வாழ்க்கையும் ஊழியமும் கூட்டத்துக்குத் தயாரிக்க தேவையான தகவல்கள்
ஜூலை 5-11
பைபிளில் இருக்கும் புதையல்கள் | உபாகமம் 11-12
“தன்னை எப்படி வணங்க வேண்டுமென்று யெகோவா விரும்புகிறார்?”
it-2-E பக். 1007 பாரா 4
முழு மூச்சு
முழு மூச்சோடு சேவை செய்வது. “முழு மூச்சு” என்பதற்கான மூலமொழி வார்த்தை ஒரு நபரை முழுமையாகக் குறிக்கிறது. ஆனாலும், சில வசனங்கள், “முழு இதயத்தோடும் முழு மூச்சோடும்” கடவுள்மேல் அன்பு காட்டி, அவருக்கு சேவை செய்ய வேண்டுமென்று சொல்கின்றன. (உபா 4:29; 11:13, 18) இதயம் ஏற்கெனவே ஒரு நபருடைய உடலின் பாகமாக இருப்பதால், மூச்சு என்ற வார்த்தையோடு சேர்த்து ஏன் பயன்படுத்தப்பட்டிருக்கிறது? இதை இப்படி விளக்கலாம்: ஒருவர் தன்னையே (மூச்சையே) இன்னொரு நபருக்கு அடிமையாக விற்றுவிட்டால், அந்த நபர் அவருடைய எஜமானாக ஆகிறார். ஆனாலும், அவர் தன்னுடைய எஜமானுக்கு முழு இதயத்தோடு அல்லது அவரைப் பிரியப்படுத்த வேண்டுமென்ற ஆசையோடு சேவை செய்யாமல் இருக்கலாம். (ஒப்பிட்டுப் பாருங்கள்: எபே 6:5; கொலோ 3:22) ஆனால், கடவுளுக்கு முழு மூச்சோடு சேவை செய்கிற ஒருவர் தன்னையே முழுமையாக அந்த சேவையில் ஈடுபடுத்துவார். அதாவது, தன்னுடைய உடல் உறுப்புகளில், செயல்களில், திறன்களில், விருப்பங்களில் எதையும் விட்டுவிடாமல் எல்லாவற்றையும் அந்த சேவைக்காகப் பயன்படுத்துவார்.—ஒப்பிட்டுப் பாருங்கள்: மத் 5:28-30; லூ 21:34-36; எபே 6:6-9; பிலி 3:19; கொலோ 3:23, 24.
it-1-E பக். 84 பாரா 3
பலிபீடம்
பொய் கடவுள்களுக்காகக் கட்டப்பட்ட பலிபீடங்களையும், பொதுவாக அவற்றுக்குப் பக்கத்தில் கட்டப்பட்டிருந்த பூஜை கம்பங்கள், பூஜை தூண்கள் எல்லாவற்றையும் ஒழித்துக்கட்ட வேண்டுமென்று இஸ்ரவேலர்களுக்குக் கட்டளை கொடுக்கப்பட்டிருந்தது. (யாத் 34:13; உபா 7:5, 6; 12:1-3) கானானியர்கள் கட்டியதைப் போன்ற பலிபீடங்களைக் கட்டக்கூடாது என்றும், அவர்களைப் போல தங்களுடைய பிள்ளைகளை நெருப்பில் பலி செலுத்தக் கூடாது என்றும் இஸ்ரவேலர்களுக்குச் சொல்லப்பட்டிருந்தது. (உபா 12:30, 31; 16:21) ஒரே உண்மையான கடவுளை வணங்குவதற்கு நிறைய பலிபீடங்களை அல்ல, ஒரேவொரு பலிபீடத்தைத்தான் பயன்படுத்த வேண்டும் என்றும், அந்த பலிபீடம் யெகோவா தேர்ந்தெடுத்திருக்கிற இடத்தில்தான் இருக்க வேண்டும் என்றும் அவர்களுக்குச் சொல்லப்பட்டிருந்தது.—உபா 12:2-6, 13, 14, 27; பாபிலோனில் இருந்த சூழ்நிலையோடு இதை ஒப்பிட்டுப் பாருங்கள். அங்கே இஷ்டார் என்ற பெண் தெய்வத்துக்காக மட்டுமே 180 பலிபீடங்கள் இருந்தன.
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
it-1-E பக். 925-926
கெரிசீம் மலை
இஸ்ரவேலர்கள் கானானுக்குப் போய் கொஞ்சக் காலத்தில், மோசே ஏற்கெனவே சொல்லியிருந்தபடி அவர்களுடைய எல்லா கோத்திரத்தாரும் கெரிசீம் மலையிலும் ஏபால் மலையிலும் ஒன்றுகூடி வந்தார்கள். யெகோவாவுக்குக் கீழ்ப்படிகிறவர்களுக்குக் கிடைக்கும் ஆசீர்வாதங்களையும் கீழ்ப்படியாதவர்களுக்குக் கிடைக்கும் சாபத்தையும் பற்றி வாசிக்கப்படுவதை அங்கே ஜனங்கள் கேட்டார்கள். சிமியோன், லேவி, யூதா, இசக்கார், யோசேப்பு, மற்றும் பென்யமீன் கோத்திரங்கள் கெரிசீம் மலையடிவாரத்தில் நின்றார்கள். லேவியர்கள் ஒப்பந்தப் பெட்டியோடு பள்ளத்தாக்கில் நின்றுகொண்டிருந்தார்கள். மற்ற ஆறு கோத்திரங்கள் ஏபால் மலையடிவாரத்தில் நின்றார்கள்.—உபா 11:29, 30; 27:11-13; யோசு 8:28-35.
ஜூலை 12-18
பைபிளில் இருக்கும் புதையல்கள் | உபாகமம் 13-15
“ஏழைகள்மேல் யெகோவாவுக்கு இருக்கும் அக்கறையைத் திருச்சட்டம் எப்படிக் காட்டுகிறது?”
it-2-E பக். 1110 பாரா 3
பத்திலொரு பாகம்
இஸ்ரவேலர்கள் ஒவ்வொரு வருஷமும் கூடுதலாக இன்னொரு பத்திலொரு பாகத்தைக் கொடுக்க வேண்டியிருந்ததாகத் தெரிகிறது. பொதுவாக இஸ்ரவேலர் கொடுத்த பத்திலொரு பாகத்தை லேவியர்கள் தங்களுடைய தேவைகளைக் கவனித்துக்கொள்வதற்காகப் பயன்படுத்தினார்கள். ஆனால், இந்தப் பத்திலொரு பாகத்தை முக்கியமாக, வருடாந்தர பண்டிகைக்காக எருசலேமுக்குப் போன இஸ்ரவேல் குடும்பத்தார் பயன்படுத்தினார்கள். ரொம்பத் தூரத்திலிருந்து வருகிற குடும்பத்தாருக்கு இந்தப் பத்திலொரு பாகத்தைக் கொண்டுவருவது கஷ்டமாக இருந்தால், ஒருவேளை அதை மிருகமாகவோ தானியமாகவோ கொண்டுவருவது கஷ்டமாக இருந்தால், அதைப் பணமாக மாற்றிக் கொடுக்க முடிந்தது. எருசலேமில் பரிசுத்த மாநாடு நடக்கும்போது அந்தக் குடும்பத்தார் சாப்பிட்டு, குடித்து சந்தோஷமாக இருப்பதற்கு அந்தப் பணத்தைப் பயன்படுத்தினார்கள். (உபா 12:4-7, 11, 17, 18; 14:22-27) ஒவ்வொரு மூன்றாவது வருஷத்தின் முடிவிலும் ஆறாவது வருஷத்தின் முடிவிலும் கொடுக்கப்பட்ட பத்திலொரு பாகம் மாநாட்டு செலவுகளுக்காகப் பயன்படுத்தப்படவில்லை. அதற்குப் பதிலாக, அந்தந்த நகரங்களில் இருக்கிற லேவியர்கள், மற்ற தேசத்தார், விதவைகள், அப்பா அம்மா இல்லாத பிள்ளைகள் ஆகியவர்களுக்காக அது ஒதுக்கி வைக்கப்பட்டது.—உபா 14:28, 29; 26:12.
it-2-E பக். 833
ஓய்வு வருஷம்
ஓய்வு வருஷத்தில் கடன்களும் ரத்து செய்யப்பட்டன. இப்படிச் செய்வதன் மூலம் இஸ்ரவேலர்கள் யெகோவாவுக்குப் புகழ் சேர்த்தார்கள். ஓய்வு வருஷத்தில் உண்மையிலேயே கடன்கள் ரத்து செய்யப்படவில்லை என்று சிலர் சொல்கிறார்கள். அந்த வருஷத்தில் ஒரு விவசாயிக்கு எந்த வருமானமும் இல்லாததால் கடன் கொடுத்தவர் தன்னுடைய பணத்தைத் திரும்பத் தரும்படி அந்த விவசாயியை வற்புறுத்தாமல் இருக்க வேண்டியிருந்தது என்று அவர்கள் சொல்கிறார்கள். ஆனால், மற்ற தேசத்தைச் சேர்ந்தவருக்குக் கொடுத்த கடனைக் கட்டாயப்படுத்தி வாங்க முடிந்தது. (உபா 15:1-3) ஏழைகளுக்கு பெருந்தன்மையோடு கொடுக்கப்பட்ட கடன்கள் ரத்து செய்யப்பட்டதாகவும், வியாபார நோக்கத்துக்காகக் கொடுக்கப்பட்ட கடன்கள் ரத்து செய்யப்படவில்லை என்றும் ரபீக்கள் சிலர் சொல்கிறார்கள்.
it-2-E பக். 978 பாரா 6
அடிமை
அடிமை-எஜமான் பற்றிய சட்டங்கள். ஒரு எபிரெய அடிமை மற்ற தேசத்தைச் சேர்ந்தவரைப் போல நடத்தப்படவில்லை. ஒரு அடிமை மற்ற தேசத்தைச் சேர்ந்தவராக இருந்தால், அவர் தன்னுடைய எஜமானுக்கு ஒரு சொத்தாக இருப்பார். அந்த எஜமான் தன்னுடைய மகனுக்கு அந்த அடிமையை சொத்தாகக் கொடுக்க முடிந்தது. (லேவி 25:44-46) ஆனால், ஒரு எபிரெய அடிமையை ஓய்வு வருஷத்திலோ விடுதலை வருஷத்திலோ விடுதலை செய்ய வேண்டியிருந்தது. இதில் எந்த வருஷம் முதலில் வருகிறதோ அதைப் பொறுத்து அவர் விடுதலை செய்யப்பட்டார். அவர், ஒரு அடிமையைப் போல அல்ல, தொழிலாளி போல நடத்தப்பட்டார். (யாத் 21:2; லேவி 25:10; உபா 15:12) ஒரு எபிரெய அடிமை விடுதலை செய்யப்படும்போது அவர் தன்னுடைய வாழ்க்கையை நல்லபடியாக ஆரம்பிப்பதற்கு அவருடைய எஜமான் அவருக்குத் தேவையானவற்றை தாராளமாகக் கொடுத்தனுப்ப வேண்டியிருந்தது.—உபா 15:13-15.
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்
“வெள்ளாட்டுக் குட்டியை அதின் தாயின் பாலிலே சமைக்க வேண்டாம்” என்ற கட்டளையிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்? (யாத்திராகமம் 23:19)
மோசேயின் நியாயப்பிரமாணத்தில் கொடுக்கப்பட்ட இந்தக் கட்டளை பைபிளில் மூன்று முறை பதிவு செய்யப்பட்டிருக்கிறது; யெகோவா எப்போதுமே சரியானதைச் செய்யும் இயல்புள்ளவர், இரக்கமுள்ளவர், கனிவுள்ளவர் என்பவற்றைப் புரிந்துகொள்ள இக்கட்டளை நமக்கு உதவுகிறது. அவர் பொய் வணக்கத்தை அடியோடு வெறுப்பதைக்கூட இது வலியுறுத்துகிறது.—யாத்திராகமம் 34:26; உபாகமம் 14:21.
ஓர் ஆட்டுக்குட்டியை அல்லது வேறு ஏதேனும் மிருகத்தின் குட்டியை அதன் தாயின் பாலில் சமைப்பது, யெகோவா செய்திருக்கிற இயற்கையான ஏற்பாட்டிற்கு முரணாக இருக்கும். குட்டி நன்கு போஷாக்கைப் பெற்று வளருவதற்காகத்தான் அதற்குத் தாய்ப்பால் கிடைக்கும்படி யெகோவா ஏற்பாடு செய்திருக்கிறார். அப்படியிருக்கும்போது, அந்தத் தாய்ப்பாலிலேயே குட்டியை சமைப்பது, ஓர் அறிஞரின்படி, “தாய்க்கும் சேய்க்கும் இடையே கடவுள் ஏற்படுத்தியுள்ள புனிதமான உறவை அவமதிப்பதாக இருக்கும்.”
அதுமட்டுமல்ல, ஒரு குட்டியை அதன் தாயின் பாலிலேயே சமைப்பது, மழையை வருவிப்பதற்காக புறஜாதியினர் செய்த சடங்காக இருந்திருக்கலாம் என சிலர் சொல்கிறார்கள். அது உண்மையென்றால், சுற்றுப்புற தேசங்களின் மடத்தனமான, கொடூர மத பழக்கவழக்கங்களிலிருந்து இஸ்ரவேலரை அந்தக் கட்டளை பாதுகாத்திருக்கும். அந்தத் தேசங்களின் வழிபாடுகளைப் பின்பற்றாதிருக்கும்படி நியாயப்பிரமாணத்தில் இஸ்ரவேலருக்கு நேரடியான கட்டளை கொடுக்கப்பட்டிருந்தது.—லேவியராகமம் 20:23.
இறுதியாக, அந்தக் கட்டளையிலிருந்து நாம் யெகோவாவின் கனிவான இரக்கத்தைப் புரிந்துகொள்கிறோம். உண்மையில், இதுபோன்ற இன்னுமநேக கட்டளைகள் நியாயப்பிரமாணத்தில் கொடுக்கப்பட்டிருந்தன; மிருகங்களைக் கொடூரமாக நடத்துவதை அவை கண்டித்து, இயற்கைக்கு முரணாக செயல்படுவதிலிருந்து பாதுகாத்தன. உதாரணத்திற்கு, தாயுடன் குறைந்தது ஏழு நாட்களாவது இருந்திருக்கும் குட்டியைத்தான் பலி செலுத்த வேண்டும், மிருகத்தையும் அதன் குட்டியையும் ஒரே நாளில் கொல்லக் கூடாது, ஒரு பறவையின் கூட்டிலிருந்து தாயையும் அதன் முட்டைகளையும்/குஞ்சுகளையும் சேர்த்து எடுக்கக்கூடாது என்றெல்லாம் கட்டளைகள் இருந்தன.—லேவியராகமம் 22:27, 28; உபாகமம் 22:6, 7.
ஆக, நியாயப்பிரமாணம் வெறும் கட்டளைகளையும் தடைகளையும் கொண்ட ஒரு சிக்கலான சட்டத்தொகுப்பாக இருக்கவில்லை என்பது தெளிவாகிறது. அதன் நியமங்கள், உயரிய ஒழுக்கவுணர்வை நம் மனதில் பதித்து, யெகோவாவின் அருமையான பண்புகளைப் பிரதிபலிக்க உதவுகின்றன; இன்னும் பல பயன்களையும் அளிக்கின்றன.—சங்கீதம் 19:7-11.
ஜூலை 19-25
பைபிளில் இருக்கும் புதையல்கள் | உபாகமம் 16-18
“நீதியாகத் தீர்ப்பு சொல்ல ஆலோசனைகள்”
it-1-E பக். 343 பாரா 5
குருட்டுத்தன்மை
நியாயத்தைப் புரட்டுவதைக் குருட்டுத்தன்மையோடு சம்பந்தப்படுத்தி பைபிள் சொல்கிறது. லஞ்சமோ அன்பளிப்புகளோ கொடுப்பதைப் பற்றி அல்லது பாரபட்சம் காட்டுவதைப் பற்றி திருச்சட்டத்தில் நிறைய ஆலோசனைகள் கொடுக்கப்பட்டிருந்தது. இந்த மாதிரியான விஷயங்கள் ஒரு நியாயாதிபதியின் கண்களை குருடாக்கி அவரை நியாயத்தைப் புரட்ட வைத்திடலாம். “லஞ்சம் ஞானமுள்ளவர்களின் கண்களை மறைத்துவிடும்.” (உபா 16:19) ஒரு நியாயாதிபதி எவ்வளவு நேர்மையானவராக இருந்தாலும், வழக்கில் சம்பந்தப்பட்ட ஒருவர் அன்பளிப்புகளைக் கொடுக்கும்போது அவர் தெரிந்தோ தெரியாமலோ நியாயத்தைப் புரட்டிவிடலாம். அன்பளிப்புகள் மட்டுமல்ல உணர்ச்சிகள்கூட கண்களைக் குருடாக்கும் என்று கடவுளுடைய சட்டம் சொல்கிறது. அதனால்தான் “ஏழைக்குப் பாரபட்சம் காட்டவோ பணக்காரனுக்குச் சலுகை காட்டவோ கூடாது” என்று அது சொல்கிறது.—லேவி 19:15.
it-2-E பக். 511 பாரா 7
எண்கள்
இரண்டு. வழக்குகள் சம்பந்தப்பட்ட விஷயத்தில்தான் இரண்டு என்ற எண் அடிக்கடி பயன்படுத்தப்பட்டிருக்கிறது. ஒருவர் கொடுக்கிற சாட்சியைவிட இரண்டு பேர் கொடுக்கிற சாட்சி ரொம்ப வலிமையாக இருக்கும். நியாயாதிபதிகளிடம் ஒரு விஷயத்தை நிரூபிப்பதற்கு இரண்டு அல்லது மூன்று சாட்சிகள்கூடத் தேவைப்பட்டார்கள். கிறிஸ்தவ சபையிலும் இதே நியமம்தான் பின்பற்றப்படுகிறது.—உபா 17:6; 19:15; மத் 18:16; 2கொ 13:1; 1தீ 5:19; எபி 10:28.
it-2-E பக். 685 பாரா 6
குரு
வழக்குகள் சம்பந்தமாக உதவி கேட்பதற்காக நியாயாதிபதிகள் குருமார்களுக்கு நியமிக்கப்பட்டிருந்த நகரங்களுக்குப் போனார்கள். உள்ளூரில் இருக்கிற நியாயாதிபதிகளால் ஒரு சிக்கலான வழக்கைத் தீர்க்க முடியாமல் போனால், சரியான தீர்ப்பை வழங்க நியாயாதிபதிகளுக்கு குருமார்கள் உதவி செய்வார்கள்.—உபா 17:8, 9.
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
it-1-E பக். 787
அகற்றுவது
குற்றவாளியை கல்லெறிந்து கொல்லும்போது, சாட்சி சொன்னவர்கள்தான் முதலில் அவர்மேல் கல்லெறிய வேண்டியிருந்தது. (உபா 17:7) கடவுளுடைய சட்டத்தைக் கடைப்பிடிக்கிற விஷயத்திலும், இஸ்ரவேல் சபையை சுத்தமாக வைத்துக்கொள்ளும் விஷயத்திலும் அவர்கள் எந்தளவுக்கு உறுதியாக இருந்தார்கள் என்பதை இது காட்டியது. பொய்சாட்சி சொல்லாமலும் யோசிக்காமல் அவசரப்பட்டு சாட்சி சொல்லாமலும் இருப்பதற்கு இது உதவியாக இருந்தது.
ஜூலை 26–ஆகஸ்ட் 1
பைபிளில் இருக்கும் புதையல்கள் | உபாகமம் 19-21
“மனித உயிர் யெகோவாவுக்கு மிகவும் மதிப்புள்ளது”
யெகோவாவின் நீதியையும் இரக்கத்தையும் பின்பற்றுங்கள்
4 ஆறு அடைக்கல நகரங்களும், சுலபமாகப் போக முடிந்த இடங்களில் இருக்கும்படி யெகோவா ஏற்பாடு செய்தார். யோர்தான் ஆற்றின் இரண்டு பக்கங்களிலும் மும்மூன்று நகரங்களைத் தேர்ந்தெடுக்கும்படி அவர் இஸ்ரவேலர்களிடம் சொன்னார். எதற்காக? தெரியாத்தனமாகக் கொலை செய்தவர் சீக்கிரமாகவும் சுலபமாகவும் அந்த நகரங்களில் ஒன்றுக்கு ஓடிப்போவதற்காகத்தான்! (எண். 35:11-14) அந்த நகரங்களுக்குப் போன சாலைகள் நன்றாகப் பராமரிக்கப்பட்டன. (உபா. 19:3) தெரியாத்தனமாகக் கொலை செய்தவர்கள் அந்த நகரங்களைக் கண்டுபிடிப்பதற்கு வசதியாக, அந்தச் சாலைகளில் வழிகாட்டுப் பலகைகள் வைக்கப்பட்டிருந்ததாக யூதப் பாரம்பரியம் சொல்கிறது. இஸ்ரவேலில் அடைக்கல நகரங்களின் ஏற்பாடு இருந்ததால், தெரியாத்தனமாகக் கொலை செய்த இஸ்ரவேலர்கள் பாதுகாப்பைத் தேடி வேறு தேசங்களுக்குப் போக வேண்டிய அவசியம் இருக்கவில்லை; அங்கே பொய்த் தெய்வங்களை வணங்கும் ஆபத்தில் சிக்கிக்கொள்ள வேண்டிய அவசியமும் இருக்கவில்லை.
யெகோவாவின் நீதியையும் இரக்கத்தையும் பின்பற்றுங்கள்
9 கொலைப்பழியிலிருந்து இஸ்ரவேலர்களைப் பாதுகாப்பதுதான், அடைக்கல நகரங்கள் ஏற்பாடு செய்யப்பட்டதற்கான ஒரு முக்கிய காரணம். (உபா. 19:10) யெகோவா உயிரை நேசிப்பதால் கொலையை வெறுக்கிறார். (நீதி. 6:16, 17) அவர் நீதியும் பரிசுத்தமும் உள்ளவர் என்பதால், தெரியாத்தனமாக நடந்த கொலைகளைக்கூட கண்டும்காணாமல் விடவில்லை. தெரியாத்தனமாகக் கொலை செய்தவருக்கு இரக்கம் காட்டப்பட்டது உண்மைதான். ஆனால், நடந்ததையெல்லாம் முதலில் பெரியோர்களிடம் அவர் விளக்க வேண்டியிருந்தது. அவர் தெரியாத்தனமாகக் கொலை செய்திருந்ததை அவர்கள் உறுதி செய்ய வேண்டியிருந்தது. பிறகு, தலைமைக் குரு சாகும்வரை அவர் அடைக்கல நகரத்திலேயே இருக்க வேண்டியிருந்தது. அப்படியென்றால், வாழ்க்கையின் மீதி காலமெல்லாம் அங்கு இருக்க வேண்டிய நிலைமை அவருக்கு ஏற்பட்டிருக்கலாம். இந்த ஏற்பாடு, உயிர் எவ்வளவு பரிசுத்தமானது என்பதை எல்லா இஸ்ரவேலர்களுக்கும் உணர்த்தியது. உயிர் கொடுத்தவருக்கு மதிப்புக் காட்டுவதற்காக, மற்றவர்களுடைய உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தாதபடி அவர்கள் மிகவும் கவனமாக நடந்துகொள்ள வேண்டியிருந்தது.
it-1-E பக். 344
இரத்தம்
ஒருவர் தன் சகோதரன் சாக வேண்டும் என்று நினைக்கும் அளவுக்கு, அவன்மேல் வெறுப்பைக் காட்டினால், அவர் ஏற்கெனவே கொலைக்குற்றம் செய்தவராகக் கருதப்படுவார். அல்லது, அவர் தன்னுடைய சகோதரனைப் பற்றி இல்லாததையும் பொல்லாததையும் சொன்னாலோ, அவருடைய உயிருக்கு ஆபத்து ஏற்படும் அளவுக்கு அவனுக்கு எதிராகப் பொய்சாட்சி சொன்னாலோ அவர் கொலைக்குற்றம் செய்தவராகக் கருதப்படுவார்.—லேவி 19:16; உபா 19:18-21; 1யோ 3:15.
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
it-1-E பக். 518 பாரா 1
நீதிமன்றம், நீதிவிசாரணை
நகர வாசலில் ஆட்கள் அடிக்கடி போய்கொண்டும் வந்துகொண்டும் இருந்ததால், சொத்து விற்பனை போன்ற சமுதாய வழக்குகளோடு சம்பந்தப்பட்ட சாட்சிகளைக் கண்டுபிடிப்பது சுலபமாக இருந்தது. இந்த நகர வாசல், பொதுவான ஒரு இடத்தில் இருந்ததால் நீதியாகத் தீர்ப்பு கொடுக்கும் விஷயத்தில் நியாயாதிபதிகள் ரொம்பக் கவனமாக இருந்திருப்பார்கள்.
ஆகஸ்ட் 2-8
பைபிளில் இருக்கும் புதையல்கள் | உபாகமம் 22-23
“மிருகங்கள்மேல் யெகோவாவுக்கு இருக்கும் அக்கறையைத் திருச்சட்டம் எப்படிக் காட்டியது?”
it-1-E பக். 375-376
சுமை
தன்னுடைய விரோதியின் கழுதை சுமையோடு கீழே விழுந்து கிடப்பதை இஸ்ரவேலர் ஒருவர் பார்த்தால், கண்டும்காணாமல் அங்கிருந்து போய்விடக் கூடாது. அந்தக் கழுதையின் சுமையை இறக்குவதற்கு அந்த விரோதிக்கு அவர் உதவ வேண்டும்.—யாத் 23:5.
it-1-E பக். 621 பாரா 1
உபாகமம்
கூட்டில் உட்கார்ந்திருக்கிற ஒரு பறவையை இஸ்ரவேலர்கள் எடுக்கக் கூடாது. அந்தத் தாய் பறவை அதன் குஞ்சுகளைப் பாதுகாப்பதற்காகத்தான் அங்கே உட்கார்ந்துகொண்டு இருக்கிறது. கூட்டிலிருந்து தாய் பறவையை எடுப்பது அதனுடைய பலவீனமான சூழ்நிலையைத் தவறாகப் பயன்படுத்துவது போல இருக்கும். தாய் பறவையைப் போகவிட்ட பிறகு குஞ்சுகளை இஸ்ரவேலர்கள் எடுத்துக்கொள்ளலாம். இதன் மூலம் அந்தத் தாய் பறவையால் தொடர்ந்து இனப்பெருக்கம் செய்ய முடியும்.—உபா 22:6, 7.
“பொருத்தமற்று பிணைக்கப்படாதிருங்கள்”
ஒட்டகத்தையும் எருதையும் கட்டி ஏர் உழும் பரிதாபக் காட்சியை இங்கே நீங்கள் படத்தில் காணலாம். அந்த இரண்டு விலங்குகளையும் ஒன்றாக பிணைக்கும் நுகத்தடி அவை இரண்டிற்குமே கஷ்டத்தைக் கொடுக்கிறது; உண்மையில், ஒரே அளவும் பலமும் கொண்ட இரு விலங்குகளுக்காகத்தான் அது தயாரிக்கப்படுகிறது. பாரமிழுக்கும் இத்தகைய விலங்குகளின் மீது கடவுள் அக்கறை கொண்டு, “மாட்டையும் கழுதையையும் பிணைத்து உழாதிருப்பாயாக” என்று இஸ்ரவேலரிடம் கூறினார். (உபாகமம் 22:10) இதே நியதி எருதுக்கும் ஒட்டகத்திற்கும் பொருந்தும்.
பொதுவாக, ஒரு விவசாயி தனது விலங்குகளுக்கு இப்படிப்பட்ட கஷ்டத்தை கொடுக்க மாட்டார். ஆனால் அவரிடம் இரண்டு எருதுகள் இல்லையென்றால், தன்னிடமுள்ள இரண்டு வித்தியாசமான விலங்குகளை பிணைக்கக்கூடும். இங்கே படத்தில் காண்பிக்கப்பட்டுள்ளபடி, இதைத்தான் 19-ம் நூற்றாண்டு விவசாயி ஒருவரும் செய்ததாக தெரிகிறது. அந்த இரண்டு விலங்குகளின் அளவும் எடையும் வேறுபட்டிருப்பதால், பலவீனமான பிராணி மற்றொன்றுடன் சேர்ந்து அடியெடுத்து வைக்கப் போராட வேண்டியிருக்கும், பலமான பிராணியோ பெரும் சுமையை சுமக்க வேண்டியிருக்கும்.
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
it-1-E பக். 600
கடன், கடனாளி
பணக் கஷ்டத்தில் இருக்கும்போது மட்டுமே ஒரு இஸ்ரவேலர் கடன் வாங்கினார். அப்படிக் கடன் வாங்குவது ரொம்ப வேதனையான விஷயம். ஏனென்றால் கடன் வாங்குகிறவர் கடன் கொடுத்தவருக்கு அடிமையாகிவிடுவார். (நீதி 22:7) அதனால்தான், கஷ்டத்தில் தவிக்கிற இஸ்ரவேலர்களுக்குத் தாராளமாக, சுயநலம் இல்லாமல் கொடுத்து உதவும்படி கடவுளுடைய மக்களுக்குக் கட்டளை கொடுக்கப்பட்டது. அப்படிப் பணக் கஷ்டத்தில் தவிக்கிற ஒரு இஸ்ரவேலரிடம் வட்டி வாங்கி லாபம் சம்பாதிக்க அவர்கள் முயற்சி செய்யக் கூடாது. (யாத் 22:25; உபா 15:7, 8; சங் 37:26; 112:5) ஆனால், மற்ற தேசத்தைச் சேர்ந்தவர்களிடமிருந்து அவர்கள் வட்டி வாங்கலாம். (உபா 23:20) இது கஷ்டத்தில் தவிக்கிறவர்களுக்குக் கொடுத்த கடனுக்கு அல்ல, வியாபார நோக்கத்துக்காகக் கொடுத்த கடனுக்குப் பொருந்துவதாக யூத விமர்சகர்கள் புரிந்துகொள்கிறார்கள். பொதுவாக மற்ற தேசத்தைச் சேர்ந்தவர்கள் இஸ்ரவேலில் தற்காலிகமாகத்தான் குடியிருந்தார்கள். பெரும்பாலும் அவர்கள் வியாபாரிகளாக இருந்ததால், அவர்களிடமிருந்து வட்டி எதிர்பார்க்கப்பட்டது. அதுவும் அவர்கள் மற்றவர்களுக்கு வட்டிக்குக் கடன் கொடுத்ததால் அப்படி எதிர்பார்க்கப்பட்டது.
ஆகஸ்ட் 9-15
பைபிளில் இருக்கும் புதையல்கள் | உபாகமம் 24-26
“பெண்கள்மேல் யெகோவாவுக்கு இருக்கும் அக்கறையைத் திருச்சட்டம் எப்படிக் காட்டியது?”
it-2-E பக். 1196 பாரா 4
பெண்
கல்யாணமான முதல் வருஷத்தில் ஒருவர் படையில் சேவை செய்யக் கூடாது. ஒரு குழந்தையைப் பெற்றுக்கொள்ள இது அந்தத் தம்பதிக்கு வாய்ப்பளித்தது. கணவர் படை சேவைக்கு மறுபடியும் போனபிறகு, ஒருவேளை போரில் அவர் இறந்துபோனால்கூட, இந்தக் குழந்தை அதன் அம்மாவுக்கு ரொம்ப ஆறுதலாக இருக்கும்.—உபா 20:7; 24:5.
it-1-E பக். 963 பாரா 2
அறுவடையில் மீதியானதைச் சேகரித்தல்
“நீதிமானைக் கடவுள் கைவிட்டதையோ, அவனுடைய பிள்ளைகள் உணவுக்காகக் கையேந்துவதையோ இதுவரை நான் பார்த்ததில்லை” என்று தாவீது சொன்னார். (சங் 37:25) அறுவடையில் மீதியாக விடப்பட்டதைச் சேகரிக்க ஏழைகளுக்குத் திருச்சட்டம் அனுமதி கொடுத்தது. இப்படி, சாப்பாட்டுக்காக கஷ்டப்பட்டு உழைத்ததால் அவர்கள் பசியில் வாடவில்லை. அவர்களும் அவர்களுடைய பிள்ளைகளும் பிச்சை எடுக்க வேண்டிய அவசியமும் ஏற்படவில்லை.
w11-E 3/1 பக். 23
உங்களுக்குத் தெரியுமா?
பூர்வ இஸ்ரவேலில், ஆண் குழந்தை இல்லாமல் இறந்துவிட்ட ஒருவருக்கு வாரிசைப் பெற்றெடுத்து அவருடைய வம்சத்தைப் பாதுகாப்பதற்காக அவருடைய மனைவியை அவருடைய சகோதரன் திருமணம் செய்துகொள்வது வழக்கமாக இருந்தது. (ஆதியாகமம் 38:8) கொழுந்தன்முறை கல்யாணம் என்ற இந்த ஏற்பாடு, திருச்சட்டத்தில் பிற்பாடு சேர்த்துக்கொள்ளப்பட்டது. (உபாகமம் 25:5, 6) ஒருவேளை, இறந்துபோனவருடைய சகோதரர்கள் யாரும் உயிரோடு இல்லையென்றால், அவருடைய சொந்தத்திலுள்ள ஆண்கள் யாராவது அந்தக் கடமையை நிறைவேற்ற வேண்டும். போவாஸ் செய்த விஷயத்திலிருந்து இது தெளிவாகத் தெரிகிறது.—ரூத் 1:3, 4; 2:19, 20; 4:1-6.
மாற்கு 12:20-22-ல் சதுசேயர்கள் கேட்ட விஷயத்திலிருந்து, இயேசுவின் காலத்திலும் கொழுந்தன்முறை கல்யாணம் நடைமுறையில் இருந்ததாகத் தெரிகிறது. இந்த வழக்கத்தின் மூலம் குடும்பத்தின் பெயர் அழிந்துவிடாமல் பாதுகாக்கப்பட்டதோடு, குடும்பத்தின் சொத்தும் பாதுகாக்கப்பட்டது என்று முதல் நூற்றாண்டில் வாழ்ந்த யூத சரித்திராசிரியரான ஃபிளேவியஸ் ஜொசிஃபஸ் சொன்னார். அதோடு, அந்த விதவையின் தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டதாகவும் அவர் சொன்னார். அப்போதெல்லாம், ஒரு மனைவிக்கு தன்னுடைய கணவரின் சொத்தில் எந்த உரிமையும் இருக்கவில்லை. ஆனால், கொழுந்தன்முறை கல்யாணத்தின் மூலம் அவளுக்கு ஒரு குழந்தை பிறந்துவிட்டால் இறந்துபோன தன் கணவருடைய சொத்தை அவளால் தக்கவைத்துக்கொள்ள முடியும்.
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
it-1-E பக். 640 பாரா 5
விவாகரத்து
விவாகரத்து பத்திரம். விவாகரத்து சம்பந்தமாகத் திருச்சட்டத்தில் கொடுக்கப்பட்டிருந்த கட்டளையை, பிற்பாடு சிலர் தங்களுடைய வசதிக்கு ஏற்றபடி பொருத்திக்கொண்டார்கள். அதனால், திருச்சட்டத்தின்படி ஒருவர் தன்னுடைய மனைவியைச் சுலபமாக விவாகரத்து செய்துவிடலாம் என்ற முடிவுக்கு வந்துவிடக் கூடாது. விவாகரத்து செய்வதற்கு ஒரு கணவர் முறைப்படி சில படிகளை எடுக்க வேண்டியிருந்தது. அவர் ‘விவாகரத்து பத்திரத்தை எழுதி,’ அதை ‘அவளிடம் கொடுத்து, அவளை வீட்டைவிட்டு அனுப்ப வேண்டியிருந்தது.’ (உபா 24:1) இதைப் பற்றிய கூடுதலான விவரங்கள் பைபிளில் இல்லையென்றாலும், இந்தச் சட்டப்பூர்வ படியை எடுப்பதற்கு முன் அவர் அதிகாரத்தில் இருந்தவர்களிடம் அதைப் பற்றி பேச வேண்டியிருந்திருக்கும். அவர்கள் அந்தத் தம்பதியை சேர்த்துவைக்க முடிந்தளவுக்கு முயற்சி செய்வார்கள். அதனால், அந்தப் பத்திரத்தைத் தயாரிப்பதற்கும், சட்டப்பூர்வ நடவடிக்கை எடுப்பதற்கும் இடைப்பட்ட காலத்தில் அவர் தன்னுடைய தீர்மானத்தை மாற்றிக்கொள்ள வாய்ப்பு இருந்தது. விவாகரத்து செய்வதற்குத் தகுந்த காரணத்தையும் அளிக்க வேண்டியிருந்தது. இந்தப் படிகளை எல்லாம் சரியாகப் பின்பற்றினால் அவசரப்பட்டு தீர்மானம் எடுப்பதைத் தவிர்க்க முடியும். இதன் மூலம் மனைவியின் உரிமைகளும், விருப்பங்களும்கூடப் பாதுகாக்கப்பட்டன.
ஆகஸ்ட் 16-22
பைபிளில் இருக்கும் புதையல்கள் | உபாகமம் 27-28
“எல்லா ஆசீர்வாதங்களும் உங்கள்மேல் வந்து குவியும்”
கடவுளுடைய சக்தியினால் வழிநடத்தப்படுகிற ராஜா அளிக்கும் ஆசீர்வாதங்கள்!
18 செவிகொடுப்பது என்பது கடவுளுடைய வார்த்தையில் சொல்லப்பட்டுள்ள விஷயங்களையும் அவர் அளிக்கும் ஆன்மீக போதனையையும் இதயத்தில் பதிய வைப்பதைக் குறிக்கிறது. (மத். 24:45) கடவுளுக்கும் அவருடைய மகனுக்கும் கீழ்ப்படிவதும் இதில் அடங்கும். “என்னை நோக்கி, ‘கர்த்தாவே, கர்த்தாவே’ என்று சொல்கிறவர்கள் பரலோக அரசாங்கத்திற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள், என் பரலோகத் தகப்பனுடைய சித்தத்தின்படி செய்கிறவர்களே அதில் அனுமதிக்கப்படுவார்கள்” என்று இயேசு சொன்னார். (மத். 7:21) மேலும், கடவுளுக்குச் செவிகொடுப்பது அவருடைய ஏற்பாட்டிற்கு மனமுவந்து கீழ்ப்படிவதை, அதாவது கிறிஸ்தவச் சபையில் ‘பரிசுகளாக’ இருக்கிற மூப்பர்களுக்குக் கீழ்ப்படிவதை, குறிக்கிறது.—எபே. 4:8.
யெகோவாவின் ஆசீர்வாதம் உங்களைப் பின்தொடருமா?
2 உபாகமம் 28:2-ல் ‘தொடர்ந்து செவிகொடுத்தல்’ என மொழிபெயர்க்கப்பட்டுள்ள வார்த்தைக்கான எபிரெய வினைச்சொல், தொடர்ச்சியான செயலைக் குறிக்கிறது. யெகோவாவின் ஜனங்கள் எப்பொழுதாவது மாத்திரமே செவிசாய்ப்பவர்களாக இருக்கக்கூடாது; எப்போதும் எல்லாவற்றிலும் அவருக்கு செவிசாய்ப்பதையே வாழ்க்கையாக ஆக்கிக்கொள்ள வேண்டும். அப்போதுதான் கடவுளுடைய ஆசீர்வாதங்கள் அவர்களைப் பின்தொடரும். “பின்தொடரும்” என மொழிபெயர்க்கப்பட்டுள்ள வார்த்தைக்கான எபிரெய வினைச்சொல், வேட்டையாடுவதுடன் சம்பந்தப்பட்ட வார்த்தை; “எட்டிப் பிடிப்பது” அல்லது “அடைவது” என பெரும்பாலும் அர்த்தப்படுத்துகிறது.
யெகோவாவின் ஆசீர்வாதத்தை ஊக்கமாக நாடுங்கள்
4 இஸ்ரவேலர் என்ன மனப்பான்மையுடன் கீழ்ப்படிதலைக் காட்ட வேண்டியிருந்தது? அவர்கள் “மனமகிழ்ச்சியோடும் களிப்போடும்” சேவிக்கவில்லை என்றால் அவர் எரிச்சலடைவார் எனத் திருச்சட்டம் குறிப்பிட்டது. (உபாகமம் 28:45-47-ஐ வாசியுங்கள்.) சில கட்டளைகளுக்கு விலங்குகள் அல்லது பேய்கள்கூட கட்டுப்பட்டு நடக்கின்றன. இப்படிக் கடமைக்காகக் கீழ்ப்படிவதை யெகோவா நம்மிடம் எதிர்பார்ப்பதில்லை. (மாற். 1:27; யாக். 3:3) மாறாக, அவர்மீதுள்ள அன்பினால் தூண்டப்பட்டு உள்ளப்பூர்வமாகக் கீழ்ப்படிவதையே எதிர்பார்க்கிறார். யெகோவாவின் கட்டளைகள் பாரமானவைகள் அல்ல என்றும் “அவரை ஊக்கமாக நாடுகிறவர்களுக்குப் பலன் அளிக்கிறார்” என்றும் விசுவாசிப்பதால் ஏற்படுகிற மகிழ்ச்சியின் வெளிக்காட்டாக இது இருக்கிறது.—எபி. 11:6; 1 யோ. 5:3.
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
it-1-E பக். 360
எல்லைக் குறி
பொதுவாக, நிலத்தின் சொந்தக்காரர்கள் அந்த நிலத்தின் விளைச்சலைத்தான் நம்பி இருந்தார்கள். பக்கத்து நிலத்தின் எல்லைக் குறியைத் தள்ளிவைப்பது, அந்த நிலத்தின் சொந்தக்காரருடைய வாழ்வாதாரத்திலிருந்து கொஞ்சத்தை எடுத்துக்கொள்வது போல் இருக்கும். அது திருடுவதற்கு சமமாக இருந்தது.—யோபு 24:2.
ஆகஸ்ட் 23-29
பைபிளில் இருக்கும் புதையல்கள் | உபாகமம் 29-30
“யெகோவாவை வணங்குவது கஷ்டமான விஷயமா?”
தீர்மானிக்கும் சுதந்திரத்தை யெகோவா தருகிறார்
கடவுள் நம்மிடமிருந்து எதை எதிர்பார்க்கிறார் என்பதை அறிந்து அதன்படி நடப்பது கஷ்டமா? மோசே மூலம் கடவுள் இவ்வாறு குறிப்பிடுகிறார்: “நான் இன்று உனக்கு விதிக்கிற கட்டளை உனக்கு மறைபொருளும் அல்ல, அது உனக்குத் தூரமானதும் அல்ல.” (வசனம் 11) நம்மால் முடியாததை யெகோவா நம்மிடம் கேட்பதில்லை. அவர் நம்மிடம் எதிர்பார்க்கும் காரியங்கள் நியாயமானவை, செய்ய முடிந்தவை. அதோடு, தெரிந்துகொள்ள முடிந்தவை. கடவுள் நம்மிடம் எதிர்பார்ப்பவற்றை அறிந்துகொள்வதற்கு ‘வானத்துக்கு ஏறிப் போக’ வேண்டியதுமில்லை, ‘சமுத்திரத்தைக் கடந்து செல்ல’ வேண்டியதுமில்லை. (வசனங்கள் 12, 13) நாம் எப்படி வாழ வேண்டுமென்று பைபிள் தெள்ளத்தெளிவாகச் சொல்கிறது.—மீகா 6:8.
தீர்மானிக்கும் சுதந்திரத்தை யெகோவா தருகிறார்
“யெகோவாவுக்கு உண்மையற்றவளாகி விடுவேனோ என்ற அநாவசியமான பயம் என்னை அடிக்கடி வாட்டியது” என்று ஒரு கிறிஸ்தவப் பெண் குறிப்பிட்டார். சிறு வயதில் அவருக்கு ஏற்பட்ட மோசமான அனுபவங்களின் காரணமாக, வாழ்வில் வெற்றி பெறவே முடியாது என்று நினைத்தார். அது சரியா? உண்மையில் சந்தர்ப்ப சூழ்நிலையை மீறி நம்மால் எதையும் செய்ய முடியாதா? அப்படிச் சொல்ல முடியாது. யெகோவா தேவன் நமக்குத் தெரிவு செய்யும் சுதந்திரத்தைத் தந்திருக்கிறார்; அதனால், எப்படி வாழ வேண்டுமென நாமாகவே தெரிவு செய்துகொள்ள முடியும். நாம் சரியான தெரிவுகளைச் செய்ய வேண்டுமென யெகோவா விரும்புகிறார்; அதை எப்படிச் செய்யலாம் என்று அவருடைய புத்தகமான பைபிள் நமக்குச் சொல்கிறது. உபாகமம் 30-ஆம் அதிகாரத்திலுள்ள மோசேயின் வார்த்தைகளைக் கவனியுங்கள்.
தீர்மானிக்கும் சுதந்திரத்தை யெகோவா தருகிறார்
நாம் எதைத் தெரிவு செய்கிறோம் என்பது யெகோவாவுக்கு முக்கியமா? ஆம், முக்கியமே! ‘ஜீவனைத் தெரிந்துகொள்’ என கடவுளுடைய சக்தியின் தூண்டுதலால் மோசே சொன்னார். (வசனம் 19) அப்படியானால், நாம் எப்படி ஜீவனைத் தெரிந்துகொள்ளலாம்? “உன் தேவனாகிய கர்த்தரில் அன்புகூர்ந்து, அவர் சத்தத்திற்குச் செவிகொடுத்து, அவரைப் பற்றிக்கொள்வாயாக” என்று மோசே விளக்கினார். (வசனம் 20) நாம் யெகோவாமீது அன்புகூருகையில் அவருக்குச் செவிகொடுத்து நடக்கவும் எந்தச் சூழ்நிலையிலும் உண்மையோடு அவரைப் பற்றியிருக்கவும் விரும்புவோம். அவ்வாறு செய்கையில் நாம் ஜீவனைத் தெரிந்துகொள்கிறோம்; அதாவது, கடவுளுடைய புதிய உலகில் என்றென்றும் வாழும் எதிர்பார்ப்பைக் கொண்ட மிகச் சிறந்த வாழ்க்கையை இப்போது தெரிந்துகொள்கிறோம்.—2 பேதுரு 3:11-13; 1 யோவான் 5:3.
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
it-1-E பக். 665 பாரா 3
காது
இஸ்ரவேலர்கள் தங்களுடைய காதுகளால் கேட்க முடியாதபடி ஏதோவொன்று அவர்களை தடுத்ததுபோல் இருந்தது. ஏனென்றால் யெகோவா அவர்களுடைய காதுகளை அடைத்திருந்தார். தனக்குப் பிரியமாக நடக்க விரும்புகிறவரின் காதுகளை யெகோவா திறப்பார், அதாவது விஷயங்களை அவருக்குப் புரியவைப்பார். ஆனால் தனக்குக் கீழ்ப்படியாமல் போகிறவருடைய கேட்கும் திறனை அவர் மந்தமாக்கிவிடுவார். அப்போது அவரால் யெகோவாவுடைய எண்ணங்களைப் புரிந்துகொள்ள முடியாது.—உபா 29:4; ரோ 11:8.
ஆகஸ்ட் 30–செப்டம்பர் 5
பைபிளில் இருக்கும் புதையல்கள் | உபாகமம் 31-32
“பைபிள் பாடலில் வரும் சொல்லோவியங்கள் கற்றுத்தரும் பாடம்”
“உங்கள் பெயருக்குப் பயந்து நடக்கும்படி என் இதயத்தை ஒருமுகப்படுத்துங்கள்”
8 வாக்குக் கொடுக்கப்பட்ட தேசத்துக்குள் இஸ்ரவேலர்கள் போவதற்குக் கொஞ்சம் முன்பு, ஒரு பாடலை யெகோவா மோசேக்குச் சொல்லிக்கொடுத்தார். (உபா. 31:19) மோசே அந்தப் பாடலை ஜனங்களுக்குச் சொல்லிக்கொடுக்க வேண்டியிருந்தது. உபாகமம் 32:2, 3-ல் இருக்கிற அந்தப் பாடலை ஆழமாக யோசித்துப்பார்க்கும்போது, ஒரு விஷயம் தெளிவாகிறது. (வாசியுங்கள்.) அதாவது, உச்சரிக்கக் கூடாதளவுக்கு தன்னுடைய பெயர் பரிசுத்தமானதென்றும், அது மறைபொருளாக இருக்க வேண்டுமென்றும் யெகோவா நினைக்கவில்லை என்பது தெளிவாகிறது. எல்லாருக்கும் தன்னுடைய பெயர் தெரிய வேண்டுமென்று அவர் ஆசைப்படுகிறார்! யெகோவாவைப் பற்றியும் அவருடைய மகத்துவமான பெயரைப் பற்றியும் மோசேயிடமிருந்து கற்றுக்கொண்டது, இஸ்ரவேலர்களுக்குக் கிடைத்த எப்பேர்ப்பட்ட பாக்கியம்! பயிர்களுக்கு மழைச்சாரல் புத்துயிரளிப்பது போல, மோசே கற்றுக்கொடுத்தது இஸ்ரவேலர்களுக்குப் புத்துயிரளித்தது. அப்படியென்றால், நாமும் அப்படிக் கற்றுக்கொடுப்பதற்கு என்ன செய்ய வேண்டும்?
9 வீட்டுக்கு வீடு ஊழியம் செய்யும்போதும் பொது ஊழியம் செய்யும்போதும், கடவுளுடைய பெயர் யெகோவா என்பதை பைபிளிலிருந்து நாம் காட்டலாம். யெகோவாவை மகிமைப்படுத்துகிற அருமையான பிரசுரங்களையும், மனதைக் கொள்ளை கொள்கிற வீடியோக்களையும், நம் வெப்சைட்டில் இருக்கிற விஷயங்களையும் காட்டலாம். வேலை செய்யும் இடத்திலும், பள்ளியிலும், பயணம் செய்யும்போதும், நம் அன்பு அப்பா யெகோவாவைப் பற்றியும் அவருடைய அருமை பெருமைகளைப் பற்றியும் நாம் சொல்லலாம். எதிர்காலத்தில் யெகோவா நமக்குச் செய்யப்போகிற அற்புதமான விஷயங்களைப் பற்றியும், இந்தப் பூமியில் அவர் செய்யப்போகிற மாற்றங்களைப் பற்றியும் மற்றவர்களிடம் சொல்லும்போது, யெகோவா தங்களை எந்தளவு நேசிக்கிறார் என்பதை வாழ்க்கையில் முதன்முறையாக அவர்கள் தெரிந்துகொள்வார்கள். இப்படி, நம் அன்பு அப்பாவைப் பற்றிய உண்மைகளை மற்றவர்களிடம் சொல்லும்போது, அவருடைய பெயரை நாம் பரிசுத்தப்படுத்துகிறோம். யெகோவாவைப் பற்றித் தங்களுக்குத் தவறான விஷயங்கள் கற்றுக்கொடுக்கப்பட்டிருப்பதைப் புரிந்துகொள்ள மக்களுக்கு நாம் உதவுகிறோம். புத்துயிரளிக்கிற பைபிள் சத்தியத்தை நாம் அவர்களுக்குக் கற்றுக்கொடுக்கிறோம்.—ஏசா. 65:13, 14.
w09 10/1 பக். 20 பாரா 4
பைபிளில் சொல்லோவியங்கள் உங்களால் புரிந்துகொள்ள முடிகிறதா?
யெகோவாவை பைபிள் உயிரற்ற பொருள்களுடனும் ஒப்பிடுகிறது. அது அவரை “இஸ்ரவேலின் கன்மலை [அதாவது, கற்பாறை],” “கோட்டை,” ‘துருகம்’ என்றெல்லாம் வர்ணிக்கிறது. (2 சாமுவேல் 23:3; சங்கீதம் 18:2; உபாகமம் 32:4) இந்த ஒப்புமைகளிலுள்ள ஒற்றுமை என்ன? பெரிய கற்பாறை எப்படி அசைக்க முடியாதபடி உறுதியாய் இருக்கிறதோ அப்படியே யெகோவா தேவனும் அசைக்க முடியாதவராக இருப்பதால் உங்களுக்குப் பலத்த பாதுகாப்பாய் விளங்குவார்.
பிள்ளைகளைப் பயிற்றுவிப்பதில் யெகோவாவை பின்பற்றுங்கள்
7 இஸ்ரவேலரை யெகோவா நடத்திய விதத்திலிருந்து அவர் காண்பித்த அன்பை சற்று சிந்தித்துப் பாருங்கள். புதிதாக பிறந்த அந்த இஸ்ரவேல் ஜனத்தாரிடம் யெகோவா வைத்திருந்த அன்பை விவரிக்க, மோசே அழகிய ஒப்புமையைப் பயன்படுத்தினார். நாம் வாசிப்பதாவது: “கழுகு தன் கூட்டைக் கலைத்து, தன் குஞ்சுகளின்மேல் அசைவாடி, தன் செட்டைகளை விரித்து, அவைகளை எடுத்து, அவைகளைத் தன் செட்டைகளின்மேல் சுமந்துகொண்டு போகிறது போல, கர்த்தர் ஒருவரே அவனை [யாக்கோபை] வழிநடத்தினார்.” (உபாகமம் 32:9, 11, 12) தன் குஞ்சுகளுக்குப் பறக்க கற்றுக்கொடுப்பதற்காக, தாய் கழுகு தன் இறக்கைகளை படபடவென சிறகடித்து ‘தன் கூட்டைக் கலைக்கிறது,’ தன் குஞ்சுகளைப் பறப்பதற்குத் தூண்டுவிக்கிறது. பெரும்பாலும் உயரமான, செங்குத்து பாறையில் இருக்கும் அந்தக் கூட்டிலிருந்து தன் இளம் குஞ்சு கடைசியாக வெளியேறுகையில், அந்தத் தாய்ப் பறவை குஞ்சுகளின் ‘மேலாக அசைவாடுகிறது.’ அந்தச் சின்னஞ்சிறு பறவை தரையில் மோதிக்கொள்ள இருந்தால், தாய் பறவை ஒரே பாய்ச்சலில் அதன் கீழாக பறந்து சென்று, ‘தன் செட்டைகளின்மேல்’ அதைச் சுமந்து செல்கிறது. இதே விதமாக புதிதாக பிறந்த அந்த இஸ்ரவேல் ஜனத்தை யெகோவா அன்புடன் பராமரித்தார். அந்த ஜனத்திற்கு மோசேயின் நியாயப்பிரமாண சட்டத்தைக் கொடுத்தார். (சங்கீதம் 78:5-7) பின்னும் கடவுள் தம்முடைய ஜனத்தைக் கண்ணும் கருத்துமாய் பாதுகாத்தார். தம்முடைய ஜனம் கஷ்டங்களையோ இக்கட்டுகளையோ எதிர்ப்படுகையில் உடனே அவர்களுடைய உதவிக்கு வர அவர் தயாராக இருந்தார்.
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
உபாகம புத்தகத்திலிருந்து சிறப்பு குறிப்புகள்
31:12. கூட்டங்களின்போது பிள்ளைகள் பெரியவர்களுடன் உட்கார்ந்து, கவனித்து கேட்டு கற்றுக்கொள்ள முயல வேண்டும்.