கிறிஸ்தவ சகாப்தத்தில் தேவராஜ்ய நிர்வாகம்
“பரலோகத்திலிருக்கிறவைகளும் பூலோகத்திலிருக்கிறவைகளுமாகிய சகலமும் கிறிஸ்துவுக்குள்ளே கூட்டப்படவேண்டுமென்[பது] . . . தம்முடைய தயவுள்ள சித்தத்தின்[படியானது].”—எபேசியர் 1:9, 10.
1, 2. (அ) ‘பரலோகத்திலிருக்கிறவைகளை’ கூட்டிச்சேர்ப்பது பொ.ச. 33-ல் தொடங்கி, எவ்வாறு முன்னேறியது? (ஆ) அபிஷேகஞ்செய்யப்பட்ட கிறிஸ்தவர்கள், 1914-ல் இருந்து மோசே, எலியா ஆகியோரின் ஆவியை எப்படி வெளிக்காட்டி வந்திருக்கிறார்கள்?
‘பரலோகத்திலிருக்கிறவைகளை’ கூட்டிச்சேர்க்கும் இந்தக் காரியம் பொ.ச. 33-ல், ‘தேவனுடைய இஸ்ரவேல்’ பிறந்தபோது தொடங்கினது. (கலாத்தியர் 6:16; ஏசாயா 43:10; 1 பேதுரு 2:9, 10) பொ.ச. முதல் நூற்றாண்டுக்குப்பின், சாத்தானால் விதைக்கப்பட்ட விசுவாசதுரோகிகளான “களைகள்” பெருகி, (“கோதுமை” என்று இயேசு அழைத்த) உண்மையானக் கிறிஸ்தவர்களை மறைத்துப்போட்டபோது, இந்தக் கூட்டிச்சேர்த்தல் தாமதமாகியது. ஆனால் ‘முடிவுகாலம்’ நெருங்கிவந்தபோது தேவனுடைய உண்மையான இஸ்ரவேலர் வெளிப்படையாக திரும்பத் தோன்றினார்கள். 1919-ல் இயேசுவின் உடைமைகள் எல்லாவற்றின்மீதும் பொறுப்புள்ளவர்களாக இவர்கள் நியமிக்கப்பட்டார்கள்.a—மத்தேயு 13:24-30, 36-43; 24:45-47; தானியேல் 12:4.
2 மோசேயும் எலியாவும் செய்திருந்ததைப்போலவே, அபிஷேகஞ்செய்யப்பட்ட கிறிஸ்தவர்கள், முதல் உலகப் போர் நடந்த காலத்தின்போது, வல்லமைவாய்ந்த செயல்களை நடப்பித்தார்கள்.b (வெளிப்படுத்துதல் 11:5, 6) 1919 முதல், பகைமை காட்டும் உலகத்தில் நற்செய்தியை அவர்கள் பிரசங்கித்துவந்திருக்கிறார்கள்; இதை எலியாவைப்போலவே தைரியத்துடன் செய்துவந்திருக்கிறார்கள். (மத்தேயு 24:9-14) பூர்வ எகிப்தின்மீது கடவுளுடைய வாதைகளை மோசே கொண்டுவந்ததைப்போல், 1922 முதல், மனிதவர்க்கத்தின்மீது யெகோவாவின் நியாயத்தீர்ப்புகளை அவர்கள் அறிவித்து வந்திருக்கிறார்கள். (வெளிப்படுத்துதல் 15:1; 16:2-17) அபிஷேகஞ்செய்யப்பட்ட இந்தக் கிறிஸ்தவர்களின் மீதிபேர் இன்று, யெகோவாவின் சாட்சிகளின் புதிய உலக சமுதாயத்தினுடைய மையக்கருவாக இருக்கிறார்கள்.
ஒரு ஆளும் குழு செயல்படுகிறது
3. பூர்வ கிறிஸ்தவ சபை நன்றாக ஒழுங்குபடுத்தி அமைக்கப்பட்டிருந்தது என்பதை எந்தச் சம்பவங்கள் காட்டுகின்றன?
3 இயேசுவைப் பின்பற்றின அபிஷேகஞ்செய்யப்பட்டவர்கள், தொடக்கத்திலிருந்தே ஒழுங்குமுறைப்படி அமைக்கப்பட்டிருந்தனர். சீஷர்களின் எண்ணிக்கை பெருகினபோது, அந்தந்த இடங்களில் சபைகள் ஸ்தாபிக்கப்பட்டு, மூப்பர்கள் நியமிக்கப்பட்டார்கள். (தீத்து 1:5) பொ.ச. 33-க்குப்பின், 12 அப்போஸ்தலர்கள் அதிகாரமுள்ள மத்திப ஆளும் குழுவாக செயல்பட்டனர். அத்தகையோராக, சாட்சிகொடுக்கும் ஊழியத்தில் அவர்கள் பயமில்லாமல் ஈடுபட்டு வழிகாட்டினார்கள். (அப்போஸ்தலர் 4:33, 35, 37; 5:18, 29) தேவையில் இருந்தவர்களுக்கு உணவு பகிர்ந்தளிப்பதை அவர்கள் ஒழுங்குபடுத்தினார்கள். சமாரியாவில் சாதகமான பிரதிபலிப்பு இருப்பதைப் பற்றி அறிவிப்புகள் செய்யப்பட்டபோது, அதை முன்னேற்றுவிப்பதற்கு பேதுருவையும் யோவானையும் அவர்கள் அங்கு அனுப்பினார்கள். (அப்போஸ்தலர் 6:1-6; 8:6-8, 14-17) முன்பு துன்புறுத்தினவராக இருந்தவர் இப்போது இயேசுவைப் பின்பற்றுபவராக இருப்பதை உறுதிப்படுத்துவதற்கு, பர்னபா தன்னோடு பவுலை அவர்களிடம் அழைத்துச் சென்றார். (அப்போஸ்தலர் 9:27; கலாத்தியர் 1:18, 19) கொர்நேலியுவுக்கும் அவருடைய வீட்டாருக்கும் பேதுரு பிரசங்கித்த பின்பு, அவர் எருசலேமுக்குத் திரும்பிச் சென்று, இந்தக் காரியத்தில் கடவுளுடைய சித்தத்தை எவ்வாறு பரிசுத்த ஆவி அடையாளப்படுத்தி தெரிவித்திருந்தது என்பதை அப்போஸ்தலருக்கும் மற்ற யூதேய சகோதரர்களுக்கும் விளக்கிக் கூறினார்.—அப்போஸ்தலர் 11:1-18.
4. பேதுருவைக் கொலைசெய்வதற்கு என்ன முயற்சி செய்யப்பட்டது, ஆனால் அவருடைய உயிர் எவ்வாறு காக்கப்பட்டது?
4 பின்பு அந்த ஆளும் குழு கொடுமையான தாக்குதலுக்கு உள்ளானது. பேதுரு சிறைப்படுத்தப்பட்டார், தேவதூதர் தலையிட்டதனால்தான் அவருடைய உயிர் காக்கப்பட்டது. (அப்போஸ்தலர் 12:3-11) இப்போது முதல் தடவையாக, 12 அப்போஸ்தலரில் ஒருவராக இராத ஒருவர் எருசலேமில் முதன்மையான ஸ்தானத்தில் தோன்றினார். சிறைச்சாலையிலிருந்து பேதுரு விடுதலைசெய்யப்பட்டபோது, யோவான் மாற்குவினுடைய தாயின் வீட்டில் கூடியிருந்த ஒரு தொகுதியினிடம்: “இந்தச் செய்தியை யாக்கோபுக்கும் [இயேசுவின் ஒன்றுவிட்ட சகோதரன்] சகோதரருக்கும் அறிவியுங்கள்” என்று அவர் சொன்னார்.—அப்போஸ்தலர் 12:17.
5. யாக்கோபு கொல்லப்பட்ட பின்பு, ஆளும் குழுவின் அமைப்பு எவ்வாறு மாற்றப்பட்டது?
5 முன்பு, நம்பிக்கைதுரோகியான அப்போஸ்தலன் யூதாஸ் ஸ்காரியோத் தற்கொலை செய்துகொண்ட பின்பு, அப்போஸ்தலனாக இருந்த “அவனுடைய கண்காணிப்பை,” இயேசுவின் ஊழியத்தின்போது அவருடன் இருந்தவரும், அவருடைய மரணத்துக்கும் உயிர்த்தெழுதலுக்கும் கண்கண்ட சாட்சியானவருமான ஒருவருக்கு அளிப்பதற்கான தேவை கண்டுணரப்பட்டது. எனினும், யோவானின் சகோதரனான யாக்கோபு கொல்லப்பட்டபோது, அந்த 12 பேரில் ஒருவராக அவருடைய இடத்தை ஒருவரும் ஏற்கவில்லை. (அப்போஸ்தலர் 1:20-26; 12:1, 2) எனினும், ஆளும் குழுவின் தொகை அதிகமாக்கப்பட்டிருந்ததைப் பற்றி அடுத்த வேதப்பூர்வ குறிப்பு காட்டுகிறது. இயேசுவைப் பின்பற்றின புறஜாதியார் மோசேயின் நியாயப்பிரமாணத்தைக் கைக்கொள்ள வேண்டுமா என்பதன்பேரில் ஒரு விவாதம் ஏற்பட்டபோது, அதன்பேரில் தீர்மானம் செய்வதற்கு அது, “எருசலேமிலிருந்த அப்போஸ்தலரிடத்திற்கும் மூப்பரிடத்திற்கும்” கொண்டுசெல்லப்பட்டது. (அப்போஸ்தலர் 15:2, 6, 20, 22, 23; 16:4) ஆளும் குழுவில் ஏன் இப்போது ‘மூப்பர்’ இருந்ததாகத் தெரிகிறது? பைபிள் அதைப்பற்றி சொல்கிறதில்லை, ஆனால் அதனால் ஒரு நன்மை இருந்ததென்று தெரிகிறது. அப்போஸ்தலர்கள் ஒரு நாள் சிறைப்படுத்தப்படலாம் அல்லது கொல்லப்படலாம் என்று யாக்கோபின் இறப்பும் பேதுரு சிறைப்படுத்தப்பட்டதும் காட்டின. இவ்வாறு சம்பவிக்கக்கூடிய நிலையில், ஆளும் குழு செயல்படும் முறைகளில் அனுபவப்பட்டவர்களான தகுதிபெற்ற மற்ற மூப்பர்கள் இருப்பது, கண்காணிப்பு ஒழுங்காய்த் தொடர்ந்து செலுத்தப்பட்டு வருவதை நிச்சயப்படுத்தும்.
6. எருசலேமில் ஆளும் குழுவின் ஆரம்ப உறுப்பினர்கள் அந்த நகரத்தில் அதற்குமேலும் இராதபோதிலும் அது எவ்வாறு தொடர்ந்து செயல்பட்டது?
6 பெரும்பாலும் பொ.ச. 56-ம் ஆண்டில் பவுல் எருசலேமுக்கு வந்தபோது, யாக்கோபினிடம் சென்றார்; அப்போது “மூப்பரெல்லாரும் அங்கே கூடிவந்தார்கள்,” என்று பைபிள் சொல்கிறது. (அப்போஸ்தலர் 21:18) இந்தக் கூட்டத்தின்போது அப்போஸ்தலர்களைப் பற்றி ஏன் ஒன்றும் குறிப்பிடப்படவில்லை? மறுபடியுமாக, பைபிள் ஒன்றும் சொல்கிறதில்லை. ஆனால், பொ.ச. 66-க்கு முன்பான ஏதோ ஒரு சமயத்தில், “கொலைபாதக சதிகளினால் எப்போதும் ஆபத்திலிருந்த மீதிபேரான அப்போஸ்தலர்கள், யூதேயாவிலிருந்து வெளியே துரத்தப்பட்டார்கள். ஆனால் தங்கள் செய்தியை உபதேசிப்பதற்கு, கிறிஸ்துவின் வல்லமையினால் அவர்கள் ஒவ்வொரு நாட்டுக்குள்ளும் பயணப்பட்டார்கள்” என்று சரித்திராசிரியராகிய யூஸிபியஸ் பின்னால் அறிவித்தார். (யூஸிபியஸ், புத்தகம் III, V, v. 2) யூஸிபியஸின் வார்த்தைகள் தேவாவியால் ஏவப்பட்டெழுதப்பட்ட பதிவின் பாகமாக இல்லை என்பது மெய்யே; ஆனால், பதிவு சொல்கிறதோடு அவை நிச்சயமாக ஒத்திசைந்திருக்கின்றன. உதாரணமாக, பொ.ச. 62-க்குள்ளாக பேதுரு—எருசலேமிலிருந்து வெகு தூரமான—பாபிலோனில் இருந்தார். (1 பேதுரு 5:13) இருப்பினும், பொ.ச. 56-ல், பெரும்பாலும் பொ.ச. 66 வரையில், எருசலேமில் ஒரு ஆளும் குழு செயல்பட்டுக்கொண்டிருந்தது என்பது தெளிவாயுள்ளது.
தற்காலங்களிலுள்ள நிர்வாகம்
7. முதல் நூற்றாண்டின் ஆளும் குழுவோடு ஒப்பிட, இன்று ஆளும் குழுவில் அடங்கியிருப்போரில் கவனிக்கத்தக்க என்ன வேறுபாடு உள்ளது?
7 பொ.ச. 33-லிருந்து எருசலேமின்மீது வந்த உபத்திரவம் வரையில், ஆளும் குழு யூதக்கிறிஸ்தவர்களால் ஆனதாக இருந்ததென்று தெரிகிறது. பொ.ச. 56-ல் பவுல் எருசலேமுக்குச் சென்றபோது, அங்கிருந்த யூதக் கிறிஸ்தவர்களில் பலர், ‘இயேசு கிறிஸ்துவின்மேலுள்ள விசுவாசத்தைப் . . . பற்றிக்கொண்டு’ இருந்தபோதிலும், மோசேயின் “நியாயப்பிரமாணத்துக்காக[வும்] வைராக்கியமுள்ளவர்களாய்” இருந்தார்கள் என்று பவுல் கண்டறிந்தார்.c (யாக்கோபு 2:1; அப்போஸ்தலர் 21:20-25) புறஜாதியாரான ஒருவர் ஆளும் குழுவில் இருப்பதைக் கற்பனைசெய்து பார்ப்பது அத்தகைய யூதர்களுக்குக் கடினமாக இருந்திருக்கும். எனினும் தற்காலங்களில், இந்தக் குழுவைச் சேர்ந்தவர்களில் மற்றொரு மாற்றம் இருந்திருக்கிறது. இன்று அதில் முழுமையாக அபிஷேகஞ்செய்யப்பட்ட புறஜாதி கிறிஸ்தவர்கள் இருக்கின்றனர்; அவர்களுடைய கண்காணிப்பை யெகோவா மிகுதியாய் ஆசீர்வதித்திருக்கிறார்.—எபேசியர் 2:11-15.
8, 9. தற்காலங்களில் ஆளும் குழுவில் என்ன முன்னேற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன?
8 1884-ல் உவாட்ச் டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸைட்டி ஆஃப் பென்ஸில்வேனியாவின் கூட்டிணைவிலிருந்து 1972 வரையில், சங்கத்தின் தலைவரே யெகோவாவின் அமைப்பில் பெரும் அதிகாரத்தைச் செலுத்தினார். அதேசமயத்தில் ஆளும் குழு, சங்கத்தின் இயக்குநர் குழுவோடு நெருங்க செயல்பட்டு வந்தது. அந்த ஏற்பாட்டை யெகோவா ஏற்றார் என்று, அந்த ஆண்டுகளின்போது அனுபவித்த ஆசீர்வாதங்கள் நிரூபிக்கின்றன. 1972-க்கும் 1975-க்கும் இடையில், நிர்வாகக் குழு 18 உறுப்பினர் அடங்கியதாக விரிவாக்கப்பட்டது. விரிவாக்கப்பட்ட இந்தக் குழுவுக்கு மேலுமதிக அதிகாரம் அளிக்கப்பட்டபோது, முதல் நூற்றாண்டு ஏற்பாட்டின் மாதிரிக்கு இணங்க காரியங்கள் நடைபெற்றன. இந்த விரிவாக்கப்பட்ட குழுவில் இருந்த சகோதரர்கள் சிலர், உவாட்ச் டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸைட்டி ஆஃப் பென்ஸில்வேனியாவின் இயக்குநர்களாகவும் இருந்தனர்.
9 1975 முதற்கொண்டு, இந்த 18 நபர்களில் பலர் தங்கள் பூமிக்குரிய வாழ்க்கையை முடித்துவிட்டிருக்கின்றனர். இந்த உலகத்தை அவர்கள் ஜெயித்து, ‘இயேசுவுடன்கூட அவருடைய பரலோக சிங்காசனத்தில் உட்கார்ந்திருக்கின்றனர்.’ (வெளிப்படுத்துதல் 3:21) இந்தக் காரணங்களினிமித்தமாகவும் மற்றும் வேறு காரணங்களினிமித்தமாகவும், ஆளும் குழு, 1994-ல் கூடுதலாகச் சேர்க்கப்பட்ட ஒருவர் உட்பட, பத்து உறுப்பினர்களை உடையதாக இப்போது இருக்கிறது. இவர்களில் பெரும்பான்மையர் முதிர்வயதானவர்களாக இருக்கிறார்கள். எனினும், அபிஷேகஞ்செய்யப்பட்ட இந்தச் சகோதரர்கள், மிக முக்கியமான தங்கள் பொறுப்புகளை நிறைவேற்றுவதற்கு, சிறந்த உதவியைப் பெறுகிறார்கள். அந்த உதவி எங்கிருந்து கிடைக்கிறது? கடவுளுடைய ஜனங்களின் தற்கால முன்னேற்றங்களுக்குச் சற்று கவனம் செலுத்துவது இந்தக் கேள்விக்குப் பதிலளிக்கிறது.
தேவனுடைய இஸ்ரவேலுக்கு உதவி
10. இந்தக் கடைசி நாட்களில், அபிஷேகஞ்செய்யப்பட்டவர்களோடு யெகோவாவின் சேவையில் யார் சேர்ந்துகொண்டிருக்கிறார்கள், எவ்வாறு இது தீர்க்கதரிசனமாக உரைக்கப்பட்டிருந்தது?
10 முன்பு 1884-ல், தேவனுடைய இஸ்ரவேலோடு கூட்டுறவுடையோராக இருந்தவர்களில் பெரும்பாலும் எல்லாருமே அபிஷேகஞ்செய்யப்பட்ட கிறிஸ்தவர்களாக இருந்தனர். எனினும், படிப்படியாக மற்றொரு தொகுதி தோன்ற ஆரம்பித்தது. இந்தத் தொகுதி, வெளிப்படுத்துதல் 7-ம் அதிகாரத்தில் (தி.மொ.) குறிப்பிடப்பட்டுள்ள “திரள்கூட்டம்” என 1935-ல் அடையாளம் கண்டுகொள்ளப்பட்டது. பூமிக்குரிய நம்பிக்கை உடையோராக இவர்கள், கிறிஸ்துவுக்குள் ஒன்றாகக் கூட்டப்பட வேண்டுமென்று யெகோவா நோக்கங்கொள்கிற ‘பூலோகத்திலிருக்கிறவைகளைக்’ குறிக்கின்றனர். (எபேசியர் 1:9) தொழுவங்களைப் பற்றிய இயேசுவின் உவமையிலுள்ள ‘மற்ற செம்மறியாடுகளை’ இவர்கள் குறிக்கின்றனர். (யோவான் 10:16, NW) 1935 முதற்கொண்டு, மற்ற செம்மறியாடுகளைச் சேர்ந்தோர் யெகோவாவின் அமைப்புக்குள் திரண்டு வந்திருக்கின்றனர். இவர்கள், “மேகத்தைப்போலவும், தங்கள் பலகணித்துவாரங்களுக்குத் தீவிரிக்கிற புறாக்களைப்போலவும் பறந்து” வந்திருக்கிறார்கள். (ஏசாயா 60:8) இந்தத் திரள் கூட்டத்தாரில் உண்டாயிருக்கிற அதிகரிப்பினிமித்தமும், மரணத்தில் தங்கள் பூமிக்குரிய வாழ்க்கையை முடிவுக்கு கொண்டுவரும் அபிஷேகஞ்செய்யப்பட்டோரின் எண்ணிக்கை குறைந்துகொண்டு வருவதினிமித்தமும் தகுதிபெற்ற மற்ற செம்மறியாடுகள், கிறிஸ்தவ நடவடிக்கைகளில் கூடுதலான பொறுப்பை வகிக்கலாயினர். என்ன வழிகளில்?
11. அபிஷேகஞ்செய்யப்பட்டவர்களுக்கு மாத்திரமே தொடக்கத்தில் மட்டுப்படுத்தப்பட்ட என்ன சிலாக்கியங்கள், மற்ற செம்மறியாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு அளிக்கப்பட்டிருக்கின்றன?
11 யெகோவாவின் மகா மேன்மைகளை எங்கும் அறிவிப்பது, கடவுளுடைய ‘பரிசுத்த ஜனத்தின்’ விசேஷித்த கடமையாக எப்போதும் இருந்திருக்கிறது. பவுல் இதை ஆலய பலியெனக் குறிப்பிட்டு பேசினார். பிரசங்கிக்கும்படியும் உபதேசிக்கும்படியுமான ஊழியப்பொறுப்பை, ‘ராஜரீகமான ஆசாரியக்கூட்டமாக’ இருக்கப்போகிறவர்களுக்கு இயேசு அளித்தார். (யாத்திராகமம் 19:5, 6; 1 பேதுரு 2:4, 9; மத்தேயு 24:14; 28:19, 20; எபிரெயர் 13:15, 16) இருந்தபோதிலும், யோனதாபால் முன்குறிக்கப்பட்டவர்களை இந்த நடவடிக்கையில் பங்குகொள்ளும்படி, தி உவாட்ச்டவர், ஆகஸ்ட் 1, 1932-ன் இதழ், தனிப்பட்ட முறையில் ஊக்குவித்தது. நிச்சயமாகவே, அத்தகைய மற்ற செம்மறியாடுகளைச் சேர்ந்தவர்களில் பலர் ஏற்கெனவே அவ்வாறு செய்துகொண்டிருந்தனர். இன்று, ஏறக்குறைய இந்தப் பிரசங்க ஊழியம் முழுவதுமே இந்த மற்ற செம்மறியாடுகளைச் சேர்ந்தவர்களால் செய்யப்பட்டுவருகிறது. ‘இரவும் பகலும் அவருடைய ஆலயத்தில் [கடவுளுக்குப்] பரிசுத்த சேவை செய்யும்’ முதன்மையான பாகமாக அவ்வாறு அவர்களால் செய்யப்படுகிறது. (வெளிப்படுத்துதல் 7:15, NW) இதைப்போலவே, யெகோவாவின் ஜனங்களுடைய தற்கால சரித்திரத்தின் தொடக்கத்தில், சபை மூப்பர்கள் அபிஷேகஞ்செய்யப்பட்ட கிறிஸ்தவர்களாக, இயேசு கிறிஸ்துவின் வலது கரத்தில் ‘நட்சத்திரங்களாக’ இருந்தனர். (வெளிப்படுத்துதல் 1:16, 20) ஆனால், தகுதிபெற்ற மற்ற செம்மறியாடுகளைச் சேர்ந்தவர்களும் கம்பெனி ஊழியர்களாக (நடத்தும் கண்காணிகளாக) இருக்கலாம் என்று தி உவாட்ச்டவர் மே 1, 1937-ன் இதழ் அறிவிப்பு செய்தது. அபிஷேகஞ்செய்யப்பட்ட ஆண்கள் இருந்தாலும், பொறுப்பை ஏற்று நடத்த அவர்களால் முடியவில்லையென்றால், மற்ற செம்மறியாடுகளைச் சேர்ந்தவர்களைப் பயன்படுத்தலாம். இன்று, சபை மூப்பர்கள் ஏறக்குறைய எல்லாருமே மற்ற செம்மறியாடு வகுப்பாராக இருக்கின்றனர்.
12. அமைப்பு சம்பந்தப்பட்ட முக்கியமான பொறுப்புகளை, தகுதிபெற்ற மற்ற செம்மறியாடுகளைச் சேர்ந்தவர்கள் பெறுவதற்கு என்ன வேதப்பூர்வ மாதிரிகள் இருக்கின்றன?
12 இத்தகைய முக்கியமான பொறுப்புகளை மற்ற செம்மறியாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு அளிப்பது தவறா? இல்லை, சரித்திரப்பூர்வ முன்மாதிரியை பின்பற்றுவதாக இது இருக்கிறது. மதம் மாறிய அந்நியர் சிலர் (பரதேசி குடியிருப்பாளர்), பூர்வ இஸ்ரவேலில் உயர் பதவிகளை வகித்தனர். (2 சாமுவேல் 23:37, 39; எரேமியா 38:7-9) பாபிலோனுக்கு நாடுகடத்தப்பட்ட காலத்திற்குப் பின்னான காலத்தில் தகுதிபெற்ற நிதனீமியர் (இஸ்ரவேலரல்லாதவர்களான ஆலய ஊழியர்கள்), முன்பு லேவியருக்கு மாத்திரமே உரியவையாயிருந்த ஆலய சேவைக்குரிய சிலாக்கியங்கள் அளிக்கப்பட்டனர். (எஸ்றா 8:15-20; நெகேமியா 7:60) கூடுதலாக, இயேசுவுடன் மறுரூப தரிசனத்தில் காணப்பட்ட மோசே, மீதியானியரான எத்திரோ அளித்த சிறந்த ஆலோசனையை ஏற்றார். பின்னால், வனாந்தரத்தினூடே தங்களை வழிநடத்தும்படி எத்திரோவின் குமாரனான ஓபாவை அவர் கேட்டுக் கொண்டார்.—யாத்திராகமம் 18:5, 17-24; எண்ணாகமம் 10:29.
13. தகுதிபெற்ற மற்ற செம்மறியாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு மனத்தாழ்மையுடன் பொறுப்பளிப்பதில், யாருடைய சிறந்த முன்மாதிரியை அபிஷேகஞ்செய்யப்பட்டவர்கள் பின்பற்றியிருக்கின்றனர்?
13 வனாந்தரத்திலிருந்த 40 ஆண்டுகளின் முடிவு சமயத்தில், மோசே, வாக்குப்பண்ணப்பட்ட தேசத்திற்குள் தான் பிரவேசிப்பதில்லை என்பதை அறிந்தவராக, தனக்குப்பின் பொறுப்பு ஏற்பதற்கு ஒருவரை நியமிக்கும்படி யெகோவாவிடம் ஜெபித்தார். (எண்ணாகமம் 27:15-17) எல்லா ஜனங்களுக்கும் முன்பாக யோசுவாவுக்குப் பொறுப்பளிக்கும்படி யெகோவா அவரிடம் சொன்னார். சரீரப்பிரகாரமாக, தான் இன்னும் பலமுள்ளவராயும், இஸ்ரவேலருக்கு தொடர்ந்து சேவை செய்துகொண்டிருந்தபோதிலும் மோசே அப்படியே செய்தார். (உபாகமம் 3:28; 34:5-7, 9) அபிஷேகஞ்செய்யப்பட்டவர்கள், அதைப் போன்ற தாழ்மையுள்ள மனப்பான்மையுடன், மற்ற செம்மறியாடுகளுக்குள் இருப்போரில் தகுதிபெற்ற ஆண்களுக்கு அதிகப்பட்ட சிலாக்கியங்களை ஏற்கெனவே அளித்துவருகிறார்கள்.
14. மற்ற செம்மறியாடுகளைச் சேர்ந்தவர்கள் அமைப்பில் மேலும் மேலும் அதிகமாகப் பொறுப்பேற்பதை எந்தத் தீர்க்கதரிசனங்கள் குறிப்பிட்டுக் காட்டுகின்றன?
14 அமைப்பில், மற்ற செம்மறியாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு மேலும் மேலும் அதிகமான பொறுப்பளித்து வரும் இது, தீர்க்கதரிசனமாகவும் இருக்கிறது. இஸ்ரவேலனல்லாத பெலிஸ்தன், “யூதாவிலே பிரபுவைப்போல [“ஷேக்கைப்போல்,” NW] இருப்பான்” என்று சகரியா முன்னறிவித்தார். (சகரியா 9:6, 7) ஷேக்குகள் கோத்திரத் தலைவர்களாக இருந்தனர்; ஆகையால், இஸ்ரவேலின் முன்னாள் சத்துரு, மெய் வணக்கத்தை ஏற்று, வாக்குப்பண்ணப்பட்ட தேசத்தில் கோத்திரத் தலைவனைப்போல் இருப்பார் என்று சகரியா முன்னறிவிப்பவராக இருந்தார். மேலும், தேவனுடைய இஸ்ரவேலை நோக்கி பேசுபவராக, யெகோவா இவ்வாறு சொன்னார்: “புறஜாதியார் வந்து நின்று உங்கள் மந்தைகளை மேய்ப்பார்கள், அந்நியர் உங்கள் வயல்களிலும் உங்கள் திராட்சத் தோட்டங்களிலும் வேலைசெய்வார்கள். நீங்களோ யெகோவாவின் ஆசாரியரெனப்படுவீர்கள்; நமது கடவுளின் பணிவிடைக்காரரெனப் பேர்பெறுவீர்கள்.” (ஏசாயா 61:5, 6, தி.மொ.) அந்தப் ‘புறஜாதியாரும்’ ‘அந்நியரும்’ மற்ற செம்மறியாடுகள். வயதாகிக்கொண்டே செல்லும் அபிஷேகஞ்செய்யப்பட்ட மீதிபேர், பூமிக்குரிய தங்கள் வாழ்க்கையை முடித்து, முழுமையானக் கருத்தில், ‘யெகோவாவின் பரலோக ஆசாரியர்களாக,’ யெகோவாவின் மகத்துவமான சிங்காசனத்தைச் சுற்றி ‘நமது கடவுளின் பணிவிடைக்காரர்களாக’ சேவிப்பதற்குச் சென்றுகொண்டிருக்கையில், இவர்கள் மேலும் மேலுமான அதிக வேலையை ஏற்கும்படி பொறுப்பளிக்கப்பட்டு வருகிறார்கள்.—1 கொரிந்தியர் 15:50-57; வெளிப்படுத்துதல் 4:4, 9-11; 5:9, 10.
“வரும் சந்ததி”
15. இந்த முடிவு காலத்தில், கிறிஸ்தவர்களின் எந்தத் தொகுதியார் ‘முதிர்வயதை’ எட்டியிருக்கின்றனர், எந்தத் தொகுதியார் ‘வரும் சந்ததியைக்’ குறிக்கின்றனர்?
15 மேலுமதிகமான பொறுப்புகளை ஏற்பதற்கு, மற்ற செம்மறியாடுகளைச் சேர்ந்தவர்களைப் பயிற்றுவிக்க, அபிஷேகஞ்செய்யப்பட்ட மீதிபேர் ஆவலாக இருந்துவந்திருக்கின்றனர். சங்கீதம் 71:18, (தி.மொ.) இவ்வாறு சொல்கிறது: “கடவுளே, வரும் சந்ததிக்கு உமது புஜபலத்தையும் வரப்போகிற ஒவ்வொருவனுக்கும் உமது பராக்கிரமத்தையும் நான் அறிவிக்கும்வரைக்கும், முதிர்வயதும் நரைமயிருமுள்ளவனாகும் வரைக்கும் என்னைக் கைவிடீராக.” இந்த வசனத்தின்பேரில் விளக்கமளித்து, அபிஷேகஞ்செய்யப்பட்ட கிறிஸ்தவர்களின் சபை நிச்சயமாகவே முதிர்வயதை எட்டிவிட்டதென்று டிசம்பர் 15, 1948-ன் உவாட்ச்டவர் குறிப்பிட்டது. அபிஷேகஞ்செய்யப்பட்டவர்கள் மகிழ்ச்சியுடன், “பைபிள் தீர்க்கதரிசனத்தின்படி “ஒரு புதிய சந்ததியை எதிர்பார்த்து காண்கிறார்கள்,” என்று அது மேலும் தொடர்ந்து சொன்னது. முக்கியமாய் இது யாரைக் குறிப்பிடுகிறது? தி உவாட்ச்டவர் இவ்வாறு சொன்னது: “தம்முடைய ‘மற்ற செம்மறியாடுகள்’ என்று இயேசு அவர்களைக் குறித்து பேசினார்.” “வரும் சந்ததி” பரலோக ராஜ்யத்தால் ஆளப்படும் பூமிக்குரிய புதிய நிர்வாகத்தின்கீழ் வாழப்போகிற மனிதர்களைக் குறிக்கிறது.
16. ‘வரும் சந்ததியார்’ என்ன ஆசீர்வாதங்களை ஆவலோடு எதிர்பார்க்கின்றனர்?
16 அபிஷேகஞ்செய்யப்பட்ட கிறிஸ்தவர்கள் எல்லாரும், இந்த ‘வரும் சந்ததியாரான’ தங்கள் சகோதரரை விட்டு, இயேசு கிறிஸ்துவுடன்கூட மகிமைப்படுவதற்குச் எப்போது செல்வார்கள் என்பதை பைபிள் தெளிவாகச் சொல்கிறதில்லை. ஆனால் இதற்கான சமயம் நெருங்கிவந்துகொண்டிருக்கிறது என்று அபிஷேகஞ்செய்யப்பட்ட இவர்கள் நம்புகிறார்கள். ‘முடிவு காலத்தைப்’ பற்றிய இயேசுவின் பெரிய தீர்க்கதரிசனத்தில் முன்னறிவிக்கப்பட்ட சம்பவங்கள், 1914 முதற்கொண்டு நிறைவேற்றமடைந்து வந்திருப்பது, இந்த உலகத்தின் அழிவு அருகிலுள்ளதென்று காட்டுகிறது. (தானியேல் 12:4; மத்தேயு 24:3-14; மாற்கு 13:4-20; லூக்கா 21:7-24) சீக்கிரத்தில், ஒரு புதிய உலகத்தை யெகோவா கொண்டுவருவார். அதில், “வரும் சந்ததி,” ‘உலகம் உண்டானது முதல் அவர்களுக்காக ஆயத்தம்பண்ணப்பட்டிருக்கிற ராஜ்யத்தை [பூமிக்குரிய ஆட்சி எல்லையை] சுதந்தரித்துக்கொள்ளும்.’ (மத்தேயு 25:34) பரதீஸ் திரும்ப நிலைநாட்டப்படுவதையும் கோடிக்கணக்கான இறந்தோர் ஹேடீஸிஸிருந்து உயிர்த்தெழுப்பப்படுவதையும் எதிர்நோக்கியிருப்பதில் அவர்கள் மனக்கிளர்ச்சியடைகிறார்கள். (வெளிப்படுத்துதல் 20:13) உயிர்த்தெழுப்பப்படும் இவர்களை வரவேற்க அபிஷேகஞ்செய்யப்பட்டவர்கள் அங்கிருப்பார்களா? முன்னதாகவே 1925-ல், மே 1, உவாட்ச் டவர் இவ்வாறு சொன்னது: “கடவுள் என்ன செய்வார் அல்லது செய்ய மாட்டார் என்பதை நாம் தீர்மானமாய்ச் சொல்லக்கூடாது. . . . [ஆனால்] தகைமையுடைய பூர்வத்தாரின் [கிறிஸ்தவத்திற்கு முன்னிருந்த உண்மையுள்ள சாட்சிகளின்] உயிர்த்தெழுதலுக்கு முன்பாக, சர்ச்சின் உறுப்பினர் [அபிஷேகஞ்செய்யப்பட்ட கிறிஸ்தவர்கள்] மகிமைப்படுத்தப்படுவார்கள் என்ற முடிவுக்கு வர நாம் வழிநடத்தப்படுகிறோம்.” அவ்வாறே, உயிர்த்தெழுப்பப்பட்டவர்களைத் திரும்ப வரவேற்க அபிஷேகஞ்செய்யப்பட்டவர்களில் சிலர் அங்கிருப்பார்களா என்பதை விவாதித்து ஆராய்வதாய், செப்டம்பர் 1, 1989-ன் ஆங்கில காவற்கோபுரம்: “இது அவசியமிராது” என்று சொன்னது.d
17. அபிஷேகஞ்செய்யப்பட்டவர்கள், சிங்காசனத்தில் வீற்றிருக்கும் அரசராகிய, இயேசு கிறிஸ்துவுடன், ஒரு தொகுதியாக, என்ன அதிசயமான சிலாக்கியங்களில் பங்குகொள்வார்கள்?
17 மெய்தான், அபிஷேகஞ்செய்யப்பட்ட கிறிஸ்தவர் ஒவ்வொருவரின் காரியத்திலும் என்ன நடக்கும் என்பது நமக்குத் தெரியாது. ஆனால் மறுரூப தரிசனத்தில் இயேசுவுடன் மோசேயும் எலியாவும் இருந்ததானது, ‘அவனவன் கிரியைக்குத்தக்கதாக அவனவனுக்குப் பலனளிப்பதற்கு’ இயேசு மகிமையில் வருகையிலும், அவருடைய நியாயத்தீர்ப்பு அளிக்கப்பட்டு நிறைவேற்றப்படுகையிலும், இந்த உயிர்த்தெழுப்பப்பட்டுள்ள அபிஷேகஞ்செய்யப்பட்ட கிறிஸ்தவர்கள் அவருடன் இருக்கும்படி எதிர்பார்க்கலாம் என்று குறிப்பாகக் காட்டுகிறது. மேலும், ‘ஜெயங்கொள்கிற’ அபிஷேகஞ்செய்யப்பட்ட கிறிஸ்தவர்கள், அர்மகெதோனில் “இருப்புக்கோலால் அவர்களை [ஜனத்தாரை] மேய்த்து நடத்துவதில்”வதில் தம்மோடு பங்குகொள்வார்கள் என்ற இயேசுவின் வாக்கை நாம் நினைவுப்படுத்திக்கொள்கிறோம். இயேசு மகிமையில் வரும்போது, அவர்கள் அவரோடு “இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரங்களையும் நியாயந்தீர்க்கிறவர்களாக” வீற்றிருப்பார்கள். இயேசுவுடன்கூட அவர்கள், ‘சாத்தானைத் தங்கள் கால்களின்கீழே நசுக்கிப்போடுவார்கள்.’—மத்தேயு 16:27–17:9; 19:28; வெளிப்படுத்துதல் 2:26, 27; 16:14, 16; ரோமர் 16:20; ஆதியாகமம் 3:15; சங்கீதம் 2:9; 2 தெசலோனிக்கேயர் 1:9, 10.
18. (அ) ‘பரலோகத்திலிருக்கிறவைகள் கிறிஸ்துவுக்குள் கூட்டப்படவேண்டும்’ என்பதைக் குறித்ததில் நிலைமை என்னவாக உள்ளது? (ஆ) ‘பூலோகத்திலிருக்கிறவைகள் சகலமும் கிறிஸ்துவுக்குள்ளே கூட்டப்படுவதைப்’ பற்றி நாம் என்ன சொல்லலாம்?
18 காரியங்களைத் தாம் நிர்வகிப்பவராக, யெகோவா, ‘சகலத்தையும் கிறிஸ்துவுக்குள் மறுபடியும் கூட்டுவதற்கு,’ படிப்படியாய்க் காரியங்களை நிறைவேற்றிக்கொண்டிருக்கிறார். ‘பரலோகத்திலிருக்கிறவைகளைக்’ குறித்தவரையில், அவருடைய நோக்கம் நிறைவேற்றத்தின் முடிவை நெருங்கிக்கொண்டிருக்கிறது. ‘ஆட்டுக்குட்டியானவருடைய கலியாணத்திற்காக’ பரலோகத்தில் இயேசுவும் முழு எண்ணிக்கையான 1,44,000 பேரும் ஒன்றிணைக்கப்படுவது நெருங்கிவந்துகொண்டிருக்கிறது. ஆகையால், ‘பூமியிலுள்ளவைகளைப்’ பிரதிநிதித்துவம் செய்யும் மற்ற செம்மறியாடுகளைச் சேர்ந்தவர்களில் வெகுகாலம் சேவித்துவரும் முதிர்ச்சியடைந்த சகோதரர்களில் மேலும்மேலும் அதிகமானோருக்கு, அபிஷேகஞ்செய்யப்பட்ட தங்கள் சகோதரருக்கு உதவிசெய்வதில் முக்கியமான பொறுப்புகள் அளிக்கப்பட்டுவந்திருக்கின்றன. எத்தகைய கிளர்ச்சியூட்டும் காலத்தில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்! யெகோவாவின் நோக்கம் அதன் நிறைவேற்றதை நோக்கி முன்னேறிக்கொண்டிருப்பதைக் காண்பது எத்தகைய உணர்ச்சியார்வம் உண்டாக்குவதாக உள்ளது! (எபேசியர் 1:9, 10; 3:10-12; வெளிப்படுத்துதல் 14:1; 19:7, 9) அரசராகிய இயேசு கிறிஸ்துவுக்குக் கீழ்ப்பட்டு, சர்வலோக மகா பேரரசராகிய யெகோவா தேவனுக்கு மகிமையுண்டாக, ‘ஒரே மேய்ப்பனின் கீழ்’ ‘ஒரே மந்தையாக’ இரண்டு தொகுதிகளும் ஒன்றாகச் சேவிக்கையில், இந்த மற்ற செம்மறியாடுகளைச் சேர்ந்தவர்கள், அபிஷேகஞ்செய்யப்பட்ட தங்கள் சகோதரருக்கு உதவிசெய்வதில் எவ்வளவாய்க் களிகூருகிறார்கள்!—யோவான் 10:16, NW; பிலிப்பியர் 2:9-11.
[அடிக்குறிப்புகள்]
a ஆகஸ்ட் 1, 1981-ன் காவற்கோபுர (ஆங்கிலம்) வெளியீடு, பக்கங்கள் 16-26-ஐக் காண்க.
b உதாரணமாக, 1914-ல் தொடங்கி, “சிருஷ்டிப்பின் பட நாடகம்,” (“The Photo-Drama of Creation”)—ஒளி, ஒலியுடைய நான்கு பாக அளிப்பு—மேற்கத்திய உலகம் முழுவதிலும் கூட்டம் நிரம்பிவழிந்த தியேட்டர்களில் இருந்த பார்வையாளர்களுக்கு காட்டப்பட்டது.
c யூதக் கிறிஸ்தவர்களில் சிலர் ஏன் நியாயப்பிரமாணத்திற்காக வைராக்கியமுள்ளவர்களாய் இருந்தார்கள் என்பதற்குப் பெரும்பாலும் காரணங்களாக இருந்திருப்பவற்றை அறிய, உவாட்ச்டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸைட்டி பிரசுரித்த, வேதவாக்கியங்களின்பேரில் உட்பார்வை (ஆங்கிலம்) தொகுதி 2, பக்கங்கள் 1163-4-ஐக் காண்க.
d காவற்கோபுரம், (ஆங்கிலம்) ஆகஸ்ட் 15, 1990, பக்கங்கள் 30-1-ஐயும் டிசம்பர் 15, 1990, பக்கம் 30–ஐயும் காண்க.
நீங்கள் விளக்க முடியுமா?
◻ முதல் நூற்றாண்டில் கடவுளுடைய அமைப்பு எவ்வாறு முன்னேறியது?
◻ யெகோவாவின் சாட்சிகளின் தற்கால சரித்திரத்தில் ஆளும் குழு எவ்வாறு படிப்படியாகத் தோன்றியிருக்கிறது?
◻ யெகோவாவின் அமைப்பில் மற்ற செம்மறியாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு அதிகாரம் அளிப்பதை எந்த வேதவசனங்கள் ஆதரிக்கின்றன?
◻ எவ்வாறு, ‘பரலோகத்திலிருக்கிறவைகளும்’ ‘பூலோகத்திலிருக்கிறவைகளும்’ கிறிஸ்துவுக்குள் ஒன்றாகக் கூட்டப்பட்டிருக்கின்றன?
[பக்கம் 16-ன் படம்]
தொடக்கத்திலிருந்த உறுப்பினர்கள் எருசலேமில் அதற்கு மேலும் இராதபோதும், ஒரு ஆளும் குழு அங்கே தொடர்ந்து செயல்பட்டது
[பக்கம் 18-ன் படம்]
அபிஷேகஞ்செய்யப்பட்ட முதிர்ச்சியடைந்த கிறிஸ்தவர்கள், யெகோவாவின் ஜனங்களுக்கு ஓர் ஆசீர்வாதமாக இருந்துவந்திருக்கின்றனர்
சி. டி. ரஸ்ஸல்1884-1916
ஜே. எஃப். ரதர்ஃபோர்ட் 1916-42
என். ஹெய்ச். நார் 1942-77
எஃப். டபிள்யூ. ஃபிரான்ஸ் 1977-92
எம். ஜி. ஹென்ஷெல் 1992-