“நம்முடைய கடவுளாகிய யெகோவாவைப்போல் யார் உண்டு?”
“உன்னதங்களில் வாசம்பண்ணுகிற நம்முடைய கடவுளாகிய யெகோவாவைப்போல் யார் உண்டு?”—சங்கீதம் 113:5, NW.
1, 2. (எ) யெகோவாவின் சாட்சிகள் கடவுளையும் பைபிளையும் எவ்வாறு நோக்குகிறார்கள்? (பி) என்ன கேள்விகள் கவனத்திற்குரியவை?
யெகோவாவைத் துதிப்பவர்கள் உண்மையில் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். இந்த மகிழ்ச்சியுள்ள கூட்டத்தில் இருப்பது என்னே ஒரு சிலாக்கியம்! அவருடைய சாட்சிகளாக, கடவுளுடைய வார்த்தையாகிய பைபிளின் அறிவுரை, சட்டங்கள், போதனைகள், வாக்குத்தத்தங்கள் மற்றும் தீர்க்கதரிசனங்களை நாம் ஏற்றுக்கொள்கிறோம். வேதவார்த்தைகளிலிருந்து கற்றுக்கொள்வதிலும் “தேவனால் போதிக்கப்”படுவதிலும் நாம் அகமகிழ்கிறோம்.—யோவான் 6:45.
2 கடவுளிடமாக அவர்களுடைய ஆழ்ந்த மதிப்பு காரணமாக, யெகோவாவின் சாட்சிகள் கேட்டுக்கொள்ளலாம்: “நம்முடைய கடவுளாகிய யெகோவாவைப்போல் யார் உண்டு?” (சங்கீதம் 113:5, NW) சங்கீதக்காரனின் அந்த வார்த்தைகள் விசுவாசத்தைக் குறிப்பாக உணர்த்துகின்றன. ஆனால் ஏன் சாட்சிகள் கடவுளிடம் அப்பேர்ப்பட்ட விசுவாசத்தைக் கொண்டிருக்கிறார்கள்? மேலும் யெகோவாவைத் துதிப்பதற்கு அவர்கள் என்ன காரணங்களைக் கொண்டிருக்கிறார்கள்?
விசுவாசம் மற்றும் துதி பொருத்தமானது
3. அல்லேல் சங்கீதங்கள் யாவை, அவை ஏன் அவ்வாறு அழைக்கப்படுகின்றன?
3 யெகோவாவில் விசுவாசம் நியாயமானது, ஏனென்றால் அவர் தனித்தன்மை வாய்ந்த கடவுளாக இருக்கிறார். ஆறு அல்லேல் சங்கீதங்களின் பாகமாக இருக்கும் சங்கீதங்கள் 113, 114 மற்றும் 115-ல் இது அழுத்திக் காண்பிக்கப்படுகிறது. யூத குருமார்களுக்கான ஹில்லெல் பள்ளியின்படி, யூத பஸ்கா போஜனத்தின்போது, குடிக்கும் பாத்திரத்தில் இரண்டாம் முறை திராட்சரசம் ஊற்றப்பட்டபின் சங்கீதங்கள் 113 மற்றும் 114 பாடப்பட்டு, அந்த ஆசரிப்பின் முக்கியத்துவம் விவரிக்கப்பட்டது. சங்கீதங்கள் 115 முதல் 118 வரையாக நான்காவது முறை திராட்சரசம் ஊற்றப்பட்டபின் பாடப்பட்டது. (மத்தேயு 26:30-ஐ ஒப்பிடவும்.) அவை திரும்பவும் திரும்பவுமாக அல்லேலூயா!—“யாவைத் துதி!” என்ற வியப்பிடைச்சொல்லை பயன்படுத்துவதால் “அல்லேல் சங்கீதங்கள்” என்று குறிப்பிடப்படுகின்றன.
4. “அல்லேலூயா,” என்ற பதத்தின் அர்த்தம் என்ன, அது பைபிளில் எந்த அளவிற்குக் காணப்படுகிறது?
4 “அல்லேலூயா” என்பது சங்கீதங்களில் 24 தடவைகள் வரும் எபிரெய கூற்றின் எழுத்துப்பெயர்ப்பாகும். பைபிளில் வேறு இடங்களில், பொய்மத உலக பேரரசாகிய மகா பாபிலோனின் அழிவால் ஏற்படும் சந்தோஷம் மற்றும் யெகோவா தேவன் ராஜாவாக ஆட்சி செய்வதன் ஆரம்பத்துடன் தொடர்புடைய ஆர்ப்பரிப்பு ஆகியவற்றின் சம்பந்தமாக அதன் கிரேக்க பதம் நான்கு முறை காணப்படுகிறது. (வெளிப்படுத்துதல் 19:1-6) இப்போது நாம் மூன்று அல்லேல் சங்கீதங்களை ஆராய்கையில், யெகோவாவின் துதிக்காக இந்தப் பாடல்களை நாம்தானே பாடுவதை நன்கு கற்பனை செய்ய முடியும்.
யாவைத் துதி!
5. சங்கீதம் 113 எந்தக் கேள்விக்குப் பதிலளிக்கிறது, மேலும் சங்கீதம் 113:1, 2-லுள்ள கட்டளை குறிப்பாக யாருக்குப் பொருந்துகிறது?
5 ஏன் யெகோவாவைத் துதிக்க வேண்டும்? என்ற கேள்விக்கு சங்கீதம் 113 பதிலளிக்கிறது. அது ஒரு கட்டளையுடன் துவங்குகிறது: “அல்லேலூயா, கர்த்தருடைய ஊழியக்காரரே, துதியுங்கள்; கர்த்தருடைய நாமத்தைத் துதியுங்கள். இதுமுதல் என்றென்றைக்கும் கர்த்தருடைய [யெகோவாவுடைய, NW] நாமம் ஸ்தோத்திரிக்கப்படக்கடவது.” (சங்கீதம் 113:1, 2) “அல்லேலூயா” ஆம், “யாவைத் துதி!” குறிப்பாக, அந்தக் கட்டளை இந்த “முடிவு கால”த்தில் இருக்கும் கடவுளுடைய மக்களுக்குப் பொருந்துகிறது. (தானியேல் 12:4) இப்பொழுதுமுதல் என்றென்றைக்குமாக, உலகெங்கும் யெகோவாவின் பெயர் உயர்த்தப்படும். யெகோவா கடவுள் என்றும், கிறிஸ்து ராஜா என்றும், ராஜ்யம் பரலோகத்தில் ஸ்தாபிக்கப்பட்டிருக்கிறது என்றும் இப்போது அவருடைய சாட்சிகள் அறிவிக்கின்றனர். யெகோவாவைப்பற்றிய இந்தத் துதிப்பை பிசாசாகிய சாத்தானும் அவனுடைய அமைப்பும் தடுக்க முடியாது.
6. யெகோவா எவ்விதமாக ‘சூரிய உதயமுதல் சூரிய மறைவுவரையாக’ துதிக்கப்படுகிறார்?
6 இந்தத் துதிபாடல் அதனால் யெகோவா பூமியை நிரப்பச் செய்யும் வரையாகச் சென்றுகொண்டிருக்கும். “சூரியன் உதிக்கும் திசைதொடங்கி அது அஸ்தமிக்கும் திசைமட்டும் கர்த்தருடைய நாமம் துதிக்கப்படுவதாக.” (சங்கீதம் 113:3) இது சில பூமிக்குரிய சிருஷ்டிகளால் தினமும் வணங்கப்படுவதைக் காட்டிலும் அதிகத்தை அர்த்தப்படுத்தும். சூரியன் கிழக்கே உதித்து மேற்கே மறைந்து முழு பூமியையும் உள்ளடக்குகிறது. எங்கும் சூரியன் பிரகாசிக்கிறது, பொய் மதம் மற்றும் சாத்தானின் அமைப்பிலிருந்து கட்டவிழ்க்கப்பட்ட எல்லா மக்களாலும் சீக்கிரத்தில் யெகோவாவின் நாமம் துதிக்கப்படும். உண்மையில், ஒருபோதும் முற்றுப்பெறாத இந்தப் பாடல், யெகோவாவின் அபிஷேகம் பண்ணப்பட்ட சாட்சிகளாலும் அவரால் நியமிக்கப்பட்ட ராஜாவாகிய இயேசு கிறிஸ்துவின் பூமிக்குரிய பிள்ளைகளாலும் இப்போது பாடப்படுகிறது. யெகோவாவின் துதிகளின் பாடகர்களாக இருப்பது அவர்களுக்கு என்னே ஒரு சிலாக்கியம்!
யெகோவா ஈடிணையற்றவர்
7. யெகோவாவின் உன்னதத்தின் எந்த இரண்டு கூறுகள் சங்கீதம் 113:4-ல் குறிப்பிடப்படுகின்றன?
7 சங்கீதக்காரன் தொடர்ந்து சொல்கிறார்: “கர்த்தர் எல்லா ஜாதிகள்மேலும் உயர்ந்தவர்; அவருடைய மகிமை வானங்களுக்கு மேலானது.” (சங்கீதம் 113:4) இது கடவுளுடைய உன்னதத்தின் இரு கூறுகளுக்கு கவனம் செலுத்துகிறது: (1) “எல்லா ஜாதிகளிலும் உயர்ந்தவ”ராகிய, உன்னதராகிய யெகோவாவுக்கு அவர்கள் வாளியிலிருந்து சொட்டும் நீர்த்துளி போலவும் தராசில் படிந்துள்ள தூசி போலவும் இருக்கிறார்கள்; (ஏசாயா 40:15; தானியேல் 7:18) (2) அவருடைய மகிமை சொல்லர்த்தமான வானங்களைவிட மிகவும் உயர்ந்தது, ஏனென்றால் தூதர்கள் அவருடைய அரச சித்தத்தைச் செய்கின்றனர்.—சங்கீதம் 19:1, 2; 103:20, 21.
8. பரலோகத்திலும் பூமியிலும் உள்ள காரியங்களில் கவனம் செலுத்துவதற்காக யெகோவா ஏன் மற்றும் எவ்வாறு தம்மைத் தாழ்த்துகிறார்?
8 கடவுளுடைய மேன்மையால் தூண்டப்பட்டவராய், சங்கீதக்காரன் சொன்னார்: “உன்னதங்களில் வாசம்பண்ணுகிற நம்முடைய தேவனாகிய கர்த்தருக்குச் சமானமானவர் யார்? [யெகோவாவைப் போல் யார் உண்டு? NW] அவர் வானத்திலும் பூமியிலுமுள்ளவைகளைப் பார்க்கும்படி தம்மைத் தாழ்த்துகிறார்.” (சங்கீதம் 113:5, 6) கடவுள் அவ்வளவு மேம்பட்டவராய் இருப்பதால் வானத்திலும் பூமியிலுமுள்ள காரியங்களைக் கவனிப்பதற்கு அவர் தம்மைத் தாழ்த்தவேண்டியவராய் இருக்கிறார். யெகோவா எவருக்கும் தாழ்ந்தவராக அல்லது மற்றவர்களுக்குக் கீழ்ப்பட்டவராக இல்லாதபோதிலும், அவர் தாழ்வான பாவிகளுக்கு இரக்கத்தையும் பரிவையும் காண்பிப்பதில் மனத்தாழ்மையைக் காண்பிக்கிறார். தம்முடைய மகனாகிய இயேசு கிறிஸ்துவை, அபிஷேகம் பண்ணப்பட்ட கிறிஸ்தவர்களுக்கும் மனிதவர்க்க உலகிற்கும் “கிருபாதார பலி”யாகக் கொடுத்தது, யெகோவாவின் மனத்தாழ்மையின் ஒரு வெளிக்காட்டாகும்.—1 யோவான் 2:1, 2.
யெகோவா பரிவிரக்கமுள்ளவர்
9, 10. கடவுள் எவ்வாறு ‘எளிமையானவனை உயர்த்தி, பிரபுக்களுடன் உட்காரும்படி’ செய்கிறார்?
9 கடவுளுடைய பரிவிரக்கத்தை அழுத்திக்கூறுபவராய், சங்கீதக்காரன் தொடர்ந்து, யெகோவா “சிறியவனைப் புழுதியிலிருந்து தூக்கிவிடுகிறார்; எளியவனைக் குப்பையிலிருந்து உயர்த்துகிறார். அவனைப் பிரபுக்களோடும், தமது ஜனத்தின் அதிபதிகளோடும் உட்காரப்பண்ணுகிறார். மலடியைச் சந்தோஷமான பிள்ளைத்தாய்ச்சியாக்கி, வீட்டிலே குடியிருக்கப்பண்ணுகிறார். அல்லேலூயா” என்று கூறுகிறார். (சங்கீதம் 113:7-9) தேவையிலிருக்கும் நேர்மையானோரை விடுவித்து, அவர்களுடைய நிலைமையை மாற்றி அவர்களுடைய நியாயமான தேவைகளையும் ஆசைகளையும் அவரால் திருப்தியாக்க முடியும் என்று யெகோவாவின் மக்கள் விசுவாசம் கொண்டிருக்கின்றனர். ‘மகத்துவமும் உன்னதமுமானவர் தாழ்மையுள்ளோரின் ஆவியையும் நொறுங்கினவர்களின் இருதயத்தையும் உயிர்ப்பிக்கிறார்.’—ஏசாயா 57:15.
10 யெகோவா எவ்விதமாக ‘எளியவனை உயர்த்தி, பிரபுக்களோடு உட்காரப்பண்ணுகிறார்’? கடவுளுடைய சித்தமாக இருக்கும்போது, பிரபுக்களுக்கு சமமாயுள்ள மகிமையுள்ள பதவிகளில் அவருடைய ஊழியர்களை அமர்த்துகிறார். யோசேப்புடைய காரியத்தில் அவர் அவ்வாறே செய்தார், அவன் எகிப்தின் உணவு நிர்வாகியானான். (ஆதியாகமம் 41:37-49) இஸ்ரவேலில், பிரபுக்களுடன் உட்காருதல் அல்லது யெகோவாவின் மக்கள் மத்தியில் அதிகாரமுடையோராய் இருத்தல் போற்றிக்காக்கவேண்டிய ஒரு சிலாக்கியமாக இருந்தது. இன்றைய கிறிஸ்தவ மூப்பர்களைப்போலவே, அப்படிப்பட்டவர்கள் கடவுளுடைய உதவியையும் ஆசீர்வாதத்தையும் கொண்டிருந்தனர்.
11. சங்கீதம் 113:7-9 குறிப்பாக நவீன காலங்களிலுள்ள யெகோவாவின் மக்களுக்குப் பொருந்துகிறது என்பதாக ஏன் சொல்லப்படலாம்?
11 ‘மலடியைச் சந்தோஷமான மக்களின் தாயாகும்படி செய்வதைப்’ பற்றியதென்ன? மலடியான அன்னாளுக்கு கடவுள் ஒரு மகனை—சாமுவேலைக் கொடுத்தார், அவள் அவனை அவருடைய சேவைக்காக அர்ப்பணித்தாள். (1 சாமுவேல் 1:20-28) இயேசுவுடன் ஆரம்பித்து, பொ.ச. 33-ல் பெந்தெகொஸ்தே நாளன்று அவருடைய சீஷர்கள்மேல் பரிசுத்த ஆவி ஊற்றப்பட்டதிலிருந்து, கடவுளுடைய அடையாள ஸ்திரீயாகிய பரலோக சீயோன் ஆவிக்குரிய பிள்ளைகளைப் பிறப்பிக்கத் துவங்கியது மேலுமாக குறிப்பிடத்தக்கதாகும். (ஏசாயா 54:1-10, 13; அப்போஸ்தலர் 2:1-4) பாபிலோனுக்கு நாடுகடத்தப்பட்டவர்களாய் இருந்த யூதர்களை திரும்பவுமாக கடவுள் தாய்நாட்டிற்குக் கொண்டுவந்தது போலவே, 1919-ல் “தேவனுடைய இஸ்ரவேல”ரின் அபிஷேகம் பண்ணப்பட்ட மீதியானோரை அவர் பாபிலோனிய சிறையிருப்பிலிருந்து விடுவித்தார்; சங்கீதம் 113:7-9-லுள்ள வார்த்தைகள் அவர்களுக்கு பொருந்துமளவிற்கு அவர்களை ஆவிக்குரிய விதத்தில் மிக பெரியளவில் ஆசீர்வதித்திருக்கிறார். (கலாத்தியர் 6:16) யெகோவாவின் உண்மைத்தவறாத ஊழியர்களாக, ஆவிக்குரிய இஸ்ரவேலரின் மீதியானோரும் பூமிக்குரிய நம்பிக்கைகளைக் கொண்டிருக்கும் அவர்களுடைய கூட்டாளிகளும் சங்கீதம் 113-ன் கடைசி வார்த்தைகளுக்கு மனமார பிரதிபலிக்கிறார்கள்: “அல்லேலூயா [ஜனங்களே, யாவைத் துதியுங்கள், NW].”
யெகோவாவின் தனித்தன்மைக்கு நிரூபணம்
12. சங்கீதம் 114 எவ்வாறு யெகோவாவின் தனித்தன்மையைக் காண்பிக்கிறது?
12 இஸ்ரவேலரை உட்படுத்திய தனிச்சிறப்பு வாய்ந்த சம்பவங்களைச் சுட்டிக்காட்டுவதன்மூலம் சங்கீதம் 114 யெகோவாவின் தனித்தன்மையைக் காண்பிக்கிறது. சங்கீதக்காரன் பாடினார்: “இஸ்ரவேல் எகிப்திலும், யாக்கோபின் குடும்பம் அந்நிய பாஷைக்காரரான ஜனத்திலுமிருந்து புறப்பட்டபோது, யூதா அவருக்குப் பரிசுத்த ஸ்தானமும், இஸ்ரவேல் அவருக்கு ராஜ்யமுமாயிற்று.” (சங்கீதம் 114:1, 2) அவர்களுடைய காதுகளுக்கு அந்நியமாய் இருந்த பாஷையைக் கொண்டிருந்த எகிப்தியரின் அடிமைத்தனத்திலிருந்து கடவுள் இஸ்ரவேலரை விடுவித்தார். கவிதை நடையான இருசொல் அணி இலக்கணத்தில், யூதா என்றும் இஸ்ரவேல் என்றும் அழைக்கப்பட்ட யெகோவாவின் மக்களுடைய விடுதலை, இன்று கடவுள் தம்முடைய எல்லா ஊழியர்களையும் விடுவிக்க முடியும் என்பதைக் காட்டுகிறது.
13. சங்கீதம் 114:3-6 யெகோவாவின் உன்னதத்தன்மையை எப்படி காண்பிக்கிறது, மேலும் பண்டைய இஸ்ரவேலரின் அனுபவங்களுக்கு எப்படிப் பொருந்துகிறது?
13 எல்லா சிருஷ்டியின்மேலுமான யெகோவாவின் அரசுரிமை இந்த வார்த்தைகளில் விளங்கும்: “கடல் கண்டு விலகி ஓடிற்று; யோர்தான் பின்னிட்டுத் திரும்பினது. மலைகள் ஆட்டுக்கடாக்களைப்போலவும், குன்றுகள் ஆட்டுக்குட்டிகளைப்போலவும் துள்ளினது. கடலே, நீ விலகியோடுகிறதற்கும்; யோர்தானே, நீ பின்னிட்டுத் திரும்புகிறதற்கும்; மலைகளே, நீங்கள் ஆட்டுக்கடாக்களைப்போலவும்; குன்றுகளே, நீங்கள் ஆட்டுக்குட்டிகளைப்போலவும் துள்ளுகிறதற்கும், உங்களுக்கு என்ன வந்தது?” (சங்கீதம் 114:3-6) கடவுள் தம்முடைய மக்களுக்காக அதன் வழியாக ஒரு பாதையைத் திறந்தபோது சிவந்த சமுத்திரம் “விலகி ஓடிற்று.” அதன் பின்னர், திரும்பிவரும் தண்ணீர்களில் மாண்ட எகிப்தியருக்கு விரோதமாக யெகோவாவுடைய பெரிய கை செயல்பட்டதை இஸ்ரவேலர் கண்டனர். (யாத்திராகமம் 14:21-31) தெய்வீக வல்லமையின் அதேவிதமான ஒரு வெளிக்காட்டில், இஸ்ரவேலரை கானானிற்குள் கடந்து செல்ல அனுமதித்து, யோர்தான் நதி “பின்னிட்டுத் திரும்பினது.” (யோசுவா 3:14-16) நியாயப்பிரமாண உடன்படிக்கை நிறுவப்படுகையில், சீனாய் மலை புகையால் நிரப்பப்பட்டு அதிர்ந்தபோது, ‘மலைகள் ஆட்டுக்கடாக்களைப்போல துள்ளின.’ (யாத்திராகமம் 19:7-18) தன்னுடைய பாடலின் உச்சக்கட்டத்தை அருகாமையில் கொண்டிருந்து, சங்கீதக்காரன் காரியங்களை கேள்வி வடிவில் அமைக்கிறார்; யெகோவாவின் வல்லமையின் இந்த வெளிக்காட்டுதல்களால் அந்த உயிரற்ற கடல், ஆறு, மலைகள் மற்றும் குன்றுகள் மலைத்துப்போயின என்பதைக் குறிப்பிட்டிருக்கலாம்.
14. யெகோவாவின் வல்லமையால் மேரிபாவிலும் காதேசிலும் என்ன செய்யப்பட்டது, மேலும் இது அவருடைய நவீன நாளைய ஊழியர்களை எவ்வாறு பாதிக்கவேண்டும்?
14 இன்னும் யெகோவாவின் வல்லமையைக் குறிப்பிடுபவராய், சங்கீதக்காரன் பாடினார்: “பூமியே, நீ ஆண்டவருக்கு முன்பாகவும், யாக்கோபுடைய தேவனுக்கு முன்பாகவும் அதிரு. அவர் கன்மலையைத் தண்ணீர் தடாகமாகவும், கற்பாறையை நீரூற்றுகளாகவும் மாற்றுகிறார்.” (சங்கீதம் 114:7, 8) இவ்வாறாக, பூமி முழுவதற்கும் கர்த்தரும் சர்வலோக அரசருமாகிய யெகோவாவைப் பார்த்து மனிதவர்க்கம் மலைத்துப்போய் நிற்கவேண்டும் என்பதாக சங்கீதக்காரன் உருவகப்படுத்தி குறிப்பிடுகிறார். ஆவிக்குரிய இஸ்ரவேலருக்கும் அவர்களுடைய பூமிக்குரிய தோழர்களுக்கும் தேவனாய் இருப்பதைப்போலவே, அவர் இஸ்ரவேலுடைய அல்லது “யாக்கோபுடைய தேவ”னாகவும் இருந்தார். மேரிபாவிலும் வனாந்தரத்திலுள்ள காதேசிலும், யெகோவா “கன்மலையைத் தண்ணீர் தடாகமாகவும், கற்பாறையை நீரூற்றுகளாகவும் மாற்”றி இஸ்ரவேலுக்கு அற்புதகரமாக தண்ணீர் கொடுத்ததன்மூலம் யெகோவா தம்முடைய வல்லமையைக் காண்பித்தார். (யாத்திராகமம் 17:1-7; எண்ணாகமம் 20:1-11) யெகோவாவின் மலைக்கவைக்கும் வல்லமை மற்றும் கனிவான கவனிப்பைப்பற்றிய நினைப்பூட்டுதல்கள் அவருடைய சாட்சிகள் அவரிடத்தில் கேள்விக்கிடமில்லாத விசுவாசம் வைப்பதற்கு சரியான காரணங்களைக் கொடுக்கின்றன.
விக்கிரகக் கடவுட்களைப் போல் இல்லாதவர்
15. சங்கீதம் 115 எவ்வாறு பாடப்பட்டிருக்கவேண்டும்?
15 யெகோவாவைத் துதிப்பதற்கும் உறுதியாய் நம்புவதற்கும் சங்கீதம் 115 நம்மை ஊக்குவிக்கிறது. அது ஆசீர்வாதத்தையும் உதவியையும் அவருக்கே உரியதாக்கி விக்கிரகங்கள் பிரயோஜனமற்றவை என்று நிரூபிக்கின்றன. இந்தச் சங்கீதம் எதிரெதிர்ப்பாடலாக பாடப்பட்டிருக்கக்கூடும். அதாவது, ஒரு குரல் இவ்விதமாக பாடக்கூடும்: “கர்த்தருக்குப் பயப்படுகிறவர்களே, கர்த்தரை நம்புங்கள்.” சபை இவ்வாறு பதிலளித்திருக்கக்கூடும்: “அவரே அவர்களுக்குத் துணையும் அவர்களுக்குக் கேடகமுமாயிருக்கிறார்.”—சங்கீதம் 115:11.
16. யெகோவாவுக்கும் ஜனங்களின் விக்கிரகங்களுக்கும் இடையில் என்ன வேறுபாட்டைக் காணலாம்?
16 மகிமை நமக்கல்ல, ஆனால் கிருபை அல்லது மாறாத அன்பும் சத்தியமும் உடைய கடவுளாகிய யெகோவாவின் பெயருக்கே செல்லவேண்டும். (சங்கீதம் 115:1) எதிரிகள் கேலியாகக் கேட்கலாம்: “அவர்களுடைய தேவன் . . . எங்கே?” ஆனால் யெகோவாவின் மக்கள் பதிலளிக்கலாம்: ‘எங்கள் தேவன் பரலோகத்தில் இருக்கிறார். தமக்குச் சித்தமான எல்லாவற்றையும் செய்கிறார்.’ (வசனங்கள் 2, 3) ஆயினும் ஜனங்களின் விக்கிரகங்களால் ஒன்றும் செய்ய முடியாது, ஏனென்றால் அவை மனிதனால் உண்டாக்கப்பட்ட வெள்ளி மற்றும் பொன்னாலான சிலைகள். அவற்றிற்கு வாய்கள், கண்கள், காதுகள் இருப்பினும் அவை ஊமையும், குருடும், செவிடுமானவை. அவை மூக்குகளைக் கொண்டிருந்தாலும் முகர முடியாது, கால்களிருந்தாலும் நடக்க முடியாது, தொண்டைகள் இருந்தாலும் ஒரு சத்தமும் உண்டாக்க முடியாது. வல்லமையற்ற விக்கிரகங்களை உண்டாக்குபவர்களும் அவற்றை நம்புகிறவர்களும் அவர்களுக்குச் சமமாகவே உயிரற்றவர்களாகிவிடுவர்.—வசனங்கள் 4-8.
17. மரித்தோர் யெகோவாவைத் துதிக்க முடியாதென்பதால், நாம் என்ன செய்யவேண்டும், என்ன எதிர்நோக்குகளுடன்?
17 அடுத்ததாக, இஸ்ரவேலுக்கும், ஆரோனின் ஆசாரிய வீட்டிற்கும், கடவுள் பயமுள்ள அனைவருக்கும் துணையும் பாதுகாப்பான கேடகமுமாய் இருப்பவராக யெகோவாவை நம்பவேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. (சங்கீதம் 115:9-11) யெகோவாவுக்கு பயப்படுபவர்களாக, ஆழ்ந்த மரியாதையையும் அவருக்கு விருப்பமில்லாதவற்றைச் செய்துவிடக்கூடாது என்ற ஆரோக்கியமான பயத்தையும் நாம் கொண்டிருக்கிறோம். “வானத்தையும் பூமியையும் படைத்த”வர் அவருடைய உண்மைத்தவறாத வணக்கத்தாரை ஆசீர்வதிப்பார் என்றும் நாம் விசுவாசிக்கிறோம். (வசனங்கள் 12-15) வானங்கள் அவருடைய சிங்காசனத்திற்குரிய இடமாயிருக்கிறது; ஆனால் உண்மைத்தவறாத கீழ்ப்படிதலுள்ள மனிதவர்க்கத்திற்கு பூமியை நித்திய வீடாக உண்டாக்கினார். மெளனமாக, உணர்வற்றவர்களாக இருக்கும் மரித்தோர் யெகோவாவைத் துதிக்கமுடியாத காரணத்தால், உயிருடனிருக்கும் நாம், முழு பக்தியுடனும் உண்மைத்தவறாமையுடனும் அவ்வாறு செய்ய வேண்டும். (பிரசங்கி 9:5) யெகோவாவைத் துதிப்பவர்கள் மட்டுமே நித்திய ஜீவனை அனுபவிக்கமுடியும்; மேலும், நித்தியமாக அவரை “ஸ்தோத்திரி”க்கவும் “என்றென்றைக்கும்” அவரைக்குறித்து நற்சாட்சிபகர்பவர்களாகவும் இருக்க முடியும். ஆகவே, ‘ஜனங்களே, யாவைத் துதியுங்கள்!’ என்ற அறிவுரைக்கு இணங்குவோருடன் நாம் உண்மைத்தவறாமல் சேர்ந்து நிற்போமாக.—சங்கீதம் 115:16-18.
யெகோவாவின் வியக்கத்தக்க குணங்கள்
18, 19. என்ன வழிகளில் யெகோவாவின் குணங்கள் அவரைப் பொய் கடவுட்களிலிருந்து வேறுபடுத்திக் காட்டுகின்றன?
18 உயிரற்ற விக்கிரகங்களைப் போலில்லாமல், யெகோவா, வியக்கத்தக்க குணங்களை வெளிக்காட்டும் உயிருள்ள கடவுளாக இருக்கிறார். அவர் அன்பின் உருவாகவும், “இரக்கமும், கிருபையும், நீடிய சாந்தமும், மகா தயையும்” உள்ளவராயும் இருக்கிறார். (யாத்திராகமம் 34:6; 1 யோவான் 4:8) பிள்ளைகள் பலியிடப்பட்ட கொடூரமான கானானிய கடவுளாகிய மோளேகிலிருந்து அவர் எவ்வளவாய் வேறுபடுகிறார்! இந்தக் கடவுளுடைய சிலை மனித உருவையும் ஒரு காளையின் தலையையும் கொண்டிருக்கலாம் என்று எண்ணப்படுகிறது. அந்த விக்கிரகம் செந்நிறமாகச் சூடேற்றப்பட்டு, அடியிலுள்ள சூளையில் விழும்படி அதன் விரித்து நீட்டப்பட்ட கைகளில் பிள்ளைகள் எறியப்பட்டதாக அறிக்கைசெய்யப்படுகிறது. ஆனால் யெகோவா அவ்வளவு அன்பும் இரக்கமும் உள்ளவராகையால், மனித பலிகளைக்குறித்த அத்தகைய எண்ணம் அவருடைய “மனதில் தோன்றவுமில்லை.”—எரேமியா 7:31.
19 யெகோவாவின் முக்கிய குணங்கள் பரிபூரண நீதி, எல்லையற்ற ஞானம், சர்வவல்லமை ஆகியவற்றையும் உட்படுத்துகின்றன. (உபாகமம் 32:4; யோபு 12:13; ஏசாயா 40:26) புராணக்கதை தேவர்களைப்பற்றி என்ன? நீதியை செயல்படுத்துவதற்கு மாறாக, பாபிலோனிய தேவ தேவதைகள் பழிக்குப்பழிவாங்கும் இயல்புடையவையாக இருந்தன. எகிப்திய தேவர்கள் ஞானத்திற்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டுகளாக அல்ல, ஆனால் மனித பலவீனங்களைக் கொண்டிருப்பதாக சித்தரிக்கப்பட்டன. அது ஆச்சரியத்திற்குரியதாய் இல்லை, ஏனென்றால், பொய் தேவர்களும் தேவதைகளும், தங்களை ஞானிகளாக உரிமைபாராட்டும் “வீணரான” மனிதர்களின் விளைபொருட்களே ஆவர். (ரோமர் 1:21-23) கிரேக்க தேவர்கள் ஒருவருக்கு விரோதமாக மற்றொருவர் சதி திட்டங்களைக் கொண்டிருந்ததாக ஊகிக்கப்படுகிறது. உதாரணமாக, புராணங்களில் ஸீயஸ் தன் தந்தையாகிய க்ரோனஸை அதிகாரத்தினின்று தள்ளுவதன்மூலம் அதிகாரத்தைத் துர்ப்பிரயோகம் செய்தான்; இந்த க்ரோனஸ் தன் தகப்பனாகிய யுரேனஸை பதவியிலிருந்து அகற்றியிருந்தான். பரிபூரண அன்பையும், நீதியையும், ஞானத்தையும், வல்லமையையும் வெளிக்காட்டும் உயிருள்ள, சத்தியமான தேவனாகிய யெகோவாவைச் சேவிப்பதும் துதிப்பதும் என்னே ஓர் ஆசீர்வாதம்!
யெகோவா நித்திய துதிக்கு தகுதியுடையவர்
20. யெகோவாவின் நாமத்தைத் துதிப்பதற்கு தாவீது ராஜா என்ன காரணங்களைக் கொடுக்கிறார்?
20 அல்லேல் சங்கீதங்கள் காண்பிக்கிறபடி, யெகோவா நித்திய துதிக்கு பாத்திரராய் இருக்கிறார். அதேவிதமாகவே, தாவீதும் உடன்இஸ்ரவேலரும் ஆலயம் கட்டுவதற்காக நன்கொடை அளித்தபோது, அவர் சபையின் முன்பாக இவ்வாறு சொன்னார்: “எங்கள் தகப்பனாகிய இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தாவே, சதாகாலங்களிலும் தேவரீருக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக. கர்த்தாவே, மாட்சிமையும் வல்லமையும் மகிமையும் ஜெயமும் மகத்துவமும் உம்முடையவைகள்; வானத்திலும் பூமியிலும் உள்ளவைகளெல்லாம் உம்முடையவைகள்; கர்த்தாவே, ராஜ்யமும் உம்முடையது; தேவரீர் எல்லாருக்கும் தலைவராய் உயர்ந்திருக்கிறீர். ஐசுவரியமும் கனமும் உம்மாலே வருகிறது; தேவரீர் எல்லாவற்றையும் ஆளுகிறவர்; உம்முடைய கரத்திலே சத்துவமும் வல்லமையும் உண்டு; எவரையும் மேன்மைப்படுத்தவும் பலப்படுத்தவும் உம்முடைய கரத்தினால் ஆகும். இப்போதும் எங்கள் தேவனே, நாங்கள் உமக்கு ஸ்தோத்திரம் செலுத்தி, உமது மகிமையுள்ள நாமத்தைத் துதிக்கிறோம்.”—1 நாளாகமம் 29:10-13.
21. யெகோவா பரலோகப் படைகளால் துதிக்கப்படுவதற்கு வெளிப்படுத்துதல் 19:1-6 என்ன அத்தாட்சியைக் கொடுக்கிறது?
21 யெகோவா பரலோகத்திலும் என்றென்றுமாக ஸ்தோத்திரிக்கவும் துதிக்கவும்படுவார். அப்போஸ்தலன் யோவான் “பரலோகத்தில் திரளான ஜனக்கூட்டம்” ஒன்று இவ்வாறு சொல்வதைக் கேட்டார்: “அல்லேலூயா, இரட்சணியமும் மகிமையும் கனமும் வல்லமையும் நம்முடைய தேவனாகிய கர்த்தருக்கே உரியது; அவருடைய நியாயத்தீர்ப்புகள் சத்தியமும் நீதியுமானவைகள். தன் வேசித்தனத்தினால் பூமியைக் கெடுத்த மகா வேசிக்கு [மகா பாபிலோனுக்கு] அவர் நியாயத்தீர்ப்புக்கொடுத்து, தம்முடைய ஊழியக்காரரின் இரத்தத்திற்காக அவளிடத்தில் பழிவாங்கினாரே என்றார்கள்.” மறுபடியும் அவர்கள் சொன்னார்கள்: “அல்லேலூயா.” “இருபத்துநான்கு மூப்பர்களும், நான்கு ஜீவன்களும்” அவ்வாறே செய்தனர். சிங்காசனத்திலிருந்து ஒரு சத்தம் கூறியது: “நமது தேவனுடைய ஊழியக்காரரே, அவருக்குப் பயப்படுகிற சிறியோரும் பெரியோருமானவர்களே, நீங்கள் யாவரும் அவரைத் துதியுங்கள்.” பின்னும் யோவான் தொடர்கிறார்: “திரளான ஜனங்கள் இடும் ஆரவாரம்போலவும், பெருவெள்ள இரைச்சல்போலவும், பலத்த இடிமுழக்கம்போலவும், ஒரு சத்தமுண்டாகி: அல்லேலூயா, சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர் ராஜ்யபாரம்பண்ணுகிறார்.”—வெளிப்படுத்துதல் 19:1-6.
22. அவருடைய வாக்குப்பண்ணப்பட்ட புதிய உலகில் யெகோவா எவ்வாறு துதிக்கப்படுவார்?
22 பரலோகப் பெரும்படைகள் யெகோவாவைத் துதிப்பது எவ்வளவு பொருத்தமாக இருக்கிறது! இப்பொழுது அருகாமையிலிருக்கும் அவருடைய புதிய உலகில், இந்தக் காரிய ஒழுங்குமுறையைத் தப்பிப்பிழைப்பவர்களுடன் உயிர்த்தெழுப்பப்படும் உண்மைத்தவறாதோரும் யெகோவாவைத் துதிப்பதில் சேர்ந்துகொள்வார்கள். செங்குத்தான மலைகள் கடவுளுக்கான துதிப்பாடல்களுடன் தங்கள் தலைகளை உயர்த்தும். பசுமையான குன்றுகளும் கனிகொடுக்கும் மரங்களும் அவருடைய துதிகளை இசைக்கும். ஏன், வாழ்ந்து சுவாசிக்கும் ஒவ்வொரு ஜீவனுமே அந்தப் பெரிய அல்லேலூயா பல்லவியில் யெகோவாவின் பெயரைத் துதிக்கும்! (சங்கீதம் 148) அந்த ஆர்ப்பரிக்கும் கூட்டத்தில் உங்களுடைய சத்தமும் கேட்குமா? யெகோவாவின் ஜனங்களுடன் அவரை உண்மைத்தவறாது சேவித்தால் அவ்வாறு கேட்கும். அதுவே வாழ்க்கையில் உங்களுடைய நோக்கமாக இருக்கவேண்டும், ஏனென்றால் நம்முடைய கடவுளாகிய யெகோவாவைப்போல் யார் உண்டு?
நீங்கள் எவ்வாறு பதிலளிப்பீர்கள்?
◻ யெகோவா தேவனை ஏன் துதிக்க வேண்டும்?
◻ எந்த வழிகளில் யெகோவா ஈடிணையற்றவராயிருக்கிறார்?
◻ யெகோவா பரிவிரக்கமுள்ளவர் என்பதற்கு என்ன அத்தாட்சி இருக்கிறது?
◻ உயிரற்ற விக்கிரகங்கள் மற்றும் பொய் தேவர்களிலிருந்து யெகோவா எவ்வாறு வேறுபடுகிறார்?
◻ பரலோகத்திலும் பூமியிலும் யெகோவா நித்திய துதியைப் பெறுவார் என்று நாம் ஏன் சொல்லலாம்?
[பக்கம் 9-ன் படம்]
அல்லேல் சங்கீதங்கள் பஸ்கா போஜனத்தின்போது பாடப்பட்டன