நாம் ‘அதிசயமாய் உண்டாக்கப்பட்டிருக்கிறோம்’
‘நான் பிரமிக்கத்தக்க அதிசயமாய் உண்டாக்கப்பட்டிருக்கிறேன்.’—சங்கீதம் 139:14.
1. நன்கு சிந்திக்கும் ஆட்கள் பலர், பூமியின் அதிசயமான படைப்புகளுக்குக் கடவுளே காரணர் என ஏன் நம்புகிறார்கள்?
இயற்கை எழில்கொஞ்சும் இப்பூவுலகில் அதிசயமான படைப்புகள் ஏராளம் ஏராளம்! இவையெல்லாம் எப்படித் தோன்றின? புத்திக்கூர்மையுள்ள படைப்பாளரைப் பற்றிப் பேச்செடுக்காமலேயே இதற்கான பதிலைப் பெற முடியுமென சிலர் நினைக்கிறார்கள். படைப்பாளர் ஒருவர் இருக்கிறார் என்ற கருத்தை முன்பின் யோசிக்காமல் ஒதுக்கித் தள்ளினால் இயற்கையைப்பற்றிப் புரிந்துகொள்வது கடினமென வேறு சிலர் நினைக்கிறார்கள். இந்தப் பூமியிலுள்ள படைப்புகள் மிகவும் சிக்கலானவையாய், பலதரப்பட்டவையாய் இருப்பதாக அவர்கள் கருதுகிறார்கள்; அவை தானாகத் தோன்றியவையெனச் சொல்ல முடியாதளவுக்கு மிகவும் அதிசயமானவை என்றும் அவர்கள் கருதுகிறார்கள். ஞானமும் சக்தியும் பரந்த உள்ளமும் கொண்ட ஒருவர் இப்பிரபஞ்சத்தைப் படைத்திருக்கிறார் என்பதற்கு ஆணித்தரமான அத்தாட்சிகள் இருப்பதை விஞ்ஞானிகள் உட்பட பலரும் நம்புகிறார்கள்.a
2. யெகோவாவுக்குப் புகழாரம் சூட்ட எது தாவீதைத் தூண்டியது?
2 இவ்வுலகின் அதிசயமான படைப்புகளுக்குப் புகழாரம் சூட்டப்பட வேண்டியவர் படைப்பாளரே என்பதை உறுதியாக நம்பிய ஒருவர்தான் பண்டைய இஸ்ரவேலின் ராஜாவான தாவீது. அவர் இன்றைய விஞ்ஞான யுகத்திற்கு வெகு காலத்திற்கும் முன்பே வாழ்ந்தவர்; என்றாலும், கடவுளுடைய கைவண்ணத்திற்கு எடுத்துக்காட்டான அற்புத படைப்புகள் தன்னைச் சுற்றிலும் இருப்பதை அவர் உணர்ந்தார். கடவுளுடைய படைப்புத் திறனைக் கண்டு பிரமிப்படைவதற்கு தான் உருவாக்கப்பட்ட விதத்தைச் சிந்தித்துப் பார்த்ததே தாவீதுக்குப் போதுமானதாய் இருந்தது. அதனால்தான் அவர் இவ்வாறு எழுதினார்: “நான் பிரமிக்கத்தக்க அதிசயமாய் உண்டாக்கப்பட்டபடியால், உம்மைத் துதிப்பேன்; உமது கிரியைகள் அதிசயமானவைகள், அது என் ஆத்துமாவுக்கு நன்றாய்த் தெரியும்.”—சங்கீதம் 139:14.
3, 4. யெகோவாவின் செயல்களைப் பற்றி நாம் எல்லாருமே ஆழ்ந்து சிந்திப்பது ஏன் முக்கியம்?
3 ஆழ்ந்து சிந்தித்துப் பார்த்தபோதுதான் படைப்பாளர்மீது தாவீதுக்கு உறுதியான நம்பிக்கை ஏற்பட்டது. இன்றோ, மனிதனின் ஆரம்பத்தைப்பற்றி பள்ளிப் பாடநூல்களும் மீடியாக்களும் ஏராளமான கோட்பாடுகளைக் கற்பிக்கின்றன; இவை நம் நம்பிக்கையைக் குலைத்துப்போடும் கோட்பாடுகளாக இருக்கின்றன. ஆனால், தாவீதுக்கு இருந்ததைப் போன்ற நம்பிக்கை நமக்கும் ஏற்படுவதற்கு நாமும்கூட அவரைப் போலவே ஆழ்ந்து சிந்திப்பது அவசியம். மற்றவர்களுடைய சிந்தனை நம் சிந்தனையைப் பாதிக்க அனுமதிப்பது ஆபத்தானது; முக்கியமாக, படைப்பாளர் ஒருவர் இருப்பதையும் அவர் வகிக்கும் பங்கையும் குறித்த அடிப்படை விஷயங்களில் அவ்வாறு அனுமதிப்பது ஆபத்தானது.
4 அதுமட்டுமல்ல, யெகோவாவின் செயல்களைக் குறித்து ஆழ்ந்து சிந்திக்கையில் அவர் மீதுள்ள நம் அன்பும் நன்றியுணர்வும் அதிகரிக்கிறது; எதிர்காலத்திற்கான அவருடைய வாக்குறுதிகள்மீது நம் நம்பிக்கையும் உறுதிப்படுகிறது. இவ்வாறு செய்யும்போது, யெகோவாவைப்பற்றி இன்னும் நன்றாய் அறிந்துகொள்ளவும் அவருக்குச் சேவை செய்யவும் நாம் தூண்டப்படுவோம். ஆகவே, நாம் ‘அதிசயமாய் உண்டாக்கப்பட்டிருக்கிறோம்’ என்று தாவீது சொன்னதை நவீன விஞ்ஞானம் எவ்வாறு உறுதிப்படுத்தியிருக்கிறது என்பதை நாம் இப்போது ஆராயலாம்.
நாம் அற்புதமாய் உருவான விதம்
5, 6. (அ) நாம் அனைவரும் எவ்வாறு உருவானோம்? (ஆ) நம் சிறுநீரகங்கள் வகிக்கும் பங்கைக் குறிப்பிடுக.
5 “நீர் என் உள்ளிந்திரியங்களைக் கைக்கொண்டிருக்கிறீர் [அதாவது, சிறுநீரகங்களை உண்டாக்கியிருக்கிறீர்]; என் தாயின் கர்ப்பத்தில் என்னைக் காப்பாற்றினீர்.” (சங்கீதம் 139:13) தாயின் வயிற்றில் நாம் உருவானபோது, இந்த வாக்கியத்தின் இறுதியில் உள்ள முற்றுப்புள்ளியையும்விட சிறிய ஒற்றை செல்லாகவே இருந்தோம். கண்ணுக்குப் புலப்படாத அந்த நுண்ணிய செல்லின் அமைப்பு மிகவும் சிக்கலானதாக இருந்தது; ஆம், அது ஒரு குட்டி ரசாயன ஆய்வுக்கூடமாக இருந்தது! அது மிக விரைவாக வளர்ந்தது. இரண்டே மாதங்களில் உங்கள் தாயின் கருப்பையில் உங்களுடைய முக்கிய உறுப்புகளெல்லாம் உருவாகிவிட்டன. அவற்றில் ஒன்றுதான் உங்களுடைய சிறுநீரகங்கள். தாயின் வயிற்றிலிருந்து நீங்கள் வெளியே வந்தவுடன், உங்களுடைய சிறுநீரகங்கள் இரத்தத்தை வடிகட்டத் தயாராகிவிட்டன; அதாவது, இரத்தத்திலுள்ள நச்சுக்களையும், அளவுக்கு மிஞ்சிய தண்ணீரையும் நீக்கி சத்துப்பொருட்கள் வெளியேறிவிடாமல் பார்த்துக் கொண்டன. உங்களுடைய இரண்டு சிறுநீரகங்களும் ஆரோக்கியமானவையாய் இருக்குமானால், அவை 45 நிமிடங்களுக்கு ஒருமுறை உங்கள் இரத்தத்திலுள்ள தண்ணீரை வடிகட்டுகின்றன; அவ்வாறு வயதுவந்த நபருடைய உடலிலிருந்து அவை 5 லிட்டர் தண்ணீரை வடிகட்டுகின்றன!
6 உங்கள் சிறுநீரகங்கள், இரத்த அழுத்தத்தையும் அமிலத்தன்மையையும், இரத்தத்திலுள்ள தாதுப்பொருட்களின் அளவையும் கட்டுப்படுத்த உதவுகின்றன. இன்னும் அநேக முக்கியப் பணிகளையும் அவை செய்கின்றன: உதாரணத்திற்கு, வைட்டமின் டி-யை எலும்பு வளர்ச்சிக்குத் தேவையான கூட்டுப்பொருளாக மாற்றுகின்றன; உங்களுடைய எலும்புகளில் சிவப்பணுக்களின் உற்பத்தியைத் தூண்டும் ஹார்மோனாகிய எரித்ரோபாய்ட்டினை உற்பத்தி செய்கின்றன. ஆகவே, சிறுநீரகங்கள் “உடலின் தலைசிறந்த வேதியியல் நிபுணர்கள்” என அழைக்கப்பட்டிருப்பதில் ஆச்சரியமே இல்லை.b
7, 8. (அ) பிறவாத குழந்தையின் ஆரம்பகால வளர்ச்சியைப்பற்றி விவரியுங்கள். (ஆ) வளரும் சிசு எவ்விதத்தில் ‘பூமியின் தாழ்விடங்களிலே விசித்திர விநோதமாய் உருவாக்கப்படுகிறது’?
7 “நான் ஒளிப்பிடத்திலே உண்டாக்கப்பட்டு, பூமியின் தாழ்விடங்களிலே விசித்திர விநோதமாய் உருவாக்கப்பட்டபோது, என் எலும்புகள் உமக்கு மறைவாயிருக்கவில்லை.” (சங்கீதம் 139:15) அந்த ஒற்றை செல் இரண்டாகி, பின்பு நான்காகி, இப்படிப் புதுப்புது செல்களாகப் பிரிந்துகொண்டே இருந்தன. இவ்வாறு பிரிந்த செல்கள் பலவகை செல்களாக வித்தியாசப்படுத்திக் காட்டத் துவங்கின; சீக்கிரத்திலேயே அவை நரம்பு செல்கள், தசை செல்கள், தோல் செல்கள் போன்ற பலவகை செல்களாக ஆயின. ஒரே வகையைச் சேர்ந்த செல்கள் ஒன்றுசேர்ந்து திசுக்களாக உருவாகி, பின்னர் உறுப்புகளாக மாறின. உதாரணமாக, உங்கள் தாய் கருவுற்ற மூன்றாம் வாரத்தில் உங்களுடைய எலும்புக்கூடு உருவாக ஆரம்பித்தது. வெறும் ஏழு வாரத்திலேயே, நீங்கள் சுமார் இரண்டரை சென்டிமீட்டர் நீளமாய் இருந்தபோதே, ஆரம்ப நிலையிலுள்ள உங்களது 206 எலும்புகளும் அதனதன் இடத்தில் அமைந்துவிட்டன; இவ்வாறு, வலுவற்ற ஒரு குட்டி எலும்புக்கூடு உருவாகிவிட்டது.
8 பூமியின் ஆழத்தில் புதைந்திருப்பதுபோல, மனித கண்களுக்குப் புலப்படாத இடத்தில், அதாவது உங்களுடைய தாயின் கருப்பையில், இந்த வியத்தகு வளர்ச்சி நடைபெற்றது. சொல்லப்போனால், நாம் எப்படி உருவாகிறோம் என்பதைப்பற்றி மனிதனுக்குத் தெரியாத இன்னும் அதிக விஷயங்கள் உள்ளன. உதாரணமாக, அந்தந்த உறுப்புக்குரிய செல்கள் பிரிந்து உடலின் வெவ்வேறு உறுப்புகளாக மாறுவதற்கு செல்களிலுள்ள குறிப்பிட்ட ஜீன்களைத் தூண்டுவித்தது எது? ஒருவேளை, நாளடைவில் விஞ்ஞானிகள் அதைக் கண்டுபிடிக்கலாம்; ஆனால், தாவீது அடுத்தபடியாகக் குறிப்பிட்டபடி, நம் படைப்பாளரான யெகோவா இவை எல்லாவற்றையும் ஏற்கெனவே அறிந்திருக்கிறார்.
9, 10. தாயின் வயிற்றிலுள்ள கருவில் உறுப்புகள் உருவாவது கடவுளுடைய “புஸ்தகத்தில் எழுதியிருந்தது” எவ்வாறு?
9 “என் கருவை உம்முடைய கண்கள் கண்டது; என் அவயவங்களில் ஒன்றாகிலும் இல்லாதபோதே அவைகள் அனைத்தும், அவைகள் உருவேற்படும் நாட்களும், உமது புஸ்தகத்தில் எழுதியிருந்தது.” (சங்கீதம் 139:16) அந்த ஒற்றை செல்லில் உங்களுடைய முழு உடலின் திட்ட வரைபடம் இருந்தது. தாயின் கருப்பையில் உங்களுடைய ஒன்பது மாத வளர்ச்சியிலிருந்து, பின்னர் இருபது வருடங்களுக்கும் மேல் வளர்ந்து ஆளாகும் வரையிலும்கூட இந்தத் திட்ட வரைபடமே கைகொடுத்து உதவியது. இந்தக் காலப்பகுதியின்போது உங்களுடைய உடலில் பல மாற்றங்கள் ஏற்பட்டன; அந்த ஒற்றை செல்லில் புரோகிராம் செய்யப்பட்டிருந்த தகவலின் அடிப்படையிலேயே இவை அனைத்தும் நடந்தன.
10 செல்களையும் ஜீன்களையும்பற்றி தாவீது அறிந்திருக்கவில்லை, அவரிடம் நுண்ணோக்கியும்கூட இருக்கவில்லை. ஆனால், முன்னதாகவே இடப்பட்டிருந்த திட்டத்தின் அடிப்படையில்தான் தன்னுடைய உடல் படிப்படியாக வளர்ச்சியடைந்தது என்பதை அவர் சரியாகவே உணர்ந்துகொண்டார். தாயின் வயிற்றிலுள்ள கரு எவ்வாறு வளர்ச்சியடைகிறது என்பதைப்பற்றி தாவீது ஓரளவு அறிந்திருக்கலாம்; ஆகையால், முன்னதாகத் திட்டமிடப்பட்ட வடிவமைப்பையும் கால அட்டவணையையும் பொறுத்தே ஒவ்வொரு கட்டமாக வளர்ச்சி நடைபெறுகிறது என்பதை அவரால் விளக்க முடிந்தது. அதனால்தான் இந்த வடிவமைப்பு கடவுளுடைய “புஸ்தகத்தில் எழுதியிருந்தது” என கவிதை நடையில் அவர் விவரித்தார்.
11. நம் தோற்றத்தின் சிறப்பான அம்சங்களை நிர்ணயிப்பது எது?
11 பெற்றோரிடமிருந்தும் முன்னோரிடமிருந்தும் நீங்கள் பெற்றிருக்கும் சிறப்பான அம்சங்களை, அதாவது உயரம், முக இலட்சணம், கண்களின் மற்றும் தலைமுடியின் நிறம், இன்னும் இதுபோன்ற ஆயிரக்கணக்கான தனித்தன்மைகளை நிர்ணயித்தது உங்கள் ஜீன்களே என்பது நன்கு அறியப்பட்ட விஷயம்தான். உங்களுடைய ஒவ்வொரு செல்லிலும் பத்தாயிரக்கணக்கான ஜீன்கள் உள்ளன; இந்த ஜீன்கள் ஒவ்வொன்றும் நீண்ட சங்கிலித்தொடர் அமைப்புடைய டிஎன்ஏ-யின் (டிஆக்ஸிரிபோநியூக்ளிக் அமிலம்) பாகமாகும். உங்களுடைய உடலை உருவமைப்பதற்குரிய தகவல்கள் உங்களது டிஎன்ஏ-யின் வேதியியல் அமைப்பில் ‘எழுதப்பட்டிருந்தது.’ புதிய செல்களை உருவாக்குவதற்கோ பழைய செல்களை மாற்றீடு செய்வதற்கோ உங்களுடைய செல்கள் பிரியும் ஒவ்வொரு முறையும் டிஎன்ஏ அந்தத் தகவல்களைக் கடத்துகிறது; அதன்மூலம் உங்களை உயிரோடு வைக்கிறது, உங்களுக்கே உரிய தோற்றம் மாறாதபடி காக்கிறது. ஞானத்திலும் வல்லமையிலும் நம் பரலோகப் படைப்பாளருக்கு நிகர் அவரே!
நமது மனம்—தனித்தன்மை வாய்ந்தது
12. விலங்குகளிலிருந்து மனிதரை வேறுபடுத்திக் காட்டுவது எது?
12 “தேவனே, உமது ஆலோசனைகள் [அதாவது, யோசனைகள்] எனக்கு எத்தனை அருமையானவைகள்; அவைகளின் தொகை எவ்வளவு அதிகம். அவைகளை நான் எண்ணப்போனால், மணலைப்பார்க்கிலும் அதிகமாம்.” (சங்கீதம் 139:17, 18அ) விலங்குகளும்கூட அற்புதமான விதத்தில் உண்டாக்கப்பட்டிருக்கின்றன; சில விலங்குகளுக்கு மனிதரைக் காட்டிலும் விசேஷமான புலனுணர்வுகளும் திறமைகளும் உள்ளன. மனிதருக்கோ சிந்திக்கும் திறமைகளைக் கடவுள் கொடுத்திருக்கிறார்; இவை எந்த விலங்குக்கும் இல்லாத உன்னதத் திறமைகளாகும். “மனிதரும் விலங்குகளும் பல விஷயங்களில் ஒன்றுபோல இருந்தாலும், சிந்திக்கும் திறனிலும் சரி மொழியைப் பேசும் திறனிலும் சரி, உலகத்து உயிரினங்கள் அனைத்திலும் மனிதரே தனித்தன்மை வாய்ந்தவர்கள்” என ஓர் அறிவியல் பாடப்புத்தகம் குறிப்பிடுகிறது. “நம்மைப்பற்றி அறிந்துகொள்ளும் விஷயத்திலும் நாம் தனித்தன்மை வாய்ந்தவர்கள்; அதாவது, நம்முடைய உடல் எவ்வாறு வடிவமைக்கப்பட்டது, நாம் எவ்வாறு உருவானோம் என்பதைப் போன்ற கேள்விகளுக்கான பதிலை அறிந்துகொள்ள நாம் தீவிர ஆர்வம் காட்டுகிறோம்” என்றும் அந்தப் பாடப்புத்தகம் குறிப்பிடுகிறது. இக்கேள்விகளை தாவீதும்கூட ஆழ்ந்து சிந்தித்தார்.
13. (அ) கடவுளுடைய யோசனைகளை தாவீதால் எவ்வாறு தியானிக்க முடிந்தது? (ஆ) தாவீதின் உதாரணத்தை நாம் எப்படிப் பின்பற்றலாம்?
13 மிக முக்கியமாக, கடவுளுடைய யோசனைகளைc ஆழ்ந்து சிந்திக்கும் திறன் நமக்கு இருப்பதே விலங்குகளுக்கும் நமக்குமுள்ள வித்தியாசம். இந்த விசேஷத் திறன், நாம் ‘தேவசாயலில்’ உண்டாக்கப்பட்டிருப்பதைக் காட்டுகிற ஒரு வழியாகும். (ஆதியாகமம் 1:27) இத்திறனை தாவீது நன்கு பயன்படுத்திக்கொண்டார். கடவுள் இருப்பதற்கான அத்தாட்சிகளையும், அவரது சிறந்த பண்புகளையும் படைப்புகளில் கண்ட தாவீது, அவற்றைக் குறித்து தியானித்தார். பைபிளின் ஆரம்பப் புத்தகங்களும்கூட தாவீதிடம் இருந்தன; கடவுள் தம்மைப் பற்றியும் தம்முடைய செயல்களைப் பற்றியும் வெளிப்படுத்திய விஷயங்கள் அவற்றில் அடங்கியிருந்தன. பரிசுத்த ஆவியின் ஏவுதலால் எழுதப்பட்ட இப்புத்தகங்கள், கடவுளுடைய யோசனைகளையும் சுபாவத்தையும் நோக்கத்தையும் அறிந்துகொள்ள தாவீதுக்கு உதவின. வேத வசனங்களையும் படைப்புகளையும் தனக்கு கடவுள் செய்த காரியங்களையும் தியானித்தது யெகோவாவைப் புகழ்ந்து துதிக்க தாவீதைத் தூண்டியது.
விசுவாசத்தில் உட்பட்டிருப்பவை
14. கடவுள்மீது விசுவாசம் வைப்பதற்கு அவரைப்பற்றிய எல்லாவற்றையும் நாம் ஏன் அறிந்துகொள்ள வேண்டியதில்லை?
14 தாவீது, கடவுளுடைய வார்த்தையையும் படைப்பையும் குறித்து தியானிக்க தியானிக்க, கடவுளுடைய அறிவையும் ஆற்றலையும் முழுமையாகக் கிரகித்துக்கொள்வது தன் அறிவுக்கு அப்பாற்பட்டது என்பதை நன்றாகவே புரிந்துகொண்டார். (சங்கீதம் 139:6) ஆம், அது நம்முடைய அறிவுக்கும் அப்பாற்பட்டதே. கடவுளுடைய படைப்பின் செயல்கள் எல்லாவற்றையும்பற்றி நம்மால் ஒருபோதும் புரிந்துகொள்ள முடியாது. (பிரசங்கி 3:11; 8:17) சத்தியத்தை வாஞ்சிப்பவர்கள் அத்தாட்சியின் அடிப்படையில் விசுவாசத்தை வளர்த்துக்கொள்வதற்கு அன்றிலிருந்து இன்றுவரை, தம்முடைய வார்த்தையின் மூலமாகவும் இயற்கையின் மூலமாகவும் போதுமான அறிவை கடவுள் “வெளிப்படுத்தியிருக்கிறார்.”—ரோமர் 1:19, 20; எபிரெயர் 11:1, 3.
15. விசுவாசமும் கடவுளோடு உள்ள பந்தமும் எப்படி ஒன்றுக்கொன்று சம்பந்தப்பட்டுள்ளன என்பதை விளக்குங்கள்.
15 கடவுள்மீது விசுவாசம் வைப்பதற்கு, புத்திக்கூர்மையுள்ள ஒருவர் இப்பிரபஞ்சத்தையும் உயிரினங்களையும் படைத்திருக்கிறார் என்பதை ஏற்றுக்கொள்வது மட்டுமே போதாது. மாறாக, யெகோவா தேவனை ஒரு நபராகக் கருதி அவர்மீது நம்பிக்கை வைப்பதும் அவசியம்; அதாவது, நாம் அவருடன் எப்போதும் நல்ல பந்தத்தை வைத்துக்கொள்ள அவர் விரும்புகிறவர் எனக் கருதி அவர்மீது நம்பிக்கை வைப்பதும் அவசியம். (யாக்கோபு 4:8) உதாரணத்திற்கு, உங்களுடைய அன்பான அப்பாமீது உங்களுக்கு இருக்கும் நம்பிக்கையை எடுத்துக்கொள்வோம். ‘இக்கட்டான ஒரு சூழ்நிலையில் உன்னுடைய அப்பா உனக்கு உதவுவாரா?’ என யாராவது ஒருவர் சந்தேகத்தோடு கேட்டால், உங்களுடைய அப்பா கண்டிப்பாக உதவுவார் என்பதை உங்களால் நிரூபிக்க முடியாமற்போகலாம். அதே சமயத்தில், உங்களுடைய அப்பா நல்லவர் என்பதற்கான அத்தாட்சிகளை நீங்களே அனுபவத்தில் கண்டிருந்தால், அவர் உங்களைக் கைவிட மாட்டார் என்பதில் உங்களுக்குத் துளியும் சந்தேகம் இருக்காது. அவ்வாறே, பைபிளை ஆழ்ந்து படிப்பதன் மூலமும், படைப்பைக் குறித்து தியானிப்பதன் மூலமும், நம் ஜெபங்களுக்குப் பதில் கிடைத்ததை அனுபவத்தில் காண்பதன்மூலமும் யெகோவாவைப்பற்றி அறிந்துகொள்கையில், அவர்மீது நம்பிக்கை வைக்க நாம் தூண்டப்படுவோம். இது, அவரைப்பற்றி இன்னுமதிகமாக அறிந்து தன்னலமற்ற அன்போடும் பக்தியோடும் என்றென்றுமாக அவரைப் புகழ்ந்து துதிக்க வேண்டுமென்ற ஆசையை நம்மில் ஏற்படுத்துகிறது. இதுவே, ஒருவர் நாடவேண்டிய உன்னத இலக்காகும்.—எபேசியர் 5:1, 2.
நம் படைப்பாளரின் ஆலோசனையை நாடுங்கள்
16. யெகோவாவிடம் தாவீதுக்கிருந்த நெருங்கிய பந்தத்திலிருந்து நாம் என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம்?
16 “தேவனே, என்னை ஆராய்ந்து, என் இருதயத்தை அறிந்துகொள்ளும்; என்னைச் சோதித்து, என் சிந்தனைகளை அறிந்துகொள்ளும். வேதனை உண்டாக்கும் வழி என்னிடத்தில் உண்டோ என்று பார்த்து, நித்திய வழியிலே என்னை நடத்தும்.” (சங்கீதம் 139:23, 24) யெகோவா தன்னை முழுமையாக அறிந்திருக்கிறார் என்பதை தாவீது உணர்ந்தார்; அதாவது, தன்னுடைய சிந்தை, சொல், செயல் ஆகிய எல்லாவற்றையும் முழுமையாக அறிந்திருக்கிறார் என்பதை அவர் உணர்ந்தார். (சங்கீதம் 139:1-12; எபிரெயர் 4:13) இவ்வாறு தன்னைப்பற்றி எல்லாவற்றையும் கடவுள் அறிந்திருந்ததால், தாவீது பாதுகாப்பாக உணர்ந்தார். ஆம், அன்பான பெற்றோரின் கைகளில் ஒரு குழந்தை பாதுகாப்பாக இருப்பதைப் போலவே அவர் உணர்ந்தார். யெகோவாவோடு வைத்திருந்த நெருங்கிய பந்தத்தை ஒரு பொக்கிஷமாக தாவீது கருதினார்; அதோடு, அவருடைய செயல்களைப்பற்றி ஆழ்ந்து சிந்தித்ததன் மூலமும் அவரிடம் ஜெபித்ததன் மூலமும் அந்தப் பந்தத்தைக் காத்துக்கொள்ள முயன்றார். சொல்லப்போனால், 139-ஆம் சங்கீதம் உட்பட தாவீது இயற்றிய அநேக சங்கீதங்கள், இசையுடன்கூடிய ஜெபங்களாகும். தியானிப்பதும் ஜெபிப்பதும் யெகோவாவிடம் நெருங்கிவர நமக்கும் உதவும்.
17. (அ) தன் இருதயத்தை ஆராயும்படி யெகோவாவிடம் தாவீது ஏன் கேட்டார்? (ஆ) சுயமாகத் தெரிவு செய்யும் சுதந்தரத்தை நாம் பயன்படுத்தும் விதம் நம்முடைய வாழ்க்கையை எப்படிப் பாதிக்கிறது?
17 நாம் கடவுளுடைய சாயலில் படைக்கப்பட்டிருப்பதால், சுயமாகத் தெரிவு செய்யும் சுதந்தரம் நமக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. அதனால் நல்லதையோ கெட்டதையோ செய்ய நாம் விரும்பலாம். ஆனால், நாம் செய்யும் தெரிவுகளுக்குக் கணக்குக் கொடுக்க வேண்டிய பொறுப்பும் இருக்கிறது. கடவுள் தன்னைத் துன்மார்க்கரில் ஒருவராய்க் கருதிவிட தாவீது விரும்பவில்லை. (சங்கீதம் 139:19-22) மனவேதனை உண்டாக்கும் தவறுகளைச் செய்யாதிருக்கவே அவர் விரும்பினார். அதனால், யெகோவாவின் எல்லையற்ற அறிவைத் தியானித்தபோது, தன் இருதயத்தை நன்கு ஆராய்ந்து ஜீவனுக்குச் செல்லும் பாதையில் தன்னை நடத்தும்படி தாழ்மையோடு கடவுளிடம் அவர் கேட்டார். கடவுளுடைய நீதியான ஒழுக்க நியதிகள் எல்லாருமே கடைப்பிடிக்க வேண்டியவை; ஆகவே, நாமும்கூட சரியான தெரிவுகளைச் செய்வது அவசியம். தமக்குக் கீழ்ப்படியும்படி எல்லாரையும் யெகோவா ஊக்குவிக்கிறார். அவ்வாறு கீழ்ப்படியும்போது அவருடைய தயவும், அநேக நன்மைகளும் நமக்குக் கிடைக்கும். (யோவான் 12:50; 1 தீமோத்தேயு 4:8) ஒவ்வொரு நாளும் யெகோவாவுடன் நடப்பது, தாங்கமுடியாத பிரச்சினைகளின் மத்தியிலும் மன அமைதியோடு இருக்க நமக்கு உதவுகிறது.—பிலிப்பியர் 4:6, 7.
நம் அற்புத படைப்பாளரைப் பின்பற்றுங்கள்
18. படைப்பை ஆழ்ந்து சிந்தித்ததிலிருந்து தாவீது என்ன முடிவுக்கு வந்தார்?
18 தாவீது சிறுவனாக இருந்தபோது பெரும்பாலும் வெட்டவெளியில் ஆடுகளை மேய்த்து வந்தார். ஆடுகள் தலையைத் தாழ்த்தி மேய்ந்துகொண்டிருக்கையில், அவர் தலையை உயர்த்தி வானத்தை ஏறெடுத்துப் பார்த்தார். மாலை மயங்கி இருள்கவிந்த வேளையில், தாவீது இப்பிரபஞ்சத்தின் மகத்துவத்தையும், அது குறித்துக்காட்டுகிற அனைத்தையும்பற்றி ஆழ்ந்து சிந்தித்தார். “வானங்கள் தேவனுடைய மகிமையை வெளிப்படுத்துகிறது, ஆகாயவிரிவு அவருடைய கரங்களின் கிரியையை அறிவிக்கிறது. பகலுக்குப் பகல் வார்த்தைகளைப் பொழிகிறது, இரவுக்கு இரவு அறிவைத் தெரிவிக்கிறது” என அவர் எழுதினார். (சங்கீதம் 19:1, 2) எல்லாவற்றையும் அதிசயமாய் உண்டாக்கியவரை நாடி, அவரைப் பின்பற்றி நடப்பது அவசியம் என்பதை தாவீது புரிந்துகொண்டார். நாமும்கூட அவ்வாறே செய்ய வேண்டும்.
19. இளையோரும் முதியோருமாகிய நாம், ‘அதிசயமாய் உண்டாக்கப்பட்டிருக்கிறோம்’ என்பதை அறிவதிலிருந்து’ என்ன பாடங்களைக் கற்றுக்கொள்ளலாம்?
19 “நீ உன் வாலிபப்பிராயத்திலே உன் சிருஷ்டிகரை நினை, . . . தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே” என்று சாலொமோன் பின்னர் இளைஞருக்குக் கொடுத்த புத்திமதிக்கு தாவீது முன்னுதாரணமாய்த் திகழ்ந்தார். (பிரசங்கி 12:1, 13) தாவீது இளைஞனாயிருந்தபோதே, தான் ‘அதிசயமாய் உண்டாக்கப்பட்டிருந்ததை’ அறிந்திருந்தார். இந்த அறிவுக்கிசைய நடந்ததால், தன் வாழ்நாள் காலத்தில் மிகுதியான நன்மைகளைப் பெற்றார். நாம் இளைஞர்களாக இருந்தாலும்சரி, முதியவர்களாக இருந்தாலும்சரி, நம் மகத்தான படைப்பாளரைப் புகழ்ந்து அவரைச் சேவித்தால், இப்போதும் எதிர்காலத்திலும் நம் வாழ்க்கை மகிழ்ச்சியுள்ளதாய் இருக்கும். யெகோவாவிடம் நெருக்கமாய் இருந்து அவருடைய நீதியான வழிகளின்படி வாழ்வோருக்கு பைபிள் இவ்வாறு வாக்கு கொடுக்கிறது: “கர்த்தர் உத்தமரென்று . . . விளங்கப்பண்ணும்படி, அவர்கள் முதிர்வயதிலும் கனிதந்து, புஷ்டியும் பசுமையுமாயிருப்பார்கள்.” (சங்கீதம் 92:14, 15) ஆம், நம் படைப்பாளரின் அதிசயமான படைப்புகளை என்றென்றும் அனுபவித்து மகிழும் நம்பிக்கையை நாம் பெறுவோம்.
[அடிக்குறிப்புகள்]
a யெகோவாவின் சாட்சிகள் பிரசுரித்த ஜூன் 22, 2004 ஆங்கில விழித்தெழு!-வைக் காண்க.
b ஆகஸ்ட் 8, 1997 விழித்தெழு! இதழில், “உங்கள் சிறுநீரகங்கள்—உயிர்காக்கும் ஒரு வடிகட்டி” என்ற கட்டுரையைக் காண்க.
c யெகோவாவின் யோசனைகளை இரவில் தூங்கும்வரையாக எண்ணிக்கொண்டிருந்த தாவீது, காலையில் கண்விழித்த பிறகும் எண்ணிக்கொண்டே இருந்திருக்கிறார்; அந்தளவுக்கு அவை அதிகமாயிருந்தன என்பதையே சங்கீதம் 139:18ஆ-வில் காணப்படுகிற தாவீதின் வார்த்தைகள் அர்த்தப்படுத்துகின்றன.
விளக்க முடியுமா?
• தாயின் வயிற்றிலுள்ள கரு வளர்ச்சியடைகிற விதம், நாம் ‘அதிசயமாய் உண்டாக்கப்பட்டிருப்பதை’ எப்படிக் காட்டுகிறது?
• யெகோவாவின் யோசனைகளை நாம் ஏன் தியானிக்க வேண்டும்?
• விசுவாசமும் கடவுளோடு உள்ள நமது பந்தமும் எப்படி ஒன்றுக்கொன்று சம்பந்தப்பட்டுள்ளன?
[பக்கம் 23-ன் படங்கள்]
முன்தீர்மானிக்கப்பட்ட வடிவமைப்பின்படியே கருப்பையில் சிசு வளர்கிறது
டிஎன்ஏ
[படத்திற்கான நன்றி]
கருப்பை சிசு: Lennart Nilsson
[பக்கம் 24-ன் படம்]
அன்பான அப்பாமீது பிள்ளைக்கு நம்பிக்கை இருப்பதுபோல, நமக்கும் யெகோவாமீது நம்பிக்கை இருக்கிறது
[பக்கம் 25-ன் படம்]
யெகோவாவின் படைப்புகளை ஆழ்ந்து சிந்தித்தது, அவரைப் புகழ்ந்து துதிக்க தாவீதைத் தூண்டியது