கொரிந்தியருக்கு இரண்டாம் கடிதம்
13 நான் உங்களிடம் வருவதற்கு மூன்றாவது தடவையாக முயற்சி எடுக்கிறேன். “எந்த விஷயத்தையும் இரண்டு அல்லது மூன்று சாட்சிகளுடைய வாக்குமூலத்தை வைத்துதான் உறுதி செய்ய வேண்டும்.”+ 2 நான் இப்போது தூரத்தில் இருந்தாலும், இரண்டாவது தடவை உங்களிடம் வந்திருப்பதாக நினைத்துக்கொண்டு என் வார்த்தைகளைக் கேளுங்கள். உங்களில் பாவம் செய்தவர்களையும் மற்ற எல்லாரையும் நான் அப்போது எச்சரித்ததுபோல் இப்போதும் எச்சரிக்கிறேன்: அடுத்த தடவை நான் வந்தால் தவறு செய்கிறவர்களைத் தண்டிக்காமல் விடமாட்டேன். 3 ஏனென்றால், உங்கள் மத்தியில் பலவீனராக இல்லாமல், பலமுள்ளவராக இருக்கிற கிறிஸ்துதான் என் மூலம் பேசுகிறார் என்பதற்கு நீங்கள் அத்தாட்சி தேடுகிறீர்கள். 4 உண்மைதான், அவர் பலவீனராக மரக் கம்பத்தில் அறைந்து கொல்லப்பட்டார். ஆனாலும், கடவுளுடைய வல்லமையால் உயிர்வாழ்ந்து வருகிறார்.+ அவர் முன்பு பலவீனராக இருந்ததுபோல் நாங்களும் பலவீனர்களாக இருக்கிறோம் என்பது உண்மைதான். ஆனாலும், கடவுளுடைய வல்லமையால் அவரோடுகூட உயிர்வாழ்வோம்.+ அதே வல்லமை உங்களிடமும் செயல்படுகிறது.+
5 நீங்கள் விசுவாசத்தில் நிலைத்திருக்கிறீர்களா என்பதை எப்போதும் சோதித்துப் பாருங்கள். நீங்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதைத் தெரிந்துகொள்ள உங்களையே எப்போதும் ஆராய்ந்து பாருங்கள்.+ இயேசு கிறிஸ்து உங்களோடு ஒன்றுபட்டிருக்கிறார் என்பதை நீங்கள் உணரவில்லையா? நீங்கள் கடவுளால் ஏற்றுக்கொள்ளப்பட்டவர்களாக இருந்தால் மட்டும்தான் உணர்வீர்கள். 6 நாங்கள் கடவுளால் ஏற்றுக்கொள்ளப்பட்டவர்கள் என்பதை நீங்கள் புரிந்துகொள்வீர்கள் என்று உறுதியாக நம்புகிறேன்.
7 நீங்கள் எந்தத் தவறும் செய்யாமலிருக்க வேண்டும் என்று கடவுளிடம் ஜெபம் செய்கிறோம். மற்ற ஜனங்கள் எங்களை ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள் என்று காட்டுவதற்காக நாங்கள் ஜெபம் செய்யவில்லை. மற்றவர்கள் எங்களை ஏற்றுக்கொள்ளவில்லை என்றாலும், நீங்கள் சரியானதைச் செய்ய வேண்டும் என்பதற்காகத்தான் ஜெபம் செய்கிறோம். 8 சத்தியத்துக்கு விரோதமாக எங்களால் எதையும் செய்ய முடியாது, சத்தியத்துக்கு ஆதரவாக மட்டுமே எதையும் செய்ய முடியும். 9 நாங்கள் பலவீனர்களாக இருந்தாலும், நீங்கள் பலமுள்ளவர்களாக இருந்தால் எங்களுக்குச் சந்தோஷம்தான். நீங்கள் உங்களைச் சரிப்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் ஜெபம் செய்கிறோம். 10 இதையெல்லாம் தூரத்தில் இருக்கும்போதே எழுதுகிறேன். ஏனென்றால், நான் உங்களிடம் வரும்போது, நம் எஜமான் தந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி உங்களிடம் கடுமையாக நடந்துகொள்ள விரும்பவில்லை.+ உங்களை நொறுக்கிப்போடுவதற்கு அல்ல, பலப்படுத்துவதற்காகத்தான் அவர் எனக்கு அந்த அதிகாரத்தைத் தந்திருக்கிறார்.
11 கடைசியாக, சகோதரர்களே, எப்போதும் சந்தோஷமாக இருங்கள், உங்களைச் சரிப்படுத்திக்கொள்ளுங்கள், ஆறுதல் அடையுங்கள்,+ ஒரே சிந்தையோடு இருங்கள்,+ சமாதானத்தோடு வாழுங்கள்.+ அப்போது அன்புக்கும் சமாதானத்துக்கும் ஊற்றாக இருக்கிற கடவுள் உங்களோடு இருப்பார்.+ 12 சுத்தமான இதயத்தோடு ஒருவருக்கொருவர் முத்தம் கொடுத்து வாழ்த்துங்கள். 13 பரிசுத்தவான்கள் எல்லாரும் உங்களுக்கு வாழ்த்துச் சொல்கிறார்கள்.
14 நம் எஜமானாகிய இயேசு கிறிஸ்துவின் அளவற்ற கருணையும், கடவுளுடைய அன்பும், சபையாக உங்களுக்கு நன்மை தருகிற கடவுளுடைய சக்தியும் உங்கள் எல்லார்மேலும் இருக்கட்டும்.