யெகோவா, அதிசயமான காரியங்களைச் செய்பவர்
“தேவரீர் மகத்துவமுள்ளவர், அதிசயமானவைகளைச் செய்கிறவர்; நீர் ஒருவரே கடவுள்.” —சங்கீதம் 86:10, தி.மொ.
1, 2. (எ) மனிதனின் நவீன கண்டுபிடிப்புகள் இந்த உலகத்தை எவ்வாறு பாதித்திருக்கின்றன? (பி) மேம்பட்ட காரியங்களுக்குரிய நம்பிக்கையை நாம் எங்கே காணலாம்?
தற்கால மனிதன் தன்னுடைய நவீன கண்டுபிடிப்புகள்—மின்சார சாதனங்கள், கம்பியில்லாத் தொலைப்போக்குவரத்துகள், தொலைக்காட்சி, மோட்டார் வண்டி, ஜெட் ஆகாயவிமானப் பயணம், கம்ப்யூட்டர் கலை தொழில்நுட்பம் ஆகியவை—அதிசயமானவையென ஒருவேளை பெருமைபாராட்டலாம். இவை இந்த உலகத்தை ஒரே அண்மை சுற்றுப்புறமாக்கியுள்ளன. ஆனால், ஆ, எத்தகைய சுற்றுப்புறம்! எல்லாருக்கும் சமாதானம், செழுமை, நிறைவு இருப்பதற்குப் பதிலாக, மனிதவர்க்கம் படுகொலைபாதகப் போர்கள், குற்றச் செயல்கள், திகிலூட்டி வற்புறுத்தும் செயல்முறைகள், தூய்மைக்கேடு, நோய்கள் மற்றும் வறுமை ஆகியவற்றால் வாதிக்கப்படுகிறது. மேலும் எண்ணிக்கையில் குறைக்கப்பட்டபோதிலும், உலகமெங்கும் பரவலாகவுள்ள அணுசக்தி போர்த்தளவாடங்கள் இன்னும் மனித குலத்தை அடியோடு அழித்துப்போட முடியும். மரண வியாபாரிகளாகிய, போர்த்தளவாட உற்பத்தியாளர்கள், பூமியிலுள்ள மிகப் பெரிய வாணிகத்தைத் தொடர்ந்து நடத்துகின்றனர். செல்வந்தர் மேலுமதிகச் செல்வந்தராயும், ஏழைகள் மேலுமதிக ஏழைகளாயும் ஆகிக்கொண்டிருக்கின்றனர். இதற்கு ஒரு தீர்வை எவராவது கண்டுபிடிக்க முடியுமா?
2 முடியும்! எப்படியெனில், ஒருவர், “உயர்ந்தவனிலும் உயர்ந்தவராகிய,” யெகோவா தேவன், விடுதலையைக் கொண்டுவருவாரென உறுதிகொடுக்கிறார். (பிரசங்கி 5:8) சங்கீதங்களை எழுதும்படி அவர் ஏவினார், அவை, துயரக் காலங்களில் மிகுந்த ஆறுதலையும், ஞானமான அறிவுரையையும் அளிக்கின்றன. இந்தச் சங்கீதங்களில் 70-க்கும் மேற்பட்டவற்றை தாவீது எழுதினார். அவற்றிற்குள் சங்கீதம் 86, பின்வரும் எளிய முகவுரையைக் கொண்டுள்ளது: “தாவீதின் விண்ணப்பம்.” இது, நீங்கள் உங்கள் சொந்தமாக்கிக் கொள்ளக்கூடிய ஒரு விண்ணப்பம்.
துன்பப்படுத்தப்பட்டும் உண்மைத்தவறாதிருத்தல்
3. இந்தக் காலங்களில், ஊக்கமூட்டும் என்ன முன்மாதிரியை தாவீது நமக்கு அளிக்கிறார்?
3 தாவீது துன்பப்பட்டுக்கொண்டிருக்கையில் இந்தச் சங்கீதத்தை எழுதினார். இன்று, “கையாளுவதற்குக் கடினமான கொடிய காலங்க”ளாகிய, சாத்தானின் ஒழுங்குமுறையின் இந்தக் “கடைசி நாட்களி”னூடே வாழ்ந்துகொண்டிருக்கும் நாம் அதைப்போன்ற துன்பங்களை எதிர்ப்படுகிறோம். (2 தீமோத்தேயு 3:1, NW; மத்தேயு 24:9-13-ஐயும் பாருங்கள்.) நம்மைப்போல், தாவீது, தன்னைப் பாதித்தப் பிரச்னைகளினால் கவலைகளையும் மனச்சோர்வையும் அனுபவித்தார். ஆனால் அந்தத் துன்பங்கள் தன் சிருஷ்டிகரின்பேரில் தனக்கு இருந்த தன்னுடைய உண்மைப்பற்றுறுதியுள்ள நம்பிக்கையைக் குன்றச்செய்ய அவர் ஒருபோதும் அனுமதிக்கவில்லை. அவர் பின்வருமாறு கதறி வேண்டினார்: “யெகோவா, உமது திருச்செவியைச் சாய்த்து என் விண்ணப்பத்தைக் கேட்டருளும்; நான் சிறுமையானவன், ஏழை, என்னைக் காத்தருளும், நான் பக்தியுள்ளவன் [உண்மைப்பற்றுறுதியுள்ளவன், NW]; என் கடவுளே, உம்மில் நம்பிக்கை வைத்திருக்கிற அடியேனை நீர் ரட்சித்தருளும்.”—சங்கீதம் 86:1, 2, தி.மொ.
4. நம்முடைய திடநம்பிக்கையை நாம் எவ்வாறு காட்ட வேண்டும்?
4 தாவீது நம்பினதுபோலவே, “சகலவிதமான ஆறுதலின் தேவனா”கிய யெகோவா, இந்தப் பூமிக்குத் தம்முடைய செவியைச் சாய்த்து, நம்முடைய தாழ்மையான ஜெபங்களுக்குச் செவிகொடுப்பாரென்று நாம் திடநம்பிக்கையுடன் இருக்கலாம். (2 கொரிந்தியர் 1:3, 4) முழு மனதோடும் நம்முடைய கடவுளில் நம்பிக்கை வைத்து, நாம் தாவீதின் பின்வரும் அறிவுரையைப் பின்பற்றலாம்: “யெகோவாவின்மேல் உன் பாரத்தை வைத்துவிடு, அவர் உன்னை ஆதரிப்பார்; நீதிமானை ஒருபோதும் தள்ளாடவொட்டார்.”—சங்கீதம் 55:22, தி.மொ.
யெகோவாவிடம் நெருங்கிய உறவு
5. (எ) கவனமான மொழிபெயர்ப்பாளர்கள் சிலர் எவ்வாறு யூத வேதபாரகரின் பிழைகளைத் திருத்தி அமைத்தனர்? (பி) சங்கீதங்கள் 85-ம் 86-ம் எவ்வகையில் யெகோவாவை மகிமைப்படுத்துகின்றன? (அடிக்குறிப்பைப் பாருங்கள்.)
5 இந்த 86-வது சங்கீதத்தில், “யெகோவாவே” என்ற கூற்றைத் தாவீது 11 தடவைகள் பயன்படுத்துகிறார். தாவீதின் ஜெபம் எவ்வளவு உணர்ச்சிப்பற்றார்வம் மிகுந்ததாயிருக்கிறது, யெகோவாவிடம் அவருடைய உறவு எவ்வளவு மிக நெருங்கியதாயுள்ளது! கடவுளுடைய பெயரை அத்தகைய நெருங்கிய உள்ளுணர்ச்சியுடன் பயன்படுத்துவது, பின்னால், யூத வேதபாரகருக்கு, கவனிக்கத்தக்கதாய் சோஃபரிம் எனப்பட்டவர்களுக்கு விருப்பமற்றதாகிவிட்டது. அவ்வாறு செய்தால் கடவுளுடைய பெயரைத் தவறான முறையில் பயன்படுத்துவதாகுமென்ற போலிக்கோட்பாட்டு பயத்தை அவர்கள் மனதில் பேணிவளர்த்தார்கள். மனிதன் கடவுளுடைய ரூபத்தில் சிருஷ்டிக்கப்பட்டானென்ற உண்மையைப் புறக்கணித்து, மனிதருங்கூட காட்டும் இயல்புக்குணங்களைக் கடவுளுக்கு உரியதாகக் குறித்துக் காட்டுவதற்கு அவர்கள் பின்வாங்கினர். ஆகையால், எபிரெய மூலவாக்கியத்தில் இந்த ஒரே சங்கீதத்தில் இந்தத் தெய்வீகப் பெயர் வரும் 11 இடங்களில், 7 இடங்களை ய்ஹ்வ்ஹ் (YHWH) (யெகோவா) என்ற பெயருக்குப் பதிலாக அடோனே ʹAdho-naiʼ (கர்த்தர்) என்ற பட்டப்பெயரை மாற்றி அமைத்தனர். பரிசுத்த வேதவார்த்தைகளின் புதிய உலக மொழிபெயர்ப்பு பைபிளும், அதோடுகூட மற்றக் கவனமான மொழிபெயர்ப்புகளும், இந்தத் தெய்வீகப் பெயரைக் கடவுளுடைய வார்த்தையில் அதற்குரிய நியாயமான இடத்தில் திரும்ப அமைத்ததற்காக நாம் நன்றியுள்ளோராய் இருக்கலாம். இதன் பலனாக, யெகோவாவிடம் நம்முடைய உறவு, அது நேர்மையாகச் செய்யப்படவேண்டியபடி அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.a
6. யெகோவாவின் பெயர் நமக்கு மிக அருமையானதென்பதை எந்த வழிகளில் நாம் காட்டலாம்?
6 தாவீதின் இந்த விண்ணப்பம் தொடர்ந்து கூறுவதாவது: “ஆண்டவரே [யெகோவாவே, NW], எனக்கு இரங்கும், நாளெல்லாம் உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன். அடியேன் ஆத்துமா மகிழச் செய்யும்; உமக்கு நேராக, ஆண்டவரே [யெகோவாவே, NW], என் ஆத்துமாவை உயர்த்துகிறேன்.” (சங்கீதம் 86:3, 4, தி.மொ.) தாவீது யெகோவாவை நோக்கி “நாளெல்லாம்” விடாமல் கூப்பிட்டுக்கொண்டிருந்தார் என்பதைக் கவனியுங்கள். அவர் வனாந்தரத்தில் அகதியாகத் திரிகையில் செய்ததுபோல், இரவினூடே அவர் நிச்சயமாகவே அடிக்கடி ஜெபித்தார். (சங்கீதம் 63:6, 7) அவ்வாறே இன்று, கற்பழிக்கப்போவதாக அல்லது மற்றக் குற்றச் செயல் நடப்பிக்கும்படி தாக்கப்போவதாக பயமுறுத்தப்படுகையில் சாட்சிகள் சிலர் யெகோவாவிடம் உரத்தச் சத்தமாய்க் கூக்குரலிட்டிருக்கிறார்கள். சில சமயங்களில் அதன் சந்தோஷமான பலனில் ஆச்சரியமடைந்திருக்கின்றனர்.b “தாவீதின் குமாரனான இயேசு கிறிஸ்து” பூமியில் இருந்தபோது அவருக்கு அது இருந்ததுபோல், யெகோவாவின் பெயர் நமக்கு மிக அருமையானது. யெகோவாவின் பெயர் பரிசுத்தப்படுவதற்காக ஜெபிக்கும்படி இயேசு தம்முடைய சீஷர்களுக்குக் கற்பித்தார், மேலும் அந்தப் பெயர் குறித்து நிற்பவற்றை அவர்களுக்குத் தெரியப்படுத்தினார்.—மத்தேயு 1:1; 6:9; யோவான் 17:6, 25, 26.
7. யெகோவா தம்முடைய ஊழியர்களின் ஆத்துமாவைக் களிகூரச் செய்வதைப்பற்றி என்ன உதாரணங்கள் நமக்கு இருக்கின்றன, நாம் எவ்வாறு பிரதிபலிக்க வேண்டும்?
7 தாவீது தன் ஆத்துமாவை, தன்னையே முழுமையாக யெகோவாவிடம் உயர்த்தினார். அவ்வாறே செய்யும்படி நம்மையும் அவர் ஊக்கப்படுத்தி, சங்கீதம் 37:5-ல் (தி.மொ.) பின்வருமாறு கூறுகிறார்: “உன் வழியை யெகோவாவுக்கு ஒப்புவி; அவரில் நம்பிக்கையாயிரு, அவரே காரியத்தை வாய்க்கப்பண்ணுவார்.” இவ்வாறு நம்முடைய ஆத்துமாவைக் களிகூரச் செய்யும்படி நாம் யெகோவாவிடம் மன்றாடுவது பதிலளிக்கப்படாமற் போகாது. யெகோவாவின், உத்தமத்தைக் காக்கும் ஊழியர்கள் பலர்—இன்னல்கள், துன்புறுத்தல்கள், மற்றும் நோய்களின் மத்தியிலும்—அவருடைய சேவையில் மிகுந்த மகிழ்ச்சியைத் தொடர்ந்து கண்டடைந்து வருகிறார்கள். ஆப்பிரிக்காவில், அங்கோலா, லைபீரியா, மொஸம்பீக், ஸேய்ர் போன்ற, போரால் அலைக்கழிக்கப்படுகிற பகுதிகளில் இருக்கிற நம் சகோதரர்கள், யெகோவாவின் சேவையைத் தங்கள் வாழ்க்கையில் தொடர்ந்து முதல் வைக்கின்றனர்.c அவர்கள் மெய்யாகவே ஏராளமான ஆவிக்குரிய அறுவடையில் களிகூரும்படி அவர் செய்திருக்கிறார். அவர்கள் சகித்து நிலைத்திருப்பதுபோல், நாமும் சகிக்க வேண்டும். (ரோமர் 5:3-5) நாம் சகிக்கையில், பின்வருமாறு உறுதியளிக்கப்படுகிறோம்: “குறித்தக்காலத்துக்கெனத் தரிசனம் இன்னும் காத்திருக்கிறது, அது ஆவலாய் முடிவை நோக்குகிறது, . . . அது தவறாமல் வரும்.” (ஆபகூக் 2:3, தி.மொ.) யெகோவாவில் திடநம்பிக்கையுடனும் விசுவாசத்துடனும், நாமும் தொடர்ந்து “ஆவலாய் முடிவை நோக்கு”வோமாக.
யெகோவாவின் நற்குணம்
8. நாம் யெகோவாவிடம் என்ன நெருங்கிய உறவைக் கொண்டிருக்கலாம், அவர் தம்முடைய நற்குணத்தை எவ்வாறு காட்டியிருக்கிறார்?
8 தாவீது பின்வருமாறு மேலுமான உணர்ச்சியூக்கம் நிறைந்த மன்றாட்டைச் செய்கிறார்: “ஆண்டவரே [யெகோவாவே, NW], நீர் நல்லவர், மன்னிக்கச் சித்தமாயிருக்கிறவர்; உம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவரிடத்திலும் மிகுந்த கிருபையுடையவர் [அன்புள்ள-தயவுள்ளவர்]. யெகோவா, என் ஜெபத்திற்குச் செவிசாய்த்தருளும்; என் விண்ணப்பங்களின் சத்தத்தைக் கவனித்தருளும். என் ஆபத்துநாளில் [துயரநாளில், NW] உம்மை நோக்கிக் கூப்பிடுவேன்; நீர் எனக்குச் செவிகொடுப்பீர்.” (சங்கீதம் 86:5-7, தி.மொ.) “யெகோவாவே”—இந்தச் சொல்லமைப்பின் நெருங்கிய உறவுக்குரிய தன்மையால் நாம் மறுபடியும் மறுபடியும் உணர்ச்சிக் கிளர்ச்சியடைகிறோம்! இது ஜெபத்தின்மூலம் இடைவிடாமல் வளர்த்துவரக்கூடிய ஒரு நெருங்கிய உறவாகும். மற்றொரு சந்தர்ப்பத்தில் தாவீது பின்வருமாறு ஜெபித்தார்: “என் வாலிபப்பருவத்தின் பாவங்களையும் என் மீறுதல்களையும் நினையாதிரும்; யெகோவா, உமது காருண்யத்தினிமித்தம் என்னை உமது கிருபையின்படியே நினைத்தருளும்.” (சங்கீதம் 25:7, தி.மொ.) யெகோவா நற்குணத்தின் உருவாகவே இருக்கிறார்—இயேசுவின் மீட்கும்பொருளை அளிப்பதில், மனந்திரும்பும் பாவிகளுக்கு இரக்கம் காண்பிப்பதில், மற்றும் தம்முடைய உண்மைப் பற்றுறுதியும் நன்றிமதித்துணர்வுமுள்ள சாட்சிகளுக்கு அன்புள்ள-தயவைப் பொழிவதில் அவ்வாறு இருக்கிறார்.—சங்கீதம் 100:3-5; மல்கியா 3:10.
9 கடந்த காலத் தவறுகளின்பேரில் நாம் மனதை அலைக்கழித்துக் கொண்டிருக்க வேண்டுமா? இப்பொழுது நாம் நம்முடைய பாதங்களை நேர்மையான பாதைகளில் செல்ல வைத்துக்கொண்டிருந்தால், மனந்திரும்பினவர்களுக்கு அப்போஸ்தலன் பேதுரு கொடுக்கும் உறுதியாகிய, “இளைப்பாறுதலின் காலங்கள்” யெகோவாவிடமிருந்து வரும் என்பதை நாம் நினைவுபடுத்துகையில் ஊக்குவிக்கப்படுகிறோம். (அப்போஸ்தலர் 3:19) நம்முடைய மீட்பராகிய இயேசுவின் மூலம் ஜெபத்தில் நாம் யெகோவாவிடம் நம்மை நெருங்கியிருக்கத் தொடர்ந்துவைத்து வருவோமாக; இயேசு அன்புடன் கூறினதாவது: “வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன். நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாய் இருக்கிறேன்; என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு, என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள்; அப்பொழுது, உங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும்.” உண்மைப்பற்றுறுதியுள்ள சாட்சிகள் இயேசுவின் மதிப்புவாய்ந்த பெயரில் இன்று யெகோவாவிடம் ஜெபிக்கையில், அவர்கள் நிச்சயமாகவே இளைப்பாறுதலைக் கண்டடைகிறார்கள்.—மத்தேயு 11:28, 29; யோவான் 15:16.
10. யெகோவாவின் அன்புள்ள-தயவுக்கு என்ன முக்கியத்துவத்தைச் சங்கீதங்களின் புத்தகம் கொடுக்கிறது?
10 சங்கீதங்களின் புத்தகம் யெகோவாவின் “அன்புள்ள-தயவை” நூறுதடவைகளுக்கு மேலாகக் குறிப்பிடுகிறது. அத்தகைய அன்புள்ள-தயவு நிச்சயமாகவே ஏராளமாயுள்ளது! 118-வது சங்கீதம், அதன் முதல் நான்கு வசனங்களில், யெகோவாவுக்கு நன்றிசெலுத்தும்படி கடவுளுடைய ஊழியர்களை ஏவி அழைத்து, “ஏனெனில் அவருடைய அன்புள்ள-தயவு வரையறையில்லாத காலத்துக்குமுள்ளது” என்று நான்கு தடவைகள் மீண்டும் மீண்டும் கூறுகிறது. 136-வது சங்கீதம் “அவருடைய அன்புள்ள-தயவின்” பேரன்பானத் தன்மையை 26 தடவைகள் அறிவுறுத்துகிறது. “நாம் எல்லாரும் அநேக விஷயங்களில் தவறுகிறோம்” என்று யாக்கோபு 3:2 சொல்லுகிறபடி—நாம் எந்த வழிகளில் தவறினாலும், யெகோவாவின் இரக்கத்திலும் அன்புள்ள-தயவிலும் திடநம்பிக்கை வைத்து, அவருடைய மன்னிப்பை நாடிக்கேட்க ஆயத்தமாயிருப்போமாக. அவருடைய அன்புள்ள-தயவு, நம்மிடம் காட்டும் அவருடைய பற்றுறுதியுள்ள அன்பின் வெளிக்காட்டாகும். நாம் உண்மைப்பற்றுறுதியுடன் கடவுளுடைய சித்தத்தைத் தொடர்ந்து செய்வோமானால், ஒவ்வொரு இக்கட்டையும் எதிர்த்துச் சமாளிக்க நம்மைப் பலப்படுத்துவதில் அவர் தம்முடைய பற்றுறுதியுள்ள அன்பைக் காட்டுவார்.—1 கொரிந்தியர் 10:13.
11. மூப்பர்கள் எடுக்கும் நடவடிக்கை எவ்வாறு குற்ற உணர்ச்சிகளை நீக்க உதவிசெய்யலாம்?
11 மற்றவர்களால் நாம் இடறலடையச் செய்யப்படும் சந்தர்ப்பங்கள் இருக்கலாம். சிறுபிள்ளையாக இருந்தபோது உணர்ச்சிவசமாக அல்லது உடல்சம்பந்தமாகத் தவறான முறையில் பயன்படுத்தப்பட்டது சிலரைக் குற்ற அல்லது முற்றிலும் தகுதியற்ற உணர்ச்சிகளுடன் விட்டிருக்கிறது. இத்தகைய பாதகத்துக்கு ஆளானவர்கள் யெகோவாவை நோக்கிக் கூப்பிட்டு, அவர் பதில் தருவார் என்ற திடநம்பிக்கையுடன் இருக்கலாம். (சங்கீதம் 55:16, 17) அது தவறான நடத்தைக்கு ஆளானவரின் குற்றமல்லவென்ற உண்மையை இத்தகையவர் ஏற்கும்படி அவருக்கு உதவிசெய்வதில் தயவுள்ள மூப்பர் ஒருவர் ஒருவேளை அக்கறை எடுக்கலாம். அதன்பின், அந்த நபர் (அவன் அல்லது அவள்) கடைசியாக அந்தப் ‘பாரத்தைச் சுமக்கக்’ கூடியவராகும் வரையில், மூப்பர் அவ்வப்போது ஒழுங்காய்த் தொலைபேசியின் மூலம் அவரிடம் நட்புறவான முறையில் பேசிவருவது அந்த நபருக்கு உதவியாக இருக்கலாம்.—கலாத்தியர் 6:2, 5.
12. துன்பத்துயரங்கள் எவ்வாறு பெருகியிருக்கின்றன, ஆனால் நாம் எவ்வாறு அவற்றை வெற்றிகரமாய் எதிர்த்துச் சமாளிக்கலாம்?
12 இன்று யெகோவாவின் ஜனங்கள் போராட வேண்டியிருக்கிற மற்றப் பல துயர்தரும் சூழ்நிலைமைகள் இருக்கின்றன. பெரும் இடுக்கண்கள், 1914-ல் ஆரம்பித்து, இந்தப் பூமியைத் தொல்லைப்படுத்தத் தொடங்கின. இயேசு முன்னறிவித்தபடியே, அவை “கடுந்துன்ப வேதனைகளுக்கு ஆரம்ப”மாக இருந்தன. “இந்தக் காரிய ஒழுங்குமுறையின் முடிவுக்”குள் நாம் மிக நெருங்கி முன்னேறியிருப்பதால் துன்பங்கள் மிகவும் பெருகிவிட்டிருக்கின்றன. (மத்தேயு 24:3, 8, NW) பிசாசின் “கொஞ்சக்காலம்” அதன் உச்சநிலையான முடிவை நோக்கி விரைவாக இறங்கிக்கொண்டிருக்கிறது. (வெளிப்படுத்துதல் 12:12) தன் இரையைத் தேடித் திரியும் “கெர்ச்சிக்கிற சிங்கம்போல்,” அந்தப் பெரிய எதிராளி, நம்மைக் கடவுளுடைய மந்தையிலிருந்து பிரித்து அழித்துப்போடும்படி கிடைக்கக்கூடிய எல்லா சூழ்ச்சிகளையும் பயன்படுத்திக் கொண்டிருக்கிறான். (1 பேதுரு 5:8) ஆனால் அவன் வெற்றிப்பெறமாட்டான்! ஏனெனில், தாவீதைப்போல், நாம் நம்முடைய நம்பிக்கையை முழுமையாக நம்முடைய ஒரே கடவுளாகிய யெகோவாவில் உறுதியாய் ஊன்றவைக்கிறோம்.
13. பெற்றோரும் அவர்களுடைய பிள்ளைகளும் யெகோவாவின் நற்குணத்தை எவ்வாறு தங்களுக்குக் கிடைக்கக்கூடியதாக்கலாம்?
13 சந்தேகமில்லாமல், தாவீது, யெகோவாவின் நற்குணத்தில் உறுதியாய் நம்பியிருக்க வேண்டியதைத் தன் குமாரன் சாலொமோனின் இருதயத்தில் படிப்படியாக அறிவுறுத்தியிருந்தார். இவ்வாறு, சாலொமோன் தன் சொந்த குமாரனுக்குப் பின்வருமாறு அறிவூட்ட முடிந்தது: “உன் உணர்வில் சாயாதே உன் முழு நெஞ்சோடும் [இருதயத்தோடும், NW] யெகோவாவை நம்பு. உன் எல்லா வழியிலும் அவரை நினை. அப்போதவர் உன் பாதையை நேராக்குவார். உன்னையே புத்திமானென்று எண்ணாதே, யெகோவாவுக்குப் பயந்து தீமைக்கு விலகு.” (நீதிமொழிகள் 3:5-7, தி.மொ.) அதைப்போல் இன்று பெற்றோரும் தங்கள் சிறு பிள்ளைகளுக்கு யெகோவாவிடம் நம்பிக்கையோடு ஜெபிப்பது எவ்வாறெனவும் இரக்கமற்ற உலகத்தின் திடீர்த்தாக்குதல்களை—பள்ளியில் தங்கள் இணையானோரிடமிருந்து வரும் வற்புறுத்தல் மற்றும் ஒழுக்கக்கேடான நடத்தைக்கு உட்படுவதற்கான சோதனைகள் போன்றவற்றை—எதிர்த்து சமாளிப்பது எவ்வாறெனவும் கற்றுக்கொடுக்க வேண்டும். உங்கள் பிள்ளைகளுடன் ஒவ்வொரு நாளும் பைபிள் நியமங்களை வழக்கமாய்க் கடைப்பிடித்து வாழ்வது, அவர்களுடைய இளம் இருதயத்தில் யெகோவாவின்பேரில் உண்மையான அன்பையும் ஜெபசிந்தையுடன் அவரில் நம்பிக்கை வைத்திருப்பதையும் ஊன்றிப் பதியச் செய்யும்.—உபாகமம் 6:4-9; 11:18, 19.
யெகோவாவின் ஒப்பற்றச் செயல்கள்
14, 15. யெகோவாவின் ஒப்பற்றச் செயல்களில் சில யாவை?
14 உள்ளார்ந்த உறுதியான நம்பிக்கையுடன் தாவீது பின்வருமாறு சொல்கிறார்: “ஆண்டவரே [யெகோவாவே, NW], தேவர்களுக்குள்ளே உமக்கு நிகருமில்லை; உமது செயல்களுக்கு ஒப்புமில்லை.” (சங்கீதம் 86:8, தி.மொ.) யெகோவாவின் செயல்கள், எந்த மனிதனும் கற்பனைசெய்துங்கூட காணமுடியாத அளவுக்கு மிகப் பெரியவை, மகத்துவமானவை, அதிக கம்பீரமானவை. நவீன விஞ்ஞானம் சிறிதளவு நோக்கின இந்தச் சிருஷ்டிக்கப்பட்ட சர்வலோகம்—அதன் எல்லையற்ற பரப்பு, அதன் ஒத்திசைவு, அதன் மகத்துவம்—தாவீது மனதால் உணர்ந்த எதையும் பார்க்கிலும் மிக அதிக பிரமாண்டமானதாக நிரூபித்திருக்கிறது. எனினும், அவனுங்கூட பின்வருமாறு சொல்லும்படி உள்ளத்தில் தூண்டுவிக்கப்பட்டான்: “வானங்கள் கடவுளின் மகிமையைப் பிரஸ்தாபிக்கின்றன; ஆகாயமண்டலம் அவர் கரங்களின் கிரியையைக் காட்டுகிறது.”—சங்கீதம் 19:1, தி.மொ.
15 பகலையும் இரவையும், பருவங்களையும், விதைப்பதற்கும் அறுவடைக்குமுரிய காலத்தையும், எதிர்காலத்தில் வரவிருந்த மனிதனின் மகிழ்ச்சிக்காக ஏராளமான இன்பங்களுக்கானவற்றையும் அளித்து பூமியை அதற்கேற்ற சரியான நிலையில் வைத்து ஆயத்தம் செய்த முறையிலும், யெகோவாவின் செயல்கள் அதிசயமாய் வெளிப்படுத்திக் காட்டப்படுகின்றன. நாம்தாமே எவ்வளவு அதிசயமாய் உண்டாக்கப்பட்டு தேவைப்படும் யாவும் அமைத்தளிக்கப்பட்டிருக்கிறோம், இவ்வாறு நாம், நமக்குச் சுற்றிலுமுள்ள யெகோவாவின் செயல்களை அனுபவித்து மகிழக்கூடியோராக இருக்கிறோம்!—ஆதியாகமம் 2:7-9; 8:22; சங்கீதம் 139:14.
16. யெகோவாவின் நற்குணத்தின் மிகப்பெரிய வெளிக்காட்டு என்ன, இது மேலுமான எந்த ஒப்பற்றச் செயல்களுக்கு வழிநடத்துகின்றன?
16 நம்முடைய முதல் பெற்றோர் கடவுளுக்குக் கீழ்ப்படியாமற்போய், இந்நாள்வரை பூமியை வாதிக்கும் துன்பத்துயரங்களைத் தொடங்கிவைத்த பின்பு, யெகோவா தம்முடைய அன்பினால் தம்முடைய குமாரனை, கடவுளுடைய ராஜ்யத்தை யாவரறிய அறிவிக்கும்படியும் மனிதவர்க்கத்தை மீட்கும் கிரயபலியாக மரிக்கும்படியும் பூமிக்கு அனுப்பினதில் அதிசயமான ஒரு செயலை நடப்பித்தார். இன்னும் அதிசயங்களுக்குமேல் அதிசயம்! பின்பு, தம்முடைய தெரிந்துகொள்ளப்பட்ட துணை அரசராகும்படி யெகோவா கிறிஸ்துவை உயிர்த்தெழுப்பினார். (மத்தேயு 20:28; அப்போஸ்தலர் 2:32, 34) கோடிக்கணக்கான உயிர்த்தெழுப்பப்பட்ட மனிதரும் அடங்கியிருக்கப்போகும் “ஒரு புதிய பூமி”யின்மீது, இரக்க மனப்பான்மையுள்ள “புதிய வானமாக” கிறிஸ்துவுடன் ஆளப்போகும் ஒரு “புதுச்சிருஷ்டி”யையும், உண்மைத்தவறாத மனிதரிலிருந்து கடவுள் தெரிந்தெடுத்திருக்கிறார். (ரோமர் 5:15; 2 கொரிந்தியர் 5:17; வெளிப்படுத்துதல் 21:1, 5-7; 1 கொரிந்தியர் 15:22-26) இவ்வாறு யெகோவாவின் செயல்கள் மகிமையான உச்சநிலைக்குச் சென்றுகொண்டிருக்கும்! நிச்சயமாகவே, நாம் பின்வருமாறு உணர்ச்சிமீதூரக் கூறலாம்: “யெகோவாவே, . . . உமக்குப் பயந்தவர்களுக்கென்று நீர் வைத்திருக்கிற நன்மை எவ்வளவு பெரிது!”—சங்கீதம் 31:17-19, தி.மொ.
17. யெகோவாவின் செயல்களைக் குறித்ததில், சங்கீதம் 86:9 இப்பொழுது எவ்வாறு நிறைவேறுகிறது?
17 யெகோவாவின் தற்காலச் செயல்கள் சங்கீதம் 86:9-ல் தாவீது பின்வருமாறு விவரிப்பது உட்பட்டிருக்கின்றன: “ஆண்டவரே [யெகோவாவே, NW], நீர் உண்டாக்கின எல்லா ஜாதிகளும் வந்து, உமக்கு முன்பாகப் பணிந்து, உமது நாமத்தை மகிமைப்படுத்துவார்கள்.” தம்முடைய புதுச்சிருஷ்டியின் மீதியானோரான, ராஜ்ய சுதந்தரவாளிகளாலாகிய அந்தச் “சிறு மந்தை”யை மனிதவர்க்கத்துக்குள்ளிருந்து வெளியே அழைத்தப் பின்பு, யெகோவா, “மற்றச் செம்மறியாடுகளா”லாகிய ஒரு “திரள் கூட்டத்தை,” “சகல ஜாதிகளிலு”மிருந்து கூட்டிச் சேர்க்கத் தொடர்ந்து செயற்படுகிறார், லட்சக்கணக்கான இவர்களும் இயேசுவின் சிந்தப்பட்ட இரத்தத்தில் விசுவாசம் காட்டுகின்றனர். இவர்களை அவர் சுறுசுறுப்பாய்ச் செயல்படும் ஓர் அமைப்பாகக் கட்டியமைத்திருக்கிறார், இதுவே இன்று பூமியிலிருக்கும் சமாதானத்தை நேசிப்போராலாகிய அந்த ஒரே உலகளாவிய சமுதாயம். இதைக் கூர்ந்து கவனித்து, பரலோகத் தூதர் சேனைகள் யெகோவாவுக்கு முன்பாக முகங்குப்புற விழுந்து பணிந்து: “எங்கள் தேவனுக்குத் துதியும் மகிமையும் ஞானமும் ஸ்தோத்திரமும் கனமும் வல்லமையும் பெலனும் சதாகாலங்களிலும் உண்டாவதாக” என்று கூறுகிறார்கள். இந்தத் திரள் கூட்டத்தாரும் யெகோவாவின் பெயரை மகிமைப்படுத்தி, இந்த உலகத்தின் முடிவைத் தப்பிப்பிழைத்து பரதீஸான பூமியில் என்றென்றும் வாழும் நம்பிக்கையுடன் “இரவும் பகலும்” அவரைச் சேவிக்கின்றனர்.—லூக்கா 12:32; வெளிப்படுத்துதல் 7:9-17; யோவான் 10:16, NW.
யெகோவாவின் மகத்துவம்
18. தாம் ‘ஒருவரே கடவுள்’ என்பதை யெகோவா எவ்வாறு மெய்ப்பித்துக் காட்டியிருக்கிறார்?
18 அடுத்தப்படியாக தாவீது யெகோவாவின் தெய்வத்துவத்தைக் கவனிக்கச் செய்து, பின்வருமாறு கூறுகிறார்: “தேவரீர் மகத்துவமுள்ளவர், அதிசயமானவைகளைச் செய்கிறவர்; நீர் ஒருவரே கடவுள்.” (சங்கீதம் 86:10, தி.மொ.) நிச்சயமாக, தாம் ‘ஒருவரே கடவுள்’ என்பதை யெகோவா, பூர்வத்திலிருந்தே மெய்ப்பித்துக் காட்டிக்கொண்டிருக்கிறார். எகிப்தின் கொடுங்கோன்மை வாய்ந்த பார்வோனே மோசேயை எதிர்த்து சவாலாகப் பின்வருமாறு கூறினான்: “யெகோவா யார்? நான் ஏன் அவர் சொல்லுக்குச் செவிகொடுத்து இஸ்ரவேலைப் போகவிடவேண்டும்? நான் அந்த யெகோவாவை அறியேன்.” ஆனால் யெகோவா எவ்வளவு மகத்துவமானவரென்பதை அவன் சீக்கிரத்தில் அறியலானான்! சர்வவல்லமையுள்ள கடவுள், பாழ்ப்படுத்தும் வாதைகளை அனுப்புவதாலும், எகிப்தின் முதற்பேறான குமாரர்களைக் கொல்வதாலும், பார்வோனையும் அவனுடைய தேர்ந்தெடுத்த சிறந்த சேனையைச் சிவந்த சமுத்திரத்தில் அடியோடழிப்பதனாலும் எகிப்தின் தேவர்களையும் மந்திரவித்தை நடப்பிக்கும் புரோகிதர்களையும் மதிப்பிழக்கும்படிச் செய்தார். உண்மையாகவே, தேவர்களுக்குள் யெகோவாவுக்கு நிகரானவர் ஒருவருமில்லை!—யாத்திராகமம் 5:2; 15:11, 12.
19, 20. (எ) வெளிப்படுத்துதல் 15:3, 4-ன் பாட்டு எப்பொழுது அதன் மகத்துவஞ்சிறந்த உச்சத் தொனி உயர்வை உடையதாயிருக்கும்? (பி) இப்பொழுதேயும் நாம் எவ்வாறு யெகோவாவின் செயலில் பங்குகொள்ளலாம்?
19 தாம் ஒருவரே கடவுளாக, யெகோவா, தம்முடைய கீழ்ப்படிதலுள்ள வணக்கத்தாரைத் தற்கால எகிப்திலிருந்து—சாத்தானின் உலகத்திலிருந்து—விடுதலைசெய்வதற்காக ஆயத்தம் செய்வதில் அதிசயமான காரியங்களை நடப்பிக்கத் தொடர்ந்து செயலாற்றுகிறார். சரித்திரம் முழுவதிலுமே நடந்த எதைப் பார்க்கிலும் மிக அதிகப் பரவலான பிரசங்க ஏற்பாட்டைக் கொண்டு, தம்முடைய தெய்வீக நியாயத்தீர்ப்புகள் பூமி முழுவதிலும் சாட்சியாக யாவரறிய அறிவிக்கப்படும்படி செய்திருக்கிறார், இவ்வாறு மத்தேயு 24:14-ல் சொல்லப்பட்டுள்ள இயேசுவின் தீர்க்கதரிசனத்தை நிறைவேற்றினார். சீக்கிரத்தில், “முடிவு” வரவேண்டும், அப்பொழுது யெகோவா, பூமியிலுள்ள எல்லா அக்கிரமத்தையும் துடைத்தொழிப்பதால் தம்முடைய மகத்துவத்தை ஈடிணையற்ற அளவில் மெய்ப்பித்துக் காட்டுவார். (சங்கீதம் 145:20) அப்பொழுது மோசேயின் பாட்டும் ஆட்டுக்குட்டியானவரின் பாட்டும் படிப்படியாய் ஒலிப்பெருகி இவ்வாறு உச்சநிலையை அடையும்: “சர்வவல்லவராகிய யெகோவா தேவனே, உம்முடைய செயல்கள் மகத்துவமும் அதிசயமுமானவை. நித்தியத்தின் ராஜாவே, உம்முடைய வழிகள் நீதியும் சத்தியமுமானவை. யெகோவாவே, நீர் ஒருவரே உண்மைத்தவறாதவராதலால், யார் உமக்கு உண்மையில் பயப்படாமலும், உம்முடைய பெயரை மகிமைப்படுத்தாமலும் இருப்பான்?”—வெளிப்படுத்துதல் 15:3, 4, NW.
20 நம்மைப்பற்றிய வரையில், கடவுளின் இந்த மகத்துவஞ்சிறந்த நோக்கங்களைப்பற்றி மற்றவர்களிடம் பேசுவதில் நாம் மிக ஆர்வமுள்ளோராய் இருப்போமாக. (அப்போஸ்தலர் 2:11-ஐ ஒத்துப்பாருங்கள்.) நம்முடைய அடுத்தக் கட்டுரை விவரிக்கப்போகிறபடி, யெகோவா, நம்முடைய நாளிலும் எதிர்காலத்திலும் தொடர்ந்து மகத்துவமும் அதிசயமுமான காரியங்களைச் செய்வார். (w92 12⁄15)
[அடிக்குறிப்புகள்]
a ஆன்ட்ரூ A. போனர் பின்வருமாறு சொன்னதாக, 1874-ன் பைபிள் விளக்கவுரை நூல் எடுத்துக் குறிப்பிடுகிறது: “கடவுளுடைய தனிப்பட்ட நற்குணத்தின், அவருடைய மகிமையான பெயரின் அதிகம், மிக அதிகம், கடைசி [85-வது] சங்கீதத்தின் முடிவில் வெளிப்படுத்திக் காட்டப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து மற்றொன்று, ‘தாவீதின் விண்ணப்பம்’ பெரும்பாலும் அதற்குச் சமமாய் முழுமையாக யெகோவாவின் குணத்தைப்பற்றியதாகப் பின்தொடருவதற்கு இது காரணமாக இருக்கலாம். இந்தச் [86-வது] சங்கீதத்தின் அடிப்படைக் குறிப்புரை யெகோவாவின் பெயரேயாகும்.”
b தி உவாட்ச் டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸையிட்டி பிரசுரித்த அவேக்! வெளியீடு, ஜூன் 22, 1984-ன் 28-ம் பக்கத்தைப் பாருங்கள்.
c நுட்பவிவரங்களுக்கு, ஜனவரி 1, 1993 காவற்கோபுர பத்திரிகையில் வரவிருக்கும் “உலகெங்குமுள்ள யெகோவாவின் சாட்சிகளின் 1992 ஊழிய ஆண்டு அறிக்கை” அட்டவணையைப் பாருங்கள்.
உங்களுக்கு நினைவிருக்கிறதா?
◻ சங்கீதம் 86-ல் உள்ள ஜெபத்தை நாம் ஏன் நம்முடைய சொந்த ஜெபமாக்கிக்கொள்ள வேண்டும்?
◻ யெகோவாவுடன் நெருங்கிய உறவை நாம் எவ்வாறு கண்டடையலாம்?
◻ யெகோவா தம்முடைய நற்குணத்தை எவ்வாறு நம்மிடம் வெளிப்படுத்திக் காட்டுகிறார்?
◻ யெகோவாவின் ஒப்பற்றச் செயல்களில் சில யாவை?
◻ மகத்துவத்தைக் குறித்ததில் எவ்வாறு யெகோவா ‘ஒருவரே கடவுள்’?
9. என்ன உறுதியளிப்பை மனந்திரும்பின பாவிகள் ஊக்கத்துடன் இருதயத்தில் ஏற்கவேண்டும்?
[பக்கம் 10-ன் படம்]
வரவிருக்கும் “புதிய பூமியில்,” யெகோவாவின் அதிசயமான செயல்கள் அவருடைய மகிமைக்கும் நற்குணத்துக்கும் சாட்சிபகரும்