அதிகாரம் 15
கடவுளுடைய அரசாங்கத்தின் குடிமக்களில் ஒருவராதல்
கடவுளுடைய அரசாங்கத்தின் கீழ் பூமியில் என்றென்றுமாக வாழ்ந்திருக்க நீங்கள் விரும்புகிறீர்களா? நல்ல நிதானத்திலுள்ள எவரும், ஆம்! என்று பதிலளிப்பர். அதிசயமான நன்மைகள் அனுபவிக்கப்படும். ஆனால் அவற்றைப் பெற்றுக் கொள்ள நீங்கள் வெறுமென உங்கள் கையை உயர்த்தி: ‘நான் கடவுளுடைய அரசாங்கத்தில் ஒரு குடிமகனாக இருக்க விரும்புகிறேன்,’ என்று சொல்லிவிட முடியாது. மேலுமதிகம் தேவைப்படுகிறது.
2 உதாரணமாக, நீங்கள் மற்றொரு நாட்டின் குடிமகனாக விரும்புகிறீர்களென்று வைத்துக் கொள்வோம். அதற்கு அந்த நாட்டு அரசாங்கத்தின் ஆட்சியாளர்களால் குறித்து வைக்கப்பட்டிருக்கும் அந்தத் தேவைகளை நீங்கள் பூர்த்தி செய்ய வேண்டும். ஆனால் இதை நீங்கள் கற்றறிய வேண்டியதாயிருக்கும். இதைப்போலவே, கடவுளுடைய அரசாங்கத்தின் குடிமக்களாகும்படி விரும்புகிறவர்களிடம் கடவுள் எதிர்பார்ப்பதென்னவென்பதை நீங்கள் கற்றறிய வேண்டும். பின்பு இந்தத் தேவைகளை நீங்கள் பூர்த்தி செய்ய வேண்டும்.
அறிவு தேவைப்படுகிறது
3 கடவுளுடைய அரசாங்கத்தின் ஒரு குடிமகனாவதற்கு பூர்த்தி செய்ய வேண்டிய ஒரு மிக முக்கிய தேவையானது அதன் “மொழி”யைப் பற்றிய அறிவை அடைவதாகும். நிச்சயமாகவே இது நியாயமானதாய் இருக்கிறது. சில மனித அரசாங்கங்களுங்கூட புதிய குடிமக்கள் தங்கள் நாட்டின் மொழியைப் பேசக்கூடியவர்களாக இருக்க வேண்டுமென்று கேட்கின்றன. சரி, அப்படியானால், கடவுளுடைய அரசாங்கத்தின் கீழ் உயிரை அடையப் போகிறவர்கள் என்ன “மொழியைக்” கற்க வேண்டும்?
4 யெகோவா தம்முடைய வார்த்தையாகிய பைபிளில் இதைப் பற்றி என்ன சொல்லுகிறார் என்பதைக் கவனியுங்கள்: “அப்பொழுது ஜனங்களெல்லாரும் கர்த்தருடைய [யெகோவாவின், தி.மொ.] நாமத்தைத் தொழுதுகொண்டு, ஒருமனப்பட்டு அவருக்கு ஆராதனை செய்யும்படிக்கு நான் அவர்கள் பாஷையைச் சுத்தமான பாஷையாக [தூய்மையான மொழி, NW] மாறப் பண்ணுவேன்.” (செப்பனியா 3:9) இந்தச் “சுத்தமான பாஷை” பைபிளில் காணப்படுகிற கடவுளுடைய சத்தியமே. முக்கியமாய் இது, கடவுளுடைய ராஜ்ய அரசாங்கத்தைப் பற்றிய சத்தியம். ஆகவே கடவுளுடைய அரசாங்கத்தின் ஒரு குடிமகனாவதற்கு நீங்கள் யெகோவாவையும், அவருடைய ராஜ்ய ஏற்பாட்டையும் பற்றிய அறிவைப் பெற்றுவருவதன் மூலம் இந்த “மொழியைக்” கற்க வேண்டும்.—கொலோசெயர் 1:9, 10; நீதிமொழிகள் 2:1-5.
5 குடிமக்களாக இருக்கும் உரிமையைப் பெற்றுக் கொள்ளுகிறவர்கள், தங்கள் அரசாங்கத்தின் சரித்திரத்தையும் அது செயல்படும் விதத்தைப் பற்றிய உண்மைகளையும் ஓரளவு தெரிந்திருக்க வேண்டுமென்று இன்று சில மனித அரசாங்கங்கள் எதிர்பார்க்கின்றன. அதுபோலவே, நீங்கள், கடவுளுடைய அரசாங்கத்தின் குடிமக்களில் ஒருவராக வேண்டுமானால் அதைப் பற்றிய இப்படிப்பட்ட காரியங்களை நீங்கள் தெரிந்திருக்க வேண்டும். இந்த அறிவு நித்திய ஜீவனுக்கு வழிநடத்தக்கூடும். இயேசு, தம்முடைய தகப்பனிடம் ஜெபத்தில் பின்வருமாறு சொன்னார்: “ஒரே மெய்த் தேவனாகிய உம்மையும், நீர் அனுப்பினவராகிய, இயேசு கிறிஸ்துவையும் பற்றிய அறிவை அவர்கள் பெற்றுவருவதே நித்திய ஜீவனைக் குறிக்கிறது.”—யோவான் 17:3, NW.
6 இந்தப் புத்தகத்தின் முந்திய அதிகாரங்களை நீங்கள் படித்திருக்கிறீர்களென்றால், இதற்குள்ளாக நீங்கள் இந்த மிக முக்கிய அறிவில் அதிகம் பெற்றிருக்க வேண்டும். அவ்வாறு பெற்றிருக்கிறீர்களா? இந்த அறிவை நீங்கள் பெற்றிருக்கிறீர்களென்பதை, பின்வருபவற்றைப் போன்ற இப்படிப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளிப்பதன் மூலம் நீங்கள் காட்டக்கூடுமா: ஒரு ராஜ்ய அரசாங்கத்தை ஏற்படுத்திவைப்பதற்கான தம்முடைய நோக்கத்தைக் கடவுள் எப்பொழுது முதல் குறிப்பிட்டார்? அதன் பூமிக்குரிய குடிமக்களாக இருக்கும்படி ஆவலோடு எதிர்பார்த்த கடவுளுடைய ஊழியரில் சிலர் யாவர்? கடவுளுடைய அரசாங்கம் எத்தனை ஆட்சியாளர்களை, அல்லது அரசர்களைக் கொண்டிருக்கும்? இவர்கள் எங்கிருந்து ஆளுவார்கள்? கடவுளுடைய அரசாங்கத்தில் அரசர்களாயிருக்கும்படி முதன் முதல் தெரிந்து கொள்ளப்பட்டவர்கள் யாவர்? தாம் ஒரு நல்ல அரசராயிருப்பார் என்பதை இயேசு எப்படி நிரூபித்தார்? என்றபோதிலும் கடவுளுடைய அரசாங்கத்தின் ஒரு குடிமகனாவதற்கு வெறுமென அதைப் பற்றிய அறிவைக் கொண்டிருப்பதைப் பார்க்கிலும் அதிகம் தேவைப்படுகிறது.
நீதியுள்ள நடத்தை தேவைப்படுகிறது
7 புதிய குடிமக்கள் ஒரு குறிப்பிட்ட நடத்தைத் தராதரத்தைப் பூர்த்தி செய்ய வேண்டுமென்று இன்று அரசாங்கங்கள் கேட்கின்றன. உதாரணமாக, ஓர் ஆண் ஒரே ஒரு மனைவியையும் ஒரு பெண் ஒரே ஒரு கணவனையுமே உடையவனாக அல்லது உடையவளாக இருக்கலாமென்று அவை சொல்லக்கூடும். என்றபோதிலும் வேறு சில அரசாங்கங்கள் வேறுபட்ட சட்டங்களைக் கொண்டிருக்கின்றன. ஒரு விவாகத் துணைக்கு மேற்பட்ட துணைவர்களைக் கொண்டிருக்க அவை தங்கள் மக்களை அனுமதிக்கின்றன. கடவுளுடைய அரசாங்கத்தின் குடிமக்களாகும்படி விரும்புகிறவர்களிடம் என்ன நடத்தை எதிர்பார்க்கப்படுகிறது? திருமணத்தைக் குறித்ததில் எது சரியென்று கடவுள் சொல்லுகிறார்?
8 ஆரம்பத்தில் யெகோவா ஆதாமுக்கு ஒரே ஓரு மனைவியையே கொடுத்தபோது திருமணத்துக்குரிய அந்தத் தராதரத்தை வைத்தார். அவர் சொன்னதாவது: “புருஷன் தன் தகப்பனையும் தன் தாயையும் விட்டு, தன் மனைவியோடே இசைந்திருப்பான்; அவர்கள் ஒரே மாம்சமாயிருப்பார்கள்.” (ஆதியாகமம் 2:21-24) இதுவே கிறிஸ்தவர்களுக்குரிய சரியான தராதரம் என்று இயேசு விளக்கினார். (மத்தேயு 19:4-6) விவாகத் துணைவர்கள் “ஒரே மாம்சமாகி”யிருப்பதால், அவர்கள் வேறு எவருடனோ பாலுறவுகள் கொள்வார்களானால் அந்தத் திருமணத்தை அவமதிக்கிறார்கள். இந்தச் செயல் விபசாரம் என்று அழைக்கப்படுகிறது, விபசாரக்காரர்களைத் தாம் தண்டிப்பாரென்று கடவுள் சொல்கிறார்.—எபிரெயர் 13:4; மல்கியா 3:5.
9 மறுபட்சத்தில், பல ஜோடிகள் ஒன்றாக வாழ்ந்து பாலுறவும் கொள்கிறார்கள். ஆனால் அவர்கள் திருமணம் செய்து கொள்கிறதில்லை. என்றாலும், ஓர் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில், இந்த நெருங்கிய உறவு சோதனை செய்து பார்க்க வேண்டிய ஒன்றாய் இருக்கும்படி கடவுள் கருதவில்லை. ஆகவே விவாகம் செய்து கொள்ளாமல் ஒன்றுசேர்ந்து வாழ்வதானது, திருமண ஏற்பாட்டைச் செய்தவராகிய கடவுளுக்கு விரோதமான ஒரு பாவமாய் இருக்கிறது. இது வேசித்தனம் என்றழைக்கப்படுகிறது. நீங்கள், மணம் செய்திராத எந்த ஆளுடனாவது பாலுறவுகள் கொள்வது வேசித்தனமாகும். பைபிள் பின்வருமாறு சொல்லுகிறது: “கடவுளுடைய சித்தம் இதுவே: நீங்கள் வேசிமார்க்கத்துக்கு விலகியிருக்க வேண்டுமென்பதே.” (1 தெசலோனிக்கேயர் 4:3-5, தி.மொ.) ஆகவே, மணமாகாத ஒருவர், எவருடனாவது பாலுறவுகள் கொள்வது தவறு.
10 இன்று பல ஆண்களும் பெண்களும் தங்கள் சொந்த பாலினத்தவருடன்—அதாவது ஆண்கள் ஆண்களுடனும் பெண்கள் பெண்களுடனும்—பாலுறவுக்கொத்த செயல்களை நடப்பிக்கிறார்கள். இப்படிப்பட்ட ஆட்கள் ஒத்தப் பாலின புணர்ச்சிக்காரர் என்றழைக்கப்படுகின்றனர். இவ்வகைப் புணர்ச்சியில் ஈடுபடும் பெண்கள் சில சமயங்களில் பெண் புணர்ச்சிக்காரர் என்றழைக்கப்படுகின்றனர். ஆனால் அவர்கள் செய்வது தவறு என்று, “அவலட்சணமான”தென்று கடவுளுடைய வார்த்தை சொல்லுகிறது. (ரோமர் 1:26, 27) மேலும், ஒருவர் ஒரு மிருகத்துடன் பாலுறவுகள் கொள்வது கடவுளுடைய சட்டத்துக்கு விரோதமானது. (லேவியராகமம் 18:23) கடவுளுடைய அரசாங்கத்தின் கீழ் வாழ விரும்புகிற எவரும் இந்த ஒழுக்கக்கேடான பழக்கச் செயல்களுக்கு விலகியிருக்கவேண்டும்.
11 திராட்சை மதுபானம், பியர் அல்லது சாராயம் மிதமாய்க் குடிப்பது கடவுளுடைய சட்டத்துக்கு விரோதமாக இல்லை. உண்மையில், சிறிது திராட்ச மதுபானம் ஓர் ஆளின் சுக நலத்துக்கு நல்லதாயிருக்கக்கூடுமென்று பைபிள் காட்டுகிறது. (சங்கீதம் 104:15; 1 தீமோத்தேயு 5:23) ஆனால், குடிவெறி கொள்ளுமளவாகக் குடிப்பது, அல்லது மக்கள் ஒழுக்கக்கேடான நடத்தையில் ஈடுபடும் கட்டுப்பாடற்ற விருந்து கூட்டங்களில் பங்குகொள்வது, நிச்சயமாகவே கடவுளுடைய சட்டத்துக்கு விரோதமானதாக இருக்கிறது. (எபேசியர் 5:18; 1 பேதுரு 4:3, 4) குடிபோதையை அல்லது கிளர்ச்சிமிக்க நிலையை அடையும்படி போதை வகை சார்ந்த பானங்களைப் பயன்படுத்துவதோடுகூட, இன்று பல ஆட்கள், இந்த நோக்கத்திற்காகப் பற்பல வகையான போதை மருந்துகளையும் பயன்படுத்துகின்றனர். மேலும் இன்பத்துக்காக அவர்கள் மரிஹூவானா அல்லது புகையிலை புகை குடிக்கக்கூடும். அதே சமயத்தில் மற்றவர்கள் வெற்றிலைப் பாக்கு அல்லது கோக்கா இலைகளை மெல்லக்கூடும். ஆனால் இந்தக் காரியங்கள் அவர்களுடைய உடல்களை அசுத்தமாக்கி அவர்களுடைய சுகநலத்திற்குத் தீங்கு செய்கின்றன. ஆகவே கடவுளுடைய அரசாங்கத்தின் ஒரு குடிமகனாயிருக்க விரும்புகிறீர்களென்றால், இந்தத் தீங்கான காரியங்களுக்கு நீங்கள் விலகியிருக்க வேண்டும்.—2 கொரிந்தியர் 7:1
12 மனித அரசாங்கங்கள், குற்றச்செயல்களில் ஈடுபடுகிறவர்களைத் தங்கள் புதிய குடிமக்களாகக் கொண்டிருக்க விரும்புகிறதில்லை என்பது தெளிவாயிருக்கிறது. யெகோவா அவற்றைப் பார்க்கிலும் உயர்ந்த தராதரங்களைக் கொண்டவராயிருக்கிறார். நாம் “எல்லாக் காரியங்களிலும் நம்மை நேர்மையாய் நடத்திக் கொள்ள” வேண்டுமென்று அவர் கட்டளையிடுகிறார். (எபிரெயர் 13:18, NW) ஆட்கள் கடவுளுடைய சட்டங்களைக் கைக்கொள்ளுகிறதில்லையென்றால் அவர்கள் அவருடைய ராஜ்யத்தின் கீழ் வாழ்வதற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள். இன்று மக்கள் நேர்மையாயிருப்பதாக அடிக்கடி பாசாங்கு செய்கின்றனர், ஆனால் அவர்கள் பல சட்டங்களை மீறுகின்றனர். என்றபோதிலும், கடவுள் எல்லாக் காரியங்களையும் பார்க்கக்கூடும். ஒருவரும் அவரை ஏமாற்ற முடியாது. (எபிரெயர் 4:13; நீதிமொழிகள் 15:3; கலாத்தியர் 6:7, 8) ஆகவே, பொய் சொல்லுதல், திருடுதல் ஆகிய இப்படிப்பட்டவற்றிற்கு விரோதமான தம்முடைய சட்டங்களை மீறுகிற ஆட்கள், தம்முடைய அரசாங்கத்தின் குடிமக்களாகாதபடி யெகோவா நிச்சயப்படுத்திக் கொள்வார். (எபேசியர் 4:25, 28; வெளிப்படுத்துதல் 21:8) என்றபோதிலும் கடவுள் பொறுமையுள்ளவராயும் மன்னிக்கிறவராயும் இருக்கிறார். ஆகவே தவறு செய்கிறவன் தன்னுடைய கெட்ட பழக்கச் செயல்களை நிறுத்திவிட்டுத் திரும்பி நல்லதைச் செய்வானாகில் கடவுள் அவனை ஏற்றுக்கொள்வார்.—ஏசாயா 55:7
13 ஆனால் மனித அரசாங்கங்களின் சட்டங்களைக் கைக்கொள்வதைப் பற்றியதென்ன? மனிதரின் அரசாங்கங்கள் இருந்துவரும் வரையில், தம்முடைய ஊழியர்கள் இந்த “மேலான அதிகாரங்களுக்குக்” கீழ்ப்பட்டிருக்க வேண்டுமென்று கடவுள் கட்டளையிடுகிறார். வரிகளை அவற்றிற்குச் செலுத்த வேண்டும், வரிகள் உயர்வாக இருந்தாலும், அந்த வரிப்பணம் செலவிடப்படும் வகையை நாம் ஒருவேளை ஒப்புக்கொள்ளாவிடினும் அதைச் செலுத்திவிட வேண்டும். மேலும், அந்த அரசாங்கத்தின் சட்டங்களுக்கும் கீழ்ப்படிய வேண்டும். (ரோமர் 13:1, 7; தீத்து 3:1) இதற்கு ஒரே ஒரு விதி விலக்கானது, ஒருவன் அந்தச் சட்டத்துக்குக் கீழ்ப்படிவதானது கடவுளுடைய சட்டத்துக்குக் கீழ்ப்படியாமற் போகச் செய்கையிலேயேயாகும். இப்படிப்பட்ட சமயத்தில், பேதுருவும் மற்ற அப்போஸ்தலரும் சொன்னதுபோல், ‘மனிதருக்குக் கீழ்ப்படிவதைப் பார்க்கிலும் அரசராகக் கடவுளுக்கே நாம் கீழ்ப்படிய வேண்டும்.’—அப்போஸ்தலர் 5:29, NW.
14 உயிரின் பேரில் உயர்ந்த மதிப்பைக் கடவுள் வைக்கிறார். அவருடைய அரசாங்கத்தின் குடிமக்களாகும்படி விரும்புகிறவர்கள் இதை விளங்கிக் கொள்ள வேண்டும். கொலை கடவுளுடைய சட்டத்துக்கு விரோதமானதென்பது தெளிவாயிருக்கிறது. என்றாலும் பகை அடிக்கடி கொலைக்கு வழிநடத்துகிறது, எவனாவது தன் உடன் தோழனாகிய மனிதனைத் தொடர்ந்து பகைத்துக் கொண்டிருந்தாலுங்கூட, அவன் கடவுளுடைய அரசாங்கத்தின் ஒரு குடிமகனாக இருக்க முடியாது. (1 யோவான் 3:15) ஆகவே, நம்முடைய அயலானைக் கொல்வதற்குப் போர்த்தளவாடங்களைக் கையாளாமலிருப்பதைப் பற்றி, பைபிளில் ஏசாயா 2:4-ல் சொல்லப்பட்டிருப்பதைப் பொருத்திப் பிரயோகிப்பது இன்றியமையாதது. தன் தாயின் கருப்பையில் இருக்கிற இன்னும் பிறவாத பிள்ளையின் உயிருங்கூட யெகோவாவுக்கு அருமையானதென்று கடவுளுடைய வார்த்தை காட்டுகிறது. (யாத்திராகமம் 21:22, 23; சங்கீதம் 127:3) என்றபோதிலும், ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான கருச்சிதைவுகள் நடப்பிக்கப்பட்டு வருகின்றன. உயிரை அழிக்கும் இது கடவுளுடைய சட்டத்துக்கு விரோதமானது, ஏனென்றால் தன் தாய்க்குள் இருக்கும் அந்த மனிதன் உயிருள்ள ஓர் ஆள், அவன் அழிக்கப்படக்கூடாது.
15 என்றபோதிலும், கடவுளுடைய அரசாங்கத்தின் குடிமக்களாகப் போகிறவர்கள், வெறுமென தவறு அல்லது ஒழுக்கக்கேட்டைச் செய்யாமலிருப்பது மட்டுமல்லாமல் மேலுமதிகம் அவர்களிடம் கேட்கப்படுகிறது. மற்றவர்களுக்குத் தயவான தன்னலமற்றக் காரியங்களைச் செய்யவும் அவர்கள் உண்மையான முயற்சி எடுக்க வேண்டும். அரசராகிய இயேசுகிறிஸ்துவால் கொடுக்கப்பட்ட பின்வரும் இந்தத் தெய்வீக விதியின்படி அவர்கள் வாழ வேண்டும்: “ஆதலால், மனுஷர் உங்களுக்கு எவைகளைச் செய்ய விரும்புகிறீர்களோ, அவைகளை நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்.” (மத்தேயு 7:12) மற்றவர்களுக்கு அன்பைக் காட்டுவதில் கிறிஸ்து முன்மாதிரியை வைத்தார். மனிதவர்க்கத்துக்காகத் தம்முடைய உயிரையுங்கூட அவர் கொடுத்தார், மேலும்: “நான் உங்களில் அன்பாயிருக்கிறதுபோல, நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள்,” என்று தம்மைப் பின்பற்றுவோருக்குக் கட்டளையிட்டார். (யோவான் 13:34; 1 யோவான் 3:16) கடவுளுடைய ராஜ்ய ஆட்சியின் கீழ், மற்றவர்களுக்குக் காட்டும் இந்த வகையான தன்னலமற்ற அன்பும் அக்கறையுமே வாழ்க்கையை மெய்யான இன்பமான ஒன்றாக்கும்.—யாக்கோபு 2:8.
16 கடவுளுடைய அரசாங்கத்தின் குடிமக்களாவதற்கான தேவைகளைப் பூர்த்தி செய்ய ஆட்கள் தங்கள் வாழ்க்கையில் மாற்றங்களைச் செய்ய வேண்டுமென்று பைபிள் காட்டுகிறது. (எபேசியர் 4:20-24) இந்த மாற்றங்களைச் செய்ய நீங்கள் உழைத்து வருகிறீர்களா? அப்படிச் செய்ய எடுக்கும் எந்த முயற்சியும் தகுதியானது. ஏன்? ஏனென்றால் அது, வெறுமென ஒருசில ஆண்டுகள்தானே ஏதோ மனித அரசாங்கத்தின் கீழ் மேம்பட்ட வாழ்க்கையை நீங்கள் உடையவர்களாயிருப்பீர்களென்று குறிக்கிறதில்லை. இல்லை, கடவுளால் ஆளப்படும் ஓர் அரசாங்கத்தின் கீழ் பரதீஸான பூமியில் பரிபூரண சுகநலத்தில் நீங்கள் நித்திய ஜீவனைப் பெறுவீர்கள்!
17 இப்பொழுதேயும், கடவுள் எதிர்பார்க்கும் தகுதிகளைப் பூர்த்தி செய்வதன் மூலம் நீங்கள் மேலும் மகிழ்ச்சியான வாழ்க்கையை அனுபவித்து வருவீர்கள். ஆனால் நீங்கள் மாற்றங்களைச் செய்ய வேண்டியதாயிருக்கும். பகைக்கிறவர்களாக அல்லது பேராசைக்காரராக இருந்த அநேக ஆட்கள் மாறியிருக்கின்றனர். மேலும், வேசித்தனக்காரர், விபசாரக்காரர், ஒத்தப்பாலின புணர்ச்சிக்காரர், குடிவெறியர், கொலைபாதகர், திருடர்கள், போதை மருந்து அருந்தும் பழக்கமுடையவர்கள், புகையிலை பயன்படுத்துகிறவர்கள் ஆகியோர் தங்கள் வாழ்க்கை முறையை மாற்றிக்கொண்டிருக்கின்றனர். கடவுளுடைய உதவியுடன் உண்மையான முயற்சி எடுப்பதன் மூலம் அவ்வாறு செய்திருக்கின்றனர். (1 கொரிந்தியர் 6:9-11; கொலோசெயர் 3:5-9) ஆகவே, கடவுள் கட்டளையிடும் தராதரங்களைப் பூர்த்தி செய்ய நீங்கள் கடினமான மாற்றங்களைச் செய்ய வேண்டியதிருந்தால், சோர்ந்து விடாதேயுங்கள். உங்களால் அதைச் செய்யக்கூடும்!
கடவுளுடைய அரசாங்கத்துக்கு உண்மைத் தவறா பற்றுறுதி
18 தம்முடைய குடிமக்கள் தம்முடைய ராஜ்ய அரசாங்கத்தை உண்மைத்தவறா பற்றுறுதியுடன் ஆதரிக்க வேண்டுமென்று யெகோவா தேவன் எதிர்பார்ப்பார் என்பது ஆச்சரியமுண்டாக்க வேண்டியதில்லை. மனித அரசாங்கங்கள் இதே காரியத்தைத் தங்கள் குடிமக்களிடமிருந்து எதிர்பார்க்கின்றனர். ஆனால் எந்தத் தனிப்பட்ட முறையில் உண்மைத் தவறாத ஆதரவை கொடுக்கவேண்டுமென்று கடவுள் எதிர்பார்க்கிறார்? தம்முடைய குடிமக்கள் தம்முடைய ராஜ்யத்துக்காகப் போர் செய்யும்படி போராயுதங்களை எடுப்பதன் மூலமா? இல்லை. அதற்கு மாறாக, இயேசு கிறிஸ்துவையும் அவரை முதன் முதல் பின்பற்றினவர்களையும் போல், அவர்கள் கடவுளுடைய ராஜ்யத்தின் உண்மைத் தவறா பேச்சாளராக அல்லது பிரஸ்தாபிகளாக இருப்பதன் மூலமேயாகும். (மத்தேயு 4:17; 10:5-7; 24:14) தம்முடைய ராஜ்யம் என்னவாக இருக்கிறது, அது எப்படி மனிதவர்க்கத்தின் பிரச்னைகளைத் தீர்க்கும் என்பவற்றை எல்லோரும் அறியவேண்டுமென்பது யெகோவாவின் சித்தம். கடவுளுடைய வார்த்தையிலிருந்து கற்றவைகளை உங்கள் உறவினரிடமும் நண்பர்களிடமும் மற்றவர்களிடமும் பகிர்ந்துகொண்டீர்களா? நீங்கள் அப்படிச் செய்ய வேண்டுமென்பது கடவுளுடைய சித்தம்.—ரோமர் 10:10; 1 பேதுரு 3:15.
19 இந்த ராஜ்யத்தைப் பற்றி மற்றவர்களிடம் பேசுவதற்கு கிறிஸ்துவுக்கும் அவரை முதன் முதல் பின்பற்றினவர்களுக்கும் தைரியம் வேண்டியதாயிருந்தது, ஏனெனில் அவர்கள் அடிக்கடி எதிர்ப்பை எதிர்ப்பட்டார்கள். (அப்போஸ்தலர் 5:41, 42) இன்றுங்கூட இதுவே உண்மையாயிருக்கிறது. பிசாசால் ஆளப்படும் இந்த உலகம் இந்த ராஜ்யத்தைப் பற்றிய நற்செய்தி பிரசங்கிக்கப்படுவதை விரும்புகிறதில்லை. ஆகவே பின்வரும் கேள்விகள் எழும்புகின்றன: நீங்கள் எங்கே நிற்கிறீர்கள்? கடவுளுடைய ராஜ்யத்துக்கு உண்மைத் தவறா ஆதரவை கொடுப்பீர்களா? முடிவுக்கு முன்பாக ஒரு மிகப் பெரிய ராஜ்ய சாட்சி கொடுக்கப்பட வேண்டுமென்பது அவருடைய சித்தம். அதைக் கொடுப்பதில் பங்குகொள்வீர்களா?
[கேள்விகள்]
1, 2. கடவுளுடைய அரசாங்கத்தின் ஒரு குடிமகனாவதற்கு என்ன தேவைப்படுகிறது?
3. கடவுளுடைய அரசாங்கத்தின் குடிமகனாவதற்குத் தேவைப்படுகிற ஒரு காரியம் என்ன?
4. எந்தத் “தூய்மையான மொழியைக்” கடவுளுடைய ஜனங்கள் கற்க வேண்டும்?
5. (எ) கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றி நாம் எதை அறிய வேண்டும்? (பி) நித்திய ஜீவனை அடைவதற்கு எந்த அறிவு நமக்குத் தேவை?
6. (எ) கடவுளுடைய அரசாங்கத்தின் குடிமக்கள் பதிலளிக்கக் கூடியவர்களாக இருக்க வேண்டிய சில கேள்விகள் யாவை? (பி) நீங்கள் அவற்றிற்கு பதிலளிக்கக்கூடுமா?
7. மனித அரசாங்கங்களைக் குறித்ததில் குடிமக்களாயிருக்கும் உரிமைகளைப் பெறுவதற்கு பூர்த்தி செய்ய வேண்டிய தராதரங்கள் எப்படி வேறுபடுகின்றன?
8. (எ) திருமணத்தைக் குறித்ததில் கடவுளுடைய தராதரம் என்ன? (பி) விபசாரம் என்பது என்ன? இதைப் பற்றி கடவுள் என்ன சொல்லுகிறார்?
9. (எ) திருமணம் செய்யாதிருக்கையில் பாலுறவு கொள்ளும் ஆட்களைக் கடவுள் எவ்வாறு கருதுகிறார்? (பி) வேசித்தனம் என்றாலென்ன?
10. பால் சம்பந்தப்பட்ட வேறு எந்தப் பழக்க வழக்கங்கள் கடவுளுடைய சட்டத்துக்கு விரோதமாயிருக்கின்றன?
11. (எ) மதுபானங்களைப் பயன்படுத்துவதைக் குறித்ததில் கடவுளுடைய கருத்து என்ன? (பி) கடவுளுடைய அரசாங்கத்தின் குடிமக்களாக இருக்க விரும்புகிறவர்கள் சுகநலத்துக்குத் தீங்கு செய்கிற எந்தப் பழக்கங்களுக்கு விலகியிருக்க வேண்டும்?
12. (எ) கடவுளுடைய சட்டங்களுக்கு விரோதமான நேர்மையற்ற சில நடத்தைகள் யாவை? (பி) இந்தப் பழக்கங்களில் ஈடுபடுகிற ஓர் ஆள் எப்படிக் கடவுளுடைய தயவைப் பெறக்கூடும்?
13. மனித அரசாங்கங்களின் சட்டங்களைக் கடவுளுடைய ஊழியர் எவ்வாறு கருத வேண்டும்?
14. உயிரைக் கடவுள் எவ்வாறு மதிக்கிறாரோ அவ்வாறே நாமும் மதிக்கிறோம் என்பதை நாம் எப்படிக் காட்டலாம்?
15. கடவுளுடைய அரசரின் எந்தக் கட்டளைக்கு ராஜ்ய குடிமக்கள் எல்லோரும் கீழ்ப்படிய வேண்டும்?
16, 17. (எ) கடவுள் கட்டளையிடும் தேவைகளை நிறைவாக்க நம்முடைய வாழ்க்கையில் மாற்றங்களைச் செய்வதற்கு என்ன நல்ல காரணங்கள் இருக்கின்றன? (பி) அவசியமான எந்த மாற்றங்களையும் நாம் செய்யக்கூடுமென்று நாம் ஏன் நிச்சயமாயிருக்கலாம்?
18. எந்தத் தனிப்பட்ட முறையில் தம்முடைய ராஜ்யத்துக்கு நம்முடைய உண்மைத் தவறா பற்றுறுதியைக் காட்டும்படி கடவுள் எதிர்பார்க்கிறார்?
19. (எ) கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றி நாம் மற்றவர்களிடம் பேசுகையில் நாம் ஏன் எதிர்ப்பை எதிர்பார்க்கலாம்? (பி) என்ன கேள்விகளுக்கு நீங்கள் பதிலளிக்க வேண்டும்?
[பக்கம் 128-ன் படம்]
கடவுளுடைய அரசாங்கத்தின் குடிமக்களாகிறவர்கள் அதைப் பற்றிய அறிவைக் கொண்டிருக்க வேண்டும்
[பக்கம் 131-ன் படங்கள்]
கடவுளுடைய அரசாங்கத்தின் குடிமக்கள் கடவுள் கண்டிக்கும் செயல்களைத் தவிர்க்க வேண்டும்
[பக்கம் 133-ன் படம்]
கடவுளுடைய அரசாங்கத்தின் குடிமக்கள் அதைப்பற்றி பிறருக்குச் சொல்லவேண்டும்