நாகூம்
2 உன்னை* துரத்துகிறவன் உன்னைத் தாக்க வந்திருக்கிறான்.+
உன்னுடைய கோட்டைகளைப் பாதுகாத்துக்கொள்.
வழியெல்லாம் காவலர்களை நிறுத்து.
போருக்குத் தயாராகு, பலத்தையெல்லாம் ஒன்றுதிரட்டு.
2 யாக்கோபை யெகோவா திரும்பவும் பெருமைப்படுத்துவார்.
இஸ்ரவேலை மறுபடியும் மகிமைப்படுத்துவார்.
சூறையாடுகிறவர்கள் அவர்களைச் சூறையாடினார்களே.+
அவர்களுடைய திராட்சைக் கொடிகளை நாசமாக்கினார்களே.
3 உன்னைத் துரத்துகிறவனுடைய* வீரர்களின் கேடயங்கள் சிவப்பாக இருக்கின்றன.
அவனுடைய மாவீரர்கள் கருஞ்சிவப்பு உடை போட்டிருக்கிறார்கள்.
அவன் போருக்குத் தயாராகும் நாளில்
அவனுடைய போர் ரதங்களின் இரும்புத் தகடுகள் நெருப்புபோல் தகதகக்கின்றன.
வீரர்கள் ஈட்டிகளைச் சுழற்றுகிறார்கள்.
4 போர் ரதங்கள் வீதிகளில் வெறித்தனமாக ஓடுகின்றன.
பொது சதுக்கங்களில் அங்குமிங்கும் பாய்ந்து போகின்றன.
அவை தீப்பந்தங்களைப் போலப் பிரகாசிக்கின்றன, மின்னலைப் போலப் பளிச்சிடுகின்றன.
5 ராஜா தன்னுடைய படை அதிகாரிகளைக் கூப்பிடுவார்.
அவர்கள் விழுந்தடித்துக்கொண்டு வருவார்கள்.
மதில் பக்கமாய் அவசரமாக ஓடுவார்கள்.
பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்வார்கள்.
6 ஆறுகளின் மதகுகள் திறக்கப்படும்.
அரண்மனையும் இருந்த இடம் தெரியாமல் போய்விடும்.
7 தீர்ப்பு இதுதான்: அவள்* வெறுமையாக்கப்படுவாள், வேறு தேசத்துக்குப் பிடித்துக்கொண்டு போகப்படுவாள்.
அவளுடைய அடிமைப் பெண்கள் புலம்புவார்கள்.
புறாவைப் போல முனகுவார்கள், நெஞ்சில் அடித்துக்கொள்வார்கள்.
8 இத்தனை காலமாக நினிவே+ ஒரு குளத்தைப் போல் இருந்தாள்.
ஆனால் இப்போது எல்லாரும் அவளைவிட்டு ஓடிப்போகிறார்கள்.
“நில்லுங்கள்! நில்லுங்கள்!” என்ற சத்தம் கேட்கிறது.
ஆனால், யாரும் திரும்பிக்கூடப் பார்ப்பதில்லை.+
9 வெள்ளியைச் சூறையாடுங்கள், தங்கத்தைக் கைப்பற்றுங்கள்!
அங்கே புதையல்கள் கொட்டிக்கிடக்கின்றன.
விலை உயர்ந்த பொருள்களும் குவிந்துகிடக்கின்றன.
10 நகரம் வெறுமையாக்கப்பட்டது, பாழாக்கப்பட்டது, நாசமாக்கப்பட்டது!+
பயத்தில் ஜனங்களுடைய இதயம் படபடக்கிறது,
கால் நடுநடுங்குகிறது, இடுப்பு கிடுகிடுவென ஆடுகிறது.
எல்லாருடைய முகமும் வெளுத்துப்போகிறது.
11 சிங்கங்களின் குகை எங்கே?+ இளம் சிங்கங்கள் இரை தின்ற இடம் எங்கே?
சிங்கம் தன் குட்டிகளோடு சுற்றிவந்த இடம் எங்கே?
அவை பயமில்லாமல் திரிந்த இடம் எங்கே?
12 ஆண் சிங்கம் இரையைக் கடித்துக் குதறி தன் குட்டிகளுக்குப் போட்டது.
மிருகங்களைக் கொன்று பெண் சிங்கங்களுக்குக் கொடுத்தது.
தன் குகைகளை இரையால் நிரப்பியது.
பீறிப்போட்ட மிருகங்களை அங்கே குவித்து வைத்தது.
13 பரலோகப் படைகளின் யெகோவா சொல்வது இதுதான்:
“நான் உன்னைத் தண்டிப்பேன்.+
உன்னுடைய போர் ரதங்களை எரித்துப் புகைக்காடாக்குவேன்.+
உன் இளம் சிங்கங்கள் வாளுக்குப் பலியாகும்.
நீ எங்குமே வேட்டையாட முடியாதபடி செய்துவிடுவேன்.
உன் தூதுவர்களின் சத்தம் இனி கேட்காது.”+