யெகோவாவின் வசனத்தில் நம்பிக்கை வையுங்கள்
“உம்முடைய வசனத்தை நம்பியிருக்கிறேன்.”—சங்கீதம் 119:42.
1. சங்கீதம் 119-ஐ இயற்றியவர் யார், அவருடைய சுபாவத்தைப் பற்றி உங்களுக்குத் தெரிந்தது என்ன?
சங்கீதம் 119-ஐ இயற்றியவர் யெகோவாவின் வசனத்தை நெஞ்சார நேசித்தார். அவர் யூதாவின் இளவரசரான எசேக்கியாவாக இருக்கலாம். ஏனெனில் ஏவுதலால் எழுதப்பட்ட இந்தச் சங்கீதத்தில் இழையோடும் உணர்ச்சிகள் எசேக்கியாவின் சுபாவத்தோடு நன்கு பொருந்துகின்றன; அவர் யூதாவின் அரசராக ஆட்சி செய்தபோது, ‘யெகோவாவை உறுதியாகப் பற்றிக்கொண்டிருந்தார்.’ (2 இராஜாக்கள் 18:3-7, NW) இந்தச் சங்கீதத்தை இயற்றியவர் யாராக இருந்தாலும்சரி, அவர் ஆன்மீக தேவையைக் குறித்து உணர்வுடையவராக இருந்தார் என்பது மட்டும் உறுதி.—மத்தேயு 5:3, NW.
2. சங்கீதம் 119-ன் முக்கிய குறிப்பு என்ன, இந்தச் சங்கீதம் எப்படி அமைக்கப்பட்டுள்ளது?
2 கடவுளுடைய வசனம், அதாவது செய்தி, எவ்வளவு மதிப்புமிக்கது என்பதே சங்கீதம் 119-ல் இழையோடும் முக்கிய குறிப்பு.a ஞாபகத்தில் வைப்பதற்கு வசதியாக, எழுத்தாளர் இப்பாடலை அகரவரிசையில் எழுதியிருக்கலாம். இதிலுள்ள 176 வசனங்களும் எபிரெய எழுத்துக்களின் அகரவரிசையில் அமைக்கப்பட்டுள்ளன. மூல எபிரெயுவில், இந்தச் சங்கீதத்தின் ஒவ்வொரு 22 செய்யுள்களிலும் உள்ள 8 வரிகளும் அதே எழுத்தில் ஆரம்பிக்கின்றன. இந்தச் சங்கீதம் கடவுளுடைய வசனத்தையும் வேதத்தையும் சாட்சிகளையும் வழிகளையும் கட்டளைகளையும் பிரமாணங்களையும் கற்பனைகளையும் நியாயங்களையும் வாக்கையும் பற்றி குறிப்பிடுகிறது. இந்தக் கட்டுரையிலும் இதற்குப்பின் வரும் கட்டுரையிலும், எபிரெய பைபிள் வாசகத்தின் திருத்தமான மொழிபெயர்ப்பின் அடிப்படையில் 119-ம் சங்கீதம் ஆராயப்படும். யெகோவாவின் கடந்தகால மற்றும் தற்கால ஊழியர்களுடைய அனுபவங்களைத் தியானிப்பது ஏவுதலால் எழுதப்பட்ட இச்சங்கீதத்தை நாம் நன்றாகப் புரிந்துகொள்ள உதவிசெய்ய வேண்டும். கடவுளுடைய எழுதப்பட்ட வார்த்தையாகிய பைபிளின் மீது நமது நன்றியுணர்வையும் பெருகச் செய்ய வேண்டும்.
கடவுளுடைய வசனத்திற்குக் கீழ்ப்படிந்து மகிழ்ச்சியாக இருங்கள்
3. உத்தமராக இருப்பது என்றால் என்ன என்பதை உதாரணத்துடன் விளக்குக.
3 கடவுளுடைய வேதத்திற்கு, அதாவது சட்டத்திற்கு, இசைவாக நாம் நடப்பதிலேயே உண்மையான மகிழ்ச்சி உள்ளது. (சங்கீதம் 119:1-8) அப்படி செய்தால், யெகோவா நம்மை ‘உத்தம மார்க்கத்தாராக’ கருதுவார். (சங்கீதம் 119:1) உத்தமராக இருப்பதுதானே நாம் பரிபூரணர் என அர்த்தப்படுத்தாது, மாறாக, யெகோவா தேவனுடைய சித்தத்தைச் செய்ய நாம் கடினமாய் முயல்கிறோம் என்பதையே அது காட்டுகிறது. நோவா ‘தன் காலத்தில் இருந்தவர்களுக்குள்ளே . . . உத்தமராயிருந்தார்,’ ‘தேவனோடே சஞ்சரித்துக் கொண்டிருந்தார்.’ உண்மையுள்ள அந்த முற்பிதாவும் அவருடைய குடும்பத்தாரும் ஜலப்பிரளயத்தில் தப்பிப்பிழைத்தனர், ஏனென்றால் யெகோவா காட்டிய வாழ்க்கைப் பாதையில் அவர் நடந்தார். (ஆதியாகமம் 6:9; 1 பேதுரு 3:20) அது போலவே, இவ்வுலகிற்கு நேரிடும் அழிவிலிருந்து தப்பிப்பிழைக்க வேண்டுமென்றால், ‘கடவுளுடைய கட்டளைகளை நாம் கருத்தாய்க் கைக்கொண்டு’ அவருடைய சித்தத்தைச் செய்ய வேண்டும்.—சங்கீதம் 119:4.
4. நம்முடைய மகிழ்ச்சியும் வெற்றியும் எதின் மீது சார்ந்துள்ளது?
4 ‘நாம் செம்மையான இருதயத்தால் அவரை துதித்து அவருடைய பிரமாணங்களைக் கைக்கொண்டால்,’ யெகோவா நம்மை ஒருபோதும் கைவிட மாட்டார். (சங்கீதம் 119:7, 8) இஸ்ரவேலின் தலைவரான யோசுவாவை கடவுள் கைவிடவில்லை, ‘நியாயப்பிரமாண புஸ்தகத்தில் எழுதியிருக்கிறவைகளின்படியெல்லாம் செய்வதற்கு இரவும் பகலும் அதை வாசித்துக் கொண்டிரு’ என்ற அறிவுரையை அவர் பின்பற்றினார். அது அவருக்கு வெற்றியைத் தேடித் தந்தது, ஞானமாய் நடப்பதற்கும் உதவியது. (யோசுவா 1:8) யோசுவா தனது வாழ்க்கையின் இறுதிக் கட்டத்திலும்கூட கடவுளைத் துதித்துக் கொண்டிருந்தார், இஸ்ரவேலருக்குப் பின்வரும் நினைப்பூட்டுதலையும் அளித்தார்: “உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்காகச் சொன்ன நல்வார்த்தைகளிலெல்லாம் ஒரு வார்த்தையும் தவறிப்போகவில்லை என்பதை உங்கள் முழு இருதயத்தாலும் உங்கள் முழு ஆத்துமாவாலும் அறிந்திருக்கிறீர்கள்.” (யோசுவா 23:14) யோசுவாவையும் 119-ம் சங்கீதத்தை இயற்றியவரையும் போல, நம்முடைய மகிழ்ச்சியும் வெற்றியும் யெகோவாவைத் துதித்துப் பாடுவதிலும் அவருடைய வசனத்தில் நம்பிக்கை வைப்பதிலுமே சார்ந்துள்ளது.
யெகோவாவின் வசனம் நம்மை சுத்தமுடன் வைக்கிறது
5. (அ) ஆன்மீக ரீதியில் சுத்தமாயிருப்பது எப்படி சாத்தியம் என்பதை விளக்குங்கள். (ஆ) வினைமையான பாவம் செய்துவிட்ட ஓர் இளைஞனுக்கு என்ன உதவி இருக்கிறது?
5 கடவுளுடைய வசனத்தின்படி நடப்பதற்கு நாம் கவனமாயிருந்தால், ஆன்மீக ரீதியில் சுத்தமாய் இருக்க முடியும். (சங்கீதம் 119:9-16) நம்முடைய பெற்றோர்கள் சிறந்த முன்மாதிரி வைக்காவிட்டாலும்கூட, நாம் சுத்தமாய் இருக்க முடியும். எசேக்கியாவின் தகப்பன் விக்கிரகங்களை வழிபட்டு வந்தபோதிலும், எசேக்கியா ‘தனது வழியை சுத்தம் பண்ணினார்;’ ஒருவேளை புறமத பழக்கவழக்கங்களை அவர் விட்டொழித்திருக்கலாம். இன்று கடவுளுக்குச் சேவை செய்துவரும் ஓர் இளைஞன் வினைமையான பாவம் செய்துவிட்டால் என்ன செய்வது? மனந்திரும்புதல், ஜெபம், பெற்றோர்கள் மற்றும் கிறிஸ்தவ மூப்பர்களுடைய அன்பான உதவி ஆகியவை எசேக்கியாவைப் போல் இருப்பதற்கும் ‘தனது வழியை சுத்தம் பண்ணி தன்னைக் காத்துக்கொள்வதற்கும்’ அவனுக்கு உதவும்.—யாக்கோபு 5:13-15.
6. தங்களை சுத்தம் பண்ணி கடவுளுடைய வசனத்தின்படி தங்களைக் காத்துக்கொண்ட பெண்கள் யார்?
6 ராகாபும் ரூத்தும் 119-ம் சங்கீதம் இயற்றப்படுவதற்கு வெகு காலத்திற்கு முன்னர் வாழ்ந்தவர்கள். இருந்தாலும், அவர்கள் ‘தங்களுடைய வழியை சுத்தம் பண்ணினார்கள்.’ ராகாப் கானானிய தேசத்தைச் சேர்ந்த ஒரு வேசி, ஆனால் பிற்பாடு யெகோவாவை வணங்குபவளாக மாறி விசுவாசமுள்ளவள் என்ற பெயரெடுத்தாள். (எபிரெயர் 11:30, 31) மோவாபிய பெண் ரூத் தனது தெய்வங்களை விட்டுவிட்டு யெகோவாவை வணங்கினாள், இஸ்ரவேலருக்குக் கொடுக்கப்பட்ட நியாயப்பிரமாணத்திற்கு இசைவாக நடந்தாள். (ரூத் 1:14-17; 4:9-13) இஸ்ரவேலரல்லாத இந்த இருவரும் ‘கடவுளுடைய வசனத்தின்படி தங்களைக் காத்துக்கொண்டார்கள்;’ இயேசு கிறிஸ்துவின் மூதாதையராகும் மகத்தான பாக்கியத்தையும் பெற்றார்கள்.—மத்தேயு 1:1, 4-6.
7. ஆன்மீக சுத்தத்தைக் காத்துக்கொள்வதில் தானியேலும் மற்ற எபிரெய இளைஞர்கள் மூவரும் எப்படி சிறந்த முன்மாதிரி வைத்தார்கள்?
7 “மனுஷனுடைய இருதயத்தின் நினைவுகள் அவன் சிறுவயது தொடங்கிப் பொல்லாததாயிருக்கிறது.” இருந்தாலும், சாத்தானுடைய கட்டுப்பாட்டிலுள்ள இந்தப் பொல்லாத உலகிலும்கூட இளைஞர்கள் சுத்தமான பாதையில் நடக்க முடியும். (ஆதியாகமம் 8:21; 1 யோவான் 5:19) தானியேலும் மூன்று எபிரெய இளைஞர்களும் பாபிலோனுக்கு நாடுகடத்தப்பட்டிருந்தபோதிலும், ‘கடவுளுடைய வசனத்தின்படி தங்களைக் காத்துக்கொண்டார்கள்.’ உதாரணமாக, ‘ராஜாவின் போஜனத்தினால்’ அவர்கள் தங்களைத் தீட்டுப்படுத்தவில்லை. (தானியேல் 1:6-10) மோசேயின் நியாயப்பிரமாண சட்டத்தில் தடை செய்யப்பட்டிருந்த அசுத்தமான மிருகங்களை பாபிலோனியர் புசித்தார்கள். (லேவியராகமம் 11:1-31; 20:24-26) அவர்கள் மிருகங்களை வெட்டி ஒருபோதும் இரத்தத்தை வடிக்க மாட்டார்கள், இரத்தம் வடிக்காத இறைச்சியை புசிப்பது இரத்தம் சம்பந்தமாக கடவுள் கொடுத்த சட்டத்தை மீறுவதாகும். (ஆதியாகமம் 9:3, 4) அந்த நான்கு எபிரெயரும் ராஜாவின் போஜனத்தைப் புசிக்காதது ஆச்சரியமல்லவே! தேவபக்தியுள்ள அந்த இளைஞர்கள் தங்களுடைய ஆன்மீக சுத்தத்தைக் காத்துக்கொண்டதன் மூலம் சிறந்த முன்மாதிரி வைத்தார்கள்.
உண்மைத் தன்மையுடன் இருக்க கடவுளுடைய வசனம் உதவுகிறது
8. கடவுளுடைய சட்டத்தைக் கிரகித்து அதன்படி நடப்பதற்கு எத்தகைய மனோபாவமும் அறிவும் தேவை?
8 யெகோவாவிடம் உண்மையாக இருப்பதற்கு முக்கிய அம்சமாக விளங்குவது கடவுளுடைய வசனத்தின் மீதுள்ள வாஞ்சையாகும். (சங்கீதம் 119:17-24) ஆவியின் ஏவுதலால் எழுதிய இந்தப் பாடகரைப் போல் நாம் இருந்தால், கடவுளுடைய வேதத்திலுள்ள, அதாவது சட்டத்திலுள்ள “அதிசயங்களை” புரிந்துகொள்ள வேண்டுமென்ற தீவிர ஆசை நமக்கும் இருக்கும். ‘யெகோவாவின் நியாயங்கள் மேல் எக்காலமும் வாஞ்சையுடன்’ இருப்போம். ‘அவருடைய நினைப்பூட்டுதல்கள் மீது விருப்பத்தையும்’ காட்டுவோம். (சங்கீதம் 119:18, 20, 24; NW) யெகோவாவுக்கு ஒப்புக்கொடுத்து சில காலமே ஆகியிருந்தாலும், ‘திருவசனமாகிய களங்கமில்லாத ஞானப்பாலின்மேல் வாஞ்சையை வளர்த்திருக்கிறோமா?’ (1 பேதுரு 2:2, 3) கடவுளுடைய சட்டத்தை நன்றாக கிரகித்து அதன்படி நடப்பதற்கு அடிப்படை பைபிள் போதனைகளை நாம் புரிந்துகொள்வது அவசியம்.
9. கடவுளுடைய சட்டங்களுக்கும் மனித சட்டங்களுக்கும் இடையே முரண்பாடு ஏற்பட்டால் நாம் என்ன செய்ய வேண்டும்?
9 கடவுளுடைய நினைப்பூட்டுதல்கள் மீது நமக்கு விருப்பம் இருக்கலாம், ஆனால் ஏதாவது காரணத்திற்காக ‘பிரபுக்கள்’ நமக்கு விரோதமாக பேசினால் என்ன செய்வது? (சங்கீதம் 119:23, 24) கடவுளுடைய சட்டத்திற்கு மேலாக மனித சட்டங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும்படி அதிகாரத்தில் இருப்பவர்கள் இன்றைக்கு நம்மை அடிக்கடி பலவந்தப்படுத்துகிறார்கள். மனித சட்டங்களுக்கும் கடவுளுடைய சித்தத்திற்கும் இடையே முரண்பாடு ஏற்பட்டால் நாம் என்ன செய்வோம்? கடவுளுடைய வசனத்தின் மீது நமக்குள்ள வாஞ்சை யெகோவாவுக்கு உண்மையுடன் நிலைத்திருக்க உதவும். துன்புறுத்தப்பட்ட இயேசு கிறிஸ்துவின் அப்போஸ்தலர்களைப் போல, “மனுஷருக்குக் கீழ்ப்படிகிறதைப் பார்க்கிலும் தேவனுக்குக் கீழ்ப்படிகிறதே அவசியமாயிருக்கிறது” என்று சொல்வோம்.—அப்போஸ்தலர் 5:29.
10, 11. மிகக் கஷ்டமான சூழ்நிலைகள் மத்தியிலும் எப்படி யெகோவாவுக்கு உத்தமத்தைக் காத்துக்கொள்ள முடியும் என்பதை உதாரணத்துடன் விளக்குக.
10 மிகக் கஷ்டமான சூழ்நிலைகள் மத்தியிலும் நாம் யெகோவாவுக்கு உண்மையுடன் நிலைத்திருக்க முடியும். (சங்கீதம் 119:25-32) கடவுளுக்கு உத்தமத்தைக் காத்துக்கொள்வதில் நாம் வெற்றிபெற வேண்டுமாகில், போதனையை ஏற்றுக்கொள்ள மனமுள்ளவர்களாயும் அதற்காக ஊக்கமாய் ஜெபிக்கிறவர்களாயும் இருக்க வேண்டும். நாம் “மெய் வழியை” தேர்ந்தெடுக்கவும் வேண்டும்.—சங்கீதம் 119:26, 30.
11 சங்கீதம் 119-ஐ எழுதிய எசேக்கியா “மெய் வழியை” தேர்ந்தெடுத்தார். பொய் வணக்கத்தார் தன்னை சூழ்ந்திருந்தபோதிலும், அரண்மனையில் இருந்தவர்கள் ஒருவேளை அவரைப் பரிகாசம் செய்தபோதிலும், அவர் “மெய் வழியை” தேர்ந்தெடுத்தார். இத்தகைய சூழ்நிலைகள் காரணமாக ‘அவருடைய ஆத்துமா சஞ்சலத்தால் கரைந்து போயிருந்திருக்கும்.’ (சங்கீதம் 119:28) ஆனாலும் கடவுள் மீது எசேக்கியா நம்பிக்கை வைத்தார், நல்ல அரசனாக விளங்கினார், அதோடு “கர்த்தரின் பாவைக்குச் செம்மையானதைச்” செய்தார். (2 இராஜாக்கள் 18:1-5) கடவுளைச் சார்ந்திருந்தால், நாமும்கூட உத்தமத்தைக் காப்போராக சோதனைகளைச் சகித்திருக்க முடியும்.—யாக்கோபு 1:5-8.
யெகோவாவின் வசனம் தைரியம் தருகிறது
12. சங்கீதம் 119:36, 37-ஐ எப்படி தனிப்பட்ட விதமாக நாம் பொருத்தலாம்?
12 கடவுளுடைய வசனம் தரும் வழிநடத்துதலைப் பின்பற்றுவது வாழ்க்கையில் வரும் சோதனைகளைச் சமாளிப்பதற்குத் தேவையான தைரியத்தை நமக்குத் தருகிறது. (சங்கீதம் 119:33-40) யெகோவாவின் சட்டத்தை “முழு இருதயத்தோடு” பின்பற்றுவதற்கு நாம் அவருடைய போதனையை மனத்தாழ்மையுடன் நாட வேண்டும். (சங்கீதம் 119:33, 34) சங்கீதக்காரனைப் போல நாம் கடவுளிடம் கேட்கலாம்: “என் இருதயம் பொருளாசையைச் சாராமல், உமது சாட்சிகளைச் [“நினைப்பூட்டுதல்களை,” NW] சாரும்படி செய்யும்.” (சங்கீதம் 119:36) அப்போஸ்தலன் பவுலைப் போல, ‘எல்லாவற்றிலும் நாம் யோக்கியமாய் நடக்கிறோம்.’ (எபிரெயர் 13:18) நம்முடைய முதலாளி ஏதாவது நேர்மையற்ற காரியத்தைச் செய்யச் சொன்னால், கடவுளுடைய வழிநடத்துதல்களைப் பின்பற்றுவதற்கு நாம் தைரியத்தை திரட்டுகிறோம்—இத்தகைய செயலை யெகோவா எப்போதும் ஆசீர்வதிக்கிறார். சொல்லப்போனால், கெட்ட ஆசைகள் அனைத்தையும் கட்டுப்படுத்த அவர் நமக்கு உதவுகிறார். ஆகவே, ‘மாயையைப் பாராதபடி நீர் என் கண்களை விலக்கியருளும்’ என ஜெபிப்போமாக. (சங்கீதம் 119:37) கடவுளால் வெறுக்கப்படும் எந்தவொரு வீணான காரியத்தின் மீதும் ஆசைப்பட நாம் ஒருபோதும் விரும்ப மாட்டோம். (சங்கீதம் 97:10) ஆபாசம், ஆவியுலகத் தொடர்புகள் போன்றவற்றை தவிர்ப்பதற்கு இது நம்மை உந்துவிக்கிறது.—1 கொரிந்தியர் 6:9, 10; வெளிப்படுத்துதல் 21:8.
13. தைரியமாய் சாட்சி கொடுப்பதற்குத் தேவையான பலத்தை துன்புறுத்தப்பட்ட இயேசுவின் சீஷர்கள் எப்படி பெற்றார்கள்?
13 கடவுளுடைய வார்த்தையைப் பற்றிய திருத்தமான அறிவு தைரியத்தோடு சாட்சி கொடுக்க நமக்கு நம்பிக்கை அளிக்கிறது. (சங்கீதம் 119:41-48) ‘நம்மை நிந்திக்கிறவனுக்கு உத்தரவு சொல்ல’ நமக்கு தைரியம் தேவை. (சங்கீதம் 119:42) சில சமயங்களில், துன்புறுத்தப்பட்ட இயேசுவின் சீஷர்களைப் போல் நாம் இருக்கலாம்; “உம்முடைய ஊழியக்காரர் உம்முடைய வசனத்தை முழு தைரியத்தோடும் சொல்லும்படி அவர்களுக்கு அநுக்கிரகஞ் செய்தருளும்” என ஜெபம் செய்தார்கள். விளைவு? “அவர்களெல்லாரும் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டு, தேவ வசனத்தைத் தைரியமாய்ச் சொன்னார்கள்.” அது போலவே நாமும் கடவுளுடைய வசனத்தை தைரியமாய் பேசுவதற்குத் தேவையான பலத்தை சர்வ வல்லமையுள்ள கர்த்தர் நமக்குத் தருகிறார்.—அப்போஸ்தலர் 4:24-31.
14. பவுலைப் போல தைரியமாய் சாட்சி கொடுக்க எது நமக்கு உதவும்?
14 ‘சத்திய வசனத்தை’ நெஞ்சார நேசித்து ‘கடவுளுடைய சட்டத்தைத் தொடர்ந்து கடைப்பிடித்தால்,’ எந்தவித பயமோ சங்கோஜமோ இல்லாமல் சாட்சி கொடுப்பதற்குத் தைரியம் கிடைக்கும். (சங்கீதம் 119:43, 44; NW) கடவுளுடைய வார்த்தையை ஊக்கமாய் படிப்பது ‘அவருடைய நினைப்பூட்டுதல்களை ராஜாக்களுக்கு முன்பு பேசுவதற்கு’ நம்மை ஆயத்தமாக்குகிறது. (சங்கீதம் 119:46, NW) பொருத்தமான விஷயங்களைத் தகுந்த முறையில் சொல்வதற்கு ஜெபமும் யெகோவாவின் ஆவியும் நமக்கு உதவும். (மத்தேயு 10:16-20; கொலோசெயர் 4:6) முதல் நூற்றாண்டிலிருந்த ஆட்சியாளர்களுக்கு கடவுளுடைய நினைப்பூட்டுதல்களை பவுல் தைரியத்தோடு பேசினார். உதாரணமாக, ரோம ஆளுநர் பேலிக்ஸிடம் அவர் சாட்சி கொடுத்தார், அப்போது ‘கிறிஸ்துவைப் பற்றும் விசுவாசத்தைக் குறித்து அவர் சொல்லக் கேட்டார்.’ (அப்போஸ்தலர் 24:24, 25) ஆளுநர் பெஸ்துவிடமும் அகரிப்பா ராஜாவிடமும் பவுல் சாட்சி கொடுத்தார். (அப்போஸ்தலர் 25:22–26:32) யெகோவாவின் உதவியால், ‘சுவிசேஷத்தைக் குறித்து வெட்கப்படாமல்’ பிரசங்கிக்கும் தைரியமுள்ள சாட்சிகளாக நாமும் விளங்க முடியும்.—ரோமர் 1:16.
கடவுளுடைய வார்த்தை நமக்கு ஆறுதலளிக்கிறது
15. மற்றவர்கள் நம்மை ஏளனம் செய்கையில் கடவுளுடைய வார்த்தை எப்படி ஆறுதலளிக்கிறது?
15 யெகோவாவின் வார்த்தை என்றும் நமக்கு ஆறுதலளிக்கிறது. (சங்கீதம் 119:49-56) நமக்கு அதிகமாய் ஆறுதல் தேவைப்படும் சந்தர்ப்பங்கள் இருக்கின்றன. யெகோவாவின் சாட்சிகளாக நாம் தைரியமாய் பேசினாலுங்கூட, “அகந்தைக்காரர்”—கடவுளிடம் கர்வத்துடன் நடப்பவர்கள்—சில சமயங்களில் நம்மை ‘மிகவும் பரியாசம் பண்ணுகிறார்கள்.’ (சங்கீதம் 119:51) என்றாலும், ஜெபிக்கும்போது கடவுளுடைய வார்த்தையில் சொல்லப்பட்டுள்ள நம்பிக்கையூட்டும் காரியங்களை நாம் நினைத்துப் பார்க்கலாம், இவ்வாறு ‘நாம் ஆறுதலை கண்டடையலாம்.’ (சங்கீதம் 119:52, NW) நாம் வேண்டிக் கொள்ளும்போது, இக்கட்டான ஒரு சூழ்நிலையில் நமக்குத் தேவைப்படும் ஆறுதலையும் தைரியத்தையும் தருவதற்கு வேதப்பூர்வ சட்டம் அல்லது நியமம் ஒன்று நம்முடைய நினைவுக்கு வரலாம்.
16. துன்புறுத்தலின் மத்தியிலும் கடவுளுடைய ஊழியர்கள் என்ன செய்யவில்லை?
16 சங்கீதக்காரரை ஏளனம் செய்தவர்கள் இஸ்ரவேலரே, அதாவது கடவுளுக்கு ஒப்புக்கொடுத்திருந்த ஒரு ஜனத்தின் அங்கத்தினர்களே. அது என்னே ஒரு வெட்கக்கேடு! நாமோ அவர்களைப் போலின்றி, கடவுளுடைய சட்டத்திலிருந்து ஒருபோதும் வழிவிலகிப் போகாதபடி உறுதியாக இருப்போமாக. (சங்கீதம் 119:51) கடவுளுடைய ஊழியர்கள் ஆயிரக்கணக்கானோர் நாசிக்களின் துன்புறுத்தலையும் அது போன்ற பிற கஷ்டங்களையும் பல ஆண்டுகள் அனுபவித்திருக்கிறார்கள்; என்றாலும், கடவுளுடைய வார்த்தையில் காணப்படும் சட்டங்களையும் நியமங்களையும் விட்டு வழிவிலகிச் செல்லவில்லை. (யோவான் 15:18-21) அதோடு, யெகோவாவுக்குக் கீழ்ப்படிவது ஒரு பாரமல்ல, ஏனென்றால் அவருடைய கட்டளைகள் நமக்கு ஆறுதலளிக்கும் இன்னிசைகள் போல் இருக்கின்றன.—சங்கீதம் 119:54; 1 யோவான் 5:3.
யெகோவாவின் வசனத்திற்காக நன்றியுடன் இருங்கள்
17. கடவுளுடைய வசனத்தின் மீதுள்ள போற்றுதல் என்ன செய்யும்படி நம்மை உந்துவிக்கிறது?
17 கடவுளுடைய வசனத்தின்படி நடப்பதன் மூலம் நாம் அதற்கு நன்றியுணர்வை காட்டுகிறோம். (சங்கீதம் 119:57-64) இந்தச் சங்கீதக்காரன், ‘யெகோவாவின் வசனத்தைக் கைக்கொள்வதாக வாக்குறுதி அளித்தார்.’ ‘கடவுளுடைய நீதியுள்ள நியாயத்தீர்ப்புகளுக்காக’ அவருக்கு நன்றி செலுத்த ‘நள்ளிரவிலும் அவர் விழித்தெழுந்தார்.’ நாம் இரவில் விழித்தெழுந்தால், ஜெபத்தில் கடவுளுக்கு நன்றி செலுத்த அது எப்பேர்ப்பட்ட சிறந்த வாய்ப்பு! (சங்கீதம் 119:57, 62, NW) கடவுளுடைய வசனத்தின் மீது நமக்கு இருக்கும் போற்றுதல் தெய்வீக போதனையைத் தேட நம்மை உந்துவிக்கிறது; அதோடு ‘யெகோவாவுக்குப் பயப்படுகிறவர்களின்’—கடவுளுக்குப் பயபக்தியாக இருப்பவர்களின்—மகிழ்ச்சியுள்ள ‘தோழராகவும்’ நம்மை ஆக்குகிறது. (சங்கீதம் 119:63, 64) இதைவிட மேம்பட்ட தோழமையை இப்பூமியில் யார் கண்டடைய முடியும்?
18. ‘பொல்லாதவர்களின் கயிறுகள் நம்மைச் சுற்றிக்கொள்கையில்’ நம் ஜெபங்களுக்கு யெகோவா எவ்வாறு பதிலளிக்கிறார்?
18 நாம் யெகோவாவிடம் முழு இருதயத்தோடு ஜெபித்து நமக்கு போதிக்கும்படி மனத்தாழ்மையுடன் கேட்கும்போது, நாம் உண்மையில் அவருடைய தயவை பெற்றுக்கொள்ளும் எண்ணத்துடன் அவரை ‘சாந்தப்படுத்துகிறோம்.’ முக்கியமாக, ‘பொல்லாதவர்களின் கயிறுகள் நம்மைச் சுற்றிக்கொள்கையில்’ நாம் ஜெபிக்க வேண்டும். (சங்கீதம் 119:58, 61, NW) நம்மை கட்டுப்படுத்தி வைக்கிற சத்துருவின் கயிறுகளை அறுத்தெறிந்து, ராஜ்ய பிரசங்கிப்பு வேலையையும் சீஷராக்கும் வேலையையும் தொடர்ந்து செய்வதற்கு யெகோவா நம்மை விடுவிக்க முடியும். (மத்தேயு 24:14; 28:19, 20) நம்முடைய வேலைக்குத் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நாடுகளில் மீண்டும் மீண்டும் இது நிரூபித்துக் காட்டப்பட்டுள்ளது.
கடவுளுடைய வசனத்தில் விசுவாசம் வையுங்கள்
19, 20. உபத்திரவப்படுவது எப்படி நல்லதாக இருக்க முடியும்?
19 கடவுளிலும் அவருடைய வசனத்திலும் விசுவாசம் வைப்பது வேதனையைச் சகிக்கவும் அவருடைய சித்தத்தைத் தொடர்ந்து செய்யவும் நமக்கு உதவுகிறது. (சங்கீதம் 119:65-72) அகந்தையுள்ளவர்கள் அவருக்கு விரோதமாய் ‘பொய்களை பிணைத்திருக்கிறபோதிலும்,’ “நான் உபத்திரவப்பட்டது எனக்கு நல்லது” என்று சங்கீதக்காரன் பாடினார். (சங்கீதம் 119:66, 69, 71) துன்பப்படுவது யெகோவாவின் ஊழியருக்கு எப்படி நல்லதாக இருக்க முடியும்?
20 நாம் துன்பப்படுகையில், சந்தேகமில்லாமல் யெகோவாவிடம் ஊக்கமாய் வேண்டுதல் செய்கிறோம்; அது நம்மை அவரிடம் நெருங்க இழுக்கிறது. கடவுளுடைய வார்த்தையைப் படிப்பதற்கு அதிக நேரத்தை நாம் ஒருவேளை செலவிடலாம்; மேலும் அதை கடைப்பிடிப்பதற்கு அதிக முயற்சியும் செய்யலாம். இது அதிக மகிழ்ச்சியான வாழ்க்கையில் விளைவடைகிறது. ஆனால், துன்பத்திற்கு நாம் பிரதிபலிக்கும் விதம் பொறுமையின்மை, பெருமை போன்ற விரும்பத்தகாத குணங்களை வெளிப்படுத்தினால் என்ன செய்வது? ஊக்கமான ஜெபத்துடனும் கடவுளுடைய வார்த்தை மற்றும் ஆவியின் உதவியுடனும் அத்தகைய குறைபாடுகளை நாம் மேற்கொண்டு இன்னும் முழுமையாக ‘புதிய ஆளுமையை தரித்துக்கொள்ளலாம்.’ (கொலோசெயர் 3:9-14, NW) அதோடு, துன்பத்தைச் சகிக்கும்போது நம்முடைய விசுவாசமும் பலப்படுகிறது. (1 பேதுரு 1:6, 7) பவுல் தனக்கு நேரிட்ட துன்பங்களிலிருந்து பயனடைந்தார், ஏனென்றால் யெகோவாவை அதிகமாக சார்ந்திருக்க அவருக்கு அவை உதவி செய்தன. (2 கொரிந்தியர் 1:8-10) துன்பம் நம் மீது நல்ல பாதிப்பை ஏற்படுத்த நாம் அனுமதிக்கிறோமா?
எப்போதும் யெகோவாவில் நம்பிக்கை வையுங்கள்
21. அகங்காரிகளை கடவுள் வெட்கப்படுத்துகையில் என்ன நடக்கிறது?
21 யெகோவாவில் நம்பிக்கை வைப்பதற்கு நல்ல ஆதாரத்தை கடவுளுடைய வசனம் நமக்கு தருகிறது. (சங்கீதம் 119:73-80) நம்முடைய படைப்பாளர் மீது உண்மையில் நம்பிக்கை வைத்தால், நாம் வெட்கப்பட வேண்டிய அவசியமே இல்லை. என்றாலும், மற்றவர்களுடைய செயல்களின் காரணமாக நமக்கு ஆறுதல் தேவைப்படுகிறது, அதனால் “அகங்காரிகள் . . . வெட்கப்பட்டு போவார்களாக” என ஜெபிப்பதற்கு நாம் தூண்டப்படலாம். (சங்கீதம் 119:76-78) அப்படிப்பட்டவர்களை யெகோவா வெட்கப்படுத்துகையில், அவர்களுடைய பொல்லாத வழிகள் அம்பலமாகின்றன; அவருடைய புனித பெயர் பரிசுத்தமாகிறது. கடவுளுடைய ஜனங்களைத் துன்புறுத்துவோருக்கு உண்மையில் எந்த லாபமுமில்லை என்பதில் நாம் நிச்சயமாக இருக்கலாம். உதாரணமாக, கடவுள் மீது முழு இருதயத்தோடு நம்பிக்கை வைத்திருக்கும் யெகோவாவின் சாட்சிகளை அவர்கள் ஒருபோதும் அடியோடு அழித்ததில்லை, அழிக்கவும் போவதில்லை.—நீதிமொழிகள் 3:5, 6.
22. என்ன கருத்தில், ‘புகையிலுள்ள துருத்தியைப் போல்’ சங்கீதக்காரன் இருந்தார்?
22 நாம் துன்புறுத்தப்படுகையில் கடவுளுடைய வார்த்தை அவர் மீது நம்முடைய நம்பிக்கையைப் பலப்படுத்துகிறது. (சங்கீதம் 119:81-88) அகந்தையுள்ளவர்கள் தன்னை துன்புறுத்தியபோது, ‘புகையிலுள்ள துருத்தியைப் போல்’ சங்கீதக்காரன் உணர்ந்தார். (சங்கீதம் 119:83, 86) பைபிள் காலங்களில், தண்ணீர், திராட்சரசம் மற்றும் பிற திரவங்களை நிரப்பி வைக்க மிருகங்களின் தோலில் செய்யப்பட்ட குப்பிகள் பயன்படுத்தப்பட்டன. உபயோகிக்கப்படாத சமயத்தில், புகைப்போக்கி இல்லாத அறையில் நெருப்புக்கு அருகில் தொங்க விடும்போது இந்தக் குப்பிகள் சுருங்கிவிடலாம். துன்பமோ துன்புறுத்துதலோ ‘புகையிலுள்ள துருத்தியைப் போல்’ உங்களை எப்போதாவது உணரச் செய்கிறதா? அப்படியானால், யெகோவா மீது நம்பிக்கை வைத்து, “உமது கிருபையின்படியே என்னை உயிர்ப்பியும்; அப்பொழுது நான் உம்முடைய வாக்கின் சாட்சியைக் காத்து நடப்பேன்” என்று ஜெபியுங்கள்.—சங்கீதம் 119:88.
23. சங்கீதம் 119:1-88-ஐ ஆராய்கையில் நாம் எதை சிந்தித்தோம், சங்கீதம் 119:89-176-ஐ படிப்பதற்கு எதிர்பார்க்கையில் நம்மை நாம் என்ன கேட்டுக்கொள்ளலாம்?
23 யெகோவா தம்முடைய ஊழியர்களிடம் அன்புள்ள தயவை காட்டுகிறார், ஏனென்றால் தமது வார்த்தையில் நம்பிக்கை வைத்து தமது பிரமாணங்கள், நினைப்பூட்டுதல்கள், கட்டளைகள் மற்றும் சட்டங்கள் மீது அவர்கள் வாஞ்சையாக இருக்கிறார்கள் என்பதை சங்கீதம் 119-ன் முதல் பாதி பாகம் காட்டுகிறது. (சங்கீதம் 119:16, 47, 64, 70, 77, 88) தங்களையே அர்ப்பணித்து தமது வசனத்தின்படி நடப்பவர்கள் மீது அவர் பிரியப்படுகிறார். (சங்கீதம் 119:9, 17, 41, 42) ஊக்கமூட்டும் இந்தச் சங்கீதத்தின் மீதி பாகத்தைப் படிப்பதற்கு நீங்கள் ஆவலோடு எதிர்பார்க்கையில், உங்களை நீங்களே இவ்வாறு கேட்டுக்கொள்ளலாம்: ‘யெகோவாவின் வார்த்தை என் பாதைக்கு வெளிச்சம் தரும்படி நான் உண்மையில் அனுமதிக்கிறேனா?’
[அடிக்குறிப்பு]
a கடவுளுடைய வார்த்தையாகிய பைபிளின் முழு பொருளடக்கத்திற்கும் அல்ல, ஆனால் யெகோவாவின் செய்திக்கே குறிப்புரை கொடுக்கப்பட்டுள்ளது.
நீங்கள் எவ்வாறு பதிலளிப்பீர்கள்?
• மெய்யான சந்தோஷம் எதன் மீது சார்ந்துள்ளது?
• எவ்வாறு யெகோவாவின் வசனம் நம்மை ஆன்மீக ரீதியில் சுத்தமாய் வைக்கிறது?
• எவ்வழிகளில் கடவுளுடைய வார்த்தை தைரியத்தையும் ஆறுதலையும் அளிக்கிறது?
• யெகோவாவின் மீதும் அவருடைய வசனத்தின் மீதும் நமக்கு ஏன் விசுவாசம் தேவை?
[பக்கம் 11-ன் படங்கள்]
ரூத்தும் ராகாபும் பாபிலோனுக்கு நாடு கடத்தப்பட்டிருந்த எபிரெய வாலிபர்களும் ‘கடவுளுடைய வசனத்தின்படி தங்களைக் காத்துக்கொண்டார்கள்’
[பக்கம் 12-ன் படம்]
‘கடவுளுடைய நினைப்பூட்டுதல்களை ராஜாக்களுக்கு முன்பு’ பவுல் தைரியமாய் பேசினார்