களை விட்டுவிலகுங்கள்
5. மூல எபிரெயுவில் “வீணான” என்ற வார்த்தை பெரும்பாலும் எதற்குப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது?
5 மூல எபிரெயுவில் “வீணான” என்ற வார்த்தை வருகிற பெரும்பாலான இடங்களில், அது பொய் கடவுட்களுக்குப் பயன்படுத்தப்பட்டிருப்பது ஆர்வத்திற்குரிய விஷயம். உதாரணமாக, யெகோவா இஸ்ரவேலரிடம் இவ்வாறு சொன்னார்: “நீங்கள் உங்களுக்கு விக்கிரகங்களையும் [“வீணான கடவுட்களையும்,” NW] சுரூபங்களையும் உண்டாக்காமலும், உங்களுக்குச் சிலையை நிறுத்தாமலும், சித்திரந்தீர்ந்த கல்லை நமஸ்கரிக்கும்பொருட்டு உங்கள் தேசத்தில் வைக்காமலும் இருப்பீர்களாக.” (லேவி. 26:1) அரசனாகிய தாவீது இவ்வாறு எழுதினார்: “கர்த்தர் பெரியவரும் மிகவும் துதிக்கப்படத்தக்கவருமாயிருக்கிறார்; எல்லா தேவர்களிலும் பயப்படத்தக்கவர் அவரே. சகல ஜனங்களுடைய தேவர்களும் விக்கிரகங்கள்தானே [“வீணான கடவுட்கள்தானே” NW]; கர்த்தரோ வானங்களை உண்டாக்கினவர்.”—1 நா. 16:25, 26.
6. பொய் கடவுட்கள் ஏன் வீணானவையாக இருக்கின்றன?
6 தாவீது குறிப்பிட்டபடி, யெகோவாவின் மகத்துவத்திற்கு நம்மைச் சுற்றிலும் அநேக அத்தாட்சிகள் இருக்கின்றன. (சங். 139:14; 148:1-10) இஸ்ரவேலர் யெகோவா தேவனோடு ஓர் உடன்படிக்கைக்குள் இருந்தது அவர்களுக்குக் கிடைத்த எப்பேர்ப்பட்ட பாக்கியம்! அப்படியிருக்க, அவர்கள் யெகோவாவை விட்டுவிட்டு சுரூபங்களையும் சிலைகளையும் வணங்கியது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்! கஷ்ட காலங்களில், அவர்கள் வணங்கி வந்த பொய் கடவுட்கள் உண்மையிலேயே வீணானவையாக நிரூபித்தன; தங்களை மட்டுமல்ல, தங்களை வழிபட்டவர்களையும் அவற்றால் காப்பாற்ற இயலவில்லை.—நியா. 10:14, 15; ஏசா. 46:5-7.
7, 8. ‘செல்வம்’ எவ்வாறு கடவுளாக ஆகிவிடலாம்?
7 இன்றும்கூட அநேக நாடுகளில் மனிதரின் கைவண்ணத்தில் உருவான சிலைகளை மக்கள் வழிபடுகிறார்கள்; இப்படிப்பட்ட கடவுட்கள் முற்காலத்தில் எப்படி பயனற்றவையாக இருந்தனவோ அப்படியே இன்றும் இருக்கின்றன. (1 யோ. 5:21) என்றாலும், சிலைகளை மட்டுமின்றி வேறு பல காரியங்களையும் கடவுட்கள் என்பதாக பைபிள் விவரிக்கிறது. உதாரணத்திற்கு, இயேசுவின் பின்வரும் வார்த்தைகளைக் கவனியுங்கள்: “இரண்டு எஜமான்களுக்கு ஊழியஞ்செய்ய ஒருவனாலும் கூடாது; ஒருவனைப் பகைத்து, மற்றவனைச் சிநேகிப்பான்; அல்லது ஒருவனைப் பற்றிக்கொண்டு, மற்றவனை அசட்டைபண்ணுவான்; தேவனுக்கும் உலகப்பொருளுக்கும் [அதாவது, செல்வத்திற்கும்] ஊழியஞ் செய்ய உங்களால் கூடாது.”—மத். 6:24.
8 ‘செல்வம்’ எவ்வாறு கடவுளாக ஆகிவிடலாம்? உதாரணமாக, பண்டைய இஸ்ரவேலரின் நிலத்தில் கிடந்த ஒரு கல்லைக் கற்பனை செய்துகொள்ளுங்கள். வீடு கட்டுவதற்கோ சுவர் எழுப்புவதற்கோ அது உபயோகமாக இருந்திருக்கும். ஆனால், அதை ஒரு ‘கல்தூணாக’ அல்லது ‘கற்சிலையாக’ நாட்டியபோது யெகோவாவின் மக்கள் இடறிப்போவதற்கு அது காரணமாகிவிட்டது. (லேவி. 26:1, பொ.மொ.) பணத்தைக் குறித்ததிலும் அதுவே உண்மை. வாழ்க்கையை ஓட்ட பணம் நமக்கு அவசியம்தான்; அதோடு, யெகோவாவின் சேவையிலும் அதை நம்மால் பயனுள்ள விதத்தில் உபயோகிக்க முடியும். (பிர. 7:12; லூக். 16:9) ஆனால், நம்முடைய கிறிஸ்தவ சேவையைப் பின்னுக்குத் தள்ளி, பணம் சம்பாதிப்பதிலேயே குறியாக இருந்தால், அது நமக்கு கடவுளைப்போல் ஆகிவிடும். (1 தீமோத்தேயு 6:9, 10-ஐ வாசியுங்கள்.) இன்றைய உலகில், செல்வத்திற்கே மக்கள் அதிக முக்கியத்துவம் தருவதால், இந்த விஷயத்தில் நாம் சமநிலையாக இருக்கிறோமா என்பதை உறுதிசெய்துகொள்ள வேண்டும்.—1 தீ. 6:17-19.
9, 10. (அ) ஒரு கிறிஸ்தவர் கல்வியை எவ்வாறு கருதுகிறார்? (ஆ) உயர்கல்வி பயிலுவதால் வரும் ஆபத்து என்ன?
9 மற்றொரு உதாரணம் கல்வி. இது நமக்கு அவசியம்தான்; ஆனால், இதுவும்கூட வீணான காரியமாக ஆகிவிடலாம். நம்முடைய பிள்ளைகள் சொந்தக் காலில் நிற்பதற்காக அவர்கள் சிறந்த கல்வியைப் பெற்றிருக்க வேண்டுமென நாம் விரும்புகிறோம். அதைவிட முக்கியமாக, நன்கு படித்த ஒரு கிறிஸ்தவரால் பைபிளை இன்னும் நன்றாக புரிந்துகொண்டு வாசிக்க முடியும், பிரச்சினைகளைப் பகுத்தாராய்ந்து சரியான முடிவுகளை எடுக்க முடியும், பைபிளிலுள்ள சத்தியங்களைத் தெளிவாகவும் மனதை எட்டும் விதமாகவும் கற்பிக்க முடியும். சிறந்த கல்வியைக் கற்பதற்குக் காலம் எடுத்தாலும், அதற்காகச் செலவிடும் காலம் பயனுள்ளதே.
10 ஆனால், கல்லூரியிலோ பல்கலைக்கழகத்திலோ சேர்ந்து உயர்கல்வி பெறுவதைக் குறித்து என்ன சொல்லலாம்? வாழ்வில் வெற்றிபெறுவதற்கு இப்படிப்பட்ட கல்வி மிகவும் அவசியம் என்றே பலரும் சொல்கிறார்கள். ஆனால், இப்படிப்பட்ட கல்வியைப் பெறும் அநேகர் கடைசியில் தங்கள் மனதை இவ்வுலகின் தீங்கிழைக்கும் ஞானத்தால் நிரப்பிக் கொள்கிறார்கள். யெகோவாவின் சேவையில் மிகச் சிறப்பாக பயன்படுத்த வேண்டிய இளமைக்கால வருடங்களை இத்தகைய படிப்பு வீணாக்கிவிடுகிறது. (பிர. 12:1) உயர்கல்வியைப் பெறுவோர் அதிகரித்துவரும் நாடுகளில் கடவுள் நம்பிக்கையுள்ளவர்கள் இப்போது குறைந்து கொண்டே வருகிறார்கள் என்பதில் ஆச்சரியம் இல்லை. ஒரு கிறிஸ்தவர் தன்னுடைய குடும்பத்தின் பொருளாதார தேவைகளைக் கவனித்துக் கொள்வதற்காக இந்த உலகம் அளிக்கும் உயர்கல்வியை அல்ல, ஆனால், யெகோவாவையே நம்பியிருக்கிறார்.—நீதி. 3:5.
சரீர இச்சையைக் கடவுளாக ஆக்கிவிடாதீர்கள்
11, 12. “அவர்களுடைய தேவன் வயிறு” என சிலரைக் குறித்து பவுல் ஏன் சொன்னார்?
11 பிலிப்பியருக்கு எழுதிய கடிதத்தில், கடவுளாக ஆகிவிடக்கூடிய மற்றொரு விஷயத்தை அப்போஸ்தலன் பவுல் குறிப்பிடுகிறார். ஒருகாலத்தில் அவருடைய சக வணக்கத்தாராக இருந்த சிலரைப்பற்றி பேசிவிட்டு அவர் இவ்வாறு சொல்கிறார்: ‘ஏனெனில், அநேகர் வேறுவிதமாய் நடக்கிறார்கள்; அவர்கள் கிறிஸ்துவின் சிலுவைக்குப் பகைஞரென்று உங்களுக்கு அநேகந்தரம் சொன்னேன், இப்பொழுது கண்ணீரோடும் சொல்லுகிறேன். அவர்களுடைய முடிவு அழிவு, அவர்களுடைய தேவன் வயிறு, . . . அவர்கள் பூமிக்கடுத்தவைகளைச் சிந்திக்கிறார்கள்.’ (பிலி. 3:18, 19) ஒரு நபருடைய வயிறு எப்படி ஒரு கடவுளாக ஆக முடியும்?
12 பவுலுடைய இந்த முன்னாள் தோழர்கள் அவருடன் சேர்ந்து யெகோவாவைச் சேவிப்பதைவிட தங்களுடைய சரீர இச்சைகளைத் திருப்தி செய்வதற்கே அதிக முக்கியத்துவம் தந்ததாகத் தெரிகிறது. சிலர் நிஜமாகவே அளவுக்குமீறி சாப்பிட்டிருக்கலாம் அல்லது குடித்திருக்கலாம்; இவ்வாறு பெருந்தீனிக்காரராக அல்லது குடிவெறியர்களாக ஆகியிருக்கலாம். (நீதி. 23:20, 21; ஒப்பிடுக, உபா. 21:18-21.) முதல் நூற்றாண்டிலிருந்த இன்னும் சில கிறிஸ்தவர்களோ அந்தஸ்தோடும் ஆடம்பரத்தோடும் வாழ்வதற்கு கிடைத்த எல்லா வாய்ப்புகளையும் பயன்படுத்திக் கொள்ள விரும்பியிருக்கலாம்; இதனால் யெகோவாவின் சேவையிலிருந்து பின்வாங்கியிருக்கலாம். ஆனால், சிறந்த வாழ்க்கையென நமக்குத் தோன்றுகிற வாழ்க்கையின் மீதுள்ள ஆசையினால், முழு ஆத்துமாவோடு யெகோவாவுக்குச் செய்யும் சேவையில் ஒருபோதும் மந்தமாகிவிடாதிருப்போமாக.—கொலோ. 3:23, 24.
13. (அ) பேராசை என்றால் என்ன, பவுல் அதை எப்படி விவரித்தார்? (ஆ) பேராசையை நாம் எப்படித் தவிர்க்கலாம்?
13 பொய் வணக்கத்தின் மற்றொரு அம்சத்தைப் பற்றியும் பவுல் குறிப்பிட்டார். ‘ஆகையால், விபசாரம், அசுத்தம், மோகம், துர்இச்சை, விக்கிரகாராதனையான பொருளாசை [அதாவது, பேராசை] ஆகிய இவைகளைப் பூமியில் உண்டுபண்ணுகிற உங்கள் அவயவங்களை அழித்துப்போடுங்கள்’ என்று அவர் எழுதினார். (கொலோ. 3:5) பேராசை என்பது நமக்குச் சொந்தமல்லாத ஒன்றின்மீது வைக்கும் தீவிர ஆசையே. ஏதாவது ஒரு பொருளின்மீது இப்படிப்பட்ட ஆசை நமக்கு ஏற்படலாம். வக்கிரமான பாலியல் ஆசையையும்கூட அது உட்படுத்தலாம். (யாத். 20:17) இப்படிப்பட்ட ஆசை விக்கிரக வழிபாட்டிற்கு, அதாவது பொய் கடவுளை வழிபடுவதற்கு ஒப்பாக இருக்கிறது என்பது சிந்தித்துப் பார்க்க வேண்டிய விஷயம், அல்லவா? இத்தகைய கெட்ட ஆசைகளை எப்பாடுபட்டாவது கட்டுப்படுத்த வேண்டியது எவ்வளவு முக்கியம் என்பதைக் காட்டுவதற்கு இயேசு தத்ரூபமான விவரிப்பைத் தந்தார்.—மாற்கு. 9:47-ஐ வாசியுங்கள்; 1 யோ. 2:16.
வீணான வார்த்தைகளைக் குறித்து எச்சரிக்கையாயிருங்கள்
14, 15. (அ) எரேமியாவின் காலத்திலிருந்த அநேகர் எத்தகைய ‘வீணான காரியங்களால்’ இடறிவிழுந்தார்கள்? (ஆ) மோசேயின் வார்த்தைகள் பயனுள்ளவையாய் இருந்ததற்குக் காரணம் என்ன?
14 நம் வாயிலிருந்து வரும் வார்த்தைகளும்கூட வீணான காரியங்களில் உட்படலாம். உதாரணமாக, எரேமியாவிடம் யெகோவா இவ்வாறு சொன்னார்: ‘தீர்க்கதரிசிகள் என் நாமத்தைக்கொண்டு பொய்யாய்த் தீர்க்கதரிசனஞ் சொல்லுகிறார்கள். நான் அவர்களை அனுப்பினதுமில்லை, அவர்களுக்குக் கற்பித்ததுமில்லை, அவர்களோடே பேசினதுமில்லை; அவர்கள் கள்ளத் தரிசனத்தையும், கள்ள சகுனத்தையும், இல்லாத விசேஷத்தையும், [“வீணான காரியங்களையும்,” NW] தங்கள் இருதயத்தின் கபடத்தையுமே, உங்களுக்குத் தீர்க்கதரிசனமாய்ச் சொல்லுகிறார்கள்.’ (எரே. 14:14) அந்தப் பொய் தீர்க்கதரிசிகள் யெகோவாவின் பெயரில் பேசுவதாகச் சொல்லிக்கொண்டார்கள்; ஆனால் தங்களுடைய சொந்தக் கருத்துகளையே, தங்களுடைய சொந்த ஞானத்தையே பரப்பிக் கொண்டிருந்தார்கள். எனவே, அவர்கள் சொன்னவை எல்லாம் ‘வீணான காரியங்களாக’ இருந்தன. அவை பயனற்றவையாயும் கடவுளுடைய ஜனங்களுக்கு உண்மையிலேயே தீங்கு விளைவிப்பவையாயும் இருந்தன. பொ.ச.மு. 607-ஆம் வருடத்தில், அத்தகைய வீணான வார்த்தைகளுக்குச் செவிகொடுத்த பலர் பாபிலோனிய வீரர்களிடம் சிக்கி, அகால மரணமடைந்தார்கள்.
15 இதற்கு மாறாக, இஸ்ரவேலரிடம் மோசே இவ்வாறு சொன்னார்: “உங்களுக்கு எதிரான சான்றாக நான் இன்று உரைத்த வார்த்தைகள் எல்லாவற்றையும் உங்கள் உள்ளத்தில் இருத்துங்கள். . . . இத்திருச்சட்டத்தின் எவ்வார்த்தையும் வீணானதல்ல. அதுவே உங்களது வாழ்வு. யோர்தானைக் கடந்து, நீங்கள் உடைமையாக்கிக் கொள்ளப்போகும் மண்ணில் இந்த வார்த்தைகளால் நீங்கள் நெடுநாள் வாழ்வீர்கள்.” (உபா. 32:46, 47, பொ.மொ.) ஆம், மோசேயின் வார்த்தைகள் கடவுளால் அருளப்பட்டவை. எனவே அவை அத்தேசத்தின் நலனிற்கு பயனுள்ளவையாக, சொல்லப்போனால் அத்தியாவசியமானவையாக இருந்தன. அவற்றுக்குச் செவிகொடுத்தவர்கள் நீண்ட ஆயுளையும் செழுமையையும் அனுபவித்தார்கள். வீணான வார்த்தைகளை நாம் எப்போதும் வெறுத்து ஒதுக்கிவிட்டு பயனுள்ள சத்தியத்தின் வார்த்தைகளை உறுதியாய்ப் பற்றிக்கொள்வோமாக.
16. விஞ்ஞானிகள் சொல்வது கடவுளுடைய வார்த்தைக்கு முரணாக இருக்கும் பட்சத்தில் அதை நாம் எப்படிக் கருதுகிறோம்?
16 இன்றும்கூட மக்கள் வீணான காரியங்களைப் பேசுவதை நாம் கேட்கிறோமா? ஆம், கேட்கிறோம். உதாரணமாக, இனிமேல் கடவுள்மீது நம்பிக்கை வைக்கவேண்டிய அவசியம் இல்லை என்றும் எல்லாவற்றுக்கும் இயற்கை செய்முறைகளின் மூலமாக விளக்கம் தந்துவிடலாம் என்றும் விஞ்ஞானிகள் சிலர் சொல்கிறார்கள்; பரிணாமக் கொள்கையும் மற்ற துறைகளின் அறிவியல் கண்டுபிடிப்புகளும் அதையே காட்டுவதாக அவர்கள் சொல்கிறார்கள். அவர்கள் இப்படி அகந்தையாகப் பேசுவதைக் கேட்டு நாம் கவலைகொள்ள வேண்டுமா? வேண்டவே வேண்டாம். மனித ஞானம் தேவ ஞானத்திலிருந்து வேறுபடுகிறது. (1 கொ. 2:6, 7) மனிதரின் போதனைகள் கடவுள் வெளிப்படுத்தியிருக்கும் காரியங்களுக்கு முரணானதாக இருக்கும் பட்சத்தில், மனித போதனைகளே எப்போதும் தவறானதாக இருக்கும் என்பதை நாம் அறிந்திருக்கிறோம். (ரோமர் 3:4-ஐ வாசியுங்கள்.) சில துறைகளில் அறிவியல் முன்னேற்றம் அடைந்திருந்தாலும்கூட, மனித ஞானத்தைப் பற்றிய பைபிளின் கருத்து உண்மையாகவே இருக்கிறது: “இவ்வுலகத்தின் ஞானம் தேவனுக்கு முன்பாகப் பைத்தியமாயிருக்கிறது.” கடவுளுடைய எல்லையில்லா ஞானத்திற்கு முன்பு மனிதருடைய நியாயவிவாதங்கள் வீணானவையே.—1 கொ. 3:18-20.
17. கிறிஸ்தவமண்டல தலைவர்களும் விசுவாசதுரோகிகளும் சொல்பவற்றை நாம் எப்படிக் கருத வேண்டும்?
17 வீணான வார்த்தைகளுக்கு மற்றொரு உதாரணத்தை கிறிஸ்தவமண்டல மதத் தலைவர்கள் மத்தியில் காண முடியும். இவர்கள், கடவுளின் பெயரில் பேசுவதாக சொல்லிக்கொள்கிறார்கள்; ஆனால், இவர்கள் பேசும் பெரும்பாலான விஷயங்களுக்கு பைபிளில் எந்த ஆதாரமும் இல்லை; அதோடு இவர்கள் சொல்லும் காரியங்கள் முற்றிலும் பயனற்றவை. விசுவாசதுரோகிகளும்கூட வீணான காரியங்களைப் பேசுகிறார்கள்; கடவுளால் நியமிக்கப்பட்ட “உண்மையும் விவேகமுமுள்ள ஊழியக்கார” வகுப்பாரைவிட தங்களுக்கு அதிக ஞானமிருப்பதாக அவர்கள் சொல்கிறார்கள். (மத். 24:45-47) என்றாலும், விசுவாசதுரோகிகள் தங்களுடைய சொந்த ஞானத்தையே பேசுகிறார்கள்; அவர்கள் சொல்லும் காரியங்கள் பயனற்றவை, அவற்றிற்குச் செவிகொடுக்கும் எவரும் இடறலடைவார்கள். (லூக். 17:1, 2) அவர்கள் சொல்லும் வீணான காரியங்களுக்குச் செவிசாய்ப்பதை நாம் எப்படித் தவிர்க்கலாம்?
வீணான வார்த்தைகளை வெறுத்து ஒதுக்குவது எப்படி
18. 1 யோவான் 4:1-ல் உள்ள அறிவுரையை நாம் என்ன வழிகளில் பின்பற்றலாம்?
18 வயது முதிர்ந்த அப்போஸ்தலனாகிய யோவான் இதன் சம்பந்தமாக சிறந்த அறிவுரையைத் தந்தார். “அன்பானவர்களே, போலித் தீர்க்கதரிசிகள் பலர் உலகத்தில் வந்திருப்பதன் காரணமாக, ஆவியினால் தூண்டப்பட்ட வார்த்தைகள் எல்லாவற்றையும் நம்பாதீர்கள்; அவை கடவுளிடமிருந்துதான் தோன்றியிருக்கின்றனவா என்று தெரிந்துகொள்ள அவற்றைச் சோதித்துப் பாருங்கள்” என்று அவர் எழுதினார். (1 யோவான் 4:1, NW) இந்த அறிவுரையை ஊழியத்தில் நாம் சந்திக்கும் ஆட்களிடம் பயன்படுத்துகிறோம்; அவர்களுக்கு இதுவரை கற்பிக்கப்பட்டிருக்கிற விஷயங்கள் பைபிள் கற்பிக்கிற விஷயங்களோடு ஒத்திருக்கிறதா என்று சோதித்துப் பார்க்கும்படி அவர்களை நாம் எப்போதுமே ஊக்குவிக்கிறோம். இது நமக்கும்கூட பொருந்துகிற நல்ல நியமமாக இருக்கிறது. சத்தியத்தைப்பற்றி யாரேனும் குறைகூறுவதையோ சபையைப்பற்றி, மூப்பர்களைப்பற்றி, அல்லது ஏதாவதொரு சகோதரரைப்பற்றி அவதூறாகப் பேசுவதையோ நாம் கேட்டால், அதை அப்படியே நம்பிவிட மாட்டோம். மாறாக, நம்மையே இவ்வாறு கேட்டுக்கொள்வோம்: “இத்தகைய கதையைப் பரப்புகிறவர் பைபிள் சொல்கிறபடி நடக்கிறாரா? இதுபோன்ற கதைகளைப் பரப்புவதை அல்லது குறைகூறித் திரிவதை யெகோவா ஏற்றுக்கொள்வாரா? இது சபையின் சமாதானத்தைக் கட்டிக்காக்க உதவுமா?” நாம் கேட்கிற விஷயங்கள் ஏதேனும், நம் சகோதர சகோதரிகளுக்கு இடையே உள்ள ஒற்றுமையைக் கட்டிக்காப்பதற்குப் பதிலாக அதை இடித்துப்போடுவதாக இருந்தால், அது வீணான காரியமாகவே இருக்கும்.—2 கொ. 13:10, 11.
19. தங்களுடைய வார்த்தைகள் வீணானவையாக இல்லாதபடி மூப்பர்கள் எப்படிப் பார்த்துக்கொள்கிறார்கள்?
19 வீணான வார்த்தைகளைக் குறித்ததில், மூப்பர்களும்கூட முக்கியமான பாடத்தைக் கற்றுக்கொள்ள வேண்டும். ஆலோசனை கொடுக்க வேண்டிய சமயத்தில், தங்களுடைய வரையறைகளை அவர்கள் மனதில்கொள்ள வேண்டும். தங்களுடைய அனுபவத்திலிருந்து மட்டுமே ஆலோசனை சொல்வதற்கு அவர்கள் முயலக்கூடாது. பைபிள் என்ன சொல்கிறதோ அவற்றைப் பயன்படுத்தியே ஆலோசனை கொடுக்க வேண்டும். இதற்கான தகுந்த நியமத்தை அப்போஸ்தலன் பவுல் எழுதிய பின்வரும் வார்த்தைகளில் காணலாம்: ‘எழுதப்பட்டதற்கு மிஞ்சி எண்ணவேண்டாம் [அதாவது, போகவேண்டாம்].’ (1 கொ. 4:6) மூப்பர்கள், பைபிளில் எழுதப்பட்டிருக்கிற காரியங்களுக்கு மிஞ்சி செல்ல மாட்டார்கள். இன்னும் சொல்லப்போனால், உண்மையும் விவேகமுமுள்ள ஊழியக்கார வகுப்பார் வெளியிட்டிருக்கும் பிரசுரங்களிலுள்ள பைபிள் அடிப்படையிலான ஆலோசனைகளுக்கு மிஞ்சியும் அவர்கள் செல்லமாட்டார்கள்.
20. வீணான காரியங்களை வெறுத்து ஒதுக்குவதற்கு எவ்வழிகளில் நமக்கு உதவி கிடைக்கிறது?
20 வீணான காரியங்கள், அவை கடவுட்களாகவோ, வார்த்தைகளாகவோ வேறு எதுவாகவோ இருந்தாலும்சரி, மிகவும் தீங்கு விளைவிப்பவை. அதனால், இப்படிப்பட்டவற்றை அறிந்துகொள்வதற்கு உதவும்படி நாம் யெகோவாவிடம் எப்போதுமே மன்றாடுகிறோம். அதோடு, அவற்றை வெறுத்து ஒதுக்குவதற்கு அவருடைய அறிவுரைகளையும் நாம் நாடுகிறோம். அவ்வாறு நாம் செய்கையில், சங்கீதக்காரனைப் போலவே நாம் சொல்கிறோம்: “மாயையைப் [அதாவது, வீணானவற்றை] பாராதபடி நீர் என் கண்களை விலக்கி, உமது வழிகளில் என்னை உயிர்ப்பியும்.” (சங். 119:37) அடுத்தக் கட்டுரையில், யெகோவாவின் அறிவுரையை ஏற்றுக்கொள்வதன் முக்கியத்துவத்தைக் குறித்து நாம் கூடுதலாகச் சிந்திப்போம்.
விளக்க முடியுமா?
• பொதுவாகச் சொன்னால், எப்படிப்பட்ட “வீணான காரியங்களை” நாம் வெறுத்து ஒதுக்க வேண்டும்?
• பணம் நம் கடவுளாக ஆகிவிடாதபடி நாம் எப்படிக் கவனமாக இருக்கலாம்?
• சரீர இச்சைகள் எவ்விதத்தில் விக்கிரக வழிபாடாக ஆகிவிடலாம்?
• வீணான வார்த்தைகளை நாம் எப்படி வெறுத்து ஒதுக்கலாம்?
[பக்கம் 3-ன் படம்]
வீணான காரியங்களை நாடும்படி அல்ல, நிலத்தை ‘உழுது பயிரிடும்படியே’ இஸ்ரவேலர் ஊக்குவிக்கப்பட்டார்கள்
[பக்கம் 5-ன் படம்]
பொருட்செல்வங்களுக்கான ஆசையினால் யெகோவாவின் சேவையில் ஒருபோதும் மந்தமாகிவிடாதீர்கள்
[பக்கம் 6-ன் படம்]
மூப்பர்களின் வார்த்தைகள் அதிகப் பயனுள்ளவையாக இருக்கலாம்