கொடூரமான அசீரியா இரண்டாவது உலக மகா வல்லரசு
பூர்வ அசீரிய அரசர்களின் அரண்மனைகளைப் பற்றிய புதைப்பொருள் ஆராய்ச்சியின் கண்டுபிடிப்புகள் பைபிளின் சரித்திரப்பூர்வ திருத்தத்தில் உங்கள் நம்பிக்கையை மேலும் உறுதிப்படுத்தும். பைபிளிலுள்ள சரித்திரத்தைப்பற்றி இந்தக் கண்டுபிடிப்புகள் என்ன காட்டுகின்றன? மேலும் அவை உங்களுக்கு எதைக் குறிக்கவேண்டும்?
அசீரியர்கள் வன்முறை கடைப்பிடித்த மற்றும் போர் ஆர்வங்கொண்ட ஜனங்கள். இவர்கள் மிகப் பரந்தகன்ற கொடிய பேரரசை உண்டுபண்ணினர். அது மெசொபொத்தேமிய சமவெளியின் வட முனையயிலிருந்த அவர்கள் தாய்நாட்டிலிருந்து பரவியிருந்தது. இவர்கள் யூதாவுக்கும் இஸ்ரவேலுக்கும் பகைஞரென பைபிளில் பல தடவைகள் குறிப்பிடப்பட்டிருக்கின்றனர்.
இந்தப் பூர்வ ஜனங்களைப்பற்றி மேலும் அறிவது பைபிளில் சொல்லப்பட்டுள்ள காரியங்களைப் புரிந்துகொள்ள நமக்கு நிச்சயமாய் உதவிசெய்யும். அசீரியாவின் சொந்தப் பதிவுகள்தாமே பைபிள் சரித்திரத்தின் மற்றும் தீர்க்கதரிசனத்தின் உண்மையை உறுதிப்படுத்துகின்றன. ஆனால் அசீரியர் எங்கிருந்து தோன்றினார்கள்?
மயிர் அடர்ந்த புருவங்களுடனும் தாடிகளுடனும் தங்களைத் தோற்றமளித்த இந்தப் பலத்த ஜனங்கள், நோவாவின் பேரனான அசூரின் சந்ததியார். உண்மையில், அதே எபிரெயச் சொல் “அசூர்” மற்றும் “அசீரியா(யன்)” என்ற இரு பொருளும் கொள்ளுகிறது. “யெகோவாவுக்கு எதிர்ப்பில் பலத்த ஒரு வேட்டைக்காரன்” (NW) என பைபிளில் குறிப்பிடப்பட்டுள்ள நிம்ரோது நினிவே மற்றும் காலாக் பட்டணங்களைக் கட்டினான். இந்த இரு பட்டணங்களும், இவற்றோடு அசூரும் கொர்சபாத்தும் பின்னால் அசீரிய தலைநகரங்களாயின.—ஆதியாகமம் 10:8-12, 22.
அசீரியாவின் தலைநகரான “நினிவேக்கு எதிரான அதிகார அறிவிப்பு,” (NW) என்ற வார்த்தைகளுடன் நாகூமின் புத்தகம் தொடங்குகிறது. ஏன்? தீர்க்கதரிசி நாகூம் பின்னால் விவரிக்கிறபடி, நினிவே “இரத்தப் பழிகளின் நகர[ம்] . . . வஞ்சகத்தினாலும் கொடுமையினாலும் நிறைந்திருக்கிறது; கொள்ளை ஓயாமல் நடக்கிறது.” (நாகூம் 1:1; 3:1) அவன் மிகைப்படுத்திக் கூறுகிறானா? இல்லவே இல்லை!
அசீரியர்கள் மனிதப்பண்பற்றக் கொடுஞ்செயல்களுக்கு ஈடிணையற்ற முறையில் பெயர்பெற்றிருந்தனர். அவர்களுடைய சொந்த அரண்மனைகளிலிருந்த அலங்காரங்கள்தாமே, அவர்கள் ஒரு நாட்டின்பின் மற்றொன்றாகத் தாக்கிக் கொள்ளையடிப்பதையும், எரிப்பதையும், அழிப்பதையும் காட்டின. அவர்களுடைய அரசன் அஷூர்நசிர்பால், ஒரு தூணைத் தன் பகைஞரின் தோல்களைக்கொண்டு மூடினதாகப் பெருமைபாராட்டுகிறான். அவன் சொல்வதாவது: “அவர்களில் பல கைதிகளை நான் தீயில் எரித்தேன் . . . சிலரிலிருந்து அவர்களுடைய மூக்குகளையும் அவர்கள் காதுகளையும், அவர்கள் விரல்களையும் நான் வெட்டிப்போட்டேன். பலரின் கண்களை நான் குருடாக்கினேன். உயிருள்ளோரைக் கொண்டு ஒரு தூணையும் தலைகளைக் கொண்டு மற்றொன்றையும் நான் உண்டாக்கினேன்.”
மதச் செல்வாக்கு
எனினும், இந்த ஜனங்கள் வெகு மதப் பற்றுடையோராயிருந்தனர். இந்தப் பூர்வ அசீரியரைப் பற்றிப் பின்வருமாறு சொல்லியிருக்கிறது: “சண்டையிடுதல் அந்நாட்டினரின் தொழில், புரோகிதர்கள், போர் செய்ய ஓயாது தூண்டுவோராயிருந்தனர். வெற்றியின் கொள்ளைப்பொருள்களிலிருந்தே அவர்கள் பெரும்பாலும் ஆதரிக்கப்பட்டனர் . . . இந்தக் கொள்ளைக்கார மரபினர் மிக மீறிய மதப் பற்றுள்ளோராயிருந்தனர்.”—Ancient Cities, W.B. Wright, பக்கம் 25.
அசீரியர் தங்கள் மதத்தைப் பாபிலோனிலிருந்து சுதந்தரித்தனர். படவிளக்கத்தைக்கொண்ட பைபிள் அகராதியில் (ஆங்கிலம்) பின்வருமாறு சொல்லியிருக்கிறது: “பெரும்பான்மையான அம்சங்களில் அசீரிய மதம், பாபிலோனியாவின் மதத்திலிருந்து அதிகம் வேறுபடவில்லை, அங்கிருந்தே அது தருவிக்கப்பட்டிருந்தது.” லண்டனிலுள்ள பிரிட்டிஷ் பொருட்காட்சிச் சாலையில் காணும்படி இப்பொழுது வைக்கப்பட்டிருக்கும் அசீரிய முத்திரை ஒன்று, அவர்களுடைய தேசக் கடவுள் அஷூரை மூன்று தலைகளுடன் காட்டுகிறது. தெய்வங்களின் திரித்துவங்களில் நம்பிக்கை அவர்கள் வணக்கத்தில் பொதுவாயிருந்தது. ஆகவே, அவர்களுடைய கொடூர மற்றும் வன்முறைச் செயல்களின் பதிவோடு, பைபிள் தீர்க்கதரிசியாகிய நாகூம், ஒரே உண்மையான கடவுளாகிய யெகோவா, அசீரியரின்பேரில் “பழிவாங்குகிறவர், உக்கிரகோபமுள்ளவர்” என்று எழுதினதில் அதிசயமொன்றுமில்லை.—நாகூம் 1:2, தி.மொ.
நினிவே வீழ்ந்தபோது, அதன் அழிவு அவ்வளவு முற்றுமுழுமையானதாக இருந்ததனால் பல நூற்றாண்டுகளாக அதிருந்த இடமுங்கூட மறந்துவிடப்பட்டிருந்தது. அந்நகரம் ஒருபோதும் இருக்கவில்லையென குறைகாண்போர் சிலர் பைபிளை ஏளனஞ்செய்தனர். ஆனால் அது உண்மையில் இருந்தது! அது திரும்பக் கண்டுபிடிக்கப்பட்டது, தொல்பொருள் ஆராய்ச்சியாளர் அதில் கண்டது நிச்சயமாகவே உணர்ச்சியதிர்வூட்டுகிறது!
பெரும் அரண்மனைகள் கண்டுபிடிக்கப்பட்டன
1843-ல் பிரெஞ்ச் அயல்நாட்டுப் பேராள் செயல் முதல்வர் பால் இமைல் போட்டா என்பவர், பூர்வ நினிவேயைக் கண்டுபிடிக்கும் நம்பிக்கையுடன் கொர்சபாத்தில் தோண்டினார். அதற்குப்பதில் அவர், பைபிளில் ஏசாயா 20:1-ல் பெயருடன் குறிப்பிட்டுள்ள “அசீரியா ராஜாவாகிய சர்கோனின்” மிகச் சிறந்த அரண்மனையைக் கண்டுபிடித்தார். இந்த அரசனைக் குறிப்பிடுவதற்கு அறியப்பட்டிருந்த பூர்வ ஆதாரமூலம் பைபிள் ஒன்றேயாதலால் குறைகாண்போர் பைபிள் தவறென விவாதித்தனர். ஆனால் சர்கோன் உண்மையில் இருந்தான், எப்படியெனில் புதைப்பொருள் ஆராய்ச்சியாளர் அவனுடைய 200 அறைகளைக்கொண்ட அரண்மனையையும், அதோடு கற்பனைசெய்யமுடியாதவண்ணமான கல்வெட்டு எழுத்துப் பொறிப்புகளின் புதையல்களையும் மற்ற உருப்படிகளையும் தோண்டிவெளிப்படுத்தினார்கள். இவற்றில், பைபிளில் குறிப்பிட்டுள்ள சம்பவங்களை, அசீரியரின் நோக்குநிலையிலிருந்து, உறுதிப்படுத்தும் சர்கோனின் ஆண்டு வரலாற்றுப் பதிவேடுகளும் அடங்கியிருக்கின்றன. 19-ம் நூற்றாண்டின் மத்திபத்திலிருந்து, சர்கோன், அவனைக் குறித்தப் பல நுட்பவிவரங்கள் இன்னும் அரைகுறையாயிருக்கிறபோதிலும், அசீரிய அரசர்களில் மிக நன்றாய் அறியப்பட்ட அரசனாக இருந்துவருகிறான்.
பின்பு, 1847-ல், ஆஸ்டின் ஹென்ரி லேயர்ட் என்பவர் கொர்சபாத்துக்கு ஏறக்குறைய 12 மைல்கள் தென்மேற்கில், நினிவேயில் சனகெரிப்பின் அரண்மனையைக் கண்டுபிடித்தார். இந்தச் சனகெரிப்பே எருசலேமைக் கடுமையாய் எதிர்த்தவன் மேலும் பைபிளில் 13 தடவைகள் பெயரால் குறிப்பிடப்பட்டிருப்பவன். இந்த அரண்மனையின் 71 அறைகளை லேயர்ட் தீர ஆராய்ந்தார். அது போர்கள், வெற்றிகள், மற்றும் சமயச் சடங்குகள் ஆகியவற்றின் காட்சிகளால் மிக டம்பமாய் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
இன்னும் அதிக வியப்புதருவது, தொல்பொருள் ஆராய்ச்சியாளர் சனகெரிப்பின் சொந்த ஆண்டு வரலாற்றுப் பதிவேடுகளை—களிமண் நீள் உருளைகளில் பதிவுசெய்யப்பட்ட, வருடாந்தர நிகழ்ச்சிகளின் அறிக்கைகளைக் கண்டுபிடித்தனர். இவற்றில் ஒன்று சிக்காகோ சர்வகலாசாலையின் ஓரியன்டல் இன்ஸ்டிட்யூட்டில் வைக்கப்பட்டிருக்கிறது, மற்றொன்று, டேய்லர் பட்டகை என்பது பிரிட்டிஷ் பொருட்காட்சி சாலையில் உள்ளது.
இந்தக் கண்டுபிடிப்புகள் எதைக் காட்டின? இந்த ஜனங்களையும் இவர்கள் உட்பட்ட நிகழ்ச்சிகளையும் பற்றி பைபிள் சொல்வது நுட்பமாக முற்றிலும் உண்மை—அசீரிய அரசர்களின் பெயர் குறிப்பிடுவதிலுங்கூட அவ்வாறிருக்கிறது என்பதே!
அசீரிய அரசர்கள்
இந்தப் பூர்வ அரசர்களின் பெயர்கள் உங்களுக்கு விநோதமாய்த் தொனிக்கலாம், எனினும் இவர்களில் குறைந்தபட்சம் ஏழு பேர்களுடனாவது அறிமுகமாவது நல்லது, ஏனெனில் அவர்கள் பைபிளில் கூறப்பட்டுள்ள நிகழ்ச்சிகளோடு நெருங்க சம்பந்தப்பட்டிருக்கிறார்கள்.
சல்மனாசார் III தன் தகப்பன் அஷூர்நசிர்பாலைப் பின்தொடர்ந்து சிங்காசனத்திலேறினான். நிம்ருதில் (காலாகில்) கண்டுபிடிக்கப்பட்டு பிரிட்டிஷ் பொருட்காட்சி சாலையில் வைக்கப்பட்டுள்ள அவனுடைய பிரசித்திப்பெற்ற கறுப்பு சதுரத்தூபி, இஸ்ரவேலின் அரசன் யெகூ அவனுக்குக் கப்பம் செலுத்துவதைக் காட்டும் ஒரு வரைப்படத்தைக் கொண்டிருக்கிறது, ஒருவேளை ஒரு தூதுச்செய்தியாளரின்மூலம் அவ்வாறு செலுத்தியிருக்கலாம்.—2 இராஜாக்கள் 10:31-33-ல் குறிப்பிட்டுள்ள நிலைமைகளை ஒப்பிட்டுப் பாருங்கள்.
பின்னால் அதே நூற்றாண்டில், பெரும்பாலும் பொ.ச.மு. 844-ல் ஒரு சமயம், தீர்க்கதரிசியாகிய யோனா, வரவிருந்த அழிவைக் குறித்து நினிவே பட்டணத்தை எச்சரிக்கும்படி அனுப்பப்பட்டான்.a அந்நகரத்தார் மனந்திரும்பினார்கள் அந்நகரம் அழிக்காமல் விடப்பட்டது. இது நடந்தபோது நினிவேயில் யார் அரசனாயிருந்தானென நமக்குத் திருத்தமாய்த் தெரியாதபோதிலும், அது அசீரியரின் வலியத்தாக்கும் கொடுந்தன்மையில் தளர்வுண்டாயிருந்தக் காலப்பகுதியென்பதைக் கவனிப்பது கவர்ச்சியூட்டுகிறது.
திகிலாத்-பிலேசர் III (பூல் என்றும் அழைக்கப்பட்டான்) பைபிளில் பெயரால் அழைக்கப்பட்டுள்ள முதல் அசீரிய அரசன். இவன் மெனாகேமின் ஆட்சியின்போது இஸ்ரவேலின் வட ராஜ்யத்துக்குள் படையெடுத்தான் (பொ.ச.மு. 791-780). படையெடுப்பதைவிட்டு விலகச் செய்ய மெனாகேம் அவனுக்கு ஆயிரம் தாலந்துகளைச் செலுத்தினான். என்று பைபிளில் சொல்லியிருக்கிறது.—2 இராஜாக்கள் 15:19, 20.
காலாகில் கண்டுபிடிக்கப்பட்ட, தன் சொந்த ஆண்டு வரலாற்றுப் பதிவேடுகளில், திகிலாத்-பிலேசர் பின்வருமாறு கூறி இந்தப் பைபிள்பூர்வ உண்மையை உறுதிப்படுத்துகிறான்: “சமாரியாவின் மெனாகேமிடமிருந்து . . . நான் கப்பம் பெற்றேன்.”
சமாரியா வீழ்ச்சியுறுகிறது
எனினும், சமாரியாவும் இஸ்ரவேலின் வட பத்துக் கோத்திர ராஜ்யமும் அசீரியரோடு மட்டுமல்ல ஆனால் வானத்தையும் பூமியையும் படைத்தவராகிய யெகோவா தேவனுடனும் தொந்தரவில் இருந்தனர். அவர்கள் அவரை வணங்குவதைவிட்டு விலகி பாகாலின் ஒழுக்கங்கெட்ட, குடிவெறி களியாட்ட வணக்கத்தில் ஈடுபட்டனர். (ஓசியா 2:13) யெகோவாவின் தீர்க்கதரிசிகளின்மூலம் அவர்கள் மிகுதியான எச்சரிக்கையைப் பெற்றபோதிலும், அவர்கள் அதைவிட்டுத் திரும்ப மறுத்துவிட்டனர். ஆகவே தீர்க்கதரிசி ஓசியா பின்வருமாறு எழுதும்படி தேவாவியால் ஏவப்பட்டான்: “சமாரியாவின் ராஜா [சமாரியாவும் அவள் அரசனும், NW] தண்ணீரின்மேல் இருக்கிற நுரையைப்போல் அழிந்துபோவான்.” (ஓசியா 10:7; 2 இராஜாக்கள் 17:7, 12-18) அசீரியர்கள் இதை இஸ்ரவேலருக்குச் செய்தார்கள்—நாம் பார்க்கப்போகிறபடி, அசீரியரின் சொந்தப் பதிவுகளும் காட்டுகின்றன.
சல்மனாசார் V, திகிலாத்-பிலேசரைப் பின்தொடர்ந்து அரசனானான், இவன் இஸ்ரவேலின் பத்துக்கோத்திர வட ராஜ்யத்தின்மேல் படையெடுத்து அதன் நன்றாய் அரண்காப்புசெய்யப்பட்ட தலைநகர் சமாரியாவை முற்றுகைப் போட்டான். என்ன நடக்குமென யெகோவாவின் தீர்க்கதரிசிகள் சொன்னபடியே, மூன்று ஆண்டுகள் முற்றுகைக்குப் பின், சமாரியா (பொ.ச.மு. 740-ல்) வீழ்ந்தது.—மீகா 1:1, 6; 2 இராஜாக்கள் 17:5.
சர்கோன் II சல்மனாசாரைப் பின்தொடாந்து அரசனானான். இவனுடைய ஆட்சியின் தொடக்கமும் சமாரியா வீழ்ந்த ஆண்டும் ஒன்றேயென சொல்லப்படுவதனால், சமாரியாவைக் கைப்பற்றுவதை இவன் பூர்த்திச் செய்திருக்கலாம். சமாரியா வீழ்ந்தப் பின், அசீரியாவின் அரசன் “இஸ்ரவேலை அசீரியாவுக்குச் சிறையாகக் கொண்டுபோ”னான் என்று பைபிளில் சொல்லியிருக்கிறது. (2 இராஜாக்கள் 17:6) கொர்சபாத்தில் கண்டுபிடிக்கப்பட்ட ஓர் அசீரிய கல்வெட்டு எழுத்துப் பொறிப்பு இதை உறுதிப்படுத்துகிறது: அதில் சர்கோன் கூறுவதாவது: “நான் சமாரியாவை முற்றுகையிட்டுக் கைப்பற்றினேன், கொள்ளைச் செல்வமாக அதன் 27,290 குடியிருப்பாளர்களை கடத்திச் சென்றேன்.”
இஸ்ரவேலர் தேசத்தைவிட்டு வெளியேறியபின், அசீரியாவின் அரசன் மற்ற நாடுகளிலிருந்து ஜனங்களைக் கொண்டுவந்து “அவர்களை இஸ்ரவேல் புத்திரருக்குப் பதிலாகச் சமாரியாவின் பட்டணங்களிலே குடியேற்றினான்; இவர்கள் சமாரியாவைச் சொந்தமாய்க் கட்டிக்கொண்டு அதின் பட்டணங்களிலே குடியிருந்தார்கள்,” என்று பைபிளில் மேலும் சொல்லியிருக்கிறது.—2 இராஜாக்கள் 17:24.
இதையும் அசீரிய பதிவுகள் உறுதிப்படுத்துகின்றனவா? ஆம், நிம்ருத் பட்டகையில் பதிவுசெய்யப்பட்ட சர்கோனின் சொந்த ஆண்டு வரலாற்றுப் பதிவேடுகளில் பின்வருமாறு சொல்லியிருக்கிறது: “நான் சமாரிய நகரத்தை மீண்டும் புதுப்பித்தேன் . . . என் சொந்தக் கைகளால் வெற்றிப்பெற்றுக் கைப்பற்றின நாடுகளிலிருந்து ஜனங்களை அதற்குள் கொண்டுவந்தேன்.”—Illustrations of Old Testament History, R.D. Barnett, பக்கம் 52.
எருசலேம் காப்பாற்றப்படுகிறது
சனகெரிப், சார்கோனின் குமாரன் அவனுக்குப் பின் சிங்காசனத்திலேறினவன், பைபிள் மாணாக்கர் இவனைப்பற்றி நன்றாய் அறிந்துள்ளனர். போர் மனப்பான்மைகொண்ட இந்த அரசன், பொ.ச.மு. 732-ல் யூதாவின் தென் ராஜ்யத்துக்கு எதிராகப் பலத்தப் போர் இயந்திரத்தைக் கொண்டுவந்தான்.
அசீரியா ராஜாவாகிய சனகெரிப் யூதாவிலிருக்கிற அரணான சகல பட்டணங்களுக்கும் விரோதமாய் வந்து அவைகளைப் பிடித்தான்,” என்று பைபிளில் சொல்லியிருக்கிறது. எருசலேமின் அரசன் எசேக்கியா இதால் பயமடைந்து, “லாகீசிலுள்ள அசீரியா ராஜாவுக்கு ஆள் அனுப்பி,” யூதா ராஜ்யத்தின்மீது படையெடுப்பதை விட்டுச் செல்லும்படி தான் அவனுக்குப் பெரும் கப்பம் செலுத்த ஒப்புக்கொள்வதாகக் கூறினான்.—2 இராஜாக்கள் 18:13, 14.
சனகெரிப் தான் லாகீசில் இருந்ததாக உறுதிசெய்கிறானா? நிச்சயமாகவே! நினிவேயில் தொல்பொருள் ஆராய்ச்சியாளர் ஆராய்ந்த அவனுடைய மிகப் பெரிய அரண்மனையின் பெரும் சுவர் பரப்புகளில் இந்த முற்றுகையின் காட்சிகளைக் காட்சிப்படுத்தி வைத்திருக்கிறான். பிரிட்டிஷ் பொருட்காட்சிச்சாலையிலுள்ள இந்த நுட்பவிவரமான காட்சி படங்கள் லாகீஸ் தாக்குதலுக்குட்பட்டிருப்பதைக் காட்டுகின்றன. அதன் குடிமக்கள் சரணடைந்து திரளாய் வெளியேறுகின்றனர். சிறைப்பட்டவர்கள் கொண்டுசெல்லப்படுகின்றனர். சிலர் கம்பங்களில் அறையப்படுகின்றனர். மற்றவர்கள், பைபிள் விவரப்பதிவில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள அதே ஆளாகிய சனகெரிப்புக்கு வணக்கப் பணிவறிவிப்பு செய்கின்றனர். ஆப்புவடிவ கியூனிஃபார்ம் எழுத்துக்களில் பொறித்து வைக்கப்பட்ட பதிவு பின்வருமாறு சொல்லுகிறது: “சனகெரிப், உலகத்தின் அரசன், அசீரியாவின் அரசன், நிமெது-சிங்காசனத்தின்மீது வீற்றிருந்து லாகீசிலிருந்து (எடுக்கப்பட்ட) கொள்ளைச் செல்வங்களைப் பார்வையிட்டுக் கடந்துசென்றான்.”
எசேக்கியா “முந்நூறு தாலந்து வெள்ளியையும் முப்பது தாலந்து பொன்னையும்” கப்பமாகச் செலுத்தினான் என்று பைபிளில் சொல்லியிருக்கிறது. (2 இராஜாக்கள் 18:14, 15) இதைச் செலுத்தினது சனகெரிப்பின் ஆண்டு வரலாற்றுப் பதிவெடுகளில் உறுதிசெய்யப்பட்டிருக்கிறது, எனினும் அதில் அவன் “800 தாலந்துகள் வெள்ளி”யைப் பெற்றதாக உரிமைபாராட்டுகிறான்.
இதைச் செலுத்தினபோதிலும், இந்த அசீரிய அரசனின் தூதுவர் எருசலேமின் மதில்களுக்கு வெளியே நின்று, யெகோவா தேவனை ஏளனஞ்செய்து, அவருடைய பரிசுத்த நகரத்தைத் தாக்குவதாகப் பயமுறுத்தினார்கள். எருசலேமுக்குள்ளிருந்த ஏசாயாவின்மூலம், யெகோவா சனகெரிப்பைக் குறித்துப் பின்வருமாறு கூறினார்: “அவன் இந்த நதரத்திற்குள் பிரவேசிப்பதில்லை; இதின்மேல் அம்பு எய்வதுமில்லை; இதற்குமுன் கேடகத்தோடே வருவதுமில்லை; இதற்கு எதிராகக் கொத்தளம் போடுவதுமில்லை. அவன் இந்த நகரத்திற்குள் பிரவேசியாமல், தான் வந்தவழியே திரும்பிப்போவான்.”—2 இராஜாக்கள் 18:17–19:8, 32, 33.
தாம் வாக்குக் கொடுத்தபடி, யெகோவா சனகெரிப்பைத் தடுத்து நிறுத்தினாரா? அதே இரவில் கடவுளுடைய தூதனால் 1,85,000 அசீரியர்கள் கொல்லப்பட்டனர்! சனகெரிப் அங்கிருந்து விலகி நினிவேக்குத் திரும்பிச் சென்றுவிட்டான், பின்னால் தன் தெய்வம் நிஸ்ரோகைப் பணிந்து வணங்குகையில் தன் சொந்தக் குமாரரில் இருவரால் கொல்லப்பட்டான்.—2 இராஜாக்கள் 19:35-37.
அகந்தையுள்ள சனகெரிப் இவ்வாறு தன் படைகளை இழந்ததைப் பற்றிப் பெருமைபாராட்டும்படி எதிர்பார்க்க முடியாது. ஆனால் அவன் உண்மையில் சொல்வது கவனத்தைக் கவருகிறது. ஓரியன்டல் இன்ஸ்டிட்யூட் பட்டகை மற்றும் டேய்லர் பட்டகை ஆகிய இரண்டிலும் பதிவுசெய்யப்பட்டுள்ள அவனுடைய ஆண்டு வரலாற்றுப் பதிவுகள் பின்வருமாறு சொல்லுகின்றன: “யூதனான எசேக்கியாவோ, அவன் என் நுகத்துக்குக் கீழ்ப்படியவில்லை, அவனுடைய 46 பலத்தப் பட்டணங்களையும், அரண்காப்பிடங்களையும் சுற்றுப்புறத்திலிருந்த எண்ணற்றச் சிறு கிராமங்களையும் நான் முற்றுகையிட்டு, (அவற்றைக்) கைப்பற்றினேன் . . . அவனை எருசலேமில், அவனுடைய அரச மாளிகையிலேயே, கூட்டிலுள்ள பறவையைப்போல், கைதியாக்கினேன்.” மேலும் சனகெரிப், “என் மேலாண்மை ஆட்சியின் திகிலூட்டும் புகழொளி” எசேக்கியாவை மூழ்க்கடித்துவிட்டது. எனினும், “பலத்தப் பட்டணங்களையும்” “சிறு கிராமங்களையும்” பற்றி அவன் சொன்னதுபோல், தான் எசேக்கியாவைச் சிறைப்பிடித்ததாக அல்லது எருசலேமைக் கைப்பற்றினதாக அவன் சொல்லுகிறதில்லை ஏன்? பைபிள் காட்டுகிற பிரகாரம், அவ்வாறு செய்யும்படி சனகெரிப் அனுப்பின மிகச் சிறந்தத் தெரிந்தெடுக்கப்பட்ட படைகள் அழிக்கப்பட்டுப்போயின!
எசரத்தோன், சனகெரிப்புக்குப் பின் சிங்காசனத்திலேறின அவனுடைய ஓர் இளைய குமாரன். இவன் பைபிளில்—இராஜாக்களின் இரண்டாம் புத்தகம், எஸ்றா, ஏசாயா ஆகியவற்றில் மூன்று தடவைகள் பெயர்குறிப்பிடப்பட்டிருக்கிறான். யூதாவின் அரசனான மனாசேயை அசீரியர்கள் கைதுசெய்தார்களென பைபிளில் பதிவு செய்திருக்கிறது. தொல்பொருள் ஆராய்ச்சியாளர், எசரத்தோனுக்குக் கப்பம் செலுத்தினவர்களுக்குள் “மனாசே யூதாவின் அரசன்” என்று சேர்க்கப்பட்டுள்ள ஓர் அசீரிய பெயர்ப்பட்டியலைக் கண்டுபிடித்தனர்.—2 நாளாகமம் 33:11.
அஷூர்பானிப்பால், எசரத்தோனின் குமாரன், “பெரியவரும் பேர்பெற்றவருமான அஸ்னாப்பார்” என எஸ்றா 4:10-ல் குறிப்பிடப்பட்டுள்ளவனென எண்ணப்படுகிறது. இவன் அசீரிய பேரரசை அதன் மிகப் பெரிய பரப்பளவுக்கு விரிவாக்கினான்.
ஓர் உலக வல்லரசின் முடிவு
அசீரியாவின் கொடுமையான பொல்லாப்பினிமித்தம், அதற்கு அழிவு தீர்ப்பளிக்கப்பட்டது. அதன் தலைநகராகிய நினிவே அரண் உடைந்துபோம் “நதியோர வாசல்கள் திறக்கும், அரமனை கரைந்துபோம்,” என யெகோவாவின் தீர்க்கதரிசி நாகூம் எழுதியிருந்தான். வெள்ளியும் பொன்னும் கொள்ளையிடப்படும், நகரம் பாழாக்கப்படும், ஜனங்கள்: “நினிவே பாழாய்ப்போனாள், அவளுக்காகப் பரிதபிக்கிறவர் யார்”? என்று சொல்வார்கள்.—நாகூம் 2:6-10; 3:7.
இதுவும் நடந்ததா? நினிவேயைக் கைப்பற்றினவர்களே பதில்சொல்லட்டும். பொ.ச.மு. 632-ல், பாபிலோனியரும் மேதியரும் இந்த அசீரிய தலைநகரின்மீது மிகக் கடுமையாய்ப் பழிவாங்கினார்கள். பாபிலோனின் வரலாற்றுப்பதிவுகள் பின்வருமாறு அறிவிக்கின்றன: “அந்நகரத்தின் மற்றும் கோவிலின் பெரும் கொள்ளைப்பொருட்களை அவர்கள் எடுத்துச் சென்று அந்நகரத்தை பாழும் மண்மேடாக்கினார்கள்.”
இந்த ஒருகால பெருமையான தலைநகரம் இருந்த இடத்தை இப்பொழுது இரண்டு பெரும் மண்மேடுகளே குறித்து நிற்கின்றன. எந்தத் தேசமும்—பெருமையும் கொடுமையும் நிறைந்த அசீரியாவுங்கூட—யெகோவாவின் தீர்க்கதரிசனங்களின் நிச்சய நிறைவேற்றத்தைத் தடுத்து நிறுத்தமுடியாது என்ற உண்மைக்கு இவை மெளனமான அத்தாட்சிகளாயிருக்கின்றன. (w88 2⁄15)
[அடிக்குறிப்புகள்]
a பைபிள் காலக்கணக்கு சுட்டிக்காட்டும் தேதிகளை நாங்கள் ஒப்புக்கொள்கிறோம். அவை அவ்வளவு நம்பத்தகுந்ததாக இல்லாத உலகப்பிரகாரமான கணக்குகளின் பேரில் சார்ந்த பூர்வ தேதிகளிலிருந்து வித்தியாசப்படுகின்றன. பைபிள் காலக்கணக்கைப் பற்றிய பூர்த்தியான கலந்தாலோசிப்புக்காக ஏய்ட் டு பைபிள் அன்டர்ஸ்டான்டிங் பக்கங்கள் 322-48, விசேஷமாக பக்கங்கள் 325-லிலுள்ள அசிரியாவிவைப் பற்றிய பகுதியைப் பார்க்கவும்.
[பக்கம் 24-ன் அட்டவணை]
(For fully formatted text, see publication)
பெருங் கடல்
அசீரிய சாம்ராஜ்யம்
நினிவே
தமஸ்கு
சமாரியா
எகிப்து
லாகீஸ்
எருசலேம்
பாபிலோன்
அராபியா
[படத்திற்கான நன்றி]
Based on a map copyrighted by Pictorial Archive (Near Eastern History) Est. and Survey of Israel
[பக்கம் 26-ன் படம்]
கொல்லப்பட்ட சிங்கங்களின்மீது அரசன் அஷூர்பானிப்பால் திராட்ச மதுவைப் பானபலியாக ஊற்றுகிறான். இது நிம்ரோதை உங்களுக்கு நினைப்பூட்டுகிறதா?
[படத்திற்கான நன்றி]
Courtesy of the British Museum, London
Tell Lachish. This important outpost in the southwest guarded the Judean hill country until the Assyrians laid siege to Lachish and conquered it
[படத்திற்கான நன்றி]
Pictorial Archive (Near Eastern History) Est.
[பக்கம் 28-ன் படம்]
இந்த அசீரிய செதுக்கோவிய காட்சி படம் யூதேய பட்டணமாகிய லாகீஸ் முற்றுகையின் கீழ் தாக்குதலுக்குட்பட்டிருப்பதை காட்டுகிறது
[பக்கம் 28-ன் படம்]
டெல் லாகீஸ். லாகீஸை அசீரியர் முற்றுகையிட்டு அதைக் கைப்பற்றும் வரை தென்மேற்கிலுள்ள இந்த முக்கியமான காவற்கூடம் யூதேய மலைப்பிரதேசத்தைக் காத்து வந்தது
[பக்கம் 29-ன் படம்]
சிங்காசனத்துக்கு உரிமையுள்ள இளவரசன் சனகெரிப் என தோன்றும் ஓர் அசீரிய அதிகாரியை நோக்கி (இடபுறம்) நிற்கும் சர்கோன் II-ன் செதுக்கோவியம்