ஐந்தாம் அதிகாரம்
‘குணசாலியான பெண்’
1, 2. (அ) ரூத் எப்படிப்பட்ட வேலை செய்துவந்தாள்? (ஆ) கடவுளுடைய சட்டங்களையும் அவருடைய மக்களையும் பற்றி ரூத் கற்றுக்கொண்ட அருமையான விஷயங்கள் என்ன?
பகல் முழுவதும் சேகரித்த பார்லி கதிர்க்கட்டுகள் பக்கத்தில் மண்டியிட்டு உட்காருகிறாள் ரூத். பெத்லகேமைச் சூழ்ந்திருக்கும் வயல்பரப்புகள் மஞ்சள் வெயிலில் மின்னுகின்றன. அருகிலுள்ள மேட்டுநிலத்தில் அமர்ந்திருக்கும் அந்தச் சிறு நகரத்தின் வாயிலை நோக்கி வேலையாட்கள் பலர் ஊர்ந்து செல்கிறார்கள். காலைமுதல் மாலைவரை கால்கடுக்க நின்று கதிர் பொறுக்கியதால் ரூத்தின் உடலில் விண் விண்ணென்று ஒரே வலி. இருந்தாலும், இன்னும் அவள் ஓய்ந்த பாடில்லை. சிறு தடியை எடுத்து கதிர்கள்மீது அடித்து பார்லி மணிகளை உதிர்க்கிறாள். மொத்தத்தில், அது ஓர் இனிய நாள், அவள் நினைத்ததைவிட நன்னாள்!
2 இந்த இளம் விதவையின் வாழ்வில் இப்போது புயல் ஓய்ந்து அமைதித் தென்றல் தவழ ஆரம்பித்துவிட்டதா? முந்திய பக்கங்களில் பார்த்தபடி, அவள் தன்னுடைய மாமியார் நகோமியைவிட்டு இணைபிரியாமல் இருந்தாள்... நகோமியுடன் வாழவும் அவளுடைய கடவுள் யெகோவாவையே வழிபடவும் தீர்மானமாய் இருந்தாள். பாசத்திற்குரியவர்களைப் பறிகொடுத்த இந்த இரு பெண்களும் மோவாப் தேசத்தைவிட்டு பெத்லகேமுக்கு வந்திருந்தார்கள்; ஏழை எளிய இஸ்ரவேலருக்கும் அந்நியருக்கும் உதவ யெகோவா கொடுத்த நடைமுறையான சட்டங்களை... அவர்களைக் கண்ணியப்படுத்தும் சட்டங்களை... மோவாபியப் பெண் ரூத் விரைவில் அறிந்துகொண்டாள். அந்தச் சட்டங்களைப் படித்து அதன்படி வாழ்ந்த யெகோவாவின் மக்களில் சிலர் ஆன்மீகச் சிந்தையும் அன்பும் காட்டுவதைக் கண்டுகொண்டாள்; அது ரணப்பட்ட அவளுடைய இதயத்தை மயிலிறகாய் வருடிக் கொடுத்தது.
3, 4. (அ) போவாஸ் எப்படி ரூத்தை ஊக்கப்படுத்தினார்? (ஆ) பொருளாதார நெருக்கடிமிக்க இந்தக் காலத்தில் ரூத்தின் முன்மாதிரி நமக்கு எப்படி உதவும்?
3 அப்படிப்பட்ட ஆன்மீகச் சிந்தையுடைய ஒருவர்தான்... செல்வந்தரும் வயதானவருமான போவாஸ். அவருடைய வயலில்தான் ரூத் கதிர் பொறுக்கினாள். அவளை ஒரு தகப்பனைப் போன்ற கண்ணோட்டத்துடன் கவனித்தார். நகோமியை அக்கறையுடன் பார்த்துக்கொள்வதற்காக... உண்மைக் கடவுளான யெகோவாவின் சிறகுகளின்கீழ் அடைக்கலம் தேடி வந்திருப்பதற்காக... அவர் அன்போடு பாராட்டியதை ரூத் தன் மனதில் அசைபோட்டுப் பார்க்கிறாள், அவள் மனம் பூவாய் மலர்கிறது.—ரூத் 2:11-14-ஐ வாசியுங்கள்.
4 இருந்தாலும், தனக்கு முன்னால் இருக்கும் வாழ்க்கையைப் பற்றி ரூத் யோசித்துப் பார்த்திருக்கலாம். ‘எனக்குக் கணவனுமில்லை குழந்தையுமில்லை... நான் ஏழ்மையில் வாடும் ஒரு அந்நியப் பெண்... இனி எப்படி என்னையும் என் மாமியாரையும் கவனித்துக்கொள்வேன்... கதிர் பொறுக்கியே காலம் தள்ளிவிட முடியுமா... வயதாகும்போது என்னை யார் கவனித்துக்கொள்வார்கள்...’ என்றெல்லாம் அவள் கவலைப்பட்டிருந்தால் அது புரிந்துகொள்ளத்தக்கதே. பொருளாதார நெருக்கடிமிக்க இந்தக் காலத்தில், அநேகர் இதுபோன்ற கவலைகளால் அல்லாடுகிறார்கள். இப்படிப்பட்ட சவால்களைச் சமாளிக்க ரூத்தின் விசுவாசம் எப்படி அவளுக்குக் கைகொடுத்தது என்பதை நாம் சிந்திக்கும்போது நிறையப் பாடங்களைக் கற்றுக்கொள்வோம்.
குடும்பம் என்றால் என்ன?
5, 6. (அ) போவாஸின் வயலில் முதல் நாள் கதிர் பொறுக்கியபோது ரூத்துக்கு என்ன பலன் கிடைத்தது? (ஆ) ரூத்தைப் பார்த்ததும் நகோமி எப்படிப் பிரதிபலித்தாள்?
5 ரூத் கதிரடிக்கும்போது அவளுக்குச் சுமார் 20 படி பார்லி கிடைக்கிறது. அதன் எடை சுமார் 14 கிலோ இருக்கலாம்! அதை ஒருவேளை துணியில் கட்டாகக் கட்டி தன் தலையில் சுமந்துகொண்டு... இருள் கவிந்துவரும் வேளையில்... பெத்லகேமை நோக்கி நடக்க ஆரம்பிக்கிறாள்.—ரூத் 2:17.
6 அன்பு மருமகளைக் கண்டவுடன் நகோமிக்கு ஒரே சந்தோஷம்! ரூத் அவ்வளவு தானியத்தைச் சுமந்து வருவதைப் பார்த்து ஒருவேளை அவள் ஆச்சரியப்பட்டிருக்கலாம். வேலைக்காரர்களுக்கு போவாஸ் கொடுத்த உணவில் மீந்ததையும் ரூத் கொண்டுவருகிறாள். அந்த எளிய உணவை அவளும் நகோமியும் சேர்ந்து சாப்பிடுகிறார்கள். நகோமி அவளிடம், “ ‘இன்று எந்த வயலில் கதிர் பொறுக்கினாய்? அது யாருடைய வயல்?’ என்று கேட்டுவிட்டு, ‘உனக்குப் பரிவு காட்டியவருக்கு ஆண்டவர் ஆசி வழங்குவாராக!’ ” என்று சொல்கிறாள். (ரூத் 2:19, பொ.மொ.) நகோமி உன்னிப்பாய்க் கவனித்திருந்தாள்; ரூத் சுமந்து கொண்டுவந்த ஏராளமான தானியத்தைப் பார்த்து, இந்த இளம் விதவைக்கு யாரோ பரிவு காட்டியிருக்கிறார் எனப் புரிந்துகொண்டாள்.
7, 8. (அ) போவாஸ் காட்டிய தயவை யாரிடமிருந்து வந்த தயவாக நகோமி கருதினாள், ஏன்? (ஆ) ரூத் தன் மாமியாருக்குப் பற்றுமாறா அன்பை மறுபடியும் எப்படியெல்லாம் காட்டினாள்?
7 அவர்கள் இருவரும் அன்று நடந்த சங்கதிகளைப் பற்றிப் பேசுகிறார்கள். அப்போது, போவாஸ் காட்டிய தயவைப் பற்றி நகோமியிடம் ரூத் சொல்கிறாள். அதைக் கேட்டு நகோமி மனம் நெகிழ்ந்துபோய், ‘உயிரோடிருக்கிறவர்களுக்கும் மரித்தவர்களுக்கும் தயவு செய்கிற யெகோவாவாலே அவன் ஆசீர்வதிக்கப்படுவானாக’ என்று சொல்கிறாள். (ரூத் 2:20) போவாஸ் காட்டிய தயவை யெகோவா காட்டிய தயவாகக் கருதுகிறாள். அவரே தமது ஊழியர்களை உந்துவித்து தாராள குணத்தைக் காட்டச் செய்கிறார். தயவு காட்டுகிற மக்களுக்குப் பலன் அளிப்பதாக வாக்கும் கொடுக்கிறார்.a—நீதிமொழிகள் 19:17-ஐ வாசியுங்கள்.
8 போவாஸ் சொன்னபடியே செய்... அவனுடைய வயலிலேயே கதிர் பொறுக்கு... அவனுடைய வேலைக்காரிகளோடு இருப்பதுதான் உனக்கு நல்லது... இல்லாவிட்டால், அறுப்பு வேலை செய்கிற ஆண்கள் உனக்குத் தொந்தரவு கொடுப்பார்கள்... என்றெல்லாம் ரூத்திடம் நகோமி சொல்கிறாள். அந்த அறிவுரையை ரூத் ஏற்றுக்கொள்கிறாள். அதோடு, அவள் தொடர்ந்து ‘தன் மாமியாருடனேயே தங்கியிருக்கிறாள்.’ (ரூத் 2:22, 23, பொ.மொ.) இந்த வார்த்தைகளில் அவளுடைய முத்தான பண்பாகிய பற்றுமாறா அன்பை இன்னும் ஒருமுறை கவனிக்கிறோம். குடும்ப பந்தத்தை நாம் உயர்வாகக் கருதுகிறோமா... அன்புக்குரியோரை உதறித் தள்ளிவிடாமல் அவர்களுக்கு உதவிக்கரம் நீட்டுகிறோமா... என்றெல்லாம் நம்மையே கேட்டுக்கொள்வதற்கு ரூத்தின் முன்மாதிரி நம்மைத் தூண்டலாம். இப்படிப்பட்ட பற்றுமாறா அன்பை யெகோவா ஒருபோதும் கவனிக்கத் தவறுவதில்லை.
ரூத் மற்றும் நகோமியின் உதாரணங்கள் நம் குடும்பத்தை உயர்வாகக் கருத நம்மைத் தூண்டுகின்றன
9. குடும்பம் சம்பந்தமாக ரூத் மற்றும் நகோமியிடமிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?
9 குடும்பம் என்றாலே கணவன் மனைவி, மகன் மகள், தாத்தா பாட்டி என எல்லோரும் இருக்க வேண்டுமெனச் சிலர் நினைத்துக்கொள்கிறார்கள். அப்படியானால், நகோமியும் ரூத்தும் ஒரு குடும்பம் எனச் சொல்ல முடியாதா? முடியும். இன்று சின்னஞ்சிறு குடும்பங்களிலும்கூட... இரண்டு பேர் இருந்தாலும்கூட... ஒவ்வொருவரும் தங்களுடைய இதயத்தைத் திறந்து அன்பையும் பாசத்தையும் கனிவையும் பொழிய முடியும் என்பதை இந்தப் பெண்களின் வாழ்க்கை காட்டுகிறது. உங்களுடைய குடும்பம் பெரிதோ சிறிதோ அதை உயர்வாக மதிக்கிறீர்களா? நீங்கள் தன்னந்தனியாய் இருந்தால்கூட கிறிஸ்தவச் சபை உங்களுக்கு ஒரு குடும்பம்போல் இருக்க முடியுமென இயேசு சொன்னார்.—மாற். 10:29, 30.
‘மீட்கும் உரிமையுள்ளவர்களில் ஒருவர்’
10. ரூத்துக்கு எந்த விதத்தில் உதவ நகோமி விரும்பினாள்?
10 ஏப்ரலில் பார்லி அறுவடை தொடங்கி ஜூனில் கோதுமை அறுவடை வரை, போவாஸின் வயல்களில் ரூத் கதிர் பொறுக்கி வருகிறாள். வாரங்கள் உருண்டோடுகையில், அன்பு மருமகளுக்கு என்ன செய்யலாமென நகோமி நிச்சயம் யோசித்திருப்பாள். மோவாப் தேசத்தில் குடியிருந்தபோது, ரூத்துக்கு வேறொரு கணவனைத் தேடிக் கொடுக்கவே முடியாதென நகோமி நினைத்திருந்தாள். (ரூத் 1:11-13) ஆனால் இப்போது வித்தியாசமாய்ச் சிந்திக்க ஆரம்பிக்கிறாள். அவள் ரூத்திடம், ‘மகளே, நீ இல்வாழ்க்கையில் ஈடுபட்டு மகிழ்ச்சியுடன் இருக்குமாறு செய்வது என் கடமை அல்லவா?’ என்று சொல்கிறாள். (ரூத் 3:1, பொ.மொ.) பெற்றோர் தங்களுடைய பிள்ளைகளுக்கு வரன் தேடுவது அந்தக் கால வழக்கம். ரூத்தை நகோமி தன் மகளாகவே நினைக்கிறாள். அவளுக்கு ஒரு “இல்வாழ்க்கை” அமைத்துத் தர வேண்டுமென விரும்புகிறாள்; “இல்வாழ்க்கை” எனக் குறிப்பிடும்போது வீடும் வீட்டுத் தலைவனும் தரும் பாதுகாப்பைப் பற்றித்தான் நகோமி சொல்கிறாள். ஆனால், அவளால் என்ன செய்ய முடியும்?
11, 12. (அ) “மீட்கும் உரிமையுள்ளவர்” என்று போவாஸை நகோமி குறிப்பிட்டபோது, கடவுளுடைய சட்டத்திலிருந்த எந்த அன்பான ஏற்பாட்டைச் சுட்டிக்காட்டினாள்? (ஆ) மாமியார் சொன்ன ஆலோசனைக்கு ரூத் எப்படிப் பிரதிபலித்தாள்?
11 போவாஸைப் பற்றி முதன்முதல் ரூத் சொன்னபோது நகோமி அவளிடம், “அவன் நமக்கு உறவினன்; நம்மை மீட்கும் உரிமையுள்ளவர்களில் இவனும் ஒருவன்” எனக் கூறினாள். (ரூத் 2:20, NW) அதன் அர்த்தம் என்ன? வறுமையாலோ மரணத்தாலோ பாதிக்கப்பட்ட இஸ்ரவேல் குடும்பங்களுக்குக் கடவுளுடைய சட்டத்தில் அன்பான சில ஏற்பாடுகள் இருந்தன. குழந்தை பாக்கியம் இல்லாத ஒரு பெண் விதவை ஆகிவிட்டால், கணவனுடைய பெயர் தழைக்க ஒரு வாரிசு இல்லாததை எண்ணி சோகத்தில் மூழ்கிவிடலாம். ஆனால், இறந்தவனுடைய சகோதரன் அந்த விதவைக்கு வாழ்வு கொடுத்து ஒரு வாரிசை உருவாக்க கடவுளுடைய சட்டம் அனுமதி அளித்தது. அந்த வாரிசால், இறந்தவனுடைய பெயர் தழைக்கும், பரம்பரைச் சொத்து கைமாறிப்போகாமல் இருக்கும்.b—உபா. 25:5-7.
12 இப்போது, ரூத்திடம் நகோமி ஒரு திட்டத்தைச் சொல்கிறாள். அவள் அதை விவரிக்கும்போது அந்த இளம் பெண்ணின் கண்கள் ஆச்சரியத்தில் அகல விரிவதை நாம் கற்பனை செய்து பார்க்கலாம். ரூத்தைப் பொறுத்தவரை, இஸ்ரவேலின் சட்டதிட்டங்களும் பழக்கவழக்கங்களும் இன்னும் அவளுக்கு ஆரம்பப் பாடம்தான். ஆனாலும், நகோமிமீது மிகுந்த மதிப்புமரியாதை வைத்திருப்பதால், அவள் சொல்லும் ஒவ்வொரு வார்த்தையையும் கூர்ந்து கேட்கிறாள். நகோமியின் ஆலோசனைப்படி செய்வது ஒருவேளை அவளுக்குத் தர்மசங்கடமாகவோ அபத்தமாகவோ தோன்றியிருக்கலாம்; பெருத்த அவமானம் ஏற்பட்டுவிடுமோ என்றுகூட அவள் நினைத்திருக்கலாம். இருந்தாலும், ரூத் எல்லாவற்றுக்கும் சம்மதம் தெரிவிக்கிறாள். ‘நீங்கள் எனக்குச் சொன்னபடியெல்லாம் செய்வேன்’ எனத் தாழ்மையுடன் கூறுகிறாள்.—ரூத் 3:5.
13. பெரியவர்கள் தரும் அறிவுரையை ஏற்பது பற்றி ரூத்திடமிருந்து என்ன பாடம் கற்றுக்கொள்ளலாம்? (யோபு 12:12-ஐயும் காண்க.)
13 வயதானவர்கள் அல்லது அனுபவஸ்தர்கள் கூறும் அறிவுரை இளைஞர்களுக்குச் சிலசமயங்களில் வேப்பங்காயாகக் கசக்கலாம். தாங்கள் எதிர்ப்படும் சவால்களையும் பிரச்சினைகளையும் வயதானவர்கள் புரிந்துகொள்வதில்லை என்றுகூட அவர்கள் நினைக்கலாம். பெரியவர்கள் அன்போடும் அக்கறையோடும் சொல்லும் அறிவுரையைக் கேட்டால் ஏராளமான நன்மைகள் கிடைக்கும் என்பதை ரூத்தின் உதாரணம் நினைப்பூட்டுகிறது. (சங்கீதம் 71:17, 18-ஐ வாசியுங்கள்.) ஆனால், நகோமி என்ன திட்டத்தைச் சொன்னாள், அதன்படி நடந்ததால் ரூத்துக்கு நிஜமாகவே நன்மை கிடைத்ததா?
களத்துமேட்டில் ரூத்
14. களத்துமேடு என்றால் என்ன, அது எதற்குப் பயன்படுத்தப்பட்டது?
14 அன்று அந்திசாயும் வேளையில் களத்துமேட்டை நோக்கிப் போகிறாள் ரூத். களத்துமேடு என்பது கதிரடிப்பதற்கும் பதரைத் தூற்றிவிடுவதற்கும் விவசாயிகள் பயன்படுத்தும் ஒரு மேட்டுப்பகுதி; இறுகிப்போன, தட்டையான ஒரு நிலப்பரப்பு. இந்த இடம் பொதுவாக ஒரு குன்றின் சரிவிலோ உச்சியிலோ அமைந்திருக்கும்; அங்குதான் மாலை நேரத்தில் காற்று பலமாக வீசும். வேலையாட்கள் பெரிய கவைக்கம்பை அல்லது தூற்றுவாரியைப் பயன்படுத்தி பதரும் தானியமும் கலந்த கலவையைக் காற்றில் தூற்றிவிடுவார்கள்; தானிய மணிகள் தரையில் விழுந்துவிடும், லேசான பதரோ காற்றில் பறந்துவிடும்.
15, 16. (அ) மாலையில் போவாஸ் வேலையை முடிக்கும்போது, களத்துமேட்டில் நடந்த காட்சியை விவரியுங்கள். (ஆ) ரூத் தன்னுடைய பாதத்தருகே படுத்திருந்ததை போவாஸ் எப்படித் தெரிந்துகொண்டார்?
15 அன்று மாலையில் வேலையாட்கள் எல்லோரும் வேலையை முடிக்கிறார்களா என்பதை ஜாக்கிரதையாக ரூத் கவனிக்கிறாள். களத்துமேட்டில் நடக்கும் வேலையை போவாஸ் பார்வையிடுகையில், தானியம் மலைபோல் குவிந்துகொண்டே வருகிறது. அவர் திருப்தியுடன் சாப்பிட்டுவிட்டு, அந்தக் குவியலின் ஒரு முனையில் தலைசாய்க்கிறார். திருடர்களோ கொள்ளைக்காரர்களோ தானியங்களை வாரிக்கொண்டு போகாமலிருக்க இப்படி அங்கேயே படுத்துக்கொள்வது அன்றைய வழக்கம். போவாஸ் தூங்குவதற்குத் தயாராவதை ரூத் பார்க்கிறாள். இப்போது, நகோமியின் திட்டத்தைச் செயல்படுத்தும் வேளை வந்துவிட்டது.
16 போவாஸின் அருகே ரூத் சத்தமில்லாமல் மெல்ல செல்கிறாள், அவளது இதயம் படபடவெனத் துடிக்கிறது. அந்த மனிதர் ஆழ்ந்து உறங்குவதைப் பார்க்கிறாள். நகோமி சொல்லியிருந்தபடியே, போவாஸின் பாதத்தருகே போய், அவரது போர்வையை ஒதுக்கிவிட்டுப் படுத்துக்கொள்கிறாள். பின்பு அமைதியாகக் காத்திருக்கிறாள். நேரம் கடந்துசெல்கிறது. ஒவ்வொரு கணமும் ரூத்துக்கு ஒரு யுகம்போல் இருக்கிறது. கடைசியில், நள்ளிரவு நேரத்தில், போவாஸ் சற்றுப் புரள ஆரம்பிக்கிறார். குளிர் நடுக்கத்தில், மீண்டும் பாதத்தைப் போர்த்த முயல்கிறார். அப்போது, அங்கே யாரோ இருப்பதைப் பார்க்கிறார். “அதோ! ஒரு பெண் அவருடைய கால்மாட்டில் படுத்திருக்கிறாள்!”—ரூத் 3:8, NW.
17. ரூத்தின் செயல்களைத் தவறான கண்ணோட்டத்தில் பார்ப்பவர்கள் கவனிக்கத் தவறிவிடும் இரண்டு எளிய உண்மைகள் யாவை?
17 அவளிடம், “யார் நீ?” என்று கேட்கிறார். அப்போது ரூத்... ஒருவேளை குரல் நடுங்க... “நான்தான் ரூத்! உங்களுடைய அடிமைப் பெண். நீங்கள் என்னை மீட்கும் உரிமையுள்ளவர். அதனால் என்னை உங்களுடைய போர்வையால் மூடுங்கள்” என்று சொல்கிறாள். (ரூத் 3:9, NW) ரூத்தின் சொற்களிலும் செயல்களிலும் மோகம் கலந்திருந்ததாக நவீன விமர்சகர்கள் சிலர் விமர்சிக்கிறார்கள். ஆனால், அவர்கள் இரண்டு எளிய உண்மைகளைக் கவனிக்கத் தவறிவிடுகிறார்கள். முதலாவதாக, அன்றைய வழக்கத்தின்படிதான் ரூத் செயல்பட்டாள்; அதெல்லாம் மறைந்துபோய் பல காலம் ஆகிவிட்டதால் இன்று நமக்கு வினோதமாகத் தோன்றுகிறது. ஆகவே, இன்றைய தரக்குறைவான ஒழுக்கநெறிகள் என்ற கண்ணாடி வழியே அவளது செயல்களைப் பார்ப்பது தவறு. இரண்டாவதாக, ரூத்தின் நடத்தையைக் கற்புள்ள நடத்தையாகத்தான்... அவளுடைய செயலை மிகவும் பாராட்டத்தக்க செயலாகத்தான்... போவாஸ் கருதினார்; இதை அவருடைய பிரதிபலிப்பு தெளிவாகக் காட்டுகிறது.
18. ரூத்தை ஆசுவாசப்படுத்த போவாஸ் என்ன சொன்னார், அவள் பற்றுமாறா அன்பைக் காட்டிய இரண்டு சந்தர்ப்பங்கள் யாவை?
18 போவாஸ் பேசுகையில் அவரது மென்மையான குரல், இதமான குரல் ரூத்தை ஆசுவாசப்படுத்துகிறது. “என் மகளே, யெகோவா உன்னை ஆசீர்வதிப்பாராக! நீ இதுவரை காட்டிய பற்றுமாறா அன்பைவிட இப்போது காட்டும் பற்றுமாறா அன்பு மேலானது; ஏனென்றால், ஏழையோ பணக்காரனோ, ஓர் இளைஞன் பின்னால் நீ போகவில்லை” என்கிறார். (ரூத் 3:10, NW) “இதுவரை” என்பது நகோமிக்கு ரூத் காட்டிவரும் பற்றுமாறா அன்பை, அதாவது நகோமியுடன் சேர்ந்து இஸ்ரவேலுக்கு வந்து அவளைக் கவனித்துவருவதை, குறிக்கிறது. “இப்போது” என்பது நகோமியின் குடும்பத்துக்கு ஒரு வாரிசை உருவாக்க போவாஸை மணந்துகொள்ள முன்வருவதைக் குறிக்கிறது. ரூத்தைப் போன்ற இளம் பெண்ணுக்கு, பணக்காரனோ ஏழையோ, ஒரு வாலிபப் பையன் கிடைப்பது கஷ்டமே இல்லை என போவாஸ் குறிப்பிடுகிறார். ஆனால் நகோமிக்கு மட்டுமல்ல, நகோமியின் கணவருக்கும்கூட ரூத் நன்மை செய்ய விரும்புகிறாள்; இறந்துபோன எலிமெலேக்கின் பெயர் அவரது தேசத்தில் அழியாமல் இருக்க விரும்புகிறாள். இந்த இளம் பெண்ணின் சுயநலமற்ற குணம் போவாஸின் இதயத்தைத் தொட்டதில் ஆச்சரியமே இல்லை.
19, 20. (அ) போவாஸ் ஏன் ரூத்தை உடனே கல்யாணம் செய்யவில்லை? (ஆ) போவாஸ் எப்படி ரூத்துக்குத் தயவு காட்டினார், எப்படி அவளுடைய பெயரைக் காப்பாற்றினார்?
19 “இப்போதும் மகளே, நீ பயப்படாதே; உனக்கு வேண்டியபடியெல்லாம் செய்வேன்; நீ குணசாலி என்பதை என் ஜனமாகிய ஊராரெல்லாரும் அறிவார்கள்” என்று போவாஸ் சொல்கிறார். (ரூத் 3:11) ரூத்தை மணமுடிப்பதை எண்ணி அவர் மகிழ்கிறார்; தன்னை மீட்கச் சொல்லி அவள் கேட்டபோது அவர் ஒருவேளை அந்தளவு திகைத்துப்போயிருக்க மாட்டார். என்றாலும், போவாஸ் நீதிமானாக இருப்பதால் வெறுமனே தன்னுடைய விருப்பத்தின்படி நடப்பதில்லை. நகோமியின் இறந்த கணவருக்கு மிக நெருக்கமான உறவினர் ஒருவர் இருக்கிறார்... அவளை மீட்டுக்கொள்ளும் உரிமை முதலில் அவருக்குத்தான் இருக்கிறது... என ரூத்திடம் கூறுகிறார். ஆகவே, போவாஸ் முதலில் அந்த மனிதனை அணுகி ரூத்துக்குக் கணவனாகும் வாய்ப்பைக் கொடுக்க நினைக்கிறார்.
பிறரை அன்புடனும் மரியாதையுடனும் ரூத் நடத்தியதால் குணசாலி எனப் பெயர் பெற்றாள்
20 அங்கேயே படுத்துவிட்டு பொழுது புலருவதற்குமுன் யாருக்கும் தெரியாமல் போய்விடும்படி ரூத்திடம் போவாஸ் சொல்கிறார். அவளுக்கோ தனக்கோ கெட்ட பெயர் வந்துவிடக் கூடாது என்பதால்தான் அப்படிச் சொல்கிறார்; அல்லது, ஏதோ தப்புத்தண்டா நடந்துவிட்டதென மக்கள் கதைகட்டி விடுவார்களே. ரூத் மறுபடியும் அவருடைய கால்மாட்டில் படுத்துக்கொள்கிறாள்; அவளுடைய வேண்டுகோளை போவாஸ் அன்புடன் ஏற்றுக்கொண்டதால் இப்போது நிம்மதியாகத் தூங்குகிறாள். பின்பு, இருள் விலகுவதற்கு முன்பே அவள் எழுந்துவிடுகிறாள். போவாஸ் அவளுடைய போர்வையை விரித்துப் பிடிக்கச் சொல்லி அதில் அன்பளிப்பாய் பார்லியை அள்ளிக்கொட்டுகிறார்; அதன்பின் அவள் பெத்லகேமுக்குத் திரும்புகிறாள்.—ரூத் 3:13-15-ஐ வாசியுங்கள்.
21. ‘குணசாலியான பெண்’ என்ற பெயரை ரூத் பெற்றதற்குக் காரணம் என்ன, அவளது முன்மாதிரியை நாம் எப்படிப் பின்பற்றலாம்?
21 தன்னை எல்லோரும் ‘குணசாலியான பெண்’ எனப் புகழ்வதாக போவாஸ் சொன்னதை நினைத்து ரூத் எவ்வளவு சந்தோஷப்பட்டிருப்பாள்! அவளுக்கு இவ்வளவு நல்ல பெயர் கிடைக்கக் காரணம் என்ன? யெகோவாவைப் பற்றி அறிந்துகொள்வதற்கும் அவருக்குச் சேவை செய்வதற்கும் அவள் ஆர்வம் காட்டியது முக்கியமான ஒரு காரணம். அதோடு, தனக்குக் கொஞ்சம்கூட பழக்கமில்லாத சம்பிரதாயங்களையும் வழக்கங்களையும் மனப்பூர்வமாய் ஏற்றுக்கொண்டாள்; இவ்வாறு, நகோமிக்கும் அவளுடைய மக்களுக்கும் அளவற்ற அன்பு காட்டினாள், அவர்களுடைய உணர்ச்சிகளை மதித்து நடந்தாள். ரூத்தின் விசுவாசத்தை நாம் பின்பற்றினால், மற்றவர்களுக்கும் அவர்களுடைய சம்பிரதாயங்களுக்கும் வழக்கங்களுக்கும் மிகுந்த மதிப்புக் காட்டுவோம். அப்போது, நாமும் ரூத்தைப் போலவே நற்பெயர் சம்பாதிப்போம்.
ரூத்துக்கு இல்வாழ்க்கை அமைகிறது
22, 23. (அ) ரூத்துக்கு போவாஸ் கொடுத்த அன்பளிப்பின் அளவு எதைக் குறித்திருக்கலாம்? (அடிக்குறிப்பையும் காண்க.) (ஆ) ரூத்தை நகோமி என்ன செய்யச் சொல்கிறாள்?
22 ரூத் வீடு திரும்பியதும், “நீ யார் மகளே?” என நகோமி கேட்கிறாள். ஒருவேளை இருட்டாக இருப்பதால் அப்படிக் கேட்டிருக்கலாம்; இல்லாவிட்டால், நீ கல்யாண கனவுகளைச் சுமந்துவரும் பெண்ணா அல்லது விதவையாகவே இருக்கிற பெண்ணா என்ற அர்த்தத்தில் அப்படிக் கேட்டிருக்கலாம். போவாஸைச் சந்தித்ததைப் பற்றி ரூத் தன் மாமியாரிடம் உடனே விவரிக்கிறாள். நகோமிக்கு அன்பளிப்பாக போவாஸ் அள்ளிக்கொடுத்த பார்லியையும் அவளிடம் தருகிறாள்.c—ரூத் 3:16, 17, NW.
23 அன்று வயலுக்குப் போய்க் கதிர் பொறுக்குவதற்குப் பதிலாக வீட்டிலேயே இருக்கும்படி ரூத்திடம் நகோமி ஞானமாகக் கூறுகிறாள். “அந்த மனுஷன் இன்றைக்கு இந்தக் காரியத்தை முடிக்குமுன் இளைப்பாற மாட்டான்” என நம்பிக்கையூட்டுகிறாள்.—ரூத் 3:18.
24, 25. (அ) நேர்மையானவர், சுயநலமற்றவர் என்பதை போவாஸ் எப்படிக் காட்டினார்? (ஆ) ரூத் பெற்ற ஆசீர்வாதங்கள் யாவை?
24 போவாஸைப் பற்றி நகோமி சொன்னது முற்றிலும் சரியே. நகரத்துப் பெரியோர் பொதுவாகக் கூடிவரும் நகரவாசலுக்கு போவாஸ் உடனே போகிறார்; அந்த நெருங்கிய முறை உறவினர் அவ்வழியே வரும்வரை காத்திருக்கிறார். அவர் வந்ததும், நகோமியின் சொத்தை மீட்பதற்கும் ரூத்தை மணமுடிப்பதற்கும் விருப்பமா எனச் சாட்சிகளின் முன்னிலையில் போவாஸ் கேட்கிறார். ஆனால், தனக்குப் பெரிய நஷ்டம் ஏற்படும் என்று சொல்லி அந்த மனிதர் மறுத்துவிடுகிறார். அதனால் போவாஸ், நகரவாசலில் இருக்கிற சாட்சிகளின் முன்னிலையில், மீட்கும் உரிமையுள்ளவருக்குரிய கடமையைச் செய்ய விரும்புவதாகச் சொல்கிறார்; அதாவது, நகோமியின் காலம்சென்ற கணவர் எலிமெலேக்கின் சொத்தை வாங்கிக்கொண்டு அவரது மகனாகிய மக்லோனின் மனைவி ரூத்தை மணமுடிக்க விரும்புவதாகச் சொல்கிறார். “இறந்தவரின் உரிமைச் சொத்து அவர் பெயரிலேயே தொடர்ந்து இருக்க” அப்படிச் செய்வதாகத் தெரிவிக்கிறார். (ரூத் 4:1-10, பொ.மொ.) ஆம், போவாஸ் உண்மையிலேயே நேர்மையானவர், சுயநலமற்றவர்.
25 ரூத்தை போவாஸ் கரம்பிடிக்கிறார். அதன்பின், ‘ஒரு ஆண்பிள்ளையைப் பெற யெகோவா அநுக்கிரகம் பண்ணுகிறார்.’ பெத்லகேம் பெண்கள் நகோமியை வாழ்த்துகிறார்கள், ஏழு மகன்களைவிட நகோமிக்கு ரூத் அருமையானவள் என்று சொல்லி பாராட்டுகிறார்கள். ரூத்துக்குப் பிறந்த மகன் பிற்காலத்தில் மகாராஜா தாவீதுக்கு மூதாதையாக ஆகிறார். (ரூத் 4:11-22) தாவீதோ இயேசு கிறிஸ்துவின் மூதாதையாக ஆகிறார்.—மத். 1:1. d
26. ரூத் மற்றும் நகோமியின் வாழ்க்கை நமக்கு எதைக் காட்டுகிறது?
26 ரூத் உண்மையிலேயே ஆசீர்வதிக்கப்பட்டாள், நகோமியும்தான்; இவள் தனது பேரனைத் தன்னுடைய மகனாகவே வளர்த்தாள். இந்த இரு பெண்களுடைய வாழ்க்கையிலிருந்து நாம் என்ன தெரிந்துகொள்கிறோம்? தங்கள் குடும்பத்தாரைப் பராமரிக்கப் பணிவுடன் பாடுபடுவோரையும் யெகோவாவின் மக்களோடு சேர்ந்து பற்றுமாறா அன்புடன் அவருக்குச் சேவை செய்வோரையும் அவர் கவனிக்கிறார் என்பதைத் தெள்ளத்தெளிவாய்த் தெரிந்துகொள்கிறோம். போவாஸ், நகோமி, ரூத் போன்ற விசுவாசமுள்ள ஆட்களைக் கடவுள் ஆசீர்வதிக்கத் தவறுவதே இல்லை.
a நகோமி குறிப்பிட்டபடி, யெகோவா உயிருள்ளோருக்கு மட்டுமே தயவு காட்டுவதில்லை, இறந்தோருக்கும் தயவு காட்டுகிறார். நகோமி தன்னுடைய கணவரையும் இரு மகன்களையும் இழந்திருந்தாள். ரூத் தன்னுடைய கணவனை இழந்திருந்தாள். இறந்துபோன அந்த மூவருமே இந்தப் பெண்களின் பாசத்துக்கும் நேசத்துக்கும் உரியவர்களாய் இருந்தார்கள். நகோமிக்கும் ரூத்துக்கும் காட்டப்பட்ட தயவு இறந்துபோன அந்த நபர்களுக்குக் காட்டப்பட்ட தயவு என்று சொல்லலாம். ஏனென்றால், பிரியத்திற்குரிய இந்தப் பெண்களுக்கு இப்படிப்பட்ட தயவு கிடைக்கும்படியே அவர்கள் விரும்பியிருப்பார்கள்.
b இப்படிப்பட்ட விதவையை மணமுடிக்கும் உரிமை இறந்தவனுடைய சகோதரனுக்குத்தான் முதலில் கிடைக்கும்; பிற்பாடுதான் அவனுடைய நெருங்கிய ஆண் உறவினருக்குக் கிடைக்கும்; பரம்பரைச் சொத்தைப் பெறும் உரிமையும் இதுபோலத்தான்.—எண். 27:5-11.
c ரூத்திடம் போவாஸ் ஆறு படி பார்லியைக் கொடுத்தார் (இது எவ்வளவு பெரிய படி என பைபிளில் குறிப்பிடப்படவில்லை); ஆறு நாட்கள் வேலை செய்தபின் ஓய்வுநாள் வருவதுபோல, ரூத் ஒரு விதவையாகப் பாடுபட வேண்டிய நாட்கள் முடிந்து அவளுக்கு “ஓய்வு” வரப்போவதை இந்த ஆறு படி குறித்திருக்கலாம்; அதாவது, வீடும் கணவனும் தரும் நிம்மதி கிடைக்கப்போவதைக் குறித்திருக்கலாம். அல்லது, ரூத்தினால் அந்தளவுதான் சுமக்க முடிந்திருக்கலாம்.
d இயேசுவின் முன்னோருடைய பட்டியலில் பைபிள் குறிப்பிடுகிற ஐந்து பெண்களில் ரூத்தும் ஒருத்தி. மற்றொரு பெண் ராகாப், இவள் போவாஸின் தாய். (மத். 1:3, 5, 6, 16) ரூத்தைப் போல், இவளும் ஒரு புறதேசத்து பெண்.