“‘யா’வைப் புகழுங்கள்!” ஏன்?
“‘யா’வைப் புகழுங்கள்! . . . அவரைப் புகழ்வது எவ்வளவு இனிமையானது! எவ்வளவு பொருத்தமானது!”—சங். 147:1.
1-3. (அ) சங்கீதம் 147 எப்போது எழுதப்பட்டிருக்க வேண்டும்? (ஆ) சங்கீதம் 147-ஐ வாசிக்கும்போது நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?
ஒருவர் ஏதோவொன்றைச் சொன்னதையோ செய்ததையோ பார்த்து நாம் அசந்துபோய் விட்டால், நாம் அவரைப் புகழ ஆரம்பித்து விடுவோம். அப்படியென்றால், நம் கடவுளான யெகோவாவை நாம் இன்னும் எந்தளவு புகழ வேண்டும்! அவருடைய அருமையான படைப்புகளில், அவருடைய மாபெரும் சக்தியை நம்மால் பார்க்க முடிகிறது. நமக்காகத் தன் சொந்த மகனை மீட்புப் பலியாகக் கொடுத்ததில், நம்மேல் அவருக்கு இருக்கும் அளவில்லாத அன்பைப் பார்க்க முடிகிறது. இவற்றுக்காக நாம் அவரைப் புகழ வேண்டும், இல்லையா?
2 சங்கீதம் 147-ஐ வாசிக்கும்போது, அதன் எழுத்தாளருக்கு, யெகோவாவைப் புகழ வேண்டும் என்ற தீராத ஆசை இருப்பதை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. அதுமட்டுமல்லாமல், மற்றவர்களும் கடவுளைப் புகழ வேண்டும் என்று அவர் உற்சாகப்படுத்துவதையும் நம்மால் கவனிக்க முடிகிறது.—சங்கீதம் 147:1, 7, 12-ஐ வாசியுங்கள்.
3 சங்கீதம் 147-ஐ எழுதியது யார் என்று நமக்குத் தெரியாது. ஒருவேளை, இஸ்ரவேலர்களை யெகோவா பாபிலோனின் சிறையிருப்பிலிருந்து எருசலேமில் நிலைநாட்டிய சமயத்தில் இந்தச் சங்கீதக்காரன் வாழ்ந்திருக்கலாம். (சங். 147:2) தங்கள் சொந்த நாட்டிலேயே யெகோவாவின் மக்கள் மறுபடியும் அவரை வணங்க முடிந்ததற்காகத்தான் சங்கீதக்காரன் யெகோவாவைப் புகழ்ந்தார். யெகோவாவைப் புகழ வேறு சில காரணங்களையும் அவர் சொன்னார். அவை என்ன? உங்கள் வாழ்க்கையிலும் “அல்லேலூயா!” அல்லது “‘யா’வைப் புகழுங்கள்!” என்று சொல்வதற்கு என்ன காரணங்கள் இருக்கின்றன?—சங். 147:1, அடிக்குறிப்பு.
உள்ளம் உடைந்தவர்களை யெகோவா குணமாக்குகிறார்
4. இஸ்ரவேலர்களை கோரேசு ராஜா விடுதலை செய்தபோது, அவர்கள் எப்படி உணர்ந்திருப்பார்கள், ஏன்?
4 இஸ்ரவேலர்கள் பாபிலோனில் கைதிகளாக இருந்தபோது, அவர்களுக்கு எப்படி இருந்திருக்கும் என்று கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். அவர்களைக் கைதிகளாகக் கொண்டுவந்தவர்கள், “சீயோனைப் பற்றி ஒரு பாட்டுப் பாடுங்கள்” என்று அவர்களிடம் கிண்டலாகச் சொன்னார்கள். ஆனால், அவர்கள் பாடும் நிலைமையில் இருக்கவில்லை. ஏனென்றால், அவர்களுடைய சந்தோஷத்தின் மகுடமாக இருந்த எருசலேம் அழிக்கப்பட்டிருந்தது. (சங். 137:1-3, 6) அவர்களுடைய உள்ளம் உடைந்துபோயிருந்தது; அவர்களுக்கு ஆறுதல் தேவைப்பட்டது. கடவுளுடைய வார்த்தையில் ஏற்கனவே சொல்லப்பட்டிருந்தது போல, பெர்சிய ராஜாவான கோரேசின் மூலம் யெகோவா தன் மக்களை விடுதலை செய்தார். கோரேசு ராஜா பாபிலோனைக் கைப்பற்றிய பிறகு இப்படிச் சொன்னார்: “யெகோவா . . . யூதாவிலுள்ள எருசலேமில் அவருக்கு ஒரு ஆலயத்தைக் கட்டும்படி என்னிடம் கட்டளையிட்டிருக்கிறார். அவருடைய ஜனங்களில் யாரெல்லாம் இங்கே இருக்கிறார்களோ, அவர்களெல்லாம் புறப்பட்டுப் போகலாம். அவர்களுடைய கடவுளான யெகோவா அவர்களுடன் இருப்பாராக.” (2 நா. 36:23) பாபிலோனிலிருந்த இஸ்ரவேலர்களுக்கு இது எவ்வளவு ஆறுதலாக இருந்திருக்கும்!
5. யெகோவாவுக்கு குணமாக்குகிற சக்தி இருப்பதைப் பற்றி சங்கீதக்காரன் என்ன சொன்னார்?
5 இஸ்ரவேலர்களை ஒரு தேசமாக மட்டும் யெகோவா ஆறுதல்படுத்தவில்லை, அங்கிருந்த ஒவ்வொரு இஸ்ரவேலரையும் அவர் ஆறுதல்படுத்தினார். இன்றும் அவர் அப்படிச் செய்கிறார். “உள்ளம் உடைந்தவர்களை அவர் குணமாக்குகிறார். அவர்களுடைய காயங்களுக்குக் கட்டுப் போடுகிறார்” என்று சங்கீதக்காரன் எழுதினார். (சங். 147:3) வியாதியில் கஷ்டப்படுகிறவர்கள்மேலும் மனச்சோர்வால் தவிப்பவர்கள்மேலும் யெகோவா அக்கறையாக இருக்கிறார். நமக்கு ஆறுதல் சொல்லவும் நம் உள்ளத்தின் காயங்களைக் குணமாக்கவும் அவர் ஆர்வமாக இருக்கிறார். (சங். 34:18; ஏசா. 57:15) நமக்கு இருக்கும் எந்தவொரு பிரச்சினையையும் சமாளிக்க அவர் நமக்கு ஞானத்தையும் பலத்தையும் தருகிறார்.—யாக். 1:5.
6. சங்கீதம் 147:4-ல் இருக்கிற சங்கீதக்காரனின் வார்த்தைகள் நமக்கு எப்படிப் பிரயோஜனமாக இருக்கின்றன? (ஆரம்பப் படம்)
6 அடுத்ததாக, சங்கீதக்காரன் வானத்தைப் பார்த்து, யெகோவா “நட்சத்திரங்களை . . . எண்ணுகிறார்” என்றும் “அவை ஒவ்வொன்றையும் பெயர் சொல்லிக் கூப்பிடுகிறார்” என்றும் சொன்னார். (சங். 147:4) சங்கீதக்காரனால் நட்சத்திரங்களைப் பார்க்க முடிந்தது. ஆனால், எத்தனை நட்சத்திரங்கள் இருக்கின்றன என்பதைப் பற்றி அவருக்கு எதுவும் தெரிந்திருக்கவில்லை. இன்று, நம் பால்வீதி மண்டலத்தில் மட்டும் நூறு கோடிக்கும் அதிகமான நட்சத்திரங்கள் இருக்கின்றன என்று சிலர் சொல்கிறார்கள். நம் பிரபஞ்சத்திலோ நூறாயிரங்கோடி நட்சத்திர மண்டலங்கள் இருக்கலாம்! மனிதர்களால் நட்சத்திரங்களை எண்ண முடியாது; ஆனால், படைப்பாளரால் எண்ண முடியும். சொல்லப்போனால், அவை ஒவ்வொன்றுக்கும் அவர் பெயர் வைத்திருக்கிறார். அப்படியென்றால், அவை ஒவ்வொன்றைப் பற்றியும் அவருக்குத் தெரியும் என்றுதானே அர்த்தம்! (1 கொ. 15:41) ஒவ்வொரு நட்சத்திரமும் எங்கே இருக்கிறது என்று தெரிந்துவைத்திருக்கும் கடவுளுக்கு உங்களைப் பற்றியும் தெரியும், இல்லையா? நீங்கள் எங்கே இருக்கிறீர்கள், எப்படி உணருகிறீர்கள், உங்களுக்கு என்ன தேவை என்பதெல்லாம் அவருக்குத் தெரியும்!
7, 8. (அ) யெகோவா நம்மைப் பற்றி என்ன புரிந்துவைத்திருக்கிறார்? (ஆ) அபூரண மனிதர்களுக்கு உதவுவதில் யெகோவா கரிசனையோடு நடந்துகொள்கிறார் என்பதற்கு ஒரு உதாரணம் சொல்லுங்கள்.
7 நீங்கள் என்ன கஷ்டங்களை அனுபவித்துக்கொண்டிருக்கிறீர்கள் என்பதை யெகோவாவால் புரிந்துகொள்ள முடியும். அவற்றைச் சமாளிப்பதற்கு உங்களுக்கு உதவ அவருக்குச் சக்தி இருக்கிறது. (சங்கீதம் 147:5-ஐ வாசியுங்கள்.) சமாளிக்கவே முடியாத அளவுக்கு கஷ்டமான சூழ்நிலையில் இருப்பதாக நீங்கள் ஒருவேளை நினைக்கலாம். ஆனால், உங்கள் வரம்புகளைப் பற்றி யெகோவாவுக்குத் தெரியும்; நீங்கள் “மண் என்பதை அவர் நினைத்துப் பார்க்கிறார்.” (சங். 103:14) நாம் அபூரணர்களாக இருப்பதால், செய்த தவறுகளையே திரும்பத் திரும்ப செய்துவிடலாம்; அதனால் சோர்வடைந்து விடலாம். ஒருவேளை, தெரியாமல் ஏதோவொன்றைப் பேசிவிட்டு, பிறகு அதை நினைத்து வருத்தப்படலாம். தவறான ஆசைகள் நமக்குள் அவ்வப்போது எட்டிப் பார்க்கலாம் அல்லது மற்றவர்கள்மேல் நாம் பொறாமைப்படலாம். இதுபோன்ற பலவீனங்கள் யெகோவாவுக்கு இல்லை என்றாலும், தவறு செய்யும்போது நாம் எப்படி உணருகிறோம் என்பதை அவரால் முழுமையாகப் புரிந்துகொள்ள முடியும்.—ஏசா. 40:28.
8 ஒரு பிரச்சினையிலிருந்து வெளியே வர யெகோவாவுடைய பலத்த கரம் உங்களுக்கு உதவியதை நீங்கள் அனுபவித்திருக்கிறீர்களா? (ஏசா. 41:10, 13) கீயோகோ என்ற பயனியர் சகோதரியின் அனுபவத்தை எடுத்துக்கொள்ளுங்கள். தன்னுடைய புதிய நியமிப்புக்குப் போன பிறகு, அவர் மனதளவில் ரொம்பவே சோர்ந்துபோயிருந்தார். ஆனால், அவருடைய பிரச்சினையை யெகோவா நன்றாகப் புரிந்துகொண்டார். இது கீயோகோவுக்கு எப்படித் தெரிந்தது? அவருடைய புதிய சபையில், அவருடைய உணர்ச்சிகளை நிறைய பேரால் புரிந்துகொள்ள முடிந்தது. “நீ பயனியரா இருக்குறதுனால மட்டும் நான் உன்னை நேசிக்கல, நீ என்னோட மகள், எனக்காக நீ உன்னையே அர்ப்பணிச்சிருக்க; அதுக்காகவும் நான் உன்னை நேசிக்கிறேன். என்னோட சாட்சியா, நீ சந்தோஷமா வாழணும்” என்று யெகோவாவே சொன்னது போல அவருக்கு இருந்தது. ‘தன்னுடைய புரிந்துகொள்ளுதலுக்கு எல்லையே இல்லை’ என்பதை யெகோவா எப்படி உங்களுக்குப் புரிய வைத்திருக்கிறார்?
யெகோவா நமக்குத் தேவையானவற்றைக் கொடுக்கிறார்
9, 10. யெகோவா நமக்கு உதவி செய்யும் மிக முக்கியமான வழி என்ன? ஒரு உதாரணம் சொல்லுங்கள்.
9 நம் எல்லாருக்கும் உணவு, உடை, இருப்பிடம் ஆகியவை தேவைப்படுகின்றன. ஒருவேளை, சாப்பிடுவதற்குப் போதுமான உணவு இல்லை என்று நீங்கள் கவலைப்படலாம். ஆனால், எல்லாருக்கும் உணவு கிடைக்கும் விதத்தில்தான் யெகோவா பூமியைப் படைத்திருக்கிறார். ‘பசியில் கத்துகிற அண்டங்காக்கைக் குஞ்சுகளுக்குக்கூட உணவு கொடுக்கிறார்.’ (சங்கீதம் 147:8, 9-ஐ வாசியுங்கள்.) அண்டங்காக்கைகளுக்கே யெகோவா உணவு கொடுக்கிறார் என்றால், நம்முடைய பொருள் தேவைகளையும் அவர் பார்த்துக்கொள்வார் என்று நாம் உறுதியாக நம்பலாம், இல்லையா?—சங். 37:25.
10 மிக முக்கியமாக, நம் விசுவாசத்தைப் பலப்படுத்துவதற்குத் தேவையானவற்றை யெகோவா நமக்குக் கொடுக்கிறார். ‘எல்லா சிந்தனைக்கும் மேலான தேவசமாதானத்தை’ அவர் நமக்குக் கொடுக்கிறார். (பிலி. 4:6, 7) யெகோவா தங்களுக்கு எப்படி உதவியிருக்கிறார் என்பதை முட்ஸூவோ என்ற சகோதரரும் அவருடைய மனைவியும், தங்கள் சொந்த அனுபவத்தில் பார்த்திருக்கிறார்கள். 2011-ல் ஜப்பானை சுனாமி தாக்கியபோது, தங்கள் வீட்டுக்கூரையின் மேல் ஏறி அவர்கள் மயிரிழையில் உயிர் தப்பினார்கள். அன்று, கிட்டத்தட்ட தங்களிடம் இருந்த எல்லாவற்றையும் அவர்கள் பறிகொடுத்தார்கள். அன்று ராத்திரி, அவர்களுடைய வீட்டின் இரண்டாவது மாடியில் இருந்த ஒரு இருட்டான, குளிரான அறையில் அவர்கள் தங்க வேண்டியிருந்தது. விடிந்ததும், ஆன்மீக ரீதியில் தங்களை உற்சாகப்படுத்துவதற்கு ஏதாவது இருக்கிறதா என்று அவர்கள் தேடிப் பார்த்தார்கள். யெகோவாவின் சாட்சிகளுடைய இயர்புக் 2006 மட்டும்தான் அவர்கள் கண்ணில் பட்டது. அதன் பக்கங்களைப் புரட்டியபோது, “சரித்திரம் காணாத பயங்கரமான சுனாமி பேரலைகள்” என்ற தலைப்பை முட்ஸூவோ பார்த்தார். அதில் 2004-ல் சுமத்ராவைத் தாக்கிய சுனாமியைப் பற்றி சொல்லப்பட்டிருந்தது. அதுவரை பதிவுசெய்யப்பட்டிருந்த சுனாமிகளிலேயே அதுதான் மிகப் பெரிய அழிவை ஏற்படுத்தியிருந்தது. தங்கள் சகோதர சகோதரிகளின் அனுபவங்களை வாசித்துவிட்டு அவரும் அவருடைய மனைவியும் அழ ஆரம்பித்தார்கள். தங்களுக்குத் தேவையான உற்சாகத்தை யெகோவா தந்ததாக அவர்கள் உணர்ந்தார்கள். யெகோவா அவர்களை மற்ற வழிகளிலும் கவனித்துக்கொண்டார். ஜப்பானின் மற்ற பகுதிகளில் இருந்த கிறிஸ்தவ சகோதரர்கள் அவர்களுக்கு உணவும் உடையும் கொடுத்தார்கள். கடவுளுடைய அமைப்பு அனுப்பிய சகோதரர்களின் சந்திப்புதான் அவர்களை அதிகமாக உற்சாகப்படுத்தியது. “யெகோவா எங்க ஒவ்வொருத்தர் பக்கத்துலயும் உட்கார்ந்து எங்கள கவனிச்சுக்கிற மாதிரி இருந்துச்சு. அது ரொம்ப ஆறுதலா இருந்துச்சு!” என்று சொல்கிறார் முட்ஸூவோ. நம்முடைய விசுவாசத்தைப் பலப்படுத்துவதற்குத் தேவையானவற்றை யெகோவா முதலில் பார்த்துக்கொள்கிறார். பிறகு, நம்முடைய பொருள் தேவைகளையும் அவர் கவனித்துக்கொள்கிறார்.
கடவுளுடைய உதவியிலிருந்து பிரயோஜனமடையுங்கள்
11. கடவுள் தரும் உதவியிலிருந்து பிரயோஜனமடைய நாம் என்ன செய்ய வேண்டும்?
11 “தாழ்மையானவர்களை யெகோவா தூக்கிவிடுகிறார்.” அவர் நம்மை நேசிக்கிறார்; நமக்கு உதவ எப்போதும் தயாராக இருக்கிறார். (சங். 147:6அ) கடவுள் தரும் உதவியிலிருந்து பிரயோஜனமடைய நாம் என்ன செய்ய வேண்டும்? நாம் அவரோடு நெருங்கிய பந்தத்தை வைத்திருக்க வேண்டும். அதற்கு, நாம் தாழ்மையுள்ளவர்களாக இருக்க வேண்டும். (செப். 2:3) தங்களுக்கு ஏற்பட்டிருக்கும் எந்தவொரு அநீதியையும் சரிசெய்யவும், தாங்கள் அனுபவிக்கும் கஷ்டங்களை முடிவுக்குக் கொண்டுவரவும் தாழ்மையுள்ளவர்கள் யெகோவாவுக்காகக் காத்திருப்பார்கள். அப்படிப்பட்டவர்களை யெகோவா அங்கீகரிக்கிறார்.
12, 13. (அ) கடவுளுடைய உதவியிலிருந்து பிரயோஜனமடைய நாம் எதைத் தவிர்க்க வேண்டும்? (ஆ) யெகோவா யாரை நினைத்து சந்தோஷப்படுவார்?
12 கடவுள் “பொல்லாதவர்களைத் தரையில் தள்ளிவிடுகிறார்.” (சங். 147:6ஆ) நமக்கு இப்படி நடக்க நாம் நிச்சயம் விரும்ப மாட்டோம், இல்லையா? கடவுளுடைய மாறாத அன்பிலிருந்து பிரயோஜனமடையவும், அவருடைய கோபத்துக்கு ஆளாகாமல் இருக்கவும் அவர் வெறுப்பதை நாம் வெறுக்க வேண்டும். (சங். 97:10) உதாரணத்துக்கு, பாலியல் முறைகேட்டை நாம் வெறுக்க வேண்டும். அதற்கு, ஆபாசம் உட்பட பாலியல் முறைகேட்டில் கொண்டுபோய்விடும் எதையும் நாம் தவிர்க்க வேண்டும். (சங். 119:37; மத். 5:28) இதற்காக நாம் கடினமாகப் போராட வேண்டியிருக்கலாம். ஆனால், யெகோவாவுடைய ஆசீர்வாதத்தைப் பெறுவதற்காக நாம் எடுக்கும் எந்தவொரு முயற்சியும் மிகவும் பிரயோஜனமுள்ளதாக இருக்கும்.
13 இந்தப் போராட்டத்தில் வெற்றி பெற வேண்டும் என்றால் நாம் யெகோவாவைச் சார்ந்திருக்க வேண்டும். உதவிக்காக மற்றவர்கள் நம்பியிருக்கிற விஷயங்களை நாம் சார்ந்திருந்தால் யெகோவா சந்தோஷப்படுவாரா? இல்லை, “குதிரைகளின் பலத்தைப் பார்த்து அவர் ஆச்சரியப்படுவதில்லை.” நம் சொந்த பலத்தையோ மற்றவர்களுடைய பலத்தையோ நாம் சார்ந்திருக்க வேண்டுமா? இல்லை, “மனிதனுடைய கால்களின் வலிமையைப் பார்த்து அவர் அசந்துபோவதில்லை.” (சங். 147:10) யெகோவாவுடைய உதவிக்காக அவரிடம் கெஞ்சிக் கேட்க வேண்டும். மனிதர்களிடம் நாம் திரும்பத் திரும்ப ஏதோவொன்றை கேட்கும்போது அவர்கள் சோர்ந்துவிடலாம். ஆனால், யெகோவா அப்படி இல்லை. அவருடைய உதவிக்காக நாம் திரும்பத் திரும்ப கேட்கும்போது அவர் சோர்ந்துபோவது இல்லை. “யெகோவா தனக்குப் பயந்து நடக்கிறவர்களைப் பார்த்து சந்தோஷப்படுகிறார். தன்னுடைய மாறாத அன்புக்காகக் காத்திருப்பவர்களைப் பார்த்து சந்தோஷப்படுகிறார்.” (சங். 147:11) அவர் உண்மையுள்ளவராக இருப்பதாலும், நம்மை நேசிப்பதாலும், நம் தவறான ஆசைகளிலிருந்து வெளியே வர அவர் நமக்கு உதவுவார்.
14. சங்கீதக்காரனுக்கு என்ன நம்பிக்கை இருந்தது?
14 நாம் பிரச்சினைகளை அனுபவிக்கும்போது, நமக்கு உதவி செய்வதாக யெகோவா வாக்குக் கொடுக்கிறார். இஸ்ரவேலர்கள் எருசலேமுக்குத் திரும்பி வந்தபோது, யெகோவா அவர்களுக்கு எப்படியெல்லாம் உதவி செய்துகொண்டிருந்தார் என்பதைச் சங்கீதக்காரன் நினைத்துப் பார்த்தார். “உன்னுடைய வாசலின் தாழ்ப்பாள்களை அவர் உறுதியாக்குகிறார். உன்னிடம் இருக்கிற உன் பிள்ளைகளை ஆசீர்வதிக்கிறார். உன்னுடைய எல்லைகளுக்குள் சமாதானத்தைப் பொழிகிறார்” என்று சங்கீதக்காரன் பாடினார். (சங். 147:13, 14) யெகோவா தன் மக்களைக் காப்பாற்றுவதற்காக வாசலின் தாழ்ப்பாள்களை உறுதியாக்குவார் என்ற நம்பிக்கை சங்கீதக்காரனுக்கு இருந்தது.
15-17. (அ) நம் பிரச்சினைகளை நினைத்து நாம் எப்படி உணரலாம், தன் வார்த்தையின் மூலம் யெகோவா நமக்கு எப்படி உதவுகிறார்? (ஆ) நமக்கு உதவ கடவுளுடைய வார்த்தை எப்படி “வேகமாக ஓடிவருகிறது” என்பதற்கு ஒரு உதாரணம் சொல்லுங்கள்.
15 உங்கள் பிரச்சினைகளை நினைத்து நீங்கள் ஒருவேளை கவலைப்படலாம். ஆனால், அவற்றைச் சமாளிப்பதற்குத் தேவையான ஞானத்தை யெகோவா உங்களுக்குத் தருவார். “[யெகோவா] பூமிக்குக் கட்டளை கொடுக்கிறார். அவருடைய வார்த்தை வேகமாக ஓடிவருகிறது” என்று சங்கீதக்காரன் சொன்னார். பிறகு பனி, உறைபனி, ஆலங்கட்டிகள் ஆகியவற்றைக் குறிப்பிட்டு, “அவர் வர வைக்கும் குளிரை யாரால் தாங்க முடியும்?” என்று சங்கீதக்காரன் கேட்டார். பிறகு, “[யெகோவா] கட்டளை கொடுக்கிறார், ஆலங்கட்டிகள் உருகுகின்றன” என்று சொன்னார். (சங். 147:15-18) எல்லா ஞானமும் உள்ள, எல்லா சக்தியும் படைத்த, ஆலங்கட்டியையும் பனியையும் கட்டுப்படுத்துகிற நம் கடவுளால் உங்களுடைய எந்தப் பிரச்சினையையும் சமாளிக்க உங்களுக்கு உதவ முடியும்.
16 இன்று, தன் வார்த்தையாகிய பைபிளின் மூலம் யெகோவா நம்மை வழிநடத்துகிறார். நமக்கு உதவுவதற்காக அவருடைய வார்த்தை ‘வேகமாக ஓடிவருவதாக’ சங்கீதக்காரன் சொன்னார். சரியான விதத்தில், சரியான நேரத்தில் கடவுள் நம்மை வழிநடத்துகிறார். பைபிள், “உண்மையும் விவேகமும் உள்ள அடிமை” தரும் பிரசுரங்கள், JW பிராட்காஸ்டிங், jw.org ஆகியவற்றின் மூலமும், மூப்பர்கள் மற்றும் சகோதர சகோதரிகளின் மூலமும் நீங்கள் எந்தளவு பிரயோஜனமடைந்திருக்கிறீர்கள் என்பதை யோசித்துப் பாருங்கள். (மத். 24:45) உங்களை வழிநடத்த யெகோவா ‘வேகமாக ஓடிவந்ததை’ உங்கள் சொந்த வாழ்க்கையில் அனுபவித்திருக்கிறீர்களா?
17 கடவுளுடைய வார்த்தை தனக்கு உதவியதை சிமோனா என்ற சகோதரி ருசித்திருக்கிறார். தான் எதற்குமே லாயக்கில்லை என்றும் யெகோவாவுக்குத் தன்னைப் பிடிக்காது என்றும் அவர் நினைத்தார். இருந்தாலும், மனதளவில் சோர்ந்து போனபோதெல்லாம் அவர் தொடர்ந்து யெகோவாவிடம் ஜெபம் செய்தார், தனக்கு உதவி செய்யும்படி கெஞ்சிக் கேட்டார். பைபிளையும் தொடர்ந்து படித்தார். “எல்லா சூழ்நிலையலயும் யெகோவாவோட பலத்தயும் அவரோட வழிநடத்துதலயும் என்னால உணர முடிஞ்சது” என்று அவர் சொல்கிறார். நம்பிக்கையான மனப்பான்மையோடு இருக்க சிமோனாவுக்கு இது உதவியது.
18. யெகோவா உங்களிடம் நெருங்கி இருப்பதாக நீங்கள் ஏன் உணருகிறீர்கள், ‘“யா”வைப் புகழ’ உங்களுக்கு என்ன காரணங்கள் இருக்கின்றன?
18 தன்னுடைய மக்களாக இருப்பதற்காக, பூமியில் இருக்கிற எல்லா தேசங்களிலிருந்தும் பூர்வ இஸ்ரவேல் தேசத்தை யெகோவா தேர்ந்தெடுத்திருந்தார் என்பது சங்கீதக்காரனுக்குத் தெரியும். அந்தத் தேசத்துக்கு மட்டும்தான் கடவுளுடைய ‘வார்த்தையும்’ அவருடைய ‘விதிமுறைகளும்’ கிடைத்தன. (சங்கீதம் 147:19, 20-ஐ வாசியுங்கள்.) இன்று, நாம் கடவுளுடைய பெயரால் அழைக்கப்படுவது நமக்குக் கிடைத்த மிகப் பெரிய பாக்கியம்! அவரைப் பற்றி தெரிந்திருப்பதற்காக... அவருடைய வார்த்தை நம்மை வழிநடத்துவதற்காக... அவரோடு நெருங்கிய நட்பை வைத்திருப்பதற்காக... நாம் நன்றியோடு இருக்கிறோம். சங்கீதம் 147-ன் எழுத்தாளரைப் போலவே ‘“யா”வைப் புகழவும்,’ அப்படிப் புகழும்படி மற்றவர்களை உற்சாகப்படுத்தவும் நமக்கு நிறைய காரணங்கள் இருக்கின்றன.