“நீ ஏதாவது நேர்ந்துகொண்டால், அதை நிறைவேற்று”
“யெகோவாவிடம் நேர்ந்துகொண்டதை நீ செலுத்த வேண்டும்.”—மத். 5:33.
1. (அ) யெப்தாவுக்கும் அன்னாளுக்கும் என்ன ஒற்றுமை இருந்தது? (ஆரம்பப் படங்கள்) (ஆ) என்னென்ன கேள்விகளுக்கான பதில்களை இந்தக் கட்டுரையில் பார்க்கப் போகிறோம்?
யெப்தா தைரியமான ஒரு தலைவர், திடமான ஒரு போர் வீரர். அன்னாள் தன்னுடைய கணவனையும் குடும்பத்தையும் கவனித்துக்கொள்ளும் மனத்தாழ்மையுள்ள ஒரு பெண், கீழ்ப்படிதலுள்ள ஒரு மனைவி. இவர்கள் 2 பேரும் யெகோவாவை வழிபட்டதோடு இவர்களுக்குள் இன்னொரு ஒற்றுமையும் இருந்தது. அது என்ன? இவர்கள் 2 பேரும் யெகோவாவிடம் நேர்ந்துகொண்டார்கள்; அதை உண்மையோடு நிறைவேற்றினார்கள். இன்று யெகோவாவுக்கு நேர்ந்துகொள்ளும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இவர்கள் அருமையான முன்மாதிரி! நேர்ந்துகொள்வது என்றால் என்ன? கடவுளிடம் நேர்ந்துகொள்வது எந்தளவு முக்கியமானது? யெப்தாவிடமிருந்தும் அன்னாளிடமிருந்தும் நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்? இந்த 3 கேள்விகளுக்கான பதில்களை இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.
2, 3. (அ) நேர்ந்துகொள்வது என்றால் என்ன? (ஆ) நேர்ந்துகொள்வதைப் பற்றி பைபிள் வசனங்கள் என்ன சொல்கின்றன?
2 பைபிளின்படி, நேர்ந்துகொள்வது என்பது கடவுளிடம் சத்தியம் செய்வதை அர்த்தப்படுத்துகிறது. உதாரணத்துக்கு, ஏதோவொரு செயலைச் செய்வதாக, ஏதோவொரு பரிசைத் தருவதாக, ஏதோவொரு சேவையைச் செய்வதாக அல்லது குறிப்பிட்ட சில விஷயங்களைத் தவிர்ப்பதாக ஒருவர் யெகோவாவிடம் சத்தியம் செய்யலாம். கடவுளிடம் நேர்ந்துகொள்ளும் ஒருவர் சொந்தமாகத் தீர்மானிக்கும் உரிமையைப் பயன்படுத்தி தானாகவே விருப்பப்பட்டு நேர்ந்துகொள்கிறார்; அவரை யாரும் கட்டாயப்படுத்துவதில்லை. அவர் அப்படி நேர்ந்துகொள்வதை யெகோவா முக்கியமானதாக நினைக்கிறார். நேர்ந்துகொண்டதை அவர் மதிக்க வேண்டும் என்றும், அதை நிறைவேற்ற வேண்டும் என்றும் யெகோவா எதிர்பார்க்கிறார். பைபிளின்படி, உறுதிமொழி கொடுப்பது எந்தளவு முக்கியமோ அந்தளவு நேர்ந்துகொள்வதும் முக்கியம். ஒரு விஷயத்தைச் செய்வதாகவோ செய்யாமல் இருப்பதாகவோ ஒருவர் சத்தியம் செய்வதைத்தான் உறுதிமொழி என்று பைபிள் சொல்கிறது. (ஆதி. 14:22, 23; எபி. 6:16, 17) கடவுளிடம் நேர்ந்துகொள்வதன் முக்கியத்துவத்தைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது?
3 மோசேயின் திருச்சட்டத்தின்படி, ஒருவர் யெகோவாவிடம் நேர்ந்துகொண்டால், “அதை மீறக் கூடாது. தான் நேர்ந்துகொண்ட எல்லாவற்றையும் நிறைவேற்ற வேண்டும்.” (எண். 30:2) பிறகு சாலொமோன் இப்படி எழுதினார்: “நீ கடவுளிடம் எதையாவது நேர்ந்துகொண்டால், அதை நிறைவேற்றத் தாமதிக்காதே. ஏனென்றால், நேர்ந்துகொண்டதை நிறைவேற்றாத முட்டாள்களைக் கடவுளுக்குப் பிடிக்காது. நீ ஏதாவது நேர்ந்துகொண்டால், அதை நிறைவேற்று.” (பிர. 5:4) கடவுளிடம் நேர்ந்துகொள்வதன் முக்கியத்துவத்தைப் பற்றி இயேசுவும் இப்படிச் சொன்னார்: “‘நீ சத்தியம் செய்தால் அதை நிறைவேற்றாமல் இருக்கக் கூடாது; யெகோவாவிடம் நேர்ந்துகொண்டதை நீ செலுத்த வேண்டும்’ என்று அந்தக் காலத்து மக்களுக்குச் சொல்லப்பட்டதை நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்கள்.”—மத். 5:33.
4. (அ) கடவுளிடம் நேர்ந்துகொள்வது எந்தளவு முக்கியமானது? (ஆ) யெப்தாவிடமிருந்தும் அன்னாளிடமிருந்தும் நாம் என்ன கற்றுக்கொள்ளப் போகிறோம்?
4 நாம் யெகோவாவிடம் என்ன சத்தியம் செய்தாலும் அதை மிக முக்கியமானதாக நினைக்க வேண்டும். நேர்ந்துகொண்டதை நாம் எந்தளவு முக்கியமானதாக நினைக்கிறோம் என்பதற்கும், யெகோவாவோடு நமக்கு இருக்கிற பந்தத்துக்கும் நெருங்கிய சம்பந்தம் இருக்கிறது. இதைப் பற்றி தாவீது இப்படி எழுதினார்: “யெகோவாவின் மலைக்கு யார் ஏறிப்போக முடியும்? அவருடைய பரிசுத்த இடத்தில் யார் நிற்க முடியும்? . . . என்மேல் [யெகோவாமேல்] பொய் சத்தியம் செய்யாமலும், போலியாக உறுதிமொழி எடுக்காமலும் இருக்கிறவன்தான்.” (சங். 24:3, 4) யெப்தாவும் அன்னாளும் என்ன நேர்ந்துகொண்டார்கள்? நேர்ந்துகொண்டதை நிறைவேற்றுவது அவர்களுக்குச் சுலபமாக இருந்ததா?
நேர்ந்துகொண்டதை அவர்கள் நிறைவேற்றினார்கள்
5. யெப்தா யெகோவாவிடம் என்ன நேர்ந்துகொண்டார்? பிறகு என்ன நடந்தது?
5 கடவுளுடைய மக்களின் எதிரிகளான அம்மோனியர்களோடு போர் செய்யப் போனபோது, யெப்தா யெகோவாவிடம் ஒரு சத்தியம் செய்தார். (நியா. 10:7-9) அந்தப் போரில் தனக்கு வெற்றி தரும்படி யெகோவாவிடம் மிகவும் கெஞ்சினார். “அம்மோனியர்களை நீங்கள் என் கையில் கொடுத்தால், யெகோவாவே, நான் வெற்றியோடு திரும்பும்போது என் வீட்டு வாசலிலிருந்து என்னைச் சந்திக்க யார் முதலில் வருகிறாரோ அவரை உங்களுக்கு அர்ப்பணிப்பேன்” என்று யெகோவாவிடம் நேர்ந்துகொண்டார். யெப்தாவின் ஜெபத்துக்கு யெகோவா பதில் கொடுத்தார், போரில் வெற்றி பெற உதவினார். போர் முடிந்து யெப்தா வீடு திரும்பியபோது, அவருடைய அன்பு மகள் அவரை வரவேற்க வெளியே வந்தாள். யெப்தா அவளைத்தான் யெகோவாவுக்கு அர்ப்பணிக்க வேண்டும்! (நியா. 11:30-34) இப்போது யெப்தாவின் மகள் என்ன செய்ய வேண்டும்?
6. (அ) கடவுளிடம் நேர்ந்துகொண்டதை நிறைவேற்றுவது யெப்தாவுக்கும் அவருடைய மகளுக்கும் ஏன் அவ்வளவு சுலபமாக இருக்கவில்லை? (ஆ) நேர்ந்துகொள்வதைப் பற்றி உபாகமம் 23:21, 23-லிருந்தும் சங்கீதம் 15:4-லிருந்தும் நீங்கள் என்ன கற்றுக்கொள்கிறீர்கள்?
6 தன் அப்பா நேர்ந்துகொண்டதை நிறைவேற்ற வேண்டுமென்றால், யெப்தாவின் மகள் வழிபாட்டுக் கூடாரத்தில் யெகோவாவுக்கு முழுநேர சேவை செய்ய வேண்டும். யெப்தா யோசிக்காமல் இப்படி நேர்ந்துகொண்டாரா? இல்லை! சொல்லப்போனால், தன்னை வரவேற்கப்போகிற முதல் ஆள் தன்னுடைய மகளாகக்கூட இருக்கலாம் என்பது யெப்தாவுக்குத் தெரிந்திருக்கலாம். இருந்தாலும், நேர்ந்துகொண்டதை நிறைவேற்றுவது அவருக்கும் அவருடைய மகளுக்கும் அவ்வளவு சுலபமாக இருக்கவில்லை; அவர்கள் 2 பேருமே பெரிய தியாகம் செய்ய வேண்டியிருந்தது. யெப்தா அவளைப் பார்த்தவுடன் “தன்னுடைய உடையைக் கிழித்துக்கொண்டு,” தன்னுடைய இதயம் நொறுங்கிவிட்டதாகச் சொன்னார். யெப்தாவின் மகள், தான் ‘கன்னியாகவே இருக்கப்போவதை நினைத்து அழுதாள்.’ ஏன்? யெப்தாவுக்கு மகன்களே இல்லை, அவருக்கு இருந்த ஒரே மகளாலும் கல்யாணம் செய்துகொள்ளவோ குழந்தைகளைப் பெற்றெடுக்கவோ முடியாது. யெப்தாவின் வம்சம் இதோடு முடிந்துவிடும்! ஆனால், யெப்தாவுக்கும் அவருடைய மகளுக்கும் இது அவ்வளவு முக்கியமானதாக இருக்கவில்லை. “நான் வாய் திறந்து யெகோவாவிடம் சொல்லிவிட்டேன், அதை என்னால் மாற்ற முடியாதே” என்று யெப்தா சொன்னார். “அவருக்கு வாக்குக் கொடுத்தபடியே எனக்குச் செய்துவிடுங்கள்” என்று அவருடைய மகளும் சொன்னாள். (நியா. 11:35-39) யெப்தாவும் அவருடைய மகளும் உண்மையுள்ளவர்களாக இருந்தார்கள். கடவுளிடம் நேர்ந்துகொண்டதை நிறைவேற்றுவது அவர்களுக்கு ரொம்ப கஷ்டமாக இருந்தாலும் அதை நிறைவேற்றாமல் போவதைப் பற்றி அவர்களால் நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை.—உபாகமம் 23:21, 23-ஐயும், சங்கீதம் 15:4-ஐயும் வாசியுங்கள்.
7. (அ) அன்னாள் என்ன நேர்ந்துகொண்டாள், ஏன்? பிறகு என்ன நடந்தது? (ஆ) அன்னாள் நேர்ந்துகொண்டதால் சாமுவேல் என்ன செய்ய வேண்டியிருந்தது? (அடிக்குறிப்பைப் பாருங்கள்.)
7 யெகோவாவிடம் நேர்ந்துகொண்டதை நிறைவேற்றிய இன்னொரு நபர் அன்னாள். தனக்குக் குழந்தை இல்லாததாலும், குத்தலான பேச்சைக் கேட்டுக்கொண்டிருந்ததாலும் அன்னாள் ரொம்பவே மனமுடைந்துபோயிருந்தாள். இப்படிப்பட்ட ஒரு கஷ்ட காலத்தில்தான் அவள் யெகோவாவிடம் நேர்ந்துகொண்டாள். (1 சா. 1:4-7, 10, 16) தன்னுடைய உணர்ச்சிகளை யெகோவாவிடம் கொட்டினாள். “பரலோகப் படைகளின் யெகோவாவே, உங்களுடைய அடிமைப்பெண் படுகிற வேதனையைப் பாருங்கள். இந்த அடிமைப்பெண்ணை மறக்காமல் நினைத்துப் பார்த்து ஒரு ஆண்குழந்தையைக் கொடுங்கள். யெகோவாவே, அவனை வாழ்நாள் முழுக்க உங்களுக்கே அர்ப்பணித்துவிடுகிறேன். அவனுடைய தலைமுடியை நாங்கள் வெட்டவே மாட்டோம்” என்று யெகோவாவிடம் சத்தியம் செய்தாள்.a (அடிக்குறிப்பைப் பாருங்கள்.) (1 சா. 1:11) அன்னாளின் ஜெபத்தை யெகோவா கேட்டார். அடுத்த வருஷமே அவளுக்கு ஒரு ஆண்குழந்தை பிறந்தது. அப்போது அவளுக்கு எவ்வளவு சந்தோஷமாக இருந்திருக்கும்! ஆனால், கடவுளிடம் தான் நேர்ந்துகொண்டதை அவள் மறக்கவில்லை. தனக்கு ஒரு மகன் பிறந்தவுடன், “இவனை யெகோவாவிடம் கேட்டுப் பெற்றேன்” என்று சொன்னாள்.—1 சா. 1:20.
8. (அ) நேர்ந்துகொண்டதை நிறைவேற்றுவது அன்னாளுக்குச் சுலபமாக இருந்ததா? (ஆ) அன்னாளுடைய நல்ல முன்மாதிரியைப் பற்றி 61-ஆம் சங்கீதம் உங்களுக்கு எதை ஞாபகப்படுத்துகிறது?
8 சாமுவேலுக்கு சுமார் 3 வயது இருந்தபோது, யெகோவாவிடம் நேர்ந்துகொண்டபடியே அன்னாள் செய்தாள். சீலோவிலுள்ள யெகோவாவின் சன்னிதியில் இருந்த தலைமைக் குருவான ஏலியிடம் சாமுவேலைக் கூட்டிக்கொண்டு போனாள். “இந்தப் பிள்ளைக்காகத்தான் நான் ஜெபம் செய்தேன். யெகோவா நான் கேட்டதைக் கொடுத்துவிட்டார். இப்போது நான் இவனை யெகோவாவுக்கே திரும்பக் கொடுக்கிறேன். வாழ்நாளெல்லாம் யெகோவாவுக்குச் சேவை செய்ய இவனை அர்ப்பணிக்கிறேன்” என்று ஏலியிடம் சொன்னாள். (1 சா. 1:24-28) அன்றுமுதல், “சிறுவன் சாமுவேல் யெகோவாவின் முன்னிலையில் வளர்ந்துவந்தான்” என்று பைபிள் சொல்கிறது. (1 சா. 2:21) நேர்ந்துகொண்டதை நிறைவேற்றுவது அன்னாளுக்குச் சுலபமாக இருந்திருக்காது. ஏனென்றால், தினமும் தன்னுடைய பாச மகனிடம் அவளால் நேரம் செலவு செய்ய முடியாது. அவன் வளர்வதைப் பார்க்கும் வாய்ப்பும் அவளுக்குக் கிடைக்காது. இருந்தாலும், யெகோவாவிடம் நேர்ந்துகொண்டதை அன்னாள் முக்கியமானதாக நினைத்தாள். அதை நிறைவேற்றுவதற்காக, தனக்கு முக்கியமாக இருந்த விஷயங்களைத் தியாகம் செய்ய அவள் தயாராக இருந்தாள்.—1 சா. 2:1, 2; சங்கீதம் 61:1, 5, 8-ஐ வாசியுங்கள்.
9. என்னென்ன கேள்விகளுக்கான பதில்களை இப்போது பார்க்கப் போகிறோம்?
9 யெகோவாவிடம் நேர்ந்துகொள்வது எந்தளவு முக்கியமானது என்பதை இப்போது நன்றாகப் புரிந்துகொள்ள முடிகிறது, இல்லையா? இப்போது இந்தக் கேள்விகளுக்கான பதில்களைப் பார்க்கலாம்: நாம் என்னென்ன விஷயங்களுக்காக நேர்ந்துகொள்ளலாம்? நேர்ந்துகொண்டதை நிறைவேற்றுவதில் நாம் எந்தளவு உறுதியாக இருக்க வேண்டும்?
அர்ப்பண உறுதிமொழி
10. ஒரு கிறிஸ்தவர் நேர்ந்துகொள்கிற விஷயங்களில் எது மிக முக்கியமானது? அது எதை உட்படுத்துகிறது?
10 ஒரு கிறிஸ்தவர் எடுக்கும் மிக முக்கியமான உறுதிமொழிகளில் முதலாவதாக வருவது, அவருடைய அர்ப்பண உறுதிமொழி! ஏனென்றால், வாழ்க்கையில் என்ன நடந்தாலும் சரி, வாழ்நாள் முழுவதும் கடவுளுக்குச் சேவை செய்வதாக ஒரு கிறிஸ்தவர் தன்னுடைய ஜெபத்தில் கடவுளிடம் சத்தியம் செய்கிறார். நாம் நம்மையே ‘துறக்கிறோம்’ என்று இயேசு சொன்னார். அதாவது, நமக்கு முதலிடம் கொடுப்பதற்குப் பதிலாக யெகோவாவுக்கே நாம் முதலிடம் கொடுப்பதாக சத்தியம் செய்கிறோம் என்று இயேசு சொன்னார். (மத். 16:24) அப்படிச் சத்தியம் செய்யும் நாளிலிருந்து, நாம் “யெகோவாவுக்கு சொந்தமானவர்களாக இருக்கிறோம்.” (ரோ. 14:8) நம்முடைய அர்ப்பணிப்பை நாம் மிக முக்கியமானதாக நினைக்கிறோம். சங்கீதக்காரனைப் போலவே நாமும் இப்படி உணருகிறோம்: “யெகோவா எனக்குச் செய்திருக்கிற எல்லா நன்மைகளுக்காகவும் நான் அவருக்கு என்ன கைமாறு செய்வேன்? யெகோவாவிடம் நேர்ந்துகொண்டதையெல்லாம் அவருடைய மக்கள் எல்லாருக்கும் முன்பாக நிறைவேற்றுவேன்.”—சங். 116:12, 14.
11. நீங்கள் ஞானஸ்நானம் எடுத்த அந்த நாளில் என்ன நடந்தது?
11 உங்கள் வாழ்க்கையை யெகோவாவுக்கு அர்ப்பணித்து, அதன் அடையாளமாக தண்ணீரில் ஞானஸ்நானம் எடுத்திருக்கிறீர்களா? அப்படி எடுத்திருந்தால், உங்களைப் பாராட்டுகிறோம்! ஞானஸ்நான பேச்சு கொடுத்த சகோதரர், நீங்கள் உங்களை யெகோவாவுக்கு அர்ப்பணித்திருக்கிறீர்களா என்றும், “உங்கள் அர்ப்பணிப்பும் ஞானஸ்நானமும் யெகோவாவின் சாட்சிகளில் ஒருவராக உங்களை அடையாளம் காட்டும் என்பதைப் புரிந்திருக்கிறீர்களா” என்றும் கேட்டது உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா? அந்தக் கேள்விகளுக்கு ‘ஆம்’ என்று நீங்கள் பதில் சொன்னபோது, உங்கள் வாழ்க்கையை நீங்கள் யெகோவாவுக்கு அர்ப்பணித்திருக்கிறீர்கள் என்றும், யெகோவாவின் நியமிக்கப்பட்ட ஊழியராக ஞானஸ்நானம் எடுப்பதற்கு நீங்கள் தகுதி பெற்றிருக்கிறீர்கள் என்றும் அங்கே இருக்கிற எல்லாருக்கும் தெரிந்திருக்கும். யெகோவாவும் உங்களைப் பார்த்து சந்தோஷப்பட்டிருப்பார்!
12. (அ) என்னென்ன கேள்விகளை நாம் கேட்டுக்கொள்ள வேண்டும்? (ஆ) என்னென்ன குணங்களை வளர்த்துக்கொள்ளும்படி பேதுரு நம்மை உற்சாகப்படுத்துகிறார்?
12 நீங்கள் ஞானஸ்நானம் எடுத்தபோது, யெகோவாவுக்குச் சேவை செய்ய உங்கள் வாழ்க்கையைப் பயன்படுத்தப்போவதாக யெகோவாவிடம் சத்தியம் செய்தீர்கள். அதோடு, அவருடைய தராதரங்களைப் பின்பற்ற உங்களால் முடிந்த எல்லாவற்றையும் செய்யப்போவதாகவும் சத்தியம் செய்தீர்கள். ஆனால், ஞானஸ்நானம் ஒரு ஆரம்பப்படிதான்! நாட்கள் போகப் போக நாம் நம்மையே சோதித்துப் பார்க்க வேண்டும். ஒருவேளை நாம் இந்தக் கேள்விகளைக் கேட்டுக்கொள்ளலாம்: ‘ஞானஸ்நானம் எடுத்ததிலிருந்து இன்னைக்கு வரைக்கும் எனக்கும் யெகோவாவுக்கும் இருக்குற பந்தம் தொடர்ந்து பலப்பட்டு வருதா? நான் இன்னும் யெகோவாவுக்கு முழு இதயத்தோடு சேவை செய்றேனா? (கொலோ. 3:23) நான் அடிக்கடி ஜெபம் செய்றேனா? தினமும் பைபிள் வாசிக்கிறேனா? தவறாம கூட்டங்கள்ல கலந்துக்குறேனா? முடிஞ்ச போதெல்லாம் தவறாம ஊழியம் செய்றேனா? இதுல ஏதாவது ஒண்ணுல என்னோட ஆர்வம் கொஞ்சம் குறைஞ்சிருக்கா?’ யெகோவாவுடைய சேவையில் நாம் செயலற்றவர்களாக ஆகிவிடும் ஆபத்து இருப்பதாக அப்போஸ்தலன் பேதுரு நம்மை எச்சரித்தார். விசுவாசத்திலும், அறிவிலும், சகிப்புத்தன்மையிலும், கடவுள்பக்தியிலும் வளர்வதற்கு கடினமாக முயற்சி செய்தால் நாம் செயலற்றவர்களாக ஆகிவிட மாட்டோம்.—2 பேதுரு 1:5-8-ஐ வாசியுங்கள்.
13. யெகோவாவுக்கு அர்ப்பணித்து ஞானஸ்நானம் எடுத்த ஒரு கிறிஸ்தவர் எதை உணர்ந்திருக்க வேண்டும்?
13 யெகோவாவுக்குச் சேவை செய்வதாக நேர்ந்துகொண்ட பிறகு, நாம் அதிலிருந்து பின்வாங்க முடியாது. யெகோவாவுக்குச் சேவை செய்ய அல்லது ஒரு கிறிஸ்தவராக வாழ விரும்பாத ஒருவர், யெகோவாவுக்குத் தன்னை அர்ப்பணிக்கவில்லை என்றும் தன்னுடைய ஞானஸ்நானம் செல்லாது என்றும் சொல்ல முடியாது.b (அடிக்குறிப்பைப் பாருங்கள்.) யெகோவாவுக்கு அர்ப்பணித்த ஒருவர் மோசமான பாவத்தைச் செய்யும்போது, அவர் யெகோவாவுக்கும் சபைக்கும் கணக்குக் கொடுக்க வேண்டும். (ரோ. 14:12) “ஆரம்பத்தில் இருந்த அன்பை நீ விட்டுவிட்டாய்” என்று இயேசு நம்மிடம் சொல்லுமளவுக்கு நாம் நடந்துகொள்ளக் கூடாது. அதற்குப் பதிலாக, “உன் செயல்களையும் உன் அன்பையும் உன் விசுவாசத்தையும் உன் ஊழியத்தையும் உன் சகிப்புத்தன்மையையும் அறிந்திருக்கிறேன். ஆரம்பத்தில் செய்ததைவிட இப்போது நீ அதிகமான செயல்களைச் செய்கிறாய் என்பதையும் அறிந்திருக்கிறேன்” என்று சொல்லும்படி நாம் நடந்துகொள்ள வேண்டும். (வெளி. 2:4, 19) நம்முடைய அர்ப்பணிப்புக்கு ஏற்றபடி வாழ நாம் கடினமாக முயற்சி செய்ய வேண்டும். அதைப் பார்க்கும்போது, யெகோவா உண்மையிலேயே சந்தோஷப்படுவார்.
திருமண உறுதிமொழி
14. ஒருவர் தன்னுடைய வாழ்க்கையில் நேர்ந்துகொள்ளும் மிக முக்கியமான இரண்டாவது விஷயம் என்ன, ஏன்?
14 ஒரு நபர் எடுக்கும் மிக முக்கியமான உறுதிமொழிகளில் இரண்டாவதாக வருவது, அவருடைய திருமண உறுதிமொழி! ஏனென்றால், திருமணம் என்பது ஒரு புனிதமான ஏற்பாடு. திருமண உறுதிமொழியை யெகோவா மிக முக்கியமானதாக நினைக்கிறார். மணமகளும் மணமகனும், யெகோவாவுக்கு முன்பாகவும் திருமணத்துக்கு வந்திருக்கும் எல்லாருக்கும் முன்பாகவும் உறுதிமொழி எடுக்கிறார்கள். அவர்கள் இருவரும் தேவனுடைய விவாக ஏற்பாட்டுக்கு இணங்க, பூமியில் வாழும் காலமெல்லாம் நேசித்தும், அருமையானவராக ஆதரித்தும், ஆழ்ந்த மரியாதை காண்பித்தும் வர ஒப்புக்கொள்வதாக உறுதிமொழி எடுக்கிறார்கள். மற்றவர்கள் இதே வார்த்தைகளைப் பயன்படுத்தவில்லை என்றாலும் அவர்களும் கடவுளுக்கு முன்பாக உறுதிமொழி எடுக்கிறார்கள். இதன் மூலம் மணமகனும் மணமகளும் கணவன் மனைவியாக ஆகிறார்கள். திருமணம் என்பது காலமெல்லாம் நீடிக்க வேண்டிய ஒரு பந்தம்! (ஆதி. 2:24; 1 கொ. 7:39) “கடவுள் இணைத்து வைத்ததை எந்த மனிதனும் பிரிக்காமல் இருக்கட்டும்” என்று இயேசு சொன்னார். திருமண வாழ்க்கையில் பிரச்சினைகள் வந்தால் விவாகரத்து செய்துகொள்ளலாம் என்று திருமணம் செய்துகொள்ளப்போகும் ஒரு ஆணும் பெண்ணும் நினைக்கக் கூடாது.—மாற். 10:9.
15. திருமணத்தைப் பற்றி இந்த உலகத்தில் இருப்பவர்கள் நினைப்பது போல் கிறிஸ்தவர்கள் ஏன் நினைக்கக் கூடாது?
15 பரிபூரணமான மனிதர்கள் என்று யாரும் இல்லாதது போல பரிபூரணமான திருமணம் என்றும் எதுவும் இல்லை. அதனால்தான், திருமணமான எல்லாருக்கும் சில சமயங்களில் “உபத்திரவங்கள் வரும்” என்று பைபிள் சொல்கிறது. (1 கொ. 7:28) இந்த உலகத்தில் இருக்கும் நிறைய பேர் இன்று திருமண பந்தத்தை மதிப்பதே கிடையாது. திருமண பந்தத்தில் விரிசல் ஏற்படும்போது, அந்தப் பந்தத்தை முறித்துக்கொள்ளலாம் என்று அவர்கள் நினைக்கிறார்கள். ஆனால், கிறிஸ்தவத் தம்பதிகள் அப்படி நினைப்பதில்லை. கடவுளுக்கு முன்பாக தாங்கள் உறுதிமொழி எடுத்திருப்பதை அவர்கள் உணர்ந்திருக்கிறார்கள். திருமண பந்தத்தை முறித்துக்கொள்வது கடவுளிடம் பொய் சொல்வது போல் இருக்கும்; அப்படிப் பொய் சொல்கிறவர்களை கடவுள் வெறுக்கிறார். (லேவி. 19:12; நீதி. 6:16-19) கிறிஸ்தவத் தம்பதிகள் அப்போஸ்தலன் பவுல் சொன்ன இந்த விஷயத்தை ஞாபகத்தில் வைக்க வேண்டும்: “ஒரு பெண்ணோடு நீங்கள் திருமண பந்தத்தில் இணைக்கப்பட்டிருக்கிறீர்களா? அப்படியானால், அந்தப் பந்தத்திலிருந்து விடுபடுவதற்கு வழிதேடாதீர்கள்.” (1 கொ. 7:27) துணையைத் திட்டம் போட்டு ஏமாற்றி விவாகரத்து செய்யும் ஒருவரை யெகோவா வெறுக்கிறார் என்பது பவுலுக்குத் தெரிந்திருந்ததால்தான் அவர் இப்படிச் சொன்னார்.—மல். 2:13-16.
16. விவாகரத்தைப் பற்றியும் பிரிந்து வாழ்வதைப் பற்றியும் பைபிள் என்ன சொல்கிறது?
16 பைபிளின்படி, எந்தக் காரணத்திற்காக மட்டுமே விவாகரத்து செய்யலாம்? துரோகம் செய்த தன்னுடைய துணையை குற்றமற்ற துணை மன்னிக்க விரும்பவில்லை என்றால் மட்டுமே, துரோகம் செய்த அந்தத் துணையை விவாகரத்து செய்ய பைபிள் அனுமதிக்கிறது. (மத். 19:9; எபி. 13:4) அப்படியென்றால், பிரிந்து வாழ்வதைப் பற்றி என்ன சொல்லலாம்? அதைப் பற்றியும் பைபிள் தெளிவாகச் சொல்கிறது. (1 கொரிந்தியர் 7:10, 11-ஐ வாசியுங்கள்.) பிரிந்து வாழ்வதற்கு பைபிளைப் பொறுத்தவரை எந்தக் காரணமும் இல்லை. ஆனாலும், சில சமயங்களில் தன்னுடைய துணையை விட்டுப் பிரிந்து வாழ்வதைத் தவிர வேறு வழியே இல்லை என்று ஒரு கிறிஸ்தவர் நினைக்கலாம். உதாரணத்துக்கு, கொடூரமானவராகவோ விசுவாச துரோகியாகவோ இருக்கிற தங்களுடைய துணை, தங்களுடைய உயிருக்கு ஆபத்து வரும் விதத்தில் நடந்துகொண்டாலோ, ஆன்மீக விஷயங்களுக்கு ஒரேயடியாக தடை போட்டாலோ, அந்தத் துணையை விட்டுப் பிரிந்து வாழ சில கிறிஸ்தவர்கள் முடிவு செய்யலாம்.c (அடிக்குறிப்பைப் பாருங்கள்.)
17. திருமண பந்தம் நிலைத்திருப்பதற்கு ஒரு கிறிஸ்தவத் தம்பதி என்ன செய்யலாம்?
17 திருமண பந்தத்தில் பிரச்சினைகளை எதிர்ப்படும் ஒரு கிறிஸ்தவத் தம்பதி மூப்பர்களிடம் ஆலோசனை கேட்கும்போது, மூப்பர்கள் என்ன செய்யலாம்? எது உண்மையான அன்பு? என்ற ஆங்கில வீடியோவை அவர்கள் பார்த்தார்களா என்று கேட்கலாம். அதோடு, மணவாழ்வில் மகிழ்ச்சி மலர... என்ற சிற்றேட்டை படித்தார்களா என்றும் கேட்கலாம். திருமண பந்தத்தைப் பலப்படுத்துவதற்குத் தேவையான பைபிள் நியமங்கள் இந்த வீடியோவிலும் சிற்றேட்டிலும் இருக்கின்றன. “இந்த சிற்றேட்ட படிச்சதுக்கு அப்புறம், நாங்க இதுவரைக்கும் இல்லாதளவுக்கு சந்தோஷமா இருக்கோம்” என்று ஒரு தம்பதி சொன்னார்கள். திருமணமாகி 22 வருஷங்களான ஒரு சகோதரி, தன்னுடைய திருமண பந்தம் முறியப்போவதாக நினைத்தார். ஆனால், அந்த வீடியோவைப் பார்த்த பிறகு அவர் இப்படிச் சொன்னார்: “நாங்க ரெண்டு பேரும் ஞானஸ்நானம் எடுத்திருந்தாலும், ஆளுக்கொரு திசையிலதான் இருந்தோம். அந்த வீடியோ சரியான சமயத்துல வந்துச்சு! கணவன் மனைவியா நாங்க ரெண்டு பேரும் இப்போ ரொம்ப சந்தோஷமா இருக்கோம்.” நீங்கள் திருமணம் ஆனவரா? அப்படியென்றால், யெகோவா கொடுத்திருக்கும் நியமங்களை உங்கள் திருமண வாழ்க்கையில் கடைப்பிடியுங்கள். அப்படிச் செய்யும்போது, உங்கள் திருமண உறுதிமொழியின்படி உங்களால் சந்தோஷமாக வாழ முடியும்.
விசேஷ முழுநேர சேவையில் எடுக்கிற உறுதிமொழி
18, 19. (அ) கிறிஸ்தவப் பெற்றோர் நிறைய பேர் என்ன செய்திருக்கிறார்கள்? (ஆ) விசேஷ முழுநேர ஊழியத்தில் இருக்கிறவர்களைப் பற்றி என்ன சொல்லலாம்?
18 யெப்தாவும், அன்னாளும் கடவுளிடம் நேர்ந்துகொண்டதைப் பற்றி நாம் ஏற்கெனவே பார்த்தோம். அவர்கள் அப்படி நேர்ந்துகொண்டதால், யெப்தாவுடைய மகளாலும், அன்னாளுடைய மகனாலும் யெகோவாவுக்கு விசேஷமான வழிகளில் சேவை செய்ய தங்கள் வாழ்க்கையைப் பயன்படுத்த முடிந்தது. அதே போல் இன்றும், முழுநேர சேவையை ஆரம்பிக்கவும், யெகோவாவின் சேவைக்காகவே தங்கள் வாழ்க்கையைப் பயன்படுத்தவும் கிறிஸ்தவப் பெற்றோர் நிறைய பேர் தங்கள் பிள்ளைகளை உற்சாகப்படுத்தியிருக்கிறார்கள். அந்தப் பிள்ளைகள் அப்படித் தொடர்ந்து சேவை செய்ய நாமும் அவர்களை உற்சாகப்படுத்தலாம்.—நியா. 11:40; சங். 110:3.
19 யெகோவாவின் சாட்சிகளுடைய விசேஷ முழுநேர ஊழியர்களின் உலகளாவிய அமைப்பில், இன்று உலகம் முழுவதும் சுமார் 67,000 பேர் இருக்கிறார்கள். அதில் சிலர் பெத்தேலில், கட்டுமான வேலையில், வட்டார சேவையில் இருக்கிறார்கள். இன்னும் சிலர், ராஜ்ய நற்செய்தியாளர்களுக்கான பள்ளி, சபை மூப்பர்களுக்கான பள்ளி, வட்டாரக் கண்காணிகள் மற்றும் அவர்களுடைய மனைவிகளுக்கான பள்ளி ஆகியவற்றின் போதனையாளர்களாக இருக்கிறார்கள். இன்னும் சிலர், விசேஷ பயனியர்களாகவும், மிஷனரிகளாகவும், மாநாட்டு மன்றங்களின் ஊழியர்களாகவும், பைபிள் பள்ளிகள் நடத்தப்படும் மன்றங்களின் ஊழியர்களாகவும் சேவை செய்கிறார்கள். இவர்கள் எல்லாரும் “கீழ்ப்படிதல் மற்றும் ஏழ்மைக்கான உறுதிமொழி” எடுக்கிறார்கள். அதாவது, யெகோவாவின் சேவையில் கிடைக்கிற எந்த நியமிப்பையும் செய்ய தயாராக இருப்பதாகவும், எளிமையான வாழ்க்கை வாழ்வதாகவும், அனுமதி கொடுக்கப்பட்டால் தவிர வேறெங்கும் வேலை செய்வதில்லை என்றும் உறுதிமொழி எடுக்கிறார்கள். விசேஷ முழுநேர ஊழியம் செய்கிறவர்கள் விசேஷமானவர்கள் அல்ல, அவர்களுடைய நியமிப்புகள்தான் விசேஷமானது! விசேஷ முழுநேர ஊழியர்கள், மனத்தாழ்மையாக நடந்துகொள்கிறார்கள்; தங்களுடைய நியமிப்பில் இருக்கும்வரை, தாங்கள் எடுத்த உறுதிமொழியைக் காப்பாற்றுவதில் உறுதியாக இருக்கிறார்கள்.
20. “தினமும்” நாம் என்ன செய்ய வேண்டும், ஏன்?
20 கடவுளிடம் நாம் நேர்ந்துகொள்ளக்கூடிய 3 விஷயங்களைப் பற்றி இந்தக் கட்டுரையில் பார்த்தோம். நீங்கள் எந்தெந்த விஷயங்களுக்காக கடவுளிடம் நேர்ந்துகொண்டிருக்கிறீர்கள்? நீங்கள் எதற்காக நேர்ந்துகொண்டிருந்தாலும், அதைச் சாதாரணமாக நினைக்கக் கூடாது என்பது இப்போது உங்களுக்குப் புரிந்திருக்கும். (நீதி. 20:25) நேர்ந்துகொண்டதை நிறைவேற்றாமல் போனால், மோசமான விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கலாம். (பிர. 5:6) அதனால், நாம் எல்லாரும் சங்கீதக்காரனைப் போலவே இப்படிச் சொல்லலாம்: “நான் என்னுடைய நேர்த்திக்கடன்களைத் தினமும் செலுத்துவேன். உங்களுடைய பெயரைக் காலமெல்லாம் புகழ்ந்து பாடுவேன்.”—சங். 61:8.
a தனக்கு ஒரு மகன் பிறந்தால், வாழ்நாள் முழுவதும் அவன் ஒரு நசரேயனாக இருப்பான் என்று அன்னாள் யெகோவாவிடம் நேர்ந்துகொண்டாள். அப்படியென்றால், அன்னாளின் மகன் என்ன செய்ய வேண்டியிருந்தது? யெகோவாவின் சேவைக்காக அர்ப்பணிக்கப்பட்டவனாய், பிரித்துவைக்கப்பட்டவனாய் இருக்க வேண்டியிருந்தது.—எண். 6:2, 5, 8.
b ஒருவர் ஞானஸ்நானம் எடுப்பதற்குத் தகுதி பெறுகிறாரா இல்லையா என்பதைத் தெரிந்துகொள்ள மூப்பர்கள் நிறைய படிகளை எடுக்கிறார்கள். அதனால், ஒருவருடைய ஞானஸ்நானம் செல்லாமல் போவதற்கான வாய்ப்பு ரொம்பவே குறைவுதான்!
c ‘கடவுளது அன்புக்கு பாத்திரராய் இருங்கள்’ என்ற புத்தகத்தில் பக்கங்கள் 251-253-ஐப் பாருங்கள்.