அதிகாரம் 16
கடவுளுடைய அரசாங்கம் அதன் ஆட்சியைத் தொடங்குகிறது
ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக, கடவுளுடைய அரசாங்கத்தில் விசுவாசம் வைத்துவரும் ஆட்கள் அது அதன் ஆட்சியைத் தொடங்கப்போகும் அந்தக் காலத்தை ஆவலோடு எதிர்நோக்கிக் காத்திருந்தனர். உதாரணமாக, விசுவாசமுள்ள ஆபிரகாம் ‘[மெய்யான, NW] அஸ்திபாரங்களுள்ள நகரத்துக்குக் . . . காத்திருந்தான்; அதன் சிற்பாசாரியும் அதைக் கட்டுகிறவரும் கடவுளே,’ என்று பைபிள் சொல்லுகிறது. (எபிரெயர் 11:10, தி.மொ.) அந்த ‘நகரம்’ கடவுளுடைய ராஜ்யமே. ஆனால் இங்கே அது ஏன் ஒரு ‘நகரம்’ என்றழைக்கப்படுகிறது? இது ஏனென்றால் பூர்வ காலங்களில் ஓர் அரசன் ஒரு நகரத்தின் மீது ஆட்சி செலுத்துவது சாதாரணமாயிருந்தது. ஆகவே ஒரு நகரத்தை ஒரு ராஜ்யமாக மக்கள் அடிக்கடி கருதினர்.
2 தொடக்கத்தில் கிறிஸ்துவைப் பின்பற்றினவர்களுக்குக் கடவுளுடைய ராஜ்யம் மெய்யான ஒன்றாயிருந்தது. இது அதன் ஆட்சியில் அவர்கள் காட்டின கூர்ந்த அக்கறையால் காட்டப்பட்டிருக்கிறது. (மத்தேயு 20:20-23) அவர்கள் மனதில் இருந்த கேள்வி இதுவே: கிறிஸ்துவும் அவருடைய சீஷர்களும் எப்பொழுது ஆளத் தொடங்குவார்கள்? ஒரு முறை, தம்முடைய உயிர்த்தெழுதலுக்குப் பின்பு இயேசு தம்முடைய சீஷர்களுக்குத் தோன்றினபோது, அவர்கள்: ‘ஆண்டவரே இக்காலத்திலா ராஜ்யத்தை இஸ்ரவேலுக்குத் திரும்பக் கொடுப்பீர்?’ என்று கேட்டார்கள். (அப்போஸ்தலர் 1:6) கிறிஸ்துவின் சீஷர்களைப் போலவே நீங்களும், கிறிஸ்து கடவுளுடைய அரசாங்கத்தில் அரசராக ஆளத் தொடங்குவது எப்பொழுது என்பதைக் கற்றறிய ஆவலாக இருக்கிறீர்களா?
கிறிஸ்தவர்கள் ஜெபித்து வருகிற அந்த அரசாங்கம்
3 கடவுளிடம் பின்வருமாறு ஜெபிக்கும்படி கிறிஸ்து தம்மைப் பின்பற்றினவர்களுக்குக் கற்பித்தார்: ‘உம்முடைய ராஜ்யம் வருவதாக. உம்முடைய சித்தம் பரலோகத்தில் செய்யப்படுவது போல், பூமியிலேயும் செய்யப்படுவதாக.’ (மத்தேயு 6:9, 10) ஆனால், ‘யெகோவா தேவன் எப்பொழுதும் அரசராக ஆண்டு வருகிறாரல்லவா? அப்படியானால் அவருடைய ராஜ்யம் வரும்படி ஏன் ஜெபிக்க வேண்டும்?’ என்று எவராவது ஒருவேளை கேட்கலாம்.
4 உண்மைதான், பைபிள் யெகோவாவை “நித்தியத்தின் ராஜா” என்றழைக்கிறது. (1 தீமோத்தேயு 1:17, NW) மேலும்: “யெகோவா தமது சிங்காசனத்தை வானங்களில் ஸ்தாபித்திருக்கிறார்; அவர் ராஜ்யம் எல்லாவற்றையும் ஆளுகிறது,” என்றும் அது சொல்லுகிறது. (சங்கீதம் 103:19, தி.மொ.) ஆகவே யெகோவா தம்முடைய எல்லா படைப்புகளின் மீதும் ஈடற்ற உன்னத அரசராக எப்பொழுதும் இருந்து வந்திருக்கிறார். (எரேமியா 10:10) என்றபோதிலும், ஏதேன் தோட்டத்தில் அவருடைய அரச அதிகாரத்துக்கு விரோதமாகச் செய்யப்பட்ட கலகத்தின் காரணமாக, கடவுள் ஒரு தனிப்பட்ட அரசாங்கத்தை ஏற்பாடு செய்தார். இந்த அரசாங்கத்துக்காகவே ஜெபிக்கும்படி இயேசு கிறிஸ்து பின்னால் தம்மைப் பின்பற்றுகிறவர்களுக்குக் கற்பித்தார். பிசாசாகிய சாத்தானும் மற்றவர்களும் கடவுளுடைய அரசாட்சியிலிருந்து விலகிச் சென்றபோது உண்டாக்கப்பட்ட பிரச்னைகளுக்கு முடிவைக் கொண்டு வருவதே இதன் நோக்கம்.
5 இந்தப் புதிய ராஜ்ய அரசாங்கமானது அதன் அதிகாரத்தையும் ஆளும் உரிமையையும் பெரிய அரசராகிய யெகோவா தேவனிடமிருந்து பெறுகிறது. இது அவருடைய ராஜ்யம். மறுபடியும் மறுபடியுமாக, பைபிள் இதை “தேவனுடைய ராஜ்யம்” என்று அழைக்கிறது. (லூக்கா 9:2, 11, 60, 62; 1 கொரிந்தியர் 6:9, 10; 15:50) என்றபோதிலும், யெகோவா தம்முடைய குமாரனை அதன் தலைமை அரசராக இருக்கும்படி நியமித்திருப்பதால், இது கிறிஸ்துவின் ராஜ்யம் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. (2 பேதுரு 1:11) முந்தின ஒரு அதிகாரத்தில் நாம் கற்றறிந்தபடி மனிதவர்க்கத்துக்குள்ளிருந்து எடுக்கப்பட்ட 1,44,000 ஆட்கள் இந்த ராஜ்யத்தில்கிறிஸ்துவுடன் அரசாளுவார்கள். (வெளிப்படுத்துதல் 14:1-4; 20:6) ஆகவே பைபிள் இதை “அந்த ஜனத்தின் ராஜ்யம்” என்றுங்கூட குறிப்பிடுகிறது.—தானியேல் 7:27, தி.மொ.
6 இயேசு பரலோகத்துக்குத் திரும்பிச் சென்ற அந்த ஆண்டில் இந்த ராஜ்யம் அதன் ஆட்சியைத் தொடங்கினதென்று சிலர் சொல்லுகின்றனர். பொ. ச. 33-ம் ஆண்டில் அந்த யூத பெந்தெகொஸ்தே பண்டிகை நாளன்று கிறிஸ்து தம்மைப் பின்பற்றினவர்களின்மேல் பரிசுத்த ஆவியை ஊற்றினபோது அவர் ஆளத் தொடங்கினாரென்று அவர்கள் சொல்லுகிறார்கள். (அப்போஸ்தலர் 2:1-4) ஆனால், சாத்தானின் கலகத்தால் உண்டுபண்ணப்பட்ட எல்லா பிரச்னைகளையும் முடிவு செய்ய யெகோவா ஏற்பாடு செய்த இந்த ராஜ்ய அரசாங்கம் அப்பொழுது அதன் ஆட்சியைத் தொடங்கவில்லை. அந்த “ஆண் பிள்ளை,” அதாவது கிறிஸ்துவை அரசராகக் கொண்ட கடவுளுடைய அரசாங்கம், அப்பொழுது பிறந்து அதன் ஆட்சியைத் தொடங்கினதென்று காட்டுவதற்கு எந்த ஒரு குறிப்பும் இல்லை. (வெளிப்படுத்துதல் 12:1-10) பொ. ச. 33-ம் ஆண்டில் இயேசு ஏதாவது முறையில் ஒரு ராஜ்யத்தை உடையவராக இருந்தாரா?
7 ஆம், இயேசு அப்பொழுது, ஏற்றக் காலத்தில் பரலோகங்களில் தம்மைச் சேர்ந்து கொள்ளப் போகிறவர்களாயிருந்த தம்மைப் பின்பற்றினவர்களைக் கொண்ட தம்முடைய சபையின் மேல் ஆளத் தொடங்கினார். இவ்வாறாக அவர்கள் பூமியில் இருக்கையில், “தமது [கடவுளுடைய] அன்பின் குமாரனுடைய ராஜ்யத்திற்குள்” எடுத்துக் கொள்ளப்பட்டிருப்பதாக பைபிள் அவர்களைக் குறித்துப் பேசுகிறது. (கொலோசெயர் 1:13) ஆனால், பரலோக வாழ்க்கைக்குரிய இந்த நம்பிக்கையைக் கொண்ட கிறிஸ்தவர்களின்மேல் ஆளும் இந்த ஆட்சி, அல்லது “ராஜ்யம்,” இயேசு அதற்காக ஜெபிக்கும்படி தம்மைப் பின்பற்றினோருக்குக் கற்பித்த அந்த ராஜ்ய அரசாங்கமல்ல. இது, பரலோகத்தில் தம்முடன் அரசாளப்போகிற அந்த 1,44,000 ஆட்களின் பேரில் மாத்திரமே ஆளும் ஒரு ராஜ்யம். நூற்றாண்டுகளினூடே அவர்களே அதன் ஒரே குடிமக்களாக இருந்துவந்திருக்கின்றனர். இவ்வாறாக இந்த ஆட்சி, அல்லது ‘கடவுளுடைய அன்பின் குமாரனுடைய ராஜ்யம்,’ பரலோக நம்பிக்கையைக் கொண்ட இந்தக் குடிமக்களில் கடைசியானவன் மரித்து பரலோகத்தில் கிறிஸ்துவைச் சேர்ந்து கொள்கையில் முடிவடையும். அவர்கள் இனிமேலும் கிறிஸ்துவின் குடிமக்களாக இருக்கமாட்டார்கள், ஆனால் அப்பொழுது அவர்கள், கடவுளுடைய நீண்டகால வாக்குப் பண்ணப்பட்ட ராஜ்ய அரசாங்கத்தில் அவரோடுகூட அரசர்களாக இருப்பார்கள்.
சத்துருக்களின் மத்தியில் ஆளத் தொடங்குவது
8 கிறிஸ்து தம்முடைய உயிர்த்தெழுதலுக்குப் பின்பு பரலோகத்துக்குத் திரும்பிச் சென்றபோது, கடவுளுடைய அரசாங்கத்தின் அரசராக அப்பொழுது ஆளத்தொடங்கவில்லை. அதற்கு மாறாக, அப்போஸ்தலனாகிய பவுல் பின்வருமாறு விளக்குகிற பிரகாரம், காத்திருப்பதற்குரிய ஓரு காலம் இருக்க வேண்டியதாயிருந்தது: “இந்த மனிதர் [இயேசு கிறிஸ்து] பாவங்களுக்காக ஒரே பலியை என்றுமாகச் செலுத்தி கடவுளுடைய வலது பாரிசத்தில் உட்கார்ந்தார். அப்பொழுதிலிருந்து தம்முடைய சத்துருக்கள் தம்முடைய பாதங்களுக்கு ஒரு மணையாக வைக்கப்பட வேண்டியவரையில் காத்துக்கொண்டிருக்கிறார்.” (எபிரெயர் 10:12, 13, NW) கிறிஸ்து ஆளத் தொடங்குவதற்குக் காலம் வந்தபோது, யெகோவா அவரிடம்: “நீர் உம்முடைய சத்துருக்களின் நடுவே ஆளுகை செய்யும் [கீழ்ப்படுத்திக் கொண்டு செல்லும், NW, அல்லது வென்று கைக்கொள்ளும்]” என்று சொன்னார்.—சங்கீதம் 110:1, 2, 5, 6.
9 எவனாவது கடவுளுடைய அரசாங்கத்தின் சத்துருவாயிருப்பானென்பது விநோதமாய்த் தொனிக்கிறதா? என்றபோதிலும் சரியானதைச் செய்யும்படி அதன் குடிமக்களைக் கேட்கிற ஓர் அரசாங்கத்தின்கீழ் வாழ எல்லோரும் விரும்புகிறதில்லை. ஆகவே எப்படி யெகோவாவும் அவருடைய குமாரனும் உலக ஆட்சியை ஏற்பார்களென்று சொன்ன பின்பு, “ஜாதிகள் கோபித்தார்கள்,” என்று பைபிள் சொல்லுகிறது. (வெளிப்படுத்துதல் 11:15, 17, 18) ஜாதிகள் அல்லது தேசங்கள் கடவுளுடைய ராஜ்யத்தை வரவேற்பதில்லை, ஏனென்றால் அதை எதிர்க்கும்படி சாத்தான் அவற்றைத் தவறாக வழிநடத்துகிறான்.
10 கடவுளுடைய அரசாங்கம் அதன் ஆட்சியைத் தொடங்குகையில், சாத்தானும் அவனுடைய தூதர்களும் இன்னும் பரலோகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் ராஜ்ய ஆட்சியை எதிர்ப்பதால், உடனடியாகப் போர் தொடங்குகிறது. இதன் விளைவாக, சாத்தானும் அவனுடைய தூதர்களும் பரலோகத்திலிருந்து வெளியே தள்ளப்பட்டார்கள். அப்பொழுது, ஓர் உரத்தக் குரல் பின்வருமாறு சொல்லுகிறது: “இப்பொழுது இரட்சிப்பும் வல்லமையும் நமது தேவனுடைய ராஜ்யமும், அவருடைய கிறிஸ்துவின் அதிகாரமும் உண்டாயிருக்கிறது.” ஆம், கடவுளுடைய அரசாங்கத்தின் ஆட்சி தொடங்குகிறது! சாத்தானும் அவனுடைய தூதர்களும் பரலோகத்திலிருந்து நீக்கப்பட்டிருக்க, அங்கே களிகூருதல் இருக்கிறது. “ஆகையால் பரலோகங்களே! அவைகளில் வாசமாயிருக்கிறவர்களே! களிகூருங்கள்,” என்று பைபிள் சொல்லுகிறது.—வெளிப்படுத்துதல் 12:7-12.
11 இது பூமிக்குங்கூட மகிழ்ச்சிக்குரிய காலமாக இருக்கிறதா? இல்லை! அதற்குப் பதிலாக, இந்தப் பூமிக்கு ஒருபோதுமே இருந்திராத மிகப் பேரளவான தொல்லைக்குரிய காலமாய் இருக்கிறது. பைபிள் பின்வருமாறு நமக்குச் சொல்லுகிறது: “பூமியிலும் சமுத்திரத்திலும் குடியிருக்கிறவர்களே! ஐயோ, பிசாசானவன் தனக்குக் கொஞ்சக் கால மாத்திரம் உண்டென்று அறிந்து, மிகுந்த கோபங்கொண்டு, உங்களிடத்தில் இறங்கினபடியால், உங்களுக்கு ஆபத்து வரும்.” (வெளிப்படுத்துதல் 12:12) ஆகவே இது நினைவில் வைக்க வேண்டிய ஒரு முக்கிய குறிப்பாயிருக்கிறது, அதாவது: கடவுளுடைய ராஜ்ய ஆட்சியின் தொடக்கம் பூமியில் சமாதானத்தையும் பாதுகாப்பையும் குறிக்கிறதில்லை. பின்னால், கடவுளுடைய ராஜ்யம் பூமியின் முழு ஆட்சி அதிகாரத்தையும் ஏற்கையில் மெய்யான சமாதானம் வரும். இது, அந்தக் “கொஞ்சக் காலத்”தின் முடிவில் நடக்கும், அப்பொழுது சாத்தானும் அவனுடைய தூதர்களும் இனிமேலும் எவருக்கும் தொந்தரவு உண்டுபண்ணக்கூடாதபடி வழியிலிருந்து விலக்கப்படுவார்கள்.
12 ஆனால் சாத்தான் எப்பொழுது பரலோகத்திலிருந்து வெளியே தள்ளப்பட்டு, இவ்வாறு பூமியில் இந்தக் “கொஞ்சக் காலப்” பகுதியில் தொந்தரவை உண்டு பண்ணுவான்? கடவுளுடைய அரசாங்கம் எப்பொழுது அதன் ஆட்சியைத் தொடங்குகிறது? பைபிள் பதிலளிக்கிறதா? அது பதிலளிக்குமென்று நாம் எதிர்பார்க்க வேண்டும். ஏன்? ஏனென்றால், கடவுளுடைய குமாரன் மேசியாவாகும்படி எப்பொழுது பூமியில் ஒரு மனிதனாக முதலாவது தோன்றுவார் என்பதை வெகு காலத்துக்கு முன்பாகவே பைபிள் முன்னறிவித்தது. உண்மையில், அவர் மேசியாவான அந்த ஆண்டைத்தானே அது திட்டவட்டமாய்க் குறிப்பிட்டுக் காட்டினது. அப்படியானால் அதைப் பார்க்கிலும், தம்முடைய ராஜ்ய ஆட்சியைத் தொடங்குவதற்கு வரும் மேசியா அல்லது கிறிஸ்துவின், மிக முக்கியமான வருகையைப் பற்றியதென்ன? இது எப்பொழுது நடக்குமென்பதையும் பைபிள் நமக்குச் சொல்லுமென்று நிச்சயமாகவே நாம் எதிர்பார்போம்!
13 ஆனால் ஒருவர் பின்வருமாறு கேட்கலாம்: ‘மேசியா பூமியில் தோன்றின அந்தக் குறிப்பிட்ட ஆண்டை பைபிள் எங்கே முன்னறிவிக்கிறது?’ பைபிள் புத்தகமாகிய தானியேல் பின்வருமாறு சொல்லுகிறது: “எருசலேமைத் திரும்ப எடுப்பித்துக் கட்டுகிறதற்கான கட்டளை வெளிப்படுவதுமுதல், பிரபுவாகிய மேசியா வருமட்டும் ஏழு வாரமும், அறுபத்திரண்டு வாரமும் செல்லும்,” அல்லது மொத்தம் 69 வாரங்கள் செல்லும். (தானியேல் 9:25) என்றபோதிலும், இவை 483 நாட்களை மாத்திரமே கொண்ட, அல்லது ஓர் ஆண்டுக்குச் சற்று அதிகமாயிருக்கும் சொல்லர்த்தமான 69 வாரங்கள் அல்ல. அவை 69 வார வருடங்கள், அல்லது 483 ஆண்டுகள் ஆகும். (எண்ணாகமம் 14:34-ஐ ஒப்பிட்டுப் பாருங்கள்.) எருசலேமின் மதில்களைத் திரும்ப எடுப்பித்துக் கட்டுவதற்கான இந்தக் கட்டளை பொ.ச.மு. 455-ல்a கொடுக்கப்பட்டது. (நெகேமியா 2:1-8) ஆகவே இந்த 69 வார வருடங்கள் 483 ஆண்டுகளுக்கப்பால், பொ.ச. 29-ல் முடிவடைந்தன. அதே ஆண்டில் தானே இயேசு முழுக்காட்டப்படும்படி யோவானிடம் வந்தார்! அந்தத் தறுவாயின்போதே அவர் பரிசுத்த ஆவியினால் அபிஷேகம் செய்யப்பட்டு மேசியா, அல்லது கிறிஸ்து ஆனார்.—லூக்கா 3:1, 2, 21-23.
கடவுளுடைய அரசாங்கம் எப்பொழுது அதன் ஆட்சியைத் தொடங்குகிறது
14 அப்படியானால், கிறிஸ்து, கடவுளுடைய அரசாங்கத்தின் அரசராக ஆளத் தொடங்குகிற அந்த ஆண்டை பைபிள் எங்கே முன்னறிவிக்கிறது? அதே பைபிள் புத்தகமாகிய தானியேலில் முன்னறிவிக்கிறது. (தானியேல் 4:10-37) அங்கே மிகவும் உயரமான, வானத்தை எட்டுமளவாக உயர்ந்த ஒரு மரம், பாபிலோனின் அரசனாகிய நேபுகாத்நேச்சாரைக் குறிப்பிட பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அவனே அந்தக் காலத்தில் எல்லோரிலும் மிக உயர்ந்த மனித அரசனாயிருந்தான். என்றபோதிலும், அரசனாகிய நேபுகாத்நேச்சார், தன்னைப் பார்க்கிலும் உயர்ந்த ஒருவர் ஆட்சி செய்கிறாரென்பதைக் கட்டாயமாக அறியும்படி செய்விக்கப்பட்டான். இவரே “மகா உன்னதமானவர்,” அல்லது “பரலோகங்களின் ராஜா”வாகிய யெகோவா தேவன். (தானியேல் 4:34, 37, NW) ஆகவே மிக முக்கியமான முறையில் இந்த வானமளவாக உயர்ந்த மரம், கடவுளுடைய ஈடற்ற உன்னத அரசாட்சியைக், குறிப்பாக நம்முடைய பூமி சம்பந்தப்பட்டதில் குறிப்பிட்டு நிற்கிறது. யெகோவாவின் அரசாட்சியானது, இஸ்ரவேல் ஜனத்தின் மேல் அவர் ஏற்படுத்தி வைத்த அந்த ராஜ்யத்தின் மூலமாக, ஓரளவான காலத்துக்கு வெளிப்படுத்தப்பட்டது. இவ்வாறாக, இஸ்ரவேலின் மீது ஆண்ட யூதா கோத்திரத்து அரசர்கள், “யெகோவாவின் சிங்காசனத்தில் வீற்றிருந்த”தாகச் சொல்லப்பட்டார்கள்.—1 நாளாகமம் 29:23, தி.மொ.
15 தானியேல் நான்காம் அதிகாரத்திலுள்ள பைபிள் விவரத்தின்படி, வானளவாக உயர்ந்திருந்த அந்த மரம் வெட்டி வீழ்த்தப்பட்டது. என்றபோதிலும், அடி மரம் விட்டு வைக்கப்பட்டது, இரும்பு, செம்பு ஆகிய பட்டைகளைக் கொண்டு விலங்கிடப்பட்டது. இது, அந்த விலங்குகளை நீக்கி அது மறுபடியுமாக வளரத் தொடங்கும்படி விடப்படுவதற்கான கடவுளுடைய காலம் வரும்வரையில், அந்த அடிமரத்தை வளராதபடி கட்டுப்படுத்தி வைக்கும். ஆனால் கடவுளுடைய அரசாட்சி எப்படி, எப்பொழுது வெட்டப்பட்டது?
16 யெகோவா ஏற்படுத்தி வைத்திருந்த அந்த யூதா ராஜ்யம், காலப்போக்கில், அவ்வளவாய்ச் சீரழிந்து போனதனால், அதை அழிக்கும்படி, அதை வெட்டி வீழ்த்தும்படி அவர் அரசனாகிய நேபுகாத்நேச்சாரை அனுமதித்தார். இது பொ.ச.மு. 607-ம் ஆண்டில் நடந்தது. அந்தச் சமயத்தில், யெகோவாவின் சிங்காசனத்தில் உட்காருவதற்கு யூதாவின் கடைசி அரசனாக இருந்த சிதேக்கியா பின்வருமாறு சொல்லப்பட்டான்: “கிரீடத்தை எடுத்துப் போடு; . . . [சட்டப் பூர்வ] உரிமைக்காரனானவர் வருமட்டும் அது இல்லாதிருக்கும்; அவருக்கே அதைக் கொடுப்பேன்.”—எசேக்கியேல் 21:25-27.
17 ஆகவே அந்த ‘மரத்தால்’ குறிக்கப்பட்ட கடவுளுடைய அரசாட்சி பொ.ச.மு. 607-ல் வெட்டப்பட்டது. பூமியில் கடவுளுடைய அரசாட்சியைக் குறிப்பிட இனிமேலும் ஓர் அரசாங்கம் இருக்கவில்லை. இவ்வாறாக, “தேசங்களுக்குக் குறிக்கப்பட்ட காலங்கள்” (NW) அல்லது, “புறஜாதியாரின் காலங்கள்” என்பதாகப் பின்னால் இயேசுகிறிஸ்து குறிப்பிட்ட ஒரு காலப் பகுதி, பொ.ச.மு. 607-ல் தொடங்கினது. (லூக்கா 21:24) இந்தக் “குறிக்கப்பட்ட காலங்களின்” போது பூமியில் தம்முடைய அரசாட்சியைக் குறிப்பிட கடவுள் ஓர் அரசாங்கத்தைக் கொண்டிருக்கவில்லை.
18 “தேசங்களுக்குக் குறிக்கப்பட்ட” இந்தக் “காலங்களின்” முடிவில் என்ன நடக்க வேண்டும்? “சட்டப் பூர்வ உரிமைக்காரனானவ”ருக்கு ஆளுவதற்கான இந்த அதிகாரத்தை யெகோவா கொடுக்க வேண்டும். இயேசு கிறிஸ்துவே இந்த உரிமைக்காரர். ஆகவே “தேசங்களுக்குக் குறிக்கப்பட்ட காலங்கள்” எப்பொழுது முடிவடைகின்றனவென்பதை நாம் கண்டுபிடிக்கக்கூடுமானால், கிறிஸ்து எப்பொழுது அரசராக ஆளத் தொடங்குகிறார் என்பதை நாம் தெரிந்து கொள்வோம்.
19 தானியேல் நான்காம் அதிகாரத்தின்படி இந்தக் “குறிக்கப்பட்ட காலங்கள்” “ஏழு காலங்களாக” இருக்கும். இந்த “ஏழு காலங்களின்” போது, அந்த “மரத்தால்” குறிக்கப்பட்ட கடவுளுடைய அரசாட்சி பூமியின்மேல் செலுத்தப்படாதிருக்கும் என்று தானியேல் காட்டுகிறான். (தானியேல் 4:16, 23) இந்த “ஏழு காலங்கள்” எவ்வளவு நீடித்தவை?
20 வெளிப்படுத்துதல் 12-ம் அதிகாரம் 6-ம் 14-ம் வசனங்களில் 1,260 நாட்கள் “ஒரு காலமும் [அதாவது, 1 காலம்] காலங்களும் [அதாவது, 2 காலங்கள்], அரைக் காலமு”மானதற்குச் சமமாயிருக்கின்றனவென்று கற்றறிகிறோம். இவை மொத்தம் 3 1/2 காலங்கள். ஆக “ஒரு காலம்” 360 நாட்களுக்குச் சமமாயிருக்கும். ஆகவே, “ஏழு காலங்கள்,” 7 தடவைகள் 360, அல்லது 2,520 நாட்கள் ஆகும். இப்பொழுது, பைபிளின் ஒரு விதிப்படி ஒரு நாளை ஓர் ஆண்டாகக் கணக்கிடுவோமானால், அந்த “ஏழு காலங்கள்” 2,520 ஆண்டுகளுக்குச் சமமாக இருக்கின்றன.—எண்ணாகமம் 14:34; எசேக்கியேல் 4:6.
21 “தேசங்களுக்குக் குறிக்கப்பட்ட காலங்கள்” பொ.ச.மு. 607-ம் ஆண்டில் தொடங்கினவென்பதை நாம் ஏற்கெனவே கற்றறிந்திருக்கிறோம். அகவே, அந்தத் தேதியிலிருந்து 2,520 ஆண்டுகள் கணக்கிடுவதன் மூலம், நாம் பொ.ச.1914-க்கு வருகிறோம். இந்த ஆண்டிலேயே இந்தக் “குறிக்கப்பட்ட காலங்கள்” முடிவடைந்தன. இன்னும் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிற லட்சக்கணக்கான மக்கள் 1914-ல் நடந்த காரியங்களை நினைவுகூருகின்றனர். அந்த ஆண்டில், முதல் உலகப் போர் பயங்கர இக்கட்டான ஒரு காலப் பகுதியைத் தொடங்கிற்று, இது நம்முடைய நாள்வரையாகத் தொடர்ந்திருக்கிறது. இது 1914-ல் இயேசு கிறிஸ்து கடவுளுடைய அரசாங்கத்தின் அரசராக ஆளத் தொடங்கினார் என்பதைக் குறிக்கிறது. இந்த ராஜ்யம் ஏற்கெனவே அதன் ஆட்சியைத் தொடங்கிவிட்டிருப்பதால், அது “வருவ”தற்காகவும் சாத்தானின் பொல்லாத காரிய ஒழுங்குமுறையை இந்தப் பூமியிலிருந்து அறவே ஒழித்துப்போடுவதற்காகவும் நாம் ஜெபிப்பது ஆ, எவ்வளவு சமயோசிதமாயிருக்கிறது!—மத்தேயு 6:10; தானியேல் 2:44.
22 என்றபோதிலும் ஒருவர் பின்வருமாறு கேட்கலாம்: ‘கிறிஸ்து தம்முடைய தகப்பனின் ராஜ்யத்தில் ஆளுவதற்கு ஏற்கெனவே திரும்பிவந்து விட்டாரானால், நாம் ஏன் அவரைக் காண்கிறதில்லை?’
[அடிக்குறிப்புகள்]
a இந்தக் கட்டளை பொ.சமு. 455-ல் கொடுக்கப்பட்டதென்பதற்குச் சரித்திரப்பூர்வ அத்தாட்சியை அடைய, உவாட்ச் டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸையட்டி ஆப் நியூயார்க் என்ற சங்கத்தால் பிரசுரிக்கப்பட்ட ஏய்ட் டு பைபிள் அண்டர்ஸ்டான்டிங் என்ற ஆங்கில புத்தகத்தில் “அர்ட்டாஸெர்க்ஸஸ்” என்ற பொருளின் கீழ் பாருங்கள்.
[கேள்விகள்]
1. (எ) விசுவாசமுள்ள ஆட்கள் எதற்காக வெகு காலமாய் ஆவலோடு காத்திருக்கின்றனர்? (பி) கடவுளுடைய ராஜ்யம் ஏன் ஒரு “நகரம் ” என்று அழைக்கப்படுகிறது?
2. (எ) தொடக்கத்தில் கிறிஸ்துவைப் பின்பற்றினவர்களுக்கு இந்த ராஜ்யம் மெய்யான ஒன்றாயிருந்ததென்று எது காட்டுகிறது? (பி) அவர்கள் இதைப் பற்றி எதை அறிய விரும்பினர்?
3, 4. (எ) கடவுள் எப்பொழுதுமே அரசராக ஆண்டு வந்திருக்கிறார் என்று எது காட்டுகிறது? (பி) அப்படியானால் கடவுளுடைய ராஜ்யம் வரும்படி ஜெபிப்பதற்கு கிறிஸ்து தம்மைப் பின்பற்றினவர்களுக்கு ஏன் கற்றுக் கொடுத்தார்?
5. அது கடவுளுடைய ராஜ்யமானால், ஏன் கிறிஸ்துவின் ராஜ்யம் என்றும் 1,44,000 பேரின் ராஜ்யம் என்றுங்கூட அழைக்கப்படுகிறது?
6. கடவுளுடைய ராஜ்யம் எப்போது ஆளத் தொடங்கினதாகச் சிலர் சொல்லுகின்றனர்?
7. பொ.ச. 33 முதற்கொண்டு கிறிஸ்து யார் மீது ஆட்சி செய்து வந்திருக்கிறார்?
8. (எ) கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலுக்குப் பின், அவர் ஆளத் தொடங்குவதற்கு முன்பாக காத்திருக்க வேண்டிய ஒரு காலம் இருக்குமென்று எது காட்டுகிறது? (பி) கிறிஸ்து ஆளுவதற்கான காலம் வந்தபோது கடவுள் கிறிஸ்துவிடம் என்ன சொன்னார்?
9. (எ) ஏன் எல்லோரும் கடவுளுடைய ராஜ்யத்தை விரும்புகிறதில்லை? (பி) கடவுளுடைய அரசாங்கம் அதன் ஆட்சியைத் தொடங்குகையில், தேசங்கள் என்ன செய்கின்றன?
10, 11. (எ) கடவுளுடைய அரசாங்கம் அதன் ஆட்சியைத் தொடங்குகையில், பரலோகத்தில் என்ன நடக்கிறது? (பி) பூமியில் என்ன நடக்கிறது? (சி) ஆகவே எந்த முக்கிய குறிப்பை நாம் நினைவில் வைக்க விரும்புகிறோம்?
12. கடவுளுடைய ராஜ்யம் அதன் ஆட்சியை எப்பொழுது தொடங்குகிறதென்பதை பைபிள் நமக்குச் சொல்லுமென்று நாம் ஏன் எதிர்பார்க்கலாம்?
13. மேசியா பூமியில் தோன்றிய அதே ஆண்டை பைபிள் எப்படி முன்னறிவிக்கிறது?
14. தானியேல் நான்காம் அதிகாரத்தில் அந்த “மரம்” எதைக் குறிப்பிடுகிறது?
15. அந்த “மரம்” வெட்டப்பட்டபோது அதற்கு ஏன் விலங்குகள் போடப்பட்டன?
16. (எ) கடவுளுடைய அரசாட்சி எப்படி, எப்பொழுது வெட்டப்பட்டது? (பி) “யெகோவாவின் சிங்காசனத்தில்” உட்காருவதற்கு யூதாவின் கடைசி அரசனாயிருந்தவன் என்ன சொல்லப்பட்டான்?
17. பொ.ச.மு. 607-ல் என்ன காலப் பகுதி தொடங்கினது?
18. “தேசங்களுக்குக் குறிக்கப்பட்ட காலங்களின்” முடிவில் என்ன நடக்க வேண்டியதாக இருந்தது?
19. பூமியின் மேல் கடவுளுடைய அரசாட்சி எத்தனை காலங்களுக்குத் தடுத்து வைக்கப்படும்?
20. (எ) ஒரு “காலம்” எவ்வளவு நீடித்ததாயிருக்கிறது? (பி) “ஏழு காலங்கள்” எவ்வளவு நீடித்தவை? (சி) ஒரு நாளை ஓர் ஆண்டாக நாம் ஏன் கணக்கிடுகிறோம்?
21. (எ) “தேசங்களுக்குக் குறிக்கப்பட்ட காலங்கள்” எப்பொழுது தொடங்கி எப்பொழுது முடிவடைகின்றன? (பி) கடவுளுடைய அரசாங்கம் எப்பொழுது அதன் ஆட்சியைத் தொடங்குகிறது? (சி) கடவுளுடைய ராஜ்யம் வரும்படி ஜெபிப்பது ஏன் இன்னும் சரியானதாயிருக்கிறது?
22. சிலர் என்ன கேள்வியைக் கேட்கக்கூடும்?
[பக்கம் 140, 141-ன் அட்டவணை]
பொ.ச. மு. 607-ல் கடவுளுடைய யூதா ராஜ்யம் வீழ்ந்தது.
பொ.ச. 1914-ல் இயேசு கிறிஸ்து, கடவுளுடைய பரலோக அரசாங்கத்தின் அரசராக ஆளுகை செய்யத் தொடங்கினார்
பொ.ச. மு. 607 — பொ.ச. 1914
பொ.ச.மு. 607, அக்டோபர்—பொ.ச.மு. 1, அக்டோபர் = 6 0 6 ஆண்டுகள்
பொ.ச.மு. 1, அக்டோபர்—பொ.ச. 1914, அக்டோபர் = 1 ,9 1 4 ஆண்டுகள்
புறஜாதியாரின் ஏழு காலங்கள் = 2,520 ஆண்டுகள்
[பக்கம் 134-ன் படம்]
இக்காலத்திலா ராஜ்யத்தை இஸ்ரவேலுக்குத் திரும்பக் கொடுப்பீர்?”
[பக்கம் 139-ன் படம்]
தானியேல் 4-ம் அதிகாரத்தின் உயர்ந்த மரம் தெய்வீக ஆட்சியைக் குறிக்கிறது. சில காலம் இது யூதா ராஜ்யத்தின் மூலம் வெளிப்படுத்திக் காட்டப்பட்டது
[பக்கம் 140, 141-ன் படம்]
யூதா ராஜ்யம் அழிக்கப்பட்டபோது அந்த மரம் வெட்டி வீழ்த்தப்பட்டது