தீத்துவுக்குக் கடிதம்
2 ஆனால் நீ பயனுள்ள* போதனைகளுக்கு இசைவான விஷயங்களைத் தொடர்ந்து பேசு.+ 2 வயதான ஆண்கள் பழக்கவழக்கங்களில் அளவுக்குமீறி போகாதவர்களாக, பொறுப்போடு நடக்கிறவர்களாக, தெளிந்த புத்தியுள்ளவர்களாக, விசுவாசத்தில் உறுதியுள்ளவர்களாக, அன்பையும் சகிப்புத்தன்மையையும் காட்டுவதில் சிறந்தவர்களாக இருக்க வேண்டும். 3 அதேபோல், வயதான பெண்கள் பயபக்தியோடு நடக்கிறவர்களாக, மற்றவர்களைப் பற்றி இல்லாததையும் பொல்லாததையும் பேசாதவர்களாக, திராட்சமதுவுக்கு அடிமையாகாதவர்களாக, நல்லதைக் கற்றுக்கொடுக்கிறவர்களாக இருக்க வேண்டும். 4 அப்போதுதான், இளம் பெண்கள் தங்களுடைய கணவர்மீதும் பிள்ளைகள்மீதும் அன்புள்ளவர்களாக, 5 தெளிந்த புத்தியுள்ளவர்களாக, கற்புள்ளவர்களாக, வீட்டு வேலைகளைச் செய்கிறவர்களாக,* நல்லவர்களாக, தங்கள் கணவருக்குக் கட்டுப்பட்டு நடக்கிறவர்களாக+ இருக்கும்படி அவர்களால் புத்திசொல்ல* முடியும்; கடவுளுடைய வார்த்தையைப் பற்றி மற்றவர்கள் பழித்துப்பேச இடமிருக்காது.
6 அதேபோல், இளம் ஆண்கள் தெளிந்த புத்தியுள்ளவர்களாக+ இருக்க வேண்டும் என்று சொல்லிக்கொண்டே இரு. 7 நல்ல செயல்கள் செய்வதில் எல்லா விதத்திலும் முன்மாதிரியாக இரு. உண்மையான விஷயங்களைக் கருத்தாகக் கற்றுக்கொடு.*+ 8 அப்படிக் கற்றுக்கொடுக்கும்போது, யாரும் குற்றம்சொல்ல முடியாத நல்ல* வார்த்தைகளைப் பேசு;+ அப்போதுதான், எதிரிகள் நம்மைப் பற்றித் தவறாக* பேச வழியில்லாமல்+ வெட்கப்பட்டுப்போவார்கள். 9 அடிமைகள் எல்லாவற்றிலும் தங்கள் எஜமான்களுக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டும்,+ அவர்களைப் பிரியப்படுத்த முயற்சி செய்ய வேண்டும், எதிர்த்துப் பேசக் கூடாது, 10 திருடக் கூடாது;+ அதற்குப் பதிலாக, தாங்கள் முழு நம்பிக்கைக்குரியவர்கள் என்பதைக் காட்ட வேண்டும். அப்போதுதான், நம்முடைய மீட்பரான கடவுளுடைய போதனைகளை எல்லா விதத்திலும் அவர்களால் அலங்கரிக்க முடியும்.+
11 கடவுளுடைய அளவற்ற கருணை வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது, எல்லா விதமான ஆட்களையும் காப்பாற்றுவதற்கு+ அது உதவி செய்கிறது; 12 கடவுள்பக்தியற்ற நடத்தையையும் உலக ஆசைகளையும் விட்டுவிடுவதற்கும்+ தெளிந்த புத்தியுள்ளவர்களாக, நீதிமான்களாக, கடவுள்பக்தி உள்ளவர்களாக இந்த உலகத்தில்* வாழ்வதற்கும்+ அந்த அளவற்ற கருணை நமக்குக் கற்றுக்கொடுக்கிறது. 13 நம்முடைய சந்தோஷமான எதிர்பார்ப்பு நிறைவேறுவதற்காகவும்,+ நம்முடைய மகத்தான கடவுளும் நம்முடைய மீட்பராகிய கிறிஸ்து இயேசுவும் மகிமையோடு வெளிப்படுவதற்காகவும் காத்திருக்கிற நேரத்தில் நாம் அப்படி வாழ வேண்டும். 14 கிறிஸ்து நமக்காகத் தன்னையே கொடுத்தார்;+ இப்படி, நம்மை எல்லா விதமான அக்கிரமங்களிலிருந்தும் விடுவித்தார்.+ அதோடு, அவருக்குச் சொந்தமான விசேஷ சொத்தாகவும் நல்ல செயல்கள் செய்வதில் வைராக்கியமுள்ள மக்களாகவும் ஆகும்படி நம்மைச் சுத்தமாக்கினார்.+
15 இந்த விஷயங்களைப் பற்றி நீ முழு அதிகாரத்தோடு தொடர்ந்து பேசு, தொடர்ந்து அறிவுரை கொடு,* தொடர்ந்து கண்டித்துப் பேசு.+ யாரும் உன்னைத் தாழ்வாகப் பார்க்க இடம்கொடுக்காதே.