உங்களுக்கு நினைவிருக்கிறதா?
சமீபத்தில் வெளியான காவற்கோபுரம் பத்திரிகைகளை நீங்கள் வாசித்து மகிழ்ந்தீர்களா? பின்வரும் கேள்விகளுக்கு உங்களால் பதிலளிக்க முடியுமா என்று பாருங்கள்:
• கிறிஸ்தவ கிரேக்க வேதாகமம் “சபை” என்ற வார்த்தையை என்ன நான்கு அர்த்தங்களில் பயன்படுத்துகிறது?
அதன் முக்கிய அர்த்தம், ஆவியால் அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்களின் தொகுதி என்பதே (கிறிஸ்துவையும் இதில் உட்படுத்தி சில வசனங்கள் குறிப்பிடுகின்றன). சில சமயங்களில், “தேவனுடைய சபை” என்பது ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியில் வாழும் கிறிஸ்தவர்கள் அனைவரையும் குறிக்கிறது. மூன்றாவதாக, குறிப்பிட்ட பகுதியிலிருக்கும் அனைத்து கிறிஸ்தவர்களையும் குறிக்கிறது. நான்காவதாக, ஒரு சபையிலுள்ள கிறிஸ்தவர்களைக் குறிப்பிடவும் அது பயன்படுத்தப்படுகிறது.—4/15, பக்கங்கள் 21-3.
• கிறிஸ்தவர்கள் பரலோகத்திற்குத் தேர்ந்தெடுக்கப்படுவது எப்போது முடிவுக்கு வரும்?
இந்தக் கேள்விக்குத் திட்டவட்டமான பதிலை பைபிள் கொடுப்பதில்லை. அந்த அழைப்பு பொ.ச. 33-ல் தொடங்கி நவீன காலங்கள் வரையாக தொடர்ந்தது. 1935-க்குப் பிறகு, திரள் கூட்டத்தினரைக் கூட்டிச்சேர்ப்பதே சீஷராக்கும் வேலையின் முக்கிய நோக்கமாக ஆனது. 1935-க்குப் பிறகு முழுக்காட்டுதல் பெற்ற சிலர் பரலோகத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதாக பரிசுத்த ஆவி அவர்களுக்குச் சாட்சிகொடுத்திருக்கிறது. எனவே, கிறிஸ்தவர்கள் பரலோகத்திற்குத் தேர்ந்தெடுக்கப்படுவது எப்போது முடிவடையும் என்று நம்மால் திட்டவட்டமாகச் சொல்ல முடியாது. உண்மையாகவே அபிஷேகம் செய்யப்பட்டவர்கள், தங்கள் தோழர்களான வேறே ஆடுகளைவிட அதிகமாக பரிசுத்த ஆவியைப் பெற்றிருப்பதில்லை; தங்களுக்கு மற்றவர்கள் சேவை செய்ய வேண்டுமென்று அவர்கள் எதிர்பார்ப்பதுமில்லை. எந்த நம்பிக்கை உடையவர்களாக இருந்தாலும் சரி, கிறிஸ்தவர்கள் உண்மையுள்ளவர்களாய் இருந்து, கடவுளுடைய சித்தத்தைத் தொடர்ந்து செய்ய வேண்டும்.—5/1, பக்கங்கள் 30-1.
• யெப்தா பொருத்தனை செய்தபோது தன்னுடைய மகளை கடவுளுக்குச் சர்வாங்க தகனபலியாகச் செலுத்த தயாராய் இருந்தாரா?
இல்லை. தான் சந்திக்கிறவரை யெகோவாவின் சேவைக்கு முழுமையாக அர்ப்பணிப்பதையே யெப்தா அர்த்தப்படுத்தினார். இவ்வாறு செய்வதற்கு நியாயப்பிரமாணத்தில் ஓர் ஏற்பாடு இருந்தது. (1 சாமுவேல் 2:22) அந்தப் பொருத்தனையை நிறைவேற்ற யெப்தாவின் மகள் ஆசரிப்பு கூடாரத்தில் சேவை செய்து வந்தாள். அவள் திருமணம் செய்துகொள்ளவே முடியாது என்பதால் அவளுடைய தியாகம் மிகப் பெரியதாய் இருந்தது.—5/15, பக்கங்கள் 9-10.
• கிறிஸ்தவத்தின் ஆரம்ப காலத்தில் கோடெக்ஸ் என்ன பங்கு வகித்தது?
கிட்டத்தட்ட பொ.ச. முதல் நூற்றாண்டின் முடிவுவரையிலாவது கிறிஸ்தவர்கள் முக்கியமாக சுருளையே பயன்படுத்தியதாகத் தெரிகிறது. அதற்கடுத்த நூற்றாண்டில், கோடெக்ஸ்களை ஆதரித்தவர்களுக்கும் சுருளை ஆதரித்தவர்களுக்குமிடையே மோதல் ஏற்பட்டது. கோடெக்ஸ்களைக் கிறிஸ்தவர்கள் பயன்படுத்தியதன் காரணமாகவே பெரும்பாலோர் பயன்படுத்த ஆரம்பித்தார்கள் என வல்லுநர்கள் ஒப்புக்கொள்கிறார்கள்.—6/1, பக்கங்கள் 14-15.
• கேசேர் நாட்காட்டி என்பது என்ன?
அது ஒரு சிறிய சுண்ணாம்புக்கல் பலகையாகும். 1908-ஆம் வருடத்தில் கேசேர் நகர் அமைந்திருந்த பகுதியில் இது கண்டுபிடிக்கப்பட்டது. பள்ளி மாணவன் ஒருவன் எழுதிய வீட்டுப்பாடமாக அது இருக்கலாமென அநேகர் கருதுகிறார்கள். அந்தப் பலகை வேளாண்மை வருடத்தை அல்லது வேளாண்மை சுழற்சியை எளிய முறையில் சித்தரிக்கிறது. செப்டம்பர்/அக்டோபருக்கு இணையான மாதத்தில் அறுவடை செய்வதில் துவங்கி, அங்கு உற்பத்தியாகும் பல்வேறு பயிர்களையும் விவசாயப் பணிகளையும்பற்றி குறிப்பிடுகிறது.—6/15, பக்கம் 8.
• பரிசுத்த ஆவிக்கு விரோதமாக பாவம் செய்வதென்றால் என்ன?
யெகோவாவுடைய பரிசுத்த ஆவிக்கு விரோதமாக பாவம் செய்ய சாத்தியம் உள்ளது. அந்தப் பாவம் மன்னிக்கப்படாது. (மத்தேயு 12:31) யெகோவாவே நாம் மன்னிக்க முடியாத பாவத்தைச் செய்திருக்கிறோமா இல்லையா என்பதைத் தீர்மானிப்பவர்; அப்படிச் செய்திருந்தால் தமது ஆவியை நம்மிடமிருந்து அவர் நீக்கியும் விடுவார். (சங்கீதம் 51:11) நாம் செய்த பாவத்தைக் குறித்து உள்ளப்பூர்வமாக மனம்வருந்தினால், பெரும்பாலும் நாம் உண்மையிலேயே மனந்திரும்பியிருக்கிறோம் என்பதை அது காண்பிக்கலாம்; எனவே, ஆவிக்கு விரோதமாக பாவம் செய்யவில்லை என்பதை அது காட்டும்.—7/15, பக்கங்கள் 16-17.
• தாவீதை ஏற்கெனவே அறிந்திருந்தபோதிலும், அவர் யாருடைய மகன் என்று சவுல் ஏன் கேட்டார்? (1 சாமுவேல் 16:22; 17:58)
தாவீதினுடைய அப்பாவின் பெயரை மட்டும் தெரிந்துகொள்வதில் சவுல் ஆர்வம் காட்டவில்லை. சற்று முன்பு கோலியாத்தை வீழ்த்திய தாவீதின் அசைக்க முடியாத விசுவாசத்தையும் அசாத்திய தைரியத்தையும் அவர் பார்த்தார். எனவே, இந்த வாலிபனை வளர்த்து ஆளாக்கியவர் எப்பேர்ப்பட்டவராக இருப்பார் என்பதைத் தெரிந்துகொள்ள ஆசைப்பட்டார். ஒருவேளை, தாவீதின் அப்பாவான ஈசாயையோ அவருடைய குடும்பத்தாரையோ தன்னுடைய படையில் சேர்த்துக்கொள்வதைப்பற்றி சவுல் யோசித்திருக்கலாம்.—8/1, பக்கம் 31.