இவர்களுடைய விசுவாசத்தைப் பின்பற்றுங்கள்
ஆறுதலின் கடவுள் அச்சத்தை அகற்றினார்
கருத்த மேகக் கூட்டங்கள் தாரை தாரையாகக் கண்ணீர் விட, எலியா தலைதெறிக்க ஓடிக்கொண்டிருக்கிறார். பல மைல் தூரத்திலுள்ள யெஸ்ரயேல் ஊரில்தான் அவருடைய ஓட்டம் நிற்கும். அவரொன்றும் கட்டிளங்காளை அல்ல. ஆனால், காலில் சக்கரம் கட்டிக்கொண்டதைப் போல் அப்படியொரு வேகம். ஏன், ஆகாப் ராஜாவின் ரதத்தில் பூட்டப்பட்ட குதிரைகள்கூட அவருடைய வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறுகின்றன! இதுவரை உணர்ந்திராத புதுவித சக்தி தனக்குள் பாய்வதை எலியா உணர்கிறார். இதெல்லாம் எப்படி?! “யெகோவாவின் கை எலியாவின்மேல் இருந்தது.”—1 இராஜாக்கள் 18:46, திருத்திய மொழிபெயர்ப்பு.
வெறிச்சோடி கிடக்கும் சாலையில் எலியா தன்னந்தனியாக ஓடிக்கொண்டிருக்கிறார். பின்னே, ஆகாபின் ரதம் ஒரு புள்ளியாகத்தான் தெரிகிறது, முன்னே, சாலை நீண்டுகொண்டே போகிறது. கண்களில் அடிக்கிற மழைத் துளிகளை அவர் இமைகளால் துடைப்பதை உங்களால் பார்க்க முடிகிறதா? அன்றைய நாளின் நினைவுகளில் எலியா கரைந்து போகிறார். இது அவருக்கு மறக்க முடியாத நாள். எலியாவின் கடவுளான யெகோவாவுக்கும் உண்மை வழிபாட்டிற்கும் அபார வெற்றி கிடைத்த பொன்னான நாள்! சம்பவம் நடந்த கர்மேல் மலை புயல்காற்றின் சீற்றத்தினாலும் கார்மேகத்தின் இருட்டினாலும் எலியாவை விட்டு வெகுதூரத்தில் மறைந்து தொலைந்திருந்தது. அன்று, எலியாவைப் பயன்படுத்தி யெகோவா அற்புதமாகவும் வலிமையாகவும் பாகால் வழிபாட்டிற்குப் பேரடி கொடுத்திருந்தார். நூற்றுக்கணக்கான பாகால் பூசாரிகளின் முகமூடி கிழிக்கப்பட்டது, நியாயமாக அவர்களுக்குக் கிடைக்க வேண்டியது கிடைத்தது—ஆம் மரண தண்டனை! கிட்டத்தட்ட மூன்றரை வருடங்களாக நாட்டை உலுக்கிய பஞ்சத்திற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க யெகோவாவிடம் எலியா மன்றாடினார். துளித் துளியாய் மழை விழ ஆரம்பித்தது!a—1 இராஜாக்கள் 18:18-45.
கிட்டத்தட்ட 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள யெஸ்ரயேலுக்கு மழையில் நனைந்தபடி எலியா ஓடிக்கொண்டிருக்க அவர் மனதில் அலையலையாய் பல எண்ணங்கள் ஓடியிருக்கலாம். ‘அப்பாடா இனி கஷ்டமெல்லாம் ஒழிந்தது, கர்மேல் மலையில் நடந்ததையெல்லாம் ஆகாப் நேரில் பார்த்தானே, அதனால் வேறு வழியில்லை, அவன் மாறித்தான் ஆகவேண்டும்! பாகால் வழிபாட்டை அவன் விட்டுவிடுவான்... ராணி யேசபேலை அடக்குவான்... யெகோவாவின் ஊழியர்களைத் துன்புறுத்துவதை நிறுத்துவான்...’ என்றெல்லாம் அவர் நினைத்திருக்கலாம்.
எலியாவின் உணர்ச்சிகளை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. நாம் நினைத்ததுபோல் எல்லாம் அப்படியே நடக்கும்போது பிரச்சினையெல்லாம் தீரும் என்று நம்புவது மனித இயல்பு. எலியாவும், “நம்மைப் போன்ற மனிதர்தான், நமக்கிருக்கும் உணர்ச்சிகள்தான் அவருக்கும் இருந்தன.” எனவே, அவர் அப்படி உணர்ந்ததில் ஆச்சரியமில்லை. (யாக்கோபு 5:17) ஆனால், எலியாவின் பிரச்சினைகள் தீர்ந்துவிடவில்லை. அவருடைய கனவெல்லாம் ஒருசில மணிநேரங்களில் கரைந்துபோனது. அவர் பயத்தில் உறைந்துபோனார், மனச்சோர்வில் மூழ்கிப்போனார், ‘செத்தால் நல்லாயிருக்கும்’ என்று நினைத்தார். என்ன ஆனது? விசுவாசத்தைப் புதுப்பிக்கவும் தைரியத்தைப் பெறவும் எலியாவுக்கு யெகோவா எப்படி உதவினார்? பார்ப்போமா...
எதிர்பாரா திருப்பம்
யெஸ்ரயேலில் இருந்த தன் அரண்மனைக்குச் சென்ற ஆகாப் மாறியிருந்தானா, தெய்வபக்தியுள்ளவனாக ஆகியிருந்தானா? “எலியா செய்த எல்லாவற்றையும், அவன் தீர்க்கதரிசிகளெல்லாரையும் பட்டயத்தாலே கொன்றுபோட்ட செய்தி அனைத்தையும், ஆகாப் யேசபேலுக்கு அறிவித்தான்” என்று வாசிக்கிறோம். (1 இராஜாக்கள் 19:1) அந்த நாளில் நடந்த அத்தனை சம்பவங்களைப் பற்றியும் சொன்ன ஆகாப் யெகோவாவைப் பற்றி வாயே திறக்கவில்லை. அன்று நடந்த அற்புதங்களை எல்லாம் மனித கண்ணோட்டத்தில்தான் பார்த்தான். அதையெல்லாம் ‘எலியா செய்ததாக’ சொன்னானே தவிர யெகோவா செய்ததாகச் சொல்லவில்லை. அவனுக்கு யெகோவாமீது துளியும் மரியாதை இருக்கவில்லை. பழிவாங்கும் குணமுடைய யேசபேல் இதைக் கேட்டு என்ன செய்தாள்?
கோபத்தில் கொப்பளித்தாள்! கொந்தளித்தாள்!! எலியாவிடம் ஆள் அனுப்பி: “அவர்களில் ஒவ்வொருவனுடைய பிராணனுக்குச் செய்யப்பட்டதுபோல, நான் நாளை இந்நேரத்தில் உன் பிராணனுக்குச் செய்யாதேபோனால், தேவர்கள் அதற்குச் சரியாகவும் அதற்கு அதிகமாகவும் எனக்குச் செய்யக்கடவர்கள்” என்று சொல்லச்சொன்னாள். (1 இராஜாக்கள் 19:2) இது பயங்கரமான கொலை மிரட்டல். அவள் சொல்ல வந்தது இதுதான்: ‘பாகால் பூசாரிகளைக் கொன்றதற்கு நான் உன்னைப் பழிவாங்காமல் விடமாட்டேன். இன்னும் 24 மணிநேரத்திற்குள் ஒன்று நீ சாக வேண்டும், இல்லை நான் சாக வேண்டும்.’ அடைமழையும் அடங்காத புயலும் அடிக்கும் அந்த இரவில் ஒரு சிறு குடிசையில் தூங்கிக்கொண்டிருந்த எலியாவுக்கு இந்தச் செய்தியைக் கேட்டபோது எப்படி இருந்திருக்கும் என்பதை உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா?
சோர்வும் பயமும்
பாகால் வழிபாடு ஒருவழியாக ஒழிந்துவிட்டது என்று எலியா நினைத்திருந்தால் அவர் கட்டிவைத்த மனக்கோட்டை மண்கோட்டையாகத்தான் ஆகியிருக்கும். நடந்த சம்பவங்களை எல்லாம் கேட்ட பிறகும் யேசபேல் மாறியதாகத் தெரியவில்லை. உண்மை வழிபாட்டிற்குத் தோள் கொடுத்த எலியாவின் தோழர்கள் அநேகரை அவள் ஏற்கெனவே கொன்றுபோட்டிருந்தாள். இப்போது எலியாவைக் குறிவைத்திருக்கிறாள். இதையெல்லாம் நினைக்கும்போது அவருக்கு எப்படி இருந்திருக்கும்? ‘அவர் அச்சமுற்றார்’ என்று பைபிள் சொல்கிறது. யேசபேல் கையால் எப்படியெல்லாம் துடிதுடித்துச் சாகப்போகிறோமோ என்று எலியா யோசித்தாரா? அப்படி யோசித்திருந்தால் அவருடைய தைரியமெல்லாம் காற்றில் கரைந்திருக்கும். ஆனால், அவர் அப்படி யோசித்தாரா இல்லையா என்று நமக்குத் தெரியாது, ‘தன் உயிரைக் காத்துக்கொள்ள தப்பி ஓடினார்’ என்று மட்டும் தெரியும்.—1 இராஜாக்கள் 18:4; 19:3, பொது மொழிபெயர்ப்பு.
கடவுள்மீது அசைக்கமுடியாத விசுவாசம் இருந்தாலும் எலியா பயந்து நடுங்கினார். அவர் மட்டும்தான் இப்படிப் பயந்தாரா? பல நூற்றாண்டுகளுக்குப் பின்பு வாழ்ந்த அப்போஸ்தலன் பேதுருவும் இப்படித்தான் ஒருசமயம் பயந்தார். இயேசு, தம்முடன் தண்ணீரின்மேல் நடக்கும்படி பேதுருவை அழைத்தபோது பயங்கரமான ‘புயல்காற்றை கண்டதும்’ பயந்துபோய், தைரியத்தை இழந்து கடலில் மூழ்க ஆரம்பித்தார். (மத்தேயு 14:30) பேதுருவும் எலியாவும் நமக்கு ஓர் அருமையான பாடத்தைக் கற்றுக்கொடுக்கிறார்கள். நாம் தைரியமாக இருக்க வேண்டுமென்றால், ஆபத்துகளையே நினைத்து பயந்து கொண்டிருக்கக் கூடாது. நமக்கு நம்பிக்கையையும் பலத்தையும் கொடுக்கும் கடவுள்மீதே நம் கவனத்தை ஊன்ற வேண்டும்.
“போதும்”
பயத்தில் வெலவெலத்துப் போன எலியா தென்மேற்கு திசையில், கிட்டத்தட்ட 150 கிலோமீட்டர் தூரத்திலிருந்த பெயெர்செபாவுக்கு ஓடிப்போகிறார். இது யூதேயாவின் எல்லையில் இருந்த ஒரு சிறிய கிராமம். அங்கே தன்னுடைய உதவியாளனை விட்டுவிட்டு அவர் மட்டும் தன்னந்தனியாக வனாந்தரத்திற்கு நடையைக் கட்டுகிறார். அவர் ‘ஒருநாள் பிரயாணம் போனார்’ என்று பதிவு சொல்கிறது. அப்படியென்றால், காலையிலேயே நடக்க ஆரம்பித்திருப்பார். தப்பியோட வேண்டும் என்ற அவசரத்தில் கையில் சாப்பாடு எடுத்தாரோ இல்லையோ தெரியவில்லை. ஒருபக்கம், கரடு முரடான காட்டுப்பாதையில்... கொளுத்தும் வெயிலில்... நடக்க வேண்டியிருக்கிறது. இன்னொரு பக்கம், யேசபேலின் நெருப்புப் பார்வையும் கந்தக வார்த்தைகளும் மனதில் வந்து வந்து பயமுறுத்துகின்றன. முறைத்துக்கொண்டிருந்த சூரியன் மெல்ல மெல்ல தன் கோபம் தணிந்து கூட்டுக்குள் முடங்கிக்கொள்கிறான். எலியாவோ உயிர் சுமந்த உடலாய் சக்தியின்றி நடக்கிறார். கடைசியில், ஒரு சூரைச்செடியின் அடியில் உடைந்துபோய் உட்காருகிறார். பொட்டல்காடாக இருக்கும் அந்தப் பகுதியில் இந்தச் சூரைச்செடி மட்டும்தான் எலியாவை இருகரம் நீட்டி வரவேற்கிறது.—1 இராஜாக்கள் 19:4.
எலியா தன் வலியை யெகோவாவிடம் வார்த்தைகளில் உதிர்க்கிறார். தன் உயிரை எடுத்துக்கொள்ளும்படி புலம்புகிறார். “நான் என் பிதாக்களைப் [அதாவது, முன்னோர்களைப்] பார்க்கிலும் நல்லவன் அல்ல” என்று சொல்கிறார். தன்னுடைய முன்னோர்கள் இறந்து மண்ணோடு மண்ணாகிவிட்டார்கள், அவர்களால் யாருக்கும் எந்த உதவியும் செய்ய முடியாது என்பது எலியாவுக்கு நன்றாகத் தெரியும். (பிரசங்கி 9:10) எனவே, தானும் ஒரு நடைபிணம், எதற்கும் பயன்படாத ஒரு ஜீவன், என்று நினைக்கிறார். அதனால்தான் அவர், “போதும் கர்த்தாவே”, நான் உயிரோடு இருந்து என்ன பிரயோஜனம் என்று கதறி அழுகிறார்.
ஆனால், கடவுளுடைய தீர்க்கதரிசியாக இருக்கும் ஒருவர் இந்தளவு நொந்து நூலாகிப் போவதைப் பார்த்து நாம் அதிர்ச்சியடைய வேண்டுமா? தேவையில்லை. கடவுளுக்கு உண்மையாய் இருந்த அநேக ஆண்களும் பெண்களும்கூட எலியாவைப் போல் உணர்ந்திருக்கிறார்கள். பைபிளில் ரெபெக்காள், யாக்கோபு, மோசே, யோபு போன்றவர்கள் ‘செத்துப்போனால் நன்றாக இருக்கும்’ என்று சொல்லி புலம்பியிருக்கிறார்கள்.—ஆதியாகமம் 27:46; 37:35; எண்ணாகமம் 11:13-15; யோபு 14:13.
‘சமாளிப்பதற்குக் கடினமான கொடிய காலங்களில்’ இன்று நாம் வாழ்கிறோம்; அதனால்தான் அநேகர் மனச்சோர்வில் வாடுகிறார்கள், கடவுளுடைய ஊழியர்களும் அதற்கு விதிவிலக்கல்ல. (2 தீமோத்தேயு 3:1) நீங்களும் எப்போதாவது மனச்சோர்வில் வாடினால், எலியாவைப் போல் உங்கள் உள்ளக் குமுறல்களை யெகோவா தேவனிடம் ஊற்றிவிடுங்கள். அவர்தான் “எல்லா விதமான ஆறுதலின் கடவுள்” ஆயிற்றே. (2 கொரிந்தியர் 1:3) அப்படியென்றால், அவர் எலியாவுக்கு ஆறுதல் தந்தாரா?
யெகோவா சக்தி அளித்தார்
தம் அன்பு தீர்க்கதரிசி சூரைச்செடியின் கீழ் உட்கார்ந்துகொண்டு, ‘செத்தால் போதும்’ என்று புலம்பிக்கொண்டிருப்பதைப் மேலிருந்து பார்த்துக்கொண்டிருந்த யெகோவாவுக்கு எப்படியிருந்திருக்கும்? அவர் மனம் ரண வேதனைப்பட்டிருக்கும், இல்லையா? எலியா தூக்கத்தின் மடியில் தன்னைத் தொலைத்திருந்தபோது யெகோவா ஒரு தேவதூதனை அனுப்புகிறார். அந்தத் தேவதூதன் எலியாவை மெல்ல தொட்டு, “எழுந்திருந்து போஜனம்பண்ணு” என்கிறார். தேவதூதன் கொண்டுவந்த சூடான ரொட்டியையும் தண்ணீரையும் எலியா சாப்பிடுகிறார். அவர் தேவதூதனுக்கு நன்றி சொன்னாரா? சாப்பிட்டார், குடித்தார், மீண்டும் உறங்கிவிட்டார் என்றுதான் பதிவு சொல்கிறது. பேசக்கூட இஷ்டமில்லாத அளவுக்கு நொந்துபோயிருந்தாரா? அது நமக்குத் தெரியாது, என்றாலும், அந்தத் தேவதூதன் திரும்பவும் எலியாவை எழுப்பினார், அப்போது விடியற்காலையாக இருந்திருக்கும். “எழுந்திருந்து போஜனம்பண்ணு; நீ பண்ணவேண்டிய பிரயாணம் வெகுதூரம்” என்றார்; இந்த வார்த்தைகளில் நிறைய அர்த்தம் இருக்கிறது.—1 இராஜாக்கள் 19:5-7.
எலியா போக வேண்டிய இடத்தை அந்தத் தேவதூதன் அறிந்திருந்தார். அதுமட்டுமல்ல, எலியா பல மைல்தூரம் நடக்க வேண்டியிருக்கும், அதை அவர் தன் சொந்த பலத்தால் செய்ய முடியாது என்பதையும் அந்தத் தேவதூதன் அறிந்திருந்தார். இதெல்லாம் கடவுள் கொடுத்த ஞானத்தினால்தான் அவருக்குத் தெரிந்திருந்தது. நம் எண்ணங்களையும், வரம்புகளையும் நம்மைவிட மிக நன்றாக தெரிந்துவைத்திருக்கும் அருமையான கடவுளை வணங்குவது எவ்வளவு ஆறுதலாக இருக்கிறது! (சங்கீதம் 103:13, 14) சரி, எலியாவுக்கு அந்த உணவு எந்தளவுக்குச் சக்தி அளித்தது?
‘அவர் எழுந்திருந்து புசித்துக் குடித்து, அந்தப் போஜனத்தின் பலத்தினால் நாற்பதுநாள் இரவுபகல் ஓரேப் என்னும் தேவனுடைய பர்வதமட்டும் நடந்துபோனார்’ என்று பைபிள் சொல்கிறது. (1 இராஜாக்கள் 19:8) சுமார் அறுநூறு வருடங்களுக்கு முன் வாழ்ந்த மோசேயையும், கிட்டத்தட்ட ஆயிரம் வருடங்களுக்கு பின் வாழ்ந்த இயேசுவையும் போல எலியாவும் 40 நாட்கள் இரவும் பகலும் விரதம் இருந்தார். (யாத்திராகமம் 34:28; லூக்கா 4:1, 2) தேவதூதன் தந்த அந்த ஒரு வேளை உணவு அவருடைய எல்லா பிரச்சினையையும் தீர்க்கவில்லை, ஆனால் அவருக்கு அற்புதமான விதத்தில் சக்தி அளித்தது. பாதை இல்லாத அந்தக் கரடுமுரடான வனாந்திரத்தில் நாள்கணக்காக, வாரக்கணக்காக, கிட்டத்தட்ட ஒன்றரை மாதமாக கால்கடுக்க நடக்கும் வயதான எலியாவை உங்களால் பார்க்க முடிகிறதா?
இன்றுகூட யெகோவா தம்முடைய ஊழியர்களுக்குச் சக்தி அளிக்கிறார். அற்புதமாக உணவளிப்பதன் மூலம் அல்ல, ஆனால் அதைவிட உன்னதமான விதத்தில், ஆம் ஆன்மீக விதத்தில் சக்தி அளிக்கிறார். (மத்தேயு 4:4) கடவுளுடைய வார்த்தையான பைபிளையும் அதைத் தெளிவாக விளக்குகிற பிரசுரங்களையும் வாசித்து கடவுளைப் பற்றி அதிகம் தெரிந்துகொள்ளும்போது நமக்கு ஆன்மீக பலம் கிடைக்கிறது. இது நம்முடைய பிரச்சினைகளை எல்லாம் தீர்ப்பதில்லை, ஆனால் நம்முடைய சக்திக்கு மீறிய பிரச்சினைகளைப் பொறுமையாகச் சகிக்க மனபலத்தைத் தருகிறது. அதோடு, எதிர்காலத்தில் ‘முடிவில்லா வாழ்வையும்’ அளிக்கிறது.—யோவான் 17:3.
எலியா கிட்டத்தட்ட 320 கிலோமீட்டர் தூரம் நடந்து ஒருவழியாக ஓரேப் என்னும் மலையை அடைகிறார். பல வருடங்களுக்குமுன், அந்த மலையில்தான் எரியும் முட்செடியிலிருந்து ஒரு தேவதூதனைக் கொண்டு மோசேயிடம் யெகோவா பேசினார். அதன்பின், இஸ்ரவேல் மக்களோடு திருச்சட்ட ஒப்பந்தத்தையும் அங்கேதான் செய்தார். எலியா, அந்த மலையிலிருந்த ஒரு குகையில் தஞ்சமடைகிறார்.
ஆறுதலும் பலமும் யெகோவாவே!
ஓரேப் மலையில் கடவுளுடைய “வார்த்தை” எலியாவுக்கு உண்டாகிறது. அதாவது ஒரு தேவதூதன் மூலமாக, “இங்கே உனக்கு என்ன காரியம்” என்று யெகோவா கேட்கிறார். இதை அவர் அன்பான விதத்தில்தான் கேட்டிருக்க வேண்டும்; அதனால்தான் எலியா தன் மனக் குமுறல்களை அவரிடம் கொட்டினார். “சேனைகளின் தேவனாகிய கர்த்தருக்காக வெகு பக்திவைராக்கியமாயிருந்தேன்; இஸ்ரவேல் புத்திரர் உமது உடன்படிக்கையைத் தள்ளிவிட்டார்கள்; உம்முடைய பலிபீடங்களை இடித்து, உம்முடைய தீர்க்கதரிசிகளைப் பட்டயத்தினால் கொன்றுபோட்டார்கள்; நான் ஒருவன்மாத்திரம் மீதியாயிருக்கிறேன்; என் பிராணனையும் வாங்கத் தேடுகிறார்கள்” என்று அவர் சொன்னார். (1 இராஜாக்கள் 19:9, 10) எலியா மனச்சோர்வடைந்ததற்குக் குறைந்தது மூன்று காரணங்களை இந்த வசனத்தில் பார்க்கிறோம்.
முதலாவது, இத்தனை வருடமாக தான் செய்து வந்த சேவையெல்லாம் வீணாகிவிட்டதாக நினைத்தார். கடவுளின் பரிசுத்தமான பெயரும் அவருடைய வழிபாடும் உன்னதமானது என்பதைக் காட்டுவதற்காக ‘வெகு பக்திவைராக்கியத்தோடு’ அவர் எடுத்த முயற்சிகளெல்லாம் பயனில்லாமல் போய்விட்டது என்று உணர்ந்தார். சொல்லப்போனால், நிலைமை இன்னும் மோசமாகிவருவதாகவே எலியா நினைத்தார். பொய் வணக்கம் கொடிகட்டிப் பறந்ததால் மக்கள் கடவுள்மீது விசுவாசமின்றி இருந்தார்கள், அவருக்கு எதிராகக் கலகம் செய்தார்கள். இரண்டாவது, எலியா தனிமையாக உணர்ந்தார். “நான் ஒருவன்மாத்திரம்” என்று சொன்னபோது யெகோவாவை வழிபடுகிறவர்களில் தான் ஒருவன் மட்டுமே மீந்திருப்பதாக நினைத்தார். மூன்றாவது, அவர் பயந்துபோய் இருந்தார். ஏற்கெனவே தன்னோடு இருந்த தீர்க்கதரிசிகள் ஏராளமானோர் கொல்லப்பட்டிருந்தார்கள், அடுத்தது தன்மீதுதான் கைவைப்பார்கள் என்று அவர் நம்பினார். இதையெல்லாம் வெளிப்படையாகச் சொல்வது எலியாவுக்குச் சுலபமாக இருந்திருக்காது. மனதில் இருப்பதைக் கொட்ட தர்மசங்கடமோ தயக்கமோ பெருமையோ அவருக்குத் தடைக்கல்லாக இருக்கவில்லை. கடவுளிடம் அவர் மனம்விட்டு பேசியதன் மூலம் கடவுளுடைய உண்மை ஊழியர்களுக்கு ஒரு நல்ல மாதிரியாக இருக்கிறார்.—சங்கீதம் 62:8.
எலியாவுக்கு இருந்த பயத்தையும் கவலையையும் யெகோவா எப்படிப் போக்கினார்? எலியாவைக் குகையின் வாசலில் நிற்கும்படி அந்தத் தேவதூதன் சொல்கிறார். ஏன், எதற்கு என்றெல்லாம் தெரியாவிட்டாலும் எலியா அவருடைய பேச்சைக் கேட்கிறார். அப்போது, பயங்கரமான ஒரு பெருங்காற்று அடிக்கிறது! அதன் சத்தத்தில் காதே கிழிந்திருக்கும்! ஏனென்றால், அந்தக் காற்றுக்கு மலைகளும் குன்றுகளும்கூட இரண்டாகப் பிளக்கின்றன! அந்தப் பலமான காற்றின் வேகத்தை தாங்க முடியாமல் தன் கண்களை மறைப்பதா அல்லது மொடமொடப்பான தன் தோல் அங்கி பறந்து போகாமல் பிடிப்பதா என்று தெரியாமல் திணரும் எலியா உங்கள் கண்களுக்குத் தெரிகிறாரா? அடுத்ததாக, பூகம்பத்தினால் மலைகள் பிளந்து குலுங்க, காலுக்குக்கீழ் இருக்கும் நிலம் நழுவ, எலியா நிற்கமுடியாமல் தடுமாறுவதை உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா? அவர் சுதாரிப்பதற்குள் மேகம் போல் திரண்டுவந்த நெருப்பு ராட்சத அலையாய் அவரைக் கடந்து சென்றது. சுட்டுப்பொசுக்கும் நெருப்பின் உக்கிரத்தைத் தாங்க முடியாமல் குகைக்குள்ளே புகுந்துகொள்ளும் எலியாவைக் கொஞ்சம் பாருங்கள்!—1 இராஜாக்கள் 19:11, 12.
இயற்கைச் சக்திகளின் இந்தப் பிரம்மாண்டமான, பயங்கரமான அரங்கேற்றத்தில் எதிலும் யெகோவா இல்லை என்று பதிவு சொல்கிறது. யெகோவா ஒன்றும் புராணக் கதைகளில் வரும் இயற்கைக் கடவுள் அல்ல என்பது எலியாவுக்கு நன்றாகத் தெரியும். பொய்க் கடவுளான பாகாலை, மழைக் கடவுள் என்று அதன் பக்தர்கள் கண்மூடித்தனமாக நம்பினார்கள். ஆனால், இந்தப் பிரம்மாண்டமான இயற்கைச் சக்திகளைப் படைத்தவரே யெகோவாதான். எனவே, அவருக்கு முன்னால் இந்தச் சக்திகள் எல்லாம் வெறும் தூசியே. வானாதி வானங்கள்கூட அவரைக் கொள்ளாதே. (1 இராஜாக்கள் 8:27) அப்படியென்றால், இதையெல்லாம் யெகோவா ஏன் எலியாவுக்குக் காட்டினார்? எலியா பயந்து நடுங்கியது உங்களுக்கு நினைவிருக்கிறதா? மகா வல்லமை கொண்ட யெகோவாவே அவருடன் இருக்கும்போது, அதுவும் எல்லா இயற்கைச் சக்திகளும் அவருடைய கட்டுப்பாட்டில் இருக்கும்போது, ஆகாப், யேசபேல் போன்ற மனிதர்களுக்கு எலியா பயப்பட வேண்டுமா என்ன?—சங்கீதம் 118:6.
நெருப்பு எலியாவைக் கடந்து சென்ற பிறகு அங்கே ஆழ்ந்த நிசப்தம் ஏற்படுகிறது. அப்போது, ‘மெல்லிய சத்தத்தை’ எலியா கேட்கிறார். “இங்கே உனக்கு என்ன காரியம்” என்று அந்தச் சத்தம் மறுபடியும் கேட்கிறது. அவர் இரண்டாவது முறையாகத் தன் கவலைகளையெல்லாம் கொட்டித் தீர்க்கிறார்.b அவருக்கு அது இன்னும் ஆசுவாசமாய் இருந்திருக்கும். அதன் பிறகு அந்த “மெல்லிய சத்தம்” சொன்ன விஷயம், புண்பட்ட அவர் உள்ளத்துக்கு மயிலிறகால் மருந்து போட்டது. எலியா ஒன்றும் கையாலாகாதவர் அல்ல என்ற நம்பிக்கையை யெகோவா கொடுத்தார். எப்படி? தம் எதிர்கால நோக்கத்தை, அதாவது இஸ்ரவேலில் பாகால் வழிபாட்டுக்கு எதிராக தாம் எடுக்கப்போகும் நடவடிக்கைகளை, பற்றித் தெரியப்படுத்தினார். யெகோவாவின் நோக்கம் நிறைவேறுவதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது என்பதால் எலியாவின் அயராத உழைப்பு வீண் போகவில்லை. அதோடு, யெகோவா சில திட்டவட்டமான கட்டளைகளை எலியாவுக்குக் கொடுத்து மீண்டும் அவரை அனுப்பினார். கடவுள் தம்முடைய நோக்கத்தை நிறைவேற்ற தன்னை இன்னும் பயன்படுத்துவார் என்பதை எலியா புரிந்துகொண்டார்.—1 இராஜாக்கள் 19:12-17.
சரி, எலியாவின் தனிமைக்குத் தீர்வு கிடைத்ததா? அதற்கு யெகோவா இரண்டு விஷயங்களைச் செய்கிறார். முதலில், எலியாவிற்கு அடுத்த தீர்க்கதரிசியாக எலிசாவை நியமிக்கும்படி சொல்கிறார். இளைஞனான எலிசா, எலியாவுக்கு நல்ல தோழனாகவும் உதவியாளனாகவும் இருப்பார். அவருடைய தனிமையைப் போக்க இது அருமையான வழி, அல்லவா? இரண்டாவதாக, ஆச்சரியமான ஒரு விஷயத்தை யெகோவா சொன்னார்: “பாகாலுக்கு முடங்காதிருக்கிற முழங்கால்களையும், அவனை முத்தஞ்செய்யாதிருக்கிற வாய்களையுமுடைய ஏழாயிரம்பேரை இஸ்ரவேலிலே மீதியாக வைத்திருக்கிறேன்.” (1 இராஜாக்கள் 19:18) ஆம், எலியா தனியாக இல்லை! பாகாலை வழிபட மறுக்கும் ஆயிரக்கணக்கானோர் இஸ்ரவேலில் இருந்தார்கள்; இதைக் கேட்டபோது எலியாவின் நெஞ்சில் பால்வார்த்தது போல் இருந்திருக்கும்! எலியாவின் சேவை அவர்களுக்குத் தேவை. ஏனென்றால், சுற்றியுள்ள ஜனங்கள் எல்லாரும் யெகோவாவுக்கு எதிராகக் கலகம் செய்தபோது எலியாவின் உத்தமமான சேவை அவர்களுக்கு நல்ல முன்மாதிரியாக இருந்திருக்கும். ‘மெல்லிய சத்தத்தின்’ மூலமாக, யெகோவாவின் தூதன் மூலமாக, இந்த வார்த்தைகளைக் கேட்டபோது எலியாவின் மனம் குளிர்ந்து போயிருக்கும்!
இயற்கைச் சக்திகளின் பிரம்மாண்டமான ஆற்றலைப் பார்க்கும்போது எலியாவைப் போலவே நாமும் வாயடைத்துப் போகிறோம். படைப்புக்கே இவ்வளவு சக்தியென்றால், படைப்பாளருக்கு இன்னும் எவ்வளவு சக்தியிருக்கும்! (ரோமர் 1:20) தம்மை உண்மையாய் வழிபடுகிறவர்களுக்காகத் தம்முடைய வல்லமையைப் பயன்படுத்த இன்றும் யெகோவா விரும்புகிறார். (2 நாளாகமம் 16:9) என்றாலும், முக்கியமாகத் தம்முடைய வார்த்தையாகிய பைபிளின் மூலம் நம்முடன் பேசுகிறார். (ஏசாயா 30:21) பைபிள் ஒருவிதத்தில் அந்த ‘மெல்லிய சத்தத்தை’ போல் இருக்கிறது. இன்று இதைப் பயன்படுத்தி யெகோவா நம்மை வழிநடத்துகிறார், திருத்துகிறார், ஊக்கமளிக்கிறார், நம்மீது அன்பிருப்பதை நிரூபிக்கிறார்.
ஓரேப் மலையில் யெகோவா அளித்த ஆறுதலை எலியா ஏற்றுக்கொண்டாரா? அதில் சந்தேகமே வேண்டாம்! இந்த உண்மை தீர்க்கதரிசி மீண்டும் செயல்வீரராய்... அதே வேகத்துடன்... முன்பிருந்த தைரியத்துடன்... பொய் வழிபாட்டை எதிர்த்துப் போராட தயாரானார். ‘வேதவசனங்களின் மூலம் உண்டாகிற ஆறுதலை,’ கடவுளுடைய வார்த்தையிலுள்ள ஆறுதலான விஷயங்களை, நாம் ஏற்றுக்கொண்டால் எலியாவின் விசுவாசப் பாதையில் நாமும் வீறுநடை போடலாம்.—ரோமர் 15:4. (w11-E 07/01)
[அடிக்குறிப்புகள்]
a ஜனவரி 1, 2008 காவற்கோபுரத்தில், “இவர் உண்மை வணக்கத்திற்காக உறுதியோடு நின்றார்” என்ற கட்டுரையைப் பாருங்கள்.
b இங்கே சொல்லப்பட்ட “மெல்லிய சத்தம்” ஒரு தேவதூதனுடைய குரலாக இருந்திருக்க வேண்டும். 1 இராஜாக்கள் 19:9-ல் (தி.மொ) நாம் பார்க்கிறபடி, “யெகோவாவின் வார்த்தை”யைத் தெரிவித்தவரும் இவராகத்தான் இருந்திருக்க வேண்டும். 15-வது (தி.மொ) வசனம் இந்தத் தூதரை “யெகோவா” என்று குறிப்பிடுகிறது. வனாந்தரத்தில் இஸ்ரவேலரை வழிநடத்துவதற்காக யெகோவா ஒரு தேவதூதரைப் பயன்படுத்தினார் என்று நமக்குத் தெரியும். “என் நாமம் அவர் உள்ளத்தில் இருக்கிறது” என்று அவரைக் குறித்து கடவுள் சொன்னார். (யாத்திராகமம் 23:21) அந்தத் தேவதூதனும் இந்தத் தேவதூதனும் ஒன்று என்று நாம் வாதாடவில்லை. என்றாலும், இயேசு பூமிக்கு வருவதற்குமுன் யெகோவாவுடைய விசேஷப் பிரதிநிதியாக இருந்தார், தம்முடைய ஊழியர்களிடம் பேசுவதற்கு அவரை “வார்த்தை”யாகப் பயன்படுத்தினார், என்பதை நாம் மனதில் வைக்கலாம்.—யோவான் 1:1.
[பக்கம் 15-ன் படம்]
சந்தோஷத்திலும் சரி சங்கடத்திலும் சரி, யெகோவா எலியாவை மகத்தான விதத்தில் ஆசீர்வதித்தார்
[பக்கம் 16-ன் படம்]
வேதனையில் நொந்து நூலாகியிருந்த எலியா தன் மனபாரத்தை யெகோவாவிடம் கொட்டினார்
[பக்கம் 17-ன் படம்]
தம்முடைய அளவில்லா சக்தியைப் பயன்படுத்தி எலியாவுக்கு யெகோவா ஆறுதல் அளித்தார்