யெகோவாவின் ஏற்பாடு, “ஒப்புக்கொடுக்கப்பட்டவர்கள்”
“மறுஜாதியார் நின்றுகொண்டு உங்கள் மந்தைகளை மேய்ப்பார்கள்.”—ஏசாயா 61:5.
1. “கொடுப்பவர்” என்ற வார்த்தை ஏன் யெகோவாவை நமக்கு நினைப்பூட்டக்கூடும்?
கடவுள் என்னே தாராளமாக கொடுப்பவராக இருக்கிறார்! அப்போஸ்தலனாகிய பவுல் சொன்னார்: “[யெகோவா] எல்லாருக்கும் ஜீவனையும் சுவாசத்தையும் சகலத்தையும் கொடுக்கிற”வர். (அப்போஸ்தலர் 17:25) கடவுளிடமிருந்து நாம் பெற்றுக்கொள்ளும் அநேக ‘நன்மையான ஈவுகளையும் பூரணமான வரங்களையும்’ பற்றி சிந்தித்துப் பார்ப்பதிலிருந்து நாம் ஒவ்வொருவரும் பயனடையலாம்.—யாக்கோபு 1:5, 17; சங்கீதம் 29:11; மத்தேயு 7:7; 10:19; 13:12; 21:43.
2, 3. (எ) கடவுளுடைய ஈவுகளுக்கு நாம் எவ்வாறு பிரதிபலிக்க வேண்டும்? (பி) என்ன அர்த்தத்தில் லேவியர்கள் “ஒப்புக்கொடுக்கப்”பட்டவர்களாக இருந்தனர்?
2 நல்ல காரணத்தோடுதானே சங்கீதக்காரன் தான் எவ்விதமாக யெகோவாவுக்கு திரும்பச் செலுத்தக்கூடும் என்பதாக யோசித்தார். (சங்கீதம் 116:12) மனிதர்கள் கொண்டிருக்கக்கூடிய அல்லது கொடுக்கக்கூடிய எதுவும் உண்மையில் நம்முடைய சிருஷ்டிகருக்கு தேவையில்லை. (சங்கீதம் 50:10, 12) ஆனால், மெய் வணக்கத்தில் மக்கள் போற்றுதலோடு தங்களையே அளிக்கையில் அது அவருக்கு பிரியமாயிருப்பதை யெகோவா தெரிவிக்கிறார். (எபிரெயர் 10:5-7 ஒப்பிடவும்.) எல்லா மனிதர்களும் தங்களையே தங்கள் சிருஷ்டிகருக்கு ஒப்புக்கொடுக்க வேண்டும், அப்பொழுது அவர் பூர்வ லேவியர்களின் விஷயத்தில் செய்தது போல கூடுதலான சிலாக்கியங்களை அளிக்கக்கூடும். இஸ்ரவேலர் அனைவருமே கடவுளுக்கு ஒப்புக்கொடுத்தவர்களாக இருந்தபோதிலும், ஆசாரியர்களாக வாசஸ்தலத்திலும் ஆலயத்திலும் பலிகளைச் செலுத்துவதற்கு ஆரோனுடைய லேவியின் குடும்பத்தாரை அவர் தெரிந்து கொண்டார். லேவியர்களில் மீதமுள்ளவர்களைப் பற்றி என்ன?
3 யெகோவா மோசேயிடம் சொன்னார்: “நீ லேவி கோத்திரத்தாரைச் சேர்த்து . . . அவர்கள் ஆசரிப்புகூடாரத்தின் தட்டு முட்டு முதலானவைகளை காக்கக்கடவர்கள் . . . லேவியரை ஆரோனிடத்திலும் அவன் குமாரரிடத்திலும் ஒப்புக்கொடுப்பாயாக; இஸ்ரவேல் புத்திரரில் இவர்கள் முற்றிலும் அவனுக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டிருக்கிறார்கள் [எபிரெயு, நிதுனீம்].” (எண்ணாகமம் 3:6, 8, 9, 41) வாசஸ்தல சேவையில் கடமைகளை நிறைவேற்றுவதற்கு லேவியர்கள் ஆரோனுக்கு “ஒப்புக்கொடுக்கப்பட்டி”ருந்தபடியால் கடவுள், “இஸ்ரவேல் புத்திரரிலிருந்து அவர்கள் எனக்கு முற்றிலும் கொடுக்கப்பட்டிருக்கிறார்கள்” என்று சொல்லக்கூடும். (எண்ணாகமம் 8:16, 19; 18:6) சில லேவியர்கள் எளிமையான வேலைகளைச் செய்தார்கள்; மற்றவர்கள் கடவுளுடைய சட்டங்களைக் கற்பிப்பது போன்ற குறிப்பிடத்தக்க சிலாக்கியங்களைப் பெற்றுக்கொண்டார்கள். (எண்ணாகமம் 1:50, 51; 1 நாளாகமம் 6:48; 23:3, 4, 24-32; 2 நாளாகமம் 35:3-5) மற்றொரு “ஒப்புக்கொடுக்கப்பட்ட” ஜனத்திடமாகவும் நவீன நாளைய இணைப்பொருத்தத்தினிடமாகவும் இப்பொழுது நம்முடைய கவனத்தை திருப்புவோமாக.
இஸ்ரவேலர் பாபிலோனிலிருந்து திரும்புகிறார்கள்
4, 5. (எ) பாபிலோனில் சிறையிருப்பிலிருந்து எந்த இஸ்ரவேலர் திரும்பினர்? (பி) நவீன காலங்களில், சிறையிருப்பிலிருந்து இஸ்ரவேலர் திரும்பி வந்ததோடு எது பொருந்துகிறது?
4 அதிபதியான செருபாபேலின் தலைமையின் கீழ், இஸ்ரவேலின் ஒரு மீதியானோர் எவ்விதமாக மெய் வணக்கத்தை நிலைநாட்டுவதற்காக பாபிலோனிலிருந்து தங்கள் தேசத்துக்குத் திரும்பினார்கள் என்பதை எஸ்றாவும் நெகேமியாவும் எடுத்துரைக்கிறார்கள். இரு பதிவுகளுமே திரும்பிவந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 42,360 என்பதாக குறிப்பிடுகின்றன. அந்த எண்ணிக்கையில் ஆயிரக்கணக்கானோர் “தேசத்துப் புத்திரராகிய இஸ்ரவேல் ஜனமாக” இருந்தனர். அடுத்து, பதிவு ஆசாரியர்களின் பட்டியலைத் தருகிறது. பின்னர், லேவி குடும்பத்தாரின் பாடகர்கள் மற்றும் வாசல் காவலாளிகள் உட்பட 350 லேவியர்கள் வருகிறார்கள். இஸ்ரவேலராக, ஆசாரியர்களாகவும் கூட இருக்கக்கூடியவர்களும் ஆனால் தங்கள் பூர்வீகத்தை நிரூபிக்க இயலாதவர்களுமான கூடுதலான ஆயிரக்கணக்கானோரைப் பற்றியும்கூட எஸ்றாவும் நெகேமியாவும் எழுதுகிறார்கள்.—எஸ்றா 1:1, 2; 2:2-42; 59-64; நெகேமியா 7:7-45, 61-66.
5 சிறை கொண்டு போகப்பட்டு, பின்னால் எருசலேமுக்கும் யூதாவுக்கும் திரும்பி வந்த மீதியானோரான இந்த இஸ்ரவேலர் கடவுளுக்கு முதன்மையான பக்தியையும் மெய் வணக்கத்தில் ஆழ்ந்த ஈடுபாட்டையும் வெளிப்படுத்தினர். கவனித்த வண்ணமாகவே, நவீன காலங்களில், 1919-ல் மகா பாபிலோனின் சிறையிருப்பிலிருந்து வெளிவந்த ஆவிக்குரிய இஸ்ரவேலின் மீதியானோரில் ஒரு சரியான பொருத்தத்தை நாம் காண்கிறோம்.
6. கடவுள் நம்முடைய நாளில் ஆவிக்குரிய இஸ்ரவேலரை எவ்விதமாக பயன்படுத்தியிருக்கிறார்?
6 கிறிஸ்துவினுடைய அபிஷேகம் பண்ணப்பட்ட சகோதரரில் மீதியானோர் 1919-ல் விடுவிக்கப்பட்டது முதற்கொண்டு, மெய் வணக்கத்தில் வைராக்கியமாக முன்னேறிச் சென்றிருக்கிறார்கள். “தேவனுடைய இஸ்ரவேலை” உண்டுபண்ணும் 1,44,000 பேரில் கடைசியானவர்களைக் கூட்டிச் சேர்ப்பதற்கு அவர்களுடைய முயற்சிகளை யெகோவா ஆசீர்வதித்திருக்கிறார். (கலாத்தியர் 6:16; வெளிப்படுத்துதல் 7:3, 4) அபிஷேகம் பண்ணப்பட்ட மீதியானோர் ஒரு தொகுதியாக, ஜீவனை அளிக்கும் ஆவிக்குரிய உணவை ஏராளமாக அளிப்பதற்காக பயன்படுத்தப்படும் “உண்மையும் விவேகமுமுள்ள அடிமை” வகுப்பை உண்டுபண்ணியிருக்கிறார்கள். இந்த உணவை உலகம் முழுவதிலும் பகிர்ந்தளிக்க அவர்கள் கடினமாக உழைத்து வந்திருக்கிறார்கள்.—மத்தேயு 24:45-47.
7. மெய் வணக்கத்தில் அபிஷேகம் பண்ணப்பட்டவர்களோடு கூட்டுறவுக்கொண்டிருப்பது யார்?
7 முந்திய கட்டுரை காண்பித்தபடியே, இப்போது முன்னாலிருக்கும் அந்த மகா உபத்திரவத்தைக் கடந்து போகும் கடவுள்-கொடுத்த நம்பிக்கையுடைய “வேறே ஆடு”களான லட்சக்கணக்கானோரும் இப்பொழுது யெகோவாவின் மக்களில் அடங்குவர். அவர்கள் பூமியின் மீது யெகோவாவை என்றுமாக சேவிக்க விரும்புகிறார்கள். அங்கே அவர்கள் இனிமேலும் பசியடைவதில்லை, தாகமடைவதுமில்லை. துக்கத்தில் கண்ணீர் வடிப்பதுமில்லை. (யோவான் 10:16; வெளிப்படுத்துதல் 7:9-17; 21:3-5) பாபிலோனிலிருந்து திரும்பி வந்தவர்களைப் பற்றிய பதிவில், இப்படிப்பட்டவர்களுக்கு இணையாக எதையாவது நீங்கள் பார்க்கிறீர்களா? ஆம்!
இஸ்ரவேல்-அல்லாதவர்களும்கூட திரும்பிவருகிறார்கள்
8. பாபிலோனிலிருந்து திரும்பிவந்த இஸ்ரவேலரோடு வந்தவர்கள் யார்?
8 வாக்குப்பண்ணப்பட்ட தேசத்துக்குத் திரும்பிவரும்படியான அழைப்பு, பாபிலோனிலிருந்த யெகோவாவை நேசிப்பவர்களுக்கு விடுக்கப்பட்ட போது, இஸ்ரவேல் அல்லாத ஆயிரக்கணக்கானோர் பிரதிபலித்தார்கள். எஸ்றாவும் நெகேமியாவும் தரும் பட்டியல்களில், “நிதனீமியர்களையும்” (“ஒப்புக்கொடுக்கப்பட்டவர்கள்” என்று பொருள்) “சாலொமோனுடைய வேலையாட்களின் புத்திரர்”களைப் பற்றியும் நாம் வாசிக்கிறோம். இவர்கள் சேர்ந்து மொத்தமாக 392 பேராய் இருந்தனர். பதிவுகள் இன்னும் மற்ற 7,500 -க்கும் மேற்பட்டவர்களைப் பற்றியும் பேசுகிறது: “வேலைக்காரரும் வேலைக்காரிகளும்,” லேவியரல்லாத “பாடகரும் பாடகிகளும்.” (எஸ்றா 2:43-58, 65; நெகேமியா 7:46-60, 67) இஸ்ரவேல் அல்லாத இத்தனை அநேகரை திரும்பிவரும்படி செய்வித்தது என்ன?
9. சிறையிருப்பிலிருந்து திரும்பி வருதலில் கடவுளுடைய ஆவி எவ்விதமாக உட்பட்டிருந்தது?
9 “கர்த்தருடைய [யெகோவாவுடைய, NW] ஆலயத்தைக் கட்டுகிறதற்குப் போகும்படி . . . எவர்கள் ஆவியை தேவன் ஏவினாரோ அவர்கள் எல்லா”ரையும் பற்றி எஸ்றா 1:5 பேசுகிறது. ஆம், யெகோவா திரும்பி வந்தவர்கள் அனைவரையும் தூண்டி எழுப்பினார். அவர் அவர்களுடைய ஆவியை ஏவினார், அதாவது, அவர்களுடைய தூண்டி இயக்கும் மனச்சாய்வுகளை ஏவினார். பரலோகங்களில் இருந்து கொண்டேகூட, கடவுள் தம்முடைய பரிசுத்த ஆவியை, அவருடைய கிரியை நடப்பிக்கும் சக்தியை பயன்படுத்தி இதை செய்ய முடியும். இவ்விதமாக, “கர்த்தருடைய [யெகோவாவின், NW] ஆலயத்தைக் கட்டுகிறதற்குப் போகும்படி” புறப்பட்டவர்கள் “அவருடைய [கடவுளுடைய] ஆவி”யினால் உதவப்பட்டார்கள்.—சகரியா 4:1, 6; ஆகாய் 1:14.
ஒரு நவீன-நாளைய இணைப்பொருத்தம்
10, 11. பாபிலோனிலிருந்து திரும்பிய இஸ்ரவேல் அல்லாதவர்களுக்கு என்ன இணைப்பொருத்தத்தை பெறமுடியும்?
10 திரும்பிவந்த இத்தகைய இஸ்ரவேல் அல்லாதவர்கள் யாருக்கு முன்நிழலாக இருந்தனர்? அநேக கிறிஸ்தவர்கள் ஒருவேளை இவ்வாறு பதிலளிக்கக்கூடும்: ‘நிதனீமியர்களுக்கு இன்று “வேறே ஆடுகள்” இணையாக இருக்கிறார்கள்.’ உண்மைதான், வெறும் நிதனீமியர்கள் மாத்திரமல்ல; திரும்பி வந்த இஸ்ரவேல்-அல்லாத அனைவருமே ஆவிக்குரிய இஸ்ரவேலாக இல்லாத கிறிஸ்தவர்களை இன்று பிரதிநிதித்துவம் செய்கின்றனர்.
11 அர்மகெதோனைத் தப்பி கடவுளுடைய புதிய உலகிற்குள் நீங்கள் செல்லக்கூடும்a புத்தகம் இவ்விதமாகச் சொன்னது: “மீந்திருந்த 42,360 இஸ்ரவேலர் மாத்திரமே தலைவன் செருபாபேலோடு பாபிலோனைவிட்டு புறப்பட்டுவரவில்லை . . . ஆயிரக்கணக்கான இஸ்ரவேல் அல்லாதவர்கள் வந்தனர் . . . நிதனீமியர்களைத் தவிர, இஸ்ரவேல் அல்லாத மற்ற அடிமைகள், பாடகர்கள் பாடகிகள் மற்றும் சாலொமோனுடைய வேலையாட்களின் புத்திரரும் இருந்தார்கள்.” புத்தகம் இவ்வாறு விளக்கியது: “நிதனீமியர்கள், அடிமைகள், பாடகர்கள், சாலொமோனுடைய வேலையாட்களின் புத்திரர் ஆகிய இஸ்ரவேல் அல்லாத அனைவரும் சிறையிருப்பு தேசத்தைவிட்டு புறப்பட்டு இஸ்ரவேல மீதியானோரோடு திரும்பி வந்தனர் . . . ஆகவே பல்வேறு தேசங்களிலிருந்தும் வரும் ஆவிக்குரிய இஸ்ரவேலாக இல்லாத ஆட்கள் ஆவிக்குரிய இஸ்ரவேலின் மீதியானோரோடு கூட்டுறவுக்கொண்டு அவர்களோடு யெகோவா தேவனின் வணக்கத்தை முன்னேற்றுவிப்பார்கள் என்று நினைப்பது சரியாக இருக்கிறதா? ஆம்.” இப்படிப்பட்டவர்கள், ‘நவீன-நாளைய மாதிரிபடிவ நிதனீமியர்களாக, பாடகர்களாக, சாலொமோனுடைய வேலையாட்களின் புத்திரர்களாக ஆகியிருக்கிறார்கள்.’
12. ஆவிக்குரிய இஸ்ரவேலுக்காக கடவுள் எவ்விதமாக தம்முடைய ஆவியை விசேஷித்த முறையில் பயன்படுத்துகிறார்? அது அவருடைய வணக்கத்தார் அனைவருக்கும் கிடைக்கிறது என்று நாம் ஏன் நிச்சயமாயிருக்கலாம்?
12 பூர்வ மாதிரியின்படியே, கடவுள் பூமியின் மீது என்றுமாக வாழ நம்பியிருக்கும் இவர்களுக்கும்கூட தம்முடைய ஆவியை அருளுகிறார். உண்மைதான் அவர்கள் மறுபடியும் பிறந்தவர்கள் அல்ல. 1,44,000 பேரில் ஒவ்வொருவரும், கடவுளுடைய ஆவிக்குரிய புத்திரராக மறுபடியும் பிறந்து, பரிசுத்த ஆவியினால் அபிஷேகம் பெறும் அனுபவத்தை உடையவர்களாக இருக்கின்றனர். (யோவான் 3:3, 5; ரோமர் 8:16; எபேசியர் 1:13, 14) நிச்சயமாகவே அந்த அபிஷேகமானது சிறு மந்தையின் சார்பாக கடவுளுடைய ஆவியின் ஈடிணையற்ற வெளிக்காட்டாக உள்ளது. ஆனால் அவருடைய சித்தத்தை நிறைவேற்றுவதற்கும்கூட கடவுளுடைய ஆவி தேவையாக இருக்கிறது. ஆகவே இயேசு சொன்னார்: “பரம பிதாவானவர் தம்மிடத்தில் வேண்டிக்கொள்ளுகிறவர்களுக்குப் பரிசுத்த ஆவியைக் கொடுக்கிறார்.” (லூக்கா 11:13) வேண்டிக்கொள்ளுகிறவருக்கு பரலோக நம்பிக்கையிருந்தாலும் சரி அல்லது அவர் வேறே ஆடுகளைச் சேர்ந்தவராக இருந்தாலும் சரி, அவருடைய சித்தத்தை நிறைவேற்றுவதற்கு யெகோவாவின் ஆவி அபரிமிதமாக கிடைக்கிறது.
13. ஆவி எவ்விதமாக கடவுளுடைய ஊழியர்கள் அனைவர் மேலும் செயல்படமுடியும்?
13 கடவுளுடைய ஆவி, எருசலேமுக்குத் திரும்பி வர இஸ்ரவேலைரையும் இஸ்ரவேல் அல்லாதவரையும் ஏவியது, அது இன்று அவருடைய உண்மைப்பிரமாணிக்கமுள்ள மக்கள் அனைவரையும் பலப்படுத்துகிறது, உதவி செய்கிறது. ஒரு கிறிஸ்தவனுக்கு கடவுள்-கொடுத்த நம்பிக்கை பரலோகத்தில் வாழ்க்கையாக அல்லது பூமியில் வாழ்க்கையாக இருந்தாலும் சரி அவர் நற்செய்தியை பிரசங்கிக்க வேண்டும், அதைச் செய்வதில் உண்மையுள்ளவராயிருக்க பரிசுத்த ஆவி அவருக்கு உதவி செய்கிறது. நாம் ஒவ்வொருவரும்—நம்முடைய நம்பிக்கை எதுவாயிருப்பினும்—ஆவியின் கனிகளை வளர்த்துக் கொள்ள வேண்டும், நம் அனைவருக்கும் அது முழு அளவில் தேவையாக இருக்கிறது.—கலாத்தியர் 5:22-26.
விசேஷித்த சேவைக்காக ஒப்புக்கொடுக்கப்பட்டிருத்தல்
14, 15. (எ) திரும்பி வந்த இஸ்ரவேல் அல்லாதவர்கள் மத்தியில் என்ன இரண்டு தொகுதிகள் தனியே பிரித்து காண்பிக்கப்பட்டார்கள்? (பி) நிதனீமியர்கள் யார்? அவர்கள் என்ன செய்தார்கள்?
14 திரும்பிவரும்படி ஆவி ஏவின அந்த ஆயிரக்கணக்கான இஸ்ரவேல் அல்லாதவர்களின் மத்தியில், கடவுளுடைய வார்த்தை தனிப்படுத்திக் காண்பிக்கும் இரண்டு சிறிய தொகுதியினர் இருந்தனர்—நிதனீமியர்கள், சாலொமோனுடைய வேலையாட்களின் புத்திரர். இவர்கள் யார்? இவர்கள் என்ன செய்தார்கள்? இன்று இது எதை அர்த்தப்படுத்தக்கூடும்?
15 நிதனீமியர்கள், இஸ்ரவேல் அல்லாத பூர்வீகத்தைக் கொண்டவர்களும், லேவியர்களோடு ஊழியஞ்செய்ய சிலாக்கியம் பெற்றவர்களுமான ஒரு தொகுதியாக இருந்தனர். கிபியோனிலிருந்து வந்த கானானியர்கள் “அவருடைய [யெகோவாவுடைய, NW] பலிபீடத்துக்கும் விறகு வெட்டுகிறவர்களாகவும் தண்ணீர் எடுக்கிறவர்களாக”வுமானதை நினைவுபடுத்திப்பாருங்கள். (யோசுவா 9:27) ஒருவேளை அவர்களுடைய சந்ததியாரில் சிலர் பாபிலோனிலிருந்து திரும்பிய நிதனீமியர்கள் மத்தியில் இருந்திருக்க வேண்டும். தாவீதின் ஆட்சி காலத்திலும் மற்ற சமயங்களிலும் நிதனீமியர்களாக சேர்க்கப்பட்ட மற்றவர்களும் இருந்தார்கள். (எஸ்றா 8:20) நிதனீமியர்கள் என்ன செய்தார்கள்? லேவியர்கள் ஆசாரியர்களுக்கு உதவி செய்ய ஒப்புக்கொடுக்கப்பட்டார்கள், அதற்குபின் நிதனீமியர்கள் லேவியர்களுக்கு உதவ ஒப்புக்கொடுக்கப்பட்டார்கள். விருத்தசேதனம் பண்ணப்பட்ட அந்நியர்களுக்கும்கூட இது ஒரு சிலாக்கியமாக இருந்தது.
16. காலப்போக்கில் நிதனீமியரின் கடமை எவ்விதமாக மாறியது?
16 பாபிலோனிலிருந்து திரும்பி வந்த தொகுதியில், ஆசாரியர்கள் அல்லது நிதனீமியர்கள் மற்றும் ‘சாலொமோனுடைய வேலையாட்களின் புத்திரரோடு’ ஒப்பிட, அதில் வெகு சில லேவியர்களே இருந்தனர். (எஸ்றா 8:15-20) டாக்டர் ஜேம்ஸ் ஹேஸ்டிங்ஸ் எழுதிய பைபிளின் அகராதி இவ்விதமாக குறிப்பிடுகிறது: “ஒரு காலத்துக்குப் பிறகு, [நிதனீமியர்கள்] பரிசுத்தமான அதிகாரப்பூர்வமான ஒரு வகுப்பாக அத்தனை முழுமையாக நிறுவப்படுவதால், சிலாக்கியங்கள் அவர்களுக்கு அளிக்கப்படுகின்றன.” வீட்டஸ் டெஸ்டமென்டம் என்ற புலமைச் சார்ந்த பத்திரிகை குறிப்பிடுவதாவது: “ஒரு மாற்றம் நிகழ்ந்தது. சிறையிருப்பிலிருந்து திரும்பிய பிறகு, இவர்கள் [அந்நியர்கள்] இனிமேலும் ஆலயத்தின் அடிமைகளாக அல்ல, ஆனால் அதில் குருக்களாக, ஆலயத்தில் கடமைகளைச் செய்த மற்ற குழுக்களைப் போன்று அதேவிதமான அந்தஸ்தை அனுபவித்துக் களிக்கிறவர்களாக கருதப்பட்டனர்.”—“மாறுபட்ட ஓர் அந்தஸ்து” பெட்டியைப் பார்க்கவும்.
17. நிதனீமியர்கள் செய்வதற்கு ஏன் அதிகத்தைப் பெற்றுக்கொண்டனர்? இதற்கு என்ன பைபிள் அத்தாட்சி இருக்கிறது?
17 நிச்சயமாகவே, நிதனீமியர், ஆசாரியர்களுக்கும் லேவியர்களுக்கும் சமமாகிவிடவில்லை. பின்சொல்லப்பட்ட தொகுதியினர் இஸ்ரவேலராகவும் யெகோவாதாமே தெரிந்துகொண்டவர்களாகவும் இருந்தனர், இவர்களுக்குப் பதிலாக இஸ்ரவேலர் அல்லாதவர்கள் வைக்கப்படுவதில்லை. என்றபோதிலும், லேவியர்களின் எண்ணிக்கை குறைந்த போது, நிதனீமியர் கடவுளுடைய சேவையில் செய்வதற்கு அதிகம் கொடுக்கப்பட்டனர் என்று பைபிள் சுட்டிக்காட்டுகிறது. ஆலயத்துக்கு அருகில் அவர்களுக்கு இருப்பிடங்கள் கொடுக்கப்பட்டன. நெகேமியாவின் நாளில் அவர்கள் ஆலயத்துக்கு அருகில் மதில்களை பழுதுபார்ப்பதில் ஆசாரியர்களோடு வேலை செய்தார்கள். (நெகேமியா 3:22-26) லேவியர்கள் ஆலய சேவையின் காரணமாக வரிவிலக்களிக்கப்பட்டிருப்பது போல நிதனீமியர்களுக்கும் வரிவிலக்கு அளிக்கப்பட வேண்டும் என்று பெர்சிய அரசன் கட்டளையிட்டார். (எஸ்றா 7:24) இந்த “ஒப்புக்கொடுக்கப்பட்டவர்கள்” (லேவியர்களும் நிதனீமியர்களும்) ஆவிக்குரிய விஷயங்களில் எத்தனை நெருக்கமாக பிணைக்கப்பட்டிருந்தார்கள் என்பதையும் நிதனீமியர் ஒருபோதும் லேவியராக கருதப்படாவிட்டாலும் எவ்விதமாக தேவைக்கேற்ப அவர்களுடைய வேலைகள் அதிகரித்தன என்பதையும் இது காட்டுகிறது. திரும்பி வருவதற்காக சிறைப்பிடிக்கப்பட்டவர்களை எஸ்றா கூட்டிச் சேர்த்த போது, முதலில் அவர்கள் மத்தியில் லேவியர்கள் எவரும் இல்லை. ஆகவே சிலரைக் கூட்டிச் சேர்ப்பதற்காக அவர் தன் முயற்சிகளை தீவிரமாக்கினார். இதன் விளைவாக “தேவனுடைய ஆலயத்துப் பணிவிடைக்காரராக” சேவிக்க 38 லேவியர்களும் 220 நிதனீமியர்களும் திரும்பி வந்தார்கள்.—எஸ்றா 8:15-20.
18. சாலொமோனுடைய வேலையாட்களின் புத்திரர் என்ன கடமையை ஆற்றியிருக்கக்கூடும்?
18 தனியே பிரித்தெடுக்கப்பட்ட இஸ்ரவேல் அல்லாத இரண்டாவது தொகுதி, சாலொமோனுடைய வேலையாட்களின் புத்திரர் ஆவர். பைபிள் அவர்களைப் பற்றி மிகக்குறைவான விவரங்களையே தருகிறது. சிலர் “சொபெரேத்தின் புத்திரராக” இருந்தனர். எஸ்றா அந்தப் பெயரோடு திட்டவட்டமான ஒரு சார்படையைச் சேர்த்து, “வேதபாரகன்” என்று பொருள்படும் ஹாசொபெரேத்-ஆக அதை ஆக்குகிறான். (எஸ்றா 2:55; நெகேமியா 7:57) ஆகவே அவர்கள் வேதபாரகர் அல்லது நகல் எடுக்கும் பணியாட்களாக, ஒருவேளை ஆலய/நிர்வாக வேதபாரகருடைய பணியாட்களாக இருந்திருக்கலாம். அந்நிய இனத்திலிருந்து வந்தபோதிலும் சாலொமோனுடைய வேலையாட்களின் புத்திரர் பாபிலோனைவிட்டு புறப்பட்டு அவருடைய வணக்கத்தை நிலைநாட்டுவதில் பங்குகொள்ள திரும்பிவருவதன் மூலம் யெகோவாவுக்குத் தங்கள் பக்தியை நிரூபித்தார்கள்.
இன்று நம்மைநாமே கொடுப்பது
19. இன்று அபிஷேகம்பண்ணப்பட்டவர்களுக்கும் வேறே ஆடுகளுக்குமிடையே என்ன உறவு இருக்கிறது?
19 நம்முடைய காலத்தில் கடவுள் மெய் வணக்கத்தில் முன்சென்று நற்செய்தியை அறிவிப்பதில் அபிஷேகம்பண்ணப்பட்ட மீதியானோரை பெரிய அளவில் உபயோகித்து வந்திருக்கிறார். (மாற்கு 13:10) இவர்கள், ஆயிரக்கணக்கிலும், நூறாயிரக்கணக்கிலும் பின்னர் இலட்சக்கணக்கிலும் வேறே ஆடுகள் வணக்கத்தில் தங்களைச் சேர்ந்துகொள்வதை பார்த்து எவ்வளவு களிகூர்ந்திருக்கின்றனர்! மேலும் மீதியானோருக்கும் வேறே ஆடுகளுக்குமிடையே என்னே மகிழ்ச்சியான கூட்டு-ஒத்துழைப்பு இருந்துவருகிறது!—யோவான் 10:16.
20. நிதனீமியர் மற்றும் சாலொமோனுடைய வேலையாட்களின் புத்திரருக்கு இணைப்பொருத்தத்தைப் பற்றியதில் என்ன புதிய புரிந்துகொள்ளுதல் நியாயமாக இருக்கிறது? (நீதிமொழிகள் 4:18)
20 பூர்வ பாபிலோனிலிருந்து திரும்பி வந்த இஸ்ரவேல் அல்லாத அனைவருமே ஆவிக்குரிய இஸ்ரவேலின் மீதியானோரோடு இப்பொழுது சேவை செய்யும் வேறே ஆடுகளுக்கு இணையாக இருக்கின்றனர். ஆனால் நிதனீமியரையும் சாலொமோனுடைய வேலையாட்களின் புத்திரரையும் பைபிள் தனியே பிரித்துக்காட்டும் உண்மையைப் பற்றி என்ன? மாதிரியில், திரும்பி வந்த இஸ்ரவேல் அல்லாத மற்றவர்களைவிட நிதனீமியருக்கும் சாலொமோனுடைய வேலையட்களுடைய புத்திரருக்கும் மிகுதியான சிலாக்கியங்கள் கொடுக்கப்பட்டன. இது கடவுள் இன்று வேறே ஆடுகளைச் சேர்ந்த ஒரு சில முதிர்ச்சியுள்ள மற்றும் மனமுள்ள ஆட்களுக்கு சிலாக்கியங்களையும் கூடுதலான கடமைகளையும் அளித்திருப்பதற்கு முன்நிழலாக இருந்தது.
21. பூமிக்குரிய நம்பிக்கையுடைய ஒரு சில சகோதரர்கள் எவ்வாறு கூடுதலான கடமைகளையும் சிலாக்கியங்களையும் பெற்றிருக்கிறார்கள்?
21 நிதனீமியரின் கூடுதலான சிலாக்கியங்கள் ஆவிக்குரிய நடவடிக்கைகளோடு நேரடியாக பிணைக்கப்பட்டவையாய் இருந்தன. சாலொமோனுடைய வேலையாட்களின் புத்திரர் நிர்வாகப் பொறுப்புகளை பெற்றுக்கொண்டனர். அதேவிதமாகவே இன்று யெகோவா, அவருடைய ஜனங்களின் தேவைகளை கவனித்துக்கொள்ள “மனிதர்களில் வரங்களை” கொடுத்து அவர்களை ஆசீர்வதித்திருக்கிறார். (எபேசியர் 4:8, 11, 12) வட்டார மற்றும் மாவட்ட கண்காணிகளாகவும், காவற்கோபுர சங்கத்தின் 98 கிளைக்காரியாலயங்களில் கிளை ஆலோசனைக் குழுக்களிலும் சேவை செய்து ‘மந்தையை மேய்ப்பதில்’ பங்குகொள்ளும் நூற்றுக்கணக்கான முதிர்ச்சியுள்ள, அனுபவம் வாய்ந்த சகோதரர்கள் இந்த ஏற்பாட்டில் அடங்குவர். (ஏசாயா 61:5) சங்கத்தின் உலக தலைமைக் காரியாலயத்தில், ‘உண்மையுள்ள விசாரணைக்காரன்’ மற்றும் அதன் ஆளும் குழுவின் வழிநடத்துதலின் கீழ், திறமையுள்ள மனிதர்கள் ஆவிக்குரிய உணவை தயார் செய்வதில் உதவி செய்வதற்கு பயிற்சி பெறுகிறார்கள். (லூக்கா 12:42) மற்ற நீண்ட கால ஒப்புக்கொடுத்த வாலண்டியர்கள் பெத்தேல் குடும்பத்தையும் அச்சாலைகளையும் நடத்தவும் புதிய கிளை கட்டிடங்களையும் கிறிஸ்தவ வணக்கத்துக்கு மன்றங்களையும் கட்டுவதில் உலகம் முழுவதிலும் திட்டங்களை கண்காணிப்புச் செய்யவும் பயிற்றுவிக்கப்பட்டிருக்கிறார்கள்; இவர்கள் ராஜரீக ஆசாரியத்துவத்தின் பகுதியை உண்டுபண்ணும் அபிஷேகம் பண்ணப்பட்ட மீதியானோரோடு நெருங்கிய உதவியாளர்களாக சிறப்பாக பணியாற்றி வந்திருக்கிறார்கள்.—1 கொரிந்தியர் 4:17; 14:40; 1 பேதுரு 2:9 ஒப்பிடவும்.
22. வேறே ஆடுகளில் சிலருக்கு முக்கியமான உத்திரவாதங்கள் இப்பொழுது கொடுக்கப்படுவது ஏன் பொருத்தமாக இருக்கிறது? இதற்கு நாம் எவ்விதமாக பிரதிபலிக்க வேண்டும்?
22 பூர்வ காலங்களில், ஆசாரியர்களும் லேவியர்களும் தொடர்ந்து யூதர்கள் மத்தியில் சேவித்து வந்தார்கள். (யோவான் 1:19) என்றபோதிலும், இன்று, பூமியிலுள்ள ஆவிக்குரிய இஸ்ரவேலில் மீதியானோர் குறைந்துகொண்டே போக வேண்டும். (யோவான் 3:30-ஐ வேறுபடுத்தி பார்க்கவும்.) கடைசியாக, மகா பாபிலோனின் மறைவுக்குப் பின், ‘முத்தரிக்கப்பட்ட’ எல்லா 1,44,000 பேரும் ஆட்டுக்குட்டியானவருடைய திருமணத்துக்காக பரலோகத்தில் இருப்பர். (வெளிப்படுத்துதல் 7:1-3; 19:1-8) ஆனால் இப்பொழுது வேறே ஆடுகள் அதிகரித்துக் கொண்டே போக வேண்டும். நிதனீமியருக்கும் சாலொமோனுடைய வேலையாட்களின் புத்திரருக்கும் ஒப்பிடப்படக்கூடிய அவர்களில் சிலர், அபிஷேகம் பண்ணப்பட்ட மீதியானோரின் மேற்பார்வையின் கீழ் முக்கியமான உத்திரவாதங்களுக்கு இப்பொழுது நியமிக்கப்பட்டு வரும் உண்மையானது, அவர்களை துணிச்சலுள்ளவர்களாகும்படியோ அல்லது சுய-முக்கியத்துவமுள்ளவராக உணரும்படியோ செய்விப்பதில்லை. (ரோமர் 12:3) இது கடவுளுடைய மக்கள் “மகா உபத்திரவத்திலிருந்து வெளியே” வரும் போது, வேறே ஆடுகள் மத்தியில் முன்சென்று வழிநடத்த அனுபவமுள்ள மனிதர்கள்—“பிரபுக்கள்”—தயாராக இருப்பார்கள் என்ற நம்பிக்கையை நமக்கு அளிக்கிறது.—வெளிப்படுத்துதல் 7:14; ஏசாயா 32:1; அப்போஸ்தலர் 6:2-7 ஒப்பிடவும்.
23. கடவுளுடைய சேவையின் சம்பந்தமாக, நாம் அனைவரும் ஏன் கொடுக்கும் ஆவியை வளர்த்துக் கொள்ள வேண்டும்?
23 பாபிலோனிலிருந்து திரும்பி வந்த அனைவரும் கடினமாக வேலை செய்யவும் யெகோவாவின் வணக்கம் தங்கள் மனதிலும் இருதயத்திலும் முதன்மையாக இருந்ததை நிரூபிக்கவும் மனமுள்ளவர்களாக இருந்தனர். இன்று அது அவ்விதமாகவே இருக்கிறது. அபிஷேகம் பண்ணப்பட்ட மீதியானோரோடுகூட, “மறுஜாதியார் நின்று கொண்டு . . . மந்தைகளை மேய்க்”கிறார்கள். (ஏசாயா 61:5) ஆகவே கடவுள் அளித்துள்ள எந்த நம்பிக்கையை நாம் கொண்டிருந்தாலும் சரி, அர்மகெதோனில் யெகோவா நியாயநிரூபணஞ் செய்யப்படும் நாளுக்கு முன்பாக ஆவியால்-நியமிக்கப்பட்ட மூப்பர்களுக்கு என்ன சிலாக்கியங்கள் அளிக்கப்பட்டாலும் சரி நாம் அனைவருமே தன்னலமற்ற, ஆரோக்கியமான, கொடுக்கும் ஆவியை வளர்த்துக் கொள்வோமாக. யெகோவாவுக்கு, அவருடைய எல்லா மகத்தான நன்மைகளுக்காகவும் நம்மால் ஒருபோதும் திரும்ப செலுத்த முடியாமல் போனாலும், அவருடைய அமைப்புக்குள் நாம் எதை செய்து கொண்டிருந்தாலும் அதில் முழு ஆத்துமாவோடு இருப்போமாக. (சங்கீதம் 116:12-14; கொலோசெயர் 3:23) “பூமியிலே அரசாளப்” போகும் அபிஷேகம் பண்ணப்பட்டவர்களோடு வேறே ஆடுகள் நெருக்கமாக சேர்ந்து சேவித்து வரும் போது மெய் வணக்கத்துக்காக நாம் அனைவரும் நம்மையே கொடுக்கலாம்.—வெளிப்படுத்துதல் 5:9, 10. (w92 4/15)
[அடிக்குறிப்புகள்]
a பக்கங்கள் 142-8; உவாட்ச் டவர் சங்கத்தால் வெளியிடப்பட்டது.
நினைவில் கொள்ள குறிப்புகள்
◻ லேவியர்கள் பூர்வ இஸ்ரவேலில் என்ன விதத்தில் ஒப்புக்கொடுக்கப்பட்டவர்களாக இருந்தனர்?
◻ சிறையிருப்பிலிருந்து இஸ்ரவேல் அல்லாத யார் திரும்பிவந்தார்கள்? யாருக்கு முன்நிழலாக?
◻ நிதனீமியர்கள் விஷயத்தில் என்ன மாற்றங்கள் நிகழ்ந்ததாகத் தெரிகிறது?
◻ நிதனீமியரையும் சாலொமோனுடைய வேலையாட்களின் புத்திரரையும் பற்றியதில் என்ன இணைப்பொருத்தம் இப்பொழுது போற்றப்படுகிறது?
◻ அபிஷேகம் பண்ணப்பட்டவர்களுக்கும் வேறே ஆடுகளுக்குமிடையேயுள்ள கூட்டுறவினால் என்ன நம்பிக்கை தோற்றுவிக்கப்பட்டுள்ளது?
[பக்கம் 14-ன் பெட்டி]
மாறுபட்ட ஓர் அந்தஸ்து
சிறையிலிருப்பிலிருந்து திரும்பி வந்த இஸ்ரவேல் அல்லாத சிலர் அனுபவித்த மாற்றங்களின் பேரில் அநேக பைபிள் அகராதிகளும் என்ஸைக்ளோபீடியாக்களும் குறிப்பு தருகின்றன. உதாரணமாக “அவர்களுடைய ஸ்தானத்தில் மாற்றம்” என்ற தலைப்பின் கீழ் என்ஸைக்ளோபீடியா பிப்ளிக்கா இவ்விதமாகச் சொல்கிறது: “அவர்களுடைய சமுதாய அந்தஸ்து ஏற்கெனவே குறிப்பிடப்பட்டபடி, அதே சமயம் கட்டாயமாகவே உயர்ந்துவிட்டிருந்தது. [நிதனீமியர்கள்] கண்டிப்பான அந்த வார்த்தையின் பொருள்படி இனிமேலும் அடிமைகளாக தோன்றுவதில்லை.” (செய்னி மற்றும் ப்ளாக்கினால் பதிப்பிக்கப்பட்டது, புத்தகம் 111, பக்கம் 3399) ஸைக்ளோபீடியா ஆஃப் பிப்ளிக்கல் லிட்டரேச்சர்-ல் ஜான் கிட்டோ எழுதுகிறார்: “இவர்களில் [நிதனீமியர்களில்] அநேகர் பலஸ்தீனாவில் இந்தத் தாழ்வான நிலைக்கு திரும்பிவருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டில்லை . . . இவ்விதமாக இந்த ஆட்கள் மனமுவந்து காண்பித்த பக்தி நிதனீமியரின் நிலையை கணிசமாக உயர்த்தியது.” (புத்தகம் 11, பக்கம் 417) தி இன்டர்நேஷனல் ஸ்டான்டர்டு பைபிள் என்ஸைக்ளோபீடியா இவ்விதமாக சுட்டிக்காண்பிக்கிறது: “சாலொமோனின் காலத்தில் இந்தக் கூட்டுறவு மற்றும் அவர்களுடைய பின்னணியின் வெளிச்சத்தில், இரண்டாவது ஆலயத்தில் சாலொமோனுடைய வேலையாட்கள் குறிப்பிடத்தக்க பொறுப்புக்களை கொண்டிருந்தார்கள் என ஊகித்துக் கொள்ளப்படலாம்.”—G. W. பிராம்லியினால் பதிப்பிக்கப்பட்டது, புத்தகம் 4, பக்கம் 570.
[பக்கம் 15-ன் படம்]
இஸ்ரவேலர் எருசலேமை திரும்ப கட்டுவதற்காக திரும்பி வந்த போது இஸ்ரவேல் அல்லாத ஆயிரக்கணக்கானோர் அவர்களோடு வந்தனர்
[படத்திற்கான நன்றி]
Pictorial Archive (Near Eastern History) Est.
[பக்கம் 17-ன் படம்]
கொரியாவிலுள்ள கிளை ஆலோசனைக் குழு. பூர்வ நிதனீமியரைப் போலவே, வேறே ஆடுகளைச் சேர்ந்த மனிதர்கள், இன்று மெய் வணக்கத்தில் முக்கியமான உத்தரவாதங்களை உடையவர்களாயிருக்கின்றனர்