யெகோவா, சத்தியத்தின் கடவுள்
‘சத்தியபரராகிய யெகோவாவே, நீர் என்னை மீட்டுக்கொண்டீர்.’—சங்கீதம் 31:5.
1. பொய் என்ற சொல்லுக்கே இடமில்லாத காலத்தில் பரலோகத்திலும் பூமியிலும் நிலைமைகள் எவ்வாறு இருந்தன?
பொய் என்ற சொல்லுக்கே இடமில்லாத ஒரு காலம் அது. பரலோகங்களில் இருந்த பரிபூரண ஆவி சிருஷ்டிகள், ‘சத்தியபரராகிய’ தங்கள் சிருஷ்டிகரைச் சேவித்து வந்தனர். (சங்கீதம் 31:5) அங்கே யாரும் பொய் பேசவில்லை, சூதுவாதுடனும் நடந்துகொள்ளவில்லை. யெகோவா தமது ஆவி குமாரர்களோடு சத்தியத்தையே பேசி வந்தார். ஏனெனில் அவர்களை நேசித்தார், அவர்களுடைய சுகநலத்தில் ஆழ்ந்த அக்கறையும் அவருக்கு இருந்தது. பூமியிலும் அதே நிலைமைதான். யெகோவா முதல் மனிதனையும் மனுஷியையும் சிருஷ்டித்து, தமது மத்தியஸ்தரின் வாயிலாக எப்போதும் தெளிவாகவும் ஒளிவுமறைவின்றியும் உண்மையோடும் பேசி வந்தார். அது எவ்வளவு அருமையாக இருந்திருக்கும்!
2. முதன்முதலில் பொய் சொன்னது யார், ஏன்?
2 ஆனால் காலப்போக்கில், கடவுளுடைய ஆவி குமாரர்களில் ஒருவன் யெகோவாவுக்கு எதிராக கிளம்பினான்; அவரோடு போட்டி போட துணிச்சலுடன் இறங்கினான். அவன்தான் பிசாசாகிய சாத்தான்; ஆவி சிருஷ்டியாக இருந்த அவன், எல்லாரும் தன்னை வணங்க வேண்டுமென ஆசைப்பட்டான். அந்த ஆசையை அடைய முதன்முதலாக பொய் சொன்னான்; இவ்வாறு மற்றவர்களைத் தன் கட்டுப்பாட்டில் கொண்டுவர நினைத்தான். இப்படி முதன்முதலில் பொய் சொன்னதால்தான் அவன் ‘பொய்யனும் பொய்க்குப் பிதாவும்’ ஆனான்.—யோவான் 8:44.
3. சாத்தானுடைய பொய்களைக் கேட்ட ஆதாமும் ஏவாளும் என்ன செய்தனர், அதன் விளைவுகள் யாவை?
3 இந்த சாத்தான் ஒரு பாம்பை பயன்படுத்தி, முதல் மனுஷியாகிய ஏவாளை அணுகினான். கடவுளுடைய கட்டளையை ஒதுக்கித் தள்ளிவிட்டு, புசிக்கக் கூடாதென்று சொல்லப்பட்ட கனியைப் புசித்தால் அவள் சாகமாட்டாள் என்று சொன்னான். ஆனால் அது சுத்தப் பொய். அத்துடன் மட்டுமே சாத்தான் நிறுத்திக்கொள்ளவில்லை; அவள் அதைப் புசித்தால், நன்மை தீமை இன்னதென்று அறிந்துகொள்ளும் பக்குவத்தை அடைவாள் என்றும், கடவுளைப் போலவே ஆகிவிடுவாள் என்றும் சொன்னான். இதுவும்கூட அப்பட்டமான பொய். அதுவரை யாரும் பொய் சொன்னதை ஏவாள் கேட்டதில்லை என்பது என்னவோ உண்மைதான்; ஆனாலும் அந்த சர்ப்பம் சொன்னதற்கும் தன் கணவன் ஆதாமிடம் கடவுள் சொன்னதற்கும் இடையே இருந்த வித்தியாசத்தை அவள் நிச்சயமாகவே கண்டுணர்ந்திருப்பாள். என்றபோதிலும், யெகோவா சொன்னதை கேட்காமல் சாத்தான் சொன்னதை கேட்கவே அவள் முடிவு செய்தாள். வஞ்சனை எனும் வலையில் சிக்கிய அவள் அந்தக் கனியைப் பறித்து புசித்தாள். பின்பு, ஆதாமும் அந்தக் கனியைப் புசித்தான். (ஆதியாகமம் 3:1-6) ஏவாளைப் போல், ஆதாமும் அதற்கு முன்பு யாரும் பொய் சொல்லிக் கேட்டதில்லை, எனினும் அவன் வஞ்சிக்கப்படவில்லை. (1 தீமோத்தேயு 2:14) ஆனால், தன்னை உண்டாக்கினவரை புறக்கணித்ததை தன் செயல்களால் காண்பித்தான். இதன் விளைவாக மனிதகுலத்திற்கு கேடுகாலம் ஆரம்பித்தது. ஆதாமின் கீழ்ப்படியாமையால், பாவமும் மரணமும் அவனுடைய சந்ததியாரை தொற்றியது; அதோடு, ஊழல்களும் கணக்கு வழக்கில்லா துயரங்களும் அவர்கள் மத்தியில் பரவின.—ரோமர் 5:12.
4. (அ) ஏதேனில் சொல்லப்பட்ட பொய்கள் யாவை? (ஆ) சாத்தானின் மோசடிக்கு ஆளாகாதபடி நாம் என்ன செய்ய வேண்டும்?
4 பொய்யும் பரவியது. ஏதேன் தோட்டத்தில் சொல்லப்பட்ட அந்தப் பொய்கள், யெகோவாவின் உண்மைத்தன்மைக்கு எதிரான தாக்குதல்களே என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். நன்மையான ஏதோவொன்றை கடவுள் அந்த முதல் மனித ஜோடிக்கு கொடுக்காமல் வஞ்சகம் செய்துவிட்டாரென சாத்தான் அடித்துக் கூறினான். நிச்சயமாகவே அது உண்மையல்ல. ஆதாமும் ஏவாளும் கீழ்ப்படியாமல் போனதால் அவர்களுக்கு துளிகூட நன்மை கிடைக்கவில்லை. யெகோவா சொல்லியிருந்தபடி சாவுதான் அவர்களுக்கு மிஞ்சியது. ஆனால் யெகோவாவுக்கு விரோதமாக சாத்தானின் அவதூறான தாக்குதலோ தொடர்ந்தது; அதனால்தான் ‘உலகமனைத்தையும் மோசம் போக்குகிற . . . சாத்தான்’ என பல நூற்றாண்டுகளுக்கு பிற்பாடு அப்போஸ்தலனாகிய யோவான் எழுதும்படி தேவ ஆவியால் ஏவப்பட்டார். (வெளிப்படுத்துதல் 12:9) பிசாசாகிய சாத்தானால் மோசம் போகாதிருக்க, சத்தியபரர் யெகோவா மீதும் அவருடைய சத்திய வார்த்தையின் மீதும் நமக்கு முழு நம்பிக்கை இருக்க வேண்டும். அப்படியானால், நீங்கள் எவ்வாறு யெகோவாவில் உங்கள் நம்பிக்கையை வளர்த்து அதை பலப்படுத்த முடியும்? அவருடைய எதிரியின் மோசடிகளுக்கும் பொய்களுக்கும் எதிராக உங்களை எவ்வாறு காத்துக்கொள்ள முடியும்?
சத்தியம் இன்னதென்று யெகோவாவுக்குத் தெரியும்
5, 6. (அ) யெகோவாவின் அறிவாற்றல் எத்தகையது? (ஆ) யெகோவாவின் அறிவுக் கடலுடன் ஒப்பிட நம் அறிவு எவ்வாறுள்ளது?
5 யெகோவாவே ‘எல்லாவற்றையும் சிருஷ்டித்தவர்’ என பைபிள் திரும்பத் திரும்ப அடையாளம் காட்டுகிறது. (எபேசியர் 3:11) அவரே “வானத்தையும் பூமியையும் சமுத்திரத்தையும் அவைகளிலுள்ள யாவற்றையும் உண்டாக்கின”வர். (அப்போஸ்தலர் 4:24) யெகோவா சிருஷ்டிகராக இருப்பதால், எல்லாவற்றையும் பற்றிய சத்தியங்களை அவர் அறிந்திருக்கிறார். உதாரணமாக, தானே திட்டமிட்டு தன் வீட்டைக் கட்டுகிற ஒரு மனிதனை எடுத்துக்கொள்ளுங்கள். ஒவ்வொரு உத்திரத்தையும் அவனே போடுகிறான், ஒவ்வொரு ஆணியையும் அவனே அடிக்கிறான் என்று வைத்துக்கொள்ளுங்கள். அப்படியானால் அந்த வீட்டின் உள்ளும் புறமும் அவனுக்கு அத்துப்படியாக இருக்கும் அல்லவா? மற்றவர்கள் என்னதான் அதைக் கூர்ந்து பார்த்தாலும், அந்த வீட்டை பற்றிய விவரங்கள் அவனுக்குத் தெரிந்தளவு மற்றவர்களுக்குத் தெரிய வாய்ப்பில்லை. இப்படி தாங்களே திட்டமிட்டு உருவாக்கும் எந்தவொரு பொருளையும் பற்றி மக்கள் நன்றாக அறிந்திருக்கிறார்கள். அவ்வாறே, தாம் படைத்த அனைத்துப் பொருட்களின் விவரத்தையும் சிருஷ்டிகர் துல்லியமாக அறிந்திருக்கிறார்.
6 யெகோவாவின் அறிவாற்றலைப் பற்றி தீர்க்கதரிசியாகிய ஏசாயா அழகாக குறிப்பிட்டார். நாம் இவ்வாறு வாசிக்கிறோம்: “தண்ணீர்களைத் தமது கைப்பிடியால் அளந்து, வானங்களை ஜாணளவாய்ப் பிரமாணித்து, பூமியின் மண்ணை மரக்காலில் அடக்கி, பர்வதங்களைத் துலாக்கோலாலும், மலைகளைத் தராசாலும் நிறுத்தவர் யார்? கர்த்தருடைய ஆவியை அளவிட்டு, அவருக்கு ஆலோசனைக்காரனாயிருந்து, அவருக்குப் போதித்தவன் யார்? தமக்கு அறிவை உணர்த்தவும், தம்மை நியாய வழியிலே உபதேசிக்கவும், தமக்கு ஞானத்தைக் கற்றுக்கொடுக்கவும், தமக்கு விவேகத்தின் வழியை அறிவிக்கவும், அவர் யாரோடே ஆலோசனை பண்ணினார்?” (ஏசாயா 40:12-14) மெய்யாகவே, யெகோவா “ஞானமுள்ள தேவன்”; அவர் ‘பூரண ஞானமுள்ளவர்.’ (1 சாமுவேல் 2:3; யோபு 36:4; 37:16) அவரது அறிவுக் கடலுடன் ஒப்பிட நம் அறிவெல்லாம் சிறு துளிதான்! மனிதன் பெருங்குவியலாய் அறிவைத் திரட்டியிருக்கிறபோதிலும், சிருஷ்டிப்பை பொறுத்த வரையில் ‘கடவுளுடைய கிரியையில் கடைகோடியானவற்றையுங்கூட’ அவன் இன்னும் முழுமையாக புரிந்து கொள்ளவில்லை. ‘வல்லமையான இடி முழக்கத்தோடு’ ஒப்பிட இது ‘சிறுமெல்லோசை’ போலத்தான் உள்ளது.—யோபு 26:14.
7. யெகோவாவின் அறிவைப் பற்றி தாவீது எதை உணர்ந்திருந்தார், அதனால் நாம் எதை ஒத்துக்கொள்ள வேண்டும்?
7 யெகோவா நம்மைப் படைத்தவர் என்பதால், அவர் நம்மை அணு அணுவாக தெரிந்து வைத்திருக்கிறார் என்ற முடிவுக்கு வருவது நியாயமானதே. அரசனாகிய தாவீது இதைப் புரிந்திருந்தார். அவர் இவ்வாறு எழுதினார்: “கர்த்தாவே, நீர் என்னை ஆராய்ந்து, அறிந்திருக்கிறீர். என் உட்காருதலையும் என் எழுந்திருக்குதலையும் நீர் அறிந்திருக்கிறீர்; என் நினைவுகளைத் தூரத்திலிருந்து அறிகிறீர். நான் நடந்தாலும் படுத்திருந்தாலும் என்னைச் சூழ்ந்திருக்கிறீர்; என் வழிகளெல்லாம் உமக்குத் தெரியும். என் நாவில் சொல் பிறவாததற்கு முன்னே, இதோ, கர்த்தாவே, அதையெல்லாம் நீர் அறிந்திருக்கிறீர்.” (சங்கீதம் 139:1-4) மனிதருக்கு சுயாதீனம் இருந்ததை தாவீது உணர்ந்திருந்தார்; கீழ்ப்படிவதற்கான அல்லது கீழ்ப்படியாமல் போவதற்கான சுயாதீனத்தை கடவுள் நமக்கு கொடுத்திருக்கிறார். (உபாகமம் 30:19, 20; யோசுவா 24:15) எனினும், நம்மைப் பற்றி நம்மைவிட யெகோவா மிக நன்றாக அறிந்திருக்கிறார். நமக்கு மிகச் சிறந்த பலன் கிடைக்கவே அவர் விரும்புகிறார், நாம் நடக்க வேண்டிய வழிகளை அவரே காட்டுகிறார். (எரேமியா 10:23) வேறு எந்தப் போதகரும், புத்திசாலியும், ஆலோசகரும் இந்தளவுக்கு சத்தியத்தை நமக்குக் கற்பிக்கவும் முடியாது, ஞானத்தையும் மகிழ்ச்சியையும் பெற உதவி செய்யவும் முடியாது.
யெகோவா சத்தியபரர்
8. யெகோவா சத்தியபரர் என்று நமக்கு எப்படி தெரியும்?
8 சத்தியத்தை அறிந்திருப்பதால் ஒருவர் சத்தியசீலராகிவிட முடியாது. உதாரணமாக, பிசாசானவன் “சத்தியத்திலே நிலைநிற்க” விரும்பவில்லையே. (யோவான் 8:44) அதற்கு நேர்மாறாக, ‘யெகோவா மகா . . . சத்தியமுள்ள தேவன்.’ (யாத்திராகமம் 34:6) யெகோவா நம்பகமானவர் என்பதற்கு வேதவசனங்கள் திரும்பத் திரும்ப சான்று பகர்கின்றன. ‘கடவுள் . . . பொய்யராக முடியாதவர்,’ கடவுள் “பொய்யுரைக்க முடியாதவர்” என்றெல்லாம் அப்போஸ்தலன் பவுல் கூறினார். (எபிரெயர் 6:18, தி.மொ.; தீத்து 1:2, NW) எப்போதும் சத்தியத்தை பேசுவது யெகோவாவின் குணாம்சத்தின் ஒரு முக்கிய பாகம். அவர் சத்தியபரராக இருப்பதால் நாம் அவர் மீது முழுமையாக நம்பிக்கை வைக்கலாம். தமக்கு உண்மைப் பற்றுறுதியோடு இருப்பவர்களை அவர் ஒருபோதும் ஏமாற்ற மாட்டார்.
9. யெகோவாவின் பெயர் எவ்வாறு சத்தியத்துடன் இணைத்துக் கூறப்பட்டிருக்கிறது?
9 யெகோவாவின் பெயரே அவர் சத்தியபரர் என்பதற்கு சாட்சி பகருகிறது. “ஆகும்படி செய்கிறவர்” என்பது அவருடைய பெயரின் அர்த்தம். இது, தாம் வாக்குறுதி கொடுக்கும் எல்லாவற்றையும் படிப்படியாக நிறைவேற்றும் கடவுள் என யெகோவாவை அடையாளம் காட்டுகிறது. அவற்றையெல்லாம் நிறைவேற்ற வேறு எவருக்கும் திறமை இல்லை. யெகோவா ஈடற்ற உன்னதராக இருப்பதால், அவருடைய நோக்கங்கள் நிறைவேறுவதை எதுவுமே தடைசெய்ய முடியாது. யெகோவா சத்தியபரர் மட்டுமல்ல, தாம் கொடுத்த வாக்குகள் எல்லாவற்றையும் நிறைவேற்றுபவர்; அதை செய்வதற்கான வல்லமையும் ஞானமும் அவர் ஒருவருக்கே இருக்கிறது.
10. (அ) யெகோவா சத்தியபரர் என்பதை யோசுவா எவ்வாறு கண்கூடாகக் கண்டார்? (ஆ) யெகோவாவின் என்ன வாக்குறுதிகள் நிறைவேறியதை நீங்கள் கண்டிருக்கிறீர்கள்?
10 யெகோவா சத்தியபரர் என்பதை நிரூபித்த குறிப்பிடத்தக்க சம்பவங்களைக் கண்ட பலரில் யோசுவாவும் ஒருவர். எகிப்தியர் மீது பத்து வாதைகளை யெகோவா வருவித்தபோது யோசுவா அங்கே இருந்தார். யெகோவா அந்த ஒவ்வொரு வாதையையும் முன்னறிவித்திருந்தார். அதேபோல் அவர் முன்னறிவித்த மற்ற காரியங்களும் நிறைவேறியதை யோசுவா ஏற்கெனவே கண்கூடாக பார்த்திருந்தார்; உதாரணத்திற்கு, எகிப்திலிருந்து இஸ்ரவேலரை விடுவித்தது, அவர்களை எதிர்த்த பலத்த கானானிய சேனைகளையெல்லாம் தோற்கடித்தது, வாக்குப்பண்ணப்பட்ட தேசத்திற்கு வழிநடத்தினது ஆகியவற்றை பார்த்திருந்தார். தன் வாழ்நாள் முடிவுறும் தறுவாயில், இஸ்ரவேல் ஜனத்தின் மூப்பர்களிடம் யோசுவா இவ்வாறு கூறினார்: ‘உங்கள் தேவனாகிய [யெகோவா] உங்களுக்காகச் சொன்ன நல்வார்த்தைகளிலெல்லாம் ஒரு வார்த்தையும் தவறிப்போகவில்லை என்பதை உங்கள் முழு இருதயத்தாலும் உங்கள் முழு ஆத்துமாவாலும் அறிந்திருக்கிறீர்கள்; அவைகளெல்லாம் உங்களுக்கு நிறைவேறிற்று; அவைகளில் ஒரு வார்த்தையும் தவறிப்போகவில்லை.’ (யோசுவா 23:14) யோசுவாவைப் போல் அற்புதங்களை நீங்கள் நேரில் காணவில்லை என்பது உண்மையே. என்றபோதிலும், கடவுளுடைய வாக்குறுதிகள் எவ்வளவு சத்தியமானவை என்று உங்கள் வாழ்நாட்காலத்தில் அறிந்திருக்கிறீர்களா?
யெகோவா சத்தியத்தை வெளிப்படுத்துகிறார்
11. மனிதவர்க்கத்தினருக்கு சத்தியத்தைத் தெரிவிக்க யெகோவா விரும்புகிறார் என்பதை எது காட்டுகிறது?
11 அபார அறிவுடைய ஒரு தாயோ தகப்பனோ தங்கள் பிள்ளைகளிடம் வாய் திறந்தே பேசாதிருந்தால் எப்படியிருக்கும் என்பதை கற்பனை செய்து பாருங்கள். யெகோவாவோ அப்படி இல்லாததற்கு நீங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறீர்கள் அல்லவா? யெகோவா அன்பாக, அதுவும் தாராளமாக மனிதவர்க்கத்தோடு பேச்சுத்தொடர்பு கொள்கிறார். வேதவசனங்கள் அவரை “மகத்தான போதகர்” என்று அழைக்கின்றன. (ஏசாயா 30:20, NW) தமக்குச் செவிகொடுக்க மனமில்லாதவர்களுக்குங்கூட தமது அன்புள்ள இரக்கத்தால் போதிக்கிறார். உதாரணமாக, தம் வார்த்தையை கேட்க மாட்டார்களென்று ஏற்கெனவே அறிந்திருந்தும் அப்படிப்பட்டவர்களுக்குப் பிரசங்கிக்கும்படி எசேக்கியேலை யெகோவா நியமித்தார். யெகோவா இவ்வாறு கூறினார்; “மனுபுத்திரனே, நீ போய், இஸ்ரவேல் சந்ததியாரிடத்தில் சேர்ந்து, என் வார்த்தைகளைக் கொண்டு அவர்களோடே பேசு.” பின்பு அவர் இவ்வாறு எச்சரித்தார்: “இஸ்ரவேல் வீட்டாரோவெனில், உனக்குச் செவிகொடுக்க மாட்டார்கள்; எனக்கே செவிகொடுக்க மாட்டோம் என்கிறார்களே; இஸ்ரவேல் வம்சத்தார் அனைவரும் கடினமான நெற்றியும் முரட்டாட்டமுள்ள இருதயமும் உள்ளவர்கள்.” எசேக்கியேலுக்கு அது கடினமான வேலையாக இருந்தபோதிலும் அதை உண்மையுடன் நிறைவேற்றினார்; அவ்வாறு யெகோவாவின் இரக்க குணத்தைப் பிரதிபலித்தார். உங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ள பிரசங்க வேலையில் சவால்களை சந்திக்க நேரிடும்போது, கடவுள்மீது நம்பிக்கை வைப்பீர்களானால், தீர்க்கதரிசியாகிய எசேக்கியேலை பலப்படுத்தியது போல உங்களையும் அவர் பலப்படுத்துவார் என்று நீங்கள் நிச்சயமாக இருக்கலாம்.—எசேக்கியேல் 3:4, 7-9.
12, 13. என்னென்ன வழிகளில் கடவுள் மனிதருடன் பேச்சுத்தொடர்பு வைத்திருக்கிறார்?
12 “எல்லா வகை மனிதரும் . . . இரட்சிக்கப்படவும் சத்தியத்தின் திருத்தமான அறிவை அடையவும்” வேண்டுமென்று யெகோவா விரும்புகிறார். (1 தீமோத்தேயு 2:4, NW) தீர்க்கதரிசிகள் மூலமாகவும் தேவதூதர்கள் மூலமாகவும், ஏன் தமது நேச குமாரனாகிய இயேசு கிறிஸ்து மூலமாகவும்கூட அவர் பேசியிருக்கிறார். (எபிரெயர் 1:1, 2; 2:2) பிலாத்துவிடம் இயேசு இவ்வாறு சொன்னார்: “சத்தியத்தைக் குறித்துச் சாட்சிகொடுக்க நான் பிறந்தேன், இதற்காகவே இந்த உலகத்தில் வந்தேன்; சத்தியவான் எவனும் என் சத்தம் கேட்கிறான்.” இரட்சிப்பைப் பெற யெகோவா செய்துள்ள ஏற்பாட்டைப் பற்றிய சத்தியத்தை, கடவுளுடைய குமாரனிடமிருந்து நேரடியாக தெரிந்துகொள்ளும் அரிய வாய்ப்பு பிலாத்துவுக்கு இருந்தது. எனினும், பிலாத்து சத்தியத்தை ஆதரிக்கவில்லை, இயேசுவிடமிருந்து கற்றுக்கொள்ளவும் விரும்பவில்லை. அதற்கு பதிலாக, “சத்தியமாவது என்ன”? என்று இகழ்ச்சியுடன் பிலாத்து கேட்டான். (யோவான் 18:37, 38) எவ்வளவு வருந்தத்தக்கது! எனினும், இயேசு பிரசங்கித்த சத்தியத்திற்கு பலர் செவிகொடுத்தனர். தமது சீஷர்களிடம் அவர் இவ்வாறு கூறினார்: “உங்கள் கண்கள் காண்கிறதினாலும், உங்கள் காதுகள் கேட்கிறதினாலும், அவைகள் பாக்கியமுள்ளவைகள்.”—மத்தேயு 13:16.
13 சத்தியத்தை யெகோவா பைபிளில் பதிவுசெய்து அதைப் பாதுகாத்து வைத்திருக்கிறார்; அது மட்டுமல்ல, எல்லா ஜனங்களுக்கும் அது கிடைக்கும்படியும் செய்திருக்கிறார். காரியங்களை தத்ரூபமாக பைபிள் வெளிப்படுத்துகிறது. கடவுளுடைய பண்புகளையும், நோக்கங்களையும், கட்டளைகளையும், அவற்றோடு மனிதவர்க்கத்தின் உண்மையான நிலவரங்களையும் அது விவரிக்கிறது. “உம்முடைய வசனமே சத்தியம்” என ஜெபத்தில் யெகோவாவிடம் இயேசு சொன்னார். (யோவான் 17:17) ஆகவே, பைபிள் ஈடிணையற்ற ஒரு புத்தகம். சகலமும் அறிந்த கடவுளுடைய ஏவுதலின்கீழ் எழுதப்பட்ட ஒரே புத்தகம் இதுவே. (2 தீமோத்தேயு 3:16) மனிதவர்க்கத்துக்கு அருளப்பட்டுள்ள மதிப்புமிகுந்த பரிசு இது; கடவுளுடைய ஊழியர் பொக்கிஷமாக கருதும் ஒன்று. ஆகவே, தினந்தோறும் இதை வாசிப்பது ஞானமான ஒரு செயலாகும்.
சத்தியத்தை உறுதியாய்ப் பற்றிக்கொள்ளுங்கள்
14. யெகோவா தாம் செய்யப்போவதாக சொல்லும் சில காரியங்கள் யாவை, நாம் ஏன் அவரை நம்ப வேண்டும்?
14 யெகோவா தமது வார்த்தையாகிய பைபிளில் நமக்குச் சொல்லியிருக்கும் விஷயங்களுக்கு நாம் முக்கிய கவனம் செலுத்த வேண்டும். தாம் எப்படிப்பட்டவர் என்று சொல்கிறாரோ அப்படிப்பட்டவராகவே இருக்கிறார், தாம் என்ன செய்யப் போவதாக சொல்கிறாரோ அதை நிச்சயம் செய்வார். ஆகவே, கடவுளில் நம்பிக்கை வைக்க நமக்கு எல்லா காரணமும் இருக்கிறது. “தேவனை அறியாதவர்களுக்கும், நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்திற்குக் கீழப்படியாதவர்களுக்கும் நீதியுள்ள ஆக்கினையை” தாம் கொண்டு வரப்போவதாக யெகோவா சொல்கையில் நாம் அதை நம்பலாம். (2 தெசலோனிக்கேயர் 1:7) நீதியை நாடித் தொடருவோரைத் தாம் நேசிப்பதாக யெகோவா சொல்கையிலும், விசுவாசிக்கிறவர்களுக்கு நித்திய ஜீவனை தாம் அருளுவதாக சொல்கையிலும், துக்கத்தையும் அலறுதலையும் மரணத்தையும் நீக்கிப்போடுவதாக சொல்கையிலும் அவருடைய வார்த்தையை நாம் நம்பலாம். இந்தக் கடைசி வாக்குறுதி கண்டிப்பாக நிறைவேறும் என்பதை அப்போஸ்தலனாகிய யோவானுக்குக் கொடுத்த இந்தக் கட்டளை மூலம் யெகோவா கோடிட்டுக் காண்பித்தார்: “இந்த வசனங்கள் சத்தியமும் உண்மையுமானவைகள், இவைகளை எழுது.”—வெளிப்படுத்துதல் 21:4, 5; நீதிமொழிகள் 15:9; யோவான் 3:36.
15. சாத்தான் பரப்பிவிடும் சில பொய்கள் யாவை?
15 சாத்தானோ யெகோவாவுக்கு நேர் எதிரானவன். ஜனங்களுக்கு அறிவொளியூட்டுவதற்குப் பதிலாக ஏமாற்றுகிறான். ஜனங்களை தூய வணக்கத்திலிருந்து வழிவிலகச் செய்ய வேண்டுமென்ற தன் குறிக்கோளை நிறைவேற்ற எக்கச்சக்கமான பொய்களை பரப்பிவருகிறான். உதாரணமாக, கடவுள் நம்மிடம் நெருங்கிவர விரும்புவதில்லை, பூமியிலுள்ள துன்பத்தைப் பற்றியெல்லாம் அவருக்கு அக்கறை இல்லை என்றெல்லாம் நம்மை நம்பவைக்க சாத்தான் விழைகிறான். எனினும், யெகோவா தமது சிருஷ்டிகளின் மீது ஆழ்ந்த அக்கறையுடையவராக இருக்கிறாரென்றும், துன்பங்களையும் துயரங்களையும் அனுபவிப்பதைக் கண்டு வருந்துகிறாரென்றும் பைபிள் காட்டுகிறது. (அப்போஸ்தலர் 17:24-30) ஆவிக்குரிய காரியங்களை நாடித் தொடருவது, வெறும் வீணானது என ஜனங்கள் நம்ப வேண்டும் என்றும் சாத்தான் விரும்புகிறான். இதற்கு நேர்மாறாக, வேதவசனங்கள் நமக்கு இவ்வாறு உறுதி கூறுகின்றன: “உங்கள் கிரியையையும், . . . தமது நாமத்திற்காகக் காண்பித்த அன்புள்ள பிரயாசத்தையும் மறந்துவிடுகிறதற்கு தேவன் அநீதியுள்ளவரல்லவே.” மேலும், “அவர் தம்மைத் தேடுகிறவர்களுக்குப் பலன் அளிக்கிறவரென்றும்” அவை தெளிவாகக் கூறுகின்றன.—எபிரெயர் 6:10; 11:6.
16. கிறிஸ்தவர்கள் ஏன் விழிப்புடன் நிலைத்திருந்து சத்தியத்தை உறுதியாய் பற்றிக்கொள்ள வேண்டும்?
16 சாத்தானைக் குறித்து அப்போஸ்தலன் பவுல் இவ்வாறு எழுதினார்: “தேவனுடைய சாயலாயிருக்கிற கிறிஸ்துவின் மகிமையான சுவிசேஷத்தின் ஒளி அவிசுவாசிகளாகிய அவர்களுக்குப் பிரகாசமாயிராதபடிக்கு, இப்பிரபஞ்சத்தின் தேவனானவன் அவர்களுடைய மனதைக் குருடாக்கினான்.” (2 கொரிந்தியர் 4:4) ஏவாளைப் போல் சிலர், பிசாசாகிய சாத்தானால் பெருமளவு வஞ்சிக்கப்படுகிறார்கள். மற்றவர்கள் ஆதாமின் வழியைப் பின்பற்றுகிறார்கள், அதாவது வேண்டுமென்றே கீழ்ப்படியாமையின் பாதையில் செல்கிறார்கள். (யூதா 5, 11) ஆகவே கிறிஸ்தவர்கள் விழிப்புடன் நிலைத்திருந்து சத்தியத்தை உறுதியாய் பற்றிக்கொள்வது இன்றியமையாதது.
‘மாயமற்ற விசுவாசத்தை’ யெகோவா கேட்கிறார்
17. யெகோவாவின் தயவைப் பெற நாம் என்ன செய்ய வேண்டும்?
17 யெகோவா தமது எல்லா வழிகளிலும் சத்தியமுள்ளவராக இருப்பதால், தம்மை வணங்குவோரும் சத்தியமுள்ளவர்களாக இருக்கும்படி எதிர்பார்க்கிறார். சங்கீதக்காரன் இவ்வாறு எழுதினார்: “கர்த்தாவே, யார் உம்முடைய கூடாரத்தில் தங்குவான்? யார் உம்முடைய பரிசுத்த பர்வதத்தில் வாசம்பண்ணுவான்? உத்தமனாய் நடந்து, நீதியை நடப்பித்து, மனதாரச் [“தன் இருதயத்தில்,” NW] சத்தியத்தைப் பேசுகிறவன்தானே.” (சங்கீதம் 15:1, 2) இந்த வார்த்தைகளைப் பாடிய யூதர்களுக்கு, யெகோவாவின் பரிசுத்த பர்வதம், சந்தேகமில்லாமல் சீயோன் பர்வதத்தை மனதிற்குக் கொண்டு வந்தது; அங்குதான் அரசனாகிய தாவீது, தான் எழுப்பிய கூடாரத்தில் உடன்படிக்கை பெட்டியை வைத்தார். (2 சாமுவேல் 6:12, 17) அந்தப் பர்வதமும் கூடாரமும், அடையாளப்பூர்வமாய் யெகோவா வாசம் செய்த இடத்தை மனதிற்குக் கொண்டு வந்தன. அங்கு ஜனங்கள் கடவுளை அணுகி அவருடைய தயவிற்காக மன்றாட முடிந்தது.
18. (அ) கடவுளுடைய நண்பர்களாக இருப்பதற்கு என்ன செய்ய வேண்டும்? (ஆ) அடுத்த கட்டுரை எதை கலந்தாராயும்?
18 யெகோவாவின் நட்பை விரும்புகிற எவரும் சத்தியத்தை வெறுமனே தன் உதடுகளால் மட்டுமல்ல, ‘தன் இருதயத்திலும்’ பேச வேண்டும். கடவுளின் உண்மையான நண்பர்கள் நேர்மையான இருதயமுள்ளவர்களாக இருக்க வேண்டும், மேலும் ‘மாயமற்ற விசுவாசத்தின்’ அத்தாட்சியை அளிக்க வேண்டும். ஏனெனில் சத்தியமுள்ள செயல்கள் இருதயத்திலிருந்தே பிறக்கின்றன. (1 தீமோத்தேயு 1:5; மத்தேயு 12:34, 35) கடவுளுக்கு நண்பனாயிருப்பவன் தவறான வழியில் செல்பவனாகவோ பிறரை வஞ்சிப்பவனாகவோ இரான். ஏனெனில் “வஞ்சகன் யெகோவாவுக்கு அருவருப்பு.” (சங்கீதம் 5:6, தி.மொ.) பூமியெங்குமுள்ள யெகோவாவின் சாட்சிகள், தங்கள் கடவுளைப் போலவே சத்தியமுள்ளவர்களாய் இருப்பதற்குக் கடினமாக பிரயாசப்படுகிறார்கள். அடுத்த கட்டுரை இந்தப் பொருளை கலந்தாராயும்.
எவ்வாறு பதிலளிப்பீர்கள்?
• எல்லாவற்றையும் பற்றிய சத்தியம் யெகோவாவுக்கு ஏன் தெரியும்?
• யெகோவா சத்தியபரர் என எது காட்டுகிறது?
• எவ்வாறு யெகோவா சத்தியத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்?
• சத்தியத்தைக் குறித்ததில் நம்மிடம் என்ன எதிர்பார்க்கப்படுகிறது?
[பக்கம் 10-ன் படங்கள்]
சத்தியபரரான கடவுள் தாம் படைத்திருக்கிற எல்லாவற்றையும் பற்றி நன்கு அறிந்திருக்கிறார்
[பக்கம் 12, 13-ன் படங்கள்]
யெகோவாவின் வாக்குறுதிகள் கண்டிப்பாக நிறைவேறும்