படிப்புக் கட்டுரை 4
பாட்டு 30 என் தந்தை, என் தேவன், என் தோழன்!
யெகோவா உங்கள்மேல் பாசம் வைத்திருக்கிறார்
‘யெகோவா கனிவான பாசம் நிறைந்தவர்.’—யாக். 5:11.
என்ன கற்றுக்கொள்வோம்?
யெகோவாவுடைய அன்பு எப்படி நம்மை அவர் பக்கம் இழுக்கிறது... பாதுகாப்பாக உணர வைக்கிறது... நம்மை கவனித்துக்கொள்வார் என்ற உணர்வைத் தருகிறது... புத்துணர்ச்சி கொடுக்கிறது... என்றெல்லாம் தெரிந்துகொள்வோம்.
1. யெகோவாவைப் பற்றி யோசிக்கும்போது உங்களுக்கு எப்படி இருக்கிறது?
யெகோவா எப்படி இருப்பார் என்று எப்போதாவது கற்பனை செய்து பார்த்திருக்கிறீர்களா? யெகோவாவை நம்மால் பார்க்க முடியவில்லை என்றாலும் அவரை நிறைய விதங்களில் பைபிள் வர்ணிக்கிறது. அவரை “ஒரு சூரியன், ஒரு கேடயம்,” ‘சுட்டெரிக்கிற நெருப்பு’ என்றெல்லாம் பைபிள் வர்ணிக்கிறது. (சங். 84:11; எபி. 12:29) யெகோவாவின் மகிமை நீலமணிக் கல்லைப் போலவும், பிரகாசமான உலோகத்தைப் போலவும், ஜொலிக்கும் வானவில்லைப் போலவும் இருப்பதாக எசேக்கியேல் தீர்க்கதரிசி விவரித்தார். (எசே. 1:26-28) இதையெல்லாம் படிக்கும்போது உங்களுக்கு எப்படி இருக்கிறது? பிரமிப்பாக இருக்கிறதா அல்லது, ஒருவிதமான பயம் வருகிறதா?
2. யெகோவாவிடம் நெருங்கிப் போவது சிலருக்கு ஏன் கஷ்டமாக இருக்கலாம்?
2 கண்ணுக்குத் தெரியாத ஒருவர் நம்மேல் அன்பு வைத்திருக்கிறார் என்பதை ஏற்றுக்கொள்வது சிலருக்குக் கஷ்டமாக இருக்கலாம். சிலர் வாழ்க்கையில் நிறைய அடிபட்டு இருப்பார்கள். அதனால், யெகோவாவுக்குத் தங்கள்மேல் அன்பு இருக்கிறது என்பதை அவர்களால் யோசித்துக்கூட பார்க்க முடியாமல் இருக்கலாம். வேறு சிலருக்கு, பாசமான ஒரு அப்பாவின் அரவணைப்பு கிடைத்திருக்காது. அதனால் யெகோவாவைப் பாசமான ஒரு அப்பாவாக அவர்களால் கற்பனை செய்ய முடியாமல் இருக்கலாம். இந்த எல்லா உணர்வுகளையும் யெகோவா புரிந்துகொள்கிறார். தன்னிடம் நெருங்கி வருவது இவர்களுக்கெல்லாம் ஏன் கஷ்டமாக இருக்கும் என்பதையும் புரிந்துகொள்கிறார். அதனால்தான் தன்னைப் பற்றியும் தன்னிடம் இருக்கும் அழகான குணங்களைப் பற்றியும் பைபிளில் சொல்லியிருக்கிறார்.
3. யெகோவாவின் அன்பைப் பற்றி நாம் ஏன் ஆழமாக யோசித்துப் பார்க்க வேண்டும்?
3 அன்பு! இந்த ஒரே வார்த்தை யெகோவாவைப் பற்றி நிறைய சொல்கிறது. யெகோவா அன்பாக இருக்கிறார். (1 யோ. 4:8) அன்பு இருப்பதால்தான் அவர் எல்லாவற்றையுமே செய்கிறார். அவர் தாராளமாக அன்பு காட்டுகிறார். அவருடைய அன்புக்கு எல்லையே இல்லை. சொல்லப்போனால், தன்னை நேசிக்காதவர்கள்மேலும் அவர் அன்பு காட்டுகிறார். (மத். 5:44, 45) இந்தக் கட்டுரையில் நாம் யெகோவாவைப் பற்றியும் அவருடைய அன்பைப் பற்றியும் ஆழமாகப் பார்ப்போம். அவரைப் பற்றி அதிகமாக தெரிந்துகொள்ள தெரிந்துகொள்ள அவர்மேல் இருக்கும் அன்பு அதிகமாகும்.
யெகோவா நம்மீது ரொம்ப பாசம் வைத்திருக்கிறார்
4. யெகோவா காட்டும் பாசத்தைப் பற்றி நினைக்கும்போது உங்களுக்கு எப்படி இருக்கிறது? (படத்தையும் பாருங்கள்.)
4 “யெகோவா கனிவான பாசமும் இரக்கமும் நிறைந்தவர்.” (யாக். 5:11) அவர் தன்னையே ஒரு பாசமான அம்மாவுக்கு ஒப்பிட்டுப் பேசுகிறார். (ஏசா. 66:12, 13) ஒரு அம்மா தன்னுடைய குழந்தையைக் கண்ணுக்குள் வைத்துப் பார்த்துக்கொள்வாள். அந்த குழந்தையைப் பாசமாக மடியில் வைத்துத் தாலாட்டுவாள், இதமாக மென்மையாக பேசுவாள். குழந்தை ஒருவேளை அழுதாலோ வலியில் கத்தினாலோ உடனடியாக என்ன தேவையோ அதை செய்வாள். அதேமாதிரி நாமும் ஏதாவது வலி, வேதனையில் இருக்கும்போது, நமக்கு என்ன தேவையோ அதை யெகோவா உடனடியாக செய்வார். அதைப் பற்றி ஒரு சங்கீதக்காரர் இப்படி எழுதினார்: “கவலைகள் என்னைத் திணறடித்தபோது, நீங்கள் எனக்கு ஆறுதல் தந்து, என் இதயத்துக்கு இதமளித்தீர்கள்.”—சங். 94:19.
5. யெகோவாவின் மாறாத அன்பைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
5 யெகோவா மாறாத அன்பைக் காட்டுகிறார். (சங். 103:8) நாம் தவறு செய்தாலும் அவர் நம்மேல் அன்பு காட்டுவதை நிறுத்த மாட்டார். இஸ்ரவேலர்கள் யெகோவாவின் மனதைத் திரும்பத் திரும்பக் காயப்படுத்திக்கொண்டே இருந்தார்கள். ஆனாலும் அவர்கள் மனம் திருந்தியபோது யெகோவா மறுபடியும் அவர்கள்மேல் அன்பு காட்டினார். “நீ எனக்குத் தங்கமானவன். உன்னைக் கௌரவப்படுத்தினேன்; உன்மேல் அன்பு வைத்தேன்” என்று யெகோவா அவர்களிடம் சொன்னார். (ஏசா. 43:4, 5) இன்றும் யெகோவா இதே மாதிரிதான் அன்பு காட்டுகிறார். ஒருவேளை, நாம் ஏதாவது பெரிய தவறு செய்திருந்தாலும் அவர் நம்மைக் கைவிட மாட்டார். நாம் மனம் திருந்தி அவரிடம் மறுபடியும் போனால், எப்போதும் போலவே தொடர்ந்து அன்பு காட்டுவார். நம்மைத் ‘தாராளமாக மன்னிப்பதாக’ அவர் வாக்குக் கொடுத்திருக்கிறார். (ஏசா. 55:7) யெகோவாவிடமிருந்து கிடைக்கும் இந்த மன்னிப்பு நமக்கு ‘புத்துணர்ச்சியைக் கொடுத்துக்கொண்டே இருக்கும்.’—அப். 3:19.
6. யெகோவாவைப் பற்றி சகரியா 2:8-லிருந்து என்ன கற்றுக்கொள்கிறோம்?
6 சகரியா 2:8-ஐ வாசியுங்கள். யெகோவா நம்மைக் கண்மணியோடு ஒப்பிட்டுப் பேசுகிறார். கண்கள், நம் உடலிலேயே ரொம்ப முக்கியமான ஒரு பாகம். அதில் சின்ன தூசிக்கூட படாத மாதிரி பத்திரமாகப் பார்த்துக்கொள்வோம். அப்படியென்றால் யெகோவா இங்கே என்ன சொல்ல வருகிறார்? ‘உங்கள்மேல் யாராவது கை வைத்தால், நான் சும்மா இருக்க மாட்டேன்’ என்று சொல்கிறார். அந்தளவுக்கு யெகோவா நம்மேல் அன்பு வைத்திருக்கிறார். அவர் நம் உணர்ச்சிகளைப் புரிந்துகொள்கிறார். நம்மைப் பாதுகாக்கத் தயாராக இருக்கிறார். நமக்கு ஒரு கஷ்டம் என்றால் அவரும் துடித்துப் போய்விடுகிறார். அதனால், “கண்மணிபோல் என்னைப் பார்த்துக்கொள்ளுங்கள்” என்று நாம் தாராளமாக அவரிடம் ஜெபம் செய்யலாம்.—சங். 17:8.
7. யெகோவாவுக்கு நம்மேல் அன்பு இருக்கிறது என்ற நம்பிக்கையை நாம் ஏன் பலப்படுத்த வேண்டும்?
7 யெகோவா உங்கள்மேல் உயிரையே வைத்திருக்கிறார். அதில் உங்களுக்கு சந்தேகமே இருக்கக் கூடாது என்று அவர் நினைக்கிறார். ஆனால், இப்போது படுகிற கஷ்டங்களாலோ வாழ்க்கையில் நடந்த கசப்பான அனுபவங்களாலோ ‘அவருக்கெல்லாம் என்மேல் அன்பு இருக்குமா?’ என்று நீங்கள் யோசிக்கலாம். அவருக்கு உண்மையிலேயே உங்கள்மேல் அன்பு இருக்கிறது என்ற நம்பிக்கையை நீங்கள் எப்படி அதிகமாக்கலாம்? இயேசுமேலும் பரலோக நம்பிக்கையுள்ளவர்கள்மேலும் நம் எல்லார்மேலும் அவர் அன்பை எப்படி வெளிப்படையாக காட்டியிருக்கிறார் என்பதை யோசித்துப் பார்ப்பதன் மூலம்!
யெகோவா தன் அன்பை வெளிப்படையாக காட்டுகிறார்
8. யெகோவாவுக்குத் தன்மேல் அன்பு இருந்தது என்பதில் இயேசு ஏன் உறுதியாக இருந்தார்?
8 இந்த பிரபஞ்சத்திலேயே ரொம்ப காலம் ஒன்றாக இருந்தவர்கள் யெகோவாவும் அவருடைய மகன் இயேசுவும்தான். அந்த கோடிக்கணக்கான வருஷங்களில் அவர்களுக்குள் ஒரு நெருக்கமான பந்தம் உருவானது. ஒருவர்மேல் ஒருவர் கொள்ளை பாசம் வைத்திருந்தார்கள். இயேசுமேல் தனக்கு எவ்வளவு அன்பு இருக்கிறது என்பதை மத்தேயு 17:5-ல் யெகோவா சொல்லியிருக்கிறார். ஒருவேளை அதில், “நான் இவரை ஏற்றுக்கொள்கிறேன்” என்று மட்டும் அவர் சொல்லியிருக்கலாம். ஆனால் இயேசுமேல் தனக்கு எவ்வளவு அன்பு இருந்தது என்பதை நாம் தெரிந்துகொள்வதற்காக “இவர் என் அன்பு மகன்” என்றும் சொன்னார். இயேசுவை நினைத்தும் அவர் செய்யப்போவதை நினைத்தும் யெகோவா பெருமைப்பட்டார். (எபே. 1:7) அப்பாவுக்குத் தன்மேல் அன்பு இருக்கிறதா என்ற சந்தேகம் இயேசுவுக்குத் துளிகூட இல்லை. யெகோவாவுடைய அன்பை அவர் தன் இதயத்தின் ஆழத்தில் உணர்ந்தார். அதனால்தான் தன்னுடைய அப்பா தன்னை நேசிக்கிறார் என்பதை மறுபடியும் மறுபடியும் உறுதியாக சொன்னார்.—யோவா. 3:35; 10:17; 17:24.
9. பரலோக நம்பிக்கையுள்ளவர்கள்மேல் யெகோவா வைத்திருக்கும் அன்பை எந்த வார்த்தைகள் காட்டுகின்றன? விளக்குங்கள். (ரோமர் 5:5)
9 பரலோக நம்பிக்கையுள்ளவர்கள்மேலும் யெகோவா நிறைய அன்பு வைத்திருக்கிறார். அதை அவர் வெளிப்படையாகவும் சொல்லியிருக்கிறார். (ரோமர் 5:5-ஐ வாசியுங்கள்.) இந்த வசனத்தில், அன்பு இதயங்களில் ‘பொழியப்பட்டிருக்கிறது’ என்ற வார்த்தையைப் பார்க்கிறோம். இந்த வார்த்தை “தண்ணீர் பாய்ந்து வருவதை” குறிப்பதாக ஒரு ஆராய்ச்சிப் புத்தகம் சொல்கிறது. கடவுளுடைய அன்பு அப்படித்தான் பரலோக நம்பிக்கையுள்ளவர்கள்மேல் பாய்ந்துவருகிறது! அவர்கள்மேல் யெகோவாவுக்கு எவ்வளவு அன்பு! கடவுளுக்குத் தங்கள்மேல் அன்பு இருக்கிறது என்பதை அவர்களும் புரிந்து வைத்திருக்கிறார்கள். (யூ. 1) அதைப் பற்றி அப்போஸ்தலன் யோவான் இப்படி எழுதினார்: “நாம் கடவுளுடைய பிள்ளைகள் என்று அழைக்கப்படுகிறோம் என்றால், பரலோகத் தகப்பன் எந்தளவுக்கு நம்மேல் அன்பு காட்டியிருக்கிறார் என்று பாருங்கள்!” (1 யோ. 3:1) ஆனால், யெகோவா பரலோக நம்பிக்கையுள்ளவர்கள்மேல் மட்டும்தான் அன்பு காட்டுகிறாரா? இல்லை, நம் எல்லார்மேலும் அவருக்கு அன்பு இருக்கிறது.
10. உங்கள்மேல் அன்பு வைத்திருப்பதை யெகோவா எப்படி நிரூபித்திருக்கிறார்?
10 இந்தப் பிரபஞ்சத்திலேயே வேறு யாரும் காட்டாத அன்பை யெகோவா காட்டியிருக்கிறார்—மீட்புவிலை என்ற ஏற்பாட்டை செய்ததன் மூலமாக! (யோவா. 3:16; ரோ. 5:8) மனிதர்களுடைய பாவங்களை மன்னிப்பதற்கும் அவர்களைத் தன்னுடைய நண்பர்களாக ஆக்கிக்கொள்வதற்கும், யெகோவா தன்னுடைய செல்ல மகன் இறந்துபோவதற்கு அனுமதித்தார். (1 யோ. 4:10) யெகோவாவும் இயேசுவும் நமக்காக எவ்வளவு பெரிய தொகையைக் கொடுத்திருக்கிறார்கள்! இதை யோசிக்கும்போது நம் ஒவ்வொருவர்மேலும் எந்தளவுக்கு அன்பு வைத்திருக்கிறார்கள் என்பது புரிகிறது. (கலா. 2:20) இந்த மீட்புவிலை என்பது, யெகோவா நீதி தவறாதவர் என்பதை காட்டுவதற்காக மட்டுமே செய்யப்பட்ட ஒரு ஏற்பாடு இல்லை. அது உண்மையிலேயே ஒரு அன்பான பரிசு. உயிருக்கு உயிராக நேசித்த தன்னுடைய ஒரே மகன் கஷ்டப்பட்டு சாவதற்கு யெகோவா அனுமதித்தார். இதையெல்லாம் நமக்காக செய்தார். இப்படி நம் ஒவ்வொருவர்மேலும் அன்பு இருக்கிறது என்பதை அவர் நிரூபித்திருக்கிறார்.
11. எரேமியா 31:3-லிருந்து நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்?
11 அன்பை யெகோவா மனசுக்குள்ளேயே வைத்துக்கொண்டு இருப்பதில்லை. அதைத் தாராளமாக வெளியே காட்டுகிறார். இதைத்தான் நாம் இவ்வளவு நேரம் பார்த்தோம். (எரேமியா 31:3-ஐ வாசியுங்கள்.) யெகோவா நம்மேல் அன்பு வைத்திருப்பதால்தான் நம்மை அவர் பக்கமாக இழுத்திருக்கிறார். (உபாகமம் 7:7, 8-ஐ ஒப்பிடுங்கள்.) இந்த அன்பிலிருந்து யாராலும், எவற்றாலும் நம்மைப் பிரிக்க முடியாது. (ரோ. 8:38, 39) யெகோவாவுடைய அன்பைப் பற்றி யோசிக்கும்போது உங்களுக்கு எப்படி இருக்கிறது? யெகோவா காட்டுகிற அன்பையும் அக்கறையையும் பற்றி யோசித்ததால் தாவீதுக்கு எப்படி இருந்தது என்று தெரிந்துகொள்ள, சங்கீதம் 23-ஐப் படித்துப் பாருங்கள். அதை வாசிக்கும்போது, யெகோவா காட்டுகிற அன்பையும் கனிவான பாசத்தையும் உங்களால் ருசிக்க முடியும்.
யெகோவாவின் அன்பை ருசிக்கிறீர்களா?
12. சங்கீதம் 23-ல் எதைப் பற்றி சொல்லியிருக்கிறது?
12 சங்கீதம் 23:1-6-ஐ வாசியுங்கள். யெகோவா எப்போதுமே அன்பு காட்டுவார் என்பதை தாவீது உறுதியாக நம்பினார். அவருடைய நம்பிக்கையை சங்கீதம் 23-ல் பார்க்க முடியும். தனக்கும் தன்னுடைய மேய்ப்பரான யெகோவாவுக்கும் எவ்வளவு நெருக்கமான பந்தம் இருக்கிறது என்பதை தாவீது அதில் விவரித்திருக்கிறார். யெகோவா தன்னை வழிநடத்துவதால் பாதுகாப்பாக உணர்வதாக தாவீது சொல்கிறார். யெகோவாவையே முழுமையாக நம்பியிருப்பதாகவும், யெகோவாவின் மாறாத அன்பு வாழ்நாளெல்லாம் தனக்குக் கிடைக்கும் என்றும் தாவீது சொன்னார். அவருக்கு எப்படி இந்தளவுக்கு நம்பிக்கை வந்தது?
13. யெகோவா தன்னை கவனித்துக்கொள்வார் என்பதில் தாவீது ஏன் உறுதியாக இருந்தார்?
13 “எனக்கு ஒரு குறையும் வராது.” தன்னுடைய எல்லா தேவைகளையும் யெகோவா கவனித்துக்கொண்டதை தாவீது உணர்ந்தார். அதுமட்டுமல்ல, யெகோவாவின் நட்பும் அங்கீகாரமும் தனக்கு இருந்ததையும் அவர் உணர்ந்தார். அதனால், எதிர்காலத்தில் என்ன நடந்தாலும் சரி யெகோவா தன்னை பார்த்துக்கொள்வார் என்பதில் தாவீது உறுதியாக இருந்தார். தாவீதுக்கு இருந்த பயங்களைவிட, யெகோவா எப்போதுமே அன்பு காட்டுவார் என்ற நம்பிக்கைதான் அதிகமாக இருந்தது. அதனால் அவர் மனநிறைவோடு இருந்தார்; அவருடைய இதயம் சந்தோஷத்தால் நிறைந்திருந்தது.—சங். 16:11.
14. யெகோவா நம்மை எப்படி அக்கறையாகப் பார்த்துக்கொள்கிறார்?
14 யெகோவா நம்மை அக்கறையாகப் பார்த்துக்கொள்கிறார். அதுவும், சமாளிப்பதற்குக் கஷ்டமான சமயங்களில் அவர் நம்மை நன்றாகப் பார்த்துக்கொள்கிறார். க்ளார்a என்ற சகோதரி அதை அனுபவித்திருக்கிறார். அவர் 20 வருஷங்களுக்குமேல் பெத்தேலில் சேவை செய்தார். ஒருசமயம் அவருடைய குடும்பத்துக்கு இடிமேல் இடி விழுந்தது. அப்பாவுக்குப் பக்கவாதம் வந்துவிட்டது... க்ளாரின் தங்கை ஒருவர் சபைநீக்கம் செய்யப்பட்டார்... குடும்பத் தொழில் நஷ்டமானது... வீட்டையும் இழந்துவிட்டார்கள். இந்த சூழ்நிலையில் யெகோவா அவர்களை எப்படி அக்கறையாகக் கவனித்துக்கொண்டார்? க்ளார் சொல்கிறார்: “ஒவ்வொரு நாளும் எங்கள் குடும்பத்துக்கு என்ன தேவைப்பட்டதோ அதை யெகோவா கொடுத்தார். நாங்கள் கற்பனைகூட செய்துபார்க்க முடியாத அளவுக்கு உதவினார். அவருக்கு என்மேல் எவ்வளவு பாசம் என்று அடிக்கடி யோசிப்பேன். அந்த ஒவ்வொரு தருணத்தையும் மனதில் பொக்கிஷமாக சேர்த்து வைத்திருக்கிறேன். பிரச்சினைகள் வந்தாலும் உடைந்துவிடாமல் இருக்க, இந்த நினைவுகள்தான் உதவுகிறது.”
15. யெகோவாவுடைய அன்பு தாவீதுக்கு எப்படிப் புத்துணர்ச்சியைக் கொடுத்தது? (படத்தையும் பாருங்கள்.)
15 “எனக்குப் புத்துணர்ச்சி தருகிறார்.” பிரச்சினைகளால் தாவீது சிலசமயங்களில் துவண்டுப் போயிருந்தார். (சங். 18:4-6) ஆனால், யெகோவா காட்டிய கனிவான பாசம் அவருக்குப் புத்துணர்ச்சி தந்தது. ஒருவிதத்தில், யெகோவா சோர்ந்துபோயிருந்த தன்னுடைய நண்பனை ‘பசுமையான புல்வெளிக்கும்’ ‘நிறைய தண்ணீர் உள்ள இடங்களுக்கும்’ கூட்டிக்கொண்டு போனார். அதனால் மறுபடியும் தாவீதுக்குத் தெம்பு கிடைத்தது, தொடர்ந்து சந்தோஷமாக இருக்க முடிந்தது.—சங். 18:28-32.
16. யெகோவாவின் அன்பு உங்களுக்கு எப்படிப் புத்துணர்ச்சி தந்திருக்கிறது?
16 இன்றும் அதுதான் உண்மை! வாழ்க்கையில் சோதனைகள் நம்மைப் போட்டு அழுத்தினாலும், “யெகோவாவுடைய மாறாத அன்பினால்தான் நாம் இன்னும் அழிந்துபோகவில்லை.” (புல. 3:22; கொலோ. 1:11) ரேச்சல் என்ற சகோதரியின் உதாரணத்தை எடுத்துக்கொள்ளுங்கள். கோவிட்-19 பெருந்தொற்று சமயத்தில் அவருடைய கணவர் அவரை விட்டுவிட்டு போய்விட்டார்; யெகோவாவையும் விட்டு போய்விட்டார். அந்த சமயத்தில் யெகோவா எப்படி ரேச்சலுக்குத் துணையாக இருந்தார்? “எனக்கு அன்பு கிடைக்கும்படி யெகோவா பார்த்துக்கொண்டார். நல்ல நண்பர்களை எனக்குக் கொடுத்தார். அவர்கள் என்னோடு இருந்தார்கள், சாப்பாடு சமைத்து கொண்டுவந்தார்கள், ஆறுதல்படுத்தும் மெசேஜ்களையும் வசனங்களையும் அனுப்பினார்கள், என்னோடு சேர்ந்து சிரித்தார்கள். யெகோவாவுக்கு என்மேல் அன்பு இருக்கிறது என்பதை ஞாபகப்படுத்திக்கொண்டே இருந்தார்கள். இப்படி ஒரு அன்பான பெரிய குடும்பத்தைத் தந்ததற்கு நான் யெகோவாவுக்கு நன்றி சொல்லிக்கொண்டே இருக்கிறேன்” என்கிறார் ரேச்சல்.
17. தாவீது ஏன் “எந்த ஆபத்தையும் நினைத்து” பயப்படவில்லை?
17 “எந்த ஆபத்தையும் நினைத்துப் பயப்பட மாட்டேன். ஏனென்றால், நீங்கள் என்னோடு இருக்கிறீர்கள்.” தாவீதுக்குப் பயங்கரமான எதிரிகள் இருந்தார்கள். அதனால் நிறைய சமயங்களில் அவருடைய உயிர் ஆபத்தில் இருந்தது. இருந்தாலும், யெகோவா தன்மேல் அன்பு வைத்திருந்ததால் தாவீது பாதுகாப்பாக உணர்ந்தார். ஒவ்வொரு சூழ்நிலையிலும் யெகோவா தன்னோடு இருந்ததை தாவீது உணர்ந்தார். அதனால்தான், “எல்லா பயத்திலிருந்தும் அவர் என்னை விடுவித்தார்” என்று பாடினார். (சங். 34:4) சிலசமயங்களில் தாவீது பயந்தது உண்மைதான். ஆனால், யெகோவாவின் அன்பு அவர்முன் மலைப் போல் இருந்தது; அதனால் அவர் பயத்திலேயே மூழ்கிவிடவில்லை.
18. யெகோவாவுக்கு நம்மேல் அன்பு இருக்கிறது என்ற நம்பிக்கை, பயமாக இருக்கும்போது நமக்கு எப்படி உதவும்?
18 யெகோவா நம்மேல் அன்பு வைத்திருக்கிறார் என்ற நம்பிக்கை, பயத்தை தூக்கியெறிய உதவும். சூசி என்ற பயனியர் சகோதரியின் வாழ்க்கையில் என்ன நடந்தது என்று பாருங்கள். அவருடைய மகன் தற்கொலை செய்துகொண்டான். அப்போது அவருக்கும் அவருடைய கணவருக்கும் எப்படி இருந்திருக்கும்! சூசி சொல்கிறார்: “திடீரென்று இந்தமாதிரி சம்பவம் நடக்கும்போது நாம் அப்படியே வெலவெலத்து போய்விடுவோம். உதவிக்கு யாருமே இல்லை என்பதுபோல் தோன்றும். ஆனால் அந்தமாதிரி சமயங்களில், யெகோவா காட்டும் கனிவான பாசம் எங்களுக்குப் பாதுகாப்பான உணர்வை தந்தது.” முன்பு பார்த்த ரேச்சல் இப்படிச் சொல்கிறார்: “ஒருநாள் ராத்திரி, எனக்கு நெஞ்சே வெடித்துவிடும்போல் இருந்தது. அந்தளவுக்கு கவலையாகவும் பயமாகவும் இருந்தது. அப்போது நான் சத்தமாக அழுது ஜெபம் செய்தேன். அந்த நிமிஷமே, என் இதயத்துக்குள் ஒரு அமைதி வந்தது. ஒரு அம்மா தன் குழந்தையை எப்படி சமாதானப்படுத்துவாளோ அதேமாதிரி யெகோவா என்னை சமாதானப்படுத்தியதுபோல் இருந்தது. அதற்கு பிறகு நிம்மதியாக தூங்கினேன். அந்த நிமிஷத்தை நான் என் வாழ்க்கையில் மறக்கவே மாட்டேன்.” தாசோஸ் என்ற ஒரு மூப்பர் ராணுவத்தில் சேராததால் நான்கு வருஷங்கள் ஜெயிலில் இருந்தார். யெகோவாவின் அன்பையும் கரிசனையையும் அவரால் எப்படிப் பார்க்க முடிந்தது? அவர் சொல்வதை கேளுங்கள்: “எனக்கு என்ன தேவையோ அதை யெகோவா கொடுத்தார்; அதற்கு மேலேயும் கொடுத்தார். அவரை முழுமையாக நம்பலாம் என்ற எண்ணத்தை அது எனக்குக் கொடுத்தது. பொதுவாக ஜெயில் வாழ்க்கை மோசமாக இருக்கும். ஆனால், அந்த சூழ்நிலையிலும் யெகோவா தன்னுடைய சக்தியைக் கொடுத்து எனக்கு சந்தோஷத்தைத் தந்தார். அவரிடம் நெருங்கி போக இவையெல்லாம் உதவியது. அவர்மேல் இருக்கும் நம்பிக்கை அதிகமாக அதிகமாக, அவருடைய அன்பை என்னால் உணர முடிந்தது. அதனால், ஜெயிலில் இருக்கும்போதே ஒழுங்கான பயனியராக சேவை செய்ய ஆரம்பித்தேன்.”
பாசமான கடவுளிடம் நெருங்கி வாருங்கள்
19. (அ) கடவுள் நம்மேல் அன்பு வைத்திருக்கிறார் என்பதைப் புரிந்துவைத்திருந்தால் நம் ஜெபங்கள் எப்படி இருக்கும்? (ஆ) யெகோவாவின் அன்பை விவரிக்கும் எந்த வார்த்தைகள் உங்களுக்குப் பிடித்திருக்கிறது? (“யெகோவாவின் கனிவான பாசத்தைக் காட்டும் வார்த்தைகள்” என்ற பெட்டியைப் பாருங்கள்.)
19 இவ்வளவு நேரம் நாம் பார்த்த அனுபவங்கள், “அன்புக்கு . . . ஊற்றாக இருக்கிற கடவுள்” நம் கூடவே இருக்கிறார் என்பதைக் காட்டுகிறது. (2 கொ. 13:11) அவருக்கு நாம் ஒவ்வொருவர்மேலும் அக்கறை இருக்கிறது. “அவருடைய மாறாத அன்பு [நம்மை] சூழ்ந்துகொள்ளும்” என்பதில் நமக்கு எந்த சந்தேகமும் இல்லை. (சங். 32:10) அவர் நம்மேல் எப்படியெல்லாம் அன்பு காட்டியிருக்கிறார் என்பதை யோசித்துப் பார்த்தால், நம்மால் அவரிடம் நெருங்கி போக முடியும். அவரிடம் தாராளமாக பேச முடியும். அவருடைய அன்பு நமக்கு தேவை என்பதை அவரிடம் சொல்லுவோம். அவர் நம்மைப் புரிந்துகொள்கிறார்... நமக்கு உதவ துடிக்கிறார்... என்பதை மனதில் வைத்து நமக்குள் இருக்கிற எல்லா கவலைகளையும் அவரிடம் கொட்டிவிடுவோம்.—சங். 145:18, 19.
20. யெகோவாவின் அன்பு எப்படி நம் இதயத்துக்கு இதமாக இருக்கிறது?
20 குளிரான ஒரு இரவில் குளிர்காய்வது நமக்கு இதமாக இருக்கும். அதேபோல், பிரச்சினைகள் இருக்கும்போது யெகோவாவின் அன்பில் குளிர்காய்வது நமக்கு இதமாக இருக்கும். அதனால், யெகோவாவிடம் நெருங்கி வாருங்கள். அவர் உங்கள்மேல் அன்பு வைத்திருப்பதை நினைத்து சந்தோஷப்படுங்கள். அவர் தரும் ஆறுதலையும் சமாதானத்தையும் ஏற்றுக்கொள்ளுங்கள். அப்போது, “நான் யெகோவாமேல் அன்பு வைத்திருக்கிறேன்”! என்று நீங்களும் சொல்வீர்கள்.—சங். 116:1.
உங்கள் பதில் என்ன?
யெகோவாவின் அன்பை எப்படி விவரிப்பீர்கள்?
யெகோவா உங்கள்மேல் அன்பு வைத்திருக்கிறார் என்று நீங்கள் ஏன் நம்பலாம்?
யெகோவா உங்கள்மேல் அன்பு வைத்திருப்பதை நினைக்கும்போது உங்களுக்கு எப்படி இருக்கிறது?
பாட்டு 108 தேவனின் மாறாத அன்பு
a சில பெயர்கள் மாற்றப்பட்டிருக்கின்றன.