போவாஸ், ரூத் மண வாழ்வில் இணைந்த அதிசயம்
பெத்லகேமுக்கு அருகிலுள்ள போரடிக்கும் களம் ஒன்றில் வேலை மளமளவென்று நடந்து கொண்டிருக்கிறது. நீண்ட நேரமாக அது நடைபெற்று வருகிறது. சுடச்சுட வறுக்கப்படும் தானியத்தின் நறுமணம் கமகமவென்று மூக்கில் ஏறியதுமே பசியாய் இருந்த வேலையாட்களுக்கு சாப்பாட்டு வேளை வந்துவிட்டதென புரிகிறது. வியர்வை சிந்த வேலை செய்கிற ஒவ்வொரு வேலையாளும் தன் தன் கையின் பலனை அனுபவிக்கப்போகும் சமயம் அது.
நிலச் சொந்தக்காரரான செல்வச்சீமான் போவாஸ் வயிறுமுட்ட சாப்பிடுகிறார், குடிக்கிறார், மலை போல குவிக்கப்பட்டிருக்கும் தானியத்திற்கு அருகில் போய் கொஞ்ச நேரம் ஓய்வெடுக்கிறார். பிற்பாடு, அந்த அறுவடை நாள் முடிவுக்கு வருகிறது, அவரவர் வேலை முடித்த அசதியில் அக்கடாவென்று படுக்கைபோட சொகுசான இடத்தை தேடுகிறார்கள். பரம திருப்தியடைந்த போவாஸ் இப்போது போர்வையைப் போர்த்திக்கொண்டு அப்படியே அயர்ந்து உறங்கிவிடுகிறார்.
இருளில் ஒரு சந்திப்பு
நடுராத்திரியில், குளிரில் நடுங்கியவாறு போவாஸ் கண் விழிக்கிறார். அட, அவர் கால்மாட்டில் போர்வை விலகியிருக்கிறது, யாரோ வேண்டுமென்றே அதை அகற்றியிருக்கிறார்கள். அதோ, அவரருகில் யாரோ படுத்திருக்கிறார்கள்! அந்த இருட்டில் சரியாக பார்க்க முடியாததால், “யார் நீ?” என அவர் கேட்கிறார். ‘நான்தான் ஐயா! ரூத், உம்முடைய அடியாள். நீரே என்னைக் காப்பாற்றும் கடமையுள்ள என் முறை உறவினர். அந்த முறைப்படி என்னை உமது போர்வையால் மூடும்’ என்று ஒரு பெண்ணின் குரல் கேட்கிறது.—ரூத் 3:1-9, பொது மொழிபெயர்ப்பு.
அந்த கும்மிருட்டிலே இவர்கள் மட்டும் தனியாக பேசிக் கொண்டிருக்கிறார்கள். போரடிக்கும் களத்தில் பெண்கள் இப்படி இருக்கவே மாட்டார்கள். (ரூத் 3:14) ஆனாலும், போவாஸ் சொன்னதால், இரா முழுதும் ரூத் அவர் காலடியிலேயே படுத்துக்கொள்கிறாள்; எந்தவொரு கிசுகிசுப்பும் எழக்கூடாது என்பதற்காக பொழுது புலர்வதற்கு முன்பே எழுந்து அங்கிருந்து போய்விடுகிறாள்.
இது ஒரு காதல் சந்திப்பா? ஒரு புறதேசத்திலிருந்து வந்த ஏழை இளம் விதவையான ரூத் இந்த வயதான பணக்காரர் நெறிதவறிப்போக நயவஞ்சகமாக வலை விரித்தாளா? அல்லது ரூத்தின் சூழ்நிலையையும் அந்த ஜாம நேர தனிமையையும் போவாஸ் தன் சுயநலத்திற்காக பயன்படுத்திக் கொண்டாரா? இல்லவே இல்லை! அங்கு நடந்தது கடவுள் மீதுள்ள பற்றுறுதிக்கும் அன்புக்குமே ஓர் எடுத்துக்காட்டாக விளங்கியது. அதோடு, உண்மைகள் மனதை உருக்குவதாகவும் இருக்கின்றன.
ஆனால், ரூத் யார்? அவளுடைய நோக்கம் என்ன? இந்தப் பணக்கார மனிதனான போவாஸ் யார்?
“குணசாலி”
இந்தச் சம்பவம் நடப்பதற்கு பல வருடங்கள் முன்பு, யூதாவில் பஞ்சம் பரவியிருந்தது. ஆகவே, இஸ்ரவேல் குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர்—எலிமெலேக்கு, அவர் மனைவி நகோமி, அவர்களின் இரு புதல்வர்கள் மக்லோன், கிலியோன்—செழிப்பான மோவாப் தேசத்தில் குடியேறினார்கள். அவர்களுடைய இரு புதல்வர்களும் மோவாபிய பெண்களை மணந்தார்கள். அவர்களில் ஒருத்தி ரூத், மற்றொருத்தி ஒர்பாள். மோவாபில் வாசம் செய்தபோது அந்த மூன்று ஆண்களுமே மரித்தனர்; பிற்பாடு, இஸ்ரவேலில் நிலைமை முன்னேறியிருப்பதாக இந்த மூன்று பெண்களும் கேள்விப்பட்டார்கள். அதனால், குழந்தைகளோ பேரக் குழந்தைகளோ இல்லாமல் கைம்பெண் கோலத்தில் இருந்த நகோமி மனக்கசப்புற்று தன் தாய் நாட்டிற்கே திரும்பிவிட முடிவு செய்தாள்.—ரூத் 1:1-14.
இஸ்ரவேலுக்கு போகும் வழியிலே நகோமி ஒர்பாளிடம் பேசி, அவளுடைய சொந்தபந்தத்தாரிடமே திரும்பிப் போகும்படி சம்மதிக்க வைத்தாள். பிறகு, ரூத்திடமும்: “இதோ, உன் சகோதரி தன் ஜனங்களிடத்துக்கும் தன் தேவர்களிடத்துக்கும் திரும்பிப் போய்விட்டாளே; நீயும் உன் சகோதரியின் பிறகே திரும்பிப்போ என்றாள்.” ஆனால், ரூத்: “நான் . . . உம்மைவிட்டுத் திரும்பிப் போவதைக் குறித்து, என்னோடே பேச வேண்டாம்; நீர் போகும் இடத்திற்கு நானும் வருவேன் . . . உம்முடைய ஜனம் என்னுடைய ஜனம்; உம்முடைய தேவன் என்னுடைய தேவன். நீர் மரணமடையும் இடத்தில் நானும் மரணமடைந்து, அங்கே அடக்கம் பண்ணப்படுவேன்” என்று சொன்னாள். (ரூத் 1:15-17) ஆகவே, நிராதரவான அந்த இரு விதவைகளும் பெத்லகேமுக்கு வந்து சேர்ந்தனர். அங்கே, ரூத் தன் மாமியாரை அவ்வளவு அன்போடும் அக்கறையோடும் நடத்துவதைப் பார்த்த அக்கம்பக்கத்தார், அவள் ‘ஏழு குமாரரைப் பார்க்கிலும் [நகோமிக்கு] அருமையாயிருக்கிறாள்’ என சொல்லும் அளவுக்கு மனம் நெகிழ்ந்து போனார்கள்; மற்றவர்கள் அவளை “குணசாலி” என்றும் விவரித்தார்கள்.—ரூத் 3:11; 4:15.
பெத்லகேமில் வாற்கோதுமை அறுவடை ஆரம்பிக்கிறது; அப்போது நகோமியிடம் ரூத்: “நான் வயல்வெளிக்குப் போய், யாருடைய கண்களில் எனக்குத் தயை கிடைக்குமோ, அவர் பிறகே கதிர்களைப் பொறுக்கிக்கொண்டு வருகிறேன்” என்று கூறிவிட்டு செல்கிறாள்.—ரூத் 2:2.
எதேச்சையாக, தன் மாமனார் எலிமெலேக்குவின் உறவினரான போவாஸுக்கு சொந்தமான நிலத்திற்கே வந்து சேருகிறாள். சிந்திக்கிடக்கும் கதிர்களைப் பொறுக்கிக்கொள்ள அங்கிருந்த கண்காணியிடம் அனுமதி கேட்கிறாள். பின்பு, அவள் சிறிதும் சளைக்காமல் மடமடவென்று அவற்றைப் பொறுக்குகிறாள்; அதைப் பார்த்துக்கொண்டிருந்த அந்தக் கண்காணி, போவாஸிடம் அவளுடைய வேலையை புகழ்ந்து பேசுகிறான்.—ரூத் 1:22–2:7.
பாதுகாப்பாளரும் ஆதரவாளரும்
போவாஸ், யெகோவா மீது பயபக்தியுள்ளவர். ஒவ்வொரு நாளும் காலையில் தன் அறுவடையாளர்களைப் பார்த்து ‘[யெகோவா] உங்களோடே இருப்பாராக’ என்ற நல்வார்த்தைகளை நல்குவார்; பதிலுக்கு அவர்கள்: ‘[யெகோவா] உம்மை ஆசீர்வதிப்பாராக’ என்பார்கள். (ரூத் 2:4) ரூத் படுசுறுசுறுப்பாக வேலை செய்வதை போவாஸ் கவனிக்கிறார்; அவள் நகோமியுடன் பற்றுறுதியோடு இருப்பதைப் பற்றியும் தெரிந்துகொள்கிறார்; ஆகவே, சிந்தின கதிர்களைப் பொறுக்கிக்கொள்ள விசேஷ ஏற்பாடுகளை அவளுக்காக செய்து கொடுக்கிறார். சுருக்கமாக அவளிடம் இவ்வாறு சொல்கிறார்: ‘என் வயலிலேயே இரு; வேறு வயல்களுக்கு நீ போகத் தேவையில்லை. என் ஊழியக்கார பெண்களோடு கூடவே இரு. நீ அவர்களுடன் பாதுகாப்பாய் இருக்கலாம். ஒருவரும் உன்னைத் தொடாதபடிக்கு வேலைக்காரருக்குக் கட்டளையிட்டிருக்கிறேன். உனக்குத் தாகம் எடுத்தால், அவர்கள் உனக்கு தண்ணீரை மொண்டுகொண்டு வருவார்கள்.’—ரூத் 2:8, 9.
உடனடியாக ரூத் தரையிலே முகங்குப்புற விழுந்து பணிந்து: ‘நான் ஒரு அந்நிய தேசத்தாளாக இருந்த போதிலும், எனக்கு எதினாலே உம்முடைய கண்களில் தயை கிடைத்தது’ என்று கேட்கிறாள். அதற்குப் போவாஸ்: ‘உன் புருஷன் மரணமடைந்த பின்பு, நீ உன் மாமியாருக்காகச் செய்ததும், நீ உன் தகப்பனையும் உன் தாயையும், உன் ஜந்மதேசத்தையும் விட்டு, முன்னே நீ அறியாத ஜனங்களிடத்தில் வந்ததும் எல்லாம் எனக்கு விவரமாய்த் தெரிவிக்கப்பட்டது. உன் செய்கைக்குத்தக்க பலனை [யெகோவா] உனக்குக் கட்டளையிடுவாராக. அவராலே நிறைவான பலன் உனக்கு கிடைப்பதாக’ என்று பதிலளிக்கிறார்.—ரூத் 2:10-12.
அவளைக் கவருவதற்காக போவாஸ் இப்படியெல்லாம் சொல்லவில்லை. உள்ளப்பூர்வமாகத்தான் அவளைப் புகழ்கிறார். அந்த வார்த்தைகளைக் கேட்ட ரூத் உண்மையான மனத்தாழ்மையோடு, அவர் கொடுத்த நம்பிக்கையளிக்கும் ஆறுதலுக்காக நன்றி சொல்கிறாள். ஆனாலும் இதையெல்லாம் பெற்றுக்கொள்ள தான் அருகதையற்றவள் என்று தனக்குள் நினைத்துக் கொண்டு இன்னும் அதிகமாக பாடுபட்டு உழைக்கத் தொடங்குகிறாள். பிறகு, சாப்பாட்டு வேளையின்போது, “இங்கே வந்து, இந்த அப்பத்தை எடுத்துப் புளித்த திராட்சை இரசத்தில் தோய்த்துச் சாப்பிடு” என்று போவாஸ் ரூத்தை அழைக்கிறார். அவள் வயிறார சாப்பிட்ட பின், மீந்ததை நகோமிக்காக வீட்டுக்கு எடுத்துப்போக சேமித்து வைத்துக்கொள்கிறாள்.—ரூத் 2:14, பொ.மொ.
சாயங்காலத்திற்குள், ஏறக்குறைய 22 லிட்டர் வாற்கோதுமையை அவள் சேகரித்து விடுகிறாள். அதையும் மீந்திருந்த உணவையும் நகோமிக்காக வீட்டுக்கு எடுத்துச் செல்கிறாள். (ரூத் 2:15-18) எக்கச்சக்கமானவற்றை அவள் கொண்டு வருவதைப் பார்த்த நகோமி, மனங்குளிர்ந்து கேட்கிறாள்: “இன்று எங்கே கதிர் பொறுக்கினாய்? . . . உன்னை விசாரித்தவன் ஆசீர்வதிக்கப்படுவானாக.” போவாஸ்தான் அவளுக்கு பரிவு காட்டியது என்று தெரிந்ததுமே, “உயிரோடிருக்கிறவர்களுக்கும் மரித்தவர்களுக்கும் தயவு செய்கிற கர்த்தராலே அவன் ஆசீர்வதிக்கப்படுவானாக . . . அந்த மனுஷன் நமக்கு நெருங்கின உறவின்முறையானும் நம்மை ஆதரிக்கிற சுதந்தரவாளிகளில் ஒருவனுமாய் இருக்கிறான்” என அவள் சொல்கிறாள்.—ரூத் 2:19, 20.
“சவுக்கியத்தைத்” தேடி
நகோமி தன் மருமகளுக்காக ஒரு ‘சவுக்கியமான இடத்தை’ அதாவது, இல்வாழ்க்கையை அமைத்துக் கொடுக்க இந்தச் சந்தர்ப்பத்தை பயன்படுத்த விரும்புகிறாள்; இதற்காக, கடவுளின் நியாயப்பிரமாணத்திற்கு இசைவாக சுதந்தரமுறையில் மீட்டுக்கொள்வதற்கு ஏற்பாடு செய்கிறாள். (லேவியராகமம் 25:25; உபாகமம் 25:5, 6) ஆகவே, மிகச்சிறந்த பயிற்சியை ரூத்துக்கு நகோமி அளிக்கிறாள், அது ஒரு விதத்தில் கிளர்ச்சியூட்டுகிற செயல்திட்டமாக இருந்தது என்றே சொல்லலாம், போவாஸின் கவனத்தை ஈர்ப்பதற்கு அத்திட்டம் வழி செய்தது. எப்படி நடந்துகொள்ள வேண்டும் என நன்றாக கற்பிக்கப்பட்டு, தயாராக இருந்த ரூத், இருட்டு வேளையிலே போவாஸுக்கு சொந்தமான போரடிக்கும் களத்திற்கு செல்கிறாள். அவர் தூங்கிக் கொண்டிருப்பதை பார்க்கிறாள். அவர் கால்களில் மூடியிருந்த போர்வையை விலக்குகிறாள், பிறகு அவர் கண் விழிக்கும்வரை காத்திருக்கிறாள்.—ரூத் 3:1-7.
எதிர்பார்த்தபடியே, போவாஸ் தூக்கம் கலைந்து எழுந்துகொள்கிறார்; அவள் செய்த அந்த மறைமுகச் செயலின் மூலம் ‘உம்முடைய அடியாள் மேல் உமது போர்வையை மூடும்’ என்ற அவளுடைய வேண்டுகோளின் முக்கியத்துவத்தை அப்போது புரிந்துகொள்கிறார். ரூத்தின் செயல், ஒரு சுதந்தரவாளியாக இருக்கும் கடமையை யூதரான அந்தப் பெரியவருக்கு நினைப்பூட்டியது. ஏனெனில், காலஞ்சென்ற ரூத்தின் கணவன் மக்லோனுடைய சொந்தக்காரரே அவர்.—ரூத் 3:9, பொ.மொ.
ரூத்தின் ஜாமநேர வருகையை அவர் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லைதான்; என்றாலும் தன்னை சுதந்தரமுறையில் மீட்டுக்கொள்ளும்படி ரூத் கோரிக்கை விடுப்பாள் என்று அவர் ஓரளவாவது எதிர்பார்த்திருக்க வேண்டும்; அவருடைய பிரதிபலிப்பே இதை வெளிக்காட்டுகிறது. ரூத்தின் வேண்டுகோளுக்கு இணங்கி செயல்பட போவாஸ் சம்மதிக்கிறார்.
ரூத்தின் குரலில் கொஞ்சம் கவலை தொனித்திருக்கலாம், அதன் காரணமாக அவளுக்கு போவாஸ் இப்படி உறுதி அளிக்கிறார்: “இப்போதும் மகளே, நீ பயப்படாதே; உனக்கு வேண்டியபடியெல்லாம் செய்வேன்; நீ குணசாலி என்பதை என் ஜனமாகிய ஊராரெல்லாரும் அறிவார்கள்.”—ரூத் 3:11.
ரூத்தின் செயல்கள் முழுக்க முழுக்க நல்லொழுக்கமானவை என்று போவாஸ் கருதியதை பின்வரும் வார்த்தைகள் காண்பிக்கின்றன: “மகளே, நீ கர்த்தரால் ஆசீர்வதிக்கப்படுவாயாக . . . உன் முந்தின நற்குணத்தைப் பார்க்கிலும் உன் பிந்தின நற்குணம் உத்தமமாயிருக்கிறது.” (ரூத் 3:10) முந்தின சந்தர்ப்பத்தில், நகோமியிடம் ரூத் அன்பான தயவை, அதாவது, பற்றுமாறா அன்பை வெளிக்காட்டினாள். பிந்தின சந்தர்ப்பத்தில், போவாஸ் முதியவராக இருந்தபோதிலும் அவர் சுதந்தரவாளியாக இருந்ததால் சுதந்தரமுறையில் அவரை விவாகம் செய்வதற்கு தன்னலம் கருதாமல் அவள் முன்வந்தாள். மரித்த கணவன் மக்லோனுக்காகவும், நகோமிக்காகவும் ஒரு சந்ததியை உருவாக்க மனமுள்ளவளாக இருந்தாள்.
ஒரு சுதந்தரவாளி பின்வாங்குகிறார்
போவாஸ் அடுத்த நாள் காலை, உறவினன் ஒருவனை பேர் சொல்லி இங்கே வாரும் என அழைக்கிறார்; அந்த உறவினன் போவாஸைவிட நகோமிக்கு நெருக்கமான சொந்தக்காரன். ஊரார் முன்பாகவும் மூப்பர்கள் முன்பாகவும், போவாஸ் இவ்வாறு சொல்கிறார்: ‘நகோமியின் கணவன் எலிமெலேக்கிற்கு சொந்தமான வயல்நிலத்தின் பங்கை நகோமி விற்கப்போகிறாள். ஆகையால், அதை வாங்கிக்கொள்ளும் உரிமை உமக்கு இருப்பதை உமது காதில் போட்டு வைக்க வேண்டும் என்றிருந்தேன்.’ போவாஸ் தொடர்கிறார்: ‘நீர் அதைச் சுதந்தரமுறையாக மீட்டுக்கொள்கிறீரா? அப்படி அதை மீட்டுக்கொள்ள மனதில்லாதிருந்தால், நான் அதை மீட்டுக் கொள்கிறேன்.’ அதற்கு, பெயர் குறிப்பிடப்படாத அந்த உறவினன் தான் அதை மீட்டுக்கொள்வதாக சொல்கிறான்.—ரூத் 4:1-4.
ஆனால், அவனுக்கு ஒரு ஆச்சரியம் காத்திருந்தது! எல்லா சாட்சிகளுக்கும் முன்பாக போவாஸ் இப்போது அறிவிக்கிறார்: ‘நீர் நகோமியின் கையிலே அந்த வயல்நிலத்தை வாங்குகிற நாளிலே மரித்தவனுடைய சுதந்தரத்தில் அவன் பேரை நிலைநிற்கப் பண்ணும்படிக்கு, அதை மரித்தவன் மனைவியாகிய மோவாபிய ஸ்திரீயான ரூத் கையிலும் வாங்க வேண்டும்’ என்றார். எங்கே தன் சொந்த குடும்பத்திற்குரிய சொத்துரிமை பறிபோய்விடுமோ என்ற அச்சத்தில்: “நான் அதை மீட்டுக் கொள்ளமாட்டேன்” என்று சொல்லி அந்த உறவுமுறை சுதந்தரவாளி, மீட்டுக்கொள்ளும் தன்னுடைய உரிமையிலிருந்து பின் வாங்கிவிடுகிறான்.—ரூத் 4:5, 6.
இஸ்ரவேலரின் வழக்கப்படி, மீட்டுக்கொள்ள மறுக்கும் ஒருவன் தன்னுடைய பாதரட்சையை கழற்றி மற்றவனுக்கு கொடுக்க வேண்டும். அதனால் போவாஸிடம் இந்த சுதந்தரவாளி, “நீர் அதை வாங்கிக்கொள்ளும்” என்று சொல்லி, தன் பாதரட்சையைக் கழற்றிப்போடுகிறான். அப்பொழுது போவாஸ் மூப்பரையும் சகல ஜனங்களையும் நோக்கி, “எலிமெலேக்குக்கு இருந்த எல்லாவற்றையும் கிலியோனுக்கும் மக்லோனுக்கும் இருந்த எல்லாவற்றையும் நகோமியின் கையிலே வாங்கிக்கொண்டேன் என்பதற்கு இன்றைய தினம் நீங்கள் சாட்சி” என்கிறார். மேலும், “மக்லோனின் மனைவியாயிருந்த மோவாபியப் பெண் ரூத்தை என் மனைவியாக ஏற்றுக்கொள்கிறேன். இறந்தவரின் உரிமைச் சொத்து அவர் பெயரிலேயே தொடர்ந்து இருக்கவும் . . . இதைச் செய்கிறேன். இதற்கும் நீங்கள் இன்று சாட்சி” என்கிறார்.—ரூத் 4:7-10; பொ.மொ.
அப்பொழுது ஒலிமுக வாசலில் இருக்கிற சகல ஜனங்களும் போவாஸை நோக்கி, “உன் வீட்டிலே வருகிற மனைவியைக் கர்த்தர் இஸ்ரவேல் வீட்டைக் கட்டுவித்த இரண்டு பேராகிய ராகேலைப் போலவும் லேயாளைப் போலவும் வாழ்ந்திருக்கச் செய்வாராக; நீ எப்பிராத்தாவிலே பாக்கியவானாயிருந்து, பெத்லெகேமிலே புகழ் பெற்றிருக்கக்கடவாய்” என்று வாழ்த்துகிறார்கள்.—ரூத் 4:11, 12.
மக்களின் ஆசீர்வாதத்தோடு, ரூத்தை போவாஸ் கரம் பிடிக்கிறார். பிறகு, ஓபேத் என்ற குமாரனை அவள் பெற்றெடுக்கிறாள்; இப்படியாக, ரூத்தும் போவாஸும் தாவீது ராஜாவின் மூதாதையர் ஆனார்கள், அதன் விளைவாக அவர்கள் இயேசு கிறிஸ்துவுக்கும் மூதாதையர் ஆனார்கள்.—ரூத் 4:13-17; மத்தேயு 1:5, 6, 16.
“நிறைவான பலன்”
இந்த விவரப்பதிவு முழுவதிலும், ஆரம்பத்திலிருந்து பார்க்கும்போது, வேலையாட்களுக்கு அன்புடன் வாழ்த்து தெரிவிப்பதாகட்டும், எலிமெலேக்குவின் வம்சம் தழைப்பதற்காக தான் பொறுப்பை ஏற்றுக்கொள்வதாகட்டும், எல்லாவற்றிலுமே தான் ஒரு நிகரற்ற மனிதர் என்பதை போவாஸ் நிரூபித்தார்—ஆம், செயல்வீரராக, செல்வாக்குள்ளவராக திகழ்ந்தார். அதே நேரத்தில், தன்னடக்கமும் விசுவாசமும் நாணயமும் நிறைந்த மனிதராகவும் விளங்கினார். மேலும், தாராள குணமுடையவராகவும், தயவு மிக்கவராகவும், ஒழுக்க சீலராகவும், யெகோவாவின் கட்டளைகளுக்கு முழுமையாக கீழ்ப்படிபவராகவும் இருந்தார்.
ரூத், யெகோவா மீது வைத்திருந்த அன்பிலும், நகோமியிடம் காட்டிய பற்றுமாறா அன்பிலும், சுறுசுறுப்பிலும், மனத்தாழ்மையிலும் அவளுக்கு நிகர் அவளே. அதனால் அவளை “குணசாலி” என்று ஜனங்கள் புகழ்ந்ததில் வியப்பேதுமில்லை. “சோம்பலின் அப்பத்தை” அவள் புசிக்கவில்லை. மாறாக, கடினமாக உழைத்து வறுமையில் வாடிய தன் மாமியாருக்கு உதவினாள். (நீதிமொழிகள் 31:27, 31) நகோமிக்காக ரூத் பொறுப்புகளை ஏற்றுக்கொண்டபோது, கொடுப்பதால் வரும் சந்தோஷத்தை கட்டாயம் அவள் அனுபவித்திருப்பாள்.—அப்போஸ்தலர் 20:35; 1 தீமோத்தேயு 5:4, 8.
ரூத் புத்தகத்தில் எத்தனை அருமையான முன்மாதிரிகளை நாம் காண்கிறோம்! நகோமிக்கு யெகோவாவின் இதயத்தில் ஓர் இடமிருக்கிறது. ரூத்துக்கு இயேசு கிறிஸ்துவின் மூதாதை என்ற “நிறைவான பலன்” கிடைத்திருக்கிறது. போவாஸுக்கு ஒரு “குணசாலி” கிடைத்த ஆசீர்வாதம் இருக்கிறது. நமக்கோ, இவர்கள் விசுவாசத்தின் முன்மாதிரிகளாக திகழ்கிறார்கள்.
[பக்கம் 26-ன் பெட்டி]
நம்பிக்கைச் சுடர்
நீங்கள் எப்போதாவது துன்ப காலங்களில் துவளுவதாக உணர்ந்தால், ரூத்தின் கதை நம்பிக்கை எனும் பொறியை உங்கள் மீது தெறிக்கலாம். நியாயாதிபதிகள் புத்தகத்தின் முக்கிய முடிவுரையாக இந்தக் கதை மேலோங்கி நிற்கிறது. தம் ஜனங்களுக்காக ஒரு ராஜாவை எழும்பப் பண்ணுவதற்கு அந்நிய தேசமான மோவாபிலிருந்து வந்த ஒரு தாழ்மையான விதவையை யெகோவா எப்படி பயன்படுத்தினார் என்பதை இந்த ரூத் புத்தகம் அழகாக வடிக்கிறது. நியாயாதிபதிகள் புத்தகத்தின் பின்னணியை வைத்துப் பார்க்கையில், அந்தக் காலகட்டத்திலேயே ரூத்தின் விசுவாசம் பிரகாசமாய் ஜொலிக்கிறது. ரூத்தின் கதையைப் படித்தால், எப்பேர்ப்பட்ட கொடிய காலங்களிலும் கடவுள் தம் மக்கள் மீது எப்போதும் அக்கறையாக இருப்பார், தம் எல்லா நோக்கங்களையும் நிறைவேற்றுவார் என்ற உறுதி உங்களுக்கு கிடைக்கும்.