யெகோவாவையே சார்ந்திருந்தால் நம்பிக்கை பிரகாசிக்கும்
“நான் யெகோவாவை நோக்கிக் கூப்பிடும்போது அவர் கேட்பார்.”—சங். 4:3, NW.
1, 2. (அ) தாவீது என்ன ஆபத்தான சூழ்நிலையை எதிர்ப்பட்டார்? (ஆ) எந்தச் சங்கீதங்களை நாம் சிந்திப்போம்?
தாவீது ராஜா இஸ்ரவேல் தேசத்தைக் கொஞ்ச காலமாக ஆட்சி செய்திருந்தார். அதன் பின்போ ஆபத்தான சூழ்நிலையை எதிர்ப்பட்டார். அவருடைய மகன் அப்சலோம் சதித்திட்டம் தீட்டித் தன்னையே ராஜாவாக அறிவித்துக்கொண்டான்; அதனால் தாவீது எருசலேமைவிட்டே ஓட நேர்ந்தது. அதோடு, அவருடைய உற்ற நண்பன் அவருக்குத் துரோகம் செய்தான். பின்பு, தாவீது தனக்கு உண்மையாய் இருந்த சிலருடன் அழுதுகொண்டே வெறுங்காலில் ஒலிவ மலையின்மேல் ஏறினார். அதுமட்டுமல்ல, சவுல் ராஜாவின் வம்சத்தைச் சேர்ந்த சீமேயி என்பவன் தாவீதைச் சபித்துக்கொண்டே அவர்மீது கற்களை எறிந்தான், மண்ணை வாரியிறைத்தான்.—2 சா. 15:30, 31; 16:5-14.
2 இந்த வேதனையும் அவமானமும் தாவீதை அணு அணுவாகக் கொன்றுவிட்டதா? இல்லை. ஏனென்றால், அவர் யெகோவாவையே சார்ந்திருந்தார். அப்சலோமிடமிருந்து தப்பியோடியதைக் குறித்து அவர் எழுதிய 3-ஆம் சங்கீதத்தில் அது தெளிவாகத் தெரிகிறது. அவர் 4-ஆம் சங்கீதத்தையும் எழுதினார். கடவுள் ஜெபங்களைக் கேட்டுப் பதிலளிக்கிறார் என்பதில் அவருக்கு இருந்த திடநம்பிக்கையை இந்த இரண்டு பாடல்களுமே காட்டுகின்றன. (சங். 3:4; 4:3) யெகோவா இரவும் பகலும் தம் உண்மை ஊழியர்களைத் தூண்போல் தாங்கி, அவர்களுக்குச் சமாதானத்தையும் பாதுகாப்புணர்வையும் அளிக்கிறார் என்ற உறுதியை இந்தப் பாடல்கள் நமக்குத் தருகின்றன. (சங். 3:5; 4:8) எனவே, கடவுளை இன்னும் அதிகமாகச் சார்ந்திருக்கவும் நம்பியிருக்கவும் இந்தச் சங்கீதங்கள் நம்மை எப்படித் தூண்டுகின்றன என்பதைச் சிந்திப்போம்.
‘நமக்கு விரோதமாய் அநேகர் எழும்பும்போது’
3. சங்கீதம் 3:1, 2-ன்படி தாவீது எப்படிப்பட்ட சூழ்நிலையில் இருந்தார்?
3 ஒருவன் தாவீதிடம் வந்து, “அப்சலோம் இஸ்ரயேலரின் உள்ளங்களைக் கவர்ந்துகொண்டார்” என்று சொன்னான். (2 சா. 15:13, பொது மொழிபெயர்ப்பு) அப்சலோமால் எப்படி இத்தனை பேருடைய ஆதரவையும் திரட்ட முடிந்ததென யோசித்த தாவீது, “கர்த்தாவே, என் சத்துருக்கள் எவ்வளவாய்ப் பெருகியிருக்கிறார்கள்! எனக்கு விரோதமாய் எழும்புகிறவர்கள் அநேகர். தேவனிடத்தில் அவனுக்கு இரட்சிப்பு இல்லையென்று, என் ஆத்துமாவைக் குறித்துச் சொல்லுகிறவர்கள் அநேகராயிருக்கிறார்கள்” என்றார். (சங். 3:1, 2) அப்சலோமிடமிருந்தும் அவருடைய ஆட்களிடமிருந்தும் தாவீதை யெகோவா காப்பாற்ற மாட்டாரென இஸ்ரவேலர் அநேகர் நினைத்தார்கள்.
4, 5. (அ) தாவீது எதை உறுதியாய் நம்பினார்? (ஆ) ‘என் தலையை உயர்த்துகிறவர்’ என்ற சொற்றொடரின் அர்த்தமென்ன?
4 தாவீதோ யெகோவாவை மலைபோல் சார்ந்திருந்ததால் நம்பிக்கையுடன் இருந்தார். “கர்த்தாவே, நீர் என் கேடகமும், என் மகிமையும், என் தலையை உயர்த்துகிறவருமாயிருக்கிறீர்” என்று அவர் பாடினார். (சங். 3:3) கேடகம் ஒரு படைவீரனைப் பாதுகாப்பதுபோல் யெகோவா தன்னைப் பாதுகாப்பாரென தாவீது உறுதியாய் நம்பினார். அவமானத்தால் தலைகுனிந்தபடி தன்னுடைய முகத்தை மூடிக்கொண்டு ஓடிய அந்த வயதான ராஜாவின் நிலைமையைக் கடவுள் தலைகீழாக மாற்றவிருந்தார். ஆம், அவர் மீண்டும் ராஜ கம்பீரத்துடன் தலையை உயர்த்தி நிமிர்ந்து நிற்கும்படி யெகோவா செய்யவிருந்தார். கடவுள் தனக்குப் பதிலளிப்பார் என்ற நம்பிக்கையுடன் தாவீது ஜெபித்தார். நீங்களும் அந்தளவுக்குக் கடவுளைச் சார்ந்திருக்கிறீர்களா?
5 ‘என் தலையை உயர்த்துகிறவர்’ என்று குறிப்பிட்டதன் மூலம் யெகோவாவே தனக்கு உதவுவார் என்பதை தாவீது சொல்லாமல் சொன்னார். அந்த வசனத்தை டுடேஸ் இங்லிஷ் வர்ஷன் மொழிபெயர்க்கையில், “கர்த்தாவே, எப்போதும் என்னை ஆபத்திலிருந்து காக்கும் கேடகம் நீரே; எனக்கு வெற்றி தருபவர் நீரே, எனக்குத் தைரியத்தை மீட்டுத் தருபவர் நீரே” என்று குறிப்பிடுகிறது. ‘என் தலையை உயர்த்துகிறவர்’ என்ற சொற்றொடரை ஒரு புத்தகம் இவ்வாறு விளக்குகிறது: “ஒருவருடைய ‘தலையை’ . . . கடவுள் உயர்த்துகிறார் என்பது, கடவுள் அவருடைய மனதை எதிர்பார்ப்பாலும் நம்பிக்கையாலும் நிரப்புவதைக் குறிக்கிறது.” இஸ்ரவேலின் சிம்மாசனத்தைப் பறிகொடுத்த தாவீது சோர்ந்துபோயிருந்தார். ஆனால் ‘தன்னுடைய தலை உயர்த்தப்பட்டு,’ இன்னுமதிக தைரியத்தையும் நம்பிக்கையையும் பெறவிருந்தார்.
யெகோவா ‘பதிலளிப்பார்!’
6. யெகோவா தம்முடைய பரிசுத்த மலையிலிருந்து தமக்குப் பதிலளிப்பாரென தாவீது ஏன் குறிப்பிட்டார்?
6 யெகோவாவையே சார்ந்திருந்த தாவீது நம்பிக்கை பொங்க இவ்வாறு தொடர்ந்து சொன்னார்: “நான் உரத்த குரலில் ஆண்டவரிடம் மன்றாடுகின்றேன்; அவர் தமது திருமலையிலிருந்து எனக்குப் பதிலளிப்பார்.” (சங். 3:4, பொ.மொ.) கடவுளுடைய பிரசன்னத்திற்கு அடையாளமாக இருந்த ஒப்பந்தப் பெட்டி, தாவீதின் கட்டளைப்படி சீயோன் மலைக்கு எடுத்துச் செல்லப்பட்டிருந்தது. (2 சாமுவேல் 15:23-25-ஐ வாசியுங்கள்.) ஆகவே, யெகோவா தம்முடைய பரிசுத்த மலையிலிருந்து தமக்குப் பதிலளிப்பாரென தாவீது குறிப்பிட்டது பொருத்தமானது.
7. தாவீது ஏன் பயப்படாதிருந்தார்?
7 தான் செய்த ஜெபம் வீணாய்ப் போகாதென தாவீது உறுதியாய் நம்பியதால் பயப்படாதிருந்தார். எனவே, “நான் படுத்துறங்கி விழித்தெழுவேன்; ஏனெனில், ஆண்டவரே எனக்கு ஆதரவு” என்று பாடினார். (சங். 3:5, பொ.மொ.) திடீர்த் தாக்குதல் பெருமளவு நடக்கும் இரவு வேளையில்கூட தாவீது பயமில்லாமல் படுத்துறங்கினார்; அதோடு, விழித்தெழுவார் என்று உறுதியாய் நம்பினார். ஏனென்றால், கடவுள் தன்னை நிச்சயம் தாங்குவார் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையைத் தன் அனுபவங்களிலிருந்தே பெற்றிருந்தார். நாமும் ‘யெகோவாவுடைய வழிகளைக் காத்துக்கொண்டு’ அவருக்குத் துரோகம் செய்யாதிருந்தால் அதேபோன்ற அசைக்க முடியாத நம்பிக்கையைப் பெறுவோம்.—2 சாமுவேல் 22:21, 22-ஐ வாசியுங்கள்.
8. தாவீது கடவுளையே சார்ந்திருந்தார் என்பதை சங்கீதம் 27:1-4 எப்படிக் காட்டுகிறது?
8 தாவீது கடவுளையே சார்ந்திருந்ததால் நம்பிக்கையில் பிரகாசித்தார் என்பதை அவர் எழுதிய மற்றொரு சங்கீதமும் தெளிவுபடுத்துகிறது. அதில், கடவுளுடைய சக்தியின் தூண்டுதலால் அவர் இவ்வாறு எழுதினார்: “கர்த்தர் என் வெளிச்சமும் என் இரட்சிப்புமானவர், யாருக்குப் பயப்படுவேன்? கர்த்தர் என் ஜீவனின் பெலனானவர், யாருக்கு அஞ்சுவேன்? . . . எனக்கு விரோதமாக ஒரு பாளயமிறங்கினாலும், என் இருதயம் பயப்படாது; . . . கர்த்தரிடத்தில் ஒன்றை நான் கேட்டேன், அதையே நாடுவேன்; நான் கர்த்தருடைய மகிமையைப் பார்க்கும்படியாகவும், அவருடைய ஆலயத்தில் ஆராய்ச்சி செய்யும்படியாகவும், நான் என் ஜீவனுள்ள நாளெல்லாம் கர்த்தருடைய ஆலயத்தில் தங்கியிருப்பதையே நாடுவேன்.” (சங். 27:1-4) இதேபோல் நீங்கள் உணர்ந்தால், உங்களால் முடிந்தவரை சக விசுவாசிகளோடு சேர்ந்து சபைக் கூட்டங்களில் தவறாமல் கலந்துகொள்வீர்கள்.—எபி. 10:23-25.
9, 10. சங்கீதம் 3:6, 7-லுள்ள வார்த்தைகளை தாவீது சொன்னபோதிலும் பழிவாங்கும் வெறி அவருக்கு இருக்கவில்லை என்று ஏன் சொல்லலாம்?
9 அப்சலோமும் மற்ற அநேகரும் தாவீதுக்கு நம்பிக்கை துரோகம் செய்தபோதிலும் அவர் இவ்வாறு பாடினார்: ‘எனக்கு விரோதமாகச் சுற்றிலும் படையெடுத்து வருகிற பதினாயிரம் பேருக்கும் நான் பயப்படேன். கர்த்தாவே, எழுந்தருளும்; என் தேவனே, என்னை இரட்சியும். நீர் என் பகைஞர் எல்லாரையும் தாடையிலே அடித்து, துன்மார்க்கருடைய பற்களைத் தகர்த்துப்போடும்.’—சங். 3:6, 7.
10 பழிவாங்கும் வெறி தாவீதிடம் இருக்கவில்லை. தன்னுடைய எதிரிகளை ‘தாடையிலே அடிக்கும்’ பொறுப்பை அவர் கடவுளிடமே விட்டுவிட்டார். திருச்சட்டத்தின் ஒரு பிரதியை அவர் தன் கைப்படவே எழுதி வைத்திருந்தார்; அதில், “பழிவாங்குவதும் பதிலளிப்பதும் எனக்கு உரியது” என யெகோவா சொல்லியிருந்ததை அவர் அறிந்திருந்தார். (உபா. 17:14, 15, 20; 32:35) ஆகவே, ‘துன்மார்க்கருடைய பற்களைத் தகர்த்துப்போடும்’ பொறுப்பை அவர் யெகோவாவிடமே விட்டுவிட்டார். அவர்களுடைய பற்களைத் தகர்த்துப்போடுவது என்பது எந்தத் தீங்கும் செய்ய முடியாதபடி அவர்களைப் பலமிழக்கச் செய்வதைக் குறிக்கிறது. யெகோவா ‘இருதயத்தைப் பார்ப்பதால்’ துன்மார்க்கர் யாரென அவரால் அறிந்துகொள்ள முடியும். (1 சா. 16:7) துன்மார்க்கரிலேயே பெரிய துன்மார்க்கனான சாத்தானை எதிர்த்து நிற்பதற்குத் தேவையான விசுவாசத்தையும் பலத்தையும் கடவுள் நமக்குத் தருவதற்காக எவ்வளவு நன்றியுள்ளவர்களாய் இருக்கிறோம்! கடவுள் சீக்கிரத்தில் சாத்தானை அதலபாதாளத்தில் தள்ளிவிடுவார்; அவன் பல்போன சிங்கமாக வீணாய்க் கர்ஜித்துக்கொண்டு அழிவே கதியெனக் கிடப்பான்.—1 பே. 5:8, 9; வெளி. 20:1, 2, 7-10.
‘இரட்சிப்பு யெகோவாவுடையது’
11. சக கிறிஸ்தவர்களுக்காக நாம் யெகோவாவிடம் என்ன கேட்க வேண்டும்?
11 தனக்கு உடனடியாகத் தேவைப்பட்ட மீட்பை யெகோவா மட்டுமே தர முடியுமென தாவீது அறிந்திருந்தார். ஆனால், அவர் தன்னைப் பற்றி மட்டுமே சிந்தித்துக்கொண்டில்லை. யெகோவாவின் தயவைப் பெற்ற மக்கள் அனைவருக்கும்தானே மீட்புத் தேவைப்பட்டது? அதனால்தான், கடவுளுடைய சக்தியின் தூண்டுதலால், ‘இரட்சிப்பு யெகோவாவுடையது; தேவரீருடைய ஆசீர்வாதம் உம்முடைய ஜனத்தின்மேல் இருப்பதாக’ என்று தாவீது முடிவாக எழுதினார். (சங். 3:8) உண்மையில், அவருக்கே ஏகப்பட்ட பிரச்சினைகள் இருந்தபோதிலும், யெகோவாவுடைய மக்கள் அனைவரையும் மனதில் வைத்திருந்தார், அவர்களைக் கடவுள் ஆசீர்வதிப்பார் என்று நம்பினார். நாமும் சக கிறிஸ்தவர்களை மனதில் வைக்க வேண்டுமல்லவா? ஆம், அவர்கள் தைரியத்தைப் பெறவும் நற்செய்தியை நம்பிக்கையுடன் அறிவிக்கவும் யெகோவா அவருடைய சக்தியைக் கொடுத்து உதவ வேண்டுமென நாம் அவரிடம் கேட்க வேண்டும்.—எபே. 6:17-20.
12, 13. அப்சலோமுக்கு என்ன ஏற்பட்டது, அதைக் கேட்ட தாவீது என்ன செய்தார்?
12 மற்றவர்களுக்கு, முக்கியமாக தாவீதைப் போன்று கடவுளால் நியமிக்கப்பட்டவர்களுக்கு, தீங்கிழைக்கிற எல்லாருக்கும் அப்சலோம் ஓர் எச்சரிக்கை உதாரணம்! அவன் கேவலமான மரணத்தைத் தழுவினான். (நீதிமொழிகள் 3:31-35-ஐ வாசியுங்கள்.) எப்படி? அப்சலோமின் படைகள் போரில் தோல்வியடைந்தன. அவன் கோவேறு கழுதையில் ஏறிச்சென்றபோது, அடர்த்தியான அவனுடைய தலைமுடி ஒரு பெரிய மரத்தின் தாழ்வான கிளையில் மாட்டிக்கொண்டது. அவன் நாதியற்ற நிலையில் உயிரோடு தொங்கிக்கொண்டிருந்தான்; அப்போது யோவாப் வந்து அவனுடைய நெஞ்சிலே மூன்று ஈட்டிகளைக் குத்தி அவனைக் கொன்றுபோட்டான்.—2 சா. 18:6-17.
13 தன் மகனுக்கு ஏற்பட்ட கதியைக் கேள்விப்பட்ட தாவீது சந்தோஷப்பட்டாரா? இல்லை. அவர் பதற்றத்துடன் முன்னும் பின்னும் நடந்தவாறு, “என் மகனாகிய அப்சலோமே, என் மகனே, என் மகனாகிய அப்சலோமே, நான் உனக்குப் பதிலாகச் செத்தேனானால் நலமாயிருக்கும்; அப்சலோமே, என் மகனே, என் மகனே, என்று சொல்லி அழுதான்.” (2 சா. 18:24-33) சோகத்தில் மூழ்கிய தாவீது யோவாபின் வார்த்தைகளைக் கேட்ட பின்னரே தன் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்திக்கொண்டார். அப்சலோமுக்கு எப்பேர்ப்பட்ட பரிதாபமான முடிவு! பதவி ஆசையில் அவன் கண்மூடித்தனமாக நடந்துகொண்டு, யெகோவா நியமித்த ராஜாவான தன் தகப்பனுக்கு எதிராகவே போர் செய்தான்; இவ்வாறு, தனக்குத்தானே அழிவைத் தேடிக்கொண்டான்.—2 சா. 19:1-8; நீதி. 12:21; 24:21, 22.
யெகோவாவையே சார்ந்திருந்ததை தாவீது மீண்டும் வெளிக்காட்டினார்
14. நான்காம் சங்கீதத்தைப் பற்றி என்ன சொல்லலாம்?
14 தாவீது யெகோவாவையே சார்ந்திருந்ததை 3-ஆம் சங்கீதத்தைப் போலவே 4-ஆம் சங்கீதமும் காட்டுகிறது; இதுவும் அவர் செய்த ஊக்கமான ஜெபமாகும். (சங். 3:4; 4:3) அப்சலோம் தோல்வியடைந்ததால் நிம்மதியடைந்த தாவீது, கடவுளுக்கு நன்றி தெரிவிக்கும் விதத்தில் இந்தச் சங்கீதத்தை எழுதியிருக்கலாம். அல்லது லேவிய பாடகர்களுக்காக இதை எழுதியிருக்கலாம். எது எப்படியிருந்தாலும், இந்தச் சங்கீதத்தைத் தியானிப்பது யெகோவாவையே சார்ந்திருக்கும் நம் உறுதியைப் பலப்படுத்தும்.
15. நாம் ஏன் யெகோவாவிடம் நம்பிக்கையோடு ஜெபம் செய்யலாம்?
15 யெகோவாவையே சார்ந்திருந்ததை தாவீது மீண்டும் காட்டினார்; யெகோவா தன்னுடைய ஜெபங்களைக் கேட்டுப் பதிலளிப்பார் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கையை வெளிக்காட்டினார். “என் நீதியின் தேவனே, நான் கூப்பிடுகையில் எனக்குச் செவிகொடும்; நெருக்கத்தில் இருந்த எனக்கு விசாலமுண்டாக்கினீர்; எனக்கு இரங்கி, என் விண்ணப்பத்தைக் கேட்டருளும்” என்று அவர் பாடினார். (சங். 4:1) நாமும் நீதியாய் நடந்துகொண்டால் அவரைப் போல் நம்பிக்கையாய் இருக்கலாம். ‘நீதியின் தேவனான’ யெகோவா நேர்மையாய் நடக்கிற தம்முடைய மக்களை ஆசீர்வதிக்கிறார் என்பதை நாம் மனதில் வைத்து அவரிடம் நம்பிக்கையோடு ஜெபம் செய்யலாம்; இயேசுவின் மீட்புப் பலியில் விசுவாசம் வைத்து அவர் மூலம் அவ்வாறு ஜெபம் செய்யலாம். (யோவா. 3:16, 36) அப்போது எப்பேர்ப்பட்ட நிம்மதியை நாம் பெறுவோம்!
16. தாவீது ஏன் மனச்சோர்வடைந்திருக்கலாம்?
16 சில சமயங்களில், நாம் எதிர்ப்படும் சூழ்நிலை நம் நம்பிக்கையைக் குலைக்கலாம், நம்மை மனச்சோர்வடையச் செய்யலாம். தாவீதும்கூட இப்படிப்பட்ட சூழ்நிலையைத் தற்காலிகமாக எதிர்ப்பட்டிருக்கலாம்; அதனால்தான் அவர் இவ்வாறு பாடினார்: “மனுபுத்திரரே, எதுவரைக்கும் என் மகிமையை அவமானப்படுத்தி, வீணானதை விரும்பி, பொய்யை நாடுவீர்கள்.” (சங். 4:2) “மனுபுத்திரரே” என்ற வார்த்தை மனிதர்களை எதிர்மறையான அர்த்தத்தில் குறிப்பிடப் பயன்படுத்தப்பட்டிருக்கலாம். தாவீதின் எதிரிகள் ‘வீணானதை விரும்பினார்கள்.’ இந்த வசனத்தை நியூ இன்டர்நேஷனல் வர்ஷன் மொழிபெயர்க்கையில், “நீங்கள் எதுவரைக்கும் வெறுமையை விரும்பி, பொய்க் கடவுட்களை நாடுவீர்கள்?” என்று குறிப்பிடுகிறது. தாவீதைப் போலவே மற்றவர்கள் செய்கிறதைப் பார்த்து நாம் மனச்சோர்வடைந்தாலும், தொடர்ந்து ஊக்கமாய் ஜெபம் செய்து, உண்மைக் கடவுளைச் சார்ந்திருப்பதை வெளிக்காட்டுவோமாக!
17. நாம் எப்படி சங்கீதம் 4:3-ல் சொல்லப்பட்டிருப்பதற்கு இசைவாக நடக்கலாம் என்பதை விளக்குங்கள்.
17 தாவீது கடவுள்மீது நம்பிக்கை வைத்திருந்தார் என்பது பின்வரும் வார்த்தைகளில் தெளிவாகத் தெரிகிறது: “யெகோவா தமக்கு உண்மையுள்ளவனை விசேஷமாகக் கவனிப்பார் என்பது உறுதியென அறியுங்கள்; நான் யெகோவாவை நோக்கிக் கூப்பிடும்போது அவர் கேட்பார்.” (சங். 4:3, NW) யெகோவாவுக்கு உண்மையாய் நிலைத்திருப்பதற்குத் தைரியமும் முழு நம்பிக்கையும் அவசியம். உதாரணத்திற்கு, மனந்திரும்பாத உறவினர் ஒருவர் சபைநீக்கம் செய்யப்படும்போது அவரது கிறிஸ்தவக் குடும்பத்தாருக்கு இந்தக் குணங்கள் அவசியம். யெகோவாவுக்கு உண்மையாய் இருந்து, அவருடைய வழிகளைவிட்டு விலகாதிருப்பவர்களை அவர் ஆசீர்வதிக்கிறார். யெகோவாவுக்கு உண்மையாய் இருந்து அவர்மீது முழு நம்பிக்கை வைக்கிற மக்கள் பாக்கியம் பெற்றவர்களாக, மகிழ்ச்சி உள்ளவர்களாக, இருக்கிறார்கள்.—சங். 84:11, 12.
18. நம்மிடம் யாராவது அன்பில்லாமல் நடந்துகொண்டால், சங்கீதம் 4:4 சொல்வதற்கு இசைவாக என்ன செய்ய வேண்டும்?
18 நாம் மனந்தளர்ந்து போகுமளவுக்கு யாராவது எதையாவது சொன்னாலோ செய்தாலோ என்ன செய்வது? தாவீதுடைய வார்த்தைகளைக் கேட்டு நடந்தால் நாம் சந்தோஷத்தை இழக்காதிருக்கலாம்; “நீங்கள் கோபங்கொண்டாலும், பாவஞ்செய்யாதிருங்கள்; உங்கள் படுக்கையிலே உங்கள் இருதயத்தில் பேசிக்கொண்டு அமர்ந்திருங்கள்” என்று அவர் சொன்னார். (சங். 4:4) ஆகவே, சொல்லிலோ செயலிலோ நம்மிடம் அன்பில்லாமல் நடந்துகொள்பவரைப் பழிக்குப் பழிவாங்கும் பாவத்தை நாம் செய்யாதிருப்போமாக. (ரோ. 12:17-19) நாம் படுக்கையிலே இருதயத்தில் ஜெபம் செய்துகொண்டு இருப்போமாக. அப்படி ஜெபம் செய்தால் நம் கண்ணோட்டம் மாறிவிடும், அன்பினால் தூண்டப்பட்டு அந்த நபரை மன்னித்துவிடுவோம். (1 பே. 4:8) அப்போஸ்தலன் பவுல் ஒருவேளை சங்கீதம் 4:4-ஐ மனதில் வைத்துச் சொன்ன பின்வரும் புத்திமதி குறிப்பிடத்தக்கது: “நீங்கள் கடுங்கோபம் கொண்டாலும் பாவம் செய்யாதிருங்கள்; சூரியன் அஸ்தமிப்பதற்கு முன்பு உங்கள் எரிச்சல் தணியட்டும்; பிசாசுக்கு இடம் கொடுக்காதீர்கள்.”—எபே. 4:26, 27.
19. ஆன்மீகப் பலிகளைச் செலுத்துவதைக் குறித்து சங்கீதம் 4:5-லிருந்து என்ன தெரிந்துகொள்கிறோம்?
19 கடவுள்மீது நம்பிக்கை வைப்பதன் அவசியத்தை வலியுறுத்தும் விதத்தில், “நீதியின் பலிகளைச் செலுத்தி, கர்த்தர்மேல் நம்பிக்கையாயிருங்கள்” என்று தாவீது பாடினார். (சங். 4:5) இஸ்ரவேலர் சரியான உள்நோக்கத்துடன் பலி செலுத்தியபோது மட்டுமே அவற்றைக் கடவுள் ஏற்றுக்கொண்டார். (ஏசா. 1:11-17) அவர் நம்முடைய ஆன்மீகப் பலிகளை ஏற்றுக்கொள்வதற்கு, நாமும் சரியான உள்நோக்கத்தோடு அவற்றைச் செலுத்த வேண்டும், அவர்மீது முழு நம்பிக்கை வைக்க வேண்டும்.—நீதிமொழிகள் 3:5, 6-ஐயும் எபிரெயர் 13:15, 16-ஐயும் வாசியுங்கள்.
20. யெகோவாவுடைய “முகத்தின் ஒளி” என்பது எதைக் குறிக்கிறது?
20 ‘“நலமானதை எங்களுக்கு அருள யார் உள்ளார்?” எனக் கேட்பவர் பலர். ஆண்டவரே, எங்கள்மீது உமது முகத்தின் ஒளி வீசும்படிச் செய்தருளும்’ என்று தாவீது தொடர்ந்து பாடினார். (சங். 4:6, பொ.மொ.) யெகோவாவுடைய “முகத்தின் ஒளி” என்பது அவருடைய தயவைக் குறிக்கிறது. (சங். 89:15) ஆகவே, “உமது முகத்தின் ஒளி வீசும்படிச் செய்தருளும்” என்று தாவீது ஜெபித்தபோது, ‘எங்களுக்குத் தயவு காட்டும்’ என்றே அர்த்தப்படுத்தினார். நாம் யெகோவாவையே சார்ந்திருப்பதால், அவருடைய சித்தத்தைச் செய்கையில் அவருடைய தயவையும் மிகுந்த சந்தோஷத்தையும் பெறுகிறோம்.
21. இன்று நடைபெறுகிற ஆன்மீக அறுவடை வேலையில் முழுமையாய்ப் பங்குகொள்ளும்போது எதைக் குறித்து நாம் உறுதியாய் இருக்கலாம்?
21 அறுவடைக் கால சந்தோஷத்தைவிடக் கடவுள் தரும் சந்தோஷம் அதிகமாக இருக்கும் என்பதால் அவரிடம் தாவீது இவ்வாறு பாடினார்: “தானியமும் திராட்சரசமும் பெருகியிருக்கிற காலத்தின் சந்தோஷத்தைப் பார்க்கிலும், அதிக சந்தோஷத்தை என் இருதயத்தில் தந்தீர்.” (சங். 4:7) இன்று நடைபெறுகிற ஆன்மீக அறுவடையில் நாம் முழுமையாய்ப் பங்கெடுத்தால் நம் இருதயத்தில் சந்தோஷம் பொங்கும் என்பது உறுதி. (லூக். 10:2) பரலோக நம்பிக்கையுள்ளவர்களின் தலைமையில் ‘அறுவடை வேலையாட்களின்’ எண்ணிக்கை அதிகரித்து வருவதைப் பார்த்து இன்று நாம் சந்தோஷப்படுகிறோம். இந்தச் சந்தோஷமிக்க அறுவடை வேலையில் உங்கள் பங்கு முழு திருப்தி அளிக்கிறதா?
நம்பிக்கை இழக்காமல் தொடர்ந்து கடவுளைச் சார்ந்திருங்கள்
22. சங்கீதம் 4:8-ல் குறிப்பிட்டுள்ளபடி, திருச்சட்டத்தைக் கடைப்பிடித்தபோது இஸ்ரவேலர் எப்படி நன்மை அடைந்தார்கள்?
22 இந்தச் சங்கீதத்தைப் பின்வரும் வார்த்தைகளுடன் தாவீது முடித்தார்: “சமாதானத்தோடே படுத்துக்கொண்டு நித்திரை செய்வேன்; கர்த்தாவே, நீர் ஒருவரே என்னை சுகமாய்த் தங்கப்பண்ணுகிறீர்.” (சங். 4:8) இஸ்ரவேலர் யெகோவாவின் திருச்சட்டத்தைக் கடைப்பிடித்தபோது சமாதானத்தை, அதாவது அவருடன் நல்லுறவை, அனுபவித்தார்கள்; அதோடு, பாதுகாப்பு உணர்வைப் பெற்றுச் சுகமாய் இருந்தார்கள். உதாரணத்திற்கு, சாலொமோனுடைய ஆட்சி காலத்தில் ‘யூதாவிலும் இஸ்ரவேலிலும் [மக்கள்] . . . சுகமாய்க் குடியிருந்தார்கள்.’ (1 இரா. 4:25) அண்டை நாட்டவர்கள் பகைத்தபோதிலும் கடவுளை நம்பியிருந்தவர்கள் சமாதானத்தை அனுபவித்தார்கள். நாமும் கடவுள் இருக்கிறார் என்ற தைரியத்தில் தாவீதைப் போல சமாதானத்தோடு நிம்மதியாய்த் தூங்குகிறோம்.
23. நாம் யெகோவாவையே சார்ந்திருந்தால் எப்படியெல்லாம் பயனடைவோம்?
23 நாம் தொடர்ந்து நம்பிக்கையோடு யெகோவாவுக்குச் சேவை செய்வோமாக. அதோடு, விசுவாசத்துடன் ஜெபம் செய்வோமாக; அப்போது, ‘எல்லாச் சிந்தனைக்கும் அப்பாற்பட்ட தேவசமாதானத்தை’ அனுபவிப்போம். (பிலி. 4:6, 7) இது நமக்கு எப்பேர்ப்பட்ட சந்தோஷத்தைத் தரும்! அதுமட்டுமல்ல, நாம் எப்போதும் யெகோவாவையே சார்ந்திருந்தால், எதிர்காலத்தை நம்பிக்கையுடன் சந்திப்பது உறுதி.
எப்படிப் பதிலளிப்பீர்கள்?
• அப்சலோமால் தாவீது என்னென்ன பிரச்சினைகளை எதிர்ப்பட்டார்?
• 3-ஆம் சங்கீதம் எப்படி நம் நம்பிக்கையைப் பிரகாசிக்கச் செய்கிறது?
• 4-ஆம் சங்கீதம் யெகோவாவைச் சார்ந்திருக்கும் நம் உறுதியை எவ்விதங்களில் பலப்படுத்துகிறது?
• கடவுளையே சார்ந்திருந்தால் நாம் எப்படியெல்லாம் பயனடைவோம்?
[பக்கம் 29-ன் படம்]
அப்சலோமுக்குப் பயந்து தாவீது ஓடியபோதிலும் யெகோவாமீது நம்பிக்கையாய் இருந்தார்
[பக்கம் 32-ன் படங்கள்]
நீங்கள் யெகோவாவையே சார்ந்திருக்கிறீர்களா?