உங்கள் அன்பு குறைந்துவிடாமல் பார்த்துக்கொள்ளுங்கள்!
“அக்கிரமம் அதிகமாவதால் அநேகருடைய அன்பு குறைந்துவிடும்.”—மத். 24:12.
1, 2. (அ) மத்தேயு 24:12-ல் இருக்கும் இயேசுவின் வார்த்தைகள் முதலில் யாருக்குப் பொருந்துகின்றன? (ஆ) ஆரம்பக் கால கிறிஸ்தவர்கள் நிறைய பேர் தொடர்ந்து அன்பு காட்டி வந்தார்கள் என்பதை அப்போஸ்தலர் புத்தகம் எப்படிக் காட்டுகிறது? (ஆரம்பப் படம்)
இயேசு பூமியில் இருந்தபோது, ‘இந்தச் சகாப்தத்தின் கடைசிக் கட்டத்துக்கான’ அடையாளங்களைப் பற்றி விளக்கினார். அப்போது அவர் நிறைய அடையாளங்களைச் சொன்னதோடு, “அநேகருடைய அன்பு குறைந்துவிடும்” என்றும் முன்னறிவித்தார். (மத். 24:3, 12) இந்த வார்த்தைகள் முதல் நூற்றாண்டில் இருந்த யூதர்களுக்கு முதலில் பொருந்துகின்றன. இவர்கள் தங்களை கடவுளுடைய பிள்ளைகள் என்று சொல்லிக்கொண்டாலும், கடவுள்மேல் தங்களுக்கு இருந்த அன்பு குறையும்படி விட்டுவிட்டார்கள்.
2 இருந்தாலும், அந்தச் சமயத்தில் இருந்த கிறிஸ்தவர்கள் நிறைய பேர், ‘கிறிஸ்துவைப் பற்றிய நல்ல செய்தியை அறிவிப்பதில்’ மும்முரமாக ஈடுபட்டார்கள். அதோடு, கடவுள்மேலும், சக கிறிஸ்தவர்கள்மேலும், சத்தியத்தைப் பற்றி தெரியாதவர்கள்மேலும் அன்பு காட்டினார்கள். (அப். 2:44-47; 5:42) ஆனாலும், முதல் நூற்றாண்டில் இருந்த இயேசுவின் சீஷர்கள் சிலர், கடவுள்மேல் தங்களுக்கு இருந்த அன்பு குறையும்படி விட்டுவிட்டார்கள்.
3. சில கிறிஸ்தவர்களுடைய அன்பு குறைவதற்கு எது காரணமாக இருந்திருக்கலாம்?
3 எபேசுவில் இருந்த முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்களிடம் இயேசு இப்படிச் சொன்னார்: “உன்னிடம் ஒரு குறை இருக்கிறது. ஆரம்பத்தில் இருந்த அன்பை நீ விட்டுவிட்டாய்.” (வெளி. 2:4) இதற்கான காரணம் என்னவாக இருந்திருக்கலாம்? எபேசுவில் இருந்த கிறிஸ்தவர்கள், தங்களைச் சுற்றியிருந்தவர்கள் தங்களைக் கட்டுப்படுத்தும்படி விட்டிருக்கலாம். (எபே. 2:2, 3) எபேசு, செல்வச் செழிப்பான ஒரு நகரமாக இருந்தது. அங்கிருந்த மக்கள், சொகுசாகவும் ஆடம்பரமாகவும் வாழ்வதற்குத்தான் அதிக முக்கியத்துவம் கொடுத்தார்கள். எபேசுவில் இருந்த நிறைய பேர், ஒழுக்கங்கெட்டவர்களாக இருந்தார்கள்; கடவுளுடைய சட்டங்களுக்குக் கொஞ்சம்கூட மரியாதை காட்டவில்லை. கடவுள்மேலும் மற்றவர்கள்மேலும் சுயநலமற்ற அன்பைக் காட்டுவதைவிட சுகபோகமாக வாழ்வதிலேயே அக்கறையாக இருந்தார்கள்.
4. (அ) நம் நாளில் அன்பு எந்தெந்த விதங்களில் குறைந்திருக்கிறது? (ஆ) எந்த 3 விஷயங்களில் நம் அன்பு பலமாக இருக்க வேண்டும்?
4 அன்பு குறைந்துவிடும் என்று இயேசு சொன்ன தீர்க்கதரிசனம் நம் நாளுக்கும் பொருந்துகிறது. இன்றிருக்கும் மக்களுக்கு கடவுள்மேல் கொஞ்சம்தான் அன்பு இருக்கிறது. கோடிக்கணக்கான மக்கள், உலகத்திலுள்ள பிரச்சினைகளைச் சரி செய்ய கடவுளிடம் உதவி கேட்பதற்குப் பதிலாக, மனித அமைப்புகளிடம் உதவி கேட்கிறார்கள். இன்று, அவர்களுடைய அன்பு குறைந்துகொண்டே வருகிறது. எபேசு சபையில் இருந்தவர்களைப் போலவே, இன்றிருக்கும் யெகோவாவின் ஊழியர்களுடைய அன்பும் குறைந்துவிடலாம். எந்த 3 விஷயங்களில் நம் அன்பு பலமாக இருக்க வேண்டும் என்பதைப் பற்றி இப்போது பார்க்கலாம்: (1) யெகோவாமேல் இருக்கும் அன்பு, (2) பைபிள் சத்தியத்தின் மேல் இருக்கும் அன்பு, (3) சகோதரர்கள்மேல் இருக்கும் அன்பு.
யெகோவாமேல் இருக்கும் அன்பு
5. நாம் ஏன் கடவுள்மேல் அன்பு காட்ட வேண்டும்?
5 எல்லாரையும்விட நாம் யார்மேல் அதிக அன்பு காட்ட வேண்டும்? “‘உன் கடவுளாகிய யெகோவாமேல் உன் முழு இதயத்தோடும் முழு மூச்சோடும் முழு மனதோடும் அன்பு காட்ட வேண்டும்.’ இதுதான் மிக முக்கியமான கட்டளை, முதலாம் கட்டளை” என்று இயேசு சொன்னார். (மத். 22:37, 38) கடவுளுடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படியவும், சகித்திருக்கவும், கெட்டதை வெறுக்கவும் அவர்மேலுள்ள அன்பு நமக்கு உதவும். (சங்கீதம் 97:10-ஐ வாசியுங்கள்.) ஆனால், கடவுள்மேல் நாம் வைத்திருக்கும் அன்பைப் பலவீனப்படுத்த வேண்டும் என்று சாத்தான் முயற்சி செய்கிறான், அவனுடைய உலகமும் முயற்சி செய்கிறது.
6. கடவுள்மேல் இருந்த அன்பை விட்டுவிடுபவர்களுக்கு என்ன ஆகிறது?
6 இந்த உலகத்தில் இருப்பவர்களுக்கு அன்பைப் பற்றி தவறான கருத்துதான் இருக்கிறது. கடவுள்மேல் அன்பு காட்டுவதற்குப் பதிலாக, மக்கள் “சுயநலக்காரர்களாக” இருக்கிறார்கள். (2 தீ. 3:2) சாத்தானால் ஆட்சி செய்யப்படும் இந்த உலகம், ‘உடலின் ஆசையையும் கண்களின் ஆசையையும் பொருள் வசதிகளைப் பகட்டாகக் காட்டிக்கொள்கிற குணத்தையும்தான்’ மக்கள் மத்தியில் வளர்க்கிறது. (1 யோ. 2:16) “பாவ காரியங்களைப் பற்றியே யோசிப்பவர்கள் மரணமடைவார்கள் . . . பாவ காரியங்களைப் பற்றியே யோசிப்பது கடவுளுக்கு விரோதமானது” என்று அப்போஸ்தலன் பவுல் எச்சரித்தார். (ரோ. 8:6, 7) பணம் சேர்ப்பதிலோ பாலியல் ஆசைகளைப் பூர்த்தி செய்வதிலோ தங்கள் வாழ்க்கையை வீணடிப்பவர்களுக்கு ஏமாற்றமும் வேதனையும்தான் மிஞ்சுகின்றன.—1 கொ. 6:18; 1 தீ. 6:9, 10.
7. இன்று கிறிஸ்தவர்களுக்கு என்னென்ன ஆபத்துகள் இருக்கின்றன?
7 மக்கள் கடவுள்மேல் அன்பு காட்டக் கூடாது என்பதற்காக, ஏன், கடவுள் ஒருவர் இருக்கிறார் என்பதைக்கூட அவர்கள் நம்பக் கூடாது என்பதற்காக, சில நாடுகளிலுள்ள நாத்திகர்களும், அறியொணாமைக் கொள்கையினரும், பரிணாமவாதிகளும் சில கருத்துகளைப் பரப்புகிறார்கள். முட்டாள்களும் படிப்பறிவு இல்லாதவர்களும்தான் படைப்பாளர் ஒருவர் இருக்கிறார் என்பதை நம்புவார்கள் என்று மக்களை நினைக்க வைக்கிறார்கள். அதுமட்டுமல்ல, இன்று நிறைய பேருக்குப் படைப்பாளரைவிட விஞ்ஞானிகள்மேல்தான் அதிக மதிப்பு மரியாதை இருக்கிறது. (ரோ. 1:25) இப்படிப்பட்ட கருத்துகள் கிறிஸ்தவர்களையும் பாதிக்கலாம். இது, யெகோவாவோடு நமக்கிருக்கும் பந்தத்தைப் பலவீனமாக்கி விடலாம். அதுமட்டுமல்ல, நம் அன்பும் குறைந்துவிடலாம்.—எபி. 3:12.
8. (அ) என்னென்ன சூழ்நிலைகளில் யெகோவாவின் மக்கள் சோர்ந்துவிடலாம்? (ஆ) 136-ஆம் சங்கீதம் நமக்கு எப்படி ஆறுதலாக இருக்கிறது?
8 சாத்தானுடைய இந்த மோசமான உலகத்தில் வாழ்வதால், நாம் சில சமயங்களில் சோர்ந்துவிடலாம். (1 யோ. 5:19) நாம் ரொம்ப சோர்ந்துவிட்டால், நம் விசுவாசமும் கடவுள்மேல் இருக்கிற அன்பும் குறைந்துவிடும். உதாரணத்துக்கு, முதிர் வயதாலும், மோசமான உடல்நிலையாலும், பணக் கஷ்டத்தாலும் நமக்கு நிறைய பிரச்சினைகள் வரலாம். நாம் நினைத்தபடி சில விஷயங்களைச் செய்ய முடியவில்லை என்று நாம் கவலைப்படலாம். அல்லது, நாம் எதிர்பார்த்தபடி சில விஷயங்கள் நடக்காதபோது நாம் சோர்ந்துவிடலாம். நமக்கு எப்படிப்பட்ட கஷ்டங்கள் வந்தாலும் சரி, யெகோவா நம்மைக் கைவிட்டுவிட்டார் என்று மட்டும் நினைத்துவிடக் கூடாது. சங்கீதம் 136:23-ல் இருக்கிற இந்த ஆறுதலான வார்த்தைகளை யோசித்துப் பாருங்கள்: “அவர் துவண்டுபோயிருந்த நம்மை நினைத்துப் பார்த்தார். அவரே என்றென்றும் மாறாத அன்பைக் காட்டுகிறவர்.” யெகோவா, ‘உதவிக்காக கெஞ்சுவதைக் கேட்கிறார்’ என்றும், அதற்குப் பதில் தருகிறார் என்றும் நாம் நம்பலாம்.—சங். 116:1; 136:24-26.
9. யெகோவாமேல் இருந்த அன்பை விட்டுவிடாமல் இருக்க பவுலுக்கு எது உதவியது?
9 யெகோவா தன்னை எப்படித் தாங்கினார் என்பதை அவருடைய ஊழியரான அப்போஸ்தலன் பவுல் ஆழமாக யோசித்துப் பார்த்தார். அவர் பலமாக இருப்பதற்கு அது உதவியாக இருந்தது. “யெகோவா எனக்குத் துணையாக இருக்கிறார். நான் பயப்பட மாட்டேன், மனிதனால் என்னை என்ன செய்ய முடியும்?” என்று பவுல் கேட்டார். (எபி. 13:6) யெகோவா தன்னை அன்பாகக் கவனித்துக்கொள்வார் என்ற நம்பிக்கை பவுலுக்கு இருந்ததால், வாழ்க்கையில் எதிர்ப்பட்ட சவால்களை அவரால் சமாளிக்க முடிந்தது. கஷ்டமான சூழ்நிலைகள் வந்தபோது, யெகோவாமேல் இருந்த நம்பிக்கையை பவுல் விட்டுவிடவில்லை. சிறையில் இருந்தபோதுகூட, சக கிறிஸ்தவர்களை உற்சாகப்படுத்துவதற்காக அவர் கடிதங்களை எழுதினார். (எபே. 4:1; பிலி. 1:7; பிலே. 1) பல பிரச்சினைகளை அனுபவித்தபோதும், யெகோவாமேல் இருந்த அன்பை அவர் விட்டுவிடவில்லை. ‘எல்லா விதமான ஆறுதலின் கடவுளையே’ அவர் நம்பியிருந்தார். “நமக்கு வருகிற எல்லா சோதனைகளிலும் [கடவுள்] நமக்கு ஆறுதல் தருகிறார்.” (2 கொ. 1:3, 4) பவுலைப் போல நாம் எப்படி யெகோவாமேல் உள்ள அன்பை விட்டுவிடாமல் இருக்கலாம்?
10. யெகோவாமேல் இருக்கிற அன்பை விட்டுவிடாமல் இருப்பதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்?
10 யெகோவாமேல் இருக்கிற அன்பை நாம் விட்டுவிடாமல் இருப்பதற்கான ஒரு வழியைப் பற்றி பவுல் சொன்னார். அதாவது, “எப்போதும் ஜெபம் செய்யுங்கள்” என்று சொன்னார். பிறகு, “விடாமல் ஜெபம் செய்யுங்கள்” என்றும் சொன்னார். (1 தெ. 5:17; ரோ. 12:12) கடவுளிடம் நெருங்கிய பந்தத்தை வைத்துக்கொள்ள ஜெபம் எப்படி உதவும்? நாம் ஜெபம் செய்யும்போது, கடவுளிடம் பேசுகிறோம். அப்படிப் பேசுவதால்தான், நம்மால் கடவுளோடு நல்ல பந்தத்தை வைத்துக்கொள்ள முடிகிறது. (சங். 86:3) நம்முடைய ஆழமான யோசனைகளையும் உணர்ச்சிகளையும் நம்முடைய பரலோகத் தகப்பனாகிய யெகோவாவிடம் சொல்லும்போது, நாம் அவரிடம் நெருங்கிப் போகிறோம். (சங். 65:2) நம்முடைய ஜெபங்களுக்கு அவர் எப்படிப் பதில் கொடுக்கிறார் என்பதைப் பார்க்கும்போதும், யெகோவாமேல் நமக்கு இருக்கிற அன்பு அதிகமாகும். “யெகோவா தன்னை நோக்கிக் கூப்பிடுகிற எல்லாருடைய பக்கத்திலும் இருக்கிறார்” என்று நாம் உறுதியாக நம்பலாம். (சங். 145:18) யெகோவாவுடைய அன்பும் ஆதரவும் நமக்கு எப்போதுமே இருக்கும் என்று நம்பினால், இன்றும் சரி, எதிர்காலத்திலும் சரி, நம்மால் எந்தவொரு பிரச்சினையையும் வெற்றிகரமாகச் சமாளிக்க முடியும்.
பைபிள் சத்தியத்தின் மேல் இருக்கும் அன்பு
11, 12. பைபிள் சத்தியத்தின் மேல் நாம் எப்படி ஆழமான அன்பை வளர்த்துக்கொள்ளலாம்?
11 கிறிஸ்தவர்களாகிய நாம் எல்லாரும் பைபிள் சத்தியங்களை நேசிக்கிறோம். கடவுளுடைய வார்த்தையில்தான் சத்தியம் இருக்கிறது. “உங்களுடைய வார்த்தைதான் சத்தியம்” என்று இயேசு தன் அப்பாவிடம் சொன்னார். (யோவா. 17:17) பைபிள் சத்தியங்களை நேசிக்க வேண்டும் என்றால், பைபிளில் என்ன இருக்கிறது என்பதை நாம் தெரிந்துகொள்ள வேண்டும். (கொலோ. 1:10) ஆனால், அது மட்டும் போதாது; நாம் வேறொன்றையும் செய்ய வேண்டும். அதைப் புரிந்துகொள்ள 119-ஆம் சங்கீதத்தின் எழுத்தாளர் நமக்கு உதவுகிறார். (சங்கீதம் 119:97-100-ஐ வாசியுங்கள்.) பைபிளில் படித்த விஷயங்களை நாள் முழுவதும் ஆழமாக யோசித்துப் பார்க்க வேண்டும். பைபிள் சத்தியங்களை நம் வாழ்க்கையில் பின்பற்றினால் நமக்கு என்ன நன்மைகள் கிடைக்கும் என்பதைப் பற்றி ஆழமாக யோசிக்கும்போது, அவற்றை நாம் இன்னும் அதிகமாக நேசிப்போம்.
12 சங்கீதக்காரன் தொடர்ந்து இப்படிச் சொன்னார்: “உங்கள் வார்த்தைகள் என் வாய்க்கு எவ்வளவு ருசியாக இருக்கின்றன! தேனைவிட எவ்வளவு தித்திப்பாக இருக்கின்றன!” (சங். 119:103) கடவுளுடைய அமைப்பு தயாரிக்கும் பைபிள் சார்ந்த பிரசுரங்கள் சுவையான உணவு போல இருக்கிறது. நமக்குப் பிடித்த உணவைச் சாப்பிடும்போது, அதை ரசித்து ருசித்து சாப்பிடுவதற்கு நாம் நேரம் எடுத்துக்கொள்வது போல, படிப்பதற்கும் நாம் நேரம் எடுத்துக்கொள்ள வேண்டும். அப்படிச் செய்தால், சத்தியத்தின் “இனிமையான வார்த்தைகளை” நாம் உண்மையிலேயே ருசிப்போம். (பிர. 12:10) அப்போது, வாசித்த விஷயங்களை நம்மால் சுலபமாக ஞாபகத்தில் வைக்க முடியும்; மற்றவர்களுக்கு உதவவும் அவற்றைப் பயன்படுத்த முடியும்.
13. கடவுளுடைய வார்த்தைகளை நேசிக்க எரேமியாவுக்கு எது உதவியது, அது அவர்மேல் என்ன தாக்கத்தை ஏற்படுத்தியது?
13 தீர்க்கதரிசியான எரேமியா கடவுளுடைய வார்த்தைகளை நேசித்தார். “உங்கள் வார்த்தை கிடைத்ததுமே அதை ரசித்து ருசித்தேன். அதனால், சந்தோஷத்தில் திக்குமுக்காடிப்போனேன். பரலோகப் படைகளின் கடவுளான யெகோவாவே, நான் உங்கள் பெயரால் அழைக்கப்படுவதை நினைத்து உள்ளம் பூரித்துப்போனேன்” என்று அவர் சொன்னார். (எரே. 15:16) கடவுளுடைய வார்த்தைகளை எரேமியா ஆழமாக யோசித்துப் பார்த்தார், அவற்றை நேசித்தார். யெகோவாவைப் பிரதிநிதித்துவம் செய்யவும் அவருடைய செய்தியை அறிவிக்கவும் தனக்குக் கிடைத்த வாய்ப்புக்காக அவர் நன்றியோடு இருந்தார். நாமும் பைபிள் சத்தியத்தை நேசித்தால், யெகோவாவின் சாட்சியாக இருப்பதும், இந்தக் கடைசி காலத்தில் கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றி பிரசங்கிப்பதும் நமக்குக் கிடைத்திருக்கிற விசேஷ வாய்ப்பு என்பதைப் புரிந்துகொள்வோம்.
14. பைபிள் சத்தியத்தின் மேல் இருக்கிற அன்பை வளர்த்துக்கொள்ள நாம் என்ன செய்ய வேண்டும்?
14 பைபிள் சத்தியத்தின் மேல் இருக்கிற அன்பை இன்னும் ஆழமாக வளர்த்துக்கொள்ள நாம் வேறொன்றையும் செய்ய வேண்டும். அது என்ன? சபை கூட்டங்களில் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும். ஏனென்றால், அங்கேதான் யெகோவா நமக்கு நிறைய விஷயங்களைச் சொல்லித்தருகிறார். வாராவாரம் நடத்தப்படுகிற காவற்கோபுர படிப்பின் மூலம் நாம் போதிக்கப்படுகிறோம். இது, நாம் போதிக்கப்படுகிற மிக முக்கியமான வழிகளில் ஒன்று! இதிலிருந்து நாம் முழுமையாகப் பிரயோஜனமடைய வேண்டுமென்றால், நாம் முன்கூட்டியே தயாரிக்க வேண்டும். உதாரணத்துக்கு, காவற்கோபுரத்தில் கொடுக்கப்பட்டிருக்கிற பைபிள் வசனங்களை நாம் எடுத்துப் பார்க்கலாம். இன்று, நிறைய பேரால் காவற்கோபுரத்தை சுலபமாக வாசிக்கவும் எலக்ட்ரானிக் வடிவத்தில் டவுன்லோட் செய்யவும் முடிகிறது. jw.org வெப்சைட்டிலும் JW லைப்ரரி அப்ளிகேஷனிலும் இந்தப் பத்திரிகை நிறைய மொழிகளில் கிடைக்கிறது. இந்தப் பத்திரிகையில் கொடுக்கப்பட்டிருக்கிற வசனங்களை, சில எலக்ட்ரானிக் ஃபார்மெட்டில் சீக்கிரமாகப் பார்க்க முடியும். பத்திரிகையில் படித்தாலும் சரி, எலக்ட்ரானிக் ஃபார்மெட்டில் படித்தாலும் சரி, ஒவ்வொரு படிப்புக் கட்டுரையிலும் இருக்கிற வசனங்களை நாம் கவனமாக வாசிக்க வேண்டும், அவற்றை ஆழமாக யோசித்துப் பார்க்க வேண்டும். அப்போது, பைபிள்மேல் இருக்கிற நம் அன்பு அதிகமாகும்.—சங்கீதம் 1:2-ஐ வாசியுங்கள்.
சகோதரர்கள்மேல் இருக்கும் அன்பு
15, 16. (அ) யோவான் 13:34, 35-ல் இயேசு நமக்கு என்ன கட்டளை கொடுத்திருக்கிறார்? (ஆ) கடவுள்மேலும் பைபிள்மேலும் இருக்கிற அன்பு சகோதரர்கள்மேல் இருக்கிற அன்போடு எப்படிச் சம்பந்தப்பட்டிருக்கிறது?
15 இயேசு பூமியில் வாழ்ந்த கடைசி ராத்திரி அன்று தன் சீஷர்களிடம் இப்படிச் சொன்னார்: “நீங்கள் ஒருவர்மேல் ஒருவர் அன்பு காட்டுங்கள். நான் உங்கள்மேல் அன்பு காட்டியது போலவே நீங்களும் ஒருவர்மேல் ஒருவர் அன்பு காட்ட வேண்டுமென்ற புதிய கட்டளையை உங்களுக்குக் கொடுக்கிறேன். நீங்கள் ஒருவர்மேல் ஒருவர் அன்பு காட்டினால், நீங்கள் என்னுடைய சீஷர்கள் என்று எல்லாரும் தெரிந்துகொள்வார்கள்.”—யோவா. 13:34, 35.
16 நம் சகோதர சகோதரிகள்மேல் அன்பு காட்டுவது, யெகோவாமேல் அன்பு காட்டுவதோடு சம்பந்தப்பட்டிருக்கிறது. நாம் கடவுள்மேல் அன்பு காட்டவில்லை என்றால், நம் சகோதரர்கள்மேல் அன்பு காட்ட முடியாது. நம் சகோதரர்கள்மேல் அன்பு காட்டவில்லை என்றால், கடவுள்மேல் அன்பு காட்ட முடியாது. “தான் பார்க்கிற சகோதரன்மேல் அன்பு காட்டாதவன், தான் பார்க்காத கடவுள்மேல் அன்பு காட்ட முடியாது” என்று அப்போஸ்தலன் யோவான் எழுதினார். (1 யோ. 4:20) யெகோவாமேலும் சகோதரர்கள்மேலும் இருக்கிற அன்பு, பைபிள்மேல் இருக்கிற அன்போடு சம்பந்தப்பட்டிருக்கிறது. ஏனென்றால், பைபிளில் படிக்கிற விஷயங்களை நாம் நேசிக்கும்போது, கடவுள்மேலும் சகோதரர்கள்மேலும் அன்பு காட்ட வேண்டும் என்ற கட்டளைகளுக்கு நாம் கீழ்ப்படிவோம்.—1 பே. 1:22; 1 யோ. 4:21.
17. நாம் என்னென்ன வழிகளில் அன்பு காட்டலாம்?
17 ஒன்று தெசலோனிக்கேயர் 4:9, 10-ஐ வாசியுங்கள். என்னென்ன வழிகளில் சபையில் இருப்பவர்கள்மேல் நாம் அன்பு காட்டலாம்? சபை கூட்டங்களுக்குப் போய் வர, வயதான ஒரு சகோதரருக்கோ சகோதரிக்கோ உதவி செய்யலாம். கணவனை இழந்த ஒரு சகோதரியின் வீட்டில் ஏதாவது பழுதுபார்க்க வேண்டியிருந்தால், அதைச் செய்து கொடுக்கலாம். (யாக். 1:27) சோர்ந்துபோயிருக்கும் அல்லது பிரச்சினைகளில் தவித்துக்கொண்டிருக்கும் சகோதர சகோதரிகளுக்கு உதவலாம். அதோடு, அவர்களுக்குத் தேவையான உற்சாகத்தையும் ஆறுதலையும் தரலாம். (நீதி. 12:25; கொலோ. 4:11) ‘நம்முடைய விசுவாசக் குடும்பத்தார்மேல்’ நமக்கு அன்பு இருக்கிறது என்பதை நம் சொல்லும் செயலும் காட்டுகின்றன.—கலா. 6:10.
18. நம் சகோதரர்களோடு இருக்கிற கருத்து வேறுபாடுகளைச் சரிசெய்ய நமக்கு எது உதவும்?
18 இந்தப் பொல்லாத உலகத்தின் “கடைசி நாட்களில்” நிறைய பேர் சுயநலவாதிகளாகவும் பேராசைபிடித்தவர்களாகவும் இருப்பார்கள் என்று பைபிள் சொல்கிறது. (2 தீ. 3:1, 2) கிறிஸ்தவர்களாகிய நாம் எல்லாரும், யெகோவாமேலும் அவருடைய வார்த்தைமேலும் சகோதர சகோதரிகள்மேலும் தொடர்ந்து அன்பை வளர்த்துக்கொள்ள கடினமாக முயற்சி செய்ய வேண்டும். நாம் தவறு செய்யும் இயல்புள்ளவர்களாக இருப்பதால், நம் சகோதரர்களோடு சில சமயங்களில் சின்ன சின்ன கருத்து வேறுபாடுகள் வரலாம். ஆனால், நாம் ஒருவரை ஒருவர் நேசிப்பதால், நமக்குள் இருக்கிற கருத்து வேறுபாடுகளை அன்பான விதத்தில் சரிசெய்துகொள்கிறோம். (எபே. 4:32; கொலோ. 3:14) நம் அன்பு ஒருபோதும் குறைந்துவிடக் கூடாது! யெகோவாமேலும், அவருடைய வார்த்தைமேலும், நம் சகோதரர்கள்மேலும் நாம் தொடர்ந்து ஆழமான அன்பைக் காட்ட வேண்டும்.