கடவுளின் வியத்தகு செயல்களுக்குக் கவனம் செலுத்துங்கள்
“என் கடவுளாகிய யெகோவாவே, எங்களுக்காக நீர் செய்திருக்கிற வியத்தகு செயல்களும் யோசனைகளும் எண்ணிறைந்தவை; உமக்கு நிகரானவர் யாரும் இல்லை.”—சங்கீதம் 40:5, NW.
1, 2. கடவுளின் வியத்தகு செயல்களுக்கு என்ன அத்தாட்சி நம்மிடம் உள்ளது, இது என்ன செய்ய நம்மை தூண்ட வேண்டும்?
நீங்கள் பைபிளை வாசிக்கையில் பூர்வ இஸ்ரவேல் ஜனங்களுக்காக கடவுள் வியத்தகு செயல்களை செய்தார் என்பதை உடனடியாக கண்டுகொள்ளலாம். (யோசுவா 3:5; சங்கீதம் 106:7, 21, 22) அதேவிதமாக மனித விவகாரங்களில் இன்று யெகோவா தலையிடாவிட்டாலும், அவருடைய வியத்தகு செயல்களுக்கு நம்மை சுற்றிலும் ஏராளமான அத்தாட்சிகள் இருப்பதைக் காணலாம். எனவே நாமும் சங்கீதக்காரனுடன் சேர்ந்து, ‘[யெகோவாவே,] உமது கிரியைகள் எவ்வளவு திரளாயிருக்கிறது! அவைகளையெல்லாம் ஞானமாய்ப் படைத்தீர்; பூமி உம்முடைய பொருள்களினால் நிறைந்திருக்கிறது’ என சொல்லலாம்.—சங்கீதம் 104:24; 148:1-5.
2 படைப்பாளரின் செயல்களுக்கு இத்தகைய தெளிவான அத்தாட்சியை இன்று அநேகர் கண்டும் காணாமல் இருக்கின்றனர் அல்லது ஏற்காமல் புறக்கணிக்கின்றனர். (ரோமர் 1:20) எனினும், நாமோ அவற்றிற்கு கவனம் செலுத்தி, படைப்பாளருக்கு முன்பாக நம்முடைய நிலைநிற்கையையும் அவரிடமுள்ள நம் கடமையையும் கருத்தில் கொண்டு முடிவுக்கு வருவது பயன்மிக்கது மட்டுமல்ல சரியானதும்கூட. இதற்கு யோபு 38 முதல் 41 வரையான அதிகாரங்கள் நன்கு உதவியளிக்கின்றன; அங்கு யெகோவா தம்முடைய வியத்தகு செயல்கள் சிலவற்றிற்கு யோபுவின் கவனத்தைத் திருப்பினார். கடவுள் எழுப்பிய சில நியாயமான விவாதங்களை சிந்திப்போமாக.
வல்லமையும் வியப்பும் மிக்க செயல்கள்
3. யோபு 38:22, 23, 25-29-ல் என்ன செயல்களைப் பற்றி கடவுள் கேள்வி கேட்டார்?
3 ஒரு சமயம் யோபுவிடம் கடவுள் இவ்வாறு கேட்டார்: “உறைந்த மழையின் [“பனி மழை,” NW] பண்டசாலைகளுக்குள் நீ பிரவேசித்தாயோ? கல்மழையிருக்கிற பண்டசாலைகளைப் பார்த்தாயோ? ஆபத்து வருங்காலத்திலும், கலகமும் யுத்தமும் வருங்காலத்திலும், பிரயோகிக்கும்படி நான் அவைகளை வைத்து வைத்திருக்கிறேன்.” பனி மழையும் கல்மழையும் பூமியின் பல பகுதிகளில் சகஜமானவை. “பாழும் அந்தரவெளியுமான தரையைத் திருப்தியாக்கி, இளம்பூண்டுகளின் முளைகளை முளைக்கப்பண்ணும்படி, பூமியெங்கும் மனுஷர் குடியில்லாத இடத்திலும், மனுஷ சஞ்சாரமில்லாத வனாந்தரத்திலும் மழையை வருஷிக்கப்பண்ணி, வெள்ளத்துக்கு நீர்க்கால்களையும், இடிமுழக்கங்களோடு வரும் மின்னலுக்கு வழிகளையும் பகுத்தவர் யார்? மழைக்கு ஒரு தகப்பனுண்டோ? பனித்துளிகளை ஜநிப்பித்தவர் யார்? உறைந்த தண்ணீர் யாருடைய வயிற்றிலிருந்து புறப்படுகிறது? ஆகாயத்தினுடைய உறைந்த பனியைப் பெற்றவர் யார்?” என கடவுள் தொடர்ந்து கேட்டார்.—யோபு 38:22, 23, 25-29.
4-6. எந்த அர்த்தத்தில் பனியைப் பற்றிய மனிதனின் அறிவு குறைவுபடுகிறது?
4 அவசரகதியில் பம்பரமாய் சுழலும் சமுதாயத்தில் வசிக்கும் சிலருக்கும், பயணம் செய்ய வேண்டியவர்களுக்கும் இந்தப் பனிமழை இடைஞ்சலாக இருக்கலாம். ஆனால் மற்றவர்களுக்கோ இந்தப் பனிமழை என்றாலே கொண்டாட்டம்தான். இது பனிக்கால உல்லாச உலகையே உருவாக்கி விசேஷித்த பொழுதுபோக்குகளுக்கு வாய்ப்பளிக்கிறது. கடவுள் கேட்ட கேள்வியை சிந்தித்தால், பனிமழையின் முழு சரித்திரமும், அல்லது அது பார்க்க எப்படி இருக்கும் என்பதாவது உங்களுக்குத் தெரியுமா? எக்கச்சக்கமாக பனி பெய்திருந்தால் அது எப்படி இருக்கும் என்பதை அறிந்திருக்கலாம். ஏனென்றால் ஒருவேளை மலைபோல பனி பெய்திருப்பதை நாம் நேரிலோ போட்டோவிலோ பார்த்திருக்கலாம். ஆனால், ஒரேவொரு பனித்துகளை ஆராய்ந்திருக்கிறீர்களா? அது ஒவ்வொன்றும் உருவாகையில் எப்படியிருக்கும் என்று நீங்கள் ஆராய்ந்திருக்கிறீர்களா?
5 வருடக்கணக்கில் சிலர் பனித்துகள்களைப் பற்றி ஆய்வு செய்து புகைப்படம் எடுத்திருக்கின்றனர். ஒரேவொரு பனித்துகளில் மென்மையான 100 ஐஸ் படிகங்கள் இருக்கலாம்; இவை ஒவ்வொன்றிலும் கண்ணைக் கவரும் வெவ்வேறு வடிவங்கள் அற்புதமாக காணப்படுகின்றன. வளிமண்டலம் என்ற ஆங்கில புத்தகம் இவ்வாறு சொல்கிறது: “பனித்துகள்களில் கணக்கிலடங்கா வகைகள் உள்ளன. இது காலங்காலமாய் தெரிந்த விஷயம். ஒரு பனித்துகளைப் போல் மற்றொன்று இருக்கக்கூடாது என்று இயற்கை அவற்றிற்கு கட்டளையிடவில்லை. ஆனாலும் இரண்டு துகள்களை எடுத்து ஆராய்ந்து பார்த்தால் அவை ஒரே மாதிரி இருக்கவே இருக்காது. இதுதான் விஞ்ஞானிகள் கண்டறிந்த உண்மை. ஒரு தடவை . . . வில்சன் ஏ. பென்ட்லீ என்பவர் பனித்துகளைப் பற்றி ஒரு பிரமாண்டமான ஆய்வு நடத்தினார். இதற்காக 40-க்கும் மேற்பட்ட ஆண்டுகள் செலவிட்டார். பனித்துகள்களை மைக்ரோஸ்கோப்பின் உதவியால் ஆய்வு செய்து புகைப்படம் எடுத்துப் பார்த்தார். அதில் எந்த இரண்டு பனித்துகள்களும் ஒரே மாதிரி இருக்கவில்லை.” அபூர்வமாக இரண்டு பனித்துகள்கள் ஒரேபோல இருப்பதாக தோன்றினாலும் அவை எண்ணற்ற வகைகளின் அற்புதத்தை மதிப்புக் குறைவாக்கிவிடுமா?
6 “உறைந்த மழையின் [“பனி மழை,” NW] பண்டசாலைகளுக்குள் நீ பிரவேசித்தாயோ?” என கடவுள் கேட்ட கேள்வியை மறுபடியும் நினைத்துப் பாருங்கள். மேகக் கூட்டங்களே பனியின் சேமிப்புக் கிடங்கு என்று பலர் நினைக்கின்றனர். பனித்துகள்களின் எண்ணற்ற வகைகளை பட்டியலிடுவதற்காகவும் அவை எப்படி உருவாயின என்பதை ஆராய்வதற்காகவும் பனி சேமித்து வைக்கப்பட்டிருக்கும் இந்த கிடங்குகளுக்கு போவதாக நீங்கள் கற்பனை செய்ய முடியுமா? “சுமார் -40 டிகிரி செல்சியஸ் (-40 டிகிரி ஃபாரன்ஹீட்) வெப்பநிலையில் மேகத்திலுள்ள நீர்த்துளிகளை உறைய வைப்பதற்கு ஐஸ் கட்டிகளே காரணம். ஆனால் இந்த ஐஸ் கட்டிகள் எங்கிருந்து உருவாயின என்றும், அவற்றின் அமைப்புகள் எப்படிப்பட்டவை என்றும் இன்னும் யாராலும் சொல்ல முடியவில்லை” என ஓர் அறிவியல் களஞ்சியம் கூறுகிறது.—சங்கீதம் 147:16, 17; ஏசாயா 55:9, 10.
7. மழையைப் பற்றி மனிதன் எந்தளவுக்கு விவரமாக அறிந்திருக்கிறான்?
7 மழையைப் பற்றி என்ன தெரியும்? “மழைக்கு ஒரு தகப்பனுண்டோ? பனித்துளிகளை ஜநிப்பித்தவர் யார்?” என யோபுவிடம் கடவுள் கேட்டார். இதைப் பற்றியும் அதே அறிவியல் களஞ்சியம் இவ்வாறு சொல்கிறது: “வளிமண்டலத்திலுள்ள சிக்கல்வாய்ந்த இயக்கங்களாலும், காற்றில் நீராவியும் தூசியும் வெவ்வேறு அளவில் கலந்திருப்பதாலும், மேகங்களும் மழையும் உருவாகும் விதத்தைக் குறித்து பொதுவான ஒரு கொள்கையை திட்டவட்டமாக வகுக்கவே முடியாது என்று தோன்றுகிறது.” எளிதாக புரிந்துகொள்ளும் விதத்தில் விஞ்ஞானிகள் விளக்கமான கோட்பாடுகளை உருவாக்கியிருக்கின்றனர், ஆனால் உண்மையில் அவர்களால் முழுமையாக மழையை விளக்க முடியவில்லை. இருந்தாலும், அத்தியாவசியமான இந்த மழை பொழிகிறது, பூமியை நனைக்கிறது, தாவரங்களை தழைக்க வைக்கிறது, உயிர் வாழ்வை சாத்தியமானதாகவும் இன்பமானதாகவும் ஆக்குகிறது என்பது உங்களுக்குத் தெரியும்.
8. அப்போஸ்தலர் 14:17-லுள்ள பவுலின் வார்த்தைகள் ஏன் பொருத்தமானவை?
8 அப்போஸ்தலன் பவுல் எடுத்த முடிவை நீங்களும் ஆமோதிப்பீர்கள் அல்லவா? இப்படிப்பட்ட வியத்தகு செயல்களிலிருந்தே, அவற்றிற்கு யார் காரணகர்த்தா என்பதைப் பற்றிய அத்தாட்சியைக் காணும்படி மற்றவர்களை ஊக்குவித்தார். “அவர் நன்மை செய்து வந்து, வானத்திலிருந்து மழைகளையும் செழிப்புள்ள காலங்களையும் நமக்குத் தந்து, ஆகாரத்தினாலும் சந்தோஷத்தினாலும் நம்முடைய இருதயங்களை நிரப்பி, இவ்விதமாய் அவர் தம்மைக் குறித்துச் சாட்சி விளங்கப் பண்ணாதிருந்ததில்லை” என்று யெகோவா தேவனைப் பற்றி பவுல் சொன்னார்.—அப்போஸ்தலர் 14:17; சங்கீதம் 147:8.
9. கடவுளின் வியத்தகு செயல்கள் அவருடைய ஒப்பற்ற வல்லமையை எப்படி வெளிக்காட்டுகின்றன?
9 நன்மைதரும் அத்தகைய வியத்தகு செயல்களைச் செய்பவருக்கு அளவுகடந்த ஞானமும் வல்லமையும் இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. அவரது வல்லமைக்கு எடுத்துக்காட்டாக, இதைக் குறித்து சிந்தித்துப் பாருங்கள்: ஒவ்வொரு நாளும் கிட்டத்தட்ட 45,000 இடிமின் புயல்கள் ஏற்படுவதாக சொல்லப்படுகிறது; இந்தக் கணக்கில், வருடத்திற்கு ஒரு கோடியே அறுபது லட்சத்திற்கும் அதிகமான இடிமின் புயல்கள் ஏற்படுவதாக சொல்லப்படுகிறது. அப்படியானால், இந்த நொடியில் கிட்டத்தட்ட 2,000 இடிமின் புயல்கள் ஏற்பட்டுக்கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு இடிமின் புயலிலும் உட்பட்டிருக்கும் மேகங்களில், இரண்டாம் உலகப் போரின்போது போட்ட நியூக்ளியர் குண்டுகளைப் போல பத்து அல்லது அதற்கும் மேற்பட்ட குண்டுகளுக்கு நிகரான சக்தி உருவாகிறது. அதில் சிறிதளவு சக்தியே மின்னலாக பளிச்சிடுவதை நீங்கள் பார்க்கலாம். இது எவ்வளவு பிரமிக்கத்தக்கது! அத்துடன், இவ்வாறு மின்னல் வெட்டுவதால், அதிலிருந்து வெளியாகும் சக்தி, நைட்ரஜன் கூட்டுப்பொருட்கள் உருவாக உதவுகிறது. அவை பூமியிலுள்ள மண்ணை அடைந்ததும் தாவரங்கள் அவற்றை இயற்கை உரமாக உறிஞ்சிக்கொள்கின்றன. ஆகவே மின்னல், சக்தியின் வெளிக்காட்டாக இருப்பது மட்டுமல்லாமல் உண்மையிலேயே நன்மைகளையும் தருகிறது.—சங்கீதம் 104:14, 15.
உங்கள் முடிவு என்ன?
10. யோபு 38:33-38-லுள்ள கேள்விகளுக்கு எப்படி பதிலளிப்பீர்கள்?
10 உங்களை யோபுவின் இடத்தில் வைத்துக்கொள்ளுங்கள். சர்வ வல்லமை படைத்த கடவுள் உங்களை கேள்வி கேட்கிறார். கடவுளின் வியத்தகு செயல்களுக்கு செலுத்த வேண்டிய கவனத்தை அநேகர் செலுத்தவில்லை என்பதை நீங்கள் ஒத்துக்கொள்வீர்கள். யோபு 38:33-38-லுள்ள (தி.மொ.) கேள்விகளை யெகோவா நம்மிடம் கேட்கிறார். “வான நியமங்களை நீ அறிவாயோ? பூமிமேல் வான் ஆளுகையை நீ குறித்தாயோ? உன்குரல் மேகபரியந்தம் உயர்த்தி மிகுமழை உன்மேல் பொழியச் செய்வாயோ? மின்னலையனுப்பிட அவை போய்விடுமோ? இங்குளோம் என்று உன்னிடம் வந்துரைக்குமோ? மேகங்களிலே ஞானம் நுழைத்தவர் யார்? விண்வீழ்கொள்ளிக்கு விவேகம் அளித்தவர் யார்? மேகங்களை எண்ணுதற்கு ஞானமுடையவன் யார்? விண்துருத்திகளை வார்த்து நீர்பொழியச் செய்பவன் யார்? பொழியவே தூளெலாம் பாளமாய்ச் சேரும், மண்கட்டிகள் ஒன்றாய் ஒட்டிக்கொள்ளும்.”
11, 12. கடவுள் வியத்தகு செயல்களைச் செய்பவர் என்பதை நிரூபிக்கும் சில காரியங்கள் யாவை?
11 யோபுவிடம் எலிகூ கேட்டவற்றில் சில குறிப்புகளைப் பற்றித்தான் நாம் சிந்தித்திருக்கிறோம். அதன் பிறகு, “புருஷனைப்போல்” பதில் சொல்லும்படி யோபுவிடம் யெகோவா கேட்ட கேள்விகளில் சிலவற்றையும் கவனித்தோம். (யோபு 38:3) “சிலவற்றை” என்று ஏன் சொல்கிறோமென்றால், யோபு 38, 39 அதிகாரங்களில், படைப்பைப் பற்றி குறிப்பிடத்தக்க இன்னும் அநேக அம்சங்களுக்கு யெகோவா கவனத்தைத் திருப்பினார். உதாரணமாக, வானத்து நட்சத்திரக் கூட்டத்தைப் பற்றி அவர் குறிப்பிட்டார். அவற்றின் சட்டதிட்டங்கள் யாருக்குத் தெரியும்? (யோபு 38:31-33) சிங்கம், ரேவன், வரையாடு, வரிக்குதிரை, காட்டெருது, தீக்கோழி, பலம்படைத்த குதிரை, கழுகு போன்ற சில பிராணிகளிடம் யோபுவின் கவனத்தை யெகோவா திருப்பினார். இந்தப் பலதரப்பட்ட பிராணிகளுக்கு அவற்றிற்குரிய பண்புகளை கொடுத்து, அவை வாழவும் இனப்பெருக்கம் செய்யவும் வழிசெய்தவர் உண்மையில் யோபுவோ என கடவுள் அவரிடம் கேட்டார். குதிரைகளையும் பிற விலங்குகளையும் பற்றி அறிந்துகொள்ள உங்களுக்கு விருப்பமிருந்தால், இந்த அதிகாரங்களைப் படித்துப் பார்க்கையில் சுவாரஸ்யமாக இருக்கும்.—சங்கீதம் 50:10, 11.
12 யோபு 40, 41 அதிகாரங்களையும் நீங்கள் ஆராய்ந்து பார்க்கலாம். அவற்றில், இன்னும் இரண்டு பிராணிகளைப் பற்றிய கேள்விகளுக்கு பதில் சொல்லும்படி யோபுவிடம் யெகோவா கேட்டார். அவற்றில் ஒன்று, வலுவான, மிகப் பெரிய நீர்யானை (பிகெமோத்); மற்றொன்று, எளிதில் பிடிக்க முடியாத நைல் முதலை (லிவியாதன்). இவை இரண்டும் அவற்றிற்கே உரிய விதத்தில் படைப்பின் அதிசயத்துக்குச் சான்றாக திகழ்கின்றன; நாம் கவனம் செலுத்துவதற்கு உகந்தவை. என்ன முடிவுக்கு வரவேண்டும் என இப்போது பார்க்கலாம்.
13. கடவுள் கேட்ட கேள்விகள் யோபுவில் என்ன மாற்றத்தை ஏற்படுத்தின, இந்த விஷயங்கள் நம்மை எப்படி பாதிக்க வேண்டும்?
13 சரமாரியாக கடவுள் தொடுத்த கேள்விக் கணைகள் யோபுவிடம் ஏற்படுத்திய மாற்றத்தை யோபு 42-ம் அதிகாரம் நமக்கு காட்டுகிறது. ஆரம்பத்தில், தன்னைப் பற்றியும் தன்னைச் சுற்றியிருந்தவர்களைப் பற்றியுமே யோபு பெரிதாக நினைத்தார். ஆனால் யோபை திருத்துவதற்கு கடவுள் கேட்ட கேள்விகளில் அடங்கியிருந்த ஆலோசனைக்கு செவிகொடுத்து, தன் எண்ணத்தை மாற்றிக்கொண்டார். “தேவரீர் [யெகோவா] சகலத்தையும் செய்ய வல்லவர்; நீர் செய்ய நினைத்தது தடைபடாது என்பதை அறிந்திருக்கிறேன். அறிவில்லாமல் ஆலோசனையை மறைக்கிற இவன் யார்? ஆகையால் நான் எனக்குத் தெரியாததையும், என் புத்திக்கு எட்டாததையும், நான் அறியாததையும் அலப்பினேன்” என அவர் ஒப்புக்கொண்டார். (யோபு 42:2, 3) கடவுளின் வியத்தகு செயல்களுக்கு யோபு கவனம் செலுத்திய பின்பு அவை தனக்கு பெரும் வியப்பை ஏற்படுத்தியதாக தெரிவித்தார். படைப்பின் அதிசயங்களுக்குக் கண்ணோட்டம் செலுத்திய பின்பு, அவரைப் போலவே கடவுளின் ஞானத்தையும் வல்லமையையும் கண்டு நாமும் வியப்படைய வேண்டும். எதற்காக? வெறுமனே அவருடைய அளவற்ற வல்லமையையும் திறமையையும் கண்டு வியப்பில் ஆழ்ந்திருப்பதற்காகவா? அல்லது வேறு எதையாவது செய்ய அது நம்மை தூண்ட வேண்டுமா?
14. கடவுளின் வியத்தகு செயல்களைக் கண்டு தாவீது எப்படி பிரதிபலித்தார்?
14 இதைப் போன்ற கருத்துக்களையே தாவீதும் சங்கீதம் 86-ல் தெரிவித்தார். முந்தைய சங்கீதம் ஒன்றில் அவர் சொன்னதாவது: “வானங்கள் தேவனுடைய மகிமையை வெளிப்படுத்துகிறது, ஆகாயவிரிவு அவருடைய கரங்களின் கிரியையை அறிவிக்கிறது. பகலுக்குப் பகல் வார்த்தைகளைப் பொழிகிறது, இரவுக்கு இரவு அறிவைத் தெரிவிக்கிறது.” (சங்கீதம் 19:1, 2) ஆனால் தாவீது அதோடு நிறுத்தாமல் மேலும் தொடர்ந்தார். சங்கீதம் [திருப்பாடல்கள்] 86:10, 11-ல் (பொ.மொ.) நாம் இவ்வாறு வாசிக்கிறோம்: “நீர் மாட்சி மிக்கவர்; வியத்தகு செயல்கள் புரிபவர்; நீர் ஒருவரே கடவுள்! ஆண்டவரே, உமது உண்மைக்கேற்ப நான் நடக்குமாறு உமது வழியை எனக்குக் கற்பியும், உமது பெயருக்கு அஞ்சுமாறு என் உள்ளத்தை ஒருமுகப்படுத்தும்.” படைப்பாளரின் வியத்தகு செயல்களை கண்டு அவர் மீது தாவீதுக்கு ஏற்பட்ட பிரமிப்பில் மரியாதை கலந்த பயமும் ஓரளவு இருந்தது. ஏன் என்பதை நீங்களே புரிந்துகொள்ளலாம். இப்படிப்பட்ட வியத்தகு செயல்களை செய்ய வல்லவரை வேதனைப்படுத்த தாவீது விரும்பவில்லை. அவ்வாறே நாமும் வேதனைப்படுத்தக் கூடாது.
15. தாவீதுக்கு கடவுள்மீது மரியாதை கலந்த பயம் இருந்தது ஏன் பொருத்தமானது?
15 கடவுள் தம்மிடம் பிரமாண்டமான சக்தியை அடக்கி வைத்திருக்கிறார். ஆகையால் தேவைப்படுகையில், அவருடைய ஆதரவைப் பெற தகுதியற்றவர்களுக்கு எதிராக இச்சக்தியை அவரால் பயன்படுத்த முடியும் என்பதை தாவீது புரிந்திருக்க வேண்டும். அப்படிப்பட்டவர்களுக்கு அது கேடுகாலம். கடவுள் இவ்வாறு யோபுவிடம் கேட்டார்: “உறைந்த மழையின் பண்டசாலைகளுக்குள் நீ பிரவேசித்தாயோ? கல்மழையிருக்கிற பண்டசாலைகளைப் பார்த்தாயோ? ஆபத்து வருங்காலத்திலும், கலகமும் யுத்தமும் வருங்காலத்திலும், பிரயோகிக்கும்படி நான் அவைகளை வைத்துவைத்திருக்கிறேன்.” பனிமழை, கல்மழை, புயல்மழை, காற்று, மின்னல் இவை யாவும் கடவுளின் கைவசமுள்ள ஆயுதங்கள். நிஜமாகவே இவை மலைக்க வைக்கும் பிரமாண்டமான இயற்கை சக்திகள்!—யோபு 38:22, 23.
16, 17. கடவுளிடமுள்ள பிரமிக்கத்தக்க வல்லமையை எது எடுத்துக்காட்டுகிறது, அத்தகைய வல்லமையை அவர் கடந்த காலத்தில் எப்படி பயன்படுத்தினார்?
16 சூறாவளி காற்று, கடும் புயல், சுழல்காற்று, கல்மழை அல்லது வெள்ளப் பெருக்கு ஆகியவற்றில் ஏதாவது ஒன்று நீங்கள் வசிக்கும் இடத்தில் ஏற்பட்டிருந்தால் அவை உங்கள் நினைவுக்கு வரலாம். உதாரணமாக: இரண்டாயிரமாவது வருடத்தின் ஆரம்பத்தில் தென்மேற்கு ஐரோப்பாவை பலத்த புயற்காற்று தாக்கியது. அது வானிலை ஆராய்ச்சி நிபுணர்களே எதிர்பாராதது. அப்போது, மணிக்கு 200 கிலோமீட்டர் வேகத்தில் வீசிய சூறாவளியால், ஆயிரக்கணக்கான கூரைகள் பறந்தன; மின்கம்பங்கள் அடியோடு சரிந்தன; வாகனங்கள் கவிழ்ந்தன. இதை சற்று கற்பனை செய்து பாருங்கள்: இந்தச் சூறாவளியால் சுமார் 27 கோடி மரங்கள் முறிந்தன, அல்லது வேரோடு சாய்ந்தன. பாரிஸுக்கு பக்கத்திலுள்ள வெர்செய்ல்ஸ் பூங்காவில் மட்டுமே 10,000 மரங்களுக்கு இந்தக் கதி ஏற்பட்டது! லட்சக்கணக்கான வீடுகளில் மின்சாரம் இல்லாமற்போனது. கிட்டத்தட்ட 100 பேர் இதில் சிக்கி மடிந்தனர். கணநேரம் தாக்கிய சூறாவளியால் இவ்வளவு நாசம் ஏற்பட்டதென்றால், அது எப்பேர்ப்பட்ட சக்தி!
17 சூறாவளிகளை எப்போதாவது ஏற்படும், தாறுமாறான, கட்டுப்படுத்தப்படாத நிகழ்வுகள் என ஒருவேளை ஒருவர் அழைக்கலாம். சர்வ வல்லவர் இப்படிப்பட்ட சக்திகளை ஒரு நோக்கத்தோடு, கட்டுப்பாட்டோடு, முறைப்படி பயன்படுத்தி வியத்தகு செயல்களை நடப்பித்தாரானால் எப்படி இருக்கும்? இதைப் போன்ற ஒன்றை ஆபிரகாமின் காலத்தில் அவர் செய்தார். ஒரு காலத்தில் சோதோம் கொமோராவில் அக்கிரமம் நிலவிவந்தது; அச்சந்தர்ப்பத்தில் சர்வலோக நியாயாதிபதி எவ்வாறு நீதியை சரிக்கட்டினார் என்பதை ஆபிரகாம் தெரிந்து கொண்டார். எப்படியெனில், அந்தப் பட்டணங்களில் வாழ்ந்த மக்கள் மிகவும் மோசமானவர்கள். இதனால் அவர்களைப் பற்றிய குற்றச்சாட்டுகள் கடவுளிடம் வந்தெட்டின. அப்பட்டணங்களை அழிக்கும் முன்பு நீதிமான்கள் தப்பித்துச் செல்ல எல்லா ஏற்பாடுகளையும் அவர் செய்தார். அதற்குப்பின் அந்தப் பட்டணங்களின்மீது, ‘வானத்திலிருந்து கந்தகத்தையும் அக்கினியையும் [யெகோவா] வருஷிக்கப்பண்ணினார்’ என்று சரித்திரப் பதிவு கூறுகிறது. நீதிமான்களைக் காப்பாற்றி, படுமோசமான துன்மார்க்கரை அழிப்பதும் கடவுளின் வியத்தகு செயல்களில் ஒன்றே!—ஆதியாகமம் 19:24.
18. ஏசாயா 25-ம் அதிகாரம் குறிப்பிடும் வியத்தகு செயல்கள் யாவை?
18 இதற்குப் பின் இன்னொரு சமயம், பண்டைய பாபிலோன் நகரத்திற்கு எதிராக கடவுள் நியாயத்தீர்ப்பை அளித்தார். இந்த நகரத்தையே ஏசாயா 25-ம் அதிகாரம் குறிப்பிட்டிருக்கலாம். ஒரு நகரம் பாழாய்ப் போகும் என கடவுள் முன்னுரைத்தார். “நீர் நகரத்தை மண்மேடும், அரணான பட்டணத்தைப் பாழுமாக்கினீர்; அந்நியரின் ராஜதானியை ஊராயிராதபடிக்கும், என்றைக்கும் கட்டப்படாதபடிக்கும் செய்தீர்.” (ஏசாயா 25:2) முன்னுரைத்தபடியே நடந்திருக்கிறது என்பதை பண்டைய பாபிலோனை இப்போது பார்வையிடும் சுற்றுலா பயணிகளால் உறுதிசெய்ய முடிகிறது. பாபிலோனின் அழிவு தற்செயலாக நிகழ்ந்ததா? இல்லவே இல்லை! மாறாக, ஏசாயாவின் பின்வரும் வார்த்தைகளை நாம் ஏற்றுக்கொள்ளலாம்: “ஆண்டவரே, நீரே என் கடவுள்: நான் உம்மை மேன்மைப்படுத்துவேன்; உம் பெயரைப் போற்றுவேன்; நீர் வியத்தகு செயல் புரிந்துள்ளீர்; நெடுநாளாய் நீர் தீட்டியுள்ள திட்டத்தைத் திண்ணமாகவும் உறுதியாகவும் நிறைவேற்றியுள்ளீர்.”—ஏசாயா 25:1, பொ.மொ.
எதிர்கால வியத்தகு செயல்கள்
19, 20. ஏசாயா 25:6-8-ன் என்ன நிறைவேற்றத்தை நாம் எதிர்பார்க்கலாம்?
19 தேவன் கடந்த காலத்தில் மேற்குறிப்பிடப்பட்ட தீர்க்கதரிசனம் நிறைவேறும்படி செய்தார். எதிர்காலத்திலும் அவர் வியத்தகு விதத்தில் செயல்படுவார். ‘வியத்தகு செயலை’ ஏசாயா விவரிக்கும் இந்த சூழமைவில், பாபிலோனின்மீது நியாயத்தீர்ப்பு நிறைவேறியதைப் போலவே எதிர்காலத்தில் நிறைவேறப் போகும் மற்றொரு நம்பகமான தீர்க்கதரிசனத்தை நாம் காண்கிறோம். எப்படிப்பட்ட ‘வியத்தகு செயல்’ நடைபெறப் போவதாக வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது? ஏசாயா 25:6 சொல்கிறது: “சேனைகளின் கர்த்தர் இந்த மலையிலே சகல ஜனங்களுக்கும் ஒரு விருந்தை ஆயத்தப்படுத்துவார்; அது கொழுமையான பதார்த்தங்களும், பழமையான திராட்சரசமும், ஊனும் நிணமுமுள்ள பதார்த்தங்களும், தெளிந்த பழமையான திராட்சரசமும் நிறைந்த விருந்தாயிருக்கும்.”
20 அந்த தீர்க்கதரிசனம், கடவுள் வாக்குறுதி அளித்துள்ள புதிய உலகில் வெகு சீக்கிரத்தில் நடந்தேறும். அப்பொழுது, அநேகரை அலைக்கழிக்கும் பிரச்சினைகளிலிருந்து மனிதகுலம் விடுதலை பெறும். சொல்லப்போனால், கடவுள் தமக்கிருக்கும் படைக்கும் சக்தியை முன்னொருபோதும் இல்லாத அளவுக்கு வியத்தகு விதத்தில் பயன்படுத்துவார் என ஏசாயா 25:7, 8-லுள்ள தீர்க்கதரிசனம் உத்தரவாதம் அளிக்கிறது. “அவர் மரணத்தை ஜெயமாக விழுங்குவார்; கர்த்தராகிய தேவன் எல்லா முகங்களிலுமிருந்து கண்ணீரைத் துடைத்து, தமது ஜனத்தின் நிந்தையை பூமியிலிராதபடிக்கு முற்றிலும் நீக்கிவிடுவார்; கர்த்தரே இதைச் சொன்னார்.” அப்போஸ்தலன் பவுல் இந்தப் பகுதியிலிருந்து மேற்கோள் காட்டுகையில், மரித்தவர்களைக் கடவுள் உயிரோடு எழுப்பும் உயிர்த்தெழுதலுக்கு அதைப் பொருத்தினார். அது எப்பேர்ப்பட்ட வியத்தகு செயல்!—1 கொரிந்தியர் 15:51-54.
21. மரித்தவர்களுக்காக என்ன வியத்தகு செயல்களை கடவுள் செய்வார்?
21 வருந்தி கண்ணீர் வடிக்கும் நிலைமையெல்லாம் மாறிவிடும் என்பதற்கு மற்றொரு காரணம், மனிதரை வாட்டி வதைக்கும் சரீர வேதனைகள் அப்போது இரா. இயேசு பூமியில் இருந்தபோது அநேகருக்கு சுகமளித்தார், குருடருக்குப் பார்வையளித்தார், அடைபட்டிருந்த செவிடர் காதுகளை திறந்தார், ஊனமானவர்களை சுகப்படுத்தினார். 38 வருடங்களாக முடமாயிருந்த ஒருவனை நடக்கச் செய்த அற்புதத்தைப் பற்றி யோவான் 5:5-9 விவரிக்கிறது. அதை நேரில் பார்த்தவர்கள் ஓர் அற்புதம் அல்லது வியத்தகு செயல் என்று நினைத்தனர். நிஜமாகவே அது வியத்தகு செயல்தான்! ஆனால் அதைவிட அற்புதம், இறந்தவர்களைத் தாம் உயிர்த்தெழுப்பப் போவதுதான் என இயேசு சொன்னார். “இதைக்குறித்து நீங்கள் ஆச்சரியப்பட வேண்டாம்; ஏனென்றால் பிரேதக்குழிகளிலுள்ள அனைவரும் அவருடைய சத்தத்தைக் கேட்குங்காலம் வரும்; அப்பொழுது, நன்மைசெய்தவர்கள் ஜீவனை அடையும்படி எழுந்திருக்கிறவர்களாக . . . புறப்படுவார்கள்.”—யோவான் 5:28, 29.
22. எளியவர்களும் சிறுமையானவர்களும் ஏன் எதிர்காலத்தை நம்பிக்கையுடன் எதிர்நோக்கலாம்?
22 இது கட்டாயம் நடக்கும். ஏனெனில் இதைச் செய்வதாக வாக்குறுதி அளித்திருப்பவர் யெகோவா. மீண்டும் ஸ்தாபிக்க அவருக்கு இருக்கும் சக்தியை தக்க விதத்தில் அவர் பயன்படுத்தும்போது நல்லது நடக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் வேண்டாம். ராஜாவான தம் குமாரன் மூலம் அவர் செய்யப் போவதை சங்கீதம் 72 குறிப்பிடுகிறது. அச்சமயத்தில் நீதிமான் செழிப்பான். மிகுந்த சமாதானம் நிலவும். எளியவர்களையும் சிறுமையானவர்களையும் கடவுள் விடுவிப்பார். “பூமியில் தானியம் மிகுந்திருக்கும்; தானியத்தின் விளைச்சல் மலைகளின் உச்சிகளில் பொங்கி வழியும். அவர் அளிக்கும் கனிகள் [பூர்வீக] லீபனோனில் இருந்ததைப்போல் இருக்கும்; பூமியின் புல்லைப்போல நகரத்தார் செழித்தோங்குவார்கள்” என அவர் வாக்குறுதி அளிக்கிறார்.—சங்கீதம் 72:16, NW.
23. கடவுளின் வியத்தகு செயல்கள் என்ன செய்ய நம்மை தூண்ட வேண்டும்?
23 யெகோவாவின் வியத்தகு செயல்கள் அனைத்திற்கும் ஏன் கவனம் செலுத்த வேண்டும் என்பதை நாம் தெளிவாக தெரிந்துகொண்டோம். வியத்தகு செயல்கள் என்று சொல்கையில், கடந்த காலங்களில் அவர் செய்ததையும், இப்போது அவர் செய்துவருவதையும், சீக்கிரமாகவே எதிர்காலத்தில் அவர் செய்யப்போவதையும் அர்த்தப்படுத்துகிறோம். “இஸ்ரவேலின் கடவுள், யெகோவாவாகிய கடவுளே, ஸ்தோத்திரத்துக்குரியவர்; அவர் ஒருவரே அதிசயங்களைச் செய்கிறவர். மகிமைபொருந்திய அவருடைய திருநாமம் என்றென்றும் ஸ்தோத்திரிக்கப்படுவதாக; பூமி முழுவதிலும் அவருடைய மகிமையே நிறைந்திருப்பதாக; ஆமேன், ஆமேன்.” (சங்கீதம் 72:18, 19, தி.மொ.) உறவினர்களிடமும் மற்றவர்களிடமும் ஆர்வத்தோடு உரையாடுகையில் இதைப் பற்றி எப்போதும் பேச வேண்டும். ‘தேசத்தாருக்குள் அவருடைய மகிமையையும், சகல ஜனங்களுக்குள் அவருடைய வியத்தகு செயல்களையும் விவரித்துச் சொல்வோமாக.’—சங்கீதம் 78:3, 4; 96:3, 4, NW.
நீங்கள் எப்படி பதிலளிப்பீர்கள்?
• யோபுவிடம் தொடுக்கப்பட்ட கேள்விக் கணைகள் மனிதனின் மட்டுப்பட்ட அறிவை எவ்வாறு எடுத்துக்காட்டுகின்றன?
• யோபு 37 முதல் 41 அதிகாரங்களிலுள்ள கடவுளின் வியத்தகு செயல்களைப் பற்றிய என்ன உதாரணங்கள் உங்களை கவர்ந்தன?
• கடவுளின் வியத்தகு செயல்கள் சிலவற்றை ஆராய்ந்த பிறகு நாம் எப்படி பிரதிபலிக்க வேண்டும்?
[பக்கம் 10-ன் படங்கள்]
பனித்துகள்களின் எண்ணற்ற வகைகளையும் மின்னலின் அபார சக்தியையும் பற்றி என்ன முடிவுக்கு வருகிறீர்கள்?
[படத்திற்கான நன்றி]
snowcrystals.net
[பக்கம் 13-ன் படங்கள்]
நம் உரையாடலில் எப்போதும் கடவுளின் வியத்தகு செயல்கள் இடம்பெறட்டும்