நம் நாட்களை எப்படி எண்ணுவது என யெகோவா காட்டுகிறார்
“நாங்கள் ஞான இருதயமுள்ளவர்களாகும்படி, எங்கள் நாட்களை எண்ணும் அறிவை எங்களுக்குப் போதித்தருளும்.”—சங்கீதம் 90:12.
1. ‘நம்முடைய நாட்களை எண்ணும் அறிவை’ நமக்குப் போதிக்கும்படி யெகோவாவைக் கேட்பது ஏன் பொருத்தமானது?
யெகோவா தேவன் நம்முடைய சிருஷ்டிகர், நமக்கு ஜீவன் தந்தவர். (சங்கீதம் 36:9; வெளிப்படுத்துதல் 4:11) ஆகையால், நம் வாழ்நாள் காலத்தை எப்படி ஞானமாக பயன்படுத்துவது என்பதை நமக்கு காண்பிப்பதற்கு அவரைவிட சிறந்தவர் வேறு எவரும் இருக்க முடியாது. எனவே, “நாங்கள் ஞான இருதயமுள்ளவர்களாகும்படி, எங்கள் நாட்களை எண்ணும் அறிவை எங்களுக்குப் போதித்தருளும்” என கடவுளிடம் சங்கீதக்காரன் வேண்டிக்கொண்டது பொருத்தமாக இருந்தது. (சங்கீதம் 90:12) இந்த வேண்டுதல் பதிவுசெய்யப்பட்டுள்ள 90-ஆம் சங்கீதத்தை நாம் கவனமாக ஆராய்வது நிச்சயமாகவே தகுந்தது. ஆனால் முதலாவதாக, கடவுளால் ஏவப்பட்ட இந்தப் பாட்டை சுருக்கமாக நாம் பார்க்கலாம்.
2. (அ) சங்கீதம் 90-ஐ இயற்றியவர் யாரென குறிப்பிடப்பட்டுள்ளது, அது எப்போது இயற்றப்பட்டிருக்கலாம்? (ஆ) வாழ்க்கையைப் பற்றிய நம் கருத்தை 90-ஆம் சங்கீதம் எவ்வாறு பாதிக்க வேண்டும்?
2 “தேவனுடைய மனிதனாகிய மோசேயின் ஜெபம்” என 90-ஆம் சங்கீதத்தின் தலைப்பில் கூறப்பட்டுள்ளது. மனிதரின் நிலையற்ற வாழ்வை இச்சங்கீதம் அறிவுறுத்துவதால், இஸ்ரவேலர் எகிப்திய அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்கப்பட்ட பின்பு, வனாந்தரத்தில் 40 ஆண்டுகள் அலைந்து திரிந்த சமயத்தில் இது இயற்றப்பட்டிருக்கலாம். அப்போது ஆயிரக்கணக்கில் ஏற்பட்ட மரணம் உண்மையற்ற ஒரு சந்ததியை முடிவுக்கு கொண்டுவந்தது. (எண்ணாகமம் 32:9-13) எவ்வாறாயினும், அபூரண மனிதரின் வாழ்க்கை குறுகியதென 90-ஆம் சங்கீதம் காட்டுகிறது. அப்படியானால், நம்முடைய அருமையான நாட்களை நாம் ஞானமாய் பயன்படுத்த வேண்டுமென்பது தெளிவாயிருக்கிறது.
3. சங்கீதம் 90-ல் அடங்கியிருக்கும் அடிப்படை விஷயங்கள் யாவை?
3 சங்கீதம் 90-ல், 1 முதல் 6 வசனங்கள், யெகோவாவே நம் நித்திய வாசஸ்தலம் என அடையாளம் காட்டுகின்றன. 7 முதல் 12 வசனங்கள், விரைவில் கடந்துபோகிற நம் வாழ்நாள் காலத்தை அவருக்கு ஏற்கத்தகுந்த முறையில் பயன்படுத்த நமக்கு என்ன தேவை என்பதைக் காட்டுகின்றன. 13 முதல் 17 வசனங்களில் வெளிப்படுத்தியிருக்கிறபடி, யெகோவாவின் அன்புள்ள தயவையும் ஆசீர்வாதத்தையும் பெற நாம் மனமார விரும்புகிறோம். நிச்சயமாகவே, இந்தச் சங்கீதம் யெகோவாவின் ஊழியர்களான நம் ஒவ்வொருவரின் சொந்த அனுபவங்களோடு நேரடியாக பொருந்துவதில்லை. இருப்பினும், இந்த ஜெபத்தில் வெளிக்காட்டப்படும் மனப்பான்மையை நாம் ஒவ்வொருவரும் மனதில் கொண்டு பின்பற்ற வேண்டும். ஆகையால், கடவுளுக்கு ஒப்புக்கொடுத்தவர்களின் நோக்குநிலையில் சங்கீதம் 90-ஐ நாம் கூர்ந்து கவனிப்போம்.
யெகோவா—நம் “மெய்யான வாசஸ்தலம்”
4-6. எவ்வாறு யெகோவா நமக்கு ‘மெய்யான வாசஸ்தலமாக’ இருக்கிறார்?
4 சங்கீதக்காரன் இந்த வார்த்தைகளுடன் தொடங்குகிறார்: ‘யெகோவாவே, தேவரீர் தலைமுறை தலைமுறையாக எங்களுக்கு அடைக்கலமானவர் [“மெய்யான வாசஸ்தலம்,” NW]. பர்வதங்கள் தோன்றுமுன்னும் [“பிறக்குமுன்னும்,” NW], நீர் பூமியையும் உலகத்தையும் உருவாக்குமுன்னும் [“கர்ப்ப வேதனைகளுடன் பிறப்பிப்பதற்கு முன்னும்,” NW], நீரே அநாதியாய் என்றென்றைக்கும் தேவனாயிருக்கிறீர்.’—சங்கீதம் 90:1, 2.
5 ‘நித்திய கடவுளாகிய’ யெகோவா, நமக்கு ‘மெய்யான வாசஸ்தலமாக,’ ஆவிக்குரிய அடைக்கலமாக திகழ்கிறார். (ரோமர் 16:26, NW) நாம் பாதுகாப்பாய் உணருகிறோம், ஏனென்றால் ‘ஜெபத்தைக் கேட்கிறவராக’ நமக்கு உதவ அவர் எப்போதும் இருக்கிறார். (சங்கீதம் 65:2) நம்முடைய பரலோகத் தகப்பனிடம், அவருடைய நேச குமாரன் மூலம் நம் கவலைகளை போட்டுவிடுவதால், ‘எல்லாப் புத்திக்கும் மேலான தேவசமாதானம் நம்முடைய இருதயங்களையும் சிந்தைகளையும் காத்துக்கொள்கிறது.’—பிலிப்பியர் 4:6, 7; மத்தேயு 6:9; யோவான் 14:6, 14.
6 அடையாள அர்த்தத்தில், யெகோவா நமக்கு ‘மெய்யான வாசஸ்தலமாக’ இருப்பதால், நாம் ஆவிக்குரிய பாதுகாப்பை அனுபவிக்கிறோம். ‘உள் அறைகளையும்’ அவர் நமக்கு அருளுகிறார்; இவை ஆவிக்குரிய புகலிடங்களாக, அவருடைய ஜனங்களின் சபைகளோடு நெருங்க சம்பந்தப்பட்டவையாக இருக்கலாம். அங்கு அன்புள்ள மேய்ப்பர்கள் நம் பாதுகாப்புணர்வுக்கு பெரிதும் உதவியாக இருக்கிறார்கள். (ஏசாயா 26:20, NW; 32:1, 2; அப்போஸ்தலர் 20:28, 29) மேலும், நம்மில் சிலர் நெடுங்காலமாக கடவுளுக்கு சேவைசெய்து வந்திருக்கும் குடும்பங்களைச் சேர்ந்தவர்களாக இருப்பதால் நாம் தனிப்பட்ட விதமாகவே ‘தலைமுறை தலைமுறையாக அவரை மெய்யான வாசஸ்தலமாக’ கண்டிருக்கிறோம்.
7. என்ன கருத்தில் மலைகள் ‘பிறந்தன,’ பூமி ‘கர்ப்ப வேதனைகளுடன்’ பிறப்பிக்கப்பட்டது?
7 மலைகள் ‘பிறப்பதற்கு’ முன்னும், பூமி “கர்ப்ப வேதனைகளுடன்” பிறப்பிக்கப்படுவதற்கு முன்னும் யெகோவா இருந்தார். மனிதனுடைய நோக்குநிலையிலிருந்து பார்த்தால், இந்தப் பூமியை அதன் எல்லா அம்சங்களுடனும் வேதியியல் மாற்றங்களுடனும் சிக்கலான இயக்கங்களுடனும் உண்டாக்குவதற்கு பேரளவு முயற்சி தேவைப்பட்டிருக்கும். மலைகள் ‘பிறந்தன’ என்றும் பூமி ‘கர்ப்ப வேதனைகளுடன்’ பிறப்பிக்கப்பட்டது என்றும் சொல்வதன் மூலம், யெகோவா இவற்றை படைக்கையில் அதில் உட்பட்டிருந்த பேரளவான வேலைக்கு சங்கீதக்காரன் பெரும் மதிப்பு காட்டுகிறார். சிருஷ்டிகரின் கைவேலைப்பாடுகளுக்கு அதைப் போன்ற மரியாதையும் நன்றியுணர்வுமே நமக்கும் இருக்க வேண்டும் அல்லவா?
நமக்கென யெகோவா எப்போதும் இருக்கிறார்
8. யெகோவா “அநாதியாய் என்றென்றைக்கும்” கடவுளாக இருக்கிறார் என்ற கூற்று எதை அர்த்தப்படுத்துகிறது?
8 “நீரே அநாதியாய் என்றென்றைக்கும் தேவனாயிருக்கிறீர்” என்று சங்கீதக்காரன் பாடினார். “என்றென்றைக்கும்” என்பது ஒரு முடிவையுடைய ஆனால் திட்டவட்டமான காலவரையறை குறிப்பிடப்படாத விஷயங்களை குறிக்கலாம். (யாத்திராகமம் 31:16, 17; எபிரெயர் 9:15) இருந்தாலும், சங்கீதம் 90:2-லும் எபிரெய வேதாகமத்தில் வேறுசில வசனங்களிலும் என்றென்றைக்கும் என்பது நித்தியத்தையே அர்த்தப்படுத்துகின்றன. (பிரசங்கி 1:4, NW) கடவுள் எப்போதும் இருந்திருக்கிறார் என்பது எவ்வாறு சாத்தியமென நம்முடைய மனதால் புரிந்துகொள்ள முடிகிறதில்லை. எனினும், யெகோவாவுக்கு தொடக்கமும் இருக்கவில்லை முடிவும் இராது. (ஆபகூக் 1:12, NW) அவர் எப்போதும் உயிரோடிருப்பார், நமக்கு உதவ ஆயத்தமாகவும் இருப்பார்.
9. மனிதரின் ஓராயிரம் ஆண்டுகளை சங்கீதக்காரன் எதற்கு சமானமாக்குகிறார்?
9 மனிதரின் ஓராயிரம் ஆண்டுகள் நித்தியராகிய சிருஷ்டிகருக்கோ மிக குறுகிய காலமாக இருப்பதை குறிப்பிடும்படி சங்கீதக்காரன் தேவாவியால் ஏவப்பட்டார். கடவுளை நோக்கி சொல்பவராய், அவர் இவ்வாறு எழுதினார்: “நீர் மனிதரைப் புழுதிக்குத் திரும்பச்செய்து மனுப்புத்திரரே, திரும்புங்கள் என்கிறீர். ஆயிரம் வருஷம் உமது பார்வைக்குக் கடந்துபோன நேற்றைய தினமும் இராச்சாமமும் போலாம்.”—சங்கீதம் 90:3, 4, திருத்திய மொழிபெயர்ப்பு.
10. கடவுள் எவ்வாறு மனிதனை “புழுதிக்குத் திரும்பச்” செய்கிறார்?
10 மனிதன் சாகும் தன்மையுடையவன், கடவுள் அவனை ‘புழுதிக்குத் திரும்பச்’ செய்கிறார், அதாவது மனிதன் “மண்ணுக்கு” திரும்புகிறான். ‘நீ உண்டாக்கப்பட்ட பூமியின் மண்ணுக்கு திரும்பிச்செல்’ என யெகோவா சொல்வது போல இருக்கிறது. (ஆதியாகமம் 2:7; 3:19) இது, பலவான்களோ பலவீனரோ, ஐசுவரியவான்களோ ஏழைகளோ, எல்லாருக்கும் பொருந்துகிறது. ஏனெனில் அபூரண மனிதர் எவரும் “தன் சகோதரன் அழிவைக் காணாமல் இனி என்றைக்கும் உயிரோடிருக்கும்படி, எவ்விதத்தினாலாவது அவனை மீட்டுக்கொள்ளவும், அவனிமித்தம் மீட்கும்பொருளை தேவனுக்குக் கொடுக்கவுங்கூடாதே.” (சங்கீதம் 49:6-9) ஆனால், ‘தேவன் தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளியதற்காக’ நாம் எவ்வளவு நன்றியுள்ளோராக இருக்கிறோம்!—யோவான் 3:16; ரோமர் 6:23.
11. நமக்கு நீண்ட காலமாக இருப்பது கடவுளுக்கு மிகக் குறுகியதாக இருக்கிறதென்று நாம் ஏன் சொல்லலாம்?
11 யெகோவாவின் நோக்குநிலையில், 969 வயதான மெத்தூசலா ஒரு நாளுக்குக் குறைவாகவே வாழ்ந்தார். (ஆதியாகமம் 5:27) ஆயிரம் ஆண்டுகள் கடந்துசெல்வது, கடவுளுக்கு நேற்றைய தினம்போல், அதாவது 24 மணிநேர காலப்பகுதிபோல் இருக்கிறது. மேலும், ஆயிரம் ஆண்டுகள், இரவின்போது பாளையத்தை காக்கும் ஜாமக்காரனின் நாலு மணிநேர காவல் பகுதியைப்போல் இருக்கின்றன. (நியாயாதிபதிகள் 7:19) அப்படியானால், நமக்கு நீண்ட காலமாக இருப்பது, நித்திய கடவுளாகிய யெகோவாவிற்கு மிகக் குறுகிய காலமாக இருக்கிறது.
12. மனிதர் எவ்வாறு கடவுளால் ‘வாரிக்கொண்டு போகப்படுகிறார்கள்’?
12 கடவுளின் நித்தியத்துவத்திற்கு நேர்மாறாக, தற்போதைய மனித வாழ்க்கை மெய்யாகவே மிகக் குறுகியதாக உள்ளது. சங்கீதக்காரன் இவ்வாறு சொல்கிறார்: “அவர்களை வெள்ளம்போல் வாரிக்கொண்டு போகிறீர்; நித்திரைக்கு ஒத்திருக்கிறார்கள்; காலையிலே செழித்திருக்கிற புல்லுக்கு ஒப்பானவர்கள். அது காலையிலே பூத்துச் செழித்து மாலையிலே உலர்ந்து காய்ந்துபோம்.” (சங்கீதம் 90:5, 6, தி.மொ.) வனாந்தரத்தில் ஆயிரக்கணக்கான இஸ்ரவேலர் சாவதை மோசே கண்டார்; வெள்ளம் வாரிக்கொண்டு போவதுபோல் அவர்கள் கடவுளால் ‘வாரிக்கொண்டு போகப்பட்டார்கள்.’ சங்கீதத்தின் இந்தப் பகுதி, இவ்வாறு மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது: “நீர் மனிதரை மரண நித்திரையிலே வாரிக்கொண்டு போகிறீர்.” (நியூ இன்டர்நேஷனல் வர்ஷன்) மறுபட்சத்தில், அபூரண மனிதருடைய வாழ்நாள் குறுகிய கால “நித்திரைக்கு,” அதாவது வெறும் ஓர் இரவு தூக்கத்திற்கு ஒப்பாக இருக்கிறது.
13. நாம் எவ்வாறு வெறும் ‘புல்லைப்போல்’ இருக்கிறோம், இது நம் சிந்தனையை எவ்வாறு பாதிக்க வேண்டும்?
13 ‘காலையிலே பூத்து,’ சூரியனின் கடும் வெப்பத்தால் மாலைக்குள் உலர்ந்திருக்கும் ‘புல்லைப்போல்’ நாம் இருக்கிறோம். ஆம், ஒரே நாளில் உலர்ந்துபோகிற புல்லைப்போல் நம் வாழ்க்கை நிலையற்றதாக இருக்கிறது. ஆகையால், இந்த அருமையான பரிசை வீணாக்காதிருப்போமாக. மாறாக, இவ்வுலகில் மீந்திருக்கிற நம்முடைய ஆண்டுகளை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதன்பேரில் கடவுளுடைய வழிநடத்துதலை நாம் நாட வேண்டும்.
‘நம் நாட்களை எண்ணுவதற்கு’ யெகோவா உதவுகிறார்
14, 15. சங்கீதம் 90:7-9, இஸ்ரவேலர்மீது எவ்வாறு நிறைவேறியது?
14 கடவுளைக் குறித்து சங்கீதக்காரன் மேலும் சொல்கிறார்: “நாங்கள் உமது கோபத்தினால் அழிந்து உமது உக்கிரத்தினால் கலங்குகிறோம். எங்கள் அக்கிரமங்களை உமக்கு முன்பாகவும் எங்கள் அந்தரங்க பாவங்களை உமது முகத்தின் வெளிச்சத்திலும் நிறுத்தினீர். எங்கள் நாட்களெல்லாம் உமது கோபத்தால் போய்விட்டன; ஒரு பேச்சைப்போல் [“கிசுகிசுப்பு போல,” NW] எங்கள் வருஷங்களை முடித்துவிடுகிறோம்.”—சங்கீதம் 90:7-9, தி.மொ.
15 விசுவாசமற்ற இஸ்ரவேலர், ‘கடவுளுடைய கோபத்தினால் அழிந்தார்கள்.’ ‘அவருடைய உக்கிரத்தினால் கலங்கினார்கள்’ அல்லது ‘அவருடைய சீற்றத்தால் திகைப்படைந்தார்கள்.’ (பொது மொழிபெயர்ப்பு) கடவுளுடைய நியாயத்தீர்ப்புகளின் விளைவாக, சிலர் ‘வனாந்தரத்தில் அழிக்கப்பட்டார்கள்.’ (1 கொரிந்தியர் 10:5) யெகோவா ‘அவர்களுடைய அக்கிரமங்களை தமக்கு முன்பாக வைத்தார்.’ அவர்களுடைய வெளிப்படையான தவறுக்கு பதில் சொல்ல வேண்டிய பொறுப்புள்ளவர்களாக்கினார். ஆனால், அவர்களுடைய ‘அந்தரங்க பாவங்கள்’கூட அவருடைய ‘முகத்தின் வெளிச்சத்திற்கு’ முன்பாக இருந்தன. (நீதிமொழிகள் 15:3) மனந்திரும்பாத அந்த இஸ்ரவேலர், கடவுளுடைய கோபத்திற்கு இலக்கானவர்களாக, வெறும் ‘கிசுகிசுப்பு போல தங்கள் வருஷங்களை முடித்தார்கள்.’ அப்படி பார்த்தால், நம்முடைய குறுகிய வாழ்நாள் உதடுகளிலிருந்து கடந்து செல்லும் வெறும் கிசுகிசுப்பு போல இருக்கிறது.
16. சிலர் இரகசியமாய் பாவம் செய்து வருகிறார்களென்றால், அவர்கள் என்ன செய்ய வேண்டும்?
16 நம்மில் எவராவது இரகசியமாய் பாவம் செய்து வந்தால், அத்தகைய நடத்தையை ஓரளவு காலத்திற்கு, மற்ற மனிதரிடமிருந்து நாம் ஒருவேளை மறைத்து வைக்கலாம். ஆனால், மறைத்து வைக்கப்பட்ட நம் தவறு, ‘யெகோவாவின் முகத்தின் வெளிச்சத்திற்கு முன்பாக’ இருக்கும், மேலும் நம்முடைய செயல்கள் அவருடன் நமக்கு இருக்கும் உறவைக் கெடுத்துப்போடும். யெகோவாவுடன் நெருங்கிய உறவை மறுபடியும் அடைவதற்கு, நாம் அவரிடம் மன்னிப்புக்காக ஜெபித்து, நம்முடைய பாவங்களை விட்டு விலகி, கிறிஸ்தவ மூப்பர்கள் அளிக்கும் ஆவிக்குரிய உதவியை நன்றியோடு ஏற்க வேண்டும். (நீதிமொழிகள் 28:13; யாக்கோபு 5:14, 15) நம்முடைய நித்திய ஜீவ நம்பிக்கையை ஆபத்திற்குள்ளாக்கி, நம் உதடுகளிலிருந்து கடந்து செல்லும் வெறும் ‘கிசுகிசுப்பு போல நம்முடைய நாட்களை முடிப்பதைப் பார்க்கிலும்’ அது எவ்வளவு மேலானதாயிருக்கும்!
17. பொதுவாக ஜனங்களின் வாழ்நாள் காலம் எத்தனை ஆண்டுகள், அவை எவற்றால் நிறைந்தவை?
17 அபூரண மனிதரின் வாழ்நாள் காலத்தைப் பற்றி சங்கீதக்காரன் இவ்வாறு சொல்கிறார்: “எங்கள் ஆயுசுநாட்கள் எழுபது வருஷம், பெலத்தின் மிகுதியால் எண்பது வருஷமாயிருந்தாலும், அதின் மேன்மையானது வருத்தமும் சஞ்சலமுமே; அது சீக்கிரமாய்க் கடந்து போகிறது, நாங்களும் பறந்துபோகிறோம்.” (சங்கீதம் 90:10) பொதுவில் மனிதரின் வாழ்நாள் காலம் 70 ஆண்டுகள். காலேப் 85 வயதில் தனக்கு இருந்த அசாதாரண பலத்தைக் குறிப்பிட்டார். ஆரோன் (123), மோசே (120), யோசுவா (110) போன்றவர்களும் இதற்கு விதிவிலக்காக இருந்திருக்கின்றனர். (எண்ணாகமம் 33:39; உபாகமம் 34:7; யோசுவா 14:6, 10, 11; 24:29) ஆனால், எகிப்திலிருந்து வெளியேறிய விசுவாசமற்ற சந்ததியாரில் 20 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்கள் 40 ஆண்டுகளுக்குள் மரித்தார்கள். (எண்ணாகமம் 14:29-34) இன்று பல நாடுகளில், பொதுவாக மனித வாழ்நாள் காலம் சங்கீதக்காரன் குறிப்பிட்டபடியே இருக்கிறது. நம்முடைய ஆயுட்காலம் ‘வருத்தமும் சஞ்சலமும்’ நிறைந்ததாய் இருக்கிறது. அது விரைவாய் கடந்துபோகிறது, நாம் ‘பறந்து போய்விடுகிறோம்.’—யோபு 14:1, 2.
18, 19. (அ) “நாங்கள் ஞான இருதயமுள்ளவர்களாகும்படி, எங்கள் நாட்களை எண்ணும் அறிவை எங்களுக்குப் போதித்தருளும்” என்பதன் அர்த்தமென்ன? (ஆ) நாம் ஞானத்தை பயன்படுத்துவது என்ன செய்யும்படி நம்மை உந்துவிக்கும்?
18 சங்கீதக்காரன் அடுத்தபடியாக இவ்வாறு பாடுகிறார்: “உமது கோபத்தின் வல்லமையையும், உமக்குப் பயப்படத்தக்க விதமாய் உமது உக்கிரத்தையும் அறிந்து கொள்ளுகிறவன் யார்? நாங்கள் ஞான இருதயமுள்ளவர்களாகும்படி, எங்கள் நாட்களை எண்ணும் அறிவை எங்களுக்குப் போதித்தருளும்.” (சங்கீதம் 90:11, 12) கடவுளுடைய கோபத்தின் வல்லமை அல்லது அவருடைய உக்கிரத்தின் அளவு நம்மில் ஒருவருக்கும் முழுமையாக தெரியாது. இது, யெகோவாவிடம் நம் பயபக்தியை அதிகரிக்க வேண்டும். உண்மையில், யெகோவாவிடம் இவ்வாறு கேட்பதற்கு நம்மைத் தூண்ட வேண்டும்: “நாங்கள் ஞான இருதயமுள்ளவர்களாகும்படி எங்கள் நாட்களை எண்ணும் அறிவை எங்களுக்குப் போதித்தருளும்.”
19 மீந்திருக்கும் தங்கள் நாட்களை கடவுள் அங்கீகரிக்கும் முறையில் மதிப்பிடுவதிலும் பயன்படுத்துவதிலும் எவ்வாறு ஞானத்தை உபயோகிப்பது என்பதை யெகோவா தம் ஜனங்களுக்குக் கற்பிக்கும்படி கேட்கும் ஒரு ஜெபமாக சங்கீதக்காரனின் இந்த வார்த்தைகள் இருக்கின்றன. 70 ஆண்டுகள் வாழும் எதிர்பார்ப்பு, ஏறக்குறைய 25,500 நாட்கள் வாழும் நம்பிக்கையை தருகிறது. ஆனால் நம்முடைய வயது என்னவாக இருந்தாலும், ‘நாளைக்கு நடப்பது நமக்குத் தெரியாதே. நம் ஜீவன் கொஞ்சக் காலந்தோன்றிப் பின்பு தோன்றாமற்போகிற புகையைப் போலிருக்கிறது.’ (யாக்கோபு 4:13-15) ‘சமயமும் எதிர்பாரா சம்பவமும் எல்லாருக்கும் நேரிடுவதால்,’ நாம் எவ்வளவு காலம் வாழ்வோம் என சொல்ல முடியாது. ஆகையால், இக்கட்டுகளை கையாளவும், மற்றவர்களை சரியான முறையில் நடத்தவும், யெகோவாவின் சேவையில் நம்மால் முடிந்த மிகச் சிறந்ததைச் செய்யவும் ஞானத்திற்காக இப்போதே—இன்றே—ஜெபிப்போமாக! (பிரசங்கி 9:11, NW; யாக்கோபு 1:5-8) யெகோவா தமது வார்த்தையின் மூலமும் தமது ஆவியின் மூலமும் தமது அமைப்பின் மூலமும் நம்மை வழிநடத்துகிறார். (மத்தேயு 24:45-47; 1 கொரிந்தியர் 2:10; 2 தீமோத்தேயு 3:16, 17) ஞானத்தை பயன்படுத்துவது, ‘முதலாவது தேவனுடைய ராஜ்யத்தை தேட’ நம்மை உந்துவிப்பதுடன் யெகோவாவுக்கு மகிமையைக் கொண்டுவரும் முறையிலும் அவருடைய இருதயத்தைச் சந்தோஷப்படுத்தும் முறையிலும் நம்முடைய நாட்களைப் பயன்படுத்தவும் உந்துவிக்கிறது. (மத்தேயு 6:25-33; நீதிமொழிகள் 27:11) அவரை நம் முழு இருதயத்தோடும் வணங்குவது நம்முடைய எல்லா பிரச்சினைகளையும் நீக்கிவிடாது, ஆனால் நிச்சயமாகவே அதனால் மிகுந்த மகிழ்ச்சி பலனாக கிடைக்கிறது.
யெகோவாவின் ஆசீர்வாதத்தால் நமக்கு மகிழ்ச்சி
20. (அ) எந்த விதத்தில் கடவுள் ‘பரிதபிக்கிறார்’? (ஆ) நாம் படுமோசமான தவறு செய்துவிட்டாலும், உண்மையாகவே மனந்திரும்புகையில் யெகோவா நம்மை எவ்வாறு கையாளுவார்?
20 நம்முடைய வாழ்க்கையின் மீதிகாலமெல்லாம் நாம் களிகூர முடியுமானால் எவ்வளவு அருமையாக இருக்கும்! இதன் சம்பந்தமாக மோசே இவ்வாறு வேண்டுதல் செய்கிறார்: ‘யெகோவாவே திரும்பிவாரும், எதுவரைக்கும் கோபமாயிருப்பீர்? உமது அடியாருக்காகப் பரிதபியும். நாங்கள் எங்கள் வாழ்நாளெல்லாம் களிகூர்ந்து மகிழும்படி, காலையிலே எங்களை உமது கிருபையால் [“அன்புள்ள தயவால்,” NW அல்லது “பற்றுமாறா அன்பால்,” NW அடிக்குறிப்பு] திருப்தியாக்கும்.’ (சங்கீதம் 90:13, 14) கடவுள் தவறு செய்வதில்லை. இருப்பினும், தவறு செய்பவர்கள் தம் எச்சரிக்கையை கேட்டு மனந்திரும்பி தங்கள் மனப்பான்மையையும் நடத்தையையும் மாற்றிக்கொள்ளும்போது அவர் ‘பரிதபித்து,’ தம்முடைய கோபத்தையும் தண்டனையையும் விட்டு ‘திரும்புகிறார்.’ (உபாகமம் 13:18) ஆகையால், நாம் படுமோசமான தவறு செய்துவிட்டாலும், உண்மையாகவே மனந்திரும்புகையில் யெகோவா நம்மை ‘தம்முடைய அன்புள்ள தயவால் திருப்தியாக்குவார்,’ அப்போது நாம் ‘களிகூர்ந்து மகிழ’ காரணம் இருக்கும். (சங்கீதம் 32:1-5) மேலும், நீதியுள்ள வாழ்க்கை முறையைப் பின்பற்றுவதால், நமக்கான கடவுளுடைய பற்றுமாறா அன்பை நாம் உணர்ந்து, ‘நம் வாழ்நாளெல்லாம்,’ ஆம் நம் வாழ்க்கையின் மீதிகாலமெல்லாம் களிகூர்ந்து மகிழ்வோம்.
21. சங்கீதம் 90:15, 16-ல் பதிவுசெய்யப்பட்டுள்ள வார்த்தைகளில், மோசே எதைக் கேட்டிருக்கலாம்?
21 சங்கீதக்காரன் ஊக்கமாய் இவ்வாறு ஜெபிக்கிறார்: “தேவரீர் எங்களைச் சிறுமைப்படுத்தின நாட்களுக்கும், நாங்கள் துன்பத்தைக் கண்ட வருஷங்களுக்கும் சரியாய் எங்களை மகிழ்ச்சியாக்கும். உமது கிரியை உமது ஊழியக்காரருக்கும், உமது மகிமை அவர்கள் பிள்ளைகளுக்கும் விளங்குவதாக.” (சங்கீதம் 90:15, 16) இஸ்ரவேலர் துன்பப்பட்ட நாட்களையும் இடுக்கண் அனுபவித்த ஆண்டுகளையும் ஈடுகட்டும் வகையில் அவற்றிற்குச் சமமாக களிகூரச் செய்து அவர்களை ஆசீர்வதிக்கும்படி மோசே கடவுளிடம் கேட்டிருக்கலாம். இஸ்ரவேலரை ஆசீர்வதிக்கும் கடவுளுடைய “கிரியை,” அவருடைய ஊழியக்காரருக்குத் தெளிவாக தெரியும்படியும், அவருடைய மகிமை அவர்களுடைய குமாரர்மீது அல்லது பிள்ளைகள்மீது விளங்கச் செய்யும்படியும் அவர் கடவுளிடம் கேட்டார். கடவுள் வாக்குறுதி கொடுத்திருக்கும் புதிய உலகில் கீழ்ப்படிதலுள்ள மனிதவர்க்கத்தின்மேல் ஆசீர்வாதங்களை பொழியும்படி நாம் ஜெபிப்பதும் தகுதியானதே.—2 பேதுரு 3:13.
22. சங்கீதம் 90:17-ன்படி, எதற்காக நாம் ஜெபிப்பது சரியானது?
22 சங்கீதம் 90 இந்த வேண்டுதலோடு முடிகிறது: “எங்கள் தேவனாகிய ஆண்டவரின் பிரியம் [“இனிமை,” NW] எங்கள்மேல் இருப்பதாக; எங்கள் கைகளின் கிரியையை எங்களிடத்தில் உறுதிப்படுத்தும்; ஆம், எங்கள் கைகளின் கிரியையை எங்களிடத்தில் உறுதிப்படுத்தியருளும்.” (சங்கீதம் 90:17) கடவுளுடைய ஊழியத்தில் நம்முடைய முயற்சிகளை ஆசீர்வதிக்கும்படி நாம் கடவுளிடம் ஜெபிப்பது சரியானதே என இந்த வார்த்தைகள் காட்டுகின்றன. அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்களாக அல்லது அவர்களுடைய தோழர்களான ‘வேறே ஆடுகளாக’, நம்மீது தங்கியிருக்கும் ‘யெகோவாவின் இனிமையில்’ களிகூருகிறோம். (யோவான் 10:16) ராஜ்ய பிரஸ்தாபிகளாகவும் மற்ற வழிகளிலும், கடவுள் ‘நம்முடைய கைகளின் கிரியைகளை உறுதிப்படுத்தியதற்காக’ நாம் எவ்வளவு சந்தோஷமுள்ளவர்களாக இருக்கிறோம்!
நாம் தொடர்ந்து நம் நாட்களை எண்ணி வருவோமாக
23, 24. சங்கீதம் 90-ஐ ஆழ்ந்து சிந்திப்பதிலிருந்து நாம் எவ்வாறு பயனடையலாம்?
23 சங்கீதம் 90-ன்பேரில் தியானிப்பது, நம்முடைய ‘மெய்யான வாசஸ்தலமாகிய’ யெகோவாவின் மீது இன்னும் அதிகமாய் நம்மை சார்ந்திருக்கச் செய்ய வேண்டும். வாழ்க்கை குறுகியதாக இருப்பதைப் பற்றி கூறும் அந்த வார்த்தைகளை ஆழ்ந்து சிந்திப்பதன் மூலம், நம்முடைய நாட்களை எண்ணுவதில் கடவுளுடைய வழிநடத்துதலின் அவசியத்தை நாம் அதிகமாக உணர்ந்துகொள்ள வேண்டும். மேலும், தேவ ஞானத்தை நாடுவதிலும் பயன்படுத்துவதிலும் நாம் விடாமுயற்சியுடன் இருந்தால், யெகோவாவின் அன்புள்ள தயவையும் ஆசீர்வாதத்தையும் நிச்சயமாக பெறுவோம்.
24 நம்முடைய நாட்களை எண்ணுவது எவ்வாறென யெகோவா நமக்குத் தொடர்ந்து காட்டுவார். அவருடைய போதனைக்கு நாம் கீழ்ப்படிந்து வந்தால், நித்திய காலமாய் நம் நாட்களை எண்ண முடியும். (யோவான் 17:3) எனினும், நமக்கு உண்மையில் நித்திய ஜீவன் வேண்டுமென்றால், யெகோவா நம் அடைக்கலமாக இருக்க வேண்டும். (யூதா 20, 21) அடுத்தக் கட்டுரையில் நாம் காணப்போகிறபடி, இந்தக் குறிப்பு 91-வது சங்கீதத்தின் ஊக்கமூட்டும் வார்த்தைகளில் மிகத் தெளிவாய் விளக்கப்பட்டிருக்கிறது.
நீங்கள் எவ்வாறு பதிலளிப்பீர்கள்?
• எவ்வாறு யெகோவா நமக்கு ‘மெய்யான வாசஸ்தலமாக’ திகழ்கிறார்?
• நமக்கு உதவ யெகோவா எப்போதும் ஆயத்தமாக இருக்கிறார் என்று நாம் ஏன் சொல்லலாம்?
• ‘நம் நாட்களை எண்ணுவதற்கு’ யெகோவா நமக்கு எவ்வாறு உதவுகிறார்?
• ‘வாழ்நாளெல்லாம் களிகூர்ந்து மகிழ’ எது நமக்கு உதவுகிறது?
[பக்கம் 10-ன் படம்]
‘பர்வதங்கள் பிறக்குமுன்னும்’ யெகோவா கடவுளாக இருந்தார்
[பக்கம் 12-ன் படம்]
969 வயது மெத்தூசலா, யெகோவாவின் நோக்குநிலையில் ஒரு நாளுக்குக் குறைவான காலமே வாழ்ந்தார்
[பக்கம் 14-ன் படங்கள்]
யெகோவா நம் ‘கைகளின் கிரியையை உறுதிப்படுத்தியிருக்கிறார்’