சந்தோஷம் அதை நீங்களும் கண்டுபிடிக்கலாம்
உண்மையான சந்தோஷத்தை, அதுவும் நிரந்தரமான சந்தோஷத்தைக் கண்டுபிடிப்பது இன்றைக்கு குதிரைக்கொம்பாக இருக்கிறது. அது இருக்கும் இடத்தைவிட்டு இல்லாத இடத்தில் அநேக மக்கள் தேடி அலைவதுதான் இதற்கு முக்கிய காரணம். நம்பகமான, அதுவும் விபரம் தெரிந்த நண்பர் ஒருவர் சரியான இடத்தைக் கண்டுபிடிக்க அவர்களுக்கு உதவினால் எவ்வளவு நன்றாயிருக்கும்!
பைபிள் அப்படிப்பட்ட உதவியைத் தருகிறது. உதாரணமாக, அதிலுள்ள சங்கீதம் என்ற புத்தகத்தை எடுத்துக்கொள்வோம். அது யெகோவா தேவனுக்கு துதி சேர்க்கும் 150 பரிசுத்த பாடல்கள் அடங்கிய தொகுப்பாகும். அதில் பாதி பாடல்கள் பூர்வ இஸ்ரவேலின் ராஜாவான தாவீதினால் இயற்றப்பட்டவை. அவற்றை எழுதியது யார் என்பதைவிட, அவை யாரால் தூண்டப்பட்டு எழுதப்பட்டன என்பதுதான் முக்கியம். அப்பாடல்கள், மனிதகுலத்தின் மிகச் சிறந்த நண்பரான யெகோவாவின் தூண்டுதலால் எழுதப்பட்டவை. ஆகவே, சங்கீத புத்தகத்தில் நமக்கு நன்மை அளிக்கும் அறிவுரைகளை யெகோவா கொடுத்திருக்கிறார் என்றும், அது சந்தோஷத்திற்கு வழிகாட்டுகிறது என்றும் நாம் உறுதியாக நம்பலாம்.
சந்தோஷம் என்பது ஒரு நபர் கடவுளோடு கொண்டிருக்கும் நல்ல உறவின் பலனாக கிடைக்கிறது என்பதில் சங்கீத புத்தகத்தை எழுதியவர்கள் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டிருந்தார்கள். அதனால்தான், ‘யெகோவாவுக்கு பயப்படுகிற மனுஷன் சந்தோஷமுள்ளவன்’ என்று சங்கீதக்காரன் எழுதினார். (சங்கீதம் 112:1, NW) சொந்தபந்தங்களானாலும் சரி, சொத்துசுகங்களானாலும் சரி, சொந்த சாதனைகளானாலும் சரி, ‘யெகோவாவை தெய்வமாகக் கொண்டிருக்கிற ஜனம்’ அனுபவிக்கிற சந்தோஷத்தைத் தரவே முடியாது. (சங்கீதம் 144:15) கடவுளுடைய நவீனகால ஊழியர்கள் எண்ணற்றோரின் வாழ்க்கை இந்த உண்மைக்கு சாட்சி பகருகிறது.
நாற்பது வயதைக் கடந்த சூசானா என்பவரும் இவர்களில் ஒருவர்.a இவர் இவ்வாறு கூறினார்: “இன்றைக்கு, நிறைய பேர் பொதுவான இலட்சியங்களை அடைவதற்கும் விருப்ப வேலைகளில் ஈடுபடுவதற்கும் சில குழுக்களில் சேருகிறார்கள். ஆனாலும், அந்தக் குழுவில் இருக்கிறவர்கள் அங்குள்ள எல்லாரையுமே நண்பர்களாக நினைப்பது கிடையாது. யெகோவாவின் ஜனங்களாகிய நாமோ வித்தியாசமானவர்கள். யெகோவாவுக்கான அன்பு ஒருவரையொருவர் நேசிக்கும்படி தூண்டுகிறது. கடவுளுடைய ஜனங்கள் மத்தியில் இருக்கும்போது, அது எந்த இடமாக இருந்தாலும்சரி, நம்முடைய வீட்டில் இருப்பது போல் நிம்மதியும் ஆறுதலும் கிடைக்கிறது. இந்த ஒற்றுமை நம் வாழ்க்கையை அதிக மதிப்புள்ளதாக்குகிறது. முற்றிலும் வித்தியாசமான சமுதாயங்களையும் பின்னணிகளையும் பல்வேறு நாடுகளையும் சேர்ந்தவர்களை நண்பர்களாகக் கொண்டிருப்பதாய் வேறு யாராவது சொல்ல முடியுமா? யெகோவாவின் மக்களில் ஒருவராக இருப்பதே சந்தோஷத்தைத் தருகிறது என்று நான் மனதார சொல்வேன்.”
ஸ்காட்லாந்தில் பிறந்த மாரீ என்பவரும், சந்தோஷத்தைக் கண்டடைய யெகோவாவோடு நெருங்கிய உறவு வைத்திருப்பது அவசியம் என்பதைக் கற்றுக்கொண்டார். அவர் சொல்கிறார்: “பைபிள் சத்தியத்தைக் கற்றுக்கொள்வதற்கு முன்னால், திகில் படங்களைப் பார்த்து மகிழ்ந்தேன். ஆனால் அந்த இரவுகளில் சிலுவையைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டுதான் நான் தூங்குவேன். அப்படி செய்தால், படங்களில் காட்டப்பட்ட பிசாசுகளும் இரத்தகாட்டேரிகளும் ஓடிவிடும் என்று நம்பினேன். என்றாலும், சத்தியத்தைக் கற்றுக்கொண்டவுடனே அந்த மாதிரியான படங்கள் பார்ப்பதை நிறுத்தி விட்டேன். யெகோவாவோடு நல்ல உறவையும் வளர்த்துக்கொண்டேன். அதனால், இப்பொழுது எந்தவொரு பயமுமில்லாமல் நிம்மதியாகத் தூங்கச் செல்கிறேன். பேய்களையும் கற்பனையான இரத்தகாட்டேரிகளையும்விட எத்தனையோ மடங்கு சக்தி படைத்த கடவுளுக்குச் சேவை செய்வது சந்தோஷத்தைத் தருகிறது.”
யெகோவாவில் நம்பிக்கை வைப்பது சந்தோஷத்தைத் தருகிறது
படைப்பாளரின் சர்வ வல்லமையையும் அளவிலா ஞானத்தையும் சந்தேகப்பட நமக்கு ஒரு காரணமும் இல்லை. யெகோவாவை முழுமையாக நம்பவும் பாதுகாப்பிற்காக அவரை அண்டியிருக்கவும் முடியும் என்று தெளிவாக அறிந்திருந்த தாவீது இவ்வாறு எழுதினார்: ‘யெகோவாவில் தன் நம்பிக்கையை வைக்கிற மனுஷன் சந்தோஷமுள்ளவன்.’—சங்கீதம் 40:4, NW.
மாரீயா என்ற சகோதரி இவ்வாறு சொன்னார்: “நம்முடைய எண்ணங்களும் உணர்ச்சிகளும் காரியங்களை வேறு விதமாக செய்யத் தூண்டினாலும் யெகோவாவின் வழியில் நாம் அதைச் செய்யும்போது, மிகச் சிறந்த பலன்களையே பெறுகிறோம். இதனால் நமக்கு சந்தோஷமும் கிடைக்கிறது. ஏனென்றால், யெகோவாவின் வழியே எப்பொழுதும் சிறந்தது. இதைத்தான் ஸ்பெயினிலும் மற்ற இடங்களிலும் இருக்கையில் கற்றுக்கொண்டேன்.”
பல்வேறு ஐரோப்பிய நாடுகளில் சேவை செய்த ஆன்ட்ரேயாஸ், ஒரு கிறிஸ்தவ மூப்பர். இவரும்கூட யெகோவாவில் நம்பிக்கை வைப்பது வீண்போகாது என்பதை அனுபவப்பூர்வமாக உணர்ந்திருக்கிறார். அவர் சொல்கிறார்: “என்னுடைய மத நம்பிக்கைகளை ஏற்றுக்கொள்ளாத என் அண்ணன், நான் இளைஞனாக இருந்தபோது, கைநிறைய சம்பளம் கிடைக்கும் வேலையைத் தேடும்படி என்னை ஓயாமல் வற்புறுத்தினார். ஆனால், பென்ஷன் கிடைக்கிற வேலைகளில் நம்பிக்கை வைக்காமல் நான் முழுநேர ஊழியத்தை ஆரம்பித்தபோதோ ரொம்பவே ஏமாற்றமடைந்தார்; முழுநேர ஊழியம் செய்தபோது, யாரிடமும் கையேந்தி நிற்கிற நிலைமை எனக்கு வந்ததே இல்லை. மாறாக, மற்றவர்கள் கனவில் மட்டுமே நினைத்துப் பார்க்கக்கூடிய ஆசீர்வாதங்களை நான் நிஜமாகவே அனுபவித்தேன்.”
ஜெர்மனி, செல்ட்டர்ஸில் உள்ள யெகோவாவின் சாட்சிகளுடைய கிளை அலுவலகத்தில் விரிவாக்க வேலை நடந்தது. அந்தக் கட்டுமான வேலையில் உதவி செய்ய சகோதரர் ஃபேலிக்ஸ் 1993-ல் அழைக்கப்பட்டார். வேலை முடிந்ததும் பெத்தேல் குடும்பத்தில் நிரந்தர அங்கத்தினராவதற்கு கேட்டுக்கொள்ளப்பட்டார். அவர் சம்மதித்தாரா? பதிலை ஃபேலிக்ஸே கூறுகிறார்: “நான் முதலில் அரைகுறை மனதோடுதான் சம்மதித்தேன். ஆனால், கிட்டத்தட்ட பத்து வருடங்களாக இங்கே இருக்கிறேன், என் ஜெபங்களுக்கு யெகோவா பதில் அளித்திருக்கிறார் என்று நம்புகிறேன். எனக்கு எது சிறந்தது என்பதை அவர் நன்றாக அறிந்திருக்கிறார். அவர்மேல் முழு நம்பிக்கை வைப்பதன் மூலமும் அவர் என்னை வழிநடத்த விட்டுவிடுவதன் மூலமும், நான் என்ன செய்யும்படி விரும்புகிறார் என்பதைக் காட்ட அவருக்கு வாய்ப்பளிக்கிறேன்.”
மேலே குறிப்பிடப்பட்ட சூசானா, ஒரு பயனியராக முழுநேர ஊழியத்தில் ஈடுபட விரும்பினார்; ஆனால், பகுதிநேர வேலை கிடைப்பது பிரச்சினையாக இருந்தது. வேலை கிடைத்த பின் பயனியராக ஆகலாம் என்று ஒரு வருடம் காத்திருந்தார். அதற்கு பிறகு யெகோவாமீது நம்பிக்கை வைத்து ஒரு நடவடிக்கை எடுத்தார். அவர் சொல்கிறார்: “நான் ஒழுங்கான பயனியர் ஊழியத்துக்காக விண்ணப்பம் செய்தேன். ஏறக்குறைய ஒரு மாதத்திற்கு ஆகும் அன்றாட செலவுகளைச் சமாளிக்க போதுமான பணத்தைச் சேமித்து வைத்திருந்தேன். அது எப்பேர்ப்பட்ட அருமையான மாதமாக இருந்தது! முழுநேர ஊழியம் எனக்கு ரொம்ப சந்தோஷத்தைத் தந்தது; ஆனால் வேலைக்கான இன்டர்வியூக்களில் தொடர்ந்து தோல்வியடைந்தேன். இருந்தாலும், யெகோவா வாக்களித்தபடியே என்னை கைவிடவில்லை. அந்த மாதத்தின் கடைசி நாளில், ஒரு நல்ல வேலை எனக்குக் கிடைத்தது. யெகோவாவை முழுமையாக நம்ப முடியும் என்று இப்பொழுது நன்றாக அறிந்திருக்கிறேன். முழுநேர ஊழியத்தில் எனக்குக் கிடைத்த இந்த முதல் அனுபவம், திருப்தியான, சந்தோஷமான வாழ்க்கை வாழ்வதற்குக் காரணமானது.”
கடவுளுடைய ஆலோசனை சந்தோஷத்தை அள்ளித்தருகிறது
தாவீது ராஜா படுமோசமான தவறுகள் சிலவற்றைச் செய்தார். சில சமயங்களில், அவருக்கும் ஞானமான ஆலோசனை தேவைப்பட்டது. ஆலோசனையையும் புத்திமதியையும் எந்தளவுக்கு அவர் ஏற்றுக்கொண்டாரோ அந்தளவுக்கு நாமும் ஏற்றுக்கொள்ள தயாராயிருக்கிறோமா?
பிரான்சை சேர்ந்த ஆயிடா, ஒரு முறை படுமோசமான பாவம் செய்துவிட்டதை உணர்ந்தார். “யெகோவாவிடம் மீண்டும் நல்ல உறவை வைத்துக்கொள்ள வேண்டும் என்பதே எனக்கு அதிக முக்கியமாக இருந்தது, வேறொன்றும் அதைவிட முக்கியமாகத் தோன்றவில்லை” என்று அவர் கூறுகிறார். உதவிக்காக கிறிஸ்தவ மூப்பர்களை அணுகினார். முழுநேர ஊழியத்தில் 14 வருடங்களை செலவு செய்திருக்கிற அவர் இவ்வாறு சொல்கிறார்: “யெகோவா என் பாவங்களை மன்னித்துவிட்டார் என்று அறியும்போது ரொம்ப சந்தோஷமாய் இருக்கிறது.”
கடவுளுடைய ஆலோசனைக்குக் கீழ்ப்படிவது, தவறுகளை ஆரம்பத்திலேயே தடுத்துவிட உதவுகிறது. யூடிட் இவ்வாறு விளக்குகிறார்: “நான் 20 வயதாக இருந்தபோது, என்னுடைய பிஸினஸ் பார்ட்னராக இருந்த ஒரு ஜெர்மானியர் என்னைக் கவர ரொம்பவே முயற்சி செய்தார், நானும் அவரைக் காதலித்தேன். அவர் கெளரவமான நபராக இருந்தார். அவருடைய தொழில் வெற்றிகரமானதாக இருந்தது. ஆனால், அவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகியிருந்தது. யெகோவாவின் சட்டங்களுக்குக் கீழ்ப்படிவதா, அல்லது அவரை அடியோடு மறந்து விடுவதா என்று தீர்மானிக்க வேண்டிய கட்டாயத்தை உணர்ந்தேன். என் பெற்றோரிடம் மனந்திறந்து பேசினேன். யெகோவா என்னிடம் என்ன எதிர்பார்க்கிறார் என்று என் அப்பா சுற்றி வளைக்காமல் நேரடியாகவே சொன்னார். அதுதான் எனக்கு அப்போது உண்மையிலேயே தேவைப்பட்டது. ஆனாலும், என் இருதயம் யெகோவாவின் சட்டங்களை ஒதுக்கிவிட வழிதேடியது. மாலை நேரங்களில் என் அம்மா, யெகோவாவுடைய சட்டங்களின் முக்கியத்துவத்தையும், அவை உயிரை எப்படி பாதுகாக்கின்றன என்பதையும் பற்றி சில வாரங்களுக்கு என்னோடு பேசினார். கொஞ்சம் கொஞ்சமாக என் இருதயம் யெகோவாவிடம் நெருங்கியது. அதற்கு நான் மிகவும் நன்றியுள்ளவளாக இருக்கிறேன். யெகோவாவின் ஆலோசனையையும் புத்திமதியையும் ஏற்றுக்கொண்டது எனக்கு மிகுந்த சந்தோஷத்தைத் தந்தது. ஆம், முழுநேர ஊழியத்தில் பல வருடங்கள் ஈடுபட்டது திருப்தியை அள்ளித் தந்தது; அதோடு, யெகோவாவையும் என்னையும் மனதார நேசிக்கும் ஒரு நல்ல கிறிஸ்தவரை கணவராகப் பெற முடிந்தது.”
“எவனுடைய மீறுதல் மன்னிக்கப்பட்டதோ, எவனுடைய பாவம் மூடப்பட்டதோ, அவன் பாக்கியவான் [“சந்தோஷமுள்ளவன்,” NW]. எவனுடைய அக்கிரமத்தைக் கர்த்தர் எண்ணாதிருக்கிறாரோ, அவன் பாக்கியவான் [“சந்தோஷமுள்ளவன்,” NW]” என்ற தாவீதின் வார்த்தைகளில் பொதிந்துள்ள உண்மையையும் முக்கியத்துவத்தையும் இதுபோன்ற அனுபவங்கள் தெளிவாகவே காட்டுகின்றன, அல்லவா!—சங்கீதம் 32:1, 2.
மற்றவர்களுக்கு கரிசனை காட்டுவதன் மூலம் சந்தோஷம்
“சிறுமைப்பட்டவன்மேல் சிந்தையுள்ளவன் பாக்கியவான் [சந்தோஷமுள்ளவன், NW], தீங்குநாளில் கர்த்தர் அவனை விடுவிப்பார். கர்த்தர் அவனைப் பாதுகாத்து அவனை உயிரோடே வைப்பார்; பூமியில் அவன் பாக்கியவானாயிருப்பான் [சந்தோஷமுள்ளவனாயிருப்பான், NW]” என்று தாவீது எழுதினார். (சங்கீதம் 41:1, 2) தாவீதின் உயிர் நண்பனான யோனத்தானின் மகன் மேவிபோசேத், முடவனாயிருந்தான். இவனுக்கு தாவீது அன்பும் கரிசனையும் காட்டினார். சிறுமைப்பட்டவரிடம் இப்படிப்பட்ட மனப்பான்மையைத்தான் காட்ட வேண்டும், அல்லவா?—2 சாமுவேல் 9:1-13.
மார்லீஸ் என்பவர் 47 வருடங்களாக மிஷனரி சேவையை செய்துவருகிறார். ஆப்பிரிக்கா, ஆசியா மற்றும் ஐரோப்பா கண்டங்களில் உள்ள ஆபத்தான பகுதிகளிலிருந்து உயிர் தப்பிய மக்களுக்கு பிரசங்கிக்கும் விசேஷ வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. அவர் இவ்வாறு சொல்கிறார்: “அந்த மக்களுக்கு பலதரப்பட்ட பிரச்சினைகள் இருந்தன, மற்றவர்கள் தங்களை அந்நியர்களாக கருதுவதாகவும் ஓரவஞ்சனையாக நடத்துவதாகவும் நினைத்தார்கள். இப்படிப்பட்டவர்களுக்கு உதவுவது, எப்பொழுதுமே சந்தோஷத்தைத் தருகிறது.”
நாற்பது வயதைக் கடந்த மாரீனா இவ்வாறு எழுதினார்: “நான் மணமாகாதவள்; ஆகவே, மற்றவர்களுடைய நட்பு நமக்கு தேவை என்பதை நன்கு உணர்ந்திருக்கிறேன். டெலிபோனில் பேசுவதன் மூலமும் லெட்டர் எழுதுவதன் மூலமும் மற்றவர்களை உற்சாகப்படுத்த இது என்னைத் தூண்டுகிறது. இதற்கு நிறையபேர் தங்களுடைய நன்றியைத் தெரிவித்திருக்கிறார்கள். இதுபோன்று மற்றவர்களுக்கு உதவுவது எனக்கு சந்தோஷத்தைத் தருகிறது.”
இருபத்தைந்து வயதான டிமிடா சொல்வதைக் கவனியுங்கள்: “என் அம்மா தனியாளாக இருந்து என்னை வளர்த்து ஆளாக்கினார். நான் இளைஞனாய் இருந்தபோது, சபை புத்தகப் படிப்பு கண்காணி, என்னை பயிற்றுவிப்பதற்காக ஒவ்வொரு வாரமும் ஊழியத்திற்கு தன்னோடு அழைத்துச் சென்றார். அது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது. ஆனால், என்னை உற்சாகப்படுத்துவது அவ்வளவு சுலபமல்ல என்பது எனக்கே தெரியும். அப்படியிருந்தும், அவர் விடாது முயற்சி எடுத்ததற்காக இன்றும் நான் நன்றியுள்ளவனாய் இருக்கிறேன்.” இந்த உதவிக்கு நன்றிக்கடனாக டிமிடா இப்பொழுது மற்றவர்களுக்கும் உதவுகிறார். அவர் சொல்கிறார்: “குறைந்தது மாதத்தில் ஒருமுறையாவது, ஒரு இளைஞரையும் ஒரு வயதானவரையும் என்னோடு ஊழியத்திற்கு அழைத்துச் செல்ல முயற்சி செய்கிறேன்.”
நமக்கு சந்தோஷத்தைக் கொடுக்கும் மற்ற விஷயங்களையும் சங்கீத புத்தகம் குறிப்பிடுகிறது. உதாரணமாக, சுய பலத்தின் மேல் நம்பிக்கை வைக்காமல் யெகோவாவின் பலத்தில் நம்பிக்கை வைப்பதன் முக்கியத்துவத்தை அது குறிப்பிடுகிறது: “[யெகோவாவிலே] பெலன்கொள்கிற மனிதர்கள் சந்தோஷமுள்ளவர்கள்.”—சங்கீதம் 84:5, NW.
காரினாவை இதற்கு உதாரணமாக சொல்லலாம். தேவை அதிகமிருந்த நாட்டில் ஊழியம் செய்வதற்கு அவள் குடிமாறிச் சென்றாள். அவள் இவ்வாறு சொல்கிறாள்: “மொழி, கலாச்சாரம், சிந்திக்கும் விதம் எல்லாமே எனக்கு புதிதாக இருந்தது. வேறொரு கிரகத்திற்கு வந்துவிட்டதைப்போல உணர்ந்தேன். முன்பின் தெரியாத இடத்தில் பிரசங்கிக்க வேண்டுமே என்று நினைத்தபோது குலைநடுங்கியது. உதவிக்காக யெகோவாவிடம் ஜெபித்தேன், அவருடைய பலத்தில், ஒதுக்குப்புறமாக இருந்த பிராந்தியத்திலும் என்னால் நாள் பூராவும் பிரசங்கிக்க முடிந்தது. ஆரம்பத்தில் கொஞ்சம் கஷ்டமாக இருந்தாலும், நாளடைவில் அது எனக்கு ரொம்பவே சகஜமாகிவிட்டது. நிறைய பைபிள் படிப்புகளை நடத்தினேன், இந்த அனுபவத்திலிருந்து இன்றைக்கும் நான் பயனடைகிறேன். யெகோவாவின் பலத்தில் மலைபோன்ற தடைகளையும் தகர்த்துவிட முடியும் என்பதைக் கற்றுக்கொண்டேன்.”
ஆம், நாம் பார்த்தபடி, கடவுளுடனும் அவருடைய மக்களுடனும் நட்புறவை வளர்த்துக்கொள்வது, யெகோவாவில் முழுமையாய் நம்பிக்கை வைப்பது, அவருடைய ஆலோசனையை ஏற்றுக்கொள்வது, மற்றவர்களுக்குக் கரிசனை காட்டுவது ஆகிய வழிகளில் நாம் சந்தோஷத்தைக் கண்டடையலாம். யெகோவாவின் வழிகளில் நடப்பதன் மூலமும் அவருடைய சட்டங்களுக்குக் கீழ்படிவதன் மூலமும் அவருடைய ஆதரவை சந்தோஷத்துடன் அனுபவித்து மகிழலாம்.—சங்கீதம் 89:15; 106:3; 112:1; 128:1, 2.
[அடிக்குறிப்பு]
a சில பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.
[பக்கம் 12-ன் படம்]
மாரீயா
[பக்கம் 13-ன் படம்]
மாரீ
[பக்கம் 13-ன் படம்]
சூசானாவும் ஆன்ட்ரேயாஸும்
[பக்கம் 15-ன் படம்]
காரினா
[பக்கம் 15-ன் படம்]
டிமிடா