கடவுள் உண்மையில் உங்களை அறிந்திருக்கிறாரா?
“கர்த்தாவே [யெகோவாவே, NW], . . . என் வழிகளெல்லாம் உமக்குத் தெரியும்.” —சங்கீதம் 139:1, 3.
1. நாம் எதிர்ப்படும் கவலைகள், பிரச்னைகள், அழுத்தங்களை ‘மற்றவர்கள் புரிந்துகொள்வதில்லை’ என்ற உணர்வு எவ்வளவு பரவலானது?
நீங்கள் எதிர்ப்படும் கவலைகள், அழுத்தங்கள், மற்றும் பிரச்னைகளை யாராவது உண்மையில் புரிந்துகொள்கிறார்களா? தங்களுக்கு என்ன நடக்கிறது என்பதைப்பற்றி கவலைகொள்ளும் குடும்பத்தை அல்லது உறவினர்களைக் கொண்டிராத இலட்சக்கணக்கான மக்கள், இளைஞரும் முதியோரும், உலகெங்கும் இருக்கின்றனர். குடும்பங்களினுள்கூட, அநேக மனைவிகள்—ஆம், கணவர்களுங்கூட—தங்களைக் கவலையில் ஆழ்த்தக்கூடிய கஷ்டங்களைத் தங்கள் திருமண துணைகள் உண்மையில் புரிந்துகொள்வதில்லை என்று உணருகின்றனர். சில நேரங்களில், ஏமாற்றத்தில், அவர்கள் கண்டனம் செய்கின்றனர்: “ஆனால் நீங்கள் புரிந்துகொள்வதில்லை!” மேலும் பல இளைஞரும் தங்களை ஒருவரும் புரிந்துகொள்வதில்லை என்ற முடிவுக்கு வந்திருக்கின்றனர். இருந்தாலும், மற்றவர்களிடமிருந்து அதிகப்படியான புரிந்துகொள்ளுதலுக்காக ஏங்கியிருப்பவர்களின் மத்தியில்தான், தங்கள் வாழ்க்கை பின்னர் முழுநிறைவான அர்த்தமுடையதாகியிருக்கும் சிலர் இருக்கின்றனர். அது எப்படிச் சாத்தியமாகிறது?
2. மிகவும் திருப்திவாய்ந்த வாழ்க்கையை வாழ்வதற்கு யெகோவாவின் வணக்கத்தாருக்கு எது உதவும்?
2 அது ஏனென்றால், உடன் மானிடர்கள் தங்களுடைய உணர்ச்சிகளைப் புரிந்துகொள்கிறார்களோ இல்லையோ, அவர்கள் என்ன அனுபவிக்கிறார்கள் என்பதைக் கடவுள் புரிந்துகொள்கிறார் என்றும், அவருடைய ஊழியர்களாக, தங்களுடைய பிரச்னைகளை அவர்கள் தனியாக எதிர்ப்பட வேண்டியதில்லை என்பதையும் அவர்கள் உறுதியாக நம்புகின்றனர். (சங்கீதம் 46:1) மேலும், கடவுளுடைய வார்த்தை, பகுத்தறியும் கிறிஸ்தவ மூப்பர்களின் உதவியுடன் சேர்ந்து தங்களுடைய தனிப்பட்ட பிரச்னைகளுக்கு அப்பால் சென்று பார்க்கும்படி அவர்களுக்கு உதவுகிறது. அவர்களுடைய உண்மையுள்ள சேவை கடவுளுடைய பார்வையில் மதிப்புமிக்கது என்றும், அவரிலும் இயேசு கிறிஸ்துவின் மூலம் அவர் செய்திருக்கும் ஏற்பாடுகளிலும் தங்கள் நம்பிக்கையை வைப்பவர்களுக்கு ஒரு பாதுகாப்பான எதிர்காலம் இருக்கிறது என்றும் மதித்துணருவதற்கு வேதவார்த்தைகள் அவர்களுக்கு உதவுகின்றன.—நீதிமொழிகள் 27:11; 2 கொரிந்தியர் 4:17, 18.
3, 4. (அ) “யெகோவாவே தேவன்” மற்றும் அவர் “நம்மை உண்டாக்கினார்” என்ற உண்மையை மதித்துணருதல், அவருடைய சேவையில் சந்தோஷத்தைக் காண நமக்கு எப்படி உதவும்? (ஆ) யெகோவாவின் அன்பான அக்கறையில் நாம் ஏன் முழு நம்பிக்கை கொண்டிருக்கிறோம்?
3 நீங்கள் சங்கீதம் 100:2-ஐ அறிந்திருப்பீர்கள்; அது இவ்வாறு சொல்லுகிறது: “மகிழ்ச்சியோடே கர்த்தருக்கு ஆராதனைசெய்து, ஆனந்தசத்தத்தோடே அவர் சந்நிதிமுன் வாருங்கள்.” அந்த விதத்தில் எத்தனைபேர் யெகோவாவுக்கு உண்மையில் வணக்கத்தைச் செலுத்துகிறார்கள்? அவ்வாறு செய்வதற்கு 3-ஆம் வசனம் நல்ல காரணங்களைக் கொடுக்கிறது; அது நமக்கு ஞாபகப்படுத்துகிறது: “கர்த்தரே [யெகோவாவே, NW] தேவனென்று அறியுங்கள்; நாம் அல்ல, அவரே நம்மை உண்டாக்கினார்; நாம் அவர் ஜனங்களும், அவர் மேய்ச்சலின் ஆடுகளுமாயிருக்கிறோம்.” எபிரெய மூல பதிவில், அவர் ஏலோஹிம் (ʼElo·himʹ) என்று சுட்டிக்காட்டப்படுவதன்மூலம், அவருடைய மாட்சிமை, மேன்மை, மற்றும் ஒப்புவமையற்றத் தன்மையின் மிக உயர்வான நிலையைக் குறிப்பிட்டுக் காண்பிக்கிறது. அவர்தான் ஒரே உண்மையான கடவுள். (உபாகமம் 4:39; 7:9; யோவான் 17:3) அவருடைய ஊழியர்கள் அவருடைய தேவத்துவத்தை அறிய வருகிறார்கள்; அதை அவர்களுக்குக் கற்றுக்கொடுக்கப்பட்ட வெறும் ஓர் உண்மையாக அல்ல, ஆனால் அவர்கள் அனுபவித்து, அதைக்குறித்துத் தங்களுடைய கீழ்ப்படிதல், நம்பிக்கை, மற்றும் பக்தியின்மூலம் சான்றளிக்கக்கூடிய ஒன்றாக அறிய வருகின்றனர்.—1 நாளாகமம் 28:9; ரோமர் 1:20.
4 யெகோவா நம்முடைய இருதயத்தைக்கூட பார்க்கக்கூடிய உயிருள்ள கடவுளாக இருப்பதால், அவருடைய கண்களுக்கு மறைவானது ஒன்றுமில்லை. நம்முடைய வாழ்க்கைகளில் என்ன நடக்கிறது என்பதை அவர் முழுமையாக அறிந்தவராய் இருக்கிறார். நாம் எதிர்ப்படக்கூடிய பிரச்னைகளை உருவாக்கியவை எவை என்பதையும், இவற்றின் விளைவாக ஏற்படக்கூடிய மன மற்றும் உணர்ச்சி சம்பந்தமான குழப்பத்தையும் அவர் புரிந்துகொள்கிறார். சிருஷ்டிகராக இருப்பதால், நம்மைப்பற்றி நாம் அறிந்திருப்பதைவிட அவர் நம்மை நன்றாக அறிந்திருக்கிறார். நம்முடைய நிலைமையைச் சமாளிக்க நமக்கு உதவுவது எப்படி என்றும் நிரந்தரமான விடுதலையைக் கொடுப்பது எப்படி என்றும் அவர் அறிந்திருக்கிறார். அன்புடன் அவர் நமக்கு உதவி செய்வார்—ஒரு மேய்ப்பன் ஓர் ஆட்டுக்குட்டியைத் தன் மடியில் வைத்திருப்பதைப்போல்—நாம் அவரை நம் முழு இருதயத்தோடும் நம்பும்போது அவ்வாறு செய்வார். (நீதிமொழிகள் 3:5, 6; ஏசாயா 40:10, 11) சங்கீதம் 139-ஐப்பற்றிய படிப்பு அந்த நம்பிக்கையைப் பலப்படுத்துவதற்கு அதிகத்தைச் செய்யக்கூடும்.
நம்முடைய எல்லா வழிகளையும் பார்க்கும் ஒருவர்
5. யெகோவா நம்மை ‘ஆராய்வது’ எதை அர்த்தப்படுத்துகிறது, ஏன் அது விரும்பத்தக்கதாய் இருக்கிறது?
5 ஆழ்ந்த போற்றுதலுடன், சங்கீதக்காரன் தாவீது எழுதினார்: “கர்த்தாவே, நீர் என்னை ஆராய்ந்து, அறிந்திருக்கிறீர்.” (சங்கீதம் 139:1) தாவீதைப்பற்றி யெகோவா கொண்டிருந்த அறிவு மேலோட்டமானதல்ல என்பதை அவர் அறிந்திருந்தார். தாவீதின் சரீர வளர்ச்சி, அவருடைய பேச்சாற்றல், அல்லது யாழிசைப்பதில் அவருடைய திறமை ஆகியவற்றை மட்டும் மனிதர் பார்ப்பதைப்போலக் கடவுள் பார்க்கவில்லை. (1 சாமுவேல் 16:7, 18) யெகோவா தாவீதின் உள்ளார்ந்த தன்மையை “ஆராய்ந்து” பார்த்திருக்கிறார்; அவர் அதை அவருடைய ஆவிக்குரிய நலனுக்கான அன்பான அக்கறையுடன் செய்திருக்கிறார். நீங்கள் யெகோவாவின் பற்றார்வமுள்ள ஊழியர்களில் ஒருவராக இருந்தால், அவர் தாவீதை அறிந்தளவிற்கு நன்றாகவே உங்களையும் அறிந்திருக்கிறார். அது உங்களுக்குள் நன்றியுணர்ச்சியையும் வியப்பையும் தூண்டுவிக்கிறது அல்லவா?
6. நாம் செய்யும் எல்லா காரியங்களையும், நம்முடைய எல்லா எண்ணங்களையுங்கூட யெகோவா அறிந்திருக்கிறார் என்று சங்கீதம் 139:2, 3 எப்படிக் காண்பிக்கிறது?
6 தாவீதின் எல்லா செயல் நடவடிக்கைகளும் கடவுளுடைய பார்வைக்கு வெளியரங்கமாய் இருந்தன; தாவீதும் அதை அறிந்திருந்தார். “என் உட்காருதலையும் என் எழுந்திருக்குதலையும் நீர் அறிந்திருக்கிறீர்,” என்று சங்கீதக்காரன் எழுதினார். “என் நினைவுகளைத் தூரத்திலிருந்து அறிகிறீர். நான் நடந்தாலும் படுத்திருந்தாலும் என்னைச் சூழ்ந்திருக்கிறீர் [சூழ்ந்து அளந்திருக்கிறீர், NW]; என் வழிகளெல்லாம் உமக்குத் தெரியும்.” (சங்கீதம் 139:2, 3) பூமியிலிருந்து வெகு தொலைவில் இருக்கும் பரலோகத்தில் யெகோவா இருக்கிறார் என்ற உண்மை, தாவீது என்ன செய்துகொண்டிருந்தார் அல்லது என்ன நினைத்துக்கொண்டிருந்தார் என்பதை அறிவதிலிருந்து அவரைத் தடுக்கவில்லை. அவர் தாவீதின் செயல் நடவடிக்கைகளை, அவற்றின் இயல்பைத் தெரிந்துகொள்ள பகலிலும் இரவிலும் ‘அளந்திருந்தார்’ அல்லது கவனமாக ஆராய்ந்தார்.
7. (அ) தாவீதின் வாழ்க்கையிலுள்ள சம்பவங்களை ஓர் அடிப்படையாகக்கொண்டு, நம்முடைய வாழ்க்கையில் கடவுள் அறிந்திருக்கும் சில காரியங்களைப்பற்றி குறிப்புச் சொல்லுங்கள். (ஆ) இதை அறிந்திருப்பது நம்மை எப்படிப் பாதிக்க வேண்டும்?
7 ஓர் இளம் மனிதனாக, கடவுள்மேலுள்ள அன்பும் அவருடைய விடுவிக்கும் வல்லமையின்மீதான நம்பிக்கையும், பெலிஸ்த இராட்சதனாகிய கோலியாத்துக்கு எதிராக யுத்தம்பண்ணும்படி முன்வர தாவீதைத் தூண்டியபோது, யெகோவா அதை அறிந்திருந்தார். (1 சாமுவேல் 17:32-37, 45-47) பின்னர், மனிதரின் எதிர்ப்பு, தாவீதின் இருதயத்திற்குக் கடும் வேதனையை உண்டாக்கியபோது, அவர் இரவில் கண்ணீர்விடும் அளவிற்கு அழுத்தம் அவ்வளவு அதிகமாக இருந்தபோது, யெகோவா தன்னுடைய மன்றாட்டைக் கேட்டார் என்ற அறிவால் ஆறுதலளிக்கப்பட்டார். (சங்கீதம் 6:6, 9; 55:2-5, 22) அதேவிதமாக, ஒரு தூக்கமற்ற இரவில், நன்றியுணர்வால் நிரம்பிய இருதயம், யெகோவாவைப்பற்றி தியானிக்கும்படி தாவீதைத் தூண்டியபோது, யெகோவா அதை நன்கு அறிந்திருந்தார். (சங்கீதம் 63:6; ஒப்பிடவும் பிலிப்பியர் 4:8, 9.) ஒரு மாலை வேளையில், ஓர் அயலானுடைய மனைவி குளிப்பதைத் தாவீது கூர்ந்து நோக்கியபோது, யெகோவா அதையும் அறிந்திருந்தார்; மேலும் ஒரு குறுகிய காலப்பகுதிக்காவது, பாவமுள்ள இச்சை கடவுளைத் தன்னுடைய எண்ணங்களைவிட்டு நெருக்கிப்போடும்படி தாவீது அனுமதித்தபோது என்ன நடந்தது என்பதை அவர் கண்டார். (2 சாமுவேல் 11:2-4) பின்னர், தாவீதின் கடுமையான பாவத்தைக்குறித்து அவரிடம் நேருக்குநேர் பேசும்படி நாத்தான் தீர்க்கதரிசி அனுப்பப்பட்டபோது, யெகோவா தாவீதின் வாயிலிருந்துவந்த வார்த்தைகளைக் கேட்டது மட்டுமல்லாமல், அவ்வார்த்தைகள் வந்த மனந்திரும்பிய இருதயத்தையும் பகுத்தறிந்தார். (2 சாமுவேல் 12:1-14; சங்கீதம் 51:1, 17) அது நாம் எங்கே போகிறோம், நாம் என்ன செய்கிறோம், மேலும் நம்முடைய இருதயத்தில் என்ன இருக்கிறது என்பவற்றைப்பற்றி நம்மைக் கருத்தூன்றி சிந்திக்கச் செய்யவேண்டும் அல்லவா?
8. (அ) ‘நம்முடைய நாவிலுள்ள வார்த்தைகள்’ எப்படிக் கடவுளோடுள்ள நம்முடைய நிலைநிற்கையைச் செல்வாக்குச் செலுத்தும்? (ஆ) நாவைப் பயன்படுத்துவதிலுள்ள பலவீனங்கள் எவ்வாறு மேற்கொள்ளப்படலாம்? (மத்தேயு 15:18; லூக்கா 6:45)
8 நாம் செய்யும் எல்லா காரியங்களும் கடவுளுக்குத் தெரியுமாதலால், நாக்கைப்போன்ற உடலின் ஒரு சிறிய உறுப்பைக்கூட நாம் எப்படிப் பயன்படுத்துகிறோம் என்று அவர் அறிந்திருக்கிறார் என்பதைக்குறித்து நாம் ஆச்சரியப்படக்கூடாது. தாவீது அரசன் இதை உணர்ந்து, எழுதினார்: “என் நாவில் சொல் பிறவாததற்குமுன்னே, இதோ, கர்த்தாவே, அதையெல்லாம் நீர் அறிந்திருக்கிறீர்.” (சங்கீதம் 139:4) யெகோவாவின் கூடாரத்தில், மற்றவர்களைப் பழிதூற்றாத, ஒரு நெருங்கிய கூட்டாளிக்குக் கெட்டபெயரைக் கொண்டுவரும்படி தங்களுடைய நாக்கைச் சுவைமிக்க சிறுதுணுக்குகளாலான வீண்பேச்சைப் பரப்புவதற்குப் பயன்படுத்தாத மக்களே விருந்தாளிகளாக வரவேற்கப்படுவர் என்பதைத் தாவீது நன்கு அறிந்திருந்தார். தங்களுடைய இருதயத்தில்கூட உண்மையைப் பேசிய மக்களுக்குத்தான் யெகோவா தயவைக் காண்பிப்பார். (சங்கீதம் 15:1-3; நீதிமொழிகள் 6:16-19) நம்முடைய நாக்கை முழுக் கட்டுப்பாட்டிற்குள் நம்மில் எவருமே வைக்கமுடிவதில்லை; ஆனால் தன்னுடைய நிலைமையை முன்னேற்றுவிப்பதற்கு எதையுமே செய்ய முடியாதென்று தாவீது சோர்வுற்றவராய் முடிவு செய்யவில்லை. அவர் இசையமைப்பதிலும் யெகோவாவிற்குத் துதியின் சங்கீதங்களைப் பாடுவதிலும் அவர் அதிக நேரத்தைச் செலவிட்டார். உதவிக்கான தன்னுடைய தேவையை அவர் தாராளமாக ஒப்புக்கொண்டு, அதற்காகக் கடவுளிடம் ஜெபித்தார். (சங்கீதம் 19:12-14) நாம் நாக்கைப் பயன்படுத்துவதும் ஜெபத்திற்குரிய கவனத்தைத் தேவைப்படுத்துகிறதா?
9. (அ) கடவுள் நம்முடைய நிலைமையை எவ்வளவு முழுமையாக அறிந்திருக்கிறார் என்பதைப்பற்றி சங்கீதம் 139:5-லுள்ள விவரிப்பு என்ன குறிப்பிடுகிறது? (ஆ) இது நாம் எதைப்பற்றி நம்பிக்கை கொண்டிருக்கும்படி செய்கிறது?
9 நம்மையோ நம்முடைய நிலைமையையோ வெறும் ஒரு வரையறுக்கப்பட்ட நோக்கிலிருந்து யெகோவா பார்ப்பதில்லை. எல்லா பக்கங்களிலிருந்தும் அவர் ஒரு முழுமையான காட்சியைக் கொண்டிருக்கிறார். ஒரு முற்றுகையிடப்பட்ட பட்டணத்தை உதாரணமாகப் பயன்படுத்தி தாவீது எழுதினார்: “முற்புறத்திலும் பிற்புறத்திலும் நீர் என்னை நெருக்கி [சூழ்ந்திருக்கிறீர், NW].” தாவீதின் காரியத்தில், கடவுள் ஒரு முற்றுகையிடும் பகைவனாக இருக்கவில்லை; மாறாக, அவர் ஒரு விழிப்புள்ள பாதுகாவலராக இருந்தார். “உமது கரத்தை என்மேல் வைக்கிறீர்,” என்று தாவீது தொடர்ந்து சொன்னார்; அவ்வாறு சொல்வதன்மூலம் கடவுளை நேசிப்பவர்களின் நிரந்தர நன்மைக்காக அவருடைய கட்டுப்பாடும் பாதுகாப்பும் செலுத்தப்படுவதைக் குறிப்பிட்டுக் காட்டினார். “இந்த அறிவு எனக்கு மிகுந்த ஆச்சரியமும், எனக்கு எட்டாத உயரமுமாயிருக்கிறது,” என்று தாவீது ஒப்புக்கொண்டார். (சங்கீதம் 139:5, 6) நம்மால் முழுமையாகப் புரிந்துகொள்ள முடியாத அளவிற்கு, கடவுளுடைய ஊழியர்களைப்பற்றிய அவருடைய அறிவு அவ்வளவு முழுநிறைவானதாகவும், எல்லா விவரங்களையும் உட்படுத்தியதாகவும் இருக்கிறது. ஆனால் யெகோவா உண்மையிலேயே நம்மைப் புரிந்துகொள்கிறார் என்றும் அவர் அளிக்கும் உதவி நம்முடைய மிகச் சிறந்த நன்மைக்கானது என்றும் நம்பிக்கை கொள்வதற்கு போதுமானதை நாம் அறிந்திருக்கிறோம்.—ஏசாயா 48:17, 18.
நாம் எங்கிருந்தாலும், கடவுள் நமக்கு உதவ முடியும்
10. சங்கீதம் 139:7-12-ன் தெளிவான விவரிப்பின்மூலம் என்ன உற்சாகமளிக்கும் சத்தியம் தெரிவிக்கப்படுகிறது?
10 மற்றொரு நோக்குநிலையிலிருந்து யெகோவாவின் அன்பான கவனிப்பை நோக்குகையில், சங்கீதக்காரன் தொடர்கிறார்: “உம்முடைய ஆவிக்கு மறைவாக எங்கே போவேன்? உம்முடைய சமுகத்தைவிட்டு எங்கே ஓடுவேன்?” யெகோவாவைவிட்டு விலகிச்செல்லவேண்டும் என்ற ஆவலை அவர் கொண்டிருக்கவில்லை; மாறாக, தான் எங்கிருந்தாலும், யெகோவாவுக்குத் தெரியும் என்றும் தம்முடைய பரிசுத்த ஆவியால் தனக்கு உதவ முடியும் என்றும் அவர் அறிந்திருந்தார். அவர் தொடர்ந்தார், “நான் வானத்திற்கு ஏறினாலும், நீர் அங்கே இருக்கிறீர்; நான் பாதாளத்தில் படுக்கை போட்டாலும், நீர் அங்கேயும் இருக்கிறீர். நான் விடியற்காலத்துச் செட்டைகளை எடுத்து, சமுத்திரத்தின் கடையாந்தரங்களிலே போய்த் தங்கினாலும், அங்கேயும் உமது கை என்னை நடத்தும், உமது வலதுகரம் என்னைப் பிடிக்கும். இருள் என்னை மூடிக்கொள்ளுமென்றாலும், இரவும் என்னைச் சுற்றி வெளிச்சமாயிருக்கும். உமக்கு மறைவாக இருளும் அந்தகாரப்படுத்தாது; இரவும் பகலைப்போல வெளிச்சமாயிருக்கும்; உமக்கு இருளும் வெளிச்சமும் சரி.” (சங்கீதம் 139:7-12) யெகோவாவின் பார்வைக்கு அப்பால் அல்லது அவருடைய ஆவி நமக்கு உதவி செய்வதற்கு நம்மை அணுகமுடிவதற்கு அப்பால் நம்மை வைத்துவிடக்கூடிய விதத்தில், நாம் போகக்கூடிய எந்த இடமோ, நாம் எதிர்ப்படக்கூடிய எந்தச் சூழ்நிலையோ இல்லை.
11, 12. (அ) யோனா ஒரு காலப்பகுதியில் அதைக்குறித்து மறந்திருந்தபோதிலும், காண்பதற்கும் உதவுவதற்குமான யெகோவாவின் திறமை எவ்வாறு யோனாவின் காரியத்தில் மெய்ப்பிக்கப்பட்டது? (ஆ) யோனாவின் அனுபவம் நமக்கு எப்படிப் பயனளிக்கவேண்டும்?
11 ஒரு சந்தர்ப்பத்தில், யோனா தீர்க்கதரிசி அதை மறந்துவிட்டார். நினிவேயிலுள்ள மக்களுக்குப் பிரசங்கிக்கும்படி யெகோவா அவரை நியமித்திருந்தார். ஏதோ காரணத்திற்காக, தன்னால் அந்த நியமிப்பைக் கையாள முடியாதென அவர் நினைத்தார். ஒருவேளை அசீரியர்கள் முரட்டுத்தனத்திற்குப் பெயர்பெற்றிருந்ததால், நினிவேயில் ஊழியஞ்செய்யும் எண்ணம்தானே யோனாவை அச்சுறுத்தியிருக்கும். ஆகையால் அவர் மறைந்துகொள்ள முயன்றார். யோப்பாவின் கடற்துறைமுகத்தில், (நினிவேக்கு மேற்கில் 3,500 கிலோமீட்டருக்கும் அதிக தொலைவிலுள்ள, பொதுவாக ஸ்பெயினுடன் தொடர்புபடுத்தப்பட்ட) தர்ஷீசுக்கு போகும் ஒரு கப்பலில் செல்வதற்கான உரிமை பெற்றார். இருப்பினும், அவர் கப்பலிலேறி கீழ்த்தட்டில் உறங்கச் சென்றதை யெகோவா பார்த்தார். பின்னர் யோனா கப்பலிலிருந்து வெளியே எறியப்பட்டபோது அவர் எங்கிருந்தார் என்பதையும் கடவுள் அறிந்திருந்தார்; மேலும், யோனா அந்தப் பெரிய மீனின் வயிற்றிலிருந்துகொண்டு தன்னுடைய பொருத்தனைகளைச் செலுத்துவதாக வாக்களித்தபோதும் யெகோவா கேட்டார். திரும்பவும் கரைக்கு மீட்கப்பட்டபோது, யோனாவுக்குத் தன்னுடைய நியமிப்பை நிறைவேற்றுவதற்கான ஒரு வாய்ப்பு மறுபடியும் கொடுக்கப்பட்டது.—யோனா 1:3, 17; 2:1–3:4.
12 தன்னுடைய நியமிப்பை நிறைவேற்றுவதற்காகத் துவக்கத்திலிருந்தே யெகோவாவுடைய ஆவியின்மேல் சார்ந்து இருந்திருந்தால் யோனாவுக்கு எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்! எனினும், பின்னர், யோனா தன்னுடைய அனுபவத்தை மனத்தாழ்மையுடன் பதிவுசெய்தார்; யோனாவுக்கு பெறுவதற்கு அவ்வளவு கடினமாகத் தோன்றிய, யெகோவாவில் நம்பிக்கையை வெளிக்காட்டும்படி அன்று முதல் அநேகருக்கு அந்தப் பதிவு உதவி செய்திருக்கிறது.—ரோமர் 15:4.
13. (அ) யேசபேல் அரசியிடமிருந்து தப்பியோடுவதற்குமுன் எலியா என்ன வேலைகளை உண்மையுடன் நிறைவேற்றியிருந்தார்? (ஆ) இஸ்ரவேலின் பிராந்தியத்திற்கு வெளியே சென்று தங்கும்படி நாடியபோதுங்கூட, யெகோவா எவ்வாறு எலியாவுக்கு உதவினார்?
13 எலியாவின் அனுபவம் சற்று வித்தியாசப்பட்டதாக இருந்தது. தங்களுடைய பாவங்களுக்கு தண்டனையாக இஸ்ரவேல் தேசம் வறட்சியை அனுபவிக்கும் என்ற யெகோவாவின் தீர்ப்பை எலியா உண்மையாக அறிவித்திருந்தார். (1 இராஜாக்கள் 16:30-33; 17:1) கர்மேல் பர்வதத்தில் யெகோவாவுக்கும் பாகாலுக்கும் மத்தியிலிருந்த போட்டியில் அவர் தைரியமாக உண்மை வணக்கத்தை நிலைநாட்டினார். மேலும் கீசோன் ஆற்றங்கரையில் பாகாலின் 450 தீர்க்கதரிசிகளை வெட்டிப்போடுவதன்மூலம் அதைத் தொடர்ந்தார். ஆனால் யேசபேல் அரசி சீற்றத்துடன் எலியாவைக் கொன்றுவிடுவதாகச் சபதம் செய்தபோது, எலியா தேசத்தைவிட்டு ஓடிப்போனார். (1 இராஜாக்கள் 18:18-40; 19:1-4) அந்தக் கஷ்டமான காலத்தில் அவருக்கு உதவி செய்ய யெகோவா இருந்தாரா? ஆம், உண்மையிலேயே இருந்தார். எலியா பரலோகத்திற்குச் செல்வதைப்போன்று ஓர் உயர்ந்த மலையில் ஏறியிருந்தாலும், ஷீயோலில் இருப்பதைப்போன்று பூமியிலுள்ள ஓர் ஆழமான குகையில் ஒளிந்திருந்தாலும், விடியற்காலத்து வெளிச்சம் பூமியில் பரவுவதுபோன்ற வேகத்தில் ஏதோவொரு தொலைகோடியிலுள்ள தீவிற்கு ஓடிப்போயிருந்தாலும்—அவரைப் பலப்படுத்துவதற்கும் வழிநடத்துவதற்கும் யெகோவாவின் கை அங்கே இருந்திருக்கும். (ஒப்பிடவும் ரோமர் 8:38, 39.) மேலும் எலியாவின் பயணத்திற்குத் தேவையான உணவுடன் மட்டுமல்லாமல், தம்முடைய செயல்நடப்பிக்கும் சக்தியின் மகத்தான வெளிக்காட்டுதல்கள்மூலமாகவும் யெகோவா அவரைப் பலப்படுத்தினார். அவ்வாறு பலப்படுத்தப்பட்டவராய், எலியா தன்னுடைய அடுத்த தீர்க்கதரிசன வேலையை மேற்கொண்டார்.—1 இராஜாக்கள் 19:5-18.
14. (அ) கடவுள் எங்கும் வியாபித்திருப்பவர் என்ற முடிவுக்கு வருவது ஏன் தவறானதாக இருக்கும்? (ஆ) நவீன காலங்களில், என்ன சூழ்நிலைகளின்கீழ் யெகோவா தம்முடைய ஊழியர்களை அன்பாக ஆதரித்திருக்கிறார்? (இ) நாம் ஷீயோலில் இருந்தாலும், கடவுள் அங்கும் இருப்பது எப்படி?
14 சங்கீதம் 139:7-12-லுள்ள தீர்க்கதரிசன வார்த்தைகள், கடவுள் எங்கும் வியாபித்திருக்கிறார், அதாவது அவர் எல்லா இடங்களிலும் எல்லா சமயங்களிலும் தனிப்பட்டவராக இருக்கிறார் என்று அர்த்தப்படுவதில்லை. வேதவசனங்கள் தெளிவாகவே வேறுவிதமாகக் காண்பிக்கின்றன. (உபாகமம் 26:15; எபிரெயர் 9:24) இருப்பினும், அவரால் எட்டமுடியாத இடத்தில் அவருடைய ஊழியர்கள் ஒருபோதும் இருப்பதில்லை. தேவராஜ்ய நியமிப்புகள் அவர்களைத் தொலைதூரத்திற்குக் கொண்டுசென்றிருப்பவர்களின் காரியத்தைக் குறித்ததில் அது உண்மையாக இருக்கிறது. இரண்டாம் உலகப் போரின்போது நாசி சித்திரவதை முகாம்களிலிருந்த உண்மைத்தவறாத சாட்சிகளைக் குறித்ததில் உண்மையாக இருந்தது; மேலும் பிற்பட்ட 1950-களிலும் ஆரம்ப 1960-களிலும் தனி அறைச் சிறையடைப்பில் வைக்கப்பட்ட மிஷனரிகளைக் குறித்ததிலும் உண்மையாக இருந்தது. ஒரு மத்திய ஆப்பிரிக்க நாட்டில், தங்களுடைய கிராமங்களிலிருந்தும், நாட்டிலிருந்துங்கூட திரும்பவும் திரும்பவுமாக தப்பியோடவேண்டியதாயிருந்த நம்முடைய அன்பான சகோதர சகோதரிகளைக் குறித்ததிலும் உண்மையாக இருந்தது. தேவை இருந்தால், யெகோவாவால் பொதுவான பிரேதக்குழியாகிய ஷீயோல் வரையாக எட்டிச்சென்று, உண்மையானவர்களை ஓர் உயிர்த்தெழுதல்மூலமாகத் திரும்பக் கொண்டுவர முடியும்.—யோபு 14:13-15; லூக்கா 20:37, 38.
நம்மை உண்மையிலேயே புரிந்துகொள்ளும் ஒருவர்
15. (அ) நம்முடைய வளர்ச்சியை எவ்வளவு ஆரம்ப காலத்திலிருந்தே யெகோவாவால் கவனிக்க முடிந்தது? (ஆ) உள்ளிந்திரியங்களைக்குறித்த சங்கீதக்காரனின் நோக்கீட்டில், நம்மைப்பற்றிய கடவுளுடைய அறிவின் அளவு எவ்வாறு குறிப்பிடப்பட்டிருக்கிறது?
15 ஏவுதலின்கீழ், நம்மைப்பற்றிய கடவுளுடைய அறிவு நாம் பிறக்கும் சமயத்திற்குங்கூட முற்பட்டதாக இருக்கிறதென்ற உண்மைக்கு, இவ்வாறு சொல்வதன்மூலம் சங்கீதக்காரன் கவனத்தை ஈர்க்கிறார்: “நீர் என் உள்ளிந்திரியங்களைக் கைக்கொண்டிருக்கிறீர்; என் தாயின் கர்ப்பத்தில் என்னைக் காப்பாற்றினீர். நான் பிரமிக்கத்தக்க அதிசயமாய் உண்டாக்கப்பட்டபடியால், உம்மைத் துதிப்பேன்; உமது கிரியைகள் அதிசயமானவைகள், அது என் ஆத்துமாவுக்கு நன்றாய்த் தெரியும்.” (சங்கீதம் 139:13, 14) கருத்தரிக்கும் சமயத்தில் நம் தந்தை மற்றும் நம் தாயிலிருந்து மரபணுக்கள் சேர்வது, நம்முடைய சரீர மற்றும் மனம் சார்ந்த ஆற்றலில் ஆழ்ந்த செல்வாக்குச் செலுத்தக்கூடிய அமைப்பை உருவாக்குகிறது. கடவுள் அந்த ஆற்றலைப் புரிந்துகொள்கிறார். இந்தச் சங்கீதத்தில் உள்ளிந்திரியங்களைப்பற்றி விசேஷமாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது; நம்முடைய ஆளுமையின் உள்ளான அம்சங்களைக் குறிப்பதற்கு அவை அடிக்கடி வேதவசனங்களில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.a (சங்கீதம் 7:9; எரேமியா 17:10) நாம் பிறப்பதற்கு முன்பிருந்தே நம்மைப்பற்றிய இந்த விவரங்களை யெகோவா அறிந்திருக்கிறார். ஒரு தாயின் கருப்பையிலுள்ள ஒரு கருவுற்ற உயிரணு, கருவை ‘மறைத்து வைக்க’ ஒரு பாதுகாப்பான குடியிருப்பை உருவாக்கி அது வளருகையில் அதைக் காத்துக்கொள்ளும்படி அன்பான அக்கறையுடன் மனித உடலைத் திட்டமைத்தவரும் அவரே.
16. (அ) கடவுளுடைய பார்வையின் ஊடுருவிச் செல்லும் சக்தியைச் சங்கீதம் 139:15, 16 என்ன வழியில் சிறப்பித்துக் காட்டுகிறது? (ஆ) இது ஏன் நமக்கு உற்சாகமளிப்பதாய் இருக்கவேண்டும்?
16 பின்னர் கடவுளுடைய பார்வையின் ஊடுருவிச்செல்லும் சக்தியை அழுத்திக்காண்பிப்பவராய், சங்கீதக்காரன் தொடர்ந்து சொல்கிறார்: “நான் ஒளிப்பிடத்திலே உண்டாக்கப்பட்டு, பூமியின் தாழ்விடங்களிலே விசித்திர விநோதமாய் உருவாக்கப்பட்டபோது, என் எலும்புகள் உமக்கு மறைவாயிருக்கவில்லை [தெளிவாகவே தன்னுடைய தாயின் கருப்பைக்கு ஒரு கவிதை நடையிலான குறிப்பீடு ஆனால் தூசியிலிருந்து ஆதாம் சிருஷ்டிக்கப்பட்டதைச் சுட்டிக் காண்பிக்கிறது]. என் கருவை உம்முடைய கண்கள் கண்டது; என் அவயவங்களில் ஒன்றாகிலும் [தனிப்பட்ட உடல் பாகம்] இல்லாதபோதே அவைகள் அனைத்தும், அவைகள் [உடல் பாகங்கள்] உருவேற்படும் நாட்களும், உமது புஸ்தகத்தில் எழுதியிருந்தது.” (சங்கீதம் 139:15, 16) அதில் எவ்வித சந்தேகமுமில்லை—உடன் மானிடர்கள் நம்மைப் புரிந்துகொண்டாலும் சரி, புரிந்துகொள்ளாவிட்டாலும் சரி, யெகோவா புரிந்துகொள்கிறார். அது நம்மை எப்படிப் பாதிக்கவேண்டும்?
17. கடவுளுடைய கிரியைகளை அதிசயிக்கத்தக்கவையாக நாம் நோக்குகையில், இது நம்மை என்ன செய்யும்படி தூண்டுவிக்கிறது?
17 தான் எழுதிக்கொண்டிருந்த கடவுளுடைய கிரியைகள் அதிசயிக்கத்தக்கவை என்று சங்கீதம் 139-ன் எழுத்தாளர் ஒத்துக்கொண்டார். நீங்களும் அதேவிதமாக உணருகிறீர்களா? அதிசயிக்கத்தக்க ஏதோவொன்று ஒருவரை ஆழமாகச் சிந்திப்பதற்கு அல்லது மெய்மறந்த கவனத்தைச் செலுத்தும்படி செய்யும். சடப்பொருள் சிருஷ்டிப்பில் யெகோவாவுடைய கிரியைகளிடமாக நீங்கள் அந்த வகையில் பிரதிபலிக்கலாம். (ஒப்பிடவும் சங்கீதம் 8:3, 4, 9.) மேசியானிய ராஜ்யத்தை ஸ்தாபிப்பதில் அவர் என்ன செய்திருக்கிறார், பூமியெங்கும் நற்செய்தி பிரசங்கிக்கப்பட செய்வதில் அவர் என்ன செய்துகொண்டிருக்கிறார், மேலும் மனித ஆளுமைகளை அவருடைய வார்த்தை மாற்றியமைக்கும் வழி ஆகியவற்றைக்குறித்தும் நீங்கள் அதேவிதமான கவனத்தைச் செலுத்துகிறீர்களா?—1 பேதுரு 1:10-12 ஒப்பிடவும்.
18. கடவுளுடைய கிரியை பயபக்தியூட்டுவதாய் இருப்பதாக நாம் கண்டால், அது நம்மை எப்படிப் பாதிக்கும்?
18 அதேவிதமாக, கடவுளுடைய கிரியையைப்பற்றி ஆழ்ந்து சிந்தித்தல், உங்களில் ஓர் ஆரோக்கியமான பயத்தை, சக்திவாய்ந்த விதத்தில் தூண்டக்கூடிய ஒன்றை, உங்களுடைய ஆளுமையிலும் நீங்கள் உங்கள் வாழ்க்கையைப் பயன்படுத்தும்விதத்திலும் ஒரு முழுநிறைவான பாதிப்பைக் கொண்டிருக்கும் ஒன்றாகப் பயபக்தியூட்டுவதாய் இருப்பதாக உங்களுடைய அனுபவம் இருக்கிறதா? (ஒப்பிடவும் சங்கீதம் 66:5.) அப்படியென்றால், யெகோவாவைப் புகழ்வதற்கு, அவரைத் துதிப்பதற்கு, அவருடைய நோக்கத்தையும் அவரை நேசிப்பவர்களுக்காக அவர் கொண்டிருக்கும் மகத்தான காரியங்களைப்பற்றியும் மற்றவர்களுக்குச் சொல்லும்படி வாய்ப்புகளை உருவாக்குவதற்கு உங்களுடைய இருதயம் உங்களைத் தூண்டும்.—சங்கீதம் 145:1-3.
[அடிக்குறிப்புகள்]
a உவாட்ச்டவர் பைபிள் அன்ட் டிராக்ட் சொஸையிட்டி பிரசுரித்த வேதவாக்கியங்களின்பேரில் உட்பார்வை, (Insight on the Scriptures) தொகுதி 2, பக்கம் 150-ஐ பார்க்கவும்.
உங்களுடைய குறிப்பு என்ன?
◻ “யெகோவாவே தேவன்” என்பதை நாம் அறிந்திருப்பது அவரைச் சந்தோஷத்துடன் சேவிப்பதற்கு எவ்வாறு நமக்கு உதவி செய்யும்?
◻ நாம் செய்யும் எல்லாவற்றையும் கடவுள் அறிந்திருப்பதால் நம்முடைய வாழ்க்கை எவ்வாறு மாற்றியமைக்கப்படவேண்டும்?
◻ நாம் ஒருபோதும் கடவுளுடைய பார்வைக்கு எட்டாதவர்களாய் இல்லை என்ற உண்மை ஏன் உற்சாகமளிப்பதாய் இருக்கிறது?
◻ ஒரு மனிதனும் புரிந்துகொள்ளமுடியாத வழிகளில் கடவுள் ஏன் நம்மைப் புரிந்துகொள்ளமுடிகிறது?
◻ இதைப் போன்ற ஒரு படிப்பு ஏன் நாம் யெகோவாவைப் புகழும்படி செய்கிறது?