உங்கள் ஜெபம் மணம் கமழும் ‘தூபம்போல் இருக்கிறதா’?
‘என் ஜெபம் உமது சந்நிதியில் தூபமாக இருப்பதாக.’—சங்கீதம் 141:2, NW.
1, 2. தூபம் காட்டுவது எதை அர்த்தப்படுத்தியது?
யெகோவா தேவன் தமது தீர்க்கதரிசியாகிய மோசேயிடம் இஸ்ரவேலின் ஆசரிப்பு கூடாரத்தில் பயன்படுத்த பரிசுத்த தூபத்தைத் தயாரிக்க சொன்னார். நான்கு வித பரிமளப் பொருட்களால் அதைத் தயாரிக்கச் சொன்னார். (யாத்திராகமம் 30:34-38) அதன் சுகந்த வாசனை கமகமவென்றிருந்தது.
2 இஸ்ரவேல் தேசத்தாரோடு செய்யப்பட்ட நியாயப்பிரமாண உடன்படிக்கையின் பிரகாரம் தினந்தோறும் தூபம் காட்டப்பட்டது. (யாத்திராகமம் 30:7, 8) அதற்கு ஏதாவது விசேஷ முக்கியத்துவம் இருந்ததா? ஆம் இருந்தது. சங்கீதக்காரன் இப்படி பாடினார்: “[யெகோவா தேவனே] என் ஜெபம் உமது சந்நிதியில் தூபமாகவும், என் கரம் ஏந்துதல் மாலைநேர தானியப் பலியாகவும் இருப்பதாக.” (சங்கீதம் 141:2, NW) வெளிப்படுத்துதல் புத்தகத்தில், கடவுளது பரலோக சிங்காசனத்தைச் சுற்றியுள்ளவர்கள் தூபம் நிறைந்த பொற்கலசங்களைப் பிடித்திருப்பதாக அப்போஸ்தலனாகிய யோவான் விவரிக்கிறார். ‘பரிசுத்தவான்களுடைய ஜெபங்களே அந்தத் தூபவர்க்கம்’ என்றும் சொல்கிறார். (வெளிப்படுத்துதல் 5:8, NW) ஆகவே சுகந்த வாசனையுள்ள தூபத்தைக் காட்டுதல், அல்லும் பகலும் யெகோவாவின் ஊழியக்காரர்கள் செலுத்தும், விரும்பத்தக்க ஜெபங்களைக் குறித்தது.—1 தெசலோனிக்கேயர் 3:10; எபிரெயர் 5:7.
3. ‘கடவுளது சந்நிதியில் நம் ஜெபங்களை தூபமாய் செலுத்த’ உதவுவது எது?
3 நாம் ஏறெடுக்கும் ஜெபங்கள் கடவுளுக்கு விரும்பத்தக்கதாக இருக்க, இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபம் செய்யவேண்டும். (யோவான் 16:23, 24) ஆனால் நம் ஜெபத்தை மணம் கமழ வைப்பது எப்படி? யெகோவாவின் சந்நிதியில் நம் ஜெபங்களை தூபமாய் செலுத்த, வேதத்திலுள்ள சில உதாரணங்களைக் கவனிப்பது உதவும்.—நீதிமொழிகள் 15:8.
விசுவாசத்தோடு ஜெபம் பண்ணுங்கள்
4. விசுவாசத்திற்கும், கடவுளுக்கு பிரியமான ஜெபத்திற்கும் என்ன சம்பந்தம்?
4 நம் ஜெபங்கள் சுகந்த வாசனையுள்ள தூபமாய் மேலெழும்பி கடவுளை அடைய, விசுவாசத்தோடு ஜெபம் பண்ண வேண்டும். (எபிரெயர் 11:6) ஆவிக்குரிய கருத்தில் சுகவீனமுள்ளவர்கள் கிறிஸ்தவ மூப்பர்கள் தரும் வேதாகம உதவியை ஏற்றுக்கொள்ளும்போது, மூப்பர்களது “விசுவாசமுள்ள ஜெபம் பிணியாளியை இரட்சிக்கும்.” (யாக்கோபு 5:15) விசுவாசத்தோடு செய்யும் ஜெபங்களை நம் பரலோக தகப்பன் காதுகுளிரக் கேட்கிறார். அதேவிதமாய் ஜெபசிந்தையோடு அவரது வார்த்தையைப் படிப்பதைப் பார்த்தும் மகிழ்கிறார். “நான் பிரியப்படுகிற உமது கற்பனைகளுக்குக் கையெடுப்பேன், உமது பிரமாணங்களைத் தியானிப்பேன். உத்தம நிதானிப்பையும் அறிவையும் எனக்குப் போதித்தருளும், உம்முடைய கற்பனைகளின்பேரில் விசுவாசமாயிருக்கிறேன்” என பாடியபோது சங்கீதக்காரன் அருமையான மனநிலையைக் காட்டினார். (சங்கீதம் 119:48, 66) அவரைப் போலவே நாமும், மனத்தாழ்மையோடு ஜெபத்தில் ‘கரம் ஏந்தி,’ கடவுளது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவதன் மூலம் விசுவாசத்தைக் காட்டுவோமாக.
5. ஞானத்தில் குறைவுபடும்போது என்ன செய்யவேண்டும்?
5 பிரச்சினையை சமாளிக்கத் தெரியாத ஒரு சூழ்நிலை நமக்கு வரலாம். உதாரணத்திற்கு, ஒரு குறிப்பிட்ட பைபிள் தீர்க்கதரிசனம் உண்மையிலேயே இப்போது நிறைவேறிக்கொண்டிருக்கிறதா என்ற சந்தேகம் வரலாம். அச்சந்தர்ப்பத்தில், ஆவிக்குரிய விதத்தில் தடுமாறிவிடுவதற்குப் பதிலாக ஞானத்திற்காக ஜெபிப்போமாக. (கலாத்தியர் 5:7, 8; யாக்கோபு 1:5-8) கடவுள் ஏதோ அற்புதமான விதத்தில் நமக்கு பதிலளிப்பார் என நாம் எதிர்பார்க்க முடியாது. நம் ஜெபங்கள் உள்ளப்பூர்வமானவை என காட்ட அவர் பொதுவாக நம்மிடத்தில் எதிர்பார்ப்பவற்றை எல்லாம் செய்ய வேண்டும். நம் விசுவாசத்தைப் பலப்படுத்தும் விதத்தில், “உண்மையும் விவேகமுமுள்ள அடிமை” வகுப்பார் அளிக்கும் பிரசுரங்களின் உதவியோடு பைபிளைப் படிப்பது அவசியம். (மத்தேயு 24:45-47, NW; யோசுவா 1:7, 8) சபைக் கூட்டங்களுக்கு தவறாமல் சென்று அறிவை வளர்த்துக்கொள்ளவும் வேண்டும்.—எபிரெயர் 10:24, 25.
6. (அ) நம் நாளைப் பற்றியும் பைபிள் தீர்க்கதரிசனங்களின் நிறைவேற்றத்தைப் பற்றியும் நாம் அனைவரும் எதை உணரவேண்டும்? (ஆ) யெகோவாவின் நாமம் பரிசுத்தமாக்கப்பட நாம் ஜெபிப்பதோடு வேறெதையும் செய்ய வேண்டும்?
6 சில கிறிஸ்தவர்களது நாட்டங்களையும் வேலைகளையும் பார்த்தால், நாம் இப்போது ‘முடிவுகாலத்தில்’ வாழ்கிறோம் என்பதை மறந்துவிட்டார்கள் என்றே தெரிகிறது. (தானியேல் 12:4) கிறிஸ்துவின் பிரசன்னம் 1914-ல் ஆரம்பமாகிவிட்டது; யெகோவா அவரை பரலோக ராஜாவாக நியமித்த அச்சமயம் முதல் சத்துருக்களின் மத்தியில் ஆட்சி செய்து வருகிறார் என்ற வேதப்பூர்வ சான்றுகளில் இவர்கள் விசுவாசம் வைத்திருக்கிறார்கள்தான். ஆனால் அந்த விசுவாசத்தைத் தூண்டியெழுப்ப அல்லது இன்னும் பலப்படுத்த வேண்டுமென இவர்களுக்காக உடன் விசுவாசிகள் ஜெபம் செய்யலாம். (சங்கீதம் 110:1, 2; மத்தேயு 24:3) ‘மகா பாபிலோன்’ அழியும், அதன்பின் யெகோவாவின் மக்களை மாகோகு தேசத்து கோகுவான சாத்தான் தாக்கும்போது அர்மகெதோன் யுத்தத்தில் அவர்களை சர்வவல்லமையுள்ள தேவன் காப்பாற்றுவார் என முன்னறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்தச் சம்பவங்கள் அனைத்தும் கிடுகிடுவென கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்து, திடுக்கிட வைக்கும் என்பதை எல்லாரும் உணரவேண்டும். (வெளிப்படுத்துதல் 16:14, 16; 18:1-5; எசேக்கியேல் 38:18-23) ஆகவே ஆவிக்குரிய விதத்தில் விழிப்புடன் இருக்க கடவுளது உதவிக்காக ஜெபிப்போமாக. யெகோவாவின் நாமம் பரிசுத்தமாவதற்கும், அவரது ராஜ்யம் வருவதற்காகவும், அவரது சித்தம் பரலோகத்தில் செய்யப்படுவதுபோல் பூமியில் செய்யப்படுவதற்கும் நாம் அனைவரும் ஊக்கமாக ஜெபிப்போமாக. ஆம், தொடர்ந்து விசுவாசத்தோடு இருந்து, நம் ஜெபங்கள் உள்ளப்பூர்வமானவை என்பதை வெளிக்காட்டுவோமாக. (மத்தேயு 6:9, 10) யெகோவாவை நேசிக்கும் அனைவரும் அவரது ராஜ்யத்தையும் அவரது நீதியையும் முதலில் தேடி, முடிவு வருவதற்குமுன் நற்செய்தியைப் பிரசங்கிப்பதில் முழுமையாய் பங்குகொள்வோமாக.—மத்தேயு 6:33; 24:14.
யெகோவாவைத் துதித்து, நன்றி சொல்லுங்கள்
7. 1 நாளாகமம் 29:10-13-ல் பதிவுசெய்யப்பட்டிருக்கும் தாவீதின் ஜெபத்தில் உங்களைக் கவர்ந்த அம்சம் எது?
7 ‘நம் ஜெபங்களை தூபமாக செலுத்துவதற்கு’ முக்கியமான வழி, கடவுளை மனப்பூர்வமாக துதிப்பதும் நன்றி செலுத்துவதுமாகும். யெகோவாவின் ஆலயத்தைக் கட்டுவதற்காக தாவீது ராஜாவும் இஸ்ரவேலர்களும் நன்கொடை அளித்தபோது தாவீது இப்படிப்பட்ட ஜெபத்தை செய்தார். “எங்கள் தகப்பனாகிய இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தாவே, சதாகாலங்களிலும் தேவரீருக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக. கர்த்தாவே, மாட்சிமையும் வல்லமையும் மகிமையும் ஜெயமும் மகத்துவமும் உம்முடையவைகள்; வானத்திலும் பூமியிலும் உள்ளவைகளெல்லாம் உம்முடையவைகள்; கர்த்தாவே, ராஜ்யமும் உம்முடையது; தேவரீர் எல்லாருக்கும் தலைவராய் உயர்ந்திருக்கிறீர். ஐசுவரியமும் கனமும் உம்மாலே வருகிறது; தேவரீர் எல்லாவற்றையும் ஆளுகிறவர்; உம்முடைய கரத்திலே சத்துவமும் வல்லமையும் உண்டு; எவரையும் மேன்மைப்படுத்தவும் பலப்படுத்தவும் உம்முடைய கரத்தினால் ஆகும். இப்போதும் எங்கள் தேவனே, நாங்கள் உமக்கு ஸ்தோத்திரம் செலுத்தி, உமது மகிமையுள்ள நாமத்தைத் துதிக்கிறோம்” என்றார்.—1 நாளாகமம் 29:10-13.
8. (அ) சங்கீதங்கள் 148-லிருந்து 150 வரையுள்ள துதிப்பாடல்களில் உங்கள் இருதயத்தைத் தொட்டது எது? (ஆ) சங்கீதம் 27:4-ல் சொல்லப்பட்ட விதமாகவே நாம் உணர்ந்தால் என்ன செய்வோம்?
8 என்னே அழகான வார்த்தைகளால் துதியும் நன்றியும் செலுத்தினார்! இந்தளவு சொல் நயத்தோடு நம்மால் ஜெபம் செய்ய முடியாதிருக்கலாம், ஆனால் அவரைப்போலவே இருதயப்பூர்வமாக ஜெபிக்க முடியும். சங்கீதப் புத்தகத்தில் நன்றிகளும் துதிகளும் ஏராளம், ஏராளம்! அதிகாரங்கள் 148 முதல் 150 வரை முத்து முத்தான துதிப்பாடல்கள் உள்ளன. இன்னும் பல சங்கீதங்கள், கடவுளுக்கு நன்றி சொல்லும் பாடல்களாகும். “ஒன்றை நான் யெகோவாவினிடம் கேட்டேன்; அதையே நாடுவேன்: நான் யெகோவாவின் திவ்யபிரசன்னத்தைப் பார்க்கவும் அவர் ஆலயத்தில் ஆராய்ச்சிசெய்யவும் என் ஜீவனுள்ள நாளெல்லாம் யெகோவாவின் ஆலயத்தில் தங்கியிருப்பதையே நாடுவேன்” என தாவீது பாடினார். (சங்கீதம் 27:4, தி.மொ.) இப்படிப்பட்ட ஜெபங்களுக்கு இசைவாக நடக்க, யெகோவாவின் சபையாரோடு சேர்ந்து எல்லா நடவடிக்கைகளிலும் நாம் வைராக்கியமாய் பங்குகொள்ள வேண்டும். (சங்கீதம் 26:12) அதோடு, பைபிளை தினமும் தியானிக்கும்போது, யெகோவாவை உள்ளப்பூர்வமாக துதித்து நன்றிசெலுத்துவதற்கு நிறைய காரணங்களைக் காண்போம்.
யெகோவாவின் உதவியை மனத்தாழ்மையோடு நாடுங்கள்
9. ராஜாவான ஆசா எவ்வாறு ஜெபம் செய்தார், அதனால் கிடைத்த பலன் என்ன?
9 நாம் யெகோவாவை அவரது சாட்சிகளாக முழு இருதயத்தோடு சேவித்துவந்தால், உதவிக்காக நாம் செய்யும் ஜெபங்களுக்கு பதிலளிப்பார் என்பது நிச்சயம். (ஏசாயா 43:10-12) யூதாவின் ராஜாவான ஆசாவைக் கவனியுங்கள். அவர் 41 வருடம் (பொ.ச.மு. 977-937) ஆட்சி செய்தார். அந்த ஆட்சியின் முதல் பத்தாண்டுகளில் சமாதானம் தழைத்தது. பின்னர் எத்தியோப்பியனாகிய சேரா பத்துலட்சம் வீரர்களோடு யூதாவின்மீது படையெடுத்து வந்தான். கடல் மணலைப்போல் எண்ணிக்கையில் விஞ்சிவிட்ட அந்தப் படையை சந்திக்க ஆசாவும் அவன் ஆட்களும் சென்றனர். ஆனாலும் போருக்கு முன்னால், ஆசா உருக்கமாக ஜெபம் செய்தார். யெகோவா மனம் வைத்தால் தங்களைக் காப்பாற்ற முடியும் என நம்பினார். உதவிக்காக இவ்வாறு கெஞ்சி மன்றாடினார்: “உம்மைச் சார்ந்து உம்முடைய நாமத்தில் ஏராளமான இந்தக் கூட்டத்திற்கு எதிராக வந்தோம்; கர்த்தாவே, நீர் எங்கள் தேவன்; மனுஷன் உம்மை மேற்கொள்ளவிடாதேயும்.” யெகோவா தமது உன்னத பெயரின் நிமித்தம் யூதாவைக் காப்பாற்றியதால் அவர்களுக்கு மகத்தான வெற்றி கிடைத்தது. (2 நாளாகமம் 14:1-15) கடவுள் நம்மை சோதனையிலிருந்து காப்பாற்றினாலும் சரி, அதைத் தாங்கிக்கொள்ள சக்தி கொடுத்தாலும் சரி, உதவிக்காக நாம் செய்யும் மன்றாட்டை கேட்கிறார் என்பதில் துளியும் சந்தேகமில்லை.
10. ஒரு குறிப்பிட்ட பிரச்சினையை சமாளிக்கத் தெரியவில்லை என்றால், யோசபாத்தின் ஜெபம் எவ்வாறு உதவியளிக்கும்?
10 ஒரு குறிப்பிட்ட பிரச்சினையை சமாளிக்க தெரியாதபோது, நாம் செய்யும் வேண்டுதல்களுக்கு யெகோவா உதவியளிப்பார் என்பதில் முழு நம்பிக்கை வைக்கலாம். யூதேயாவின் ராஜா யோசபாத்தின் உதாரணத்தைக் கவனிக்கலாம். அவரது 25-வருட ஆட்சி பொ.ச.மு. 936-ல் ஆரம்பித்தது. அம்மோன் புத்திரர், மோவாபியர், சேயீர் மலைத்தேசத்தார் ஆகியோர் ஒன்றுசேர்ந்து யூதாவை நோக்கி படையெடுத்தபோது, யோசபாத் இவ்வாறு மன்றாடினார்: “எங்கள் தேவனே, அவர்களை நீர் நியாயந்தீர்க்கமாட்டீரோ? எங்களுக்கு விரோதமாக வந்த இந்த ஏராளமான கூட்டத்திற்கு முன்பாக நிற்க எங்களுக்குப் பெலனில்லை; நாங்கள் செய்யவேண்டியது இன்னதென்று எங்களுக்குத் தெரியவில்லை; ஆகையால் எங்கள் கண்கள் உம்மையே நோக்கிக்கொண்டிருக்கிறது.” மனத்தாழ்மையுள்ள அந்த ஜெபத்திற்கு பதிலளிப்பவராய், யெகோவா யூதாவிற்காக போரிட்டார். அவர் எதிரிகளைக் குழப்பியதால் அவர்கள் தங்களுக்குள்ளேயே ஒருவரையொருவர் வெட்டி வீழ்த்திக்கொண்டார்கள். இதன் காரணமாய் சுற்றுவட்டாரத்திலிருந்த தேசத்தார் பயந்துபோனார்கள், யூதாவில் அமைதி நிலவியது. (2 நாளாகமம் 20:1-30) பிரச்சினையை சமாளிக்கத் தெரியாதபோது, ‘எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை, உங்களைத்தான் நம்பியிருக்கிறேன் யெகோவா தேவனே’ என யோசபாத்தைப் போலவே நாமும் ஜெபம் செய்யலாம். பரிசுத்த ஆவி, பிரச்சினையை சமாளிக்க தேவைப்படும் சில வேதப்பூர்வ குறிப்புகளை நமக்கு ஏற்ற வேளையில் ஞாபகப்படுத்தும். அல்லது எவரும் நினைத்தே பார்க்காத விதத்தில் யெகோவா நமக்கு உதவிசெய்வார்.—ரோமர் 8:26, 27.
11. எருசலேமின் மதில் சம்பந்தமாக நெகேமியா செய்த ஜெபம் நமக்கு என்ன கற்பிக்கிறது?
11 கடவுளது உதவிக்காக நாம் விடாது ஜெபம் செய்யவேண்டியிருக்கலாம். எருசலேமின் மதில் அழிக்கப்பட்டதையும் யூதாவின் மக்கள் பட்ட பாடுகளையும் குறித்து நெகேமியா சில நாட்களாக அழுது, துக்கித்து, உபவாசித்து, மன்றாடி ஜெபம் செய்தார். (நெகேமியா 1:1-11) அவரது ஜெபங்கள் சுகந்த வாசனையுள்ள தூபமாய் மேலெழும்பின. ஒருநாள் பெர்சிய ராஜாவான அர்தசஷ்டா, விசனமாயிருந்த நெகேமியாவைப் பார்த்து, “நீ கேட்கிற காரியம் என்ன என்றார்.” உடனடியாக, ‘நான் பரலோகத்தின் தேவனை நோக்கி ஜெபம்பண்ணினேன்’ என்கிறார் நெகேமியா. அந்தக் கணநேர, மௌன ஜெபத்திற்கும் கடவுள் பதிலளித்தார். ஆம், நெகேமியா ஆசைப்பட்ட விதமாகவே எருசலேமுக்குச் சென்று பழுதடைந்த மதிலை மீண்டும் கட்டுவதற்கு அனுமதி பெற்றார்.—நெகேமியா 2:1-8.
இயேசு கற்பித்த விதமாய் ஜெபிப்போமாக
12. இயேசுவின் மாதிரி ஜெபத்திலுள்ள முக்கிய குறிப்புகளை சுருக்கமாக சொந்த வார்த்தைகளில் கூறுக.
12 வேதங்களில் பதிவுசெய்யப்பட்டுள்ள எல்லா ஜெபங்களிலும், மிக அறிவூட்டும் ஒன்றுதான் மாதிரி ஜெபம். அதுதான், நறுமணம் கமழும் தூபமாய் இயேசு கிறிஸ்து ஏறெடுத்த ஜெபம். லூக்காவின் சுவிசேஷ பதிவு சொல்கிறது: ‘அவருடைய [இயேசுவுடைய] சீஷரில் ஒருவன் அவரை நோக்கி: ஆண்டவரே, யோவான் தன் சீஷருக்கு ஜெபம்பண்ணப் போதித்ததுபோல, நீரும் எங்களுக்குப் போதிக்கவேண்டும் என்றான். அதற்கு அவர்: நீங்கள் ஜெபம்பண்ணும்போது: பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக; உம்முடைய ராஜ்யம் வருவதாக; உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோல பூமியிலேயும் செய்யப்படுவதாக; எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை அன்றன்றும் எங்களுக்குத் தாரும்; எங்கள் பாவங்களை எங்களுக்கு மன்னியும்; நாங்களும் எங்களிடத்தில் கடன்பட்ட எவனுக்கும் மன்னிக்கிறோமே; எங்களைச் சோதனைக்குட்படப்பண்ணாதிரும் . . . என்று சொல்லுங்கள் என்றார்.’ (லூக்கா 11:1-4; மத்தேயு 6:9-13) இது கிளிப்பிள்ளையைப்போல் திரும்பத் திரும்ப ஒப்பிக்கவேண்டிய ஜெபம் அல்ல, நமக்கு வெறுமனே ஒரு வழிகாட்டிதான். இப்போது இந்த ஜெபத்தை கொஞ்சம் விலாவாரியாக சிந்திப்போமா?
13. “பிதாவே, உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக” என்ற வார்த்தைகளின் முக்கியத்துவத்தை விளக்குக.
13 “பிதாவே, உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக.” யெகோவாவை பிதா என அழைப்பது, அவரது ஒப்புக்கொடுக்கப்பட்ட ஊழியர்களுக்கே உரிய பாக்கியம். என்ன பிரச்சினை வந்தாலும் உடனடியாக இளகிய மனமுள்ள அப்பாவை தேடிச்செல்லும் பிள்ளைகளைப் போல், நாம் கடவுளை அணுகி கண்ணியத்தோடும் பயபக்தியோடும் தவறாமல் ஜெபம் செய்யவேண்டும். (சங்கீதம் 103:13, 14) யெகோவாவின் நாமம் பரிசுத்தப்பட வேண்டுமென்பதே நம் அக்கறை என்பதை நம் ஜெபங்கள் காட்டவேண்டும். ஏனென்றால் அப்பெயரின்மீது சுமத்தப்பட்டிருக்கும் களங்கம் அனைத்தும் துடைத்தழிக்கப்படும் நாளுக்காக நாம் ஏங்குகிறோம். ஆம், யெகோவாவின் பெயர் தூய்மையாக அல்லது பரிசுத்தமாக தனித்தோங்கி நிற்க வேண்டுமென்பதே நம் விருப்பம்.—சங்கீதம் 5:11; 63:3, 4; 148:12, 13; எசேக்கியேல் 38:23.
14. “உம்முடைய ராஜ்யம் வருவதாக” என்று ஜெபிப்பதன் அர்த்தம் என்ன?
14 “உம்முடைய ராஜ்யம் வருவதாக.” ராஜ்யம் என்பது யெகோவாவின் ஆட்சி. அவரது குமாரனான இயேசுவும் அவரோடு சேர்ந்த ‘பரிசுத்தவான்களும்’ ஆளுகை செய்யும் பரலோக மேசியானிய அரசாங்கம். (தானியேல் 7:13, 14, 18, 27; வெளிப்படுத்துதல் 20:6) கடவுளது பேரரசுரிமையை எதிர்க்கும் அனைத்திற்கும் எதிராக அது விரைவில் ‘வந்து,’ அவற்றை அழிக்கும். (தானியேல் 2:44) அப்போது யெகோவாவின் சித்தம் பரலோகத்தில் செய்யப்படுவதுபோல் பூமியிலும் செய்யப்படும். (மத்தேயு 6:10) சர்வலோகப் பேரரசரை உத்தமத்தோடு சேவித்துவரும் அனைவருக்கும் எப்பேர்ப்பட்ட மகிழ்ச்சி பொங்கும் சமயம்!
15. “எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை அன்றன்றும் எங்களுக்குத் தாரும்” என யெகோவாவைக் கேட்பது எதைக் குறிக்கிறது?
15 “எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை அன்றன்றும் எங்களுக்குத் தாரும்.” யெகோவாவிடம் ‘அன்றன்றைய’ ஆகாரத்தைக் கேட்பது, தினசரி தேவைகளை மாத்திரமே கேட்கிறோம், அளவுக்கதிகமானதை அல்ல என்பதை சுட்டிக்காட்டும். கடவுள் நமக்குக் கொடுப்பார் என நாம் நம்பினாலும், உணவுக்காகவும் மற்ற தேவைகளுக்காகவும் நம் பங்கிலும் செய்ய வேண்டியதைச் செய்வோம். அதற்காக எல்லா நேர்மையான வழிகளையும் பயன்படுத்திக்கொள்வோம். (2 தெசலோனிக்கேயர் 3:7-10) அதேசமயம் வாரிவழங்கும் வள்ளலாம் நம் பரலோக தந்தைக்கு கண்டிப்பாக நன்றி சொல்லவேண்டும். ஏனெனில் இத்தேவைகள் நமக்குக் கிடைப்பதற்குக் காரணமே அவரது அன்பும் ஞானமும் வல்லமையும்தான்.—அப்போஸ்தலர் 14:15-17.
16. நாம் எவ்வாறு கடவுளது மன்னிப்பைப் பெறலாம்?
16 “எங்கள் பாவங்களை எங்களுக்கு மன்னியும்; நாங்களும் எங்களிடத்தில் கடன்பட்ட எவனுக்கும் மன்னிக்கிறோமே.” நாம் அபூரணர்களாக, பாவிகளாக இருப்பதால் யெகோவாவின் பரிபூரண தராதரங்களை அச்சுப்பிசகாமல் கடைபிடிக்க முடியாது. ஆகவே இயேசுவின் மீட்கும் பலியின் அடிப்படையில் மன்னிப்புக்காக அவரிடம் ஜெபிக்க வேண்டும். ஆனால் ‘ஜெபத்தைக் கேட்பவர்’ நம் பாவங்களை மன்னிக்க வேண்டுமெனில், நாம் மனந்திருந்த வேண்டும், அவர் தரும் எவ்வித சிட்சையையும் ஏற்றுக்கொள்ள விரும்பவேண்டும். (சங்கீதம் 65:2; ரோமர் 5:8; 6:23; எபிரெயர் 12:4-11) மேலும் ‘நம் கடனாளிகளை,’ அதாவது நமக்கு எதிராக பாவம் செய்பவர்களை நாம் மன்னித்தால் மட்டுமே, நம்மை கடவுள் மன்னிப்பார் என எதிர்பார்க்க முடியும்.—மத்தேயு 6:12, 14, 15.
17. ‘எங்களைச் சோதனைக்குட்படுத்தாதிரும்’ என கேட்பதன் அர்த்தம் என்ன?
17 ‘எங்களைச் சோதனைக்குட்படுத்தாதிரும்.’ யெகோவா சில காரியங்களை வெறுமனே அனுமதிக்கிற போதிலும் அவரே அதைச் செய்வதாய் சிலசமயம் பைபிள் சொல்கிறது. (ரூத் 1:20, 21) கடவுள் நம்மை பாவம் செய்யத் தூண்டுவதில்லை. (யாக்கோபு 1:13) பாவம் செய்வதற்கான தூண்டுதல் பிசாசிடமிருந்தும் சுதந்தரிக்கப்பட்ட பாவத்திலிருந்தும் இந்த உலகிலிருந்தும் வருகிறது. கடவுளுக்கு எதிராக பாவம் செய்யும்படி தந்திரமாக தூண்டுவது சோதனைக்காரனாகிய சாத்தான். (மத்தேயு 4:3; 1 தெசலோனிக்கேயர் 3:5) ‘எங்களுக்குச் சோதனைகளைத் தராதேயும்’ என நாம் விண்ணப்பிக்கையில், சோதனைகளில் விழாமல் காக்குமாறு கடவுளிடம் கேட்கிறோம். ‘தீயவனான’ சாத்தானுக்கு அடிபணிந்து அவன் வலையில் சிக்காமலிருக்கவும் அவர் நமக்கு வழிகாட்டுவார்.—மத்தேயு 6:13, NW; 1 கொரிந்தியர் 10:13.
ஜெபத்திற்கிசைய செயல்படுங்கள்
18. மனதுக்கு ஏற்ற மணத்துணைக்காகவும் சந்தோஷமான குடும்ப வாழ்க்கைக்காகவும் நாம் செய்யும் ஜெபங்களுக்கு இசைவாக எவ்வாறு செயல்படலாம்?
18 இயேசு கொடுத்த இந்த மாதிரி ஜெபத்தில் முக்கியமான குறிப்புகள் உள்ளன, ஆனால் நாம் எதற்காகவும் ஜெபிக்கலாம். உதாரணத்திற்கு, மனதுக்கு ஏற்ற மணத்துணை கிடைக்க ஜெபிக்கலாம். திருமணமாகும் வரை கற்பைக் காத்துக்கொள்ள உதவும் தன்னடக்கத்திற்காக ஜெபம் செய்யலாம். அதேசமயம், நம் பங்கில் ஒழுக்கக்கேடான பிரசுரங்களையும் பொழுதுபோக்கையும் தவிர்த்து, ஜெபத்திற்கு இசைவாக செயல்பட வேண்டும். மேலும் ‘ஆண்டவரிடம் நம்பிக்கை கொண்டவரையே’ திருமணம் செய்ய தீர்மானமாய் இருக்கவேண்டும். (1 கொரிந்தியர் 7:39, பொ.மொ.; உபாகமம் 7:3, 4) திருமணமானவுடன், சந்தோஷம் நிலைத்திருக்க நாம் செய்யும் ஜெபங்களுக்கு ஏற்றவாறு கடவுளது ஆலோசனையைப் பொருத்த கடினமாக முயற்சி செய்ய வேண்டும். நமக்கு பிள்ளைகள் இருந்தால், அவர்களும் யெகோவாவின் உண்மையுள்ள ஊழியர்களாக வேண்டுமென ஜெபம் செய்தால் மட்டும் போதாது. அவர்களோடு சேர்ந்து பைபிள் படித்து கிறிஸ்தவ கூட்டங்களுக்கு தவறாமல் சென்று கடவுளது சத்தியங்களை அவர்கள் மனதில் பதிக்க நம்மால் முடிந்த எல்லாவற்றையும் செய்யவேண்டும்.—உபாகமம் 6:5-9; 31:12; நீதிமொழிகள் 22:6.
19. நம் ஊழியத்தில் பலன் காண ஜெபிக்கும்போது என்ன செய்யவேண்டும்?
19 நம் ஊழியத்தில் பலன் காண ஜெபிக்கிறோமா? அப்படியென்றால் அதற்கு இசைவாக, ராஜ்ய பிரசங்க வேலையில் அர்த்தமுள்ள பங்குவகிப்போமாக. நித்திய ஜீவ பாதையில் செல்ல மற்றவர்களுக்கு உதவும் வாய்ப்பிற்காக ஜெபித்தால், சத்தியத்தில் ஆர்வமுள்ளவர்களைப் பற்றிய விவரங்களைக் குறித்துவைத்து, பைபிள் படிப்பு நடத்த நேரத்தையும் தவறாமல் ஒதுக்கவேண்டும். ஒருவேளை பயனியராக முழுநேர ஊழியம் செய்ய விரும்பினால்? பிரசங்கத்திற்காக அதிக நேரம் ஒதுக்கி, மற்ற பயனியர்களோடு ஊழியம் செய்யவேண்டும். இப்படிப்பட்ட நடவடிக்கைகள், நாம் ஜெபத்திற்கு இசைவாக செயல்படுவதைக் காட்டும்.
20. அடுத்த கட்டுரை எதைக் கலந்தாலோசிக்கும்?
20 நாம் யெகோவாவை உண்மையோடு சேவித்துவந்தால், அவரது சித்தத்திற்கு இசைவாக செய்யும் ஜெபங்களுக்கு பதிலளிப்பார் என்பது நிச்சயம். (1 யோவான் 5:14, 15) பைபிளில் பதிவுசெய்யப்பட்டிருக்கும் சில ஜெபங்களை சிந்தித்ததிலிருந்து பல பயனுள்ள குறிப்புகளை உண்மையிலேயே கற்றிருக்கிறோம். தங்கள் ‘ஜெபங்கள் யெகோவாவின் சந்நிதியில் தூபமாக இருக்க’ விரும்புபவர்களுக்காக, அடுத்த கட்டுரை இன்னும் பல வேதப்பூர்வ ஆலோசனைகளை கலந்தாலோசிக்கும்.
எப்படி பதிலளிப்பீர்கள்?
◻ நாம் ஏன் விசுவாசத்தோடு ஜெபிக்க வேண்டும்?
◻ நம் ஜெபங்களில் துதியும் நன்றியும் என்ன பங்கு வகிக்கவேண்டும்?
◻ யெகோவா உதவிசெய்வார் என ஏன் நம்பிக்கையோடு ஜெபம் செய்யலாம்?
◻ மாதிரி ஜெபத்திலுள்ள சில முக்கிய குறிப்புகள் யாவை?
◻ நம் ஜெபங்களுக்கு இசைவாக எவ்வாறு செயல்படலாம்?
[பக்கம் 12-ன் படம்]
‘எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை, உங்களைத்தான் நம்பியிருக்கிறேன், யெகோவா தேவனே’ என யோசபாத்தைப் போலவே நாமும் சிலசமயம் ஜெபிக்க வேண்டியிருக்கலாம்.
[பக்கம் 13-ன் படம்]
இயேசு கற்பித்த விதமாய் ஜெபிக்கிறீர்களா?