‘யெகோவா வீட்டைக் கட்டாராகில் . . . ’
நீங்கள் எங்கு வாழ்ந்தாலுஞ்சரி, உங்களுக்கு ஏதோ ஓர் இடம் வீடாக இருக்கிறது. குடியிருப்புகளின் அமைப்பும் அவற்றைக் கட்டும் முறைகளும் பெருமளவில் வித்தியாசமாக இருக்கிறது. மண்குடிசைகள், மர வீடுகள், கான்கிரீட் இல்லங்கள்—பட்டியலுக்குக் குறைவே இல்லை. சிலர் புல்வேய்ந்த குடிசைகளை வசதியாகக் கருதுவதுபோல மற்றவர்கள் இன்னும் அதிக உறுதியான வீடுகளை அப்படிக் காண்கின்றனர். இதற்குக் காரணம் என்ன?
வசதியாக உணருவது, திருப்தியாக உணருவது பெரும்பாலும் ஒருவர் கொண்டிருக்கும் உறவுகளைப் பொருத்தது. (நீதிமொழிகள் 18:24) உலகம் எல்லாவிதமான ஆடம்பரக் கவர்ச்சிகளை அளிப்பதாயிருப்பினும், அமைதிக்கும் ஆறுதலுக்கும் ஒருவர் வீட்டிற்கே திரும்பும் மன விருப்பத்தைக் கொண்டிருக்கிறார். என்றபோதிலும், நவீன குடும்ப வாழ்க்கை சம்பந்தமான அறிக்கைகளைக் கவனிக்கையில், ஒருவர் வீட்டில் எல்லாச் சமயத்திலும் அமைதியையும் ஆறுதலையும் பெற்றிடுவார் என்பது நிச்சயமில்லை. பெரும்பாலும், உங்களோடு வாழ்கிறவர்கள்—உங்கள் குடும்பம்—உங்கள் அமைதியில் பங்குகொள்ளக்கூடும் அல்லது அதைக் கெடுக்கக்கூடும். அப்படியிருக்க ஒரு மகிழ்ச்சியான, அமைதியான வீட்டைக் கட்டுவதன் இரகசியம் என்ன?
வீட்டைக் கட்டுதல்
“யெகோவா தாமே வீட்டைக் கட்டாராகில், அதைக் கட்டுகிறவர்களின் கடின உழைப்பு விருதா,” [NW] என்று சங்கீதம் 127-ல் முதல் வசனம் கூறுகிறது. உண்மையான கடவுளாகிய யெகோவாவின் வணக்கத்துக்காகக் கட்டிடங்களைக் கட்டுவதில் பங்குகொள்கிறவர்கள் இது உண்மையாயிருப்பதைக் காண்கிறார்கள். திறம்பட்ட வேலையாட்கள் அருமையான ராஜ்ய மன்றங்களை வேகமாகக் கட்டுவதற்கு தங்களுடைய நேரத்தையும் முயற்சிகளையும் மனமுவந்து கொடுப்பவர்களாக இருந்தாலும், அதன் வெற்றிக்கு உத்தரவாதமளிப்பது யெகோவாவின் ஆசீர்வாதங்கள். மற்ற பார்வையாளர்களுங்கூட அநேக சமயங்களில் விசித்திரமான ஒன்று நடைபெற்றுக்கொண்டிருப்பதைக் காண்கிறார்கள். உதாரணமாக, இங்கிலாந்தில் கோல்செஸ்ட்டர் என்ற இடத்தில் இப்படிப்பட்ட ஒரு கட்டிட வேலையைக் குறித்துக் குறிப்பிடும்போது, ஒரு பத்திரிகை அதன் கட்டுரைக்குக் கொடுத்த தலைப்பு: “யெகோவா கூரையை எழுப்புகிறார்.”
என்றபோதிலும் சொல்லர்த்தமான கட்டிடத் திட்டங்களைத் தவிர மற்ற முயற்சிகளிலும் வெற்றி என்பது யெகோவாவின் ஆசீர்வாதத்தில் சார்ந்ததாயிருக்கிறது. சங்கீதம் 127-ல் நான்காவது வசனத்திலுள்ள சாலொமோனின் வார்த்தைகளைக் கவனியுங்கள்: “இதோ, குமாரர்கள் யெகோவாவிடமிருந்து கிடைக்கும் சுதந்தரம்; கர்ப்பத்தின் கனி அவரால் கிடைக்கும் பலன்.” (NW) குடும்பங்களுக்கு வருகையில், யெகோவா ஈடு இணையற்ற கட்டிடக் கலைஞராக இருக்கிறார். அவருடைய உடன் பணியாட்களாக அல்லது உடன் சேர்ந்து வேலைசெய்பவர்களாக இருக்கும் சிலாக்கியத்தைப் பெற்றோர் கொண்டிருக்கிறார்கள்.a (எபிரெயர் 11:10) கூட்டாக வேலை செய்யும் இந்த விசேஷ சிலாக்கியத்தைப் பெற்றோர் பயன்படுத்திக் கொண்டு வெற்றிகரமான, சமாதானமான, சிருஷ்டிகராகிய யெகோவா தேவனுக்கு மகிமையைக் கொண்டுவருகின்ற ஒரு குடும்பத்தை எவ்விதம் கட்டலாம்?
குடும்பத்தை வெற்றிகரமாகக் கட்டுதல்
ஒரு கட்டிடம் கட்டுவதில் உட்பட்டிருக்கும் ஒரு முக்கிய வெற்றிக்கூறு, ஒரு நல்ல கட்டிட அமைப்புத் திட்ட வரைபடம். கடவுளைத் துதிக்கும் இளம் பிள்ளைகளைக் கட்டுவிப்பதற்கு, அவருடைய ஆவியால் ஏவப்பட்ட வார்த்தையாகிய பைபிளைத் தவிர மேன்மையான ஒரு கட்டிட அமைப்புத் திட்ட வரைபடம் இருக்க முடியாது. (2 தீமோத்தேயு 3:16, 17) “பிள்ளையானவன் நடக்க வேண்டிய வழியிலே அவனை நடத்து; அவன் முதிர்வயதிலும் அதை விடாதிருப்பான்” என்று சாலொமோன் எழுதினான். (நீதிமொழிகள் 22:6) அவனுக்குரிய “நடக்க வேண்டிய வழி” யெகோவாவின் வழி, பெற்றோர்கள் அதைப் பின்பற்றும்போது, கடவுளுக்கு உண்மையுள்ள ஊழியர்களாக வளருவதற்கான எதிர்பார்ப்பை அவர்கள் தங்களுடைய இளைஞர்களுக்கு அளிப்பவர்களாயிருக்கிறார்கள்.
ஒரு நல்ல கட்டிடம் கட்டுவதற்கு நல்ல கட்டிடப் பொருட்கள் தேவைப்படுகிறது. ஐரோப்பாவுக்கு வந்திருந்த ஓர் ஆப்பிரிக்க பயணியால், தான் கண்ட சில கட்டிடங்களின் வயது நூற்றுக்கணக்கான ஆண்டுகள் என்பதை நம்பமுடியாமல் இருந்தது. இந்தக் கட்டிடங்களில் பயன்படுத்தப்பட்ட பலமான கட்டிடப்பொருட்கள் அவருடைய அறிவுக்குப் புதியதாயிருந்தது. மறுபட்சத்தில், கட்டிடம் கட்டுபவர்கள் கட்டுமானப் பொருட்களின் தரத்தைக் குறைத்துவிடும்போது, விளைவுகள் பெரும்பாலும் மோசமானதாக, உயிருக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடியதாகவும் இருந்துவிடுகிறது. இது பிள்ளைகளை வளர்க்கும் காரியத்திலும்கூட உண்மையாக இருக்கக்கூடும்.
கருத்தரிப்பின்போது, பிள்ளைகள் பாவத்தின் அபூரணப் பண்பைக் கொண்ட பிறப்புமூலம் சார்ந்த உயிர்வழிக்கொடையைப் பெறுகின்றனர். (சங்கீதம் 51:5) வேறு வார்த்தைகளில், அவர்கள் ஆரம்பத்திலிருந்தே குறையுள்ளவர்களாக இருக்கின்றனர். நிலையான தெய்வீகப் பண்புகளைத் தங்களுடைய பிள்ளைகளில் வளர்க்க முயலுவதன்மூலம் கிறிஸ்தவ பெற்றோர்கள் இதை எதிர்த்துச் செயல்படவேண்டும். (1 கொரிந்தியர் 3:10–15) இதைச் செய்தால் தவிர, பெற்றோர்கள் தங்களுடைய குமாரர் குமாரத்திகளுக்கு மிகச் சிறந்த உணவையும், உடையையும், உறைவிடத்தையும் அளிக்கும் மற்ற காரியங்களில் எவ்வளவு கடினமாக செயல்பட்டாலும், அவர்களுடைய கட்டிட முயற்சிகள் வீணாயிருக்கும்.
எனவேதான் பெற்றோர்களுக்கான, விசேஷமாக தகப்பன்மார்களுக்கான தெய்வீக புத்திமதி என்னவென்றால்: “அவர்களைப் [பிள்ளைகளை] யெகோவாவின் சிட்சையிலும் மனக் கட்டுப்பாட்டிலும் தொடர்ந்து வளர்த்துவருவீர்களாக.” (எபேசியர் 6:4, NW) யெகோவாவின் சிட்சையும் மனக்கட்டுப்பாடும் மிகச் சிறந்த கட்டிட அமைப்புத் திட்ட வரைபடத்தையும் கட்டிடப் பொருட்களையும் உட்படுத்துகின்றன. அவற்றைப் பயன்படுத்துவது முழு குடும்பத்தின் நித்திய நன்மைகளில் விளைவடையும்.
பணியில் பயிற்சி
மிகச் சிறந்த கட்டிடத் திட்ட வரைபடங்கள் இருந்தாலும், எந்த ஒரு கட்டிட வேலையின் போதும் எதிர்பாராத நெருக்கடிகள் அல்லது பிரச்னைகள் ஏற்படுகின்றன. அதுபோல, பெற்றோர்கள் குடும்ப அங்கத்தினர்களின் அன்றாட வாழ்க்கையில் எதிர்பாராத பிரச்னைகள் ஏற்படுவதை எதிர்பார்த்திருக்கவும் அதைக் கையாளவும் கற்றுக்கொள்ள வேண்டும். இதை எப்படிச் செய்யலாம்?
இரு பெற்றோருக்குமிடையே நல்ல பேச்சுத்தொடர்பு மிகவும் முக்கியம். இளைஞரின் முன்னேற்றத்தைக் குறித்து தாயும் தந்தையும் ஜெப சிந்தையோடு கலந்துரையாடும்போது, போற்றுதல் கொடுக்கப்படவேண்டிய சில இடங்களையும், கூடுதலாகக் “கட்டியெழுப்ப” வேண்டிய இடங்களையும் காண்பார்கள். அப்படிப்பட்ட பலவீனம் ஒருமுறை கண்டுபிடிக்கப்பட்டால், பெற்றோர் ஒன்றாக சேர்ந்து செயல்படலாம், அவற்றைக் கையாள பொருத்தமான படிகளை மேற்கொள்ளலாம்.
ஆனால் ஒருவேளை உங்களுக்கு ஒரு பெரிய குடும்பம் இருக்கிறது என்றால், நீங்கள் ஒருவேளை இப்படியாக யோசிக்கலாம்: ‘எங்களுடைய பல பிள்ளைகளின் தனிப்பட்ட தேவைகளைப் பூர்த்திசெய்ய எங்களுடைய முயற்சிகளை நாங்கள் எவ்விதம் சரியாகப் பொருந்தக்கூடிய வகையில் உட்படுத்தலாம்?’ உங்களுடைய பிள்ளைகள் ஒருவருக்கொருவர் உதவியாக இருப்பதற்கு நீங்கள் ஏன் பணியில் பயிற்சியை அளிக்கக்கூடாது? வேலை பழகுபவர்கள் தங்கள் திறமைகளை வளர்த்துக்கொள்ளும்வகையில் தலைமைக் கலைஞர்களுடன்கூட பலவருடங்கள் பணியாற்றுகின்றனர். உங்களுடைய குடும்ப படிப்பின்போது, ஒருவேளை உங்களுடைய குடும்பத்தில் பருவ வயது பிள்ளைகள் சில காரியங்களைச் சிறிய பிள்ளைகளுக்கு விளக்கிடச் சொல்லலாம். உண்மையாயிருப்பது, நண்பர்களைத் தேர்ந்தெடுப்பது, பள்ளியில் கெட்ட செல்வாக்குகளை எதிர்த்துநிற்பது, போன்ற தலைப்புகள் பெரிய பிள்ளைகளும் சிறிய பிள்ளைகளும் விளக்க முடிந்த காரியங்கள். அப்படிப்பட்ட உண்மையான வாழ்க்கை செயல்திட்டங்களைப் பெரிய பிள்ளைகளுக்கு நியமிப்பதன்மூலம், அவர்கள் தங்களுடைய இளம் சகோதர சகோதரிகள் தெரிந்துகொள்ள வேண்டிய காரியங்களை அவர்களுக்குப் போதிக்கும்போது, அவர்களுடைய புலனுணர்வுத் திறன்களையும் கற்பிக்கும் திறமையையும் விருத்தி செய்துகொள்ள நீங்கள் அவர்களுக்கு உதவிசெய்யலாம். (எபிரெயர் 5:14) சிறியவர்கள் மத்தியில் உண்மையான குடும்ப உறவை வளர்த்துக்கொள்ளும் கூடுதல் நன்மையும் இதில் இருக்கிறது.
ஒருவேளை உங்கள் குடும்பம் சிறியதாக இருக்கலாம், ஒருவேளை ஒரு பிள்ளை மட்டுமே இருக்கலாம். அப்பொழுது உங்களுடைய இளம் பிள்ளையை அறிந்து புரிந்துகொள்வதற்கு அநேக சந்தர்ப்பங்கள் இருக்கின்றன. என்றபோதிலும், உங்களுடைய பிள்ளையை அளவுக்கு அதிகமாக கவனத்தின் மையமாக ஆக்கிவிடுவதன் மூலம் அவனைக் கெடுத்துவிடும் ஆபத்தைக் குறித்து ஜாக்கிரதையாய் இருங்கள். நீங்கள் மூவராயிருக்கிறீர்கள், அல்லவா? எனவே காரியங்களை ஒன்றாகச் செய்யுங்கள். இது அவன் மற்றவர்களுடன் பேச்சுத் தொடர்பு கொள்வதற்கும், புறம்பாகக் கவனத்தைத் திருப்புவதற்கும், இப்படியாக அவன் தன்னலமே கருதுகின்றவனாகிவிடுவதைத் தவிர்ப்பதற்கும் அவனுக்குக் கற்பிக்கும்.
குடும்பம் ஒன்றாயிருப்பதைக் குறிக்கோளாய்க் கொண்டிருங்கள்
ஒரு குடும்பத்தைக் கட்டுவதில் ஒரு பைபிள் படிப்பு நடத்துவது, புத்திமதி கொடுப்பது மற்றும் சிட்சையளிப்பது ஆகிய காரியங்களைக் காட்டிலும் அதிகம் உட்பட்டிருக்கிறது. சாலொமோன் சொன்னான்: “மனுஷன் புசித்துக் குடித்து, தன் பிரயாசத்தின் பலனை அநுபவிப்பதைப் பார்க்கிலும், அவனுக்கு ஒரு நன்மையும் இல்லை.” (பிரசங்கி 2:24) உணவு சுவையாக ஆயத்தம் செய்யப்பட்டிருக்க, அதை உங்களுடைய குடும்பம் அனுபவித்து மகிழ்கிறது என்பதில் சந்தேகம் இல்லை. உங்களுடைய உணவைக் குடும்பமாக அருந்துவதற்கான ஏற்பாட்டைச் செய்கிறீர்களா? குடும்பத்திலுள்ள அங்கத்தினர்கள் வேலைக்கு, பள்ளிக்கு அல்லது மற்ற அலுவலாகச் சென்றிருக்கும்போது, இது எப்பொழுதுமே கூடிய காரியமாக இருக்காது. என்றபோதிலும் பொதுவாக ஒருவேளையாவது நீங்கள் குடும்பமாக உணவருந்தும் வாய்ப்பு இருக்கிறது. குடும்பமாக உணவருந்த அமர்ந்திருக்கும் அந்தச் சமயத்தில் ஓர் ஆரோக்கியமான சூழல் இருப்பதற்கு எது உதவும்?
ஒரு சகோதரர், கூடியிருப்போர் கலந்தாராய்வதற்காக ஒரு பைபிள் கேள்வியை எழுப்ப அந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொள்கிறார். உண்மைதான், பதில் தெரியாதவர்களை இக்கட்டான நிலைமைக்குள்ளாக்குவதை அவர் தவிர்க்கிறார். மற்றவர்கள் வெளி ஊழிய அனுபவங்களைச் சொல்லுகிறார்கள். ஆவிக்குரிய காரியங்களுக்குக் கவனம் செலுத்துவதன் மூலம், உணவருந்தும் வேளைகள் குடும்பம் முழுவதையும் கட்டியெழுப்புவதற்கான சமயங்களாக ஆகின்றன. (ரோமர் 14:19-ஐ பார்க்கவும்.) உண்மைதான், உலகின் சில பாகங்களில் உணவு வேளையின்போது அதிகம் உரையாடும் பழக்கம் இல்லை. என்றாலும், ஒரு மகிழ்ச்சியான சூழலைக் காத்துக்கொள்வதற்கு இடைவிடா முயற்சி தேவைப்படுகிறது. நீதிமொழிகள் 15:17 சொல்லுகிறது: “பகையோடிருக்கும் கொழுத்த எருதின் கறியைப்பார்க்கிலும், சிநேகத்தோடிருக்கும் இலைக்கறியே நல்லது.”
இடை ஓய்வும் வேகத்தில் மாற்றமுங்கூட கிறிஸ்தவ குடும்ப வாழ்க்கையில் அதன் இடத்தைக் கொண்டிருக்கிறது. அப்படிப்பட்ட சமயங்களை ஞானமுள்ள பெற்றோர்கள் ஒரு பலமான தேவராஜ்ய குடும்பப் பந்தத்தைக் கட்டுவிப்பதற்குப் பயன்படுத்துகின்றனர். எப்படி?
இளைஞர் தங்களுடைய சொந்த அக்கறைகளைத் தேடுவதற்கு அவர்களை அனுமதித்துவிடுவது எளிதாயிருக்க, இதில் ஆபத்து இருக்கிறது. உதாரணமாக, இளைஞருடைய உயிருக்கு அல்லது உடல் உறுப்புகளுக்கு ஆபத்து இருக்குமளவுக்கு அவர்களைப் போட்டி விளையாட்டுகளில் உட்படுத்திக்கொள்ள அனுமதிப்பது எவ்வளவு ஞானமற்றச் செயல்! (1 தீமோத்தேயு 4:8) கூடுமானவரை, குடும்பத்தின் ஒவ்வொரு அங்கத்தினரையும் உட்படுத்தும் செயல்களைத் தெரிந்துகொள்ளுங்கள். தந்தை அவர்களுடைய அபிப்பிராயங்களையும் கருத்துகளையும் தெரிந்துகொண்டு, ஒவ்வொருவருக்கும் தயார் செய்ய ஒரு பொறுப்பை நியமித்துவிடலாம்.
ஒரு குடும்பமாக உங்களுடைய அன்பை விரிவுபடுத்தி, சபையின் மற்ற உறுப்பினர்கள் உங்கள் குடும்ப மகிழ்ச்சியில் சேர்ந்துகொள்ள அழைக்கக்கூடுமா? சபையில் வயது முதிர்ந்தவர்கள் விசேஷமாக தங்களுடைய சொந்த குடும்பம் உடன் இல்லாதிருக்கும்போது அல்லது பைபிள் நியமங்கள்படி வாழாதிருக்கும்போது பொதுவாகக் குடும்ப ஆவியில் பங்குகொள்வதில் மகிழ்ச்சி காண்கிறார்கள். (யாக்கோபு 1:27) அநேக சபைகளில் ஒற்றைப் பெற்றோர் குடும்பங்கள் இருக்கின்றன. தேவராஜ்ய தலைமைஸ்தானத்துக்கு உரிய கவனமும் கிறிஸ்தவ ஒழுங்குமுறைக்கு மரியாதையும் காண்பித்து மூப்பர்களும் மற்றவர்களும் அப்படிப்பட்டக் குடும்பங்களுக்கு ஆவிக்குரிய பாதுகாப்பை அளிக்கலாம். (ஏசாயா 32:1) வயதுவந்த முதிர்ச்சியுள்ள ஒரு கிறிஸ்தவனால் காண்பிக்கப்பட்ட அன்புள்ள அக்கறையினால் அநேக “திக்கற்ற பிள்ளைகள்” சமநிலையுள்ள கிறிஸ்தவ தலைவர்களாக மலர்ந்திருக்கின்றனர்.—சங்கீதம் 82:3.
ஒரு கிறிஸ்தவ குடும்பத்தைக் கட்டுவது கடினமான உழைப்பை உட்படுத்துகிறது. ஆனால் “குமாரர்கள் யெகோவாவிடமிருந்து கிடைக்கும் சுதந்தரம்; கர்ப்பத்தின் கனி அவரால் கிடைக்கும் பலன்” என்பதை நீங்கள் யெகோவாவின் உதவியால் உண்மையிலேயே போற்ற ஆரம்பிப்பீர்கள். (சங்கீதம் 127:1, 4, NW) அவர்கள் கிறிஸ்தவ பெற்றோருக்கு மட்டுமல்ல, அவர்களுடைய சிருஷ்டிகராகிய யெகோவாவுக்கும் துதியுண்டாக்குகிறவர்களாயிருக்கக்கூடும். (w89 10/1)
[அடிக்குறிப்புகள்]
a உண்மையில் “கட்டுகிறவர்கள்” (வசனம் 1) மற்றும் “குமாரர்கள்” (வசனம் 4) என்பவற்றிற்குரிய எபிரெய வார்த்தைகள் “கட்டுதல்” என்ற வேர்ப்பொருளிலிருந்து வருவதாய்க் கருதப்படுகிறது. மேலும், எபிரெய மொழியில் “வீடு” என்ற சொல் “குடியிருக்கும் இடத்தை” அல்லது ஒரு “குடும்பத்தை” குறிக்கக்கூடும். (2 சாமுவேல் 7:11, 16; மீகா 1:5) இப்படியாக, ஒரு வீட்டைக் கட்டுதல் ஒரு குடும்பத்தைக் கட்டியெழுப்புவதோடு சம்பந்தப்பட்டிருக்கிறது. இரண்டு காரியங்களிலும் யெகோவாவின் ஆசீர்வாதம் அவசியமாயிருக்கிறது.