லேவியராகமம்
20 பின்பு யெகோவா மோசேயைப் பார்த்து, 2 “நீ இஸ்ரவேலர்களிடம் சொல்ல வேண்டியது என்னவென்றால், ‘இஸ்ரவேலைச் சேர்ந்த ஒருவனோ இஸ்ரவேலில் குடியிருக்கிற மற்ற தேசத்தைச் சேர்ந்த ஒருவனோ மோளேகு தெய்வத்துக்குத் தன் பிள்ளையை அர்ப்பணித்தால்,* அவன் கண்டிப்பாகக் கொல்லப்பட வேண்டும்.+ அவனை நீங்கள் கல்லெறிந்து கொல்ல வேண்டும். 3 தன்னுடைய பிள்ளையை மோளேகுக்குக் கொடுக்கிறவன் என் பரிசுத்த இடத்தின் புனிதத்தைக் கெடுக்கிறான், என் பரிசுத்த பெயரைக் களங்கப்படுத்துகிறான். அதனால் நான் அவனை ஒதுக்கித்தள்ளி, அவனை அழித்துவிடுவேன்.+ 4 அந்த மனுஷன் தன்னுடைய பிள்ளையை மோளேகுக்குக் கொடுப்பதைப் பார்த்தும் நீங்கள் அதைக் கண்டுகொள்ளாமலும், அவனைக் கொல்லாமலும் விட்டுவிட்டால்,+ 5 நான் நிச்சயம் அவனையும் அவனுடைய குடும்பத்தையும் ஒதுக்கித்தள்ளுவேன்.+ அவனை மட்டுமல்லாமல், அவனோடு சேர்ந்து மோளேகை வணங்கி எனக்குத் துரோகம் செய்த எல்லாரையும் அழித்துவிடுவேன்.
6 ஆவிகளோடு பேசுகிறவர்களிடமும்+ குறிசொல்கிறவர்களிடமும்+ போவதன் மூலம் எனக்குத் துரோகம் செய்கிறவனை நான் ஒதுக்கித்தள்ளி, அவனை அழித்துவிடுவேன்.+
7 நீங்கள் உங்களைப் புனிதப்படுத்திக்கொண்டு, பரிசுத்தமாக இருக்க வேண்டும்.+ ஏனென்றால், நான் உங்களுடைய கடவுளாகிய யெகோவா. 8 நீங்கள் என் சட்டதிட்டங்களுக்குக் கீழ்ப்படிந்து நடக்க வேண்டும்.+ உங்களைப் புனிதப்படுத்துகிற யெகோவா நானே.+
9 அப்பாவையோ அம்மாவையோ ஒருவன் சபித்தால் அவன் கண்டிப்பாகக் கொல்லப்பட வேண்டும்.+ அப்பாவையோ அம்மாவையோ சபித்ததால், அவனுடைய சாவுக்கு அவன்தான் பொறுப்பு.
10 ஒருவன் இன்னொருவனுடைய மனைவியோடு உறவுகொண்டு தன் மனைவிக்குத் துரோகம் செய்தால், தவறு செய்த இரண்டு பேரும் கண்டிப்பாகக் கொல்லப்பட வேண்டும்.+ 11 தன்னுடைய அப்பாவின் மனைவியோடு உடலுறவுகொள்கிறவன் தன் அப்பாவை அவமானப்படுத்துகிறான்.+ அவனும் அவளும் கண்டிப்பாகக் கொல்லப்பட வேண்டும். அவர்களுடைய சாவுக்கு அவர்கள்தான் பொறுப்பு. 12 ஒருவன் தன்னுடைய மருமகளோடு உடலுறவுகொண்டால், அவர்கள் இரண்டு பேரும் கண்டிப்பாகக் கொல்லப்பட வேண்டும். அவர்கள் செய்தது இயற்கைக்கு முரணானது. அவர்களுடைய சாவுக்கு அவர்கள்தான் பொறுப்பு.+
13 ஒருவன் பெண்ணோடு உடலுறவுகொள்வதுபோல் ஆணோடு உடலுறவுகொண்டால், அது அருவருப்பானது.+ அவர்கள் இரண்டு பேரும் கண்டிப்பாகக் கொல்லப்பட வேண்டும். அவர்களுடைய சாவுக்கு அவர்கள்தான் பொறுப்பு.
14 ஒருவன் ஒருத்தியைக் கல்யாணம் செய்துகொண்டு அவளுடைய தாயோடும் உடலுறவுகொண்டால், அது வெட்கங்கெட்ட செயல்.+ அவனும் அவர்களும் கொல்லப்பட்டு, எரிக்கப்பட வேண்டும்.+ அப்போதுதான், இப்படிப்பட்ட வெட்கங்கெட்ட செயல் உங்கள் மத்தியில் நடக்காது.
15 ஒருவன் ஒரு மிருகத்தோடு உறவுகொண்டால் அவன் கண்டிப்பாகக் கொல்லப்பட வேண்டும், அந்த மிருகமும் கொல்லப்பட வேண்டும்.+ 16 ஒரு பெண் ஒரு மிருகத்தோடு உறவுகொண்டால்,+ அவளையும் அந்த மிருகத்தையும் நீங்கள் கொல்ல வேண்டும். மிருகத்தோடு உறவுகொள்கிறவர்கள் கண்டிப்பாகக் கொல்லப்பட வேண்டும். அவர்கள் சாவுக்கு அவர்கள்தான் பொறுப்பு.
17 ஒருவன் தன்னுடைய சகோதரியோடு, அதாவது தன்னுடைய அப்பாவுக்கோ அம்மாவுக்கோ பிறந்தவளோடு, உடலுறவுகொண்டால் அது வெட்கக்கேடு.+ அவர்கள் இரண்டு பேரும் ஜனங்களின் கண் முன்னால் கொல்லப்பட வேண்டும். அவன் தன்னுடைய சகோதரியை அவமானப்படுத்திய குற்றத்துக்காகத் தண்டிக்கப்பட வேண்டும்.
18 மாதவிலக்கு ஏற்பட்ட ஒரு பெண்ணோடு ஒருவன் உடலுறவுகொண்டால், அவர்கள் இரண்டு பேரும் இரத்தத்தின் புனிதத்தை அவமதிக்கிறார்கள் என்று அர்த்தம்.+ அவர்கள் இரண்டு பேரும் கொல்லப்பட வேண்டும்.
19 உங்களுடைய அம்மாவின் சகோதரியோடு அல்லது அப்பாவின் சகோதரியோடு உடலுறவுகொள்ளக் கூடாது. ஏனென்றால், அது இரத்த சொந்தத்தை அவமானப்படுத்துவதாக இருக்கும்.+ அந்தக் குற்றத்துக்காக அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். 20 தன் அப்பாவுடைய சகோதரனின் மனைவியோடு உடலுறவுகொள்கிறவன் தன் அப்பாவுடைய சகோதரனை அவமானப்படுத்துகிறான்.+ அவனும் அவளும் அந்தப் பாவத்துக்காகத் தண்டிக்கப்பட வேண்டும். அவர்களுக்குப் பிள்ளைகள் பிறக்கக் கூடாது, அவர்கள் கொல்லப்பட வேண்டும். 21 ஒருவன் தன்னுடைய சகோதரனின் மனைவியோடு உடலுறவுகொண்டால், அது கேவலமான செயல்.+ அவன் தன்னுடைய சகோதரனை அவமானப்படுத்துகிறான். அவர்களுக்குப் பிள்ளைகள் பிறக்கக் கூடாது, அவர்கள் கொல்லப்பட வேண்டும்.
22 என்னுடைய எல்லா சட்டதிட்டங்களுக்கும் நீதித்தீர்ப்புகளுக்கும் நீங்கள் கீழ்ப்படிந்து நடக்க வேண்டும்.+ அப்போதுதான், நீங்கள் குடியிருப்பதற்காக நான் கூட்டிக்கொண்டு போகும் தேசத்திலிருந்து துரத்தப்பட மாட்டீர்கள்.+ 23 நான் உங்களைவிட்டு விரட்டியடிக்கிற ஜனங்களின் சட்டதிட்டங்களை* நீங்கள் பின்பற்றக் கூடாது.+ இப்படிப்பட்ட எல்லா செயல்களையும் அவர்கள் செய்திருக்கிறார்கள், அவர்களை நான் அருவருக்கிறேன்.+ 24 அதனால்தான் நான் உங்களிடம், “அவர்களுடைய தேசத்தை நீங்கள் சொந்தமாக்கிக்கொள்வீர்கள். பாலும் தேனும் ஓடுகிற அந்தத் தேசத்தை நான் உங்களுக்குக் கொடுப்பேன்.+ மற்ற எல்லா ஜனங்களிலிருந்தும் உங்களைப் பிரித்து வைத்திருக்கிற உங்கள் கடவுளாகிய யெகோவா நானே”+ என்று சொன்னேன். 25 சுத்தமான மிருகத்துக்கும் அசுத்தமான மிருகத்துக்கும், சுத்தமான பறவைக்கும் அசுத்தமான பறவைக்கும் உள்ள வித்தியாசத்தை நீங்கள் தெரிந்திருக்க வேண்டும்.+ அசுத்தமென்று நான் விலக்கிய மிருகத்தாலோ பறவையாலோ ஊரும் பிராணியாலோ நீங்கள் உங்களை அருவருப்பானவர்களாக ஆக்கிக்கொள்ளக் கூடாது.+ 26 யெகோவாவாகிய நான் பரிசுத்தமாக இருப்பதால், நீங்களும் என்முன் பரிசுத்தமாக இருக்க வேண்டும்.+ நீங்கள் என் சொந்த ஜனங்களாய் இருப்பதற்காக மற்ற எல்லா ஜனங்களிலிருந்தும் உங்களைப் பிரித்து வைத்திருக்கிறேன்.+
27 ஆவிகளோடு பேசுகிற அல்லது குறிசொல்கிற ஒருவனோ ஒருத்தியோ நிச்சயம் கொல்லப்பட வேண்டும்.+ ஜனங்கள் அவர்களைக் கல்லெறிந்து கொல்ல வேண்டும். அவர்களுடைய சாவுக்கு அவர்கள்தான் பொறுப்பு’” என்றார்.