செழுமை உங்கள் விசுவாசத்தைச் சோதிக்கக்கூடும்
செழுமை ஒரு நேர்மையான நபரின் விசுவாசத்தைச் சோதிக்கக்கூடும். பொருள்வளத்தில் செழிப்படைய பாடுபடுவது, விசுவாசத்தை இழப்பதற்கு வழிநடத்தலாம். (1 தீமோத்தேயு 6:9, 10) ஆனால் செழுமை மற்றொரு வழியிலும் விசுவாசத்தைச் சோதிக்கலாம். நீதியான ஒருவர் தான் கஷ்டத்தில் இருக்கையில், பல அநீதியான மக்கள் பொருள்வளத்தில் செழிப்படைவதைப் பார்க்கும்போது, இவர் ஒரு தேவபக்தியற்ற வழியை ஒருவேளைப் பின்தொடர்வதற்குத் தூண்டப்படலாம். ஏன், இது யெகோவாவின் ஊழியர்களில் சிலரையும் நேர்மையான வாழ்க்கையைப் பின்தொடர்வதின் மதிப்பைச் சந்தேகிக்கச் செய்திருக்கிறது!
இது இஸ்ரவேலின் ராஜா தாவீதின் ஆட்சிக்காலத்தில் இருந்த லேவிய இசை கவிஞன் ஆசாப் விஷயத்தில் நடந்தது. பொது வணக்கத்தில் பயன்படுத்தப்பட்ட சங்கீதங்களை ஆசாப் இயற்றினார். யெகோவா தேவனிற்கு துதியையும் நன்றியறிதலையும் துணை இசைக்கருவிகளின்மூலம் ஏமான், எதுத்தூன் ஆகியோரோடு, இவரும் தீர்க்கதரிசனம் சொன்னார். (1 நாளாகமம் 25:1; 2 நாளாகமம் 29:30) ஆசாப் சிலாக்கியத்தைப் பெற்றவராக இருந்தும், சங்கீதம் 73, பொல்லாதவர்களின் பொருள்வள செழுமை அவருடைய விசுவாசத்திற்கு பெரிய சோதனையாக நிரூபித்தது என்று காண்பிக்கிறது.
ஆசாபின் ஆபத்தான மனநிலை
“சுத்த இருதயமுள்ளவர்களாகிய இஸ்ரவேலுக்குத் தேவன் நல்லவராகவே இருக்கிறார். ஆனாலும் என் கால்கள் தள்ளாடுதலுக்கும், என் அடிகள் சறுக்குதலுக்கும் சற்றே தப்பிற்று.” (சங்கீதம் 73:1, 2) இந்த வார்த்தைகளால், யெகோவா இஸ்ரவேல் தேசத்திற்கு நல்லவராக இருந்தார் என்பதை ஆசாப் ஒத்துக்கொண்டார். விசேஷமாகச் ‘சுத்த இருதயம்’ உள்ளோருக்கு அவ்வாறு இருந்தார், ஏனென்றால் கடவுளுக்குத் தனிப்பட்ட பக்தியைக் கொடுப்பதும் அவருடைய பரிசுத்தப் பெயரை மகிமைப்படுத்துவதில் பங்குகொள்வதும் அவர்களுடைய விருப்பமாக இருந்தது. நாம் அப்படிப்பட்ட மனநிலையைக் கொண்டிருந்தால், பொல்லாதவர்களின் செழுமையினால், அல்லது மற்ற எந்த நிலையிலும் நாம் கடுமையாகச் சோதிக்கப்படும்போது யெகோவாவைப் புகழ்ந்துபேசுவோம்.—சங்கீதம் 145:1, 2.
யெகோவாவின் நற்குணத்தை ஆசாப் அறிந்திருந்தாலும், அவருடைய பாதம் நீதியின் பாதையிலிருந்து கிட்டத்தட்ட விலகிவிட்டது. அது களைப்பூட்டும் மராத்தான் போட்டியில் பனிக்கட்டி தரையில் அவை சறுக்கிக் கீழே விழுவதுபோல் இருந்தது. ஏன் அவருடைய விசுவாசம் அவ்வளவு பலவீனமானது? அவர் விளக்கினார்: “துன்மார்க்கரின் வாழ்வை நான் காண்கையில், வீம்புக்காரராகிய அவர்கள்மேல் பொறாமைகொண்டேன். மரணபரியந்தம் அவர்களுக்கு இடுக்கண்களில்லை; அவர்களுடைய பெலன் உறுதியாயிருக்கிறது. [அவர்களுடைய தொப்பை பெருத்திருக்கிறது, NW] நரர் [மனிதர், NW] படும் வருத்தத்தில் அகப்படார்கள்; மனுஷர் அடையும் உபாதியை அடையார்கள்.”—சங்கீதம் 73:3-5.
அநீதியுள்ளவர்களின் பொருள்வள செழுமை ஆசாப்பை அவர்கள்மேல் பொறாமையடையச் செய்தது. கள்ள வழிகளில் அவர்கள் சம்பத்துகளைச் சேர்த்துவைத்திருந்தாலும், சமாதானம் அவர்களுக்கே உரியது என்பதுபோல் தோன்றியது. (சங்கீதம் 37:1-ஐ ஒப்பிட்டுப் பாருங்கள்.) அவர்களுடைய தவறான செயல்கள் மத்தியிலும், வெளிப்புறத் தோற்றத்தில் அவர்கள் பாதுகாப்பாய் தோன்றினர். ஏன், அவர்களுடைய வாழ்க்கை இடுக்கண்கள் இல்லாத மரணத்தைப் பெறுவதாகத் தோன்றுகிறதே! அவர்கள் எந்த ஆவிக்குரிய தேவையையும் அறியாமல், சில சமயங்களில் சமாதானத்தோடும் தன்னுறுதியோடும் மரித்தனர். (மத்தேயு 5:3) மறுபட்சத்தில், கடவுளுடைய ஊழியர்களில் சிலர் கடும்வேதனைதரும் வியாதியிலும் மரணத்திலும் துன்பப்படுகின்றனர், ஆனால் அவர் அவர்களைப் பாதுகாக்கிறார், மேலும் அவர்கள் அதிசயமான உயிர்த்தெழுதல் நம்பிக்கையைக் கொண்டிருக்கின்றனர்.—சங்கீதம் 43:1-3; யோவான் 5:28, 29.
அவர்களுடைய அதிகப்படியான உணவை அனுபவிப்பதைக் தடுக்கும் உடல் கோளாறுகள் அநேகப் பொல்லாதவர்களுக்கு இல்லை. “அவர்களுடைய தொப்பை பெருத்துப்போயிருக்கிறது,” அவர்களுடைய வயிறு முன்னால் பிதுங்கிக்கொண்டிருக்கிறது. மேலும், அவர்கள் ‘மனிதர் படும் வருத்தத்தை’ அடைவதில்லை, ஏனென்றால் மனிதகுலத்தின் பெரும்பகுதியினரைப்போல் வாழ்வின் அத்தியாவசிய தேவைகளைப் பெறுவதற்குப் போராடவேண்டியதில்லை. பொல்லாதவர்கள் “மனுஷர் அடையும் உபாதியை அடைவதில்லை” என்று ஆசாப் முடிவுசெய்துவிட்டார். விசேஷமாக, சாத்தானின் பொல்லாத உலகத்தில் யெகோவாவின் நீதியான தராதரங்களைக் கடைப்பிடிப்பதன் காரணமாகத் தேவபக்தியுடைய மக்கள் அனுபவிக்கும் கஷ்டங்களிலிருந்து அவர்கள் தப்பிவிடுகின்றனர்.—1 யோவான் 5:19.
பொல்லாதவர்கள் செழுமையடைவதால், அவர்களிடம் ஆசாப் தொடர்ந்து சொன்னார்: “ஆகையால் பெருமை சரப்பணியைப்போல் [கழுத்துமாலையைப்போல், NW] அவர்களைச் சுற்றிக்கொள்ளும், கொடுமை ஆடையைப்போல் அவர்களை மூடிக்கொள்ளும். அவர்கள் கண்கள் கொழுப்பினால் எடுப்பாய் பார்க்கிறது; அவர்கள் இருதயம் விரும்புவதிலும் அதிகமாய் நடந்தேறுகிறது. அவர்கள் சீர்கெட்டுப்போய், அகந்தையாய்க் கொடுமைபேசுகிறார்கள்; இறுமாப்பாய்ப் பேசுகிறார்கள். தங்கள் வாய் வானமட்டும் எட்டப்பேசுகிறார்கள்; அவர்கள் நாவு பூமியெங்கும் உலாவுகிறது.”—சங்கீதம் 73:6-9.
பொல்லாதவர்கள் பெருமையை “ஒரு கழுத்துமாலையைப்” போல் அணிந்துகொள்கிறார்கள். அவர்களுடைய வன்முறை செயல்கள் அவ்வளவு அதிகமாய் இருப்பதால், அவை “ஆடையைப்போல் அவர்களை மூடிக்கொள்ளும்.” அவர்களுடைய சொந்தப்போக்கில் செல்ல தீர்மானித்தவர்களாக அவர்கள் மற்றவர்களை அதட்டி அடக்குகிறார்கள். பொல்லாதவர்களின் கண்கள் ஊட்டச்சத்துக் குறைவினால் குழிவிழுந்திராமல், பெருந்திண்டியினால் கொழுத்ததன் காரணமாக ‘கொழுப்பினால் புடைத்துப்போய்’ இருக்கின்றன. (நீதிமொழிகள் 23:20) அவர்களுடைய திட்டந்தீட்டுதல் அவ்வளவு வெற்றியடைவதால், அவர்கள் ‘இருதயம் விரும்புவதைக்காட்டிலும் அதிகம் நடந்தேறுகிறது.’ அவர்கள் அவர்களுடைய மோசடியைக்குறித்து பெருமையாய், “இறுமாப்பாய்ப் பேசுகிறார்கள்.” ஏன், ‘அவர்கள் வாய் வானமட்டும் எட்டப்பேசுகிறார்கள்; அவர்கள் நாவு பூமியெங்கும் உலாவுகிறது’! வானத்திலும் பூமியிலும் உள்ள எவரையும் மதிக்காது, அவர்கள் கடவுளைத் தூஷித்து, மனிதர்களை இழிவுபடுத்துகிறார்கள்.
தெளிவாகவே, தான் பார்த்தக் காட்சியால் தீங்காகப் பாதிக்கப்பட்டது ஆசாப் மட்டுமல்ல. அவர் சொன்னார்: “ஆகையால் அவருடைய ஜனங்கள் இந்த வழியாகவே திரும்புகிறார்கள்; [அவருடைய ஜனங்களை அவர் இங்கு மறுபடியும் இப்படித்தான் கொண்டுவருகிறார், NW] தண்ணீர்கள் அவர்களுக்குப் பரிபூரணமாய்ச் சுரந்துவரும். தேவனுக்கு அது எப்படித் தெரியும்? உன்னதமானவருக்கு அதைப்பற்றி அறிவு உண்டோ? என்று சொல்லுகிறார்கள்.” (சங்கீதம் 73:10, 11) பொல்லாதவர்கள் செழிப்படைவதுபோல் தோன்றுவதால், கடவுளுடைய மக்களில் ஒரு சிலர் தவறான கருத்தைப் பின்பற்றி, ‘என்ன நடக்கிறது என்பது கடவுளுக்குத் தெரியாது, அக்கிரமக்காரருக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதில்லை’ என்று சொல்லும் அக்கிரமக்காரரின் அதே நிலைக்கு வரலாம் என்பதை அர்த்தப்படுத்துவதாக எபிரெய வாக்கியம் இருக்கலாம். மறுபக்கத்தில், கெட்டவர்கள் தண்டனையிலிருந்து விலகிக்கொள்ளும் உரிமை இருப்பதுபோல் அக்கிரமத்தைப் பின்பற்றுவதைக் காண்பது கசப்பான மருந்தைக் குடிப்பதுபோன்றது, இது நேர்மையானவனை இவ்வாறு கேட்கும்படித் தூண்டுகிறது: ‘இந்தக் காரியங்களைக் கடவுள் பொருத்துக்கொள்வது எப்படி? என்ன நடக்கிறது என்பதை அவர் பார்க்கிறதில்லையா?’
அவருடைய சூழ்நிலையைத் துன்மார்க்கரின் சூழ்நிலையோடு ஒப்பிடுபவராய், ஆசாப் சொல்கிறார்: “இதோ, இவர்கள் துன்மார்க்கர்; இவர்கள் என்றும் சுகஜீவிகளாயிருந்து, ஆஸ்தியைப் பெருகப்பண்ணுகிறார்கள். நான் விருதாவாகவே என் இருதயத்தைச் சுத்தம்பண்ணி, குற்றமில்லாமையிலே என் கைகளைக் கழுவினேன். நாள்தோறும் நான் வாதிக்கப்பட்டும், காலைதோறும் தண்டிக்கப்பட்டும் இருக்கிறேன்.” (சங்கீதம் 73:12-14) ஆசாப் ஒரு நேர்மையான வாழ்க்கையை வாழ்வது பிரயோஜனமற்றது என்று உணர்ந்தார். ஒருவேளை பொல்லாத வழிகளில் ‘அவர்களுடைய ஆஸ்திகளைப் பெருகப்பண்ணுவதன்மூலம்’ துன்மார்க்கர் செழிப்படைகிறார்கள். அவர்கள் மிக மோசமான தவறுக்குரியத் தண்டனையிலிருந்தும் தப்பித்துக்கொள்கிறார்கள், ஆசாப்போ “நாள்தோறும்”—எழுந்ததிலிருந்து இரவு படுக்கைக்குப் போகும்வரை—வாதிக்கப்படுவதாக உணர்ந்தார். யெகோவா அவரைக் காலைதோறும் தண்டிப்பதாக அவர் உணர்ந்தார். இது சரியாகத் தோன்றாததால், அது ஆசாப்பின் விசுவாசத்தைச் சோதித்தது.
சிந்தனையில் ஒரு மறுசீராக்குதல்
இறுதியில் அவருடைய சிந்தனை தவறு என்று உணர்ந்து, ஆசாப் சொன்னார்: “இவ்விதமாய்ப் பேசுவேன் என்று நான் சொன்னேனானால், இதோ, உம்முடைய பிள்ளைகளின் சந்ததிக்குத் துரோகியாவேன். இதை அறியும்படிக்கு யோசித்துப்பார்த்தேன்; நான் தேவனுடைய பரிசுத்த ஸ்தலத்துக்குள் பிரவேசித்து, அவர்கள் முடிவைக் கவனித்து உணருமளவும், அது என் பார்வைக்கு விசனமாயிருந்தது. நிச்சயமாகவே நீர் அவர்களைச் சறுக்கலான இடங்களில் நிறுத்தி, பாழான இடங்களில் விழப்பண்ணுகிறீர். அவர்கள் ஒரு நிமிஷத்தில் எவ்வளவு பாழாய்ப்போகிறார்கள்! பயங்கரங்களால் அழிந்து நிர்மூலமாகிறார்கள். நித்திரை தெளிந்தவுடனே சொப்பனம் ஒழிவதுபோல், ஆண்டவரே, நீர் விழிக்கும்போது, அவர்கள் வேஷத்தை இகழுவீர்.”—சங்கீதம் 73:15-20.
ஆசாப் குறைகூறும் குரலை எழுப்பாமல் இருந்தது நல்லதாக இருந்தது, ஏனென்றால் வெளிப்படையாக யெகோவாவைச் சேவிப்பது பிரயோஜனமற்றது என்று சொல்வது வணக்கத்தாரடங்கிய அவருடைய குடும்பத்தின் அங்கத்தினர்களை உற்சாகம் இழக்கச்செய்திருக்கும், அல்லது அவர்களுடைய விசுவாசத்தைப் பலவீனப்படுத்தியிருக்கும். அமைதியாக இருந்து, ஆசாப் செய்ததைச் செய்வது எவ்வளவு மேலானது! துன்மார்க்கர் தவறுகளைச் செய்துவிட்டு தப்பிப்போவதுபோல் தோன்றுவதையும், நேர்மையுள்ளவர்கள் துன்பப்படுவதையும் பார்ப்பதற்கு அவர் கடவுளின் பரிசுத்த ஸ்தலத்திற்குப் போனார். அங்கிருந்த சூழ்நிலை ஆசாப்பை அமைதலாக யெகோவாவின் வணக்கத்தாரோடு தியானிப்பதற்கு அனுமதித்தது, அவருடைய சிந்தனை மறுசீராக்கப்பட்டது. எனவே, இன்று நாம் என்ன காண்கிறோம் என்பதினால் திகைத்துப்போனால், நம்மைநாமே தனிமைப்படுத்துவதற்குப் பதிலாக, இவ்வாறே கடவுளுடைய மக்களோடு கூட்டுறவுகொள்வதன்மூலம் நாம் நம்முடைய கேள்விகளுக்குப் பதில்களைக் கண்டடைவோமாக.—நீதிமொழிகள் 18:1.
கடவுள் துன்மார்க்கனை “சறுக்கலான இடங்களில்” நிறுத்தியிருப்பதாக ஆசாப் உணர ஆரம்பித்தார். அவர்களுடைய வாழ்க்கை பொருள் சம்பந்தமான காரியங்களையே மையமாகக் கொண்டிருப்பதால், அவர்கள் திடீர் அழிவை எதிர்ப்படப்போகும் அபாயத்தில் இருக்கிறார்கள். அதிகம்போனால், வயதான காலத்தில் மரணம் அவர்களை ஆட்கொள்ளும், தீய வழியில் சம்பாதிக்கப்பட்ட அவர்களுடைய ஆஸ்தியெல்லாம் அவர்களுக்கு நீண்ட வாழ்நாட்காலத்தைக் கொடுப்பதில்லை. (சங்கீதம் 49:6-12) அவர்களுடைய செழுமை, உடனே மறைந்துபோகும் கனவுபோல் இருக்கும். அவர்கள் முதிர்வயதை அடைவதற்குள்ளுங்கூட நீதி திடீரென்று அவர்களை ஆட்கொண்டு, அவர்கள் விதைத்ததை அறுக்கும்படிச் செய்ய வைக்கும். (கலாத்தியர் 6:7) அவர்களுக்கு உதவிசெய்ய முடிந்த ஒரே ஒருவரையும் அவர்கள் வீம்புக்கென்றே ஒதுக்கித் தள்ளியதால், அவர்கள் உதவியற்றவர்களாய், நம்பிக்கையற்று விடப்படுகிறார்கள். அவர்களுக்கு விரோதமாக யெகோவா செயல்படும்போது, அவர் அவர்களுடைய “வேஷத்தை”—அவர்களுடைய பகட்டாரவாரத்தையும் அந்தஸ்தையும்—ஏளனத்தோடு பார்ப்பார்.
உங்கள் பிரதிபலிப்பைப் பேணிக்காப்பாற்றுங்கள்
அவர் பார்த்ததற்கு நன்றாகப் பிரதிபலிப்பைக் காட்டாதிருந்துவிட்டதற்காக, ஆசாப் ஒத்துக்கொண்டார்: “இப்படியாக என் மனம் கசந்தது, என் உள்ளிந்திரியங்களிலே குத்துண்டேன். நான் காரியம் அறியாத மூடனானேன்; உமக்கு முன்பாக மிருகம் போலிருந்தேன். ஆனாலும் நான் எப்பொழுதும் உம்மோடிருக்கிறேன்; என் வலதுகையைப் பிடித்துத் தாங்குகிறீர். உம்முடைய ஆலோசனையின்படி நீர் என்னை நடத்தி, முடிவிலே என்னை மகிமையில் ஏற்றுக்கொள்வீர்.”—சங்கீதம் 73:21-24.
பொல்லாதவர்களின் பொருள்வள செழுமையிலும், நேர்மையானவர்களின் துன்பத்திலும் லயித்திருப்பது, ஒருவருடைய இருதயத்தைக் கசப்புணர்ச்சியடையச் செய்யும் அல்லது அவரைப் புண்படுத்தும். அவருக்கு உள்ளாக—அவருடைய உள்ளிந்திரியங்களில்—இந்த நிலையைக்குறித்த ஆசாபின் குழப்பம் அவருக்கு மகாப்பெரிய வேதனையைத் தந்தது. யெகோவாவின் நோக்குநிலையிலிருந்து, அவர் வெறும் உடலுணர்ச்சியினால் மட்டுமே பிரதிபலிக்கும் ஒரு பகுத்தறிவற்ற மிருகத்தைப்போல் ஆனார். ஆனாலும், ஆசாப் ‘கடவுளோடிருந்தார், அவருடைய வலதுகையைப் பிடித்துத் தாங்கியிருந்த கடவுளோடு எப்பொழுதும் இருந்தார்.’ நாம் யோசனையில் தவறுசெய்தால், ஆசாப் செய்ததைப்போலவே, யெகோவாவின் ஆலோசனையைத் தேடிக்கண்டடையலாம், கடவுள் நம் கையைப் பிடித்து, தாங்கி, நம்மை வழிநடத்துவார். (எரேமியா 10:23-ஐ ஒப்பிடவும்.) அவருடைய ஆலோசனையைப் பொருத்திப் பிரயோகிப்பதன்மூலம் மட்டுமே நாம் சந்தோஷமான எதிர்காலத்தில் வழிநடத்தப்பட்டவர்களாக இருக்க முடியும். ஒரு சமயத்தில் நாம் ஒருவேளை தாழ்வுபடுத்தப்படலாம், ஆனால் யெகோவா ‘நம்மை மகிமையில்’ அல்லது மேன்மையில் ‘ஏற்றுக்கொள்வதன்மூலம்,’ எதிர்மாறானது நடக்கும்படிச் செய்வார்.
யெகோவாவைச் சார்ந்திருப்பதன் அவசியத்தைப் போற்றுபவராக ஆசாப் தொடர்ந்து சொன்னார்: “பரலோகத்தில் உம்மையல்லாமல் எனக்கு யார் உண்டு? பூலோகத்தில் உம்மைத் தவிர எனக்கு வேறே விருப்பமில்லை. என் மாம்சமும் என் இருதயமும் மாண்டுபோகிறது; தேவன் என்றென்றைக்கும் என் இருதயத்தின் கன்மலையும் என் பங்குமாயிருக்கிறார். இதோ, உம்மைவிட்டுத் தூரமாய்ப் போகிறவர்கள் நாசமடைவார்கள்; உம்மைவிட்டுச் சோரம்போகிற அனைவரையும் சங்கரிப்பீர். எனக்கோ, தேவனை அண்டிக்கொண்டிருப்பதே நலம்; நான் உமது கிரியைகளையெல்லாம் சொல்லிவரும்படி காத்தராகிய ஆண்டவர்மேல் என் நம்பிக்கையை வைத்திருக்கிறேன்.”—சங்கீதம் 73:25-28.
ஆசாப்பைப்போலவே, உண்மையான பாதுகாப்பிற்கும் ஆறுதலுக்கும் நம்பிக்கையை நாம் வேறு யார் மேலும் அல்ல, யெகோவாவின் மேல் மாத்திரமே வைத்திருக்க முடியும். (2 கொரிந்தியர் 1:3, 4) எனவே, மற்றொருவனின் பூமிக்குரிய ஐசுவரியங்களின்மீது பொறாமைப்படுவதற்குப் பதிலாக, நாம் கடவுளைச் சேவித்து, பரலோகத்தில் பொக்கிஷங்களைச் சேர்த்துவைப்போமாக. (மத்தேயு 6:19, 20) யெகோவாவோடு ஓர் அங்கீகரிக்கப்பட்ட நிலைநிற்கையைப் பெற்றிருப்பதே நம்முடைய பெரும் மகிழ்ச்சியாக இருக்கவேண்டும். நம்முடைய உடலுறுப்புகள், நம்முடைய இருதயம் செயல்படாமல் போனாலும், அவர் நம்மை பலப்படுத்தி, நாம் துயரங்கள் மத்தியில் நம்பிக்கையையும், தைரியத்தையும் இழந்தவிடாதபடி இருப்பதற்கு, நம் இருதயத்திற்கு பலத்தைக் கொடுப்பார். யெகோவாவோடு கொண்டிருக்கும் நெருக்கம், விலைமதிப்பில்லாத ஆஸ்தி. அதை உதறித்தள்ளுவது, அவரை உதறித்தள்ளுகிறவர்களோடு நமக்கும் பேராபத்தைக் கொண்டுவரும். எனவே, ஆசாப்பைப்போலவே, நாம் கடவுளிடம் நெருங்கி வந்து, நம்முடைய கவலையெல்லாம் அவர்மேல் போட்டுவிடுவோமாக. (1 பேதுரு 5:6, 7) இது நம்முடைய ஆவிக்குரிய நலனை மேம்படுத்தி யெகோவாவின் அதிசயமான செயல்களைப்பற்றி மற்றவர்களிடம் சொல்வதற்கு நம்மைத் தூண்டுகிறது.
யெகோவாவிற்கு உண்மைமாறாது தொடர்ந்திருங்கள்
ஆசாப் குழப்பத்திலிருந்தார், ஏனென்றால் அவருடைய சொந்த நாடாகிய இஸ்ரவேலில் பொல்லாதவர்கள் செழிப்படைந்துகொண்டிருப்பதை அவர் பார்த்தார். யெகோவாவின் உண்மைமாறாத ஊழியர்கள் மத்தியில், ‘துன்மார்க்க மக்கள்’ பெருமை, அகந்தை, வன்முறை, பெருந்திண்டித்தனம், மோசடி போன்றவற்றினால் குற்றமுள்ளவர்களாகவும், அவர்கள் என்ன செய்கிறார்கள் என்று கடவுளுக்குத் தெரியும் என்பதை மறுதலிப்பவர்களாகவும் இருந்தார்கள். (சங்கீதம் 73:1-11) என்னே ஓர் எச்சரிக்கை! யெகோவா தேவனை மகிழ்விப்பதற்கு, நாம் பெருமை, வன்முறை, ஏளனம், நேர்மையற்றத்தன்மை போன்ற பண்புகளிலிருந்து விலகியிருக்கவேண்டியது அவசியம். ஆசாப்பைப்போல, யெகோவாவின் ஊழியர்களனைவரும் “தேவனுடைய பரிசுத்த ஸ்தலத்திற்குள் பிரவேசித்து,” அவருடைய உண்மைமாறாத வணக்கத்தாரோடு ஒழுங்காகக் கூடிவருவார்களாக. உண்மையில், யெகோவாவை நேசிக்கிறவர்கள் அனைவரும் ‘கடவுளிடம் நெருங்கி வரட்டும்,’ மற்றவர்கள் என்ன சொன்னாலும் அல்லது செய்தாலும் அதைப் பொருட்படுத்தாமல், துயரங்களின் மத்தியிலும் தங்களைத் தாங்குபவர் என்று அவர்மீது நம்பிக்கை வைக்கட்டும்.—சங்கீதம் 73:12-28; 3 யோவான் 1-10.
உண்மையில், பொல்லாதவர்களின் பொருள்வளம், ஆசாப்பைச் செய்ததுபோல, நம்முடைய விசுவாசத்தைச் சோதிக்கலாம். ஆனாலும், நாம் நம்முடைய வாழ்க்கையை யெகோவாவின் சேவையில் மையமாகக் கொண்டிருந்தோமேயானால், இந்தச் சோதனையை நாம் சகிக்க முடியும். இதை நாம் செய்வதினால், நாம் வெகுமானம் அளிக்கப்படுவோம். ஏனென்றால், ‘நம்முடைய கிரியையையும் தமது நாமத்திற்காகக் காண்பித்த அன்புள்ள பிரயாசத்தையும் மறந்துவிடுகிறதற்கு தேவன் அநீதியுள்ளவரல்லவே.’ (எபிரெயர் 6:10) நம்முடைய வெகுமானத்தோடு ஒப்பிட்டுப் பார்த்தால், நம்முடைய சோதனைகள் ‘அதிசீக்கிரத்தில் நீங்கும் இலேசானதாக’ இருக்கின்றன. (2 கொரிந்தியர் 4:17) யெகோவா தம்முடைய உண்மைமாறாத ஊழியர்களுக்கு வாக்குக்கொடுத்திருக்கும் நித்திய மகிழ்ச்சியான வாழ்க்கையோடு ஒப்பிடும்போது, சுமார் 70 அல்லது 80 வருட துன்புறுத்தலுங்கூட வெறுமனே நம்முடைய உதடுகளின்மேல் ஒருவித சப்தத்தோடு கடந்துபோகும் ஒரு சுவாசத்திற்கு சமம்.—சங்கீதம் 90:9, 10.
பொல்லாதவர்களின் பொருள்வள செழுமையும், அதற்கு முரணாக நீதியின் நிமித்தம் நாம் படும் துன்பங்களும், கடவுளின் பரிசுத்த ஆவியின் கனியாகிய விசுவாசத்தைக் காண்பிப்பதிலிருந்து நம்மை ஒருபோதும் தடுத்து நிறுத்த அனுமதிக்கக்கூடாது. (கலாத்தியர் 5:22, 23; 1 பேதுரு 3:13, 14) துன்மார்க்கரை நாம் பின்பற்றினால் சாத்தான் சந்தோஷப்படுவான், இவர்கள் பெரும்பாலும் செழிப்படைவார்கள் ஏனென்றால் அவர்கள் சுத்தமற்றவர்கள். பதிலாக, யெகோவாவின் நீதியான தராதரங்களைப் புறக்கணிக்கும்படியான தவிர்க்கும்படிச் செய்யும் சோதனைகளை எதிர்ப்பதன்மூலம் யெகோவாவின் நாமத்தை நாம் கனப்படுத்துவோமாக. (செப்பனியா 2:3) பொல்லாதவர்களின் வெற்றியைக் கண்டு நாம் வருந்தவேண்டாம், ஏனென்றால், அதிகபட்சம் அவர்கள் வெறும் பொருள்வள செழுமையைத்தான் பெற முடியும். மேலும் அதற்கு என்ன மதிப்பு இருக்கிறது? அது சர்வலோக கர்த்தர் யெகோவாவில் விசுவாசத்தைக் காட்டுபவரால் அனுபவிக்கப்படும் ஆவிக்குரிய செழுமையோடு ஒப்பிடப்படுவதற்கு ஆரம்பிக்கவுங்கூட முடியாது.