உதவிக்காக நாம் கூப்பிடும்போது யெகோவா கேட்கிறார்
“கர்த்தருடைய கண்கள் நீதிமான்கள்மேல் நோக்கமாயிருக்கிறது; அவருடைய செவிகள் அவர்கள் கூப்பிடுதலுக்குத் திறந்திருக்கிறது.”—சங். 34:15.
1, 2. (அ) இன்று அநேகர் எவ்வாறு உணருகிறார்கள்? (ஆ) இதைக் குறித்து நாம் ஏன் ஆச்சரியப்பட வேண்டாம்?
நீங்கள் துன்பத்திலும் துயரத்திலும் சிக்கித் தவிக்கிறீர்களா? கவலைப்படாதீர்கள், இன்று அநேகருடைய நிலைமை அப்படித்தான் இருக்கிறது. லட்சோபலட்ச மக்களுக்கு இந்தப் பொல்லாத உலகத்தில் தினம் தினம் வாழ்க்கை ஒரு போராட்டமாகவே இருக்கிறது. பிரச்சினைகளிலிருந்து மீளவே முடியாது என்று சிலர் நினைக்கிறார்கள். அவர்கள் சங்கீதக்காரனான தாவீது உணர்ந்ததைப் போலவே உணரலாம். அவர் எழுதினார்: “நான் பெலனற்றுப்போய், மிகவும் நொறுக்கப்பட்டேன்; என் இருதயத்தின் கொந்தளிப்பினால் கதறுகிறேன். என் உள்ளம் குழம்பி அலைகிறது; என் பெலன் என்னை விட்டு விலகி, என் கண்களின் ஒளி முதலாய் இல்லாமற்போயிற்று.”—சங். 38:8, 10.
2 வாழ்க்கையில் வேதனைகளை எதிர்ப்படுவது கிறிஸ்தவர்களாகிய நமக்கு ஒன்றும் புதிதல்ல. ‘வேதனைகள்,’ இயேசுவின் பிரசன்னத்திற்குரிய அடையாளங்களின் பாகமாக இருக்கும் என முன்னுரைக்கப்பட்டிருப்பது நமக்குத் தெரியும். (மாற். 13:8; மத். 24:3) இந்த வசனத்தில், ‘வேதனைகள்’ என்று மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் கிரேக்க வார்த்தை, குழந்தை பிறக்கும் சமயத்தில் ஏற்படும் தாங்க முடியாத பிரசவ வேதனையைக் குறிக்கிறது. ‘கையாளுவதற்குக் கடினமான’ இந்த ‘கொடிய காலத்தில்’ மக்கள் அனுபவிக்கும் தாங்க முடியாத துயரத்தை இந்த வார்த்தை எவ்வளவு தத்ரூபமாகப் படம்பிடித்துக் காட்டுகிறது!—2 தீ. 3:1; NW.
யெகோவா நம் வேதனைகளைப் புரிந்துகொள்கிறார்
3. கடவுளுடைய ஜனங்கள் எதைக் குறித்து நன்கு அறிந்திருக்கிறார்கள்?
3 இப்படிப்பட்ட வேதனைகளுக்குத் தாங்கள் விதிவிலக்கு அல்ல என்பதை யெகோவாவின் சாட்சிகள் நன்றாக அறிந்திருக்கிறார்கள். அதோடு, நிலைமைகள் நாளுக்கு நாள் மோசமாகிக்கொண்டே போகும் என்பதிலும் அவர்களுக்கு எந்தச் சந்தேகமும் இல்லை. மனிதகுலம் பொதுவாக அனுபவிக்கும் பிரச்சினைகளோடு சேர்த்து, ‘எதிராளியாகிய பிசாசிடமிருந்து’ வருகிற பிரச்சினைகளையும் கடவுளுடைய ஊழியர்கள் சமாளிக்க வேண்டியிருக்கிறது. அவன் நம் விசுவாசத்தைக் குலைத்துப்போடவேண்டும் என்று கங்கணம்கட்டிக்கொண்டு இருக்கிறான். (1 பே. 5:8) எனவே, தாவீதைப் போலவே நாமும் இப்படி எளிதில் உணரலாம்: “நிந்தை என் இருதயத்தைப் பிளந்தது; நான் மிகவும் வேதனைப் படுகிறேன்; எனக்காகப் பரிதபிக்கிறவனுண்டோ என்று காத்திருந்தேன், ஒருவனும் இல்லை; தேற்றுகிறவர்களுக்குக் காத்திருந்தேன், ஒருவனையும் காணேன்”!—சங். 69:20.
4. நாம் வேதனைகளை அனுபவிக்கையில் எது நமக்கு ஆறுதல் அளிக்கிறது?
4 தன்னைத் தேற்றுவதற்கு யாருமே இல்லை என்ற அர்த்தத்தில் தாவீது அப்படிச் சொன்னாரா? இல்லவே இல்லை. ஏனெனில், அதே சங்கீதத்தில் அவர் தொடர்ந்து என்ன சொல்கிறார் என்பதைக் கவனியுங்கள்: “கர்த்தர் எளியவர்களின் விண்ணப்பத்தைக் கேட்கிறார், கட்டுண்ட தம்முடையவர்களை [அல்லது, “சிறைப்பட்ட தம் மக்களை,” பொது மொழிபெயர்ப்பு] அவர் புறக்கணியார்.” (சங். [திருப்பாடல்கள்] 69:33) ஒரு விதத்தில், துன்பங்களும் வேதனைகளும் நம்மைச் சிறைப்படுத்தி வைத்திருப்பதுபோல் சில சமயங்களில் நாம் உணரலாம். நம்முடைய நிலைமையை மற்றவர்கள் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை என்று நாம் நினைக்கலாம். ஒருவேளை அவர்கள் புரிந்துகொள்ளாமலும்கூட இருக்கலாம். ஆனால், யெகோவா நம்முடைய வேதனைகளை முழுவதுமாகப் புரிந்துகொள்கிறார் என்பதை அறியும்போது தாவீதைப்போல் நமக்கும் அது ஆறுதலை அளிக்கிறதல்லவா!—சங். 34:15.
5. எதைக் குறித்து சாலொமோன் ராஜா உறுதியாக இருந்தார்?
5 இந்த உண்மையை தாவீதின் மகனான சாலொமோன் எருசலேமின் ஆலயப் பிரதிஷ்டையின்போது வலியுறுத்திக் காட்டினார். (2 நாளாகமம் 6:29-31-ஐ வாசியுங்கள்.) தங்களுடைய “வாதையையும் வியாகுலத்தையும்” குறித்து, நல்மனம் படைத்த ஒவ்வொருவர் செய்யும் ஜெபங்களுக்கும் செவிசாய்க்கும்படி யெகோவாவிடம் சாலொமோன் கெஞ்சிக் கேட்டார். இப்படி வேதனையில் இருப்பவர்கள் செய்யும் ஜெபங்களைக் கடவுள் கேட்கிறாரா? ஆம், கேட்கிறார், கேட்பதோடு மட்டும் நிறுத்திக்கொள்ளாமல் அவர்களுக்கு உதவவும் செய்கிறார் என்று சாலொமோன் உறுதியாக நம்பினார். ஏன்? ஏனென்றால், ‘மனுப்புத்திரரின் இருதயத்தில்’ இருப்பதை யெகோவா நன்கு அறிந்திருக்கிறார்.
6. கவலைகளை நாம் எப்படிச் சமாளிக்கலாம், ஏன்?
6 அதேபோல் நாமும் நம்முடைய தனிப்பட்ட வேதனைகளையும், ‘வாதைகளையும் வியாகுலங்களையும்,’ குறித்து யெகோவாவிடம் ஜெபிக்கலாம். அவர் நம்முடைய வேதனைகளை நன்கு புரிந்திருப்பதோடு நம்மீது அக்கறையுள்ளவராகவும் இருக்கிறார் என்பதை அறிந்திருப்பது நமக்கு ஆறுதல் அளிக்கிறது. இதை உறுதிப்படுத்தி அப்போஸ்தலன் பேதுரு பின்வருமாறு சொல்கிறார்: “அவர் உங்களை விசாரிக்கிறவரானபடியால் [“அவர் உங்கள்மீது அக்கறையுள்ளவராக இருப்பதால்,” NW], உங்கள் கவலைகளையெல்லாம் அவர்மேல் வைத்துவிடுங்கள்.” (1 பே. 5:7) நமக்கு என்ன நடக்கிறது என்பதைப்பற்றி யெகோவா அக்கறையுள்ளவராக இருக்கிறார். யெகோவா நம்மீது அன்பும் அக்கறையும் வைத்திருக்கிறார் என்பதை வலியுறுத்தி இயேசு இவ்வாறு சொன்னார்: “ஒரு காசுக்கு இரண்டு அடைக்கலான் குருவிகளை விற்கிறார்கள் அல்லவா? ஆயினும் உங்கள் பிதாவின் சித்தமில்லாமல், அவைகளில் ஒன்றாகிலும் தரையிலே விழாது. உங்கள் தலையிலுள்ள மயிரெல்லாம் எண்ணப்பட்டிருக்கிறது. ஆதலால், பயப்படாதிருங்கள்; அநேகம் அடைக்கலான் குருவிகளைப்பார்க்கிலும் நீங்கள் விசேஷித்தவர்களாயிருக்கிறீர்கள்.”—மத். 10:29-31.
யெகோவா அளிக்கும் உதவியில் சார்ந்திருங்கள்
7. என்ன விதங்களில் உதவி கிடைக்குமென நமக்கு உறுதி அளிக்கப்பட்டிருக்கிறது?
7 துன்பத்திலும் துயரத்திலும் நாம் சிக்கித் தவிக்கையில் அதிலிருந்து நம்மை விடுவிக்க யெகோவா விரும்புகிறார், அவரால் விடுவிக்கவும் முடியும் என்பதில் நமக்கு துளியும் சந்தேகம் வேண்டாம். “தேவன் நமக்கு அடைக்கலமும் பெலனும், ஆபத்துக்காலத்தில் அநுகூலமான துணையுமானவர்.” (சங். 34:15-18; 46:1) ஆனால், அந்த உதவியை அவர் நமக்கு எவ்வாறு அளிக்கிறார்? 1 கொரிந்தியர் 10:13 என்ன சொல்கிறது என்பதைக் கவனியுங்கள்: “மனுஷருக்கு நேரிடுகிற சோதனையேயல்லாமல் வேறே சோதனை உங்களுக்கு நேரிடவில்லை. தேவன் உண்மையுள்ளவராயிருக்கிறார்; உங்கள் திராணிக்கு மேலாக நீங்கள் சோதிக்கப்படுகிறதற்கு அவர் இடங்கொடாமல், சோதனையைத் தாங்கத்தக்கதாக, சோதனையோடுகூட அதற்குத் தப்பிக்கொள்ளும்படியான போக்கையும் உண்டாக்குவார்.” நம் கஷ்டங்கள் தீரும் விதத்தில் காரியங்களை அவர் வழிநடத்தலாம் அல்லது, கஷ்டங்களைச் சகித்துக்கொள்ள அவர் நமக்குப் பலத்தை அளிக்கலாம். இவ்விரண்டில் ஏதாவது ஒரு வழியில் யெகோவா நமக்கு உதவி அளிக்கிறார்.
8. கடவுளிடமிருந்து உதவியைப் பெற்றுக்கொள்ள நாம் என்ன செய்ய வேண்டும்?
8 கடவுள் அளிக்கும் அந்த உதவியைப் பெற்றுக்கொள்ள நாம் என்ன செய்ய வேண்டும்? நமக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் ஆலோசனையைக் கவனியுங்கள்: ‘உங்கள் கவலைகளை எல்லாம் அவர்மேல் வைத்துவிடுங்கள்.’ அப்படியென்றால் அடையாள அர்த்தத்தில், நம்முடைய எல்லா கவலைகளையும் யெகோவாவே பார்த்துக்கொள்ளும்படி அவரிடம் ஒப்படைத்துவிடவேண்டும். நாம் கவலைப்பட்டுக்கொண்டே இருக்காமல் நம்முடைய தேவைகளை யெகோவா பார்த்துக்கொள்வார் என்று பொறுமையாக அவரை நம்பி காத்திருக்க வேண்டும். (மத். 6:25-32) அப்படி நம்பிக்கை வைப்பதற்கு நமக்குத் தேவை மனத்தாழ்மை. நம்முடைய சொந்த பலத்திலோ ஞானத்திலோ நாம் சார்ந்திருக்கக்கூடாது. மனத்தாழ்மையோடு ‘கடவுளுடைய பலத்த கைக்குள் அடங்கியிருப்பதன்மூலம்’ நம் சொந்த பலத்தால் எதையும் செய்ய முடியாது என்பதை நாம் ஏற்றுக்கொள்கிறோம். (1 பேதுரு 5:6-ஐ வாசியுங்கள்.) கடவுள் எதையெல்லாம் அனுமதிக்கிறாரோ அதையெல்லாம் தாங்கிக்கொள்ள இது நமக்கு உதவும். நம் பிரச்சினைகளெல்லாம் உடனடியாக தீர்ந்துவிடக்கூடாதா என்று நாம் ஏங்கலாம். ஆனால், நமக்கு எந்தச் சமயத்தில் உதவவேண்டும், எப்படி உதவவேண்டும் என்று யெகோவாவுக்குச் சரியாகத் தெரியும் என்பதில் நாம் நம்பிக்கை வைக்கவேண்டும்.—சங். 54:7; ஏசா. 41:10.
9. தாவீது, என்ன விதமான பாரத்தை யெகோவாமீது வைக்கவேண்டியிருந்தது?
9 சங்கீதம் 55:22-ல் பதிவாகியுள்ள தாவீதின் வார்த்தைகளைச் சற்று நினைவுபடுத்தி பாருங்கள்: “கர்த்தர்மேல் உன் பாரத்தை வைத்துவிடு, அவர் உன்னை ஆதரிப்பார்; நீதிமானை ஒருபோதும் தள்ளாடவொட்டார்.” உணர்ச்சிக் குமுறல்களால் தவித்தபோது தாவீது இந்த வார்த்தைகளை எழுதினார். (சங். 55:4) தன்னுடைய சொந்த மகனான அப்சலோம் தன்னிடமிருந்து ராஜ்யத்தை அபகரிப்பதற்காகச் சூழ்ச்சி செய்த சமயத்தில் இந்தச் சங்கீதம் எழுதப்பட்டதாகத் தெரிகிறது. தாவீதுக்கு மிகவும் நம்பகமான ஆலோசகராக இருந்த அகித்தோப்பேலும் இந்தச் சூழ்ச்சியில் சேர்ந்துகொண்டார். எனவே, உயிரைக் காப்பாற்றிக்கொள்வதற்காக தாவீது எருசலேமிலிருந்து ஓடிப்போக வேண்டியிருந்தது. (2 சா. 15:12-14) இதுபோன்ற நெருக்கடியான சமயங்களிலும் தாவீது தொடர்ந்து கடவுளையே நம்பி இருந்தார். அவர் நம்பிக்கை வீண்போகவில்லை.
10. நாம் வேதனைகளை அனுபவிக்கும்போது என்ன செய்யவேண்டும்?
10 எப்பேர்ப்பட்ட வேதனைகளை அனுபவித்தாலும் சரி, தாவீதைப்போல் நாமும் அவற்றையெல்லாம் ஜெபத்தில் யெகோவாவிடம் ஒப்படைக்கவேண்டியது அவசியமாக இருக்கிறது. இதைக் குறித்து அப்போஸ்தலன் பவுல் நமக்கு என்ன சொல்கிறார் என்பதை நாம் சிந்திப்போம். (பிலிப்பியர் 4:6, 7-ஐ வாசியுங்கள்.) இப்படி நாம் உருக்கமாக ஜெபம் செய்வதன் பலன் என்ன? அப்போது ‘எல்லாப் புத்திக்கும் மேலான தேவசமாதானம் [நம்முடைய] இருதயங்களையும் [நம்முடைய] சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காக்கும்.’
11. “தேவசமாதானம்” எப்படி நம்முடைய இருதயத்தையும் யோசிக்கும் திறனையும் பாதுகாக்கும்?
11 ஜெபம் செய்வதன்மூலம் நம் கஷ்டமான சூழ்நிலை மாறுமா? மாறலாம். ஆனால், ஒரு விஷயத்தை நாம் மறந்துவிடக்கூடாது. யெகோவா எப்போதுமே நாம் எதிர்பார்க்கிற விதத்தில் நம்முடைய ஜெபங்களுக்குப் பதில் அளிக்க மாட்டார். இருந்தாலும், பிரச்சினைகளில் மூழ்கிவிடாமல் சமநிலை காக்க ஜெபம் நமக்கு உதவும். உள்ளக் குமுறல்களால் நாம் நிலைகுலைந்துவிடாமல் சாந்தமாக இருக்க “தேவசமாதானம்” நமக்குத் துணைபுரியும். எதிரிகளுடைய தாக்குதலிலிருந்து ஒரு பட்டணத்தைப் பாதுகாப்பதற்காக நியமிக்கப்பட்டிருக்கும் போர்வீரர்களைப்போல் “தேவசமாதானம்” நம்முடைய இருதயத்தையும் யோசிக்கும் திறனையும் பாதுகாக்கும். நம்முடைய சந்தேகங்கள், பயங்கள், மனச்சோர்வூட்டும் எண்ணங்கள் ஆகியவை நம்மை ஆட்டிப்படைக்காதபடி இது பார்த்துக்கொள்ளும். அதோடு, யோசிக்காமல் அவசரப்பட்டு அல்லது ஞானமற்ற விதத்தில் செயல்படாமலிருக்கவும் இது நமக்கு உதவும்.—சங். 145:18.
12. ஒருவர் எப்படி மனசமாதானத்தோடு இருக்கலாம் என்பதை ஓர் உதாரணத்தோடு விளக்குங்கள்.
12 வேதனையான சமயங்களிலும் நாம் எப்படி மனசமாதானத்தோடு இருக்கலாம்? நம்முடைய நிலைமைக்கு ஓரளவு பொருந்துகிற ஓர் உதாரணத்தைக் கவனியுங்கள். கடுகடுப்பான ஒரு மானேஜரிடம் ஒருவர் வேலை பார்க்கிறார். ஆனால், அந்த கம்பெனியின் முதலாளியோ, கரிசனையோடும் நியாயத்தோடும் நடந்துகொள்கிறவர். அதனால், இவர் தன்னுடைய கஷ்டங்களை எல்லாம் அந்த முதலாளியிடம் சொல்கிறார். அதற்கு அந்த முதலாளி, “உன் நிலைமை எனக்கு நன்றாகப் புரிகிறது, நீ கவலைப்படாதே, சீக்கிரத்தில் அந்த மானேஜரை வேலையை விட்டு தூக்கிவிடுகிறேன்” என்று சொல்லி நம்பிக்கை அளிக்கிறார். அதைக் கேட்டு அந்தப் பணியாளருக்கு எப்படி இருக்கும்? முதலாளி கொடுத்த வாக்குறுதியில் நம்பிக்கை வைப்பதும் விரைவில் தனக்கு விடிவுகாலம் பிறக்கப்போகிறது என்பதை அறிவதும் தொடர்ந்து வேலை செய்ய அவருக்குப் பலத்தை அளிக்கும். இப்படிக் காத்துக்கொண்டு இருக்கும் சமயத்தில் அவர் இன்னும் சில பிரச்சினைகளை அனுபவிக்கவேண்டி இருந்தாலும் அவர் பொறுமையாக இருக்க அந்த நம்பிக்கை அவருக்கு உதவும். அதுபோலவே, யெகோவா நம் சூழ்நிலையைப் புரிந்துகொள்கிறார்; ‘உலகத்தின் அதிபதி புறம்பாகத் தள்ளப்படுவான்’ என்று நமக்கு வாக்குறுதியும் அளித்திருக்கிறார். (யோவா. 12:31) இது நமக்கு எவ்வளவு ஆறுதலாய் இருக்கிறது!
13. ஜெபம் செய்வதோடு நாம் வேறு எதையும் செய்ய வேண்டும்?
13 நம்முடைய பிரச்சினைகளைப்பற்றி யெகோவாவிடம் ஜெபத்தில் சொல்லிவிட்டால் மட்டும் போதுமா? போதாது, அதைவிட அதிகத்தைச் செய்யவேண்டும். ஆம், ஜெபத்திற்கு இசைவாகச் செயல்படவும் வேண்டும். தாவீதைக் கொலை செய்வதற்காக அவருடைய வீட்டிற்கு சவுல் ராஜா ஆள் அனுப்பிவைத்தபோது, தாவீது அதைக் குறித்து இவ்வாறு ஜெபித்தார்: “என் தேவனே, என் சத்துருக்களுக்கு என்னைத் தப்புவியும்; என்மேல் எழும்புகிறவர்களுக்கு என்னை விலக்கி உயர்ந்த அடைக்கலத்திலே வையும். அக்கிரமக்காரருக்கு என்னைத் தப்புவித்து, இரத்தப்பிரியரான மனுஷருக்கு என்னை விலக்கி இரட்சியும்.” (சங். 59:1, 2) ஜெபம் செய்ததோடு நிறுத்தாமல், தன் மனைவி சொன்னதைக் கேட்டு தாவீது அங்கிருந்து தப்பித்துச்செல்ல தேவையான முயற்சிகளையும் எடுத்தார். (1 சா. 19:11, 12) அதேபோல் நாமும் வேதனையான நிலைமைகளைச் சமாளிக்க நடைமுறையான ஞானத்தைத் தரும்படி யெகோவாவிடம் ஜெபம் செய்வதோடு அவற்றிலிருந்து ஓரளவு மீண்டு வருவதற்கு முயற்சியும் எடுக்கலாம்.—யாக். 1:5.
சகித்திருக்க எப்படிப் பலத்தைப் பெறலாம்
14. பிரச்சினைகள் வரும்போது அதைச் சகித்திருக்க எது நமக்கு உதவும்?
14 பிரச்சினைகள் உடனடியாகத் தீராமல் இருக்கலாம். சொல்லப்போனால், சில காலத்திற்கு அவை தொடர்ந்து நீடிக்கலாம். அப்படியென்றால் பிரச்சினைகளைச் சகிக்க எது நமக்கு உதவும்? முதலில் நாம் நினைவில் வைக்கவேண்டியது என்னவென்றால், பிரச்சினைகள் மத்தியிலும் யெகோவாவை நாம் தொடர்ந்து உண்மையோடு சேவித்து வரும்போது, அவர்மீது நமக்கு அன்பு இருக்கிறது என்பதை நிரூபிக்கிறோம். (அப். 14:22) யோபுமீது சாத்தான் சுமத்திய பழியை நினைவில்கொள்ளுங்கள்: “யோபு தேவனுக்குப் பயப்படுவதற்கு தக்க காரணங்கள் உள்ளன! நீர் எப்போதும் அவனையும் அவனது குடும்பத்தையும், அவனுக்கிருக்கும் எல்லாவற்றையும் வேலியடைத்துப் பாதுகாக்கிறீர். அவன் செய்கின்ற எல்லாவற்றிலும் அவனை வெற்றி காணச்செய்தீர். ஆம், நீர் அவனை ஆசீர்வதித்திருக்கிறீர். நாடு முழுவதும் அவனது மந்தைகளும் விலங்குகளும் பெருகி, அவன் மிகுந்த செல்வந்தனாக இருக்கிறான். ஆனால் அவனுக்கிருப்பவை அனைத்தையும் நீர் உமது கையை நீட்டி அழித்துவிட்டால் உம் முகத்திற்கு நேராக உம்மை அவன் சபிப்பான் என்று உறுதியளிக்கிறேன்.” (யோபு 1:9-11, ஈஸி டு ரீட் வர்ஷன்) கடவுளுக்கு உண்மையாக இருந்ததன்மூலம் சாத்தான் சுமத்தின குற்றச்சாட்டு, அபாண்டமான பொய் என யோபு நிரூபித்தார். நாமும் வேதனைமிக்க சூழ்நிலைகளில் சகித்து இருந்தால், சாத்தான் பொய்யன் என்பதை நிரூபிக்க முடியும். அப்படிச் சகித்திருப்பது யெகோவா மீதுள்ள நம் நம்பிக்கையை பலப்படுத்தும்.—யாக். 1:4.
15. என்ன உதாரணங்கள் நம்மைப் பலப்படுத்தும்?
15 மனதில் வைக்கவேண்டிய இரண்டாவது விஷயம் என்னவென்றால், ‘உலகத்திலுள்ள உங்கள் சகோதரரிடத்திலே அப்படிப்பட்ட பாடுகள் நிறைவேறிவருகிறது.’ (1 பே. 5:9) ஆம், “மனுஷருக்கு நேரிடுகிற சோதனையேயல்லாமல் வேறே சோதனை உங்களுக்கு நேரிடவில்லை.” (1 கொ. 10:13) ஆகவே, உங்களுடைய பிரச்சினைகளைப் பற்றியே சதா யோசித்துக்கொண்டு இருக்காமல் மற்றவர்களுடைய உதாரணங்களைப் பற்றி தியானித்தீர்கள் என்றால் பலத்தையும் தைரியத்தையும் பெறுவீர்கள். (1 தெ. 1:5-7; எபி. 12:1) வேதனைமிக்க சூழ்நிலையிலும் உண்மையோடு சகித்திருந்த நபர்களை நீங்கள் அறிந்திருப்பீர்கள். அவர்களுடைய உதாரணத்தைப்பற்றி யோசிக்க நேரம் எடுத்துக்கொள்ளுங்கள். நம்முடைய பிரசுரங்களில் நம் சகோதர சகோதரிகளின் வாழ்க்கை சரிதைகள் பல, வெளியாகி வருகின்றன. அவற்றில், நீங்கள் எதிர்ப்படுவதுபோன்ற பிரச்சினையை எதிர்ப்பட்டவர்களின் அனுபவத்தை நீங்கள் தேடிப் பார்த்திருக்கிறீர்களா? இதுபோன்ற அனுபவங்கள் உங்களுக்கு அதிக தெம்பூட்டுவதாய் இருக்கும்.
16. நாம் பல பிரச்சினைகளில் சிக்கித் தவிக்கையில் கடவுள் நம்மை எப்படிப் பலப்படுத்துகிறார்?
16 நீங்கள் நினைவில் வைக்கவேண்டிய மூன்றாவது விஷயம், யெகோவா ‘இரக்கங்களின் பிதாவும், சகலவிதமான ஆறுதலின் தேவனுமாயிருக்கிறார். . . . தேவனால் நமக்கு அருளப்படுகிற ஆறுதலினாலே, எந்த உபத்திரவத்திலாகிலும் அகப்படுகிறவர்களுக்கு நாம் ஆறுதல்செய்யத் திராணியுள்ளவர்களாகும்படி, நமக்கு வரும் சகல உபத்திரவங்களிலேயும் அவரே நமக்கு ஆறுதல்செய்கிறவர்.’ (2 கொ. 1:3, 4) வேறு வார்த்தைகளில் சொன்னால், யெகோவாதாமே நம் பக்கத்தில் நின்றுகொண்டு நம்மை உற்சாகப்படுத்தி பலப்படுத்துவதுபோல் இருக்கிறது. தற்போது நாம் அனுபவிக்கும் உபத்திரவங்களில் மட்டுமல்ல, நம்முடைய ‘சகல உபத்திரவங்களிலும்’ நம்மைப் பலப்படுத்தி உற்சாகப்படுத்துகிறார். எனவே, மற்றவர்கள் ‘எந்த உபத்திரவத்தில் அகப்பட்டிருந்தாலும்’ அவர்களுக்கு ஆறுதல் அளிக்க இது நமக்கு உதவும். இந்த வார்த்தைகள் நூற்றுக்கு நூறு உண்மை என்பதை பவுல் தன்னுடைய சொந்த அனுபவத்திலிருந்து தெரிந்துகொண்டார்.—2 கொ. 4:8, 9; 11:23-27.
17. பிரச்சினைகளைச் சமாளிப்பதற்கு பைபிள் எவ்வாறு நமக்கு உதவுகிறது?
17 நான்காவதாக, நம்மிடம் கடவுளுடைய வார்த்தையாகிய பைபிள் இருக்கிறது. “தேவனுடைய மனுஷன் தேறினவனாகவும், [“முழு திறமையையும் பெற்றவனாகவும்,” NW] எந்த நற்கிரியையுஞ் செய்யத் தகுதியுள்ளவனாகவும் [“முழுமையான தகுதியை உடையவனாகவும்,” NW] இருக்கும்படியாக, அவைகள் உபதேசத்துக்கும், கடிந்துகொள்ளுதலுக்கும், சீர்திருத்தலுக்கும், நீதியைப் படிப்பிக்குதலுக்கும் பிரயோஜனமுள்ளவைகளாயிருக்கிறது.” (2 தீ. 3:16, 17) தேவனுடைய வார்த்தை வெறுமனே நம்மை ‘திறமையுள்ளவர்களாகவும்’ ‘நற்கிரியைகளை செய்ய தகுதியுள்ளவர்களாகவும்’ மட்டும் ஆக்குவதில்லை. நம்முடைய வாழ்க்கையில் நாம் எதிர்ப்படும் பிரச்சினைகளைச் சமாளிப்பதற்கும் நமக்கு உதவுகிறது. அது, நாம் ‘முழு திறமையையும்,’ ‘முழுமையான தகுதியையும்’ பெற உதவி செய்கிறது. ‘முழுமையான தகுதி’ என்ற வார்த்தை மூல மொழியில் சொல்லர்த்தமாக, ‘முழுவதும் பொருத்தப்பட்ட’ என்ற அர்த்தத்தை தருகிறது. இந்த வார்த்தை, கடல் பயணத்திற்குத் தேவையான எல்லா கருவிகளும் பொருத்தப்பட்ட ஒரு கப்பலை அல்லது எதிர்பார்க்கிற அனைத்தையும் செய்துமுடிக்கிற ஓர் இயந்திரத்தைக் குறிப்பதற்காகப் பழங்காலங்களில் பயன்படுத்தப்பட்டிருக்கலாம். அதேபோல், எந்த விதமான பிரச்சினைகளை நாம் சந்தித்தாலும் சரி, அவற்றைச் சமாளிப்பதற்குத் தேவையான அனைத்தையும் யெகோவா தம்முடைய வார்த்தையின்மூலம் நமக்கு அளிக்கிறார். எனவே, “கடவுள் அனுமதிக்கிறார் என்றால் அவருடைய உதவியோடு என்னால் அதைச் சமாளிக்க முடியும்” என்று நாம் சொல்லலாம்.
நம்முடைய எல்லா வேதனைகளிலிருந்தும் விடுதலை
18. எதை நாம் மனதில் வைத்திருப்பது, உண்மையோடு சகித்திருக்க நமக்குக் கூடுதலான உதவியை அளிக்கும்?
18 ஐந்தாவதாக, எல்லா வேதனைகளிலிருந்தும் வெகு விரைவில் யெகோவா மனிதர்களை விடுவிக்கப்போகிறார் என்ற அற்புதமான உண்மையை நாம் எப்போதும் மனதில் வைக்கவேண்டும். (சங். 34:19; 37:9-11; 2 பே. 2:9) கடவுள் இதை நிறைவேற்றுகையில், தற்போது நாம் அனுபவித்து வரும் வேதனைகளிலிருந்து நமக்கு விடுதலை அளிப்பதோடு பரலோகத்தில் இயேசுவுடன் அல்லது பூமியில் பரதீஸான நிலைமையில் நித்திய ஜீவனை அனுபவிப்பதற்கான வாய்ப்பையும் அளிக்கப்போகிறார்.
19. உண்மையோடு சகித்திருப்பது எப்படிச் சாத்தியம்?
19 அதுவரைக்கும் இந்தப் பொல்லாத உலகத்தில் நாம் அனுபவிக்கும் வேதனைகளைச் சமாளித்துக்கொண்டு இருப்போம். பிரச்சினைகளே இல்லாத ஒரு காலத்தைப் பார்க்க நாம் அனைவரும் ஏங்குகிறோம், அல்லவா? (சங். 55:6-8) நாம் பொறுமையோடு சகித்திருப்பது, சாத்தானை ஒரு பொய்யன் என்று நிரூபிக்கும் என்பதை நினைவில் வைத்திருப்போமாக. நம்முடைய சகோதரர்களும் நம்மைப் போன்ற சோதனைகளையே அனுபவிக்கிறார்கள் என்பதை நினைவில்கொண்டு, ஜெபத்தின் மூலமும் கிறிஸ்தவ சகோதர சகோதரிகளிடமிருந்தும் நாம் எப்போதும் பலம் பெறுவோமாக. கடவுளுடைய வார்த்தையை நன்றாகப் பயன்படுத்துவதன்மூலம் நாம் எப்போதும் முழு திறமையையும் முழுமையான தகுதியையும் உடையவர்களாக இருப்போமாக. ‘சகலவிதமான ஆறுதலின் தேவனுமாயிருக்கிறவர்’ நம்மிடம் காட்டும் அன்பிலும் அக்கறையிலும் நமக்கிருக்கும் நம்பிக்கை ஒருபோதும் ஆட்டம் கண்டுவிடாதபடி பார்த்துக்கொள்வோமாக. “கர்த்தருடைய [யெகோவாவுடைய] கண்கள் நீதிமான்கள்மேல் நோக்கமாயிருக்கிறது; அவருடைய செவிகள் அவர்கள் கூப்பிடுதலுக்குத் திறந்திருக்கிறது” என்பதை நினைவில் வைப்போமாக.—சங். 34:15.
உங்களுக்கு நினைவிருக்கிறதா?
• தாவீது தான் அனுபவித்த வேதனைகளைக் குறித்து எப்படி உணர்ந்தார்?
• சாலொமோன் ராஜா எதை உறுதியாக நம்பினார்?
• யெகோவா அனுமதிப்பவற்றை சமாளிப்பதற்கு எது நமக்கு உதவும்?
[பக்கம் 13-ன் படம்]
வேதனையில் வாடும் தம்முடைய ஜனங்களுக்கு யெகோவா உதவுவார் என்று சாலொமோன் உறுதியாக நம்பினார்
[பக்கம் 15-ன் படம்]
ஜெபத்தில் தன்னுடைய பாரத்தை எல்லாம் யெகோவாமீது இறக்கி வைத்ததோடு அதற்கு இசைவாகவும் தாவீது செயல்பட்டார்