கடவுளுடைய சட்டங்கள் நம்முடைய நன்மைக்கே
“உமது வேதத்தில் [‘சட்டத்தில்,’ தமிழ் கத்தோலிக்க பைபிள்] நான் எவ்வளவு பிரியமாயிருக்கிறேன்.”—சங்கீதம் 119:97.
1. கடவுளுடைய சட்டங்களுக்குக் கீழ்ப்படிவதைக் குறித்து என்ன மனநிலை இன்று பொதுவாக நிலவுகிறது?
கடவுளுடைய சட்டங்களுக்குக் கீழ்ப்படிவதில் இன்று பெரும்பாலோருக்கு விருப்பம் இல்லை. கண்ணுக்குப் புலப்படாத உயர்ந்த அதிகாரத்திற்கு பணிந்துபோவது அர்த்தமற்றது என்று பலர் நினைக்கிறார்கள். நாம் வாழும் இக்காலத்தில் மக்களின் தராதரங்கள் மாறிக்கொண்டே இருக்கின்றன; எது சரி எது தவறு என்பது தனிப்பட்டவருடைய விருப்பத்திற்கு விடப்படுகிறது; சில சந்தர்ப்பங்களில் இதுதான் சரி இதுதான் தவறு என்று திட்டவட்டமாக சொல்ல முடிவதில்லை. (நீதிமொழிகள் 17:15; ஏசாயா 5:20) அண்மையில் நடத்தப்பட்ட சுற்றாய்வு ஒன்று, மதச்சார்பற்ற பல சமுதாயங்களில் சர்வசாதாரணமாக காணப்படும் சிந்தனையை படம்பிடித்துக் காட்டுகிறது. “பெரும்பாலான அமெரிக்கர்கள், எது சரி, எது நல்லது, எது அர்த்தமுள்ளது என்பதை தாங்களாகவே தீர்மானித்துக்கொள்ள விரும்புகிறார்கள்” என்பதை இது சுட்டிக்காட்டியது. “அதிக கண்டிப்பில்லாத கடவுளை” அவர்கள் விரும்புகிறார்கள். “கண்டிப்பான சட்டதிட்டங்களை அவர்கள் விரும்புவதில்லை. தார்மீகத்திலோ வேறெதிலாவதோ நம்பிக்கையுள்ள கண்டிப்பான மேலதிகாரிகளை அவர்கள் விரும்புவதில்லை.” இன்று “நேர்மையான, ஒழுக்கமிக்க வாழ்க்கை எது என்பதை தனி நபர்களே தீர்மானித்துக்கொள்ள வேண்டும்” என சமூக ஆய்வாளர் ஒருவர் கூறினார். “எந்த வகை மேல் அதிகாரமானாலும் சரி மக்களின் உண்மையான தேவைகளுக்கேற்ப தன் சட்டங்களை மாற்றி அமைத்துக்கொள்ள வேண்டும்” என்றும் அவர் கூறினார்.
2. பைபிளில் முதல் முதலாக குறிப்பிடப்பட்ட சட்டம் கடவுளுடைய ஆசீர்வாதத்தோடும் அங்கீகாரத்தோடும் நெருக்கமாக தொடர்புடையதாக இருப்பது எவ்வாறு காட்டப்படுகிறது?
2 யெகோவாவுடைய சட்டங்களின் மதிப்பைக் குறித்து இத்தனை அநேகர் சந்தேகமெழுப்புவதால், அவை நம்முடைய நன்மைக்கானவையே என்பதில் நம்முடைய நம்பிக்கையை உறுதி செய்துகொள்வது அவசியம். முதல் முதலாக சட்டத்தைப் பற்றி பைபிளில் எங்கே குறிப்பிடப்பட்டிருக்கிறது என்பதைப் பார்க்கலாம். ஆதியாகமம் 26:4-ல் கடவுள் சொன்னதை நாம் இவ்வாறு வாசிக்கிறோம்: “ஆபிரகாம் . . . என் விதிகளையும், என் கற்பனைகளையும், என் நியமங்களையும், என் பிரமாணங்களையும் [“சட்டங்களையும்,” NW] கைக்கொண்[டான்].” யெகோவா விளக்கமான விவரங்களடங்கிய சட்ட தொகுப்பை ஆபிரகாமின் சந்ததியாருக்குக் கொடுப்பதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பாகவே இந்த வார்த்தைகளை சொன்னார். கடவுளுடைய சட்டங்கள் உட்பட அனைத்திலும் அவருக்குக் கீழ்ப்படிந்த ஆபிரகாமை அவர் எவ்வாறு ஆசீர்வதித்தார்? “உன் சந்ததிக்குள் பூமியிலுள்ள சகல ஜாதிகளும் ஆசீர்வதிக்கப்படும்” என்ற வாக்கை யெகோவா அவருக்குக் கொடுத்தார். (ஆதியாகமம் 22:18) எனவே, கடவுளுடைய சட்டங்களுக்கு கீழ்ப்படிவதற்கும் அவருடைய ஆசீர்வாதங்களையும் அங்கீகாரத்தையும் பெறுவதற்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது.
3. (அ) யெகோவாவின் சட்டத்தைக் குறித்து ஒரு சங்கீதக்காரன் என்ன உணர்வை வெளிப்படுத்தினார்? (ஆ) என்ன கேள்விகளுக்கு நாம் கவனம் செலுத்த வேண்டும்?
3 யூதாவின் பிரபுவாகவும் பின்னர் அரசராகவும் இருந்த சங்கீதக்காரன் ஒருவர், பொதுவாக சட்டத்துடன் சம்பந்தப்படுத்தி சொல்லப்படாத ஓர் உணர்வை வெளிப்படுத்தி கூறினார். அவர் கடவுளிடம் இவ்வாறு சொன்னார்: ‘உமது வேதத்தில் [“சட்டத்தில்,” கத்.பை.] நான் எவ்வளவு பிரியமாயிருக்கிறேன்.’ (சங்கீதம் 119:97) அவர் ஏதோ உணர்ச்சிவசப்பட்டு இவ்வாறு கூறவில்லை. கடவுளுடைய சட்டங்களில் காணப்படும் அவருடைய சித்தத்தை நேசித்ததால் அதைச் சொன்னார். கடவுளுடைய பரிபூரண மகனாகிய இயேசு கிறிஸ்துவும் இதே போன்ற உணர்வுகளை வெளிப்படுத்தினார். இயேசு இவ்வாறு சொன்னதாக தீர்க்கதரிசனமாக விவரிக்கப்பட்டது: “என் தேவனே, உமக்குப் பிரியமானதைச் செய்ய விரும்புகிறேன்; உமது நியாயப்பிரமாணம் என் உள்ளத்திற்குள் இருக்கிறது.” (சங்கீதம் 40:8; எபிரெயர் 10:9) நாம் எப்படி? விருப்பத்துடன் கடவுளுடைய சித்தத்தை செய்கிறோமா? யெகோவாவின் சட்டங்கள் எவ்வளவு பயன்தரத்தக்கவை, பிரயோஜனமானவை என்பதை நாம் உண்மையில் உறுதியாக நம்புகிறோமா? நம்முடைய வணக்கத்தில், அன்றாட வாழ்க்கையில், தீர்மானங்களில், மற்றவர்களோடுள்ள உறவில் கடவுளுடைய சட்டங்களுக்குக் கீழ்ப்படிதல் எந்த இடத்தை வகிக்கிறது? கடவுளுடைய சட்டத்தை நேசிப்பதற்கு, சட்டங்களை ஏற்படுத்தவும் செயல்படுத்தவும் அவருக்கு ஏன் உரிமை இருக்கிறது என்பதை நாம் புரிந்துகொள்வது அவசியம்.
யெகோவா—சட்டங்களை ஏற்படுத்த உரிமையுள்ளவர்
4. சட்டங்களை ஏற்படுத்துவதற்கு யெகோவாவுக்கு மாத்திரமே ஏன் முழு உரிமையும் இருக்கிறது?
4 படைப்பாளராக இருப்பதால், யெகோவாவே சட்டங்களை ஏற்படுத்த முழு உரிமையும் உடையவர். (வெளிப்படுத்துதல் 4:11) “கர்த்தர் [யெகோவா] நம்முடைய நியாயப்பிரமாணிகர்” என ஏசாயா தீர்க்கதரிசி கூறினார். (ஏசாயா 33:22) உயிருள்ள, உயிரற்ற படைப்புகளைக் கட்டுப்படுத்தும் இயற்கை சட்டங்களை அவர் ஏற்படுத்தியிருக்கிறார். (யோபு 38:4-38; 39:1-12; சங்கீதம் 104:5-19) மனிதனை கடவுள் படைத்ததால் அவன் அவரது இயற்கை சட்டத்துக்கு கட்டுப்பட்டவனாகவே இருக்கிறான். சுயமாக சிந்திக்கும் திறமையுடன் சுதந்திர ஜீவியாக படைக்கப்பட்டான்; என்றாலும், கடவுளுடைய தார்மீக, ஆன்மீக சட்டங்களுக்குக் கட்டுப்பட்டிருக்கையிலேயே மகிழ்ச்சியுள்ளவனாக இருக்கிறான்.—ரோமர் 12:1; 1 கொரிந்தியர் 2:14-16.
5. கலாத்தியர் 6:7-லுள்ள நியமம் கடவுளுடைய சட்டங்களைப் பொறுத்தவரை எவ்வாறு உண்மையாக உள்ளது?
5 யெகோவாவின் இயற்பியல் சட்டங்களை மீற முடியாது என்பது நமக்குத் தெரியும். (எரேமியா 33:20, 21) ஒரு நபர் புவியீர்ப்பு போன்ற இயற்பியல் சட்டங்களை மீறுகையில் அதன் பலனை நிச்சயம் அனுபவிக்கிறார். அதேவிதமாகவே கடவுளுடைய ஒழுக்க சட்டங்களும் மாற்ற முடியாதவை, அவற்றிலிருந்து தந்திரமாக தப்பவும் முடியாது, அவற்றை மீறிவிட்டு தண்டனைக்கு தப்பிவிடலாம் என தப்புக்கணக்கு போடவும் முடியாது. அவருடைய இயற்கை சட்டங்களைப் போலவே இவையும் கட்டாயமாக செயல்படுத்தப்படுகின்றன, ஆனால் அவற்றைப் போல் இவற்றிற்கு உடனடி விளைவுகள் ஏற்படாதிருக்கலாம். “தேவன் தம்மைப் பரியாசம் பண்ணவொட்டார்; மனுஷன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான்.”—கலாத்தியர் 6:7; 1 தீமோத்தேயு 5:24.
யெகோவாவின் சட்டங்கள் பரந்த இயல்புடையவை
6. கடவுளுடைய சட்டங்களில் என்னென்ன விஷயங்கள் அடங்கியிருக்கின்றன?
6 கடவுளுடைய சட்டங்களுக்கு தலைசிறந்த எடுத்துக்காட்டு மோசேயின் நியாயப்பிரமாண சட்டமாகும். (ரோமர் 7:12) பின்னான காலத்தில் யெகோவா தேவன் மோசேயின் நியாயப்பிரமாண சட்டத்துக்குப் பதிலாக “கிறிஸ்துவினுடைய பிரமாணத்தை” கொடுத்தார்.a (கலாத்தியர் 6:2; 1 கொரிந்தியர் 9:21) கிறிஸ்தவர்களாக நாம், “சுயாதீனப் பிரமாணமாகிய பூரணப் பிரமாண”த்தின் கீழ் இருக்கிறோம்; நாம் நம்ப வேண்டிய கோட்பாடுகள் அல்லது பின்பற்ற வேண்டிய வணக்கமுறைகள் போன்ற வாழ்க்கையின் ஒருசில அம்சங்களுக்கு மாத்திரமே கடவுள் கட்டளைகளைக் கொடுக்கவில்லை என்பதை புரிந்துகொண்டிருக்கிறோம். வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் பின்பற்றுவதற்கு அவர் தராதரங்களை ஏற்படுத்தியிருக்கிறார். குடும்ப விவகாரங்கள், வியாபார நடவடிக்கைகள், எதிர்பாலாரோடு நடந்துகொள்ளும் விதம், உடன் கிறிஸ்தவர்களிடமாக நம்முடைய மனநிலை, மெய் வணக்கத்தில் பங்குகொள்ளுதல் ஆகிய அனைத்துமே அவற்றில் அடங்கும்.—யாக்கோபு 1:25, 27.
7. கடவுளுடைய முக்கியமான சட்டங்களுக்கு உதாரணங்களைக் கொடுங்கள்.
7 உதாரணமாக, பைபிள் இவ்வாறு கூறுகிறது: “வேசிமார்க்கத்தாரும், விக்கிரகாராதனைக்காரரும், விபசாரக்காரரும், சுயபுணர்ச்சிக்காரரும், ஆண்புணர்ச்சிக்காரரும், திருடரும், பொருளாசைக்காரரும், வெறியரும், உதாசினரும், கொள்ளைக்காரரும் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லை.” (1 கொரிந்தியர் 6:9, 10) ஆம், விபசாரமும் வேசித்தனமும் “காதல் விவகாரங்கள்” மட்டுமே அல்ல. ஓரினப்புணர்ச்சி என்பது “மாற்றுவகையான வாழ்க்கை முறை” மட்டுமே அல்ல. இவை யெகோவாவின் சட்டங்களுக்கு முரணானவை. திருடுவதும் பொய் சொல்லுவதும் பழிதூற்றுவதும்கூட யெகோவாவின் சட்டங்களை மீறுவதாகும். (சங்கீதம் 101:5; கொலோசெயர் 3:9; 1 பேதுரு 4:15) தற்பெருமை பேசுவதை யாக்கோபு கண்டிக்கிறார், புத்தியீனமான பேச்சையும் பரியாசத்தையும் தவிர்க்கும்படி பவுல் நமக்கு ஆலோசனை கூறுகிறார். (எபேசியர் 5:4; யாக்கோபு 4:16) கிறிஸ்தவர்களுக்கு, நடத்தை சம்பந்தமான இந்த எல்லா சட்டங்களுமே கிறிஸ்துவின் பரிபூரண சட்டத்தில் அடங்கியுள்ளன.—சங்கீதம் 19:7.
8. (அ) யெகோவாவின் சட்டம் எத்தகைய இயல்புடையது? (ஆ) “சட்டம்” என்பதற்குரிய எபிரெய வார்த்தையின் அடிப்படை அர்த்தம் என்ன?
8 யெகோவாவின் வார்த்தையில் காணப்படும் இப்படிப்பட்ட அடிப்படை விதிகள், உணர்ச்சியற்ற சட்ட தொகுப்புகள் மட்டுமே அல்ல. சமநிலையான, பயனுள்ள வாழ்க்கைக்கு அஸ்திவாரமாக இருந்து, நடத்தையின் எல்லா அம்சங்களிலும் பிரயோஜனம் அளிக்கின்றன. கடவுளுடைய சட்டம் உற்சாகப்படுத்துகிறது, நன்னெறி சார்ந்தது, போதனை அளிக்கிறது. (சங்கீதம் 119:72) சங்கீதக்காரன் பயன்படுத்திய சட்டம் (வேதம்) என்ற சொல் எபிரெய வார்த்தையான டோராவிலிருந்து மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. பைபிள் கல்விமான் ஒருவர் இவ்வாறு கூறுகிறார்: “இந்த வார்த்தை, வழிகாட்டு, வழிநடத்து, குறிவை, குறிபார்த்து சுடு என்று அர்த்தம் தரும் வினைச்சொல்லிலிருந்து வருகிறது. . . . அப்படியென்றால் அதன் அர்த்தம் நடத்தைக்குரிய விதி என்பதாகும்.” சங்கீதக்காரன் சட்டத்தை கடவுளிடமிருந்து வந்த பரிசாக கருதினார். நாமும் அதே விதமாக கருதி, நம்முடைய வாழ்க்கையை செதுக்கி சீராக்க அதை அனுமதிக்க வேண்டுமல்லவா?
9, 10. (அ) நம்பத்தகுந்த அறிவுரை நமக்கு ஏன் தேவை? (ஆ) எப்படி மாத்திரமே நாம் மகிழ்ச்சியாகவும் வெற்றிகரமாயும் வாழ முடியும்?
9 எல்லா சிருஷ்டிகளுக்குமே நம்பத்தகுந்த அறிவுரையும் நம்பகமான வழிநடத்துதலும் தேவை. மனிதனைவிட மேலான இயேசுவுக்கும் மற்ற தூதர்களுக்கும்கூட இது பொருந்துகிறது. (சங்கீதம் 8:5; யோவான் 5:30; எபிரெயர் 2:7; வெளிப்படுத்துதல் 22:8, 9) பரிபூரணமாக படைக்கப்பட்ட இவர்களே கடவுளுடைய வழிநடத்துதலிலிருந்து பயனடைய முடியுமானால், அபூரண மனிதர்கள் எந்தளவு நன்மை அடையலாம்! மனித சரித்திரமும் நம்முடைய அனுபவமும் எரேமியா தீர்க்கதரிசியின் வார்த்தைகள் உண்மை என்பதை நிரூபித்திருக்கின்றன: “கர்த்தாவே, மனுஷனுடைய வழி அவனாலே ஆகிறதல்லவென்றும், தன் நடைகளை நடத்துவது நடக்கிறவனாலே ஆகிறதல்லவென்றும் அறிவேன்.”—எரேமியா 10:23.
10 நம்முடைய வாழ்க்கையில் மகிழ்ச்சியையும் வெற்றியையும் காண விரும்பினால், கடவுளுடைய வழிநடத்துதலை நாம் நாட வேண்டும். சாலொமோன் ராஜா கடவுளுடைய வழிநடத்துதல் இல்லாமல் சொந்த தராதரங்களின்படி வாழ்வது எவ்வளவு ஆபத்தானது என்பதை அறிந்திருந்தார்: “மனுஷனுக்குச் செம்மையாய்த் தோன்றுகிற வழி உண்டு; அதின் முடிவோ மரண வழிகள்.”—நீதிமொழிகள் 14:12.
யெகோவாவின் சட்டங்களை மனதார போற்றுவதற்கு காரணங்கள்
11. கடவுளுடைய சட்டங்களை புரிந்துகொள்ள நாம் ஏன் ஆவலுள்ளவர்களாய் இருக்க வேண்டும்?
11 யெகோவாவின் சட்டங்களை புரிந்துகொள்வதற்கு உள்ளான ஆசையை வளர்த்துக்கொள்வது நமக்கு நல்லது. சங்கீதக்காரன் பின்வருமாறு சொன்னபோது இப்படிப்பட்ட ஆசையைத்தான் வெளிப்படுத்தினார்: “உமது வேதத்திலுள்ள அதிசயங்களை நான் பார்க்கும்படிக்கு, என் கண்களைத் திறந்தருளும்.” (சங்கீதம் 119:18) கடவுளையும் அவருடைய வழிகளையும் பற்றி நாம் அதிகமதிகமாக கற்றுவருகையில் ஏசாயாவின் வார்த்தைகளின் உண்மையை நாம் நன்கு புரிந்துகொள்வோம்: “பிரயோஜனமாயிருக்கிறதை உனக்குப் போதித்து, நீ நடக்க வேண்டிய வழியிலே உன்னை நடத்துகிற உன் தேவனாகிய கர்த்தர் நானே. ஆ, என் கற்பனைகளைக் கவனித்தாயானால் நலமாயிருக்கும்.” (ஏசாயா 48:17, 18) தம்முடைய கற்பனைகளுக்குக் கவனம் செலுத்துவதன் மூலம் மக்கள் பேராபத்துக்களை தவிர்த்து வாழ்க்கையை மகிழ்ந்து அனுபவிக்க வேண்டும் என்று யெகோவா நெஞ்சார விரும்புகிறார். கடவுளுடைய சட்டங்களை மனதார போற்றுவதற்கு உதவும் சில முக்கிய காரணங்களை நாம் ஆராயலாம்.
12. நம்மைப் பற்றி யெகோவா அறிந்திருப்பது எவ்விதமாக அவரை மிகச் சிறந்த நியாயப்பிரமாணிகராக ஆக்குகிறது?
12 தெய்வீக சட்டம் நம்மை முற்றும் முழுக்க அறிந்தவரிடமிருந்து வருகிறது. யெகோவா நம்முடைய படைப்பாளராக இருப்பதால், மனிதரை அவர் முழுமையாக அறிந்திருப்பார் என்பது நியாயமானதே. (சங்கீதம் 139:1, 2; அப்போஸ்தலர் 17:24-28) யெகோவா நம்மை அறிந்திருப்பது போல உற்ற நண்பர்கள், உறவினர்கள், பெற்றோரும்கூட அறிந்திருக்க மாட்டார்கள். சொல்லப்போனால், நம்மைப் பற்றி நாம் அறிந்திருப்பதைவிட நன்றாகவே யெகோவா நம்மை அறிந்திருக்கிறார்! நம்முடைய ஆன்மீகம், உணர்ச்சி, மனது, சரீரம் சம்பந்தப்பட்ட தேவைகளை நம் படைப்பாளரைப் போல் புரிந்துகொண்டிருப்பவர் வேறு யாரும் இருக்க முடியாது. நம்மை அவர் கவனிக்கும்போது, நம் உருவமைப்பு, நம் ஆசைகள், நம் நாட்டங்கள் ஆகியவற்றை மிகவும் நுணுக்கமாக புரிந்துகொள்கிறார். யெகோவா நம்முடைய வரையறைகளையும் நம்மால் செய்ய முடிகிற நன்மையான காரியங்களையும் அறிவார். “நம்முடைய உருவம் இன்னதென்று அவர் அறிவார்; நாம் மண்ணென்று நினைவுகூருகிறார்” என சங்கீதக்காரன் கூறுகிறார். (சங்கீதம் 103:14) எனவே கடவுளுடைய சட்டங்களுக்கு இசைவாக வாழ முயன்று, அவருடைய வழிநடத்துதலுக்கு நம்மை மனமுவந்து கீழ்ப்படுத்தினால் ஆவிக்குரிய பாதுகாப்பு உணர்வை அனுபவிக்கலாம்.—நீதிமொழிகள் 3:19-26.
13. நம்முடைய நித்திய நலனில் யெகோவா உண்மையில் அக்கறையுள்ளவர் என்று நாம் ஏன் நம்பலாம்?
13 தெய்வீக சட்டம் நம்மை நேசிக்கிறவரால் ஏற்படுத்தப்பட்டது. கடவுள் நம்முடைய நித்திய நலனில் பெரிதும் அக்கறையுள்ளவர். பெரும் தியாகத்தைப் பொருட்படுத்தாமல், “அநேகரை மீட்கும்பொருளாக” தம்முடைய குமாரனை தந்தவரல்லவா அவர்? (மத்தேயு 20:28) ‘நம் திராணிக்கு மேலாக சோதிக்கப்பட இடம்கொடுக்க மாட்டார்’ என்று யெகோவா நமக்கு வாக்குறுதி அளிக்கவில்லையா? (1 கொரிந்தியர் 10:13) ‘அவர் நம்மை விசாரிக்கிறவர்’ என்று பைபிள் உறுதியளிக்கிறது அல்லவா? (1 பேதுரு 5:7) மனித சிருஷ்டிகளுக்கு அதிக பயனுள்ள வழிநடத்துதலை கொடுப்பதில் அவரைவிடவும் அக்கறையுள்ளவர் வேறு யாரும் இருக்க முடியாது. நமக்கு எது நல்லது என்பதும், எது சந்தோஷத்தை அல்லது துக்கத்தைத் தரும் என்ற வரையறையும் அவருக்குத் தெரியும். நாம் அபூரணராக, தவறுகளை செய்கிறவர்களாக இருந்தாலும் நாம் நீதியைப் பின்பற்றினால் நமக்கு ஜீவனையும் ஆசீர்வாதங்களையும் தரும் விதங்களில் அன்பை பொழிவார்.—எசேக்கியேல் 33:11.
14. எந்த முக்கியமான வழியில் கடவுளுடைய சட்டம் மனித கருத்துக்களிலிருந்து வித்தியாசப்படுகிறது?
14 தெய்வீக சட்டங்கள் மாறாதவை என்பது பல முறை உறுதி செய்யப்பட்டுள்ளது. நாம் வாழும் இந்தக் கொந்தளிப்பான காலங்களில், யெகோவா “அநாதியாய் என்றென்றைக்கும்” உறுதியான கன்மலையாக இருக்கிறார். (சங்கீதம் 90:2) அவர் தம்மைக் குறித்து, “நான் கர்த்தர் [யெகோவா], நான் மாறாதவர்” என கூறியுள்ளார். (மல்கியா 3:6) மாறிக்கொண்டே இருக்கும் மனித கருத்துக்கள் எனும் புதைமணலைப் போல் இல்லாமல் பைபிளில் காணப்படும் கடவுளுடைய தராதரங்கள் முற்றிலும் நம்பகமானவை. (யாக்கோபு 1:17) உதாரணமாக, பிள்ளைகளை கட்டுப்படுத்தாமல் அவர்கள் இஷ்டப்படி விட்டுவிட வேண்டும் என சில ஆண்டுகளாக மனோதத்துவ நிபுணர்கள் சொல்லி வந்தார்கள். ஆனால் பிறகு அவர்களில் சிலர் மனதை மாற்றி தங்களுடைய ஆலோசனை தவறு என்று ஒப்புக்கொண்டார்கள். இந்த விஷயத்தின் பேரில் உலக தராதரங்களும் அறிவுரைகளும் எப்போதும் மாறிக்கொண்டே இருக்கின்றன. ஆனால் யெகோவாவின் வார்த்தை மாறாதது. பிள்ளைகளை எப்படி அன்புடன் வளர்ப்பது என பல நூற்றாண்டுகளாக பைபிள் புத்திமதி கொடுத்து வந்திருக்கிறது. “பிதாக்களே, நீங்களும் உங்கள் பிள்ளைகளைக் கோபப்படுத்தாமல், கர்த்தருக்கேற்ற சிட்சையிலும் போதனையிலும் அவர்களை வளர்ப்பீர்களாக” என அப்போஸ்தலன் பவுல் எழுதினார். (எபேசியர் 6:4) யெகோவாவின் தராதரங்களை நாம் நம்பலாம், அது ஒருபோதும் மாறாது என்பதை அறிவது எவ்வளவு நம்பிக்கையூட்டுவதாய் இருக்கிறது!
கடவுளுடைய சட்டங்களுக்குக் கீழ்ப்படிகிறவர்களுக்கு ஆசீர்வாதங்கள்
15, 16. (அ) யெகோவாவின் தராதரங்களைப் பின்பற்றுவதால் என்ன பலன் கிடைக்கும்? (ஆ) கடவுளுடைய சட்டங்கள் எவ்வாறு மண வாழ்க்கைக்கு தகுந்த வழிகாட்டியாக இருக்க முடியும்?
15 கடவுள் தம்முடைய தீர்க்கதரிசியாகிய ஏசாயாவின் மூலம், ‘என் வாயிலிருந்து புறப்படும் வசனம் . . . வாய்க்கும்’ என கூறினார். (ஏசாயா 55:11) அதே போலவே, அவருடைய வார்த்தையில் காணப்படும் தராதரங்களைப் பின்பற்ற ஊக்கமாக முயற்சி எடுத்தால் நம்முடைய காரியமும் வாய்க்கும், பிரயோஜனமான காரியங்களை செய்வோம், மகிழ்ச்சியை கண்டடைவோம்.
16 மண வாழ்க்கையில் வெற்றி காண கடவுளுடைய சட்டங்கள் எந்தளவு தகுந்த வழிகாட்டியாக இருக்கின்றன என்பதை கவனியுங்கள். “விவாகம் யாவருக்குள்ளும் கனமுள்ளதாயும், விவாகமஞ்சம் அசுசிப்படாததாயுமிருப்பதாக; வேசிக்கள்ளரையும் விபசாரக்காரரையும் தேவன் நியாயந்தீர்ப்பார்.” (எபிரெயர் 13:4) துணைவர்கள் இருவருமே ஒருவருக்கொருவர் அன்பும் மரியாதையும் காட்டுகிறவர்களாய் இருக்க வேண்டும்: “உங்களிலும் அவனவன் தன்னிடத்தில் அன்புகூருவதுபோல, தன் மனைவியினிடத்திலும் அன்புக்கூரக்கடவன்; மனைவியும் புருஷனிடத்தில் பயபக்தியாயிருக்கக்கடவள்.” (எபேசியர் 5:33) எப்படிப்பட்ட அன்பு தேவை என்பதை 1 கொரிந்தியர் 13:4-8 விவரிக்கிறது: “அன்பு நீடிய சாந்தமும் தயவுமுள்ளது; அன்புக்குப் பொறாமையில்லை; அன்பு தன்னைப் புகழாது, இறுமாப்பாயிராது, அயோக்கியமானதைச் செய்யாது, தற்பொழிவை நாடாது, சினமடையாது, தீங்கு நினையாது, அநியாயத்தில் சந்தோஷப்படாமல், சத்தியத்தில் சந்தோஷப்படும். சகலத்தையும் தாங்கும், சகலத்தையும் விசுவாசிக்கும், சகலத்தையும் நம்பும், சகலத்தையும் சகிக்கும். அன்பு ஒருக்காலும் ஒழியாது.” இப்படிப்பட்ட அன்பு நிறைந்த மண வாழ்க்கை தோல்வியை தழுவாது.
17. மதுபானத்தை உபயோகிப்பது பற்றிய யெகோவாவின் தராதரங்களை பின்பற்றினால் கிடைக்கும் நன்மைகள் யாவை?
17 யெகோவாவின் தராதரங்கள் பிரயோஜனமானவை என்பதற்கு மற்றொரு அத்தாட்சி, அவர் குடிவெறியை கண்டனம் செய்வதில் காணப்படுகிறது. ‘மதுபான பிரியர்களாக’ இருப்பதைக்கூட அவர் ஏற்றுக்கொள்வதில்லை. (1 தீமோத்தேயு 3:3, 8; ரோமர் 13:13) இந்த விஷயத்தின் பேரில் கடவுளுடைய தராதரங்களை அசட்டை செய்கிறவர்கள், குடிவெறியால் ஏற்படும் அல்லது தீவிரமாகும் நோய்களுக்கு ஆளாகிறார்கள். மிதமாய் குடிப்பதைப் பற்றிய பைபிளின் புத்திமதியை அசட்டை செய்து ‘ரிலாக்ஸ் செய்துகொள்வதற்கு உதவுகிறது’ என சொல்லிக்கொண்டு சிலர் குடிக்கும் பழக்கத்துக்கு அடிமையாகியிருக்கிறார்கள். அளவுக்கு அதிகமாக குடிப்பதால் வரும் பிரச்சினைகள் ஏராளம். சுய மரியாதையை இழத்தல், குடும்ப உறவுகளில் மனஸ்தாபங்கள் அல்லது முறிவு, பணம் விரயமாதல், வேலை பறிபோதல் என்று எத்தனை எத்தனையோ. (நீதிமொழிகள் 23:19-21, 29-35) மதுபானங்களை உபயோகிப்பது பற்றிய யெகோவாவின் தராதரங்கள் நமக்கு பாதுகாப்பளிக்கின்றன அல்லவா?
18. பண விஷயங்களில் கடவுளுடைய தராதரங்கள் நடைமுறையில் பயனுள்ளவையாக இருக்கின்றனவா? விளக்கவும்.
18 பண விஷயங்களில்கூட கடவுளுடைய தராதரங்கள் நடைமுறையில் பயனுள்ளவையாய் இருந்திருக்கின்றன. நேர்மையுடன் இருக்கவும் கடினமாக உழைக்கவும் கிறிஸ்தவர்களை பைபிள் உற்சாகப்படுத்துகிறது. (லூக்கா 16:10; எபேசியர் 4:28; கொலோசெயர் 3:24) இந்த ஆலோசனையைப் பின்பற்றுவதால், பல கிறிஸ்தவர்களுக்கு பதவி உயர்வுகள் கிடைத்திருக்கின்றன, ஆட்குறைப்பு செய்யப்படுகையில் இவர்கள் வேலையிலிருந்து நீக்கப்படாமல் வைக்கப்பட்டிருக்கிறார்கள். ஒருவரை அடிமைப்படுத்தும் சூதாட்டம், புகைத்தல், போதைப்பொருள் துஷ்பிரயோகம் போன்ற பைபிளுக்கு எதிரான பழக்க வழக்கங்களை தவிர்ப்பதால் பண சம்பந்தமாகவும் லாபம் கிடைக்கிறது. கடவுளுடைய தராதரங்களை பின்பற்றுவதால் நடைமுறையில் கிடைக்கும் இன்னும் சில பொருளாதார நன்மைகளை உங்களால் எண்ணிப் பார்க்க முடியும் என்பதில் சந்தேகமில்லை.
19, 20. கடவுளுடைய தராதரங்களை ஏற்று அவற்றிற்கு கீழ்ப்படிந்து வாழ்வது ஏன் ஞானமான காரியம்?
19 கடவுளுடைய சட்டங்கள் மற்றும் தராதரங்களிலிருந்து வழிவிலகிச் செல்வது அபூரண மனிதர்களுக்கு வெகு சுலபமாகும். சீனாய் மலையில் இஸ்ரவேலர் எப்படி நடந்துகொண்டார்கள் என்பதை எண்ணிப்பாருங்கள். “இப்பொழுது நீங்கள் என் வாக்கை உள்ளபடி கேட்டு, என் உடன்படிக்கையைக் கைக்கொள்வீர்களானால், சகல ஜனங்களிலும் நீங்களே எனக்குச் சொந்த சம்பத்தாயிருப்பீர்கள்” என கடவுள் அவர்களிடம் சொன்னார். அதற்கு அவர்கள், “கர்த்தர் [யெகோவா] சொன்னவைகளையெல்லாம் செய்வோம்” என்றார்கள். ஆனால் அவர்கள் எந்தளவுக்கு எதிர்மாறாக நடந்துகொண்டார்கள்! (யாத்திராகமம் 19:5, 8; சங்கீதம் 106:12-43) அவர்களைப் போல் அல்லாமல் நாம் கடவுளுடைய தராதரங்களை ஏற்று அவற்றிற்கு கீழ்ப்படிந்து வாழ்வோமாக.
20 நம் வாழ்க்கையை வழிநடத்த யெகோவா கொடுத்திருக்கும் ஒப்பற்ற சட்டங்களை அப்படியே பின்பற்றுவது ஞானமான காரியமாகும், அது மகிழ்ச்சியையும் தரும். (சங்கீதம் 19:7-11) இதை வெற்றிகரமாக செய்வதற்கு கடவுளுடைய நியமங்களின் மதிப்பை நாம் புரிந்துகொள்வதும் அதை நேசிப்பதும் அவசியமாகும். அடுத்த கட்டுரை கலந்தாலோசிக்கும் விஷயமும் அதுவே.
[அடிக்குறிப்பு]
a “கிறிஸ்துவின் பிரமாணம்” பற்றி விளக்கமாக தெரிந்துகொள்ள காவற்கோபுரம், செப்டம்பர் 1, 1996, பக்கங்கள் 14-24-ஐக் காண்க.
உங்களுக்கு நினைவிருக்கிறதா?
• கடவுளுடைய சட்டங்கள் நம்முடைய நன்மைக்கானவையே என்று நாம் ஏன் நம்பலாம்?
• என்ன காரணங்களுக்காக யெகோவாவின் சட்டத்தை நாம் மனதார போற்ற வேண்டும்?
• கடவுளுடைய சட்டங்கள் எவ்வகைகளில் பிரயோஜனமானவை?
[பக்கம் 13-ன் படம்]
யெகோவாவின் சட்டத்துக்கு கீழ்ப்படிந்ததால் ஆபிரகாம் பெற்ற ஆசீர்வாதங்கள் ஏராளம்
[பக்கம் 15-ன் படம்]
இன்றைய பரபரப்பான வாழ்க்கையின் கவலைகள் கடவுளுடைய சட்டத்திலிருந்து அநேகரின் கவனத்தை திசை திருப்பிவிடுகின்றன
[பக்கம் 17-ன் படம்]
பாறையின் மீதுள்ள கலங்கரை விளக்கம் போல கடவுளுடைய சட்டம் உறுதியானது, மாறாதது