யெகோவாவின் வார்த்தை ஜீவனுள்ளது
சங்கீத புத்தகத்திலிருந்து சிறப்பு குறிப்புகள்—ஐந்தாம் பகுதி
செல்வச் சீமான்கள் இவ்வாறு சொல்லக்கூடும்: “எங்கள் குமாரர் இளமையில் ஓங்கிவளருகிற விருட்சக் கன்றுகளைப்போலவும், எங்கள் குமாரத்திகள் சித்திரந்தீர்ந்த அரமனை மூலைக்கற்களைப் போலவும் இருப்பார்கள். . . . எங்கள் ஆடுகள் ஆயிரம் பதினாயிரமாய்ப் பலுகும்.” பணக்காரர்களும் இவ்வாறு சொல்லக்கூடும்: “இவ்விதமான சீரைப்பெற்ற ஜனம் பாக்கியமுள்ளது [அதாவது, சந்தோஷமுள்ளது].” ஆனால், இதற்கு நேர்மாறாக சங்கீதக்காரன் இவ்வாறு சொல்கிறார்: “கர்த்தரை [“யெகோவாவை,” NW] தெய்வமாகக் கொண்டிருக்கிற ஜனம் பாக்கியமுள்ளது [அதாவது, சந்தோஷமுள்ளது].” (சங்கீதம் 144:12-15) ஆம், அதில் சந்தேகமே இல்லை! யெகோவா சந்தோஷமுள்ள கடவுள்; அதனால் அவரை வணங்குவோரும் சந்தோஷமாக இருக்கிறார்கள். (1 தீமோத்தேயு 1:11) கடவுளுடைய ஆவியின் ஏவுதலால் எழுதப்பட்ட சங்கீதங்களின் கடைசி பகுதியான 107-150 சங்கீதங்கள் இந்த உண்மையைத் தெளிவுபடுத்துகிறது.
சங்கீத புத்தகத்தின் இந்த ஐந்தாம் பகுதி, அன்புள்ள தயவு, உண்மைத்தன்மை, நற்குணம் உட்பட யெகோவாவின் மிக உயர்ந்த பண்புகளைச் சிறப்பித்துக் காட்டுகிறது. யெகோவாவின் ஆள்தன்மையைப் பற்றி எந்தளவுக்கு அதிகமாகப் புரிந்துகொள்கிறோமோ, அந்தளவுக்கு அதிகமாக அவரை நேசிக்கவும், அவருக்குப் பயப்படவும் நாம் மனமுள்ளவர்களாய் இருப்போம். அப்போது நாம் சந்தோஷத்தைக் காண்போம். ஆம், சங்கீத புத்தகத்தின் ஐந்தாம் பகுதியிலுள்ள செய்தி உண்மையிலேயே மதிப்புமிக்க செய்தி!—எபிரெயர் 4:12.
யெகோவாவுடைய அன்புள்ள தயவின் நிமித்தம் மகிழ்ச்சி
பாபிலோனின் சிறையிருப்பிலிருந்து திரும்பி வருகிற யூதர்கள் இவ்வாறு பாடுகிறார்கள்: “கர்த்தரை அவருடைய கிருபையினிமித்தமும் [“அன்புள்ள தயவின் நிமித்தமும்,” NW], மனுபுத்திரருக்கு அவர் செய்கிற அதிசயங்களினிமித்தமும் [ஜனங்கள்] துதிப்பார்களாக.” (சங்கீதம் 107:9, 16, 21, 31) கடவுளைத் துதித்து தாவீது இவ்வாறு பாடுகிறார்: “உமது சத்தியம் [அதாவது, உண்மைத்தன்மை] மேகமண்டலங்கள் பரியந்தமும் எட்டுகிறது.” (சங்கீதம் 108:4) பின்வரும் பாடலில் அவர் இவ்வாறு ஜெபிக்கிறார்: “என் தேவனாகிய கர்த்தாவே எனக்குச் சகாயம்பண்ணும்; உமது கிருபையின்படி [அதாவது, அன்புள்ள தயவின்படி] என்னை இரட்சியும்.” (சங்கீதம் 109:18, 19, 26) சங்கீதம் 110, மேசியாவின் ஆட்சியைக் குறித்து தீர்க்கதரிசனமாகப் பாடப்பட்ட பாடலாகும். “கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்” என சங்கீதம் 111:10 குறிப்பிடுகிறது. ‘யெகோவாவுக்குப் பயந்திருக்கிற மனுஷன் சந்தோஷமுள்ளவன்’ என அடுத்த சங்கீதம் குறிப்பிடுகிறது.—சங்கீதம் 112:1, NW.
113-118 சங்கீதங்கள் “அல்லேல்” சங்கீதங்கள் என அழைக்கப்படுகின்றன. ஏனெனில் இந்தச் சங்கீதங்களில் “அல்லேலூயா,” அதாவது யாவைத் துதி, என்ற வார்த்தை அடிக்கடி பயன்படுத்தப்பட்டுள்ளது. பஸ்காவின்போதும், மூன்று வருடாந்தர பண்டிகைகளின்போதும் யூதர்கள் இப்பாடல்களைப் பாடியதாக மிஷ்னா கூறுகிறது. இந்த மிஷ்னா, பண்டைய யூதர்களின் வாய்வழி பாரம்பரியங்களை ஒன்றுசேர்த்து மூன்றாம் நூற்றாண்டில் தொகுக்கப்பட்ட நூலாகும். சங்கீதங்களிலேயே மிகப் பெரியதும், பைபிள் அதிகாரங்களிலேயே மிகப் பெரியதுமான 119-ம் சங்கீதம், கடவுள் வெளிப்படுத்திய செய்தியைச் சிறப்பித்துக் காட்டுகிறது.
வேதப்பூர்வ கேள்விகளுக்குப் பதில்கள்:
109:23—“சாயும் நிழலைப்போல் அகன்று போனேன்” என்று தாவீது சொன்னதன் அர்த்தம் என்ன? தனக்குச் சாவு நெருங்கிவிட்டதாக தாவீது நினைத்தார். அதையே கவிதை நடையில் இவ்வாறு சொல்லியிருக்கிறார்.—சங்கீதம் 102:11.
110:1, 2—‘[தாவீதின்] ஆண்டவரான’ இயேசு கிறிஸ்து, தேவனுடைய வலதுபாரிசத்தில் உட்கார்ந்திருக்கையில் என்ன செய்தார்? இயேசு பரலோகத்திற்கு உயிர்த்தெழுப்பப்பட்டு, 1914-ல் அரசராக ஆட்சியைத் தொடங்கும்வரை தேவனுடைய வலதுபாரிசத்தில் காத்திருந்தார். அந்தச் சமயத்தில், தம்மைப் பின்பற்றிய அபிஷேகம் செய்யப்பட்டவர்கள்மீது அவர் ஆட்சிசெய்தார்; பிரசங்க வேலையிலும் சீஷராக்கும் வேலையிலும் அவர்களை வழிநடத்தினார். அதுமட்டுமல்ல, தம்முடைய ராஜ்யத்தில் தம்முடன் ஆட்சி செய்வதற்காக அவர்களைத் தயார்படுத்தினார்.—மத்தேயு 24:14; 28:18-20; லூக்கா 22:28-30.
110:4—யெகோவா எந்த ஆணையில் ‘மனம் மாறாமலிருப்பார்’? ராஜாவாகவும் பிரதான ஆசாரியராகவும் சேவை செய்வதற்கு இயேசு கிறிஸ்துவோடு யெகோவா ஏற்படுத்திய உடன்படிக்கையே அந்த ஆணை ஆகும்.—லூக்கா 22:29, NW.
113:3—எவ்விதத்தில் “சூரியன் உதிக்கும் திசைதொடங்கி அது அஸ்தமிக்கும் திசைமட்டும்” யெகோவாவின் பெயர் துதிக்கப்படுகிறது? ஒரு பெரும் தொகுதியினர் கடவுளை தினம் தினம் வழிபட்டு வருவதை மட்டுமே இது அர்த்தப்படுத்துவதில்லை. கிழக்கே சூரியன் உதிக்கும் திசையிலிருந்து மேற்கே அது அஸ்தமிக்கும் திசைவரைக்கும், அதாவது பூமி முழுவதற்கும், சூரியன் ஒளியைத் தருகிறது. அதுபோல, பூமியெங்கும் யெகோவாவைப் பற்றி புகழ்ந்து பேசப்படுகிறது. ஒழுங்கமைக்கப்பட்ட ஓர் அமைப்பு இருப்பதாலேயே இது சாத்தியமாகிறது. யெகோவாவின் சாட்சிகளான நாம், கடவுளைப் புகழ்ந்து துதிப்பதற்கும், ராஜ்ய பிரசங்கிப்பு வேலையில் ஈடுபடுவதற்கும் பொன்னான பாக்கியத்தைப் பெற்றிருக்கிறோம்.
116:15—‘கர்த்தருடைய பரிசுத்தவான்களின் மரணம் அவர் பார்வைக்கு அருமையாயிருப்பது’ எப்படி? யெகோவாவின் வணக்கத்தார் அவருக்கு மிகவும் மதிப்புள்ளவர்கள், அதனால் ஒரு தொகுதியாக அவர்களுடைய இறப்பை அவர் பேரிழப்பாகக் கருதுகிறார். அப்படி ஒரு தொகுதியாக அவர்கள் இறப்பதை அவர் அனுமதித்தால், அவருடைய எதிரிகள் அவரைவிட அதிக வல்லவர்கள் என்பதுபோல் ஆகிவிடும். அதோடு, புதிய உலகில் முதலாவதாக குடியேற இந்தப் பூமியில் யாருமே இல்லாத நிலையும் ஏற்படும்.
119:71—உபத்திரவப்படுவது எந்த விதத்தில் நல்லது? கஷ்டம் வருகையில், யெகோவாவை முழுமையாகச் சார்ந்திருப்பதற்கும் அதிக ஊக்கமாய் ஜெபம் செய்வதற்கும் நன்கு கருத்தூன்றி பைபிளை வாசிப்பதற்கும் அதன்படி நடப்பதற்கும் நாம் கற்றுக்கொள்கிறோம். அதுமட்டுமல்ல, கஷ்டம் வரும்போது நாம் நடந்துகொள்ளும் விதம் நம்முடைய குறைபாடுகளை வெளிப்படுத்துவதால், அவற்றைச் சரிசெய்யவும் முடியும். உபத்திரவம் நம்மை சீர்படுத்த அனுமதித்தால் அதைக் கண்டு நாம் விரக்தியடைய மாட்டோம்.
119:96—‘சகல சம்பூரணத்திற்கும் எல்லை’ என்பதன் அர்த்தம் என்ன? இங்கு சங்கீதக்காரன் பரிபூரணத்தைப் பற்றிய மனிதனின் கண்ணோட்டத்தைக் குறிப்பிடுகிறார். ஏனெனில், பரிபூரணத்தைக் குறித்த மனிதனின் கருத்துக்கு எல்லை உண்டு என்பது ஒருவேளை அவருடைய மனதில் இருந்திருக்கலாம். ஆனால், கடவுளுடைய கற்பனைக்கோ அதாவது, கட்டளைக்கோ எல்லையே கிடையாது. அதன் ஆலோசனைகள் வாழ்க்கையின் எல்லா அம்சங்களுக்கும் பொருந்துகின்றன.
119:164—“ஒருநாளில் ஏழுதரம்” கடவுளைத் துதிப்பது எதை அர்த்தப்படுத்துகிறது? ஏழு என்ற எண் பெரும்பாலும் முழுமையைக் குறிக்கிறது. ஆகவே, யெகோவா நம்முடைய முழு துதிக்கும் தகுந்தவர் என்பதை தாவீது குறிப்பிடுகிறார்.
நமக்குப் பாடம்:
107:27-31. அர்மகெதோன் யுத்தத்தின்போது உலக ஞானம் ‘முழுகிப்போகும்,’ அதாவது குழப்பதை ஏற்படுத்திவிடும். (வெளிப்படுத்துதல் 16:14, 16) அழிவிலிருந்து யாரையும் அது காப்பாற்றாது. இரட்சிப்புக்காக யெகோவாவை நம்பியிருப்போர் மட்டுமே ‘அவருடைய அன்புள்ள தயவினிமித்தம் அவரைத் துதிப்பதற்கு’ உயிரோடிருப்பார்கள்.
109:30, 31; 110:5. பொதுவாக ஒரு போர்வீரன் தன் பட்டயத்தை வலது கையிலும் கேடயத்தை இடது கையிலும் பிடித்திருப்பார்; அப்படி இடது கையில் பிடித்திருக்கும் கேடயம் அவருடைய வலது கைக்குப் பாதுகாப்பு அளிக்காது. ஆகவே, யெகோவா தமது ஊழியர்களின் ‘வலதுபாரிசத்தில் நின்று’ அவர்கள் சார்பாகப் போரிடுவதாய் அடையாள அர்த்தத்தில் சொல்லப்படுகிறது. இவ்வாறு, அவர்களுக்குப் பாதுகாப்பும் உதவியும் அளிக்கிறார். இது, அவரை ‘மிகுதியாய்த் துதிப்பதற்கு’ அருமையான காரணத்தை அளிக்கிறது, அல்லவா?
113:4-9. மிக மிக உயர்ந்தவரான யெகோவா ‘வானத்திலுள்ளவைகளைப் பார்ப்பதற்கே’ தம்மைத் தாழ்த்துகிறார். இருந்தாலும், ஏழை எளியோரிடமும், குழந்தை பாக்கியமில்லாத பெண்களிடமும் அவர் இரக்கங்காட்டுகிறார். பேரரசராகிய யெகோவா தாழ்மையுள்ளவர், தம்மை வணங்குவோரும் அப்படி இருக்க வேண்டுமென விரும்புகிறார்.—யாக்கோபு 4:6.
114:3-7. சிவந்த சமுத்திரத்திலும் யோர்தான் நதியிலும் சீனாய் மலையிலும் யெகோவா தம்முடைய ஜனங்களின் சார்பாக நடப்பித்த அற்புதமான செயல்களை அறியும்போது அவை நம் மனதை மிகவும் நெகிழ வைக்க வேண்டும். ஆம், மனிதகுலத்தைக் குறிக்கும் “பூமி” தேவனுக்கு முன்பாக அடையாள அர்த்தத்தில் ‘அதிர’ வேண்டும், அதாவது, பயபக்தியைக் காட்ட வேண்டும்.
119:97-101. கடவுளுடைய வார்த்தையிலிருந்து நாம் பெற்றுக்கொள்கிற ஞானமும், அறிவுக்கூர்மையும், புரிந்துகொள்ளுதலும் ஆன்மீக தீங்கிலிருந்து நம்மைப் பாதுகாக்கின்றன.
119:105. நாம் தற்போது எதிர்ப்படுகிற பிரச்சினைகளைச் சமாளிப்பதற்குக் கடவுளுடைய வார்த்தை உதவுவதால், அது நம் கால்களுக்குத் தீபமாயிருக்கிறது. எதிர்காலத்தைக் குறித்த கடவுளுடைய நோக்கத்தை அது முன்னறிவிப்பதால், அது அடையாள அர்த்தத்தில் நம் பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது.
துன்பத்திலும் இன்பம்
நாம் எப்படிக் கஷ்டமான சூழ்நிலைகளை எதிர்ப்படவும் துன்பங்களிலிருந்து விடுபடவும் முடியும்? 120-134 சங்கீதங்கள் இதற்குத் தெளிவான பதிலை அளிக்கின்றன. உதவிக்காக யெகோவாவைச் சார்ந்திருக்கும்போது நாம் கஷ்டத்திலிருந்து விடுபடவும் தொடர்ந்து சந்தோஷமாய் இருக்கவும் முடிகிறது. இச்சங்கீதங்கள், ஆரோகண சங்கீதங்கள் என அழைக்கப்படுகின்றன; உயரமான மலையில் அமைந்திருந்த எருசலேமில், வருடாந்தர பண்டிகைகளைக் கொண்டாடுவதற்குப் பயணிக்கையில் இப்பாடல்களை இஸ்ரவேலர் பாடியிருக்கலாம்.
யெகோவா தமக்குப் பிரியமானவற்றை எல்லாம் செய்கிறவர், கையாலாகாத விக்கிரகங்களைப் போன்றவர் அல்ல என்பதை 135, 136 சங்கீதங்கள் சித்தரித்துக் காட்டுகின்றன. பாடலின் ஒரு வரிக்கு மறுமொழி கூறி பாடுவதற்காக 136-ம் சங்கீதம் இயற்றப்பட்டுள்ளது. அப்பாடலில், ஒவ்வொரு வசனத்தின் பிற்பகுதியும் அதன் முற்பகுதிக்கு மறுமொழியாகப் பாடப்படுகிறது. அடுத்த சங்கீதம், சீயோனில் யெகோவாவை வழிபட ஏங்கிய யூதர்கள், பாபிலோனில் மனமொடிந்த நிலையில் இருந்ததை விவரிக்கிறது. 138-145 சங்கீதங்கள் தாவீது இயற்றியவை. ‘யெகோவாவைத் தன் முழு இருதயத்தோடும் துதிக்க’ அவர் விரும்புகிறார். ஏன்? ஏனெனில், ‘நான் பிரமிக்கத்தக்க அதிசயமாய் உண்டாக்கப்பட்டிருக்கிறேன்’ என அவர் கூறுகிறார். (சங்கீதம் 138:1; 139:14) கெட்டவர்களிடமிருந்து தன்னைப் பாதுகாக்கும்படியும், நீதிமான் தன்னைக் கடிந்துகொள்ளும்படியும் துன்புறுத்துவோரிடமிருந்து தன்னை விடுவிக்கும்படியும் தன் நடத்தையைக் கண்காணிக்கும்படியும் அடுத்து வரும் ஐந்து சங்கீதங்களில் தாவீது ஜெபிக்கிறார். யெகோவாவின் மக்கள் அனுபவிக்கிற சந்தோஷத்தையும் அவர் சிறப்பித்துக் காட்டுகிறார். (சங்கீதம் 144:15) யெகோவாவின் மேன்மையையும் நற்குணத்தையும் எடுத்துரைத்த பின், தாவீது இவ்வாறு கூறுகிறார்: “என் வாய் கர்த்தரின் துதியைச் சொல்வதாக; மாம்ச தேகமுள்ள யாவும் அவருடைய பரிசுத்த நாமத்தை எப்பொழுதும் என்றென்றைக்கும் ஸ்தோத்திரிக்கக்கடவது.”—சங்கீதம் 145:21.
வேதப்பூர்வ கேள்விகளுக்குப் பதில்கள்:
122:3—எருசலேம் எவ்வாறு ‘இசைவிணைப்பான நகரமாய் [ஒன்றிணைத்து] கட்டப்பட்டது’? பொதுவாக, பண்டைக் கால நகரங்களைப் போலவே எருசலேமிலிருந்த வீடுகளும் அடுத்தடுத்து கட்டப்பட்டிருந்தன. அவ்வாறு அந்நகரம் கச்சிதமாக இருந்ததால், அதைப் பாதுகாப்பது எளிதாயிருந்தது. அதுமட்டுமல்ல, வீடுகள் நெருக்கமாக இருந்ததால், அந்த நகரவாசிகள் ஒருவருக்கொருவர் உதவியையும் பாதுகாப்பையும் அளிக்க முடிந்தது. இது, இஸ்ரவேலின் 12 கோத்திரத்தாரும் யெகோவாவை வழிபட ஒன்றுகூடி வந்தபோது அவர்கள் மத்தியில் நிலவிய ஆன்மீக ஒற்றுமையைச் சுட்டிக்காட்டுகிறது.
123:2—வேலைக்காரரின் கண்களைப் பற்றிய உதாரணத்தின் குறிப்பு என்ன? வேலைக்காரர்களும் வேலைக்காரிகளும் இரண்டு காரணங்களுக்காகத் தங்கள் எஜமானின் அல்லது எஜமானியின் கைகளை நோக்கியிருக்கிறார்கள்: ஒன்று, அவருடைய விருப்பங்களைத் தெரிந்துகொள்வதற்காக; மற்றொன்று, பாதுகாப்பையும் அத்தியாவசியமானவற்றையும் பெற்றுக்கொள்வதற்காக. அவ்வாறே, நாமும் யெகோவாவின் விருப்பத்தை அறிந்துகொள்வதற்கும், அவருடைய தயவைப் பெறுவதற்கும் அவரை நோக்கியிருக்கிறோம்.
131:1-3—தாவீது எவ்வாறு ‘பால்மறந்த குழந்தையைப் போல தன் ஆத்துமாவை அடக்கி அமரப்பண்ணினார்’? பால்மறந்த குழந்தை தன் அம்மாவின் கைகளில் இருக்கும்போது ஆறுதலையும் திருப்தியையும் பெற்றுக்கொள்கிறது; அவ்வாறு தாவீதும் ‘பால்மறந்த குழந்தையைப் போல’ தன் ஆத்துமாவை அமைதிப்படுத்தவும், ஆறுதல்படுத்தவும் கற்றுக்கொண்டார். எப்படி? அவர் இருதயத்தில் இறுமாப்புள்ளவராயும், கண்களில் மேட்டிமையுள்ளவராயும் பெரிய காரியங்களைத் தேடுகிறவராயும் இருக்கவில்லை. பேரும் புகழும் தேடுவதற்குப் பதிலாக, பொதுவாகவே தாவீது தன்னுடைய வரையறைகளை உணர்ந்து, மனத்தாழ்மையோடு நடந்துகொண்டார். நாமும்கூட அவருடைய மனப்பான்மையைப் பின்பற்றுவது சிறந்தது; முக்கியமாக சபையில் விசேஷித்த பொறுப்புகளைப் பெற முயலுவோர் அவருடைய மனப்பான்மையைப் பின்பற்றுவது சிறந்தது.
நமக்குப் பாடம்:
120:1, 2, 6, 7. பழித்துப் பேசுவதும், குத்தலாகப் பேசுவதும் மற்றவர்களுக்கு தாங்க முடியாத வேதனையை உண்டாக்கலாம். நாம் ‘சமாதானத்தை நாடுகிறோம்’ என்பதைக் காட்டுவதற்கு ஒரு வழி, நம் நாவை அடக்குவதாகும்.
120:3, 4. ‘கபட நாவை,’ அதாவது வஞ்சகம் பேசும் ஒருவரை நாம் பொறுத்துப்போக வேண்டியிருந்தால், தமது உரிய நேரத்தில் யெகோவா காரியங்களைச் சரிசெய்வார் என்பதை அறிந்து நாம் ஆறுதல் அடையலாம். பழித்துப் பேசுபவர்கள் “பலவானுடைய” கையினால் அழிவார்கள். அப்படிப்பட்டவர்கள், ‘சூரைச்செடிகளை எரிக்கும் தழலை’ போல யெகோவாவின் கையில் நிச்சயம் ஆக்கினைத் தீர்ப்பு அடைவார்கள்.
127:1-3. நாம் என்ன முயற்சி எடுத்தாலும் வழிநடத்துதலுக்காக யெகோவாவை நோக்கியிருப்பது அவசியம்.
133:1-3. யெகோவாவின் மக்கள் மத்தியில் நிலவுகிற ஒற்றுமை இதமானது, பயனுள்ளது, புத்துணர்ச்சி தருவது. குற்றங்கண்டுபிடிக்காமல், சண்டைபோடாமல், குறைகூறாமல் இருப்பதன் மூலம் அந்த ஒற்றுமையை நாம் காத்துக்கொள்ள வேண்டும்.
137:1, 5, 6. நாடுகடத்தப்பட்ட யெகோவாவின் வணக்கத்தாருக்கு சீயோன்மீது பற்று இருந்தது. அன்று, சீயோன் கடவுளுடைய அமைப்பின் பூமிக்குரிய பாகமாக இருந்தது. நம்மைப் பற்றி என்ன? இன்று யெகோவா பயன்படுத்தி வருகிற அமைப்பிடம் நமக்கும் உண்மையான பற்று இருக்கிறதா?
138:2. யெகோவா ‘தமது சகல பிரஸ்தாபத்தைப் பார்க்கிலும் [“பெயரைப் பார்க்கிலும்,” NW] தமது வார்த்தையை மகிமைப்படுத்துகிறார்.’ எனவே, தமது பெயரில் அவர் அளித்துள்ள வாக்குறுதிகளை நாம் எதிர்பார்ப்பதைவிட மிகவும் மேம்பட்ட விதத்தில் நிறைவேற்றுகிறார். உண்மையிலேயே, மகத்தான எதிர்பார்ப்புகள் நமக்கு முன் இருக்கின்றன.
139:1-6, 15, 16. நம்முடைய செயல்களையும் சிந்தனைகளையும் நாம் பேச நினைக்கும் வார்த்தைகளையும் யெகோவா அறிந்திருக்கிறார். ஒரு கருவாக நாம் உருவானதிலிருந்தே, நம் உடலின் பாகங்கள் உருவாவதற்கு முன்பே, அவர் நம்மை அறிந்திருக்கிறார். நம் ஒவ்வொருவரையும் அவர் அறிந்துவைத்திருப்பது, நம் புத்திக்கு எட்டாதளவுக்கு ‘மிகவும் ஆச்சரியமானது.’ ஆகவே, நாம் எதிர்ப்படுகிற கஷ்டமான சூழ்நிலையை அவர் பார்ப்பது மட்டுமின்றி, அதனால் நாம் எப்படிப் பாதிக்கப்படுகிறோம் என்பதையும் அவர் அறிந்திருக்கிறார்; இது நமக்கு எவ்வளவாய் ஆறுதல் அளிக்கிறது!
139:7-12. கண்ணுக்கெட்டாத எந்தக் கடைக்கோடியில் இருந்தாலும் அங்கேயும் வந்து கடவுள் நம்மைப் பலப்படுத்துவார்.
139:17, 18. யெகோவாவைப் பற்றிய அறிவு நமக்கு இன்பமானதாய் இருக்கிறதா? (நீதிமொழிகள் 2:10) அப்படி இருக்கிறதென்றால், அது நம் மகிழ்ச்சியின் வற்றாத ஊற்றாகத் திகழும். யெகோவாவின் நினைவுகள், ‘மணலைப் பார்க்கிலும் அதிகமானவை.’ ஆம், அவரைப் பற்றி எப்போதும் கற்றுக்கொண்டே இருக்கலாம்.
139:23, 24. “வேதனை உண்டாக்கும் வழி,” அதாவது தவறான எண்ணங்கள், ஆசைகள், மனச்சாய்வுகள் நம்மிடத்தில் இருக்கிறதா என பார்த்து அவற்றை அகற்றும்படி நம் உள்மனதை யெகோவா ஆராய்வதற்கு நாம் விரும்ப வேண்டும்.
143:4-7. கடும் துன்பங்களையும்கூட நாம் எப்படிச் சகிக்க முடியும்? அதற்கான முக்கிய வழிகள், யெகோவாவின் செயல்களைத் தியானிப்பது, அவற்றைப் பற்றியே யோசிப்பது, உதவிக்காக அவரிடம் ஜெபிப்பது ஆகியவை அதற்கு முக்கிய வழிகள் என்பதாகச் சங்கீதக்காரன் சொல்கிறார்.
யெகோவாவைத் துதியுங்கள்
சங்கீத புத்தகத்தின் முதல் நான்கு பகுதிகளும் யெகோவாவுக்குத் துதி சேர்க்கும் வார்த்தையுடன் முடிவடைகின்றன. (சங்கீதம் 41:13; 72:19, 20; 89:52; 106:48) இந்தக் கடைசி பகுதியும் அப்படித்தான் முடிவடைகிறது. சங்கீதம் 150:6 இவ்வாறு குறிப்பிடுகிறது: “சுவாசமுள்ள யாவும் கர்த்தரைத் துதிப்பதாக. அல்லேலூயா.” யெகோவா ஸ்தாபிக்கப் போகும் புதிய உலகில் நிச்சயமாகவே எல்லாரும் அவரைத் துதிப்பார்கள்.
ஆனந்தமிக்க அந்தக் காலத்திற்காக காத்திருக்கிற நாம், இப்பொழுது மெய்க் கடவுளை மகிமைப்படுத்துவதற்கும் அவரது பெயரைத் துதிப்பதற்கும் அநேக காரணங்கள் உள்ளன. யெகோவாவை அறிந்து, அவருடன் நல்லுறவை வைத்திருப்பதால் நாம் அனுபவிக்கிற சந்தோஷத்தை எண்ணிப் பார்க்கும்போது, நன்றியுள்ளத்தோடு அவரைத் துதிக்க நாம் தூண்டப்படுகிறோம், அல்லவா?
[பக்கம் 15-ன் படம்]
யெகோவாவின் அற்புத செயல்கள் நம்மை பிரமிக்க வைக்கின்றன
[பக்கம் 16-ன் படம்]
யெகோவாவின் நினைவுகள், ‘மணலைப் பார்க்கிலும் அதிகமானவை’