பெற்றோர்களே பிள்ளைகளே: கடவுளை முதலாவது வையுங்கள்!
“தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்.”—பிரசங்கி 12:13.
1. பெற்றோரும் பிள்ளைகளும் என்ன பயத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும், இது அவர்களுக்கு எதைக் கொண்டு வரும்?
“கர்த்தருக்குப் பயப்படுதல் அவருக்கு உகந்த வாசனையாயிருக்கும்,” என்று இயேசு கிறிஸ்துவைக் குறித்து ஒரு தீர்க்கதரிசனம் கூறியது. (ஏசாயா 11:3) அவருக்கிருந்த பயம் முக்கியமாக, கடவுள் பேரில் ஆழ்ந்த மரியாதை மற்றும் கடவுள் பேரில் பக்தியுடன்கூடிய பயம், அவர் பேரில் அன்புகூர்ந்ததினால் அவருக்கு வெறுப்பூட்டாமல் இருக்க வேண்டும் என்ற பயம் ஆகும். பெற்றோரும் பிள்ளைகளும் கிறிஸ்து கடவுளிடமாக கொண்டிருந்த பயத்தைப் போன்ற அப்படிப்பட்ட பயத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும், அது இயேசுவுக்கு மகிழ்ச்சியைக் கொண்டுவந்தது போல அவர்களுக்கும் மகிழ்ச்சியைக் கொண்டுவரும். அவர்கள் தங்கள் வாழ்க்கையில் கடவுளுடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவதன் மூலம் அவரை முதலாவதாக வைக்க வேண்டும். ஒரு பைபிள் எழுத்தாளர் சொல்கிறபடி, “எல்லா மனுஷர் மேலும் விழுந்த கடமை இதுவே.”—பிரசங்கி 12:13.
2. நியாயப்பிரமாணத்தின் அதிமுக்கியமான கட்டளை எது, அது யாருக்கு முக்கியமாக கொடுக்கப்பட்டது?
2 நியாயப்பிரமாணத்தின் அதிமுக்கியமான கட்டளை, அதாவது, நாம் ‘யெகோவாவில் முழு இருதயத்தோடும், முழு ஆத்துமாவோடும், உயிராற்றலோடும் அன்புகூர வேண்டும்’ என்பது முக்கியமாக பெற்றோருக்குக் கொடுக்கப்பட்டது. இது நியாயப்பிரமாணத்தின் கூடுதலான வார்த்தைகளால் காண்பிக்கப்பட்டிருக்கிறது: ‘நீ அவைகளை [யெகோவாவிடத்தில் அன்புகூர வேண்டியதைப் பற்றிய இப்படிப்பட்ட வார்த்தைகளை] உன் பிள்ளைகளுக்குக் கருத்தாய்ப் போதித்து, நீ உன் வீட்டில் உட்கார்ந்திருக்கிறபோதும், வழியில் நடக்கிறபோதும், படுத்துக்கொள்ளுகிறபோதும், எழுந்திருக்கிறபோதும் அவைகளைக் குறித்துப் பேச வேண்டும்.’ (உபாகமம் 6:4-7; மாற்கு 12:28-30) இவ்வாறு பெற்றோர் தாங்களே கடவுளிடத்தில் அன்புகூருவதன் மூலமும் தங்கள் பிள்ளைகளும் அதையே செய்யும்படி கற்பிப்பதன் மூலமும் கடவுளை முதலாவது வைக்கும்படி கட்டளை கொடுக்கப்பட்டனர்.
ஒரு கிறிஸ்தவ உத்தரவாதம்
3. பிள்ளைகளுக்கு கவனம் செலுத்த வேண்டியதன் முக்கியத்துவத்தை இயேசு எவ்வாறு நடைமுறைப்படுத்திக் காண்பித்தார்?
3 இளம் பிள்ளைகளுக்கும்கூட கவனத்தைக் கொடுக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை இயேசு நடைமுறைப்படுத்திக் காண்பித்தார். இயேசுவின் பூமிக்குரிய ஊழியத்தின் முடிவின்போது ஒரு சமயம் ஜனங்கள் தங்கள் குழந்தைகளை அவரிடமாக கொண்டுவர ஆரம்பித்தனர். இயேசு அதிக வேலையாயிருந்ததால் அவருக்குத் தொல்லை கொடுக்கக்கூடாது என்று நினைத்து ஜனங்கள் அவரிடம் வராதபடி சீஷர்கள் தடைசெய்ய முயற்சி செய்தனர். ஆனால் இயேசு தம் சீஷர்களைக் கண்டித்தார்: “சிறு பிள்ளைகள் என்னிடத்தில் வருகிறதற்கு இடங்கொடுங்கள், அவைகளைத் தடைபண்ணாதிருங்கள்.” இயேசு ‘பிள்ளைகளை தம் கைகளில் எடுத்துக்கொண்டார்,’ அவ்வாறு செய்வதன் மூலம் இளம் பிள்ளைகளுக்கு கவனத்தைக் கொடுக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை மனதை உருக்கும்விதத்தில் காண்பித்தார்.—லூக்கா 18:15-17; மாற்கு 10:13-16.
4. ‘சகல ஜாதிகளையும் சீஷராக்க வேண்டும்’ என்ற கட்டளை யாருக்குக் கொடுக்கப்பட்டது, இது அவர்களை என்ன செய்யும்படி தேவைப்படுத்தும்?
4 தம்மைப் பின்பற்றுகிறவர்கள் தங்களுடைய பிள்ளைகளுக்கு மட்டுமல்லாமல் மற்றவர்களுக்கும் போதிக்க வேண்டிய உத்தரவாதத்தை உடையவர்களாய் இருந்தனர் என்பதையும்கூட இயேசு தெளிவாக்கினார். தம்முடைய மரணம் மற்றும் உயிர்த்தெழுதலுக்குப் பின், இயேசு—சில பெற்றோர் உட்பட—“ஐந்நூறுபேருக்கு அதிகமான சகோதரருக்கும் ஒரேவேளையில் தரிசனமானார்.” (1 கொரிந்தியர் 15:6) கலிலேயாவில் இருந்த ஒரு மலையில் அவருடைய 11 அப்போஸ்தலர்களும்கூட கூடியிருந்தபோது இது நடைபெற்றதாகத் தெரிகிறது. அங்கு இயேசு அவர்கள் எல்லாரையும் இவ்வாறு ஊக்குவித்தார்: “ஆகையால் நீங்கள் புறப்பட்டுப் போய், சகல ஜாதிகளையும் சீஷராக்கி, . . . நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம்பண்ணுங்கள்.” (மத்தேயு 28:16-20) எந்தவொரு கிறிஸ்தவனும் இந்தக் கட்டளையை நியாயமாகவே புறக்கணிக்க முடியாது! இதை தகப்பன்மாரும் தாய்மாரும் செய்துமுடிக்க வேண்டுமென்றால், அவர்கள் தங்கள் பிள்ளைகளைக் கவனித்துக்கொள்வதோடுகூட வெளிப்படையாகச் செய்யப்படும் பிரசங்க வேலையிலும் கற்பிக்கும் வேலையிலும் பங்குகொள்வதை அது தேவைப்படுத்துகிறது.
5. (அ) எல்லா அப்போஸ்தலர்களும் விவாகமானவர்களல்ல என்றாலும் பெரும்பாலானோர் விவாகமாகி ஒருவேளை பிள்ளைகளைக் கொண்டிருந்தனர் என்பதை எது காண்பிக்கிறது? (ஆ) என்ன புத்திமதியை குடும்பத் தலைவர்கள் கருத்தார்ந்த விதத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்?
5 குறிப்பிடத்தக்கவகையில், அப்போஸ்தலர்களும்கூட தங்கள் குடும்ப உத்தரவாதங்களோடுகூட பிரசங்கிக்க வேண்டிய கடமையையும் கடவுளுடைய மந்தையை மேய்க்க வேண்டிய கடமையையும் சமநிலைப்படுத்த வேண்டியவர்களாய் இருந்தனர். (யோவான் 21:1-3, 15-17; அப்போஸ்தலர் 1:8) இது ஏனென்றால் அவர்கள் எல்லாருமே விவாகமானவர்களல்ல, என்றாலும்கூட அவர்களில் அநேகர் விவாகமானவர்களாய் இருந்தனர். இவ்வாறு அப்போஸ்தலனாகிய பவுல் விளக்கினார்: “மற்ற அப்போஸ்தலரும், கர்த்தருடைய சகோதரரும், கேபாவும் செய்கிறதுபோல, மனைவியாகிய ஒரு சகோதரியைக் கூட்டிக்கொண்டு திரிய எங்களுக்கும் அதிகாரமில்லையா?” (1 கொரிந்தியர் 9:5; மத்தேயு 8:14) சில அப்போஸ்தலர்களுக்கு பிள்ளைகளும்கூட இருந்திருக்கலாம். பேதுருவுக்கு பிள்ளைகள் இருந்தனர் என்று யூசிபியஸ் போன்ற பூர்வ சரித்திர ஆசிரியர்கள் சொல்கின்றனர். எல்லா பூர்வகால கிறிஸ்தவ பெற்றோரும் பின்வரும் வேதப்பூர்வமான புத்திமதியைக் கருத்தில்கொள்ள வேண்டியவர்களாய் இருந்தனர்: “ஒருவன் தன் சொந்த ஜனங்களையும், விசேஷமாகத் தன் வீட்டாரையும் விசாரியாமற்போனால், அவன் விசுவாசத்தை மறுதலித்தவனும், அவிசுவாசியிலும் கெட்டவனுமாயிருப்பான்.”—1 தீமோத்தேயு 5:8.
அடிப்படையான உத்தரவாதம்
6. (அ) குடும்பங்களையுடைய கிறிஸ்தவ மூப்பர்கள் என்ன சவாலை உடையவர்களாய் இருக்கின்றனர்? (ஆ) ஒரு மூப்பரின் முக்கியமான உத்தரவாதம் என்ன?
6 இன்று குடும்பங்களை உடைய கிறிஸ்தவ மூப்பர்கள், அப்போஸ்தலர்கள் இருந்த அதே நிலையில் இருக்கின்றனர். அவர்கள் தங்கள் குடும்பங்களின் ஆவிக்குரிய மற்றும் சரீரப்பிரகாரமான தேவைகளை கவனித்துக்கொள்ள வேண்டிய உத்தரவாதத்தோடுகூட, வெளிப்படையாக பிரசங்கிப்பதிலும் கடவுளுடைய மந்தையை மேய்ப்பதிலும் சம்பந்தப்பட்ட தங்கள் கடமைகளை சமநிலைப்படுத்த வேண்டும். எந்த வேலை முதன்மையான நிலையை எடுக்க வேண்டும்? காவற்கோபுரம் மார்ச் 15, 1964, இவ்வாறு குறிப்பிட்டது: “[தகப்பனின்] முதல் கடமை தன்னுடைய குடும்பத்தினிடமாக இருக்க வேண்டும், அவர் இந்த கடமையை கவனித்துக்கொள்ளவில்லை என்றால், உண்மையில் அவர் சபையில் ஒரு மூப்பராக சேவிக்க முடியாது.”
7. கிறிஸ்தவ தகப்பன்மார் எவ்வாறு கடவுளை முதலாவது வைக்கின்றனர்?
7 ‘தங்கள் பிள்ளைகளை கர்த்தருக்கேற்ற சிட்சையிலும் மன-சீரமைப்பிலும் தொடர்ந்து வளர்த்துவர வேண்டும்’ என்ற கட்டளைக்குச் செவிகொடுப்பதன் மூலம் தகப்பன்மார் கடவுளை முதலாவது வைக்க வேண்டும். (எபேசியர் 6:4) கிறிஸ்தவ சபையில் உள்ள வேலைகளை கண்காணிப்பதற்கு அவருக்கு நியமிப்பு இருந்தாலும்கூட, அந்த உத்தரவாதத்தை அவர் வேறு யாரிடமாவது ஒப்படைத்துவிட முடியாது. அப்படிப்பட்ட தகப்பன்மார் தங்கள் உத்தரவாதங்களை—குடும்ப அங்கத்தினர்களின் சரீரப்பிரகாரமான, ஆவிக்குரியப்பிரகாரமான மற்றும் உணர்ச்சி சம்பந்தமான தேவைகளை கவனித்துக்கொண்டு—அதே சமயத்தில் எவ்வாறு சபையில் தலைமைதாங்கி கண்காணிப்பு செய்யலாம்?
தேவைப்படும் ஆதரவை அளித்தல்
8. மூப்பரின் மனைவி அவரை எவ்வாறு ஆதரிக்கலாம்?
8 குடும்ப உத்தரவாதங்களையுடைய மூப்பர்கள் ஆதரவினால் பயனடையலாம் என்பது தெளிவாயிருக்கிறது. ஒரு கிறிஸ்தவ மனைவி தன் கணவனுக்கு ஆதரவாயிருக்கலாம் என்று மேலே குறிப்பிடப்பட்டிருக்கும் காவற்கோபுரம் குறிப்பிட்டது. அது சொன்னது: “அவர் தன்னுடைய பல்வேறு நியமிப்புகளை தயாரிப்பதற்கு அவளால் முடிந்தவரை அவருக்கு சௌகரியமானதாக செய்து தரலாம், வீட்டில் ஒரு நல்ல அட்டவணையைக் கொண்டிருப்பது, உணவை நேரத்துக்குத் தயாரித்து வைப்பது, சபைக்கூட்டங்களுக்கு நேரம் தவறாமல் செல்வதற்கு தயாராய் இருப்பது ஆகியவற்றின் மூலம் கணவருக்கும் தனக்குமுள்ள மதிப்புவாய்ந்த நேரத்தை மிச்சப்படுத்த உதவலாம் . . . பிள்ளைகள் யெகோவாவைப் பிரியப்படுத்துவதற்கென்று செல்லவேண்டிய வழியிலே அவர்களைப் பயிற்றுவிப்பதற்கு கிறிஸ்தவ மனைவி தன் கணவனின் வழிநடத்துதலின் கீழ் அதிகத்தைச் செய்யலாம்.” (நீதிமொழிகள் 22:6) ஆம், “ஒரு உதவியாளாக” இருப்பதற்கு மனைவி படைக்கப்பட்டாள், அவளுடைய கணவன் அவளுடைய உதவியை ஞானமாக வரவேற்பார். (ஆதியாகமம் 2:18, NW) அவருடைய குடும்பத்தையும் அவருடைய சபை உத்தரவாதங்களையும் அதிக திறம்பட்டவிதத்தில் கவனித்துக்கொள்ள அவளுடைய ஆதரவு அவருக்கு உதவக்கூடும்.
9. தெசலோனிக்கேயா சபையில் இருந்த யார் சபையிலுள்ள மற்ற அங்கத்தினர்களுக்கு உதவிசெய்யும்படி உற்சாகப்படுத்தப்பட்டனர்?
9 எனினும், ஒரு கண்காணி தன் சொந்த குடும்பத்தையும் கவனித்துக்கொண்டு ‘தேவனுடைய மந்தையையும் மேய்க்க’ வேண்டியிருப்பதனால், அவரை ஆதரிப்பதற்காக செய்யப்படும் வேலையில் கிறிஸ்தவ மூப்பர்களின் மனைவிகள் மட்டுமே பங்குகொள்ளவேண்டும் என்றில்லை. (1 பேதுரு 5:2) வேறு யார் பங்குகொள்ளலாம்? ‘தலைமை தாங்கி’ (NW) வழிநடத்தியவர்கள் பேரில் அன்புடன்கூடிய மரியாதை கொண்டிருக்கும்படி தெசலோனிக்கேயாவில் இருந்த சகோதரர்களை அப்போஸ்தலனாகிய பவுல் ஊக்குவித்தார். இருப்பினும், இதே சகோதரர்களை நோக்கி தொடர்ந்து பேசுபவராய்—குறிப்பாக தலைமைதாங்கி வழிநடத்துதல் செய்யாதவர்களை நோக்கி—பவுல் எழுதினார்: “சகோதரரே, நாங்கள் உங்களுக்குப் போதிக்கிறதென்னவென்றால், ஒழுங்கில்லாதவர்களுக்குப் புத்திசொல்லுங்கள், திடனற்றவர்களைத் தேற்றுங்கள், பலவீனரைத் தாங்குங்கள், எல்லாரிடத்திலும் நீடிய சாந்தமாயிருங்கள்.”—1 தெசலோனிக்கேயர் 5:12-14.
10. எல்லா சகோதரர்களுடைய அன்பான உதவியும் சபையின் மீது என்ன பாதிப்பைக் கொண்டிருக்கிறது?
10 மனச்சோர்வடைந்திருப்பவர்களை ஆறுதல்படுத்துவதற்கும், பெலவீனரைத் தாங்குவதற்கும், ஒழுங்கில்லாதவர்களுக்குப் புத்திசொல்வதற்கும், எல்லாரிடத்திலும் நீடியசாந்தமாய் இருப்பதற்கும் அவர்களை உந்துவிக்கும் அன்பைக் கொண்டிருக்கும் சகோதரர்கள் ஒரு சபையில் இருந்தால் எவ்வளவு நன்றாய் இருக்கிறது! மிகுந்த உபத்திரவத்தை அனுபவித்திருந்தபோதிலும், அண்மையில் பைபிள் சத்தியத்தை தழுவிக்கொண்ட தெசலோனிக்கேயாவில் இருந்த சகோதரர்கள் இதைச் செய்வதற்கு பவுலின் புத்திமதியைப் பொருத்தினர். (அப்போஸ்தலர் 17:1-9; 1 தெசலோனிக்கேயர் 1:6; 2:14; 5:11) முழு சபையையும் பலப்படுத்தி ஐக்கியப்படுத்திய அவர்களுடைய அன்பான ஒத்துழைப்பு கொண்டிருந்த சிறந்த பாதிப்பை சிந்தித்துப் பாருங்கள்! அதே போன்று, சகோதரர்கள் இன்று ஒருவரையொருவர் ஆறுதல்படுத்தி, ஆதரித்து, புத்திசொல்லும்போது, பெரும்பாலும் குடும்பங்களையும் கவனித்துக்கொள்ள வேண்டிய மூப்பர்களுக்கு அது மேய்க்கும் உத்தரவாதங்களைக் கையாளுவதற்கு அதிக சுலபமாக்குகிறது.
11. (அ) “சகோதரர்கள்” என்ற பதத்தில் பெண்கள் சேர்த்துக்கொள்ளப்பட்டிருந்தனர் என்ற முடிவுக்கு வருவது ஏன் நியாயமானது? (ஆ) ஒரு முதிர்ச்சிவாய்ந்த கிறிஸ்தவப் பெண் இன்று இளம் பெண்களுக்கு என்ன உதவியை அளிக்கலாம்?
11 அப்போஸ்தலனாகிய பவுல் குறிப்பிட்ட “சகோதரர்களில்” பெண்கள் சேர்க்கப்பட்டிருந்தனரா? ஆம், அவர்கள் சேர்க்கப்பட்டிருந்தனர், ஏனென்றால் அநேக பெண்கள் விசுவாசிகளாக ஆனார்கள். (அப்போஸ்தலர் 17:1, 4; 1 பேதுரு 2:17; 5:9) என்னவிதமான உதவியை அப்படிப்பட்ட பெண்கள் அளிக்கலாம்? தங்கள் ‘காமவிகாரத்தை’ கட்டுப்படுத்துவதில் பிரச்சினையைக் கொண்டிருந்த பெண்களும் அல்லது ‘மனச்சோர்வடைந்த ஆத்துமாக்களாய்’ ஆகியிருந்த இளம் பெண்களும் சபைகளில் இருந்தனர். (1 தீமோத்தேயு 5:11-13) இன்று சில பெண்கள் அதேபோன்ற பிரச்சினைகளைக் கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கு தேவைப்படுவது எல்லாம் வெறுமனே அவர்கள் சொல்வதை செவிகொடுத்துக் கேட்டு அவர்களிடம் பரிவிரக்கத்தோடு இருப்பதுதான். பெரும்பாலும் முதிர்ச்சியுள்ள ஒரு கிறிஸ்தவப் பெண்ணே அப்படிப்பட்ட உதவியை அளிப்பதற்கு சிறந்த நிலையில் இருப்பார்கள். உதாரணமாக, அவள் தனிப்பட்ட பிரச்சினைகளை மற்றொரு பெண்ணோடு கலந்து பேசக்கூடும், அதை ஒரு கிறிஸ்தவ ஆண் தனியாக சரியானவிதத்தில் கையாளமுடியாத நிலையில் இருப்பார். அப்படிப்பட்ட உதவியின் மதிப்பை சிறப்பித்துக் காட்டுபவராய் பவுல் எழுதினார்: “முதிர்வயதுள்ள ஸ்திரீகளும் . . . தேவவசனம் தூஷிக்கப்படாதபடிக்குப் பாலிய ஸ்திரீகள் தங்கள் புருஷரிடத்திலும், தங்கள் பிள்ளைகளிடத்திலும் அன்புள்ளவர்களும், தெளிந்த புத்தியுள்ளவர்களும், கற்புள்ளவர்களும், வீட்டில் தரித்திருக்கிறவர்களும், நல்லவர்களும், தங்கள் புருஷருக்குக் கீழ்ப்படிகிறவர்களுமாயிருக்கும்படி, அவர்களுக்குப் படிப்பிக்கத்தக்க நற்காரியங்களைப் போதிக்கிறவர்களுமாயிருக்கவும் முதிர்வயதுள்ள ஸ்திரீகளுக்குப் புத்திசொல்லு.”—தீத்து 2:3-5.
12. சபையிலுள்ள அனைவரும் யாருடைய வழிநடத்துதலைப் பின்பற்றுவது முக்கியமானது?
12 தங்கள் கணவர்களையும் மூப்பர்களையும் ஆதரித்து ஒத்துழைக்கும்போது, மனத்தாழ்மையான சகோதரிகள் சபைக்கு என்னே ஓர் ஆசீர்வாதமாய் இருக்கின்றனர்! (1 தீமோத்தேயு 2:11, 12; எபிரெயர் 13:17) எல்லாரும் அன்பானவிதத்தில் ஒருவருக்கொருவர் உதவி செய்வதில் ஒத்துழைக்கும்போதும், எல்லாரும் நியமிக்கப்பட்ட மேய்ப்பர்களின் வழிநடத்துதலுக்கு கீழ்ப்பட்டிருக்கும்போதும் குடும்ப உத்தரவாதங்களையுடைய மூப்பர்கள் விசேஷமாக பயனடைகின்றனர்.—1 பேதுரு 5:1, 2.
பெற்றோர்களே, நீங்கள் எதை முதலில் வைக்கிறீர்கள்?
13. அநேக தகப்பன்மார் தங்கள் குடும்பப் பொறுப்புகளை எவ்வாறு நிறைவேற்றாமல் போய்விடுகின்றனர்?
13 பல வருடங்களுக்கு முன்பு ஒரு பொழுதுபோக்கு பிரமுகர் பின்வருமாறு குறிப்பிட்டார்: “நூற்றுக்கணக்கான ஆட்களை வைத்துக்கொண்டு தொழில் நிறுவனங்களை நடத்தும் வெற்றிகரமான ஆண்களை நான் பார்க்கிறேன்; ஒவ்வொரு சூழ்நிலையையும் எவ்வாறு கையாள வேண்டும் என்பதை அவர்கள் அறிந்திருக்கின்றனர், வியாபார உலகில் எவ்வாறு சிட்சிக்க வேண்டும், பலனளிக்க வேண்டும் என்பதை அறிந்திருக்கின்றனர். ஆனால் அவர்கள் நடத்திக்கொண்டிருக்கும் மிகப்பெரிய வியாபாரம் அவர்களுடைய குடும்பம், அதில் அவர்கள் தோல்வியடைகின்றனர்.” ஏன்? கடவுளுடைய புத்திமதியை புறக்கணித்துவிட்டு வியாபாரத்தையும் மற்ற அக்கறைகளையும் அவர்கள் முதலில் வைப்பதன் காரணமாக அல்லவா? அவருடைய வார்த்தை சொல்கிறது: ‘இன்று நான் உனக்குக் கட்டளையிடுகிற இந்த வார்த்தைகளை . . . உன் பிள்ளைகளுக்கு கருத்தாய்ப் போதிக்க வேண்டும்.’ இது தினமும் செய்யப்பட வேண்டியதாயிருந்தது. பெற்றோர் தங்கள் நேரத்தை—விசேஷமாக அவர்களுடைய அன்பையும் ஆழ்ந்த அக்கறையையும் தாராளமாக கொடுக்க வேண்டும்.—உபாகமம் 6:6-9.
14. (அ) பெற்றோர் தங்கள் பிள்ளைகளை எவ்வாறு கவனித்துக்கொள்ள வேண்டும்? (ஆ) பிள்ளைகளை சரியாக பயிற்றுவிப்பதில் எது உட்பட்டிருக்கிறது?
14 பிள்ளைகள் யெகோவாவிடமிருந்து வரும் சுதந்தரம் என்று பைபிள் நமக்கு நினைப்பூட்டுகிறது. (சங்கீதம் 127:3) கடவுளுடைய சொத்தை போல் நீங்கள் உங்கள் பிள்ளைகளை கவனித்துக்கொள்கிறீர்களா, உங்களிடம் அவர் ஒப்படைத்திருக்கும் ஒரு வெகுமதியாகக் கருதுகிறீர்களா? நீங்கள் உங்களுடைய மகனையோ அல்லது மகளையோ கைகளில் அணைத்துக்கொண்டு உங்களுடைய அன்பான அக்கறையையும் கவனிப்பையும் வெளிப்படுத்திக் காண்பித்தால் உங்களுடைய பிள்ளை பெரும்பாலும் பிரதிபலிக்கும். (மாற்கு 10:16) ஆனால் ‘பிள்ளையானவனை நடக்கவேண்டிய வழியிலே நடத்துவதற்கு’ அதனை வெறுமனே கட்டி அணைத்துக்கொண்டு முத்தங்கள் கொடுப்பதைக் காட்டிலும் கூடுதலாக தேவைப்படுகிறது. வாழ்க்கையில் ஏற்படும் படுகுழிகளைத் தவிர்ப்பதற்குத் தேவையான ஞானத்தைப் பெற்றிருப்பதற்கு, ஒரு பிள்ளைக்கு அன்பான சிட்சையும்கூட தேவைப்படுகிறது. ‘பிள்ளையை தண்டிப்பதன்’ மூலம் பெற்றோர் உண்மையான அன்பைக் காண்பிக்கின்றனர்.—நீதிமொழிகள் 13:1, 24; 22:6.
15. பெற்றோர் சிட்சை கொடுக்க வேண்டியதன் அவசியத்தை எது காண்பிக்கிறது?
15 ஒரு பள்ளி அறிவுரையாளர் தன் அலுவலகத்துக்கு வரும் பிள்ளைகளைப் பற்றி கொடுக்கும் விவரிப்பிலிருந்து பெற்றோர் சிட்சை கொடுக்க வேண்டியதன் அவசியத்தைக் காணலாம்: “அவர்கள் பரிதாபப்படத்தக்கவர்களாகவும், மனச்சோர்வடைந்தவர்களாகவும், நம்பிக்கையிழந்தவர்களாகவும் இருக்கின்றனர். விஷயங்கள் உண்மையில் எவ்வாறு இருக்கின்றன என்பதைக் குறித்து பேசும்போது அவர்கள் கண்ணீர் வடிக்கின்றனர். அநேகர்—ஒருவர் நினைப்பதைவிட அதிக அதிகமான ஆட்கள்—தற்கொலை செய்துகொள்ள முயற்சி செய்திருக்கின்றனர், அவர்கள் அளவுக்கதிக சந்தோஷமாய் இருப்பதன் காரணமாக அல்ல; அதற்குக் காரணம் அவர்கள் அதிக சந்தோஷமற்றவர்களாகவும், கவனிக்கப்படாதவர்களாகவும், அழுத்தத்தால் மேற்கொள்ளப்பட்டவர்களாகவும் இருப்பதாலும், இளம் வயதில் அதிக பொறுப்புகளைக் கொண்டிருப்பதன் காரணமாக அழுத்தத்தால் மேற்கொள்ளப்பட்டு கையாளுவதற்கு அதிகம் இருப்பதாக உணருவதாலுமே.” அவர்கள் கூடுதலாக சொன்னார்கள்: “அவ்வளவு பொறுப்பினை ஏற்றுக்கொண்டிருப்பது ஒரு இளம் நபருக்கு திகிலூட்டும் காரியமாய் இருக்கிறது.” உண்மைதான், பிள்ளைகள் சிட்சையை தவிர்க்க அல்லது அதை மறுக்க முயற்சி செய்யலாம், ஆனால் அவர்கள் உண்மையில் பெற்றோரின் வழிகாட்டும் அறிவுரைகளையும் அவர்கள் வைக்கும் வரம்புகளையும் போற்றுகின்றனர். அவர்களுடைய பெற்றோர் அவர்கள் மேல் அக்கறை காண்பித்து அவர்களுக்கு வரம்புகளை வைப்பதைக் குறித்து சந்தோஷப்படுகின்றனர். அவனுடைய பெற்றோர் அவனுக்கு வரம்புகளை வைத்தது, “ஒரு பெரிய பாரத்தைக் குறைத்தது போல் இருந்தது,” என்று ஒரு பருவ வயதினன் கூறினான்.
16. (அ) கிறிஸ்தவக் குடும்பங்களில் வளர்க்கப்படும் சில பிள்ளைகளுக்கு என்ன நேரிடுகிறது? (ஆ) ஒரு பிள்ளையின் தாறுமாறான போக்கு ஏன் பெற்றோர் கொடுத்த பயிற்றுவிப்பு நன்றாக இல்லை என்று எப்போதும் அர்த்தம்கொள்ளக்கூடாது?
16 தங்களை நேசித்து சிறந்த பயிற்சி கொடுக்கும் பெற்றோர்களைக் கொண்டிருந்தபோதிலும் சில இளைஞர்கள் இயேசுவின் உவமையில் உள்ள கெட்ட குமாரனைப் போல பெற்றோரின் வழிநடத்துதலை மறுத்துவிட்டு வழிதவறி சென்றுவிடுகின்றனர். (லூக்கா 15:11-16) இருப்பினும், நீதிமொழிகள் 22:6 எடுத்துக்காட்டுகிறபடி, அதுதானே பெற்றோர் தங்கள் பிள்ளைகளை சரியாக வளர்ப்பதில் தங்களுக்கு இருக்கும் உத்தரவாதத்தை நிறைவேற்றவில்லை என்பதை அர்த்தப்படுத்தாது. ‘பிள்ளையானவன் நடக்கவேண்டிய வழியிலே அவனை நடத்து; அவன் அதை விடாதிருப்பான்’ என்ற கூற்று ஒரு பொதுவான விதியாக கொடுக்கப்பட்டது. விசனகரமாக கெட்ட குமாரனைப் போன்று சில பிள்ளைகள் ‘பெற்றோரின் கட்டளையை அசட்டை செய்வர்.’—நீதிமொழிகள் 30:17.
17. சொற்கேளாமல் போகும் பிள்ளைகளின் பெற்றோர் எதிலிருந்து ஆறுதலைப் பெற்றுக்கொள்ளலாம்?
17 சொற்கேளாத குமாரன் ஒருவனின் தந்தை இவ்வாறு புலம்பினார்: “அவனுடைய இருதயத்தை எட்டுவதற்கு நான் முயற்சிசெய்துகொண்டே இருந்தேன். நான் அநேக காரியங்களை முயற்சி செய்து பார்த்திருந்தபடியால் என்ன செய்வது என்று எனக்குத் தெரியவில்லை. எதுவும் வெற்றிகரமாய் இருந்திருக்கவில்லை.” நம்பிக்கையளிக்கும் விதத்தில், அப்படிப்பட்ட சொற்கேளாத பிள்ளைகள் தாங்கள் பெற்றுக்கொண்ட அன்பான பயிற்றுவிப்பை காலப்போக்கில் திரும்பவும் நினைவுக்குக் கொண்டுவந்து கெட்ட குமாரனைப் போல் திரும்பி வருவார்கள். பெற்றோர் பெரிதும் வருத்தப்படும் அளவுக்கு சில பிள்ளைகள் கலகம்செய்து ஒழுக்கக்கேடான காரியங்களைச் செய்கிறார்கள் என்பது உண்மைதான். பூமியில் வாழ்ந்த மிகப்பெரிய போதகரே தம்முடைய நெடுநாளைய மாணாக்கனாய் இருந்த யூதாஸ்காரியோத்து தன்னைக் காட்டிக்கொடுத்ததைக் காண வேண்டியிருந்தது என்பதை அறிவதிலிருந்து பெற்றோர் ஆறுதலைப் பெற்றுக்கொள்ளலாம். தம்முடைய சொந்த ஆவிக்குமாரர்களில் அநேகர் அவருடைய புத்திமதியை மறுத்து அவருடைய பங்கில் எந்தக் குறை இல்லாதபோதிலும் கலகம் செய்தவர்களாய் நிரூபித்தபோது யெகோவாதாமே வருத்தமடைந்தார் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.—லூக்கா 22:47, 48; வெளிப்படுத்துதல் 12:9.
பிள்ளைகளே—நீங்கள் யாரைப் பிரியப்படுத்துவீர்கள்?
18. பிள்ளைகள் தாங்கள் கடவுளை முதலாவதாக வைக்கின்றனர் என்பதை எவ்வாறு காண்பிக்கலாம்?
18 இளம் பிள்ளைகளாயிருக்கும் உங்களை யெகோவா இவ்வாறு ஊக்குவிக்கிறார்: “உங்கள் பெற்றாருக்குக் கர்த்தருக்குள் கீழ்ப்படியுங்கள்.” (எபேசியர் 6:1) இதைச் செய்வதன் மூலம் இளம் நபர்கள் கடவுளை முதலாவதாக வைக்கின்றனர். நீங்கள் முட்டாள்தனமாக நடந்துகொள்ளாதீர்கள்! “மூடன் தன் தகப்பன் புத்தியை அலட்சியம்பண்ணுகிறான்,” என்று கடவுளுடைய வார்த்தை சொல்லுகிறது. நீங்கள் சிட்சை இல்லாது வாழ்ந்துவிடலாம் என்று அகந்தையோடு நினைத்துக்கொள்ளக்கூடாது. உண்மை என்னவெனில், “தாங்கள் அழுக்கறக் கழுவப்படாமலிருந்தும், தங்கள் பார்வைக்குச் சுத்தமாகத் தோன்றுகிற சந்ததியாருமுண்டு.” (நீதிமொழிகள் 15:5; 30:12) ஆகையால் தெய்வீக கட்டளைகளுக்கு கவனம்செலுத்துங்கள்—“கேள்,” “பத்திரப்படுத்து,” “மறவாதே,” “கவனியுங்கள்,” மற்றும் பெற்றோரின் கட்டளைகளையும் சிட்சையையும் “தள்ளாதே.”—நீதிமொழிகள் 1:8; 2:1; 3:1; 4:1; 6:20.
19. (அ) யெகோவாவுக்குக் கீழ்ப்படிவதற்கு பிள்ளைகள் என்ன பலமான காரணங்களைக் கொண்டிருக்கின்றனர்? (ஆ) இளைஞர் தாங்கள் கடவுளுக்கு நன்றியுள்ளவர்களாய் இருக்கின்றனர் என்பதை எவ்வாறு காண்பிக்கலாம்?
19 யெகோவாவுக்கு கீழ்ப்படிவதற்கு நீங்கள் பலமான காரணங்களைக் கொண்டிருக்கிறீர்கள். அவர் உங்களை நேசிக்கிறார், பிள்ளைகள் தங்கள் பெற்றோருக்குக் கீழ்ப்படிய வேண்டும் என்ற சட்டம் உட்பட அவருடைய சட்டங்களை அவர் உங்களுக்குக் கொடுத்திருக்கிறார், உங்களை பாதுகாப்பதற்கென்றும் ஒரு மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்வதற்கு உங்களுக்கு உதவி செய்வதற்கென்றும் அவர் அதைக் கொடுத்திருக்கிறார். (ஏசாயா 48:17) உங்களை பாவத்திலிருந்தும் மரணத்திலிருந்தும் இரட்சித்து நீங்கள் நித்திய ஜீவனை அனுபவிப்பதற்காக அவர் தம்முடைய குமாரனையும்கூட உங்களுக்காக மரிக்கும்படி கொடுத்தார். (யோவான் 3:16) நீங்கள் நன்றியுள்ளவர்களாய் இருக்கிறீர்களா? கடவுள் பரலோகத்திலிருந்து உங்களை கவனித்துக்கொண்டிருக்கிறார், நீங்கள் உண்மையிலேயே அவரை நேசித்து அவருடைய ஏற்பாடுகளைப் போற்றுகிறீர்களா என்பதைக் காண்பதற்கு உங்கள் இருதயங்களை ஆராய்ந்து பார்க்கிறார். (சங்கீதம் 14:2) சாத்தானும்கூட கவனித்துக் கொண்டிருக்கிறான், நீங்கள் கடவுளுக்குக் கீழ்ப்படிய மாட்டீர்கள் என்று உரிமைபாராட்டிக்கொண்டு அவன் கடவுளை நிந்தித்துக்கொண்டிருக்கிறான். நீங்கள் கடவுளுக்குக் கீழ்ப்படியாமல் போகும்போது சாத்தானை சந்தோஷப்படுத்தி, யெகோவாவை ‘விசனப்படுத்துகிறீர்கள்’. (சங்கீதம் 78:40, 41) யெகோவா உங்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறார்: “என் மகனே, என்னை நிந்திக்கிறவனுக்கு நான் உத்தரவுகொடுக்கத்தக்கதாக, நீ ஞானவானாகி, [எனக்குக் கீழ்ப்படிந்திருப்பதன் மூலம்] என் இருதயத்தைச் சந்தோஷப்படுத்து.” (நீதிமொழிகள் 27:11) ஆம், கேள்வி என்னவென்றால், நீங்கள் யாரைப் பிரியப்படுத்துவீர்கள், சாத்தானையா அல்லது யெகோவாவையா?
20. பயம் ஏற்பட்டாலும்கூட ஒரு இளம் பெண் யெகோவாவை சேவிப்பதற்கு எவ்வாறு தைரியத்தைக் காத்து வந்திருக்கிறாள்?
20 சாத்தானும் அவனுடைய உலகமும் உங்கள் மீது சுமத்தக்கூடிய அழுத்தங்கள் மத்தியில் கடவுளுடைய சித்தத்தைச் செய்வது சுலபமானதல்ல. அது பயமூட்டுவதாய் இருக்கலாம். ஒரு இளம் பெண் குறிப்பிட்டாள்: “பயப்படுவது குளிராக உணருவதைப் போல் உள்ளது. நீங்கள் அதைக் குறித்து ஏதாவது செய்யலாம்.” அவள் விளக்கினாள்: “நீங்கள் குளிராக உணரும்போது கம்பளிச் சட்டை போட்டுக்கொள்கிறீர்கள். அப்படி போட்டுக்கொண்டும் நீங்கள் குளிராக உணர்ந்தீர்கள் என்றால், இன்னொரு கம்பளிச் சட்டையைப் போட்டுக்கொள்கிறீர்கள். உங்களுடைய குளிர் போகும்வரை நீங்கள் ஏதாவது ஒன்றை போட்டுக்கொண்டே இருக்கிறீர்கள். அதற்குப் பிறகு நீங்கள் குளிராக உணருவதில்லை. நீங்கள் பயப்படும்போது யெகோவாவிடம் ஜெபிப்பது, நீங்கள் குளிராக உணரும்போது கம்பளிச் சட்டையை போட்டுக்கொள்வது போல் இருக்கிறது. ஒரு ஜெபத்திற்குப் பிறகு நான் இன்னும் பயந்துகொண்டே இருந்தேன் என்றால், அந்த பயம் போகும்வரை நான் மறுபடியும் மறுபடியும் மறுபடியும் ஜெபிப்பேன். அது செயல்படுகிறது. அது என்னைப் பிரச்சினைகளிலிருந்து விடுவித்திருக்கிறது!”
21. நம்முடைய வாழ்க்கையில் யெகோவாவை உண்மையிலேயே முதலாவதாக வைக்க முயற்சி செய்தோம் என்றால் யெகோவா எவ்வாறு நம்மை ஆதரிப்பார்?
21 நம்முடைய வாழ்க்கையில் கடவுளை முதலாவதாக வைப்பதற்கு நாம் உண்மையிலேயே முயற்சி செய்தோம் என்றால், யெகோவா நம்மை ஆதரிப்பார். அவர் நம்மை பலப்படுத்துவார், தேவைப்படும்போது தேவதூதர்களுடைய உதவியை தம்முடைய குமாரனுக்கு அளித்தது போல அளிப்பார். (மத்தேயு 18:10; லூக்கா 22:43) பெற்றோரே, பிள்ளைகளே, நீங்கள் எல்லாரும் தைரியமாயிருங்கள். கிறிஸ்து கொண்டிருந்ததைப் போன்ற பயத்தைக் கொண்டிருங்கள், அது உங்களுக்கு மகிழ்ச்சியைக் கொண்டுவரும். (ஏசாயா 11:3) ஆம், “தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே.”—பிரசங்கி 12:13.
உங்களால் பதிலளிக்க முடியுமா?
◻ ஆரம்பகாலத்தில் இயேசுவைப் பின்பற்றியவர்கள் என்ன உத்தரவாதங்களை சமநிலைப்படுத்த வேண்டியதாய் இருந்தது?
◻ கிறிஸ்தவப் பெற்றோர் என்ன உத்தரவாதத்தை நிறைவேற்ற வேண்டும்?
◻ குடும்பங்களை உடைய கிறிஸ்தவ மூப்பர்களுக்கு என்ன உதவி கிடைக்கக்கூடியதாய் இருக்கிறது?
◻ என்ன மதிப்புவாய்ந்த சேவையை சபையில் இருக்கும் சகோதரிகள் செய்யலாம்?
◻ பிள்ளைகள் என்ன புத்திமதிக்கும் வழிநடத்துதலுக்கும் செவிசாய்த்து நடப்பது முக்கியம்?
[பக்கம் 15-ன் படம்]
ஒரு முதிர்ச்சிவாய்ந்த கிறிஸ்தவ பெண் பெரும்பாலும் ஒரு இளம் பெண்ணுக்கு தேவைப்படும் உதவியை அளிக்கலாம்
[பக்கம் 17-ன் படம்]
சொற்கேளாத பிள்ளைகளையுடைய பெற்றோர் வேதாகமங்களிலிருந்து என்ன ஆறுதலை பெற்றுக்கொள்ளலாம்?