நம்பிக்கையோடு யெகோவாவுக்குக் காத்திருங்கள், தைரியமாய் இருங்கள்
“நம்பிக்கையோடு யெகோவாவுக்குக் காத்திரு; தைரியமாயிரு, உன் இருதயம் உறுதியாய் இருக்கட்டும், ஆம், நம்பிக்கையோடு யெகோவாவுக்குக் காத்திரு.”—சங்கீதம் 27:14, NW.
1. நம்பிக்கை எந்தளவு முக்கியம், பைபிளில் இந்தப் பதம் எதையும் அர்த்தப்படுத்துகிறது?
உண்மையான நம்பிக்கை பிரகாசமான ஒளியைப் போன்றது. அது தற்போது எதிர்ப்படும் சோதனைகளைப் பெரிதாக எண்ணாமல் தைரியத்தோடும் சந்தோஷத்தோடும் எதிர்காலத்தை எதிர்கொள்ள உதவுகிறது. யெகோவா மட்டுமே நமக்கு உறுதியான நம்பிக்கை அளிக்க முடியும்; அந்த நம்பிக்கையை, ஆவியின் ஏவுதலால் எழுதப்பட்ட அவருடைய வார்த்தை மூலம் நமக்கு அளிக்கிறார். (2 தீமோத்தேயு 3:16) சொல்லப்போனால், “நம்பிக்கை” என்ற வார்த்தை பைபிளில் அநேக இடங்களில் காணப்படுகிறது; அது, நன்மையான ஒன்றை ஆர்வத்துடனும், உறுதியுடனும் எதிர்பார்ப்பதையும், எதிர்பார்க்கும் காரியத்தையும் அர்த்தப்படுத்துகிறது.a அத்தகைய நம்பிக்கை சாதாரண விருப்பத்தைவிடவும் மேம்பட்டதாகும்; விருப்பம் என சொல்லுகையில் அதற்கு ஆதாரம் எதுவும் இல்லாதிருக்கலாம் அல்லது நிறைவேறும் என்ற உறுதியும் இல்லாதிருக்கலாம்.
2. இயேசுவுக்கு இருந்த நம்பிக்கை அவருடைய வாழ்க்கையில் என்ன பங்கை வகித்தது?
2 சோதனைகளையும் கஷ்டங்களையும் இயேசு எதிர்ப்பட்டபோது அப்போதைய நிலையைக் குறித்து எண்ணாமல் அதற்கு அப்பால் நோக்கினார்; யெகோவா மீது நம்பிக்கை வைத்திருந்தார். “அவர் தமக்குமுன் வைத்திருந்த சந்தோஷத்தின் பொருட்டு, அவமானத்தை எண்ணாமல், சிலுவையைச் சகித்து, தேவனுடைய சிங்காசனத்தின் வலதுபாரிசத்தில் வீற்றிருக்கிறார்.” (எபிரெயர் 12:2) யெகோவாவின் சர்வலோக பேரரசாட்சியே சரியென நிரூபிக்கப்பட்டு, அவருடைய பெயர் பரிசுத்தப்படுத்தப்படும் காலத்தை எதிர்பார்த்து, அதில் முழுக்க முழுக்க தம் கவனத்தை ஒருமுகப்படுத்தியிருந்தார்; எனவே, எத்தகைய விளைவை சந்திக்க நேர்ந்தபோதிலும் கடவுளுக்குக் கீழ்ப்படியும் விஷயத்தில் அவர் கொஞ்சம்கூட பின்வாங்கவில்லை.
3. கடவுளுடைய ஊழியர்களின் வாழ்க்கையில் நம்பிக்கை என்ன பங்கு வகிக்கிறது?
3 தாவீது ராஜா நம்பிக்கைக்கும் தைரியத்துக்கும் இடையேயுள்ள தொடர்பை பின்வருமாறு குறிப்பிட்டார்: “நம்பிக்கையோடு யெகோவாவுக்குக் காத்திரு; தைரியமாயிரு, உன் இருதயம் உறுதியாய் இருக்கட்டும், ஆம், நம்பிக்கையோடு யெகோவாவுக்குக் காத்திரு.” (சங்கீதம் 27:14, NW) நம் இருதயம் உறுதியாய் இருக்க வேண்டுமென்றால் நம்முடைய நம்பிக்கை தெளிவற்றதாக ஆகிவிட நாம் ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது; மாறாக, அதை எப்போதும் நம் மனதில் தெளிவாக வைத்து, இருதயத்தில் பொக்கிஷமாய்ப் போற்ற வேண்டும். அப்படிச் செய்வது, தம் சீஷர்களுக்கு இயேசு கட்டளையிட்டிருந்த வேலையில் நாம் ஈடுபடும்போது, அவரைப் போலவே தைரியத்தையும் வைராக்கியத்தையும் வெளிக்காட்ட நமக்கு உதவும். (மத்தேயு 24:14; 28:19, 20) ஆம், கடவுளுடைய ஊழியர்கள் வெளிக்காட்டுகிற தனிச்சிறப்புமிக்க பண்புகளின் வரிசையில் விசுவாசம், அன்பு ஆகியவற்றோடு நம்பிக்கையும் குறிப்பிடப்படுகிறது; இந்த நம்பிக்கை முக்கியமான பண்பு, இது சகித்திருக்கவும் உதவுகிறது.—1 கொரிந்தியர் 13:13.
நீங்கள் ‘நம்பிக்கையில் பெருகுகிறீர்களா’?
4. அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்களும், அவர்களுடைய தோழர்களான ‘வேறே ஆடுகளும்’ எதை ஆவலோடு எதிர்நோக்கி இருக்கிறார்கள்?
4 கடவுளுடைய ஜனங்களுக்கு ஒளிமயமான எதிர்காலம் காத்திருக்கிறது. அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்கள் பரலோகத்தில் கிறிஸ்துவோடு சேவை செய்ய ஆவலாய் காத்திருக்கிறார்கள்; ‘வேறே ஆடுகளைச்’ சேர்ந்தவர்களோ, ‘அழிவுக்குரிய அடிமைத்தனத்தினின்று விடுதலையாக்கப்பட்டு, தேவனுடைய [பூமிக்குரிய] பிள்ளைகளுக்குரிய மகிமையான சுயாதீனத்தைப் பெற்றுக்கொள்வதற்கு’ நம்பிக்கையோடு காத்திருக்கிறார்கள். (யோவான் 10:16; ரோமர் 8:19-21; பிலிப்பியர் 3:20) இந்த ‘மகிமையான சுயாதீனம்,’ பாவத்திலிருந்தும் அதன் கொடூரமான பாதிப்புகளிலிருந்தும் கிடைக்கும் மீட்பையும் உட்படுத்துகிறது. உண்மைதான், ‘நன்மையான எந்த ஈவையும் பூரணமான எந்த வரத்தையும்’ அளிக்கும் யெகோவா, தம்மை உண்மையாய் சேவிப்பவர்களுக்கு மிகச் சிறந்த பரிசை மட்டுமே கொடுப்பார்.—யாக்கோபு 1:17; ஏசாயா 25:8.
5. நாம் எப்படி ‘நம்பிக்கையில் பெருக’ முடியும்?
5 கிறிஸ்தவ நம்பிக்கை நம் வாழ்க்கையில் எந்தளவு முக்கியமானதாய் இருக்க வேண்டும்? ரோமர் 15:13-ல் நாம் இவ்வாறு வாசிக்கிறோம்: ‘பரிசுத்த ஆவியின் பலத்தினாலே உங்களுக்கு நம்பிக்கை பெருகும்படிக்கு, நம்பிக்கையின் தேவன் விசுவாசத்தினால் உண்டாகும் எல்லாவித சந்தோஷத்தினாலும் சமாதானத்தினாலும் உங்களை நிரப்புவாராக.’ ஆம், நம்பிக்கையை இருளில் சுடர்விட்டு எரியும் மெழுகுவர்த்திக்கு அல்ல, ஆனால், பிரகாசமான ஒளிக் கிரணங்களை வீசும் காலை சூரியனுக்கு ஒப்பிடலாம்; இந்தப் பிரகாசமான நம்பிக்கை, ஒருவருடைய வாழ்க்கையில் சமாதானத்தையும் சந்தோஷத்தையும் நோக்கத்தையும் தைரியத்தையும் தருகிறது. கடவுளுடைய வார்த்தையாகிய பைபிளை ஏற்றுக்கொண்டு, அவருடைய பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்ளும்போது நாம் ‘நம்பிக்கையில் பெருகுவோம்’ என்பதை நினைவில் வையுங்கள். ரோமர் 15:4 இவ்வாறு சொல்கிறது: “தேவவசனத்தினால் உண்டாகும் பொறுமையினாலும் ஆறுதலினாலும் நாம் நம்பிக்கையுள்ளவர்களாகும்படிக்கு, முன்பு எழுதியிருக்கிறவைகளெல்லாம் நமக்குப் போதனையாக எழுதியிருக்கிறது.” எனவே, உங்களை நீங்களே இவ்வாறு கேட்டுக்கொள்ளுங்கள்: ‘தினந்தோறும் பைபிளைக் கருத்தூன்றிப் படிப்பதன் மூலம் என் நம்பிக்கையை எப்போதும் பிரகாசமாய் வைத்திருக்கிறேனா? எப்போதும் கடவுளுடைய ஆவிக்காக ஜெபிக்கிறேனா?’—லூக்கா 11:13.
6. நம் நம்பிக்கையை எப்போதும் பிரகாசமாக வைத்துக்கொள்வதற்கு எதைத் தவிர்க்க வேண்டும்?
6 நமக்கு முன்மாதிரியாய்த் திகழும் இயேசு, கடவுளுடைய வார்த்தையிலிருந்து பலத்தைப் பெற்றார். நாம் அவரை அப்படியே பின்பற்றுவதன் மூலம், ‘மனம் சோர்ந்து தளர்ந்து போகாதிருக்கிறோம்.’ (எபிரெயர் 12:3, பொது மொழிபெயர்ப்பு) கடவுள் கொடுத்திருக்கிற நம்பிக்கை எனும் சுடர், நம் மனதிலும் இருதயத்திலும் மங்கி வருகிறது என்றால் அல்லது பொருள் சம்பந்தமான காரியங்களிடமோ உலகப்பிரகாரமான இலட்சியங்களிடமோ நம் கவனம் திசைதிரும்புகிறது என்றால் ஆன்மீக ரீதியில் நாம் சீக்கிரத்தில் சோர்ந்துவிடுவோம்; இறுதியில் தார்மீக பலத்தையும் தைரியத்தையும் இழந்துவிடுவோம். அத்தகைய மனப்பான்மையால் நம் ‘விசுவாசமாகிய கப்பல் சேதமடையவும்’ வாய்ப்புள்ளது. (1 தீமோத்தேயு 1:19) மறுபட்சத்தில், உண்மையான நம்பிக்கை நம் விசுவாசத்தைப் பலப்படுத்துகிறது.
நம்பிக்கை—விசுவாசத்திற்கு முக்கியம்
7. நம்பிக்கை எந்த விதத்தில் விசுவாசத்திற்கு முக்கியம்?
7 “விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது” என்று பைபிள் சொல்கிறது. (எபிரெயர் 11:1) எனவே, நம்பிக்கை என்பது முக்கியத்துவத்தில் விசுவாசத்துக்குக் குறைந்ததல்ல; அது விசுவாசத்தின் முக்கிய அம்சமாகும். உதாரணத்திற்கு ஆபிரகாமை எடுத்துக்கொள்வோம். அவருக்கு ஒரு வாரிசை கொடுக்கப்போவதாக யெகோவா வாக்குறுதி அளித்த சமயத்தில், மனிதர்களின் பார்வையில், அவரும் அவருடைய மனைவியான சாராளும் குழந்தையைப் பெற்றெடுக்கும் வயதைக் கடந்திருந்தார்கள். (ஆதியாகமம் 17:15-17) எனினும், ஆபிரகாம் அதற்கு எப்படிப் பிரதிபலித்தார்? ‘தான் அநேக ஜாதிகளுக்குத் தகப்பனாவதை நம்புகிறதற்கு ஏதுவில்லாதிருந்தும், அதை நம்பிக்கையோடே விசுவாசித்தார்.’ (ரோமர் 4:18) ஆம், தனக்கு வாரிசு கிடைக்கும் என கடவுள் கொடுத்திருந்த நம்பிக்கை ஆபிரகாமின் விசுவாசத்திற்கு உறுதியான ஆதாரத்தை அளித்தது. அந்த விசுவாசம், அவருடைய நம்பிக்கையைப் பிரகாசமாக்கியது, பலப்படுத்தியது. அதுமட்டுமா, ஆபிரகாமும் சாராளும் தைரியமாகத் தங்கள் வீட்டையும் சொந்தபந்தங்களையும் விட்டுப் பிரிந்து முன்பின் தெரியாத இடத்தில் தங்கள் வாழ்நாள் முழுவதும் கூடாரங்களில் குடியிருந்தார்களே!
8. உண்மையாய் சகித்திருப்பது எப்படி நம்பிக்கையைப் பலப்படுத்துகிறது?
8 யெகோவாமீது அசைக்க முடியாத நம்பிக்கை வைத்திருந்ததால் ஆபிரகாம் முழுமையாக யெகோவாவுக்குக் கீழ்ப்படிந்தார்; கடினமாய் இருந்த சமயத்திலும்கூட அத்தகைய கீழ்ப்படிதலைக் காட்டினார். (ஆதியாகமம் 22:2, 12) அதேபோல் நாமும், யெகோவாவின் சேவையில் கீழ்ப்படிதலைக் காட்டுவதன் மூலமும் சகித்திருப்பதன் மூலமும் நமக்குப் பலன் கிடைக்கும் என்பதில் உறுதியாய் இருக்கலாம். ‘சகிப்புத்தன்மை அங்கீகரிக்கப்பட்ட நிலையையும், அங்கீகரிக்கப்பட்ட நிலை நம்பிக்கையையும் உண்டாக்குகிறது, அந்த நம்பிக்கை நமக்கு ஏமாற்றத்தை அளிக்காது’ என்று பவுல் எழுதினார். (ரோமர் 5:4, 5, NW) அதனால்தான் அவர் இவ்வாறும் எழுதினார்: ‘உங்களுக்கு நம்பிக்கையின் பூரண நிச்சயமுண்டாகும்படி நீங்கள் யாவரும் முடிவுபரியந்தம் அப்படியே ஜாக்கிரதையைக் காண்பிக்க வேண்டுமென்று ஆசையாயிருக்கிறோம்.’ (எபிரெயர் 6:12) யெகோவாவுடன் உள்ள நெருங்கிய உறவு நம்பிக்கையான மனநிலையைத் தருகிறது; அந்த மனநிலை, எந்தக் கஷ்டத்தையும் தைரியமாய் எதிர்கொள்ள, சொல்லப்போனால் மகிழ்ச்சியுடன் எதிர்கொள்ள நமக்கு உதவுகிறது.
“நம்பிக்கையிலே சந்தோஷமாயிருங்கள்”
9. ‘நம்பிக்கையிலே சந்தோஷமாயிருக்க’ நாம் தவறாமல் என்ன செய்ய வேண்டும்?
9 கடவுள் கொடுத்திருக்கும் நம்பிக்கை, இந்த உலகம் கொடுக்கக்கூடிய எதைக் காட்டிலும் எக்காலத்திலும் மேம்பட்டது. “கர்த்தருக்குக் காத்திருந்து, அவருடைய வழியைக் கைக்கொள்; அப்பொழுது நீ பூமியைச் சுதந்தரித்துக்கொள்வதற்கு அவர் உன்னை உயர்த்துவார்; துன்மார்க்கர் அறுப்புண்டுபோவதை நீ காண்பாய்” என்று சங்கீதம் 37:34-ல் பைபிள் சொல்கிறது. உண்மைதான், ‘நம்பிக்கையிலே சந்தோஷமாயிருக்க’ நமக்கு நியாயமான காரணம் இருக்கிறது. (ரோமர் 12:12) எனினும், அவ்வாறு சந்தோஷமாய் இருப்பதற்கு, நம் நம்பிக்கையைக் குறித்து எப்போதும் எண்ணிப்பார்க்க வேண்டும். கடவுள் கொடுத்திருக்கும் நம்பிக்கையைக் குறித்து நீங்கள் எப்போதும் எண்ணிப்பார்க்கிறீர்களா? நீங்கள் பூங்காவன பரதீஸில் பூரண சுகத்தோடு, எந்தக் கவலையும் இல்லாமல், உங்களை நேசிக்கிற ஆட்கள் மத்தியில், முழுக்க முழுக்க திருப்தி தரும் வேலை செய்து வருவதை உங்கள் மனக்கண்ணில் காண முடிகிறதா? நமது பிரசுரங்களிலுள்ள பரதீஸ் காட்சிகளைக் குறித்து தியானித்துப் பார்க்கிறீர்களா? இப்படித் தவறாமல் எண்ணிப்பார்ப்பது வெளியே உள்ளவை பளிச்சென தெரிவதற்காகக் கண்ணாடி ஜன்னலைத் துடைத்து சுத்தப்படுத்துவதுபோல் இருக்கிறது. அதைத் துடைக்காமல் அப்படியே விட்டுவிட்டால் சீக்கிரத்தில் தூசி படிந்துவிடும், அழகான காட்சியைத் தெளிவாக பார்க்க முடியாது. பிறகு, வேறு காரியங்கள் நம் கண்களுக்கு அழகானதாய் தோன்ற ஆரம்பித்துவிடலாம். அப்படிச் சம்பவிக்க நாம் ஒருபோதும் அனுமதிக்காதிருப்போமாக!
10. பலனைப் பெற காத்திருப்பது யெகோவாவுடன் நமக்கு நல்ல உறவு இருப்பதை எப்படி வெளிக்காட்டுகிறது?
10 முக்கியமாய் யெகோவாமீது அன்பு இருப்பதாலேயே நாம் அவரைச் சேவிக்கிறோம் என்பது உண்மைதான். (மாற்கு 12:30) இருப்பினும், பலனைப் பெற நாம் ஆவலோடு காத்திருக்க வேண்டும். சொல்லப்போனால், அவ்வாறு நாம் காத்திருக்கும்படி யெகோவா எதிர்பார்க்கிறார்! எபிரெயர் 11:6 இவ்வாறு சொல்கிறது: “விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாத காரியம்; ஏனென்றால், தேவனிடத்தில் சேருகிறவன் அவர் உண்டென்றும், அவர் தம்மைத் தேடுகிறவர்களுக்குப் பலன் அளிக்கிறவரென்றும் விசுவாசிக்க வேண்டும்.” நாம் யெகோவாவை பலன் அளிக்கிறவராக கருத வேண்டுமென அவர் ஏன் எதிர்பார்க்கிறார்? ஏனெனில், அவ்வாறு கருதும்போது, நம் பரலோகத் தகப்பனைப் பற்றி நாம் நன்கு அறிந்திருப்பதைக் காட்டுகிறோம். அவர் தாராள குணம் படைத்தவர், தம் பிள்ளைகளை நேசிப்பவர். ‘எதிர்காலமும் நம்பிக்கையும்’ மட்டும் நமக்கு இல்லாதிருந்தால் நாம் எந்தளவு வருத்தப்பட்டு, எளிதில் சோர்ந்து போயிருப்போம் என்பதை எண்ணிப்பாருங்கள்.—எரேமியா 29:11, பொ.மொ.
11. ஞானமான தீர்மானத்தை எடுக்க கடவுள் கொடுத்திருந்த நம்பிக்கை மோசேக்கு எப்படி உதவியது?
11 கடவுள் கொடுத்திருந்த நம்பிக்கையில் தங்கள் கவனத்தை ஒருமுகப்படுத்திய நபர்களில் குறிப்பிடத்தக்கவர் மோசே. ‘பார்வோனுடைய குமாரத்தியின் மகனாக’ மோசே, அதிகாரத்தையும் அந்தஸ்தையும் பெற்றிருந்ததோடு எகிப்தின் செல்வம் முழுவதையும் அனுபவிக்கும் நிலையில் இருந்தார். அவர் அந்தக் காரியங்களை நாடிச் செல்வாரா அல்லது யெகோவாவைச் சேவிப்பாரா? யெகோவாவைச் சேவிப்பதையே மோசே தைரியமாகத் தேர்ந்தெடுத்தார். ஏன்? ஏனெனில், அவர் ‘இனிவரும் பலன்மேல் நோக்கமாயிருந்தார்.’ (எபிரெயர் 11:24-26) ஆம், தனக்கு யெகோவா கொடுத்திருந்த நம்பிக்கையை அவர் அலட்சியப்படுத்தவே இல்லை.
12. கிறிஸ்தவர்களின் நம்பிக்கை ஏன் தலைச்சீராவுக்கு ஒப்பிடப்படுகிறது?
12 நம்பிக்கையை தலைச்சீராவுக்கு அப்போஸ்தலன் பவுல் ஒப்பிட்டார். அடையாள அர்த்தமுள்ள அந்தத் தலைச்சீரா, நம் சிந்தையைக் காப்பதால் ஞானமான தீர்மானங்களைச் செய்யவும், முக்கிய காரியங்களுக்கு முதலிடம் கொடுக்கவும், எப்போதும் உத்தமமாய் நடக்கவும் நமக்கு உதவுகிறது. (1 தெசலோனிக்கேயர் 5:8) எல்லா சமயத்திலும் அடையாள அர்த்தத்தில் நீங்கள் தலைச்சீராவை அணிந்திருக்கிறீர்களா? அணிந்திருக்கிறீர்கள் என்றால் மோசேயையும் பவுலையும் போல, “நிலையற்ற ஐசுவரியத்தின்மேல் நம்பிக்கை வையாமலும், நாம் அனுபவிக்கிறதற்குச் சகலவித நன்மைகளையும் நமக்குச் சம்பூரணமாய்க் கொடுக்கிற ஜீவனுள்ள தேவன்மேல்” நம்பிக்கை வைப்பீர்கள். தன்னல நாட்டங்களை ஒதுக்கி தள்ளிவிட்டு, பிரபலமான போக்கைப் பின்பற்றாதிருக்க தைரியம் தேவை என்பது உண்மைதான், எனினும், அதற்காக எடுக்கும் எந்த முயற்சியும் தகுந்ததே! யெகோவாமீது நம்பிக்கையும் அன்பும் வைத்திருக்கிறவர்களுக்குக் காத்திருக்கும் ‘மெய் வாழ்வைவிட’ மட்டமான ஒன்றை நாம் ஏன் ஏற்றுக்கொள்ள வேண்டும்?—1 தீமோத்தேயு 6:17, 19, NW.
‘நான் உன்னைவிட்டு விலகுவதில்லை’
13. தம் உண்மையுள்ள ஊழியர்களுக்கு யெகோவா என்ன உறுதியை அளிக்கிறார்?
13 நாளுக்கு நாள் உலகத்தின் ‘வேதனைகள்’ அதிகரித்து வருகின்றன. அதனால், இன்றைய உலகின் மீது நம்பிக்கை வைத்திருக்கும் ஆட்கள், எதிர்காலத்தில் தாங்கள் எதிர்ப்படவிருக்கிற மோசமான காரியங்களைக் குறித்துக் கவனமாய் சிந்திக்க வேண்டும். (மத்தேயு 24:8) ஆனால், யெகோவாமீது நம்பிக்கை வைத்திருப்பவர்களுக்கு அத்தகைய பயமேதும் இல்லை. அவர்கள் எப்போதும் ‘விக்கினமின்றி [அதாவது, பாதுகாப்போடு] வாசம்பண்ணி, ஆபத்திற்குப் பயப்படாமல் அமைதியாயிருப்பார்கள்.’ (நீதிமொழிகள் 1:33) ஆம், இந்த உலகின்மீது அவர்கள் நம்பிக்கை வைக்காததால், சந்தோஷமாய் பவுலின் பின்வரும் புத்திமதிக்குச் செவிசாய்க்கிறார்கள்: “நீங்கள் பண ஆசையில்லாதவர்களாய் நடந்து, உங்களுக்கு இருக்கிறவைகள் போதுமென்று எண்ணுங்கள்; நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை என்று அவர் சொல்லியிருக்கிறாரே.”—எபிரெயர் 13:5.
14. தங்கள் பொருள் சம்பந்தமான தேவைகளைக் குறித்து கிறிஸ்தவர்கள் ஏன் மட்டுக்குமீறி கவலைப்படத் தேவையில்லை?
14 “உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை” என்ற அழுத்தந்திருத்தமான வார்த்தைகள், கடவுள் நம்மை கவனித்துக்கொள்வார் என்பதைத் தெளிவாகக் காட்டுகின்றன. கடவுள் நம்மீது அன்போடும் கரிசனையோடும் இருக்கிறார் என்பதைக் குறித்து இயேசுவும் உறுதி அளித்தார்; அவர் இவ்வாறு சொன்னார்: ‘முதலாவது தேவனுடைய, ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் [வாழ்க்கையின் அடிப்படைத் தேவைகள்] உங்களுக்குக் கூடக் கொடுக்கப்படும். ஆகையால், நாளைக்காகக் கவலைப்படாதிருங்கள்; நாளையத்தினம் தன்னுடையவைகளுக்காகக் கவலைப்படும்.’ (மத்தேயு 6:33, 34) தம்முடைய ராஜ்யத்திற்காக வைராக்கியம் காட்டுவதும், அதேசமயத்தில் நம் சரீரத் தேவைகளை நிறைவேற்றுவதற்கான முழு பொறுப்பை ஏற்பதும் எவ்வளவு கஷ்டம் என்பதை யெகோவா அறிந்திருக்கிறார். எனவே, நம் தேவைகளைக் கவனித்துக்கொள்ள அவர் திறமையுள்ளவராகவும் விருப்பமுள்ளவராகவும் இருக்கிறார் என்பதில் நாம் முழு நம்பிக்கை வைப்போமாக.—மத்தேயு 6:25-32; 11:28-30.
15. கிறிஸ்தவர்கள் எப்படி ‘கண்ணைத் தெளிவாக’ வைத்திருக்க முடியும்?
15 ‘கண்ணைத் தெளிவாக’ வைத்துக்கொள்ளும்போது நாம் யெகோவாவை சார்ந்திருப்பதைக் காட்டுகிறோம். (மத்தேயு 6:22, 23) கண்ணைத் தெளிவாக வைத்திருப்பது, நேர்மையானவர்களாகவும் உள்ளத்தில் தூய்மையானவர்களாகவும் பேராசையும் தன்னல இலட்சியமும் அற்றவர்களாகவும் இருப்பதைக் குறிக்கிறது. தெளிவான கண்ணுடன் இருப்பது, ஏழ்மைமிக்க நிலையில் வாழ்வதை அல்லது நம் சரீரத் தேவைகளை நிறைவேற்றாமல் அலட்சியப்படுத்துவதை அர்த்தப்படுத்துவதில்லை. மாறாக, யெகோவாவின் சேவைக்கு எப்போதும் முதலிடம் கொடுத்து, ‘தெளிந்த புத்தியுடன்’ இருப்பதை அர்த்தப்படுத்துகிறது.—2 தீமோத்தேயு 1:7.
16. கண்ணைத் தெளிவாக வைத்துக்கொள்ள விசுவாசமும் தைரியமும் ஏன் தேவை?
16 கண்ணைத் தெளிவாக வைத்திருப்பதற்கு விசுவாசமும் தைரியமும் தேவை. உதாரணத்திற்கு, கிறிஸ்தவ கூட்டங்கள் நடைபெறும் நேரத்தில் வேலை செய்யும்படி உங்கள் முதலாளி எப்போதும் வற்புறுத்துகிறார் என வைத்துக்கொள்ளுங்கள். அப்போது, கிறிஸ்தவராக நீங்கள் தைரியமாக ஆன்மீக காரியங்களுக்கு முதலிடம் கொடுப்பீர்களா? யெகோவா தம் ஊழியர்களைக் கவனித்துக்கொள்வதாகக் கொடுத்திருக்கும் வாக்குறுதியை நிறைவேற்றுவாரா என ஒருவர் சந்தேகப்பட தொடங்கினால், சாத்தான் தொடர்ந்து அழுத்தத்தைக் கொடுக்கக்கூடும்; இதனால் அவர் கூட்டங்களுக்குப் போவதை அடியோடு நிறுத்திவிடலாம். ஆம், நமக்கு விசுவாசம் இல்லாவிட்டால், சாத்தான் நம்மை ஆட்டிவைக்க ஆரம்பித்துவிடுவான்; அப்போது யெகோவா அல்ல, சாத்தானே நாம் எதற்கு முதலிடம் கொடுக்க வேண்டுமென்பதைத் தீர்மானிப்பான். அது எப்பேர்ப்பட்ட அவலநிலை!—2 கொரிந்தியர் 13:5.
‘நம்பிக்கையோடு யெகோவாவுக்குக் காத்திருங்கள்’
17. யெகோவாவை நம்பியிருக்கிறவர்கள் இப்போதுகூட எப்படி ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறார்கள்?
17 நம்பிக்கையோடு யெகோவாவுக்குக் காத்திருக்கிறவர்கள் ஒருபோதும் ஏமாற்றமடைய மாட்டார்கள் என வேதவசனங்கள் திரும்பத் திரும்ப வலியுறுத்துகின்றன. (நீதிமொழிகள் 3:5, 6; எரேமியா 17:7) சிலசமயங்களில், தங்களிடமுள்ள கொஞ்சநஞ்சப் பொருள்களுடன் அவர்கள் திருப்தியாய் இருக்க வேண்டுமென்பது உண்மைதான்; ஆனால், எதிர்காலத்தில் கிடைக்கவிருக்கும் அபரிமிதமான ஆசீர்வாதங்களுடன் ஒப்பிடும்போது இதைச் சிறிய தியாகமாகவே அவர்கள் கருதுகிறார்கள். இவ்வாறு, ‘நம்பிக்கையோடு யெகோவாவுக்குக் காத்திருப்பதை’ தங்கள் செயல்களில் காட்டுகிறார்கள்; தம்மை உத்தமமாய் பின்பற்றுகிறவர்களின் நியாயமான ஆசைகள் அனைத்தையும் நிச்சயம் அவர் நிறைவேற்றுவார் என்பதில் முழு உறுதியோடு இருக்கிறார்கள். (சங்கீதம் 37:4, 34) எனவே, இப்போதும்கூட அவர்கள் உண்மையிலேயே சந்தோஷமாய் இருக்கிறார்கள். “நல்லவர்கள் நம்புகிறவை மகிழ்ச்சியைக் கொண்டுவரும். கெட்டவர்கள் நம்புகிறவையோ அழிவைக் கொண்டுவரும்.”—நீதிமொழிகள் 10:28, ஈஸி டு ரீட் வர்ஷன்.
18, 19. (அ) யெகோவா நமக்கு அன்புடன் என்ன உறுதி அளித்திருக்கிறார்? (ஆ) யெகோவாவை நாம் எப்படி ‘வலதுகை பக்கம்’ வைத்துக்கொள்ள முடியும்?
18 ஒரு சிறுவன் தன் அப்பாவின் கையைப் பிடித்துக்கொண்டு நடக்கையில் பாதுகாப்பாய் உணருகிறான். நம் பரலோகத் தகப்பனோடு சேர்ந்து நடக்கும்போது நாமும் அப்படியே உணருகிறோம். இஸ்ரவேலரிடம் யெகோவா இவ்வாறு சொன்னார்: “நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன்; . . . நான் . . . உனக்குச் சகாயம்பண்ணுவேன்; . . . உன் தேவனாயிருக்கிற கர்த்தராகிய நான் உன் வலதுகையைப் பிடித்து: பயப்படாதே, நான் உனக்குத் துணைநிற்கிறேன் என்று சொல்லுகிறேன்.”—ஏசாயா 41:10, 13.
19 யெகோவா ஒருவருடைய கையைப் பிடித்துக்கொண்டு நடப்பது எப்பேர்ப்பட்ட அன்பான காட்சியை கண்முன் நிறுத்துகிறது! தாவீது இவ்வாறு எழுதினார்: “கர்த்தரை எப்பொழுதும் எனக்கு முன்பாக வைத்திருக்கிறேன்; அவர் என் வலதுபாரிசத்தில் [அதாவது, வலதுகை பக்கம்] இருக்கிறபடியால் நான் அசைக்கப்படுவதில்லை.” (சங்கீதம் 16:8) யெகோவாவை நாம் எப்படி ‘வலதுகை பக்கம்’ வைத்துக்கொள்ள முடியும்? குறைந்தது இரண்டு விதத்திலாவது வைத்துக்கொள்ள முடியும். முதலாவதாக, வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் அவருடைய வார்த்தை நம்மை வழிநடத்துவதற்கு அனுமதிக்க வேண்டும்; இரண்டாவதாக, யெகோவா நமக்கு முன் வைத்திருக்கும் அருமையான பரிசிடம் நம் கவனத்தை ஒருமுகப்படுத்த வேண்டும். சங்கீதக்காரனாகிய ஆசாப் இவ்வாறு பாடினார்: “நான் எப்பொழுதும் உம்மோடிருக்கிறேன்; என் வலதுகையைப் பிடித்துத் தாங்குகிறீர். உம்முடைய ஆலோசனையின்படி நீர் என்னை நடத்தி, முடிவிலே என்னை மகிமையில் ஏற்றுக்கொள்வீர்.” (சங்கீதம் 73:23, 24) இத்தகைய உறுதி அளிக்கப்பட்டிருப்பதால், உண்மையிலேயே நாம் எதிர்காலத்தை நம்பிக்கையுடன் எதிர்கொள்ள முடியும்.
‘உங்கள் மீட்பு சமீபமாயிருக்கிறது’
20, 21. யெகோவாமீது நம்பிக்கை வைத்திருக்கிறவர்களுக்கு எப்படிப்பட்ட எதிர்காலம் காத்திருக்கிறது?
20 ஒவ்வொரு நாளும் கடந்துசெல்லச் செல்ல, யெகோவாவை நம் வலதுகை பக்கம் வைத்துக்கொள்வது அதிக அவசரமானதாய் ஆகிவருகிறது. சீக்கிரத்திலேயே பொய் மதம் அழிக்கப்படும், அதன் பிறகு சாத்தானின் உலகம் இதுவரை அனுபவித்திராத உபத்திரவத்தை எதிர்ப்படும். (மத்தேயு 24:21) விசுவாசமற்ற மனிதர் அனைவரையும் பயம் சூழ்ந்துகொள்ளும். எனினும், குழப்பம் நிறைந்த அச்சமயத்தில், யெகோவாவின் தைரியமிக்க ஊழியர்கள் தங்கள் நம்பிக்கையின் நிமித்தம் சந்தோஷப்படுவார்கள்! இயேசு இவ்வாறு சொன்னார்: “இவைகள் சம்பவிக்கத் தொடங்கும்போது, உங்கள் மீட்பு சமீபமாயிருப்பதால், நீங்கள் நிமிர்ந்துபார்த்து, உங்கள் தலைகளை உயர்த்துங்கள்.”—லூக்கா 21:28.
21 எனவே, கடவுள் கொடுத்திருக்கும் நம்பிக்கையில் நாம் சந்தோஷப்படுவோமாக; நம் கவனத்தைத் திசைதிருப்ப சாத்தான் சாமர்த்தியமாக முயற்சி செய்யும்போது நாம் ஏமாந்துவிடாதிருப்போமாக, சோதனையில் சிக்கிக்கொள்ளாதிருப்போமாக. அதே சமயத்தில், விசுவாசத்திலும், அன்பிலும், தேவபயத்திலும் மேன்மேலும் வளர பெரும் முயற்சி எடுப்போமாக. இவ்வாறு செய்யும்போது, எல்லா சமயத்திலும் யெகோவாவுக்குக் கீழ்ப்படியவும் பிசாசை எதிர்க்கவும் நாம் தைரியத்தைப் பெற்றிருப்போம். (யாக்கோபு 4:7, 8) ஆம், “கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களே, நீங்களெல்லாரும் திடமனதாயிருங்கள், அவர் உங்கள் இருதயத்தை ஸ்திரப்படுத்துவார்.”—சங்கீதம் 31:24.
[அடிக்குறிப்பு]
a கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தில் “நம்பிக்கை” என்ற வார்த்தை அடிக்கடி அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்கள் பரலோகத்தில் பெறவிருக்கும் பரிசைக் குறித்தாலும், இந்தக் கட்டுரையில் நம்பிக்கை என்ற வார்த்தை பொதுவான கருத்தில் சிந்திக்கப்படுகிறது.
நீங்கள் எப்படிப் பதில் அளிப்பீர்கள்?
• இயேசுவுக்கு இருந்த நம்பிக்கை எந்த விதத்தில் அவருக்குத் தைரியத்தைத் தந்தது?
• விசுவாசமும் நம்பிக்கையும் எப்படி ஒன்றுக்கொன்று தொடர்புடையது?
• ஒரு கிறிஸ்தவருக்கு விசுவாசமும் நம்பிக்கையும் வாழ்க்கையில் முக்கிய காரியங்களுக்கு முதலிடம் கொடுக்க எப்படித் தைரியத்தை அளிக்கிறது?
• ‘நம்பிக்கையோடு யெகோவாவுக்குக் காத்திருக்கிறவர்கள்’ ஏன் எதிர்காலத்தைக் குறித்து நம்பிக்கையாய் இருக்கிறார்கள்?
[பக்கம் 28-ன் படம்]
நீங்கள் இளைஞராக இருந்தாலும் சரி, பெரியவராக இருந்தாலும் சரி, பூங்காவனப் பரதீஸில் இருப்பதை மனக்கண்ணில் பார்க்க முடிகிறதா?