உத்தமத்தைக் காத்துக் கொள்பவர்களுக்கு ஆறுதல்
“என் உத்தமத்தினிமித்தமாக நீர் என்னை தாங்கினீர்.”—சங்கீதம் 41:12.
1. யெகோவாவின் ஜனங்களுக்கு ஏன் ஆறுதல் தேவையாக இருக்கிறது?
யெகோவாவின் உத்தமத்தைக் காத்துக்கொள்ளும் சாட்சிகளுக்கு ஆறுதல் தேவையாக இருக்கிறது. ஏனென்றால் அவர்கள் எல்லாராலும் பகைக்கப்படுகிறார்கள். நிச்சயமாகவே அவர்கள் இதுபோன்ற சோதனைகளை எதிர்பார்த்தே இருக்க வேண்டும். ஏனென்றால் இயேசு கிறிஸ்து தம்மை பின்பற்றியவர்களிடம் பின்வருமாறு சொன்னார்: “ஊழியக்காரன் தன் எஜமானிலும் பெரியவனல்ல. அவர்கள் என்னைத் துன்பப்படுத்தினதுண்டானால் உங்களையும் துன்பப்படுத்துவார்கள்.” (யோவான் 15:20) விசேஷமாக இப்பொழுது யெகோவாவின் ஜனங்களுக்கு ஆறுதல் தேவையாக இருக்கிறது. ஏன்? ஏனென்றால் முதல் முதலாக உத்தமத்தைவிட்டு விலகினவனான பிசாசாகிய சாத்தான் பூமிக்கு தள்ளப்பட்டிருக்கிறான். அவனுக்கு இன்னும் கொஞ்காலம் மாத்திரமே இருக்கிறது. ஆகவே, கடவுளுக்கும் அவருடைய ஊழியக்காரருக்கும் எதிராக போர் செய்கிறவனாக, கடைசியாக அவன் எதிர்த்துக் கொண்டிருக்கிறான்.—வெளிப்படுத்தின விசேஷம் 12:7-9, 17.
2. உடன் விசுவாசிகளின் கஷ்டங்களைப் பற்றி கிறிஸ்தவர்கள் எவ்விதமாக உணருகிறார்கள்?
2 யெகோவாவின் ஊழியர்களாக, தடை உத்தரவின் கீழ் ஊழியம் செய்ய வேண்டி நிலையில் அல்லது துன்புறுத்துகிறவர்களால் மிரட்டப்பட்டும் தவறாக நடத்தப்பட்டும் வரும் நம்முடைய சகோதர சகோதரிகளுக்காக நாம் ஊக்கமாக ஜெபிக்கிறோம். (அப்போஸ்தலர் 12:1; 2 தெசலோனிக்கேயர் 1:4) விசுவாச துரோகிகளிடமிருந்தும் மற்றவர்களிடமிருந்தும் வரும் நிந்தனைகளை உண்மையுடன் சகித்துக்கொள்ளும் கிறிஸ்தவர்களை நாம் மெச்சுகிறோம். (மத்தேயு 5:11) உறவினர்களால் எதிர்க்கப்படும் அல்லது மதத்தின் காரணமாக பிளவுபட்ட குடும்பங்களில் வாழ்ந்து வருகிற நம்முடைய உடன் விசுவாசிகள் மீது நமக்கு அன்பான அக்கறை இருக்கிறது. (மத்தேயு 10:34-36) பலவீனத்தினாலும், நாள்பட்ட வியாதியினாலும் கஷ்டப்படும் உத்தமத்தைக் காத்துக்கொள்கிறவர்களுக்கு நம்முடைய இருதயப்பூர்வமான அனுதாபங்களை நாம் தெரிவிக்கிறோம். ஆனால் ஏன் இந்த சேதனைகள்? உத்தமத்தைக் காத்துக்கொள்ளும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் என்ன ஆறுதல் இருக்கிறது?
காரணத்தையும் புகலிடத்தையும் நினைவில் வைத்திருங்கள்
3. என்ன செய்வதற்காக சாத்தான் துன்புறுத்தலை பயன்படுத்துகிறான்?
3 பிசாசு மனிதர்களின் அல்லது பேய்களின் துணைக்கொண்டு கிறிஸ்தவர்களை “விழுங்கு”வதற்காக முயற்சித்துக் கொண்டிருக்கிறான். (1 பேதுரு 5:8) ஆம், யெகோவா தேவனோடு நம்முடைய உறவை அழிப்பதற்கும் உண்மையற்றவர்களாய் உத்தமத்தைவிட்டு நம்மை விலகச்செய்வதற்கும் முயற்சி செய்கையில் சாத்தான் துன்புறுத்தலையும் மற்ற கஷ்டங்களையும் பயன்படுத்துகிறான். ஆனால் இவை அனைத்திலும் நாம் பாதுகாப்பற்றவர்களாக இருக்கிறோமா? நிச்சயமாக இல்லை.
4. துன்புறுத்தலையும் மற்ற கஷ்டங்களையும் எதிர்படும்போது, உத்தமத்தைக் காத்துக் கொள்பவர்கள் எதைக் குறித்து நிச்சயமாயிருக்கலாம்?
4 நாம் ஜெபசிந்தையோடு யெகோவாவின் உதவியை நாடினால், அவர் நமக்கு அடைக்கலமாக இருப்பார். துன்புறுத்தலினாலும் மற்ற துன்பங்களினாலும் நாம் குழப்பமடைந்திருக்கும்போது சங்கீதக்காரனாகிய தாவீது செய்ததுபோல நாம் அவரிடம் மன்றாடலாம்: “எனக்கு இரங்கும், தேவனே, எனக்கு இரங்கும்; உம்மை என் ஆத்துமா ஆண்டிக் கொள்ளுகிறது; விக்கினங்கள் கடந்துபோகுமட்டும் உமது செட்டைகளின் நிழலிலே வந்து அடைவேன்” (சங்கீதம் 57:1) உத்தமத்தை காத்துக்கொள்கிறவர்களாக, சரியான நேரத்தில் நம்முடைய அடைக்கலமாகிய யெகோவாவிடமிருந்து உதவி கிடைக்கும் என்று நாம் நிச்சயமாயிருக்கலாம். கடவுளிடமாக ஜெபிக்கையில் தாவீது சொன்ன விதமாக, நாம் அவனைப் போல நம்பிக்கையோடிருக்கலாம்: “நீர் என் உத்தமத்திலே என்னைத் தாங்கி, என்றென்றைக்கும் உம்முடைய சமூகத்தில் என்னை நிலைநிறுத்துவீர்.”—சங்கீதம் 41:12.
5. துன்புறுத்தப்படும் கிறிஸ்தவர்களுக்கு என்ன குணாதிசயம் தேவையாக இருக்கிறது? நமக்கு என்ன நம்பிக்கை இருக்கிறது?
5 சோதனைகள் கொஞ்ச காலத்துக்கு நீடிக்கக்கூடுமாகையால், நாம் பொறுமையை வளர்த்துக்கொள்வது அவசியமாகும். அப்போஸ்தலனாகிய பவுல் எபிரெய கிறிஸ்தவர்களை “உபத்திரவங்களாகிய மிகுந்த போராட்டத்தை [அவர்கள்] சகித்துக் கொண்ட . . . முந்தின நாட்களை நினைத்துக் கொண்டேயிருங்கள்” என்பதாக துரிதப்படுத்தினான். மேலுமாக அவன் இவ்விதமாக எழுதினான்: “நீங்கள் தேவனுடைய சித்தத்தின்படி செய்து, வாக்குத்தத்தம் பண்ணப்பட்டதை பெறும்படிக்குப் பொறுமை உங்களுக்கு வேண்டியதாயிருக்கிறது.” (எபிரெயர் 10:32-36) அபிஷேகம் பண்ணப்பட்ட கிறிஸ்தவர்களுக்கு கடவுளுடைய வாக்குத்தத்தின் நிறைவேற்றம் பரலோகத்தில் சாவாமையுள்ள வாழ்க்கையின் வெகுமதியை கொண்டுவரும். ஆனால் திரள் கூட்டத்தாருக்கு பூமிக்குரிய பரதீஸில் நித்திய ஜீவனின் எதிர்ப்பார்ப்பு இருக்கிறது. (வெளிப்படுத்தின விசேஷம் 7:9; லூக்கா 23:43) ஆம் உத்தமத்தைக் காத்துக்கொள்கிறவர்களாக முடிவு பரியந்தம் நிலைநிற்கும் அனைவருக்கும் நித்திய ஜீவன் கிடைப்பது கூடிய காரியமாகும்.—மாற்கு 13:13.
6. யெகோவாவின் சாட்சிகள் மத்தியில் சிலருக்கு ஏன் விசேஷமாக பொறுமை தேவையாக இருக்கிறது? அவர்களுக்கு என்ன ஒத்தாசை இருக்கிறது?
6 பல பத்தாண்டுகளாக, சில தேசங்களிலுள்ள யெகோவாவின் சாட்சிகளுக்கு விசேஷமாக பொறுமை தேவையாக இருந்திருக்கிறது. ஏன்? ஏனென்றால் அவர்கள் கடினமான பிராந்தியத்தில் அல்லது அரசாங்க தடைகள் உட்பட பல்வேறு கஷ்டங்களின் மத்தியில் தங்களுடைய பரிசுத்த சேவையை தொடர்ந்து செய்ய வேண்டிய நிலையில் இருக்கிறார்கள். ஒருவேளை நீங்களுங்கூட உங்களுடைய கிறிஸ்தவ வாழ்க்கையில், சுகயீனத்தை அல்லது குடும்ப எதிர்ப்பை சகித்துக் கொண்டிருக்க வேண்டிய நிலையில் இருக்கலாம். வெறுமென மனித பெலத்தின் மீது சார்ந்திருப்பவர்களை இந்த சோதனைகள் வீழ்த்திவிடக்கூடும். ஆனால் யெகோவாவின் சாட்சிகளை அவை நிறுத்திவிடுவது கிடையாது. ஏனென்றால் அவர்களுக்கு “வானத்தையும் பூமியையும் உண்டாக்கின யெகோவாவிடமிருந்து ஒத்தாசை” வருகிறது.—சங்கீதம் 121:1-3.
7. தொடர்ந்து நீடித்திருக்கும் சோதனைகள் என்ன சந்தர்ப்பத்தை நமக்கு அளிக்கிறது? பிலிப்பியர் 4:13-ல் பவுலின் வார்த்தைகளை நாம் ஏன் நம்பலாம்?
7 இந்த காரிய ஒழுங்கின் முடிவு வரையாக சில நிலைமைகள் சகித்துக்கொள்ளப்பட வேண்டியதாக இருக்கலாம். ஆனால் நாம் தொடர்ந்து அனுபவிக்கும் சோதனைகள், கடவுளுக்கு நம்முடைய உத்தமத்தை நிரூபிக்கவும் அவருடைய இருதயத்தை சந்தோஷப்படுத்தவும் நமக்கு சந்தர்ப்பத்தை அளிக்கின்றன. (நீதிமொழிகள் 27:11) அதே சமயத்தில், உண்மையாக சகித்திருப்பதற்கு தேவையான பெலத்தை யெகோவா தருகிறார். அப்போஸ்தலனாகிய பவுல் இவ்விதமாக எழுதினான்: “என்னைக் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையுஞ் செய்ய எனக்குப் பெலனுண்டு.” (பிலிப்பியர் 4:13) திரும்பவும் நம்பிக்கையூட்டும் அந்த வார்த்தைகளை நீங்கள் நம்பலாம். எனென்றால் அவை “உலகத்திலுள்ள முழு சகோதர கூட்டுறவின்” விஷயத்திலும் எப்போதும் உண்மையாகவே நிரூபித்துக் கொண்டிருக்கிறது.—1 பேதுரு 5:9, 10.
உத்தமத்தை காத்துக்கொள்பவர்கள் நம்மை உற்சாகப்படுத்துகிறார்கள்
8. பிளவுபட்ட குடும்பங்களில் உத்தமத்தைக் காத்துக் கொள்பவர்கள் எவ்விதமாக ஆசீர்வதிக்கப்படக்கூடும் என்பதை விளக்கவும்.
8 உலகிலுள்ள முழு சகோதர கூட்டுறவினாலும் உத்தமத்தை காத்துக் கொள்ளப்படுவதை காண்பது அதிகமான உற்சாகத்துக்கு காரணமாக இருக்கிறது. பிளவுபட்ட குடும்பங்களில் யெகோவாவுக்கு தங்களுடைய உத்தமத்தை காத்துக் கொண்டதற்காக அவர்களில் சிலர் நிறைவான வெகுமதிகளைப் பெற்றுக் கொண்டிருக்கிறார்கள். உதாரணமாக ஐயர்லாந்தில் ஒரு கத்தோலிக்கப் பெண்ணோடு பைபிள் படிப்பு ஆரம்பிக்கப்பட்டபோது, அவளுடைய கணவன் கடுமையாக அதை எதிர்த்து அவளை விவாகரத்து செய்துவிடப் போவதாக பயமுறுத்தினான். ஆனால் அவளோ தொடர்ந்து படித்துக் கொண்டிருந்தாள். ஒரு நாள் நீங்கள் பூமியில் பரதீஸில் என்றும் வாழலாம் புத்தகத்தின் ஒரு பிரதியை அவள் கணவனுக்கு கொடுத்தாள். அதில் காணப்பட்ட தெளிவும், ஒளிவு மறைவில்லாமையும், சிறப்பான படங்களும் அவனுடைய மனதை கவர்ந்தன. விரைவில் இந்த புத்தகத்தின் உதவியோடு கணவன் பைபிளை படித்துக் கொண்டிருந்தான். அவன் புகை பிடிக்கும் பழக்கத்தை விட்டு விட்டான். அந்த தம்பதி கத்தோதிக்க சர்ச்சிலிருந்து ராஜினாமா செய்துவிட்டு புனிதமான படங்கள் என்பதாக அழைக்கப்பட்டவற்றை ஒழித்து விட்டார்கள். சீக்கிரத்தில் மனைவி முழுக்காட்டப்பட்டு துணைப் பயனியர் சேவையில் பங்குகொண்டாள். அவளுடைய கணவன் ஊழியத்தில் சிறப்பாக முன்னேறினான். உத்தமத்தைக் காத்துக்கொள்பவர்களாக, பிளவுபட்ட குடும்பங்களில் உறதியாக இருக்க வேண்டியவர்களுக்கு இதுபோன்ற அனுபவங்கள் உண்மையான உற்சாகத்தை அளிக்கக்கூடும்.—1 கொரிந்தியர் 7:12-16.
9. உத்தமத்தைக் காத்துக் கொள்ளும் பலக்குறைவுள்ளவர்கள் எவ்விதமாக மற்றவர்களுக்கு உதவி செய்யலாம்?
9 உத்தமத்தைக் காத்துக்கொள்ளும் மற்றவர்கள் பலக்குறைவின் மத்தியிலும் உண்மையுள்ளவர்களாக நிரூபித்திருக்கிறார்கள். பிரிட்டனில், சுழல் நாற்காலியை பயன்படுத்தும் ஊனமுற்ற ஒரு கிறிஸ்தவன் தன்னுடைய ஊழியத்தில் மனநிறைவை காண்கிறான். அவன் இவ்விதமாக எழுதினான்: “1949 முதற்கொண்டு என்னால் உலகப்பிரகாரமான வேலையை செய்ய முடியாமல் போய்விட்டபோதிலும், யெகோவா இந்த காலம் முழுவதிலும் என்னை பயன்படுத்தியிருக்கிறார். ஆகவே வருடங்கள் விரைவாக சென்றுவிட்டன. மிகவும் மோசமாக ஊனமுற்றிருக்கும் ஒரு நபரும்கூட மற்றவர்களுக்கு பெரும் உதவியாக இருக்க முடியும் என்பதை நான் கற்றுக்கொண்டேன். சபையிலுள்ள பலருக்கு நானும் என்னுடைய மனைவியும் ஒருவித நங்கூரம் போன்று இருந்திருக்கிறோம். எங்களுடைய சூழ்நிலைமைகளின் காரணமாக நாங்கள் எப்பொழுதும் இங்கே இருக்கிறோம். எங்களை எப்பொழுதும் பார்க்கலாம்.” ஆம், பலக்குறைவுள்ள எந்த கிறிஸ்தவனும் சோர்ந்து போக வேண்டாம். ஏனென்றால், அவனோ அல்லது அவளோ மற்றவர்களுக்கு உற்சாகத்தின் ஊற்று மூலமாக இருக்கலாம்.
10. துன்புறுத்தல் வரும்போது அதற்கு பணிந்துவிடாதிருப்பதன் மூலம் உத்தமத்தைக் காத்துக் கொள்பவர்கள் எவ்விதமாக உடன் விசுவாசிகளுக்கு உதவி செய்யலாம்?
10 உத்தமத்தைக் காத்துக்கொள்பவர்கள் துன்புறுத்தல் வரும்போது பணிந்து போய்விடுவதில்லை. கிறிஸ்தவ நடுநிலைமையை காத்துக்கொண்டதற்காக சிறையில் வைக்கப்பட்ட ஒரு சகோதரர் இவ்விதமாகச் சென்னார்: “அடிகளை வாங்குவது . . . என்னுடைய வாழ்க்கையின் வழக்கமான ஒரு பகுதியாகிவிட்டது. அது எண்ணிக்கையிலும் கடுமையிலும் அதிகமானது. அநேக நாட்கள் எனக்கு உணவு கொடுக்கப்படாததால் நான் நாளுக்கு நாள் பலவீனமானேன். இடைவிடாமல் யெகோவாவிடம் ஜெபித்தேன். அவர் என்னை கைவிடவில்லை என்று என்னால் சொல்ல முடியும். அடி அதிகமாக ஆக, நான் அதை குறைவாகவே உணர்ந்தேன்.” இரண்டு வருடங்களுக்கு மேல் அவருக்கு சிறை தண்டனை அளிக்கப்பட்டபோதிலும் யெகோவாவின் இந்த சாட்சி தன்னுடைய நடுநிலைமையை காத்துக் கொண்டார். (ஏசாயா 2:2-4; யோவான் 15:19) உத்தமத்தைக் காத்துக்கொள்ளும் இன்னும் மற்ற அநேகர் இதே போன்ற நிலைநிற்கையை எடுத்திருக்கிறார்கள். நிச்சயமாகவே இதுபோன்ற உத்தமத்தைக் காத்துக் கொள்பவர்களின் உற்சாகமான முன்மாதிரி உடன் விசுவாசிகளை உண்மையுடன் இருப்பதற்கு தூண்டக்கூடும்.
நிச்சயமான ஆறுதல்
11. வேதபூர்வமான என்ன ஆறுதலின் உறுதி கிறிஸ்தவர்களுக்கு இருக்கிறது?
11 யெகோவா தம்முடைய உண்மையுள்ள ஜனங்களோடு இருக்கிறார் என்பதை நிரூபிக்கும் எண்ணற்ற அனுபவங்களில் முன்னால் சொல்லப்பட்டவை ஒரு சிலவே ஆகும். அவர் “இரக்கங்களின் பிதாவும் சகல விதமான ஆறுதலின் தேவனுமாயிருக்கிறார். சகல உபத்திரவங்களிலேயும் அவரே நமகு ஆறுதல் செய்கிறவர்.” (2 கொரிந்தியர் 1:3, 4) ஆம், “தேவன் நமக்கு அடைக்கலமும் பெலனும் ஆபத்துக் காலத்தில் அநுகூலமான துணையுமானவர்.” (சங்கீதம் 46:1-3) நம்மையும் நம்முடைய உடன் விசுவாசிகளையும் நம்முடைய சகல உபத்திரவங்களிலும் அவர் தாங்குவார் என்பதை அறிந்துக்கொள்வது எத்தனை ஆறுதலாக இருக்கிறது!
12. பவுல் உத்தமத்தைக் காத்துக் கொண்டது உடன் கிறிஸ்தவர்களை எவ்விதமாக பாதித்தது?
12 யெகோவாவின் உடன் வணக்கத்தார், பல்வேறு கஷ்டங்களின் மத்தியிலும் உண்மைத்தவறாத கிறிஸ்தவர்களாக சகித்துக் கொண்டிருப்பதை பார்க்கும்போது நாம் தைரியத்தை பெற்றுக் கொள்ளலாம். அப்போஸ்தலனாகிய பவுல் உண்மையுள்ளவனாக இருந்ததை மற்றவர்கள் கவனித்தபோது இதுதானே சம்பவித்தது. அவன் இவ்வாறு எழுதினான்: “எனக்கு சம்பவித்தவைகள் சுவிசேஷம் பிரபலமாகும்படிக்கு ஏதுவாயிற்று. என் கட்டுகள் வெளியரங்கமாகி . . . சகோதரரில் அனேகர் என் கட்டுகளாலே கர்த்தருக்குள் திடன்கொண்டு பயமில்லாமல் திருவசனத்தைச் சொல்லும்படி அதிகமாய் துணிந்திருக்கிறார்கள்.”—பிலிப்பியர் 1:12-14.
13. நாம்தாமே உத்தமத்தைக் காத்துக்கொள்வது என்ன பாதிப்பைக் கொண்டிருக்கக்கூடும்?
13 ஆம், துன்புறுத்தலை எதிர்படுகையில் யெகோவாவின் மற்ற சாட்சிகள் அவருக்கு உத்தமத்தைக் காத்துக் கொள்ளுகிறார்கள் என்பதை நாம் அறிந்துகொள்ளும் போது உண்மையுள்ளவர்களாக நிலைத்திருக்க நாம் பலப்படுத்தப்படுகிறோம். மறுபட்சத்தில், சோதனையின் கீழ் நாம் தாமே உத்தமத்தைக் காத்துக் கொள்ளும்போது, கடவுளுடைய வார்த்தையை தைரியமாக பேசுவதற்கு மற்றவர்களை நாம் உற்சாகப்படுத்துகிறோம். நாம் உண்மையுள்ளவர்களாய் இருப்பது அவர்களுடைய உற்சாகத்துக்கும் ஆசீர்வாதத்துக்கும் காரணமாக இருக்கிறது என்பதை அறிந்து கொள்வதில் நாம் நிச்சயமாகவே மனநிறைவை காணலாம்.
14. என்ன இரண்டு வழிகளில் யெகோவா நமக்கு ஆறுதலளிக்கிறார்?
14 யெகோவா அவருடைய பரிசுத்த ஆவியின் மூலமாக நம்மை ஆதரிக்கிறார். உண்மையில் பேதுரு எழுதியது போலவே, ‘நாம் கிறிஸ்தவின் நாமத்தினிமித்தம் நிந்திக்கப்பட்டால் பாக்கியவான்கள்; ஏனென்றால் தேவனுடைய ஆவியாகிய மகிமையுள்ள ஆவியானவர் நம்மேல் தங்கியிருக்கிறார்.’ (1 பேதுரு 4:12-16) நம்முடைய ஜெபங்களுக்கு பதிலளிப்பதன் மூலமாகவுங்கூட கடவுள் நமக்கும் துன்பப்படும் உடன் விசுவாசிகளுக்கும் ஆறுதல் செய்கிறார். பவுல் இவ்விதமாக எழுதினான்: “நீங்கள் ஒன்றுக்கும் கவலைப்படாமல் எல்லாவற்றையுங் குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள். அப்பொழுது, எல்லாப் புத்திக்கும் மேலான தேவ சமாதானம் உங்கள் இருதயங்களையும் உங்கள் சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக் கொள்ளும்.” (பிலிப்பியர் 4:6, 7) “ஜெபத்தைக் கேட்கிறவரிடம்” இதுபோன்ற ஒரு நம்பிக்கை உங்களுக்கு இருக்கிறதா?—சங்கீதம் 65:2.
கடவுளுடைய வார்த்தையிலிருந்து ஆறுதலை பெற்றுக் கொள்ளுதல்
15. ரோமர் 15:4-ன் உண்மையை எவ்விதமாக நீங்கள் விளக்குவீர்கள்?
15 கடவுளுடைய பரிசுத்த வார்த்தையும்கூட பெரும் ஆறுதலின் ஊற்றுமூலமாக இருக்கிறது. அப்போஸ்தலனாகிய பவுல் குறிப்பிட்ட விதமாகவே: “தேவ வசனத்தினால் உண்டாகும் பொறுமையினாலும் ஆறுதலினாலும் நாம் நம்பிக்கையுள்ளவர்களாகும்படிக்கு முன்பு எழுதியிருக்கிறவைகளெல்லாம் நமக்குப் போதனையாக எழுதியிருக்கிறது.” (ரோமர் 15:4) உதாரணமாக எகிப்திலிருந்து இஸ்ரவேலர் அற்புதமாக விடுவிக்கப்ட்டதைப் பற்றி அல்லது எஸ்தர் ராணியின் நாளில் யூதர்கள் பாதுகாக்கப்பட்டதைப் பற்றி நாம் வாசிக்கும்போது, ஈடிணையற்ற மீட்பராக யெகோவாவில் நம்முடைய நம்பிக்கையை அது பலப்படுத்தவில்லையா? மிகுதியான துன்பங்களை எதிர்பட்டபோது, உத்தமத்தைக் காத்துக்கொண்ட யோபின் பதிவைப் பற்றி என்ன? நிச்சயமாகவே இது, எவ்விதமாக யெகோவாவின் நவீன நாளைய ஊழியர்கள் கடவுள் கொடுக்கும் பெலத்தினால் துன்பங்களை சகித்துக்கொள்ள முடியும் என்பதை காண்பிக்கிறது. ”வேத வசனத்தினால் உண்டாகும் ஆறுதல்” நிச்சயமாகவே உத்தமத்தைக் காத்துக் கொள்பவர்களை நம்பிக்கையினாலும் தைரியத்தினாலும் நிரப்ப முடியும்.
16. 1 பேதுரு 5:6, 7 மற்றும் 1 கொரிந்தியர் 10:13-ல் என்ன ஆறுதலளிக்கும் உறுதிமொழிகள் காணப்படுகின்றன?
16 ஆனால் நம்முடைய பிரச்னைகள், நம்மை சோர்வாக உணரச் செய்தால், அப்பொழுது என்ன? ஆறுதலளிக்கும் வேதபூர்வமான உறுதிமொழிகள் யெகோவாவின் ஆதரவில் நம்மை பாதுகாப்பாக உணரச் செய்து, நம்முடைய சோர்வை தணிக்க உதவக்கூடும். அப்போஸ்தலனாகிய பேதுரு எழுதினான்: “ஏற்ற காலத்திலே தேவன் உங்களை உயர்த்தும்படிக்கு அவருடைய பலத்த கைக்குள் அடங்கியிருங்கள். அவர் உங்களை விசாரிக்கிறவரானபடியால் உங்கள் கவலைகளையெல்லாம் அவர் மேல் வைத்து விடுங்கள்.” (1 பேதுரு 5:6, 7) ஆம் யெகோவா “உங்களை விசாரிக்கிறார்.” என்ன ஆறுதலளிக்கும் சிந்தனையாக இது இருக்கிறது! அவரால் பார்க்க முடியாத அல்லது கட்டுப்படுத்த முடியாத எதுவும் சம்பவிக்க முடியாது. மேலுமாக, பவுல் இந்த உறுதியான நம்பிக்கையைக் கொடுத்தான்: “தேவன் உண்மையுள்ளவராயிருக்கிறார்; உங்கள் திராணிக்கு மேலாக நீங்கள் சோதிக்கப்படுகிறதற்கு அவர் இடங்கொடாமல் சோதனையை தாங்கத்தக்கதாக, சோதனையோடுகூட அதற்குத் தப்பிக் கொள்ளும்படியான போக்கையும் உண்டாக்குவார்.” (1 கொரிந்தியர் 10:13) உத்தமத்தைக் காத்துக்கொள்ள தீர்மானமாக இருக்கும் ஒரு நபராக நீங்கள் அதை நம்பலாம்!
17. நமக்கு ஆறுதலளிக்க வறு என்ன ஏற்பாடுகள் இருக்கின்றன?
17 கடவுளுடைய வார்த்தையையும் “உண்மையும் விவேகமுமுள்ள” அடிமையால் அளிக்கப்படும் கிறிஸ்தவ பிரசுரங்களையும் ஜெப சிந்தையோடு படிப்பது, அழுத்தங்கள் நிறைந்த காலங்களில் ஆறுதலை கொண்டுவரக்கூடும். (மத்தேயு 24:45-47; சங்கீதம் 119:105) சபையிலுள்ள தயவுள்ள மூப்பர்களின் நல்ல வேதப்பூர்வமான ஆலோசனையும்கூட ஆறுதலளிப்பதாக இருக்கும். மற்ற காரியங்களோடுகூட அவர்கள் ‘திடனற்றவர்களைத் தேற்றவும் பலவீனரைத் தாங்கவும் எல்லாரிடத்திலும் நீடிய சாந்தமாயிருக்கவும் சொல்லப்படுகிறார்கள்.—1 தெசலோனிக்கேயர் 5:14.
18. பொருள் சம்பந்தமாக நமக்கு குறைவாக இருக்குமானால் நமக்கு என்ன ஆறுதல் இருக்கிறது?
18 ஆனால் பொருள் சம்பந்தமாக நமக்கு குறைவாக இருக்குமானால் என்ன ஆறுதல் இருக்கிறது? கடவுளுடைய புதிய ஒழுங்கில், சிறந்த வீட்டு வசதியும், ஏராளமான உணவும் மற்ற பொருள் சம்பந்தமான ஆசீர்வாதங்களும் இருக்கும் என்பதை அறிந்திருப்பது நிச்சயமாக ஆறுதலாக இருக்கிறது. (சங்கீதம் 72:16; 2 பேதுரு 3:13; ஏசாயா 65:17-25 ஒப்பிடவும்) ஆனால் இப்பொழுதேயும்கூட, கிறிஸ்தவர்களாக நாம் கேடு விளைவிக்கும் பழக்கங்களாகிய புகைப்பிடித்தல், மதுபானங்களை மிதமிஞ்சி குடித்தல், சூதாட்டம் போன்றவற்றில் பணத்தை விரயம் செய்வது கிடையாது. இவ்விதமாக மிச்சப்படுத்தப்படும் பணம், ஒருவருடைய குடும்பத்தின் நன்மைக்காக பயன்படுத்தப்படுகிறது. கடவுளுடைய வார்த்தையை பின்பற்றுவது, பொருள் சம்பந்தமாக குறைவாக நமக்கு இருக்கும்போது, அதில் திருப்தியாக இருப்பதற்கும்கூட உதவி செய்கிறது. பவுல் திருப்தியாக இருந்தான். ஏனென்றால் அவன் சொன்னான்: “போதுமென்கிற மனதுடனேகூடிய தேவபக்தியே மிகுந்த ஆதாயம். உலகத்திலே நாம் ஒன்றும் கொண்டு வந்தததுமில்லை, இதிலிருந்து நாம் ஒன்றும் கொண்டு போவதுமில்லை என்பது நிச்சயம். உண்ணவும் உடுக்கவும் நமக்கு உண்டாயிருந்தால் அது போதுமென்றிருக்கக் கடவோம்.” (1 தீமோத்தேயு 6:6-8; பிலிப்பியர் 4:11, 12) யெகோவாவின் ஊழியத்தில் நமக்கிருக்கும் சிலாக்கியங்களின் மீது கவனத்தை ஒருமுகப்படுத்துவது அநேக ஆசீர்வாதங்களை கொண்டு வருகிறது, இது நம்மை ஐசுவரியமுள்ளவர்களாக ஆக்குகிறது.
19. நாள்பட்ட வியாதியை நாம் எவ்விதமாக தாங்கிக்கொள்ள முடியும்?
19 ஆனால் நாள்பட்ட வியாதியை நாம் சகித்துக்கொள்ள வேண்டியிருந்தால் அப்பொழுது என்ன? அவருடைய வார்த்தையின் மூலமாக அளிக்கப்படும் யெகோவாவின் உதவியாலும் ஆறுதலினாலும் இதை நாம் தாங்கிக் கொள்ள முடியும். உதாரணமாக சங்கீதக்காரனாகிய தாவீது இவ்விதமாகச் சொன்னான்: “சிறுமைப்பட்டவன் மேல் சிந்தையுள்ளவன் பாக்கியவான் . . . படுக்கையின் மேல் வியாதியாகக் கிடக்கிற அவனை யெகோவா தாங்குவார்.” (சங்கீதம் 41:1-3) அற்புதமாக சுகப்படுவதற்குரிய காலமாக இது இல்லை. ஆனால் ராஜ்ய அக்கறைகளை அவர்களுடைய வாழ்க்கையில் முதலிடத்தில் வைக்கும்போது, அவர்களுடைய வியாதியை சமாளிக்க தேவையான ஞானத்தையும் மனவலிமையையும் வியாதிப்பட்டிருக்கும் கிறிஸ்தவர்களுக்கு யெகோவா அளிக்கிறார்.—மத்தேயு 6:33; 2 கொரிந்தியர் 12:7-10.
20. நேசமான ஒருவர் மரிக்கையில் நாம் துக்கத்தை எவ்விதமாக சமாளிக்கலாம்?
20 நேசமான ஒருவர் மரிக்கையில் ஏற்படும் துக்கத்தை நாம் எவ்விதமாக சமாளிக்கலாம்? பைபிளின் உயிர்த்தெழுதல் நம்பிக்கையிலிருந்து நாம் ஆறுதலை பெற்றுக் கொள்ளலாம். (யோவான் 5:28, 29; அப்போஸ்தலர் 24:15) ஆகவே நேசமான ஒருவர் மரிக்கையில் நாம் விசனமடைந்தாலும் “நம்பிக்கையற்றவர்களாக மற்றவர்களைக் போலத் துக்கிப்ப”தில்லை. (1 தெசலோனிக்கேயர் 4:13) உத்தமத்தைக் காத்துக் கொள்பவர்களுக்கு உயிர்த்தெழுதல் நம்பிக்கை என்ன ஆறுதலை கொண்டு வருகிறது!
ஆறுதலின் தேவனில் தொடர்ந்து நம்பிக்கையாயிருங்கள்
21. துன்புறுத்தலை சகித்துக் கொள்ளும்போது அநேகமாக அதன் விளைவுகள் என்னவாக இருக்கின்றன?
21 “சகல விதமான ஆறுதலின் தேவனாகிய“ யெகோவா, அவருக்கு ஒப்புக்கொடுத்த, உண்மைத் தவறாத ஆட்களை ஒருபோதும் கைவிடமாட்டார் என்பதைக் குறித்து நிச்சயமாயிருங்கள். (2 கொரிந்தியர் 1:3; சங்கீதம் 94:14) கிறிஸ்தவர்கள் சகித்துக் கொள்ளும் துன்புறுத்தல் கடவுளை கனப்படுத்த அல்லது மகிமைப்படுத்தக்கூடும் என்பதை நினைவில் கொண்டிருப்பதும்கூட உதவியாக இருக்கிறது. இவ்விதமாக அவர்கள் நடத்தப்படுவது, அவருடைய ஜனங்களிடமாகவும் அவர்களுடைய ராஜ்ய பிரசங்க வேலையினிடமாகவும் மற்றவர்களின் கவனத்தை இழுக்கிறது. இது அநேகமாக யெகோவாவை துதிக்கிறவர்களின் எணணிக்கையில் அதிகரிப்பைக் கொண்டு வருகிறது.—அப்போஸ்தலர் 8:4-8; 11:19-21-ஐ ஒப்பிடவும்.
22. உத்தமத்தின் சம்பந்தமாக நம்முடைய தீர்மானம் என்னவாக இருக்க வேண்டும்?
22 ஆகவே கடவுளுடைய உதவியின் துணைக்கொண்டு, நம்முடைய உத்தமத்தை விட்டு விலகச் செய்வதற்கு சாத்தானின் தந்திரங்களில் ஒத்திணங்கி போகாதிருக்க, நாம் தீர்மானமாக இருப்போமாக. விசுவாசத்தில் செயல்படுகிறவர்களாக, யெகோவாவை தொடர்ந்து நம்பியிருப்போமாக. அவருடைய ஊழியர்களாகிய நம்மை அவர் அநேக விதங்களில் ஆசீர்வதித்து ஆதரித்து ஆறுதலளிப்பதை ஒருபோதும் காண தவறிவிடாதிருப்போமாக. அவருக்கும் அவருடைய நீதியான தராதரங்களுக்கும் நம்முடைய பக்தியை நிரூபித்து அவருடைய அரசுரிமையை ஆதரிப்போமாக. இது மிகவும் தனிப்பட்ட ஒரு விஷயம் என்பதையும்கூட நினைவில் கொண்டிருங்கள். அதி முக்கியமான இந்நாட்களில் யெகோவாவின் அமைப்போடு சேர்ந்து நீங்கள் வேலை செய்கையில் தொடர்ந்து அவருடைய தெய்வீக சித்தத்தை செய்து வாருங்கள். தொடர்ந்து அவருக்கு உண்மையுள்ளவர்களாய் இருப்பதன் மூலம் யெகோவாவின் இருதயத்தை சந்தோஷப்படுத்தக்கூடிய உங்களுடைய சிலாக்கியத்தில் களிகூருங்கள். உத்தமத்தைக் காத்துக்கொள்ளும் அனைவருக்கும் அவர் நிச்சயமாக ஆறுதலை அளிக்கிறார் என்பதை ஒருபோதும் மறந்துவிடாதீர்கள். (w86 2/1)
உங்களுடைய பதில் என்ன?
◻ யெகோவாவின் ஊழியர்களுக்கு ஏன் விசேஷமாக ஆறுதல் தேவையாக இருக்கிறது?
◻ சாத்தான் கிறிஸ்தவர்களுக்கு விரோதமாக துன்புறுத்தலை பயன்படுத்துவதற்கு காரணம் என்ன?
◻ உத்தமத்தைக் காத்துக் கொள்பவர்கள் நம்மை எவ்வாறு உற்சாகப்படுத்தக்கூடும்?
◻ கடவுளுடைய வார்த்தையிலிருந்து நாம் எவ்வாறு ஆறுதலை பெற்றுக் கொள்ளமுடியும்?
◻ 1 பேதுரு 5:6, 7 மற்றும் 1 கொரிந்தியர் 10:13-ல் எதைக் குறித்து நமக்கு உறுதியளிக்கப்டுகிறது?
[பக்கம் 15-ன் படம்]
சாத்தான் யெகோவாவின் ஊழியர்களை விழுங்குவதற்கு வகைதேடுகிறான், ஆனால் நாம் எவ்விதத்திலும் தற்காப்பிழந்த நிலையிலில்லை
[பக்கம் 17-ன் படம்]
உத்தமத்தைக் காத்துக்கொள்பவர்களின் ஜெபங்களுக்கு யெகோவா பதிலளிக்கிறார். நீங்கள் ஒழுங்காக ஜெபம் செய்கிறீர்களா?
[பக்கம் 20-ன் பெட்டி]
“முந்தின நாட்களை நினைத்துக்கொள்ளுங்கள்; நீங்கள் பிரகாசமாக்கப்பட்டிருந்த அந்த நாட்களில் உபத்திரவங்களாகிய மிகுந்த போராட்டத்தைச் சகித்தீர்களே, நிந்தைகளாலும் உபத்திரவங்களாலும் நீங்கள் வேடிக்கையாக்கப்பட்டதுமல்லாமல் அப்படி நடத்தப்பட்டவர்களுக்குப் பங்காளிகளுமானீர்கள். ஆகையால், மிகுந்த பலனுக்கேதுவான உங்கள் தைரியத்தை விட்டுவிடாதிருங்கள். நீங்கள் தேவனுடைய சித்தத்தின்படி செய்து, வாக்குத்தத்தம் பண்ணப்பட்டதைப் பெறும்படிக்குப் பொறுமை உங்களுக்கு வேண்டியதாயிருக்கிறது.”—எபிரெயர் 10:32, 33, 35, 36.