வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்
வன்முறைமிக்க கம்ப்யூட்டர் கேம்ஸ் விளையாடுவது யெகோவாவுடன் இருக்கும் உறவை பாதிக்குமா?
“கர்த்தர் நீதிமானைச் சோதித்தறிகிறார்; துன்மார்க்கனையும் கொடுமையில் பிரியமுள்ளவனையும் அவருடைய உள்ளம் வெறுக்கிறது” என்று பூர்வ இஸ்ரவேலின் அரசனாகிய தாவீது எழுதினார். (சங்கீதம் 11:5) ‘வெறுப்பு’ என்பதற்கான வார்த்தை மூலமொழியில் “ஒருவருடைய விரோதி” என்ற அர்த்தத்தைத் தருகிறது. எனவே வன்முறையை விரும்புகிறவர்கள் கடவுளுக்கு விரோதிகளாக மாறிவிடுகிறார்கள். ஆக நாம் சிந்திக்க வேண்டிய கேள்வி என்னவென்றால்: சில கம்ப்யூட்டர் கேம்ஸை விளையாடுவது வன்முறையின் மீது பிரியத்தைத் தூண்டிவிடுகிறதா?
வன்முறைமிக்க கம்ப்யூட்டர் கேம்ஸ், உயிரைக் கொல்லும் ஆயுதங்களை உபயோகிப்பதை ஊக்குவிக்கின்றன. இவை பெரும்பாலும் போர் செய்யும் வித்தைகளைக் கற்றுக்கொடுக்கின்றன. தி இகானமிஸ்ட் என்ற பத்திரிகை இவ்வாறு சொல்கிறது: “அமெரிக்க ராணுவம் தன் படையினருக்கு பயிற்சியளிக்க கம்ப்யூட்டர் கேம்ஸை இன்றியமையாத கருவியாக பயன்படுத்துகிறது. அதில் சில கேம்ஸ் பொது மக்களுக்காக வடிவமைக்கப்பட்டு, தற்போது விற்பனையில் இருப்பவை.”
உண்மைதான், வன்முறைமிக்க கம்ப்யூட்டர் கேம்ஸ் விளையாடுகிறவர்கள், நிஜ மனிதர்களை அல்ல, பொம்மைகளைத்தான் கொல்கிறார்கள். என்றபோதிலும், அவர்கள் விரும்பித் தேர்ந்தெடுக்கிற இத்தகைய விளையாட்டுகள் அவர்களுடைய இருதயத்தைப் பற்றி எதைச் சுட்டிக்காட்டுகின்றன? (மத்தேயு 5:21, 22; லூக்கா 6:45) கற்பனை மனிதர்களை வெறித்தனமாக வெட்டுகிற, சரமாரியாக சுடுகிற, உதை உதையென்று உதைத்து கை கால்களை முறிக்கிற, அல்லது கொடூரமாக சாகடிக்கிற நபர்களைப் பற்றி நீங்கள் என்ன நினைப்பீர்கள்? இப்படிப்பட்ட வன்முறையில் தனக்கிருக்கும் தாகத்தைத் தீர்க்க ஒவ்வொரு வாரமும் பல மணிநேரங்களை அர்ப்பணித்து, போகப்போக அதற்கு அடிமையாகிவிடுகிறவர்களை உங்களுக்குப் பிடிக்குமா? அப்படிப்பட்ட ஒருவரை பார்த்தால், ஆபாச படங்களைப் பார்த்து வக்கிர ஆசைகளை வளர்த்துகொள்பவருக்கும் இவருக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்றுதானே நினைப்பீர்கள்?—மத்தேயு 5:27-29.
வன்முறையை விரும்புகிற நபரை யெகோவா எந்தளவுக்கு வெறுக்கிறார்? தாவீது சொன்ன விதமாகவே யெகோவா அப்படிப்பட்டவர்களை ‘அறவே வெறுக்கிறார்.’ (NW) நோவாவின் நாட்களிலே, வன்முறையை விரும்பியவர்களை அவர் அந்தளவுக்கு வெறுத்ததை செயலில் காட்டினார். அவர் நோவாவை நோக்கி, “மாம்சமான யாவரின் முடிவும் எனக்கு முன்பாக வந்தது; அவர்களாலே பூமி கொடுமையினால் நிறைந்தது; நான் அவர்களைப் பூமியோடுங்கூட அழித்துப் போடுவேன்” என்று சொன்னார். (ஆதியாகமம் 6:13) அவர்கள் வன்முறையை அதிகம் விரும்பியதால் முழு மனித சமுதாயத்தையே அழித்துப்போட்டார். ஆனால் வன்முறையை விரும்பாத நோவாவையும் அவருடைய குடும்பத்தாரையும், அதாவது எட்டுபேரை மட்டுமே காப்பாற்றினார்.—2 பேதுரு 2:5.
யெகோவாவின் நண்பர்களாக இருக்க விரும்புகிறவர்கள் ‘தங்கள் பட்டயங்களை மண்வெட்டிகளாகவும், தங்கள் ஈட்டிகளை அரிவாள்களாகவும் அடிக்கிறார்கள்.’ வன்முறையை நேசிக்க அவர்கள் கற்றுக்கொள்வதில்லை; மாறாக, ‘அவர்கள் யுத்தத்தை கற்பதில்லை.’ (ஏசாயா 2:4) யெகோவாவின் விரோதியாக இல்லாமல் எப்போதும் அவருடைய நண்பராக இருக்க, நாம் ‘பொல்லாப்பைவிட்டு நீங்கி நன்மை செய்ய வேண்டும்.’ அதோடு ‘சமாதானத்தைத் தேடி அதைப் பின்தொடர வேண்டும்.’—1 பேதுரு 3:11.
ஒருவேளை நாம் வன்முறைமிக்க கம்ப்யூட்டர் கேம்ஸை ஏற்கனவே விளையாடி வருகிறோம் என்றால், அப்போது என்ன செய்வது? அப்படியென்றால் யெகோவாவைப் பிரியப்படுத்த வேண்டும் என்பதற்காக அவர் வெறுக்கும் காரியங்களில் ஈடுபடப்போவதே இல்லை என்ற உறுதியான தீர்மானம் எடுக்க வேண்டும். ஆன்மீகத்திற்கு பங்கம் விளைவிக்கிற இந்தப் பழக்கத்தை நிறுத்த கடவுளுடைய பரிசுத்த ஆவியின் உதவிக்காக நாம் ஜெபிக்க வேண்டும். சமாதானம், நற்குணம், மற்றும் இச்சையடக்கம் போன்ற குணங்கள், நம் வாழ்க்கையில் தெய்வீக செல்வாக்கு செலுத்த அனுமதித்தால் நிச்சயம் அப்படிப்பட்ட காரியங்களை நிறுத்த முடியும்.—லூக்கா 11:13; கலாத்தியர் 5:22, 23.