உங்கள் எதிர்காலம் எப்படியிருக்கும்?
சர்வ வல்லமையுள்ள கடவுள் கடந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் ஆகிய அனைத்தும் அறிந்த எல்லையில்லா அறிவுடையவர் என்றால், எல்லா காரியங்களும் அவர் முன்னறிந்தவாறே துல்லியமாய் நடக்கும்படி முன்னரே விதிக்கப்பட்டிருக்கின்றன அல்லவா? ஒவ்வொரு மனிதனுடைய போக்கையும் இறுதி முடிவையும் கடவுள் முன்னறிந்து ஆணையிட்டிருந்தார் என்றால், நம்முடைய வாழ்க்கைப் போக்கையும் நம்முடைய எதிர்காலத்தையும் தெரிவுசெய்யும் சுயாதீனமுள்ளவர்கள் என உண்மையிலேயே நாம் சொல்ல முடியுமா?
இக்கேள்விகள் நூற்றாண்டுகளாக விவாதிக்கப்பட்டிருக்கின்றன. இந்த வாக்குவாதம் இன்னமும் முக்கிய மதங்களைப் பிரிக்கிறது. எதிர்காலத்தை முன்னறியும் கடவுளுடைய திறமையை மனித சுயாதீனத்துடன் ஒத்திசைவிக்க முடியுமா? பதில்களுக்காக நாம் எங்கே தேட வேண்டும்?
கடவுள் தம்முடைய பிரதிநிதிப் பேச்சாளர்களாகிய தீர்க்கதரிசிகளின் மூலம் கொடுத்த எழுதப்பட்ட வார்த்தையின் வாயிலாக மனிதவர்க்கத்தினருடன் பேச்சுத்தொடர்பு கொண்டார் என்பதை உலகம் முழுவதிலுமுள்ள லட்சக்கணக்கானோர் ஒத்துக்கொள்வர். உதாரணமாக, வெளிப்படுத்துதல்கள் கடவுளிடமிருந்து வந்தவை என குர்ஆன் குறிப்பிடுகிறது: தவ்ரா (தோரா, அதாவது சட்டம், அல்லது மோசேயின் ஐந்து புத்தகங்கள்), ஜபூர் (சங்கீதங்கள்), இன்ஜீல் (சுவிசேஷம், அதாவது கிறிஸ்தவ கிரேக்க வேதாகமம், அல்லது “புதிய ஏற்பாடு”), அதோடு இஸ்ரவேல் தீர்க்கதரிசிகளுக்கு வெளிப்படுத்தப்பட்டவை.
கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தில், நாம் இவ்வாறு வாசிக்கிறோம்: “வேதவாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது.” (2 தீமோத்தேயு 3:16) தெளிவாகவே, நாம் பெறும் எந்தவொரு வழிகாட்டியோ அறிவொளியோ அடிப்படையில் கடவுளிடமிருந்தே வரவேண்டும். அப்படியானால், கடவுளுடைய பூர்வ தீர்க்கதரிசிகளின் நூல்களை ஆராய்வது ஞானமாய் இருக்குமல்லவா? நம்முடைய எதிர்காலத்தைப் பற்றி அவை என்ன சொல்கின்றன?
முன்னரே எழுதப்பட்ட எதிர்காலம்
பரிசுத்த வேதாகமத்தை வாசித்திருக்கிற எவரும், சொல்லர்த்தமாகவே அதில் நூற்றுக்கணக்கான தீர்க்கதரிசனங்கள் இருப்பதை அறிந்திருக்கிறார். பூர்வ பாபிலோனின் வீழ்ச்சி, எருசலேமை மறுபடியும் கட்டுதல் (பொ.ச.மு. ஆறாம் நூற்றாண்டிலிருந்து ஐந்தாம் நூற்றாண்டு வரை), பூர்வ மேதிய-பெர்சிய, கிரேக்க ராஜாக்களுடைய எழுச்சியும் வீழ்ச்சியும் ஆகிய அனைத்தும் துல்லியமாய் முன்னறிவிக்கப்பட்டன. (ஏசாயா 13:17-19; 44:24–45:1; தானியேல் 8:1-7, 20-22) இத்தகைய தீர்க்கதரிசனங்களின் நிறைவேற்றம், பரிசுத்த வேதாகமம் உண்மையில் கடவுளுடைய வார்த்தை என்பதற்கு மிகப் பலமான அத்தாட்சிகளில் ஒன்றாகும்; ஏனெனில் எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பதை முன்னறிந்து தீர்மானிக்கும் வல்லமை கடவுளுக்கு மாத்திரமே இருக்கிறது. இந்தக் கருத்தில், பரிசுத்த வேதாகமம் உண்மையில் முன்னரே எழுதப்பட்ட எதிர்காலத்தை பதிவுசெய்கிறது.
கடவுள்தாமே அறிவிக்கிறார்: “நானே தேவன், வேறொருவரும் இல்லை; நானே தேவன், எனக்குச் சமானமில்லை. அந்தத்திலுள்ளவைகளை ஆதிமுதற்கொண்டும், இன்னும் செய்யப்படாதவைகளைப் பூர்வகாலமுதற்கொண்டும் அறிவிக்கிறேன்; என் ஆலோசனை நிலைநிற்கும், எனக்குச் சித்தமானவைகளையெல்லாம் செய்வேன் . . . ; அதைச் சொன்னேன், அதை நிறைவேற்றுவேன்; அதைத் திட்டம்பண்ணினேன், அதைச் செய்து முடிப்பேன்.” (ஏசாயா 46:9-11; 55:10, 11) பூர்வ தீர்க்கதரிசிகளுக்கு கடவுள் தம்மை அடையாளப்படுத்தி காண்பித்த அந்தப் பெயரே யெகோவா; அது சொல்லர்த்தமாக, “ஆகும்படி செய்கிறவர்” என பொருள்படுகிறது. a (ஆதியாகமம் 12:7, 8; யாத்திராகமம் 3:13-15, NW; சங்கீதம் 83:17) தம்முடைய வார்த்தையை நிறைவேற்றுகிறவராய் ஆகிறவர், தம்முடைய நோக்கங்களை எப்பொழுதும் நிறைவேறச் செய்கிறவர் என கடவுள் தம்மைப் பற்றி வெளிப்படுத்துகிறார்.
இவ்விதமாய், கடவுள் தம்முடைய நோக்கங்களை நிறைவேற்றுவதில் முன்னறியும் வல்லமையை பயன்படுத்துகிறார். வரப்போகும் நியாயத்தீர்ப்பைக் குறித்து பொல்லாதவர்களை எச்சரிப்பதற்கும் தம்முடைய ஊழியர்களுக்கு இரட்சிப்பிற்கான நம்பிக்கையைக் கொடுப்பதற்கும் அவர் இதை அடிக்கடி பயன்படுத்தியிருக்கிறார். ஆனால் கடவுள் இந்த வல்லமையை வரம்பற்ற முறையில் பயன்படுத்துகிறாரா? கடவுள் முன்னறிய தெரிவுசெய்யாமல் இருந்திருக்கிற காரியங்களைப் பற்றி பரிசுத்த வேதாகமத்தில் ஏதாவது அத்தாட்சி இருக்கிறதா?
எல்லாவற்றையும் கடவுள் முன்னறிகிறாரா?
முன்விதித்தலுக்கு ஆதரவான அனைத்து விவாதங்களும் எதன் அடிப்படையிலானது என்றால், சந்தேகத்திற்கு இடமின்றி எதிர்கால சம்பவங்களை முன்னறிந்து தீர்மானிக்கும் வல்லமை கடவுளுக்கு இருப்பதால், ஒவ்வொரு தனிநபரின் எதிர்கால செயல்கள் உட்பட, அனைத்தையும் அவர் முன்னறிந்திருக்க வேண்டும் என்ற ஊகத்தின் அடிப்படையில் ஆனது. ஆனால் இந்த ஊகம் நியாயமானதா? கடவுள் தம்முடைய பரிசுத்த வேதாகமத்தில் வெளிப்படுத்துவதோ வேறுவிதத்தில் சுட்டிக்காட்டுகிறது.
உதாரணமாக, தன்னுடைய குமாரன் ஈசாக்கை தகனபலியாக செலுத்த கட்டளையிடுவதன் மூலம், “தேவன் ஆபிரகாமைச் சோதித்தார்” என வேதாகமம் சொல்கிறது. ஈசாக்கை ஆபிரகாம் பலிசெலுத்தவிருந்த தருணத்தில், கடவுள் அவரை தடுத்துநிறுத்தி இவ்வாறு சொன்னார்: ‘நீ அவனை உன் புத்திரன் என்றும், உன் ஏகசுதன் என்றும் பாராமல் எனக்காக ஒப்புக்கொடுத்தபடியினால் நீ தேவனுக்குப் பயப்படுகிறவன் என்று இப்பொழுது அறிந்திருக்கிறேன்.’ (ஆதியாகமம் 22:1-12) தம்முடைய கட்டளைக்கு ஆபிரகாம் கீழ்ப்படிவார் என்பதை முன்னரே கடவுள் அறிந்திருந்தால், இந்தக் கூற்றை சொல்லியிருப்பாரா? இது ஓர் நேர்மையான பரீட்சையாக இருந்திருக்குமா?
மேலும், கடவுள் தாம் செய்த ஒரு காரியத்திற்காக அல்லது செய்ய நினைத்த ஒரு காரியத்திற்காக ‘மனஸ்தாபப்படுவதாய்’ தம்மைக் குறித்து அடிக்கடி பேசியிருப்பதை பூர்வ தீர்க்கதரிசிகள் அறிவிக்கின்றனர். உதாரணமாக, “நான் சவுலை ராஜாவாக்கினது எனக்கு மனஸ்தாபமாயிருக்கிறது [எபிரெயுவில் நாச்சம்]” என கடவுள் சொன்னார். (1 சாமுவேல் 15:11, 35; ஒப்பிடுக: எரேமியா 18:7-10; யோனா 3:10.) கடவுள் பரிபூரணராக இருப்பதால், இஸ்ரவேலின் முதல் அரசனாக இருக்கும்படி சவுலை தெரிந்தெடுத்ததில் அவர் ஒரு தவறை செய்துவிட்டார் என இந்த வசனங்கள் அர்த்தப்படுத்த முடியாது. மாறாக, சவுல் உண்மையற்றவனாகவும் கீழ்ப்படியாதவனாகவும் மாறியதால் கடவுள் வருந்தினார் என்பதையே சுட்டிக்காட்ட வேண்டும். சவுலுடைய செயல்களை கடவுள் முன்னறிந்திருந்தால், தம்மைப் பற்றி குறிப்பிடுகையில் இப்படிப்பட்ட பதத்தை அவர் பயன்படுத்துவது அறிவீனமாய் இருக்கும்.
மிகப் பழமையான வேதாகமத்திலும் இதே போன்ற பதம் காணப்படுகிறது; நோவாவின் நாட்களைப் பற்றி குறிப்பிடுகையில், அது இவ்வாறு சொல்கிறது: “தாம் பூமியிலே மனுஷனை உண்டாக்கினதற்காகக் கர்த்தர் [“யெகோவா,” NW] மனஸ்தாபப்பட்டார்; அது அவர் இருதயத்துக்கு விசனமாயிருந்தது. அப்பொழுது கர்த்தர்: நான் சிருஷ்டித்த மனுஷனைப் பூமியின்மேல் வைக்காமல், . . . நிக்கிரகம்பண்ணுவேன்; நான் அவர்களை உண்டாக்கினது எனக்கு மனஸ்தாபமாயிருக்கிறது.” (ஆதியாகமம் 6:6, 7) இங்கேயும்கூட, மனிதனுடைய செயல்கள் கடவுளால் முன்விதிக்கப்படவில்லை என்பதையே மறுபடியும் இது சுட்டிக்காட்டுகிறது. கடவுள் மனஸ்தாபப்பட்டார், வேதனைப்பட்டார், புண்படுத்தவும்பட்டார்; தம்முடைய செயல்களே தவறானவையாக இருந்ததால் அல்ல, ஆனால் மனுஷனுடைய துன்மார்க்கம் பெருகியதன் நிமித்தமே. நோவாவையும் அவருடைய குடும்பத்தாரையும் தவிர, மனிதவர்க்கத்தினர் அனைவரையும் அழிக்க வேண்டியதாய் இருந்ததற்காகவே படைப்பாளர் மனஸ்தாபப்பட்டார். கடவுள் நமக்கு இவ்வாறு உறுதியளிக்கிறார்: ‘நான் துன்மார்க்கனுடைய மரணத்தை விரும்புவதில்லை.’—எசேக்கியேல் 33:11; ஒப்பிடுக: உபாகமம் 32:4, 5.
ஆகையால், ஆதாம் பாவத்திற்குள் வீழ்வதையும் அதனால் மனித குடும்பத்தின்மீது வரும் கடுந்துயரமிக்க விளைவுகளையும் கடவுள் முன்னறிந்து ஆணையிடவும்கூட செய்தாரா? இது உண்மையாக இருக்க முடியாது என்பதையே நாம் ஆராய்ந்த விஷயங்கள் காட்டுகின்றன. இன்னும் என்னவென்றால், இவையனைத்தையும் கடவுள் முன்னறிந்திருந்தார் என்றால், மனிதனை படைத்தபோது பாவத்திற்கு மூலகாரணராக ஆகியிருப்பார், மனிதனுடைய அனைத்து பொல்லாங்குக்கும் வேதனைக்கும் அவரே பொறுப்பாளியாக இருப்பார். தெளிவாகவே, கடவுள் தம்மைப் பற்றி வேதாகமத்தில் வெளிப்படுத்தியிருக்கும் காரியங்களோடு இதை ஒத்திசைவிக்க முடியாது. அவர் பொல்லாங்கை வெறுக்கிற அன்பும் நீதியுமுள்ள கடவுள்.—சங்கீதம் 33:5; நீதிமொழிகள் 15:9; 1 யோவான் 4:8.
மனிதனுடைய இரண்டு முடிவுகள்
நம்முடைய எதிர்காலம் ஏதோவொரு முறையில் முன்னரே கடவுளால் தீர்மானிக்கப்பட்டுவிட்டது என்றோ அல்லது முன்விதிக்கப்பட்டுவிட்டது என்றோ பரிசுத்த வேதாகமம் சொல்வதில்லை. மாறாக, மனிதனுக்காக சாத்தியமான இரண்டு முடிவுகளை கடவுள் முன்னறிவித்திருப்பதையே அது குறிப்பிடுகிறது. தன்னுடைய முடிவு எது என்பதை தெரிந்தெடுக்கும் சுயாதீனத்தை கடவுள் எல்லா மனிதருக்கும் தருகிறார். தீர்க்கதரிசியாகிய மோசே வெகுநாட்களுக்கு முன்பே இஸ்ரவேலரிடம் இவ்வாறு அறிவித்தார்: ‘நான் ஜீவனையும் மரணத்தையும் . . . உனக்குமுன் வைத்தேன் . . . ; ஆகையால், நீயும் உன் சந்ததியும் பிழைக்கும்படிக்கு, நீ ஜீவனைத் தெரிந்துகொண்டு, . . . உன் தேவனாகிய கர்த்தரில் அன்புகூர்ந்து, அவர் சத்தத்திற்குச் செவிகொடுத்து, அவரைப் பற்றிக்கொள்வாயாக; அவரே உனக்கு ஜீவனும் தீர்க்காயுசுமானவர்.’ (உபாகமம் 30:19, 20) கடவுளுடைய தீர்க்கதரிசியாகிய இயேசு முன்னெச்சரித்தார்: “இடுக்கமான வாசல்வழியாய் உட்பிரவேசியுங்கள்; கேட்டுக்குப் போகிற வாசல் விரிவும், வழி விசாலமுமாயிருக்கிறது; அதின் வழியாய்ப் பிரவேசிக்கிறவர்கள் அநேகர். ஜீவனுக்குப் போகிற வாசல் இடுக்கமும், வழி நெருக்கமுமாயிருக்கிறது; அதைக் கண்டுபிடிக்கிறவர்கள் சிலர்.” (மத்தேயு 7:13, 14) இரண்டு வழிகள், இரண்டு முடிவுகள். நம்முடைய எதிர்காலம் நம்முடைய சொந்த செயல்களின் பேரிலேயே சார்ந்திருக்கிறது. கடவுளுக்குக் கீழ்ப்படிவதோ ஜீவனைக் குறிக்கிறது, அவருக்குக் கீழ்ப்படியாதிருப்பதோ மரணத்தைக் குறிக்கிறது.—ரோமர் 6:23.
‘மனந்திரும்பவேண்டுமென்று எங்குமுள்ள மனுஷரெல்லாருக்கும் [தேவன்] கட்டளையிடுகிறார். [ஏனெனில்] ஒரு நாளைக் குறித்திருக்கிறார்; அதிலே அவர் தாம் நியமித்த மனுஷனைக்கொண்டு, பூலோகத்தை நீதியாய் நியாயந்தீர்ப்பார்.’ (அப்போஸ்தலர் 17:30, 31) நோவாவின் நாளிலிருந்த பெரும்பான்மையான மனிதவர்க்கத்தினர் கடவுளுக்கு கீழ்ப்படியாமலிருப்பதை தெரிவுசெய்து அழிக்கப்பட்டார்கள், அதைப் போலவே இன்றும் பெரும்பான்மையர் கடவுளுடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவதில்லை. இருந்தபோதிலும், யார் அழிக்கப்படுவார்கள், யார் இரட்சிக்கப்படுவார்கள் என்பதை கடவுள் முன்னரே தீர்மானிக்கவில்லை. உண்மையில் சொல்லப்போனால், ‘ஒருவரும் கெட்டுப்போகாமல் எல்லாரும் மனந்திரும்பவேண்டுமென்று [கடவுள்] விரும்புவதாக’ அவருடைய வார்த்தை சொல்கிறது. (2 பேதுரு 3:9) மிகவும் பொல்லாத ஆட்களும்கூட மனந்திரும்பவும் கீழ்ப்படிகிறவர்களாய் மாறவும் கடவுளுடைய தயவைப் பெற தேவையான மாற்றங்களைச் செய்யவும் முடியும்.—ஏசாயா 1:18-20; 55:6, 7; எசேக்கியேல் 33:14-16; ரோமர் 2:4-8.
கீழ்ப்படிதலுள்ளவர்களுக்கு, துன்மார்க்கம், வன்முறை, போர் ஆகிய அனைத்தும் நீக்கப்பட்ட சமாதானமான பரதீஸிய பூமியில், பசியோ வேதனையோ வியாதியோ மரணமோ இல்லாத ஓர் உலகில் நித்திய ஜீவனை தருவதாக கடவுள் வாக்குறுதி அளிக்கிறார். (சங்கீதம் 37:9-11; 46:9; ஏசாயா 2:4; 11:6-9; 25:6-8; 35:5, 6; வெளிப்படுத்துதல் 21:4) இறந்தவர்களும்கூட உயிர்த்தெழுப்பப்பட்டு கடவுளை சேவிக்கும் வாய்ப்பு கொடுக்கப்படுவர்.—தானியேல் 12:2; யோவான் 5:28, 29.
சங்கீதக்காரன் சொல்வதாவது: “நீ உத்தமனை நோக்கி, செம்மையானவனைப் பார்த்திரு; அந்த மனுஷனுடைய முடிவு சமாதானம். அக்கிரமக்காரர் ஏகமாய் அழிக்கப்படுவார்கள்; அறுப்புண்டுபோவதே துன்மார்க்கரின் முடிவு.” (சங்கீதம் 37:37, 38) உங்களுடைய எதிர்காலம் எப்படியிருக்கும்? அனைத்தும் உங்கள் கையில். மகிழ்ச்சியும் சமாதானமுமுள்ள எதிர்காலத்தை உங்களுக்கு நிச்சயப்படுத்திக்கொள்ள உதவும் பொருட்டு, இந்தப் பத்திரிகையைப் பிரசுரிப்போர் கூடுதலான தகவலை வழங்க சந்தோஷமுள்ளவர்களாய் இருப்பார்கள்.
[அடிக்குறிப்பு]
a பரிசுத்த வேதாகமத்தில் யெகோவா என்ற பெயர் 7,000 தடவைக்கும் மேலாக வருகிறது; காவற்கோபுரம், நவம்பர் 1, 1993, பக்கங்கள் 3-5-ல், “மிக மகத்தான பெயரின் புதிரைத் தெளிவாக்குதல்” என்ற கட்டுரையைக் காண்க.
[பக்கம் 6-ன் சிறு குறிப்பு]
கடவுள் தம் நோக்கங்களை நிறைவேற்றுவதில் முன்னறியும் வல்லமையை பயன்படுத்துகிறார்
[பக்கம் 8-ன் சிறு குறிப்பு]
‘ஒருவரும் கெட்டுப்போகாமல் எல்லாரும் மனந்திரும்பவேண்டுமென்று [தேவன்] விரும்புகிறார்.’ 2 பேதுரு 3:9
[பக்கம் 7-ன் படம்]
ஆபிரகாம் தன் மகனை பலிசெலுத்த விருப்பமுள்ளவராக இருப்பார் என்பதை முன்னரே கடவுள் அறிந்திருந்தால், அது ஓர் நேர்மையான பரீட்சையாக இருந்திருக்குமா?