பைபிளின் முக்கிய குறிப்புகள் சங்கீதம் 1 முதல் 41
சங்கீதக்காரன் யெகோவாவின் துதியைப் பாடுகிறான்
“துதிகள்.” சங்கீதங்கள் என்ற புத்தகத்தினுடைய எபிரெய பெயரின் அர்த்தம் இதுவே. ஆ அது எவ்வளவு பொருத்தமாயிருக்கிறது! அந்த முழு புத்தகமுமே யெகோவாவுக்கு செலுத்தும் துதியின் ஒரு நீண்ட முழக்கமாக இருக்கிறது. யெகோவாவின் குண இயல்புகளையும் வல்லமையான செயல்களையும் சங்கீதம் விவரிக்கிறது. அவைகளில் தீர்க்கதரிசனங்கள் அடங்கியிருக்கின்றன. அதோடு பரிசுத்த ஆவியின் ஏவுதலால் எழுதிய எழுத்தாளர்கள் துன்புறுத்தல்களையும் நம்பிக்கை துரோக செயலையும் சோர்வூட்டும் காரியங்களையும் மேலும் மனசாட்சியின் குத்தல்களையும் எதிர்ப்பட்டபோது எப்படி உணர்ந்தார்கள் என்பதையும் அது நமக்கு சொல்லுகிறது. இதற்கொப்பான பரீட்சைகளை அனுபவிக்கும் அநேக கிறிஸ்தவர்கள் சங்கீதங்களின் வார்த்தைகளிலிருந்து ஆறுதலை பெற்றிருக்கின்றனர்.
சங்கீத புத்தகம் ஐந்து பகுதிகளாக பகுக்கப்பட்டிருக்கிறது. இங்கே நாங்கள் அதன் முதல் பகுதியை, சங்கீதம் 1 முதல் 41-ஐ ஆராய்கிறோம்.
யெகோவாவின் நோக்கத்திற்கு கீழ்ப்படிதல்
சங்கீதம் 1-14-ஐ தயவுசெய்து வாசியுங்கள்: சங்கீதங்களின் இந்த தொகுதி சங்கீத புத்தகத்தின் சில பிரதான பொருளடக்கங்களை அறிமுகப்படுத்துகிறது. சட்டத்தின் [நியாயபிரமாணத்தின்] முக்கியத்துவம் மேசியானிய ராஜாவின் வருகை, கடுமையான அழுத்தங்களின் மத்தியில் உதவிக்காக விண்ணப்பித்தல், கூடுதலாக துன்மார்க்கர் தற்காலிகமாக தலைதூக்கின போதிலும் நீதிமான்கள் ஆசீர்வதிக்கப்படுவார்கள் என்பதை நாம் கற்றுக் கொள்ளுகிறோம்.
◆ 2:1—என்ன “விருதாக் காரியத்தை” ஜனங்கள் (புறதேசத்தினர்) “சிந்திக்கின்றனர்”?
யெகோவாவினால் அபிஷேகம் பண்ணப்பட்டவரை ஏற்பதற்கு மாறாக, தங்களுடைய சொந்த அதிகாரத்தை நிரந்தரமானதாக ஆக்குவதற்குரிய வழிகளை தேசங்கள் தொடர்ந்து “சிந்தித்து” (அல்லது தியானித்து) கொண்டிருந்தன. யெகோவாவின் அபிஷேகம் பண்ணப்பட்ட அரசர் இயேசு கிறிஸ்துவை கொல்லுவதற்கு ரோமர்களும் யூதேய அதிகாரிகளும் முயற்சித்துக் கொண்டிருந்தபோது இந்த வார்த்தைகள் பொ.ச. முதல் நூற்றாண்டில் பொருத்தத்தை கொண்டிருந்தன. (அப்போஸ்தலர் 4:26-28) என்றபோதிலும் 1914-ல் எல்லா தேசங்களும் கடவுளால் அரச பதவியில் அமர்த்தப்பட்டவரை ஏற்க மறுத்து தங்களுடைய சொந்த அரசுரிமையை விருத்தி செய்வதற்கு முயன்றது முதற்கொண்டு இந்த தீர்க்கதரிசனம் பெரிய அளவில் நிறைவேறியிருக்கிறது.
◆ 2:12—“குமாரனை முத்தஞ்செய்யுங்கள்” என்ற கட்டளை ஏன்?
பைபிள் காலங்களில் முத்தமிடுதல் நட்புரவின் வெளிக்காட்டாக இருந்தது. மேலும் விருந்தாளிகளை ஒருவருடைய வீட்டின் உபசரிப்பிற்குள் வரவேற்பதற்காகவும் பயன்படுத்தப்பட்டது. இந்த வசனத்தில் தம்முடைய அபிஷேகம் பண்ணப்பட்ட குமாரனை தேசங்கள் முத்தமிடும்படி அல்லது வரவேற்கும்படி யெகோவா தேவன் கட்டளையிடுகிறார்.—சங்கீதம் 2:2, 6-8.
◆ 9:12—யெகோவா ஏன் இரத்தப்பழிகளை குறித்து விசாரனை செய்கிறார்?
நியாயத்தீர்ப்பில் இருக்கையில் அமர்ந்திருக்கும் நியாயாதிபதியை போன்று தம்முடைய குற்றமற்ற மக்களின் இரத்தத்தை சிந்தினதின் காரணமாக இரத்தப்பழியுள்ளவர்களாயிருக்கும் ஆட்களை யெகோவா தேடுகிறார். (ஆதியாகமம் 9:5, 6; லூக்கா 11:49, 50) அவர் குற்றவாளிகளையும் தண்டிக்கிறார். அவருடைய தண்டனை கண்மூடித்தனமானதாயில்லை. சங்கீதக்காரனாகிய தாவீது நமக்கு உறுதியளிப்பதாவது: “சிறுமைப்பட்டவர்களுடைய கூப்பிடுதலை மறவார்.”—2 பேதுரு 2:9-ஐ ஒப்பிட்டுப் பார்க்கவும்.
◆ 11:3—நிர்மூலமாக்கப்படும் அஸ்திபாரங்கள் என்ன?
நீதி, சட்டம் மற்றும் ஒழுங்கு ஆகியவையே அந்த அஸ்திபாரங்களாக இருக்கின்றன.—அதன் மீதே சமுதாயம் ஊன்றி நிற்கிறது. எந்த நியாயத்திற்கும் வழியின்றி சமுதாய ஒழுங்கிலே ஒரு சீர்க்குலைவு ஏற்படுகையில் தெய்வ பயமுள்ள ஒரு ஆள் என்ன செய்யவேண்டும்? யெகோவாவின் பேரில் சார்ந்திருக்க வேண்டும். அவர் தம்முடைய பரலோக சிங்காசனத்திலிருக்கிறார். நடந்து கொண்டிருக்கும் அனைத்தையும் பார்க்கிறார். நம்மை கைவிடார்.
நமக்கு பாடம்: சங்கீதம் 4:5 “நீதியின் பலிகளை செலுத்தும்படி” தெய்வ பயமுள்ள ஆட்களை ஊக்குவிக்கிறது. தாவீதின் நாட்களில் இஸ்ரவேலர்கள் யெகோவாவின் பலிபீடத்தின் மீது பலிகளை செலுத்த வேண்டியவர்களாக இருந்தனர். ஆனால் அவர்கள் நல்ல உள்நோக்கத்தையும் உண்மையான மனம் வருந்துதலையும் கொண்டிருக்க வேண்டியவர்களாக இருந்தனர். (ஏசாயா 1:11-17) கிறிஸ்தவர்கள் தங்கள் ஆவிக்குரிய பலிகளை செலுத்தும்போது அவர்களும்கூட சரியான உள்நோக்கத்தை கொண்டிருக்க வேண்டியது அவசியமாக இருக்கிறது. மேலும் யெகோவாவின் நீதியான தராதரங்களுக்கிசைய வாழவேண்டியதாக இருக்கிறது.—எபிரெயர் 13:4, 5, 15, 16; 1 பேதுரு 2:1, 5.
நிகரற்ற கடவுள்
சங்கீதம் 15 முதல் 24 வரை வாசியுங்கள். இந்த சங்கீத தொகுதி யெகோவாவுக்கு செலுத்தக்கூடிய ஏராளமான துதியின் வார்த்தைகளை கொண்டிருக்கிறது. அவர் தமது ஜனங்களின் பாதுகாவலர் (18), சிருஷ்டிகர் மற்றும் சட்டத்திட்டங்களை கொடுப்பவர் (19), இரட்சகர் (20), தம்மால் தெரிந்து கொள்ளப்பட்ட அரசனை பாதுகாப்பவர் (21), பெரிய மேய்ப்பர் (23) மற்றும் மகிமையுள்ள ராஜா (24).
◆ 16:10—இங்கே சொல்லப்படும் “பரிசுத்தவான்” யார்?
சில பைபிள் அறிஞர்கள் இந்த வசனத்தை பொதுவாக எல்லா உண்மையுள்ள ஆட்களுக்கும் பொருந்துகின்றனர், சில எபிரெய கையெழுத்து பிரதிகளில் இந்த “பரிசுத்தவான்” என்ற வார்த்தையானது பன்மையிலிருக்கிறது என்ற உண்மையை ஆதாரமாக காட்டுகின்றனர். என்றபோதிலும் இந்த வசனம கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தில் மேற்கோளாக எடுத்துக்கூறப்படும்போது அந்த வார்த்தை ஒருமையிலிருக்கிறது. வெறும் ஒரே ஒரு “பரிசுத்தவானையே” சுட்டிக் காட்டுகிறது. முதல் சம்பவத்தில் அது ஒருவேளை தாவீதை தானே குறிக்கக்கூடும். ஆனால் தீர்க்கதரிசன ரீதியில் பேதுரு மற்றும் பவுல் ஆகிய இருவரும் இந்த வசனத்தை இயேசுவுக்கு பொருத்துகின்றனர்.—அப்போஸ்தலர் 2:25-32; 13:35-37.
◆ 21:3—அந்த [புடமிடப்பட்ட, NW] “பொற்கிரீடம்” என்ன?
ஒருவேளை அது சொல்லர்த்தமான கிரீடமாகவும் இருக்கலாம். அதாவது ராஜாவின் [மால்காம் என்ற விக்கிரகத்தின், (NW)] தலையின் மேலிருந்து அகற்றப்பட்டதாக இருக்கலாம். (2 சாமுவேல் 12:29, 30) அல்லது அந்த கிரீடம் வெறுமென தாவீதின் வெற்றி அவனுடைய மகிமையான ராஜரீகத்திற்கு கூடுதலான அலங்காரத்தை கூட்டியது என்ற உண்மைக்கு அடையாளமாகவும் இருக்கலாம். என்றபோதிலும் தீர்க்கதரிசன நடையில் இந்த சங்கீதம் எவ்வாறு யெகோவா 1914-ல் அரசுரிமையின் கிரீடத்தை இயேசுவுக்கு கொடுத்தார் என்பதை சுட்டிக்காட்டுகிறது. அந்த “புடமிடப்பட்ட பொற்கிரீடம்” அவருடைய அரசாட்சி அதிக உன்னத தரமுடையது என்ற உண்மையை சுட்டிக் காட்டுகிறது.
◆ 22:1—தேவன் தாவீதை கைவிட்டுவிட்டாரா?
இல்லை, ஆனால் தாவீது தன் எதிரிகளிடமிருந்து வந்த கடுமையான அழுத்தங்களின் கீழிருந்தபோது அது அவ்வாறு தோன்றியது. என்றபோதிலும் தன்னுடைய கொடிய நெருக்கடிகளின்போது தாவீதின் மனித பிரதிபலிப்பு அவிசுவாசத்தை எதிரொலிக்கவில்லை, ஏனெனில் விடுதலைக்காக அவன் திடநம்பிக்கையோடு தொடர்ந்து ஜெபிக்கிறான். (வசனஙகள் 16-19) அக்கறைக்குரிய காரியமென்னவெனில் கழுமரத்தில் மரிக்கும் முன்பு இயேசு “ஏன்?” என்று கேட்பதன் மூலம் இந்த சங்கீதத்திலிருந்து குறிப்பிட்டார். தான் அச்சமயத்தில் அனுபவித்துக் கொண்டிருந்த மிகக்கடுமையான அழுத்தத்தை வாய்விட்டு சொல்லிக் கொண்டிருந்தார். அதே சமயத்தில் அவரை மரண தண்டனைக்குட்படுவதற்கு வழிநடத்தியிருக்கக்கூடிய பொய் குற்றச் சாட்டுகளுக்கு தாம் பழிபாவமற்றவர் என்பதை வெளிப்படுத்திக் கொண்டிருந்தார்.
நமக்கு பாடம்: சங்கீதம் 22:22-ஐ அப்போஸ்தலனாகிய பவுல் எடுத்துரைத்து, யெகோவாவின் பெயரை அறிவிப்பதில் இயேசு கிறிஸ்து தம்முடைய அபிஷேகம் செய்யப்பட்ட சகோதரர் மத்தியில் தலைமை தாங்கும் அந்த விதத்திற்கு அதை பொருத்திக் காண்பிக்கிறார். (எபிரெயர் 2:11, 12) சங்கீதம் 22:27-ம் வசனம் யெகோவாவை துதிப்பதில் “ஜாதிகளுடைய சந்ததிகளெல்லாம்” யெகோவாவின் ஜனங்களோடு சேர்ந்து கொள்ளும் ஒரு காலத்தைப் பற்றி பேசுகிறது. இன்று இயேசுவின் சகோதரர்களோடுகூட சேர்ந்து மிகத் திரளான ஒரு சர்வதேச கூட்டம் கடவுளை வணங்குகிறது. (வெளிப்படுத்துதல் 7:9) ஒழுங்குபடுத்தியமைக்கப்பட்டிருக்கும் இந்த தெய்வீக ஏற்பாட்டிற்கு நாம் நெருங்கி ஒத்துழைக்க வேண்டும்.
யெகோவாவின் மகா வல்லமை
சங்கீதம் 25 முதல் 34-ஐ வாசிக்கவும். சங்கீதம் 25 மற்றும் 26-ல் தாவீது உத்தமத்திலே நடப்பதற்குரிய தன் விருப்பத்தை தெரியப்படுத்துகிறான். அதன் பின்பு அங்கே யெகோவாவின் பேரிலுள்ள மனஉறுதியின் வார்த்தைகள் பின்தொடருகின்றன. மேலும் சங்கீதம் 33-ல் யெகோவா தேவனுடைய வல்லமையின் ஒரு மகத்துவமான விவரிப்பு காணப்படுகிறது.
◆ 28:8—யெகோவாவின் “அபிஷேகம் பண்ணப்பட்டவர்” யார்?
இந்த வசனத்தில் அபிஷேகம் பண்ணப்பட்டவன் என்பது யெகோவாவினால் தெரிந்து கொள்ளப்பட்ட ஜனங்களாகும். இது முன்வரியில் “யெகோவா அவர்களுடைய [தம் ஜனங்களுடைய] பெலன்” என்ற வார்த்தையிலிருந்து காணப்படுகிறது. இந்த வார்த்தைகள் ஆபகூக் 3:13-ல் உள்ளவற்றிற்கு ஒப்பான தீர்க்கதரிசன முக்கியத்துவத்தை கொண்டிருக்கின்றன. அர்மகெதோன் போரில் தம்முடைய அபிஷேகம் பண்ணப்பட்ட மீதியானோரை யெகோவா இரட்சிக்கும் காரியத்தை சுட்டிக் காட்டுகின்றன.
◆ 29:5, 6—யெகோவாவின் சத்தம் எப்படி கேதுரு மரங்களை முறிக்கிறது?
இந்த சங்கீதத்தில் யெகோவாவின் சக்தியை இடிமுழக்கமுள்ள அவருடைய சப்தத்திற்கு ஒப்பிடுவதன் மூலம் உயிர் சித்திரமாக வருணிக்கப்பட்டிருக்கிறது. லீபனோனின் வடக்கேயிருந்து தெற்கிலுள்ள பாலைவன பிரதேசங்கள் வழியாக புயற்காற்று பயணஞ் செய்கிறது. அது கடந்து செல்லுகையில் பேரச்சத்தை உருவாக்குகிறது. (வசனம் 9-ல் பிற்பகுதி) அதன் காற்றுகள் லீபனோனின் கேதுருக்களை குலுங்கப் பண்ணுகிறது. “காண்டா மிருக குட்டிகளைப் போல துள்ளப் பண்ணுகிறது.” அதன் மின்னல்கள் சில மரங்களை தாக்கி “அவைகளை முறித்து” வீழ்த்துகிறது. அதே விதமாகவே புயற்காற்றுகள் வனாந்தரத்தை அதிரப்பண்ணுகிறது! (வசனம் 8) வனாந்தரத்தின் மணல்களை சுழற்றி சுழற்றி அடிப்பதானது அவை வேதனையில் துள்ளுவதை போன்று தோன்றுகிறது.
◆ 33:6—யெகோவாவுடைய வாயின் சுவாசம் (ஆவி, NW) என்ன?
இங்கே பேசப்படும் ஆவி அல்லது சுவாசம் யெகோவாவின் பரிசுத்த ஆவியை அல்லது கிரியை நடப்பிக்கும் சக்தியை குறிக்கிறது. ஒரே சமயத்தில் நம்முடைய வாயிலிருந்து வார்த்தையும் சுவாசமும் எப்படி வெளிவருகிறதோ அவ்வாறே யெகோவாவின் வார்த்தை அல்லது கட்டளையானது, அவருடைய சுவாசம் அல்லது ஆவியுடன் இணைத்து காட்டப்படுகிறது. சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள்—அதாவது கண்ணுக்கு புலப்படக்கூடிய வானமண்டல உருவகமான சேனைகள் அனைத்தையும்—சிருஷ்டிக்கையில் தேவன் தம்முடைய பரிசுத்த ஆவியை பயன்படுத்தினார்.—ஆதியாகமம் 1:1, 2-ஐ ஒப்பிட்டுப் பார்க்கவும்.
நமக்கு பாடம்: சங்கீதம் 26:5-ல் பொல்லாதவர்களின் கூட்டத்தை பகைக்கிறேன் என்று தாவீது சொன்னான். அதே விதமாகவே யெகோவாவின் சாட்சிகள் இன்று பொல்லாதவர்களோடு கூட்டுரவை தவிர்க்கின்றனர். (1 கொரிந்தியர் 15:33) தாவீது கடவுளுடைய வீட்டிற்கு மிகுந்த ஆர்வம் காட்டினது போலவே இந்த உண்மை கிறிஸ்தவர்கள் யெகோவாவின் அமைப்பில் ஒருவரோடொருவர் கூட்டுறவு கொள்ளுவதில் ஆனந்தமடைகின்றன.—சங்கீதம் 26:6-8; 122:1.
“யெகோவா ஸ்தோத்தரிக்கப்படத்தக்கவர்”
சங்கீதம் 35 முதல் 41 வரை வாசியுங்கள். இந்த தொகுப்பில் மேலெழுந்து நிற்பது சங்கீதம் 36. யெகோவாவை ஜீவ ஊற்றாக அடையாளங் காட்டுகிறது, மற்றும் சங்கீதம் 37, காரியங்களை கற்றுக் கொள்ளும் மனப்போக்குள்ள ஆட்களுக்கு கிடைக்கும் இறுதியான பலன்களை குறித்து நமக்கு உறுதியளிக்கிறது, சங்கீதம் 40-ம்கூட விசேஷமான கவனத்திற்குரியது. இயேசு கிறிஸ்துவுகுரியதான தீர்க்கதரிசன வார்த்தைகளை கொண்டிருக்கிறது.
◆ 35:19—தாவீதின் சத்துருக்கள் ஏன் “கண் சிமிட்டுவார்கள்”?
எபிரெய வாக்கியம் சொல்லர்த்தமாகவே அவர்களை “பொய்மையிலுள்ள என் சத்துருக்கள்” என்று அழைக்கிறது. அதாவது அவர்களுடைய பகைமை தீய உள்நோக்கத்தினால் உற்பத்தியான ஒன்று அவர்களுடைய பகைமைக் கேதுவாய் தாவீது எதையும் செய்யவில்லை. எனவே அவர்கள் அவன் மீது சந்தோஷிப்பதற்கு அல்லது களிக்கூறுவதற்கு எந்த சந்தர்ப்பமுமில்லாதிருக்கும்படிக்கு அவன் ஜெபித்தான். (வசனம் 19எ) பின்பு அவனுடைய வன்ம நோக்குள்ள சத்துருக்கள் “கண் சிமிட்டுவதற்கு” எந்த காரணமுமிராதபடிக்கு விண்ணப்பித்தான். ஏனெனில் சொல்லர்த்தமான அந்த “கண் சிமிட்டுதலானது தங்களுடைய பொல்லாத சதி திட்டங்களினால் கிடைத்த வெற்றியின் பேரில் அக மகிழ்ந்திருப்பதற்கு அத்தாட்சியளிப்பதாயிருக்கும். (நீதிமொழிகள் 10:10; 16:29, 30) இயேசு இந்த வசனத்தை எடுத்துரைத்து தன்னை பகைத்தவர்களுக்கு அதை பொருத்தினார்.—யோவான் 15:24, 25.
◆ 36:3—இந்த துன்மார்க்கருக்கு ஒரு காலத்தில் புத்தி [நுண்ணறிவு, NW] இருந்ததா?
இதன் கருத்து என்னவெனில் இப்படிப்பட்ட ஒரு ஆளின் நடத்தையில் ஒரு மாற்றம் சம்பவித்திருக்கிறது என்பதே. மேலும் அவன் ஒரு காலத்தில் தன்னை என்னவாக உரிமை பாராட்டிக் கொண்டிருந்தானோ அப்படிப்பட்டவனாக இனிமேலும் இல்லை, ஒருவேளை அவன் ஒரு காலத்தில் ஞானமுள்ளவனாக நடந்திருக்கக்கூடும். நல்ல காரியங்களை செய்திருக்கக்கூடும். ஆனால் அவன் அதைவிட்டு விசுவாச துரோகியாக ஆகிவிட்டான். ஞானமுள்ள நடத்தையை விட்டுவிட்டு தாவீதுக்கு பகைமையை காண்பித்தவர்களில் ராஜாவாகிய சவுலும் ஒருவன். (1 சாமுவேல், அதிகாரம் 18) சங்கீதம் 36-ல் சவுலை மனதில் கொண்டே தாவீது இந்த குறிப்பை சொல்லியிருக்கக்கூடும் என்று சில அறிஞர்கள் உணருகின்றனர்.
◆ 40:6—என் செவிகளை திறந்தீர் என்பதன் அர்த்தமென்ன?
தாவீதின் காதுகள் தெய்வீக வழிநடத்துதல்களுக்கு இணக்கமுள்ளதாயிருக்கும்படி யெகோவா செய்தார் என்பதை இது குறிக்கக்கூடும், அல்லது அவருடைய கட்டளைகளை தாவீது கேட்கும் விதத்தில் காதுகளை யெகோவா உண்டாக்கினார் என்பதையும் குறிக்கக்கூடும். ஆர்வத்திற்குரிய காரியமென்னவெனில் செப்டுவஜின்ட் மொழிப்பெயர்ப்பில் இந்த வார்த்தைகள்: “நீர் எனக்கு ஒரு சரீரத்தை [உடலை] ஆயத்தப்படுத்தினீர்” என்று குறிப்பிடுகிறது. இந்த மொழிபெயர்ப்பின் ஊற்றுமூலம் எதுவாகயிருப்பினும் எபிரெயுவிலுள்ள அதே அடிப்படை கருத்தையே அது தாங்கியிருக்கிறது. அதாவது அது கீழ்ப்படிதலுக்கான அவசியத்தை வலியுறுத்திக் காண்பிக்கிறது. (1 சாமுவேல் 15:22; ஓசியா 6:6-ஐ ஒப்பிட்டுப் பார்க்கவும்) பவுல் இந்த வசனத்தை இயேசு கிறிஸ்துவுக்கு பொருத்திக் காண்பித்தான். (எபிரெயர் 10:5-10) பவுல் அந்த செப்டுவஜின்ட் வாசகத்தை உபயோகித்ததன் காரணமாக, “நீர் எனக்கு ஒரு சரீரத்தை ஆயத்தப் பண்ணினீர்” என்ற வாக்கியம் தேவ ஆவியினால் எழுதப்பட்ட எல்லா வேத வாக்கியங்களின் பாகமாக இப்பொழுது இருக்கிறது.—2 தீமோத்தேயு 3:16.
நமக்கு பாடம்: சங்கீதம் 37 ஒரு பொல்லாத சந்ததியின் மத்தியில் வாழ்ந்து கொண்டிருக்கிற நமக்காக அநேக பாடங்களை கொண்டிருக்கிறது. பொல்லாதவர்கள் செழிந்தோங்கின போதிலும், அவர்களை கண்டு நாம் பொறாமைப்படுவதோ அவர்களை பின்பற்ற முயற்சிப்பதோ கூடாது. மாறாக, யெகோவாவை நோக்கி “அமர்ந்து அவருக்கு காத்திருக்க வேண்டும்.” குற்றம் கண்டுபிடித்துக் கொண்டிருக்கக்கூடாது. ஆனால் அதற்கு பதிலாக அவர் தம்முடைய உரிய காலத்தில் நம் சார்பாக செயல்படுவதற்கு அமைதலாய் அவரை நம்பியிருக்க வேண்டும்.—சங்கீதம் 37:5, 7.
ஆம் சங்கீதங்கள் அநேக ஏவுதலளிக்கக்கூடிய மற்றும் ஆறுதலளிக்கக்கூடிய வார்த்தைகளை கொண்டிருக்கின்றன. இந்த முதல் 41 சங்கீதங்கள் நம்முடைய சூழ்நிலைமை எவ்வளவு கடினமானதாக இருந்தாலும் யெகோவா நம்மை கைவிடார் என்பதை திரும்பதிரும்ப காண்பித்திருக்கின்றன. நிச்சயமாகவே அவற்றை வாசித்த பின்பு சங்கீதம் 41-ஐ முடிக்கக்கூடிய வார்த்தைகளை எதிரொலிப்பதற்கு நாம் உந்துவிக்கப்பட வேண்டும்: “இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் அநாதியாய் என்றென்றைக்குமுள்ள சதா காலங்களிலும் ஸ்தோத்தரிக்கப்படத்தக்கவர். ஆமென், ஆமென்.” (w86 8/15)