நீங்கள் ஏன் உத்தமத்தைக் காட்ட வேண்டும்?
‘கர்த்தாவே, என்னிலுள்ள உண்மையின்படி [“உத்தமத்தின்படி,” NW] எனக்கு நியாயஞ்செய்யும்.’ —சங். 7:8.
1, 2. ஒரு கிறிஸ்தவர் உத்தமத்தைக் காப்பதற்குப் போராட வேண்டியிருக்கும் சில அன்றாட சூழ்நிலைகள் யாவை?
மூன்று வித்தியாசமான சூழ்நிலைகளைக் கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள்: பள்ளியில் ஒரு சிறுவன் சில மாணவர்களின் கேலி கிண்டலுக்கு ஆளாகிறான். அவர்கள் வேண்டுமென்றே அவனுக்கு எரிச்சலூட்டி, அவனுடைய வாயைக் கிளறப் பார்க்கிறார்கள், அவனைச் சண்டைக்கு இழுக்கப் பார்க்கிறார்கள். பதிலுக்கு அவன் கண்டபடி திட்டி, சண்டை போடுவானா, அல்லது கோபத்தை அடக்கிக்கொண்டு அங்கிருந்து அமைதியாகப் போய்விடுவானா? ஒரு கணவர் வீட்டில் தனியாக இருக்கும்போது இன்டர்நெட்டில் ஆராய்ச்சி செய்துகொண்டிருக்கிறார். திடீரென்று, ஆபாசமான ஒரு வெப்சைட்டின் விளம்பரம் தோன்றுகிறது. ஆர்வத்துடிப்பில் அவர் அந்த வெப்சைட்டைத் திறந்து பார்ப்பாரா அல்லது அதைப் பார்க்கப் போவதில்லையென திடத்தீர்மானமாய் இருப்பாரா? ஒரு கிறிஸ்தவ சகோதரி வேறு சில சகோதரிகளுடன் சேர்ந்து பேசிக்கொண்டிருக்கிறார். மெல்ல மெல்ல, அந்தச் சகோதரிகளுடைய பேச்சு வேறு பக்கமாகத் திரும்புகிறது; அவர்கள் சபையிலுள்ள மற்றொரு சகோதரியைப் பற்றி இல்லாததையும் பொல்லாததையும் பேச ஆரம்பிக்கிறார்கள். அவரும் அவர்களோடு சேர்ந்துகொள்வாரா அல்லது பேச்சை மாற்றப் பார்ப்பாரா?
2 இந்தச் சூழ்நிலைகள் ஒன்றுக்கொன்று வித்தியாசப்பட்டவை என்றாலும், இவை அனைத்தும் ஒரு பொதுவான விஷயத்தை எடுத்துக்காட்டுகின்றன; அதாவது, உத்தமத்தைக் காப்பதற்காகக் கிறிஸ்தவர்கள் போராட வேண்டியிருப்பதை எடுத்துக்காட்டுகின்றன. கவலைகள், தேவைகள், லட்சியங்கள் என வருகையில் நீங்களும் உங்களுடைய உத்தமத்தைக் குறித்துச் சிந்திக்கிறீர்களா? மக்கள் தங்களுடைய தோற்றத்தையும், ஆரோக்கியத்தையும், பிழைப்பையும், நண்பரோடு அல்லது காதலரோடு அனுபவிக்கிற சந்தோஷங்களையும் சங்கடங்களையும் குறித்து யோசிக்காத நாளே இருப்பதில்லை. நாமும் இப்படிப்பட்ட விஷயங்களையே அடிக்கடி யோசித்துக் கொண்டிருக்கலாம். ஆனால், யெகோவா நம் இருதயத்தை ஆராய்ந்து பார்க்கும்போது எதை முக்கியமாகக் கவனிக்கிறார்? (சங். 139:23, 24) நம் உத்தம குணத்தையே.
3. எதை யெகோவா அவரவர் விருப்பத்திற்கு விட்டுவிடுகிறார், இந்தக் கட்டுரையில் நாம் எதைச் சிந்திப்போம்?
3 ‘நன்மையான எந்த ஈவையும் பூரணமான எந்த வரத்தையும்’ அருளுகிற யெகோவா, நம் ஒவ்வொருவருக்கும் பல விதமான ஈவுகளை அள்ளித் தந்திருக்கிறார். (யாக். 1:17) உதாரணத்திற்கு, உடலையும் மனதையும் ஓரளவு ஆரோக்கியத்தையும் பற்பல திறமைகளையும் தந்திருக்கிறார். (1 கொ. 4:7) என்றாலும், உத்தமம் காக்கும்படி அவர் யாரையும் வற்புறுத்துவதில்லை. இந்தக் குணத்தை வளர்த்துக் கொள்வதா வேண்டாமா என்பதை அவரவர் விருப்பத்திற்கே விட்டுவிடுகிறார். (உபா. 30:19) ஆகவே, உத்தமம் என்றால் என்னவென்று நாம் தெரிந்துகொள்ள வேண்டும். இந்தக் குணம் ஏன் அதிமுக்கியமானது என்பதற்கான மூன்று காரணங்களையும் இந்தக் கட்டுரையில் சிந்திப்போம்.
உத்தமம் என்றால் என்ன?
4. உத்தமம் என்ற குணம் எதை உட்படுத்துகிறது, மிருக பலிகள் சம்பந்தமாக யெகோவா கொடுத்த கட்டளையிலிருந்து நாம் எதைக் கற்றுக்கொள்ளலாம்?
4 உத்தமம் என்றால் என்னவென்று நிறைய பேருக்குத் தெளிவாகத் தெரிவதில்லை. உதாரணத்திற்கு, ஒருவர் நேர்மையாக நடப்பதைப் பார்த்து அவரை உத்தமர் என்று அழைக்கிறார்கள். நேர்மையும் முக்கியமான குணம்தான், ஆனால் அது உத்தமத்தின் ஓர் அம்சம் மட்டுமே. பைபிளில் உத்தமம் என்று குறிப்பிடப்படுவது, ஒழுக்க ரீதியில் குறையற்ற, பழுதற்ற தன்மையை உட்படுத்துகிறது. “உத்தமம்” என்பதற்கான எபிரெய வார்த்தைகள் பழுதற்ற, மாசற்ற, முழுநிறைவான என்ற அர்த்தத்தைத் தரும் அடிப்படை வார்த்தையிலிருந்து வருகின்றன. இவற்றில் ஒரு வார்த்தையே, யெகோவாவுக்குச் செலுத்தப்படவிருந்த மிருக பலிகள் சம்பந்தமாகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. மக்கள் எவ்விதப் பழுதும் இல்லாத சிறந்த மிருகங்களைப் பலி செலுத்தியபோது மட்டுமே யெகோவா அவற்றை ஏற்றுக்கொண்டார். (லேவியராகமம் 22:19, 20-ஐ வாசியுங்கள்.) இது தெரிந்திருந்தும் வேண்டுமென்றே முடமான, நோயுற்ற, கண்தெரியாத மிருகங்களைப் பலி செலுத்தியவர்களை அவர் வன்மையாகக் கண்டித்தார்.—மல். 1:6–8.
5, 6. (அ) பழுதில்லாத, சிறந்த ஒன்றையே நாம் மதிப்புள்ளதாகக் கருதுகிறோம் என்பதற்கு உதாரணங்கள் யாவை? (ஆ) அபூரண மனிதர்களின் விஷயத்தில் உத்தமம் என்பது பரிபூரணத்தைக் குறிக்கிறதா? விளக்குங்கள்.
5 பழுதில்லாத, சிறந்த ஒன்றைத் தேடியெடுப்பதும் மதிப்புள்ளதாகக் கருதுவதும் வினோதமானது அல்ல. உதாரணத்திற்கு, புத்தகங்கள் சேகரிக்கிற ஒருவரை எடுத்துக்கொள்ளுங்கள்; அருமையான ஒரு புத்தகத்தை அவர் வெகு நாளாகத் தேடுகிறார், பின்பு ஒருவழியாகக் கண்டுபிடிக்கிறார்; அதைப் புரட்டிப் பார்க்கும்போதோ, முக்கியமான பல பக்கங்களைக் காணவில்லை. ஏமாற்றத்துடன் புத்தகத்தைத் திருப்பி வைத்துவிடுகிறார். இன்னொரு உதாரணத்தைக் கற்பனை செய்து பாருங்கள். கடற்கரையில் ஒரு பெண், அலைகள் கரையில் சேர்த்த சிப்பிகளைப் பொறுக்கியபடி நடந்துசெல்கிறாள்; விதவிதமான, அழகழகான அந்தச் சிப்பிகளைப் பார்த்து மனதைப் பறிகொடுக்கிறாள்; ஒவ்வொன்றையும் எடுத்து எடுத்துப் பார்க்கிறாள். ஆனால் எவற்றை வைத்துக்கொள்கிறாள்? ஓட்டை உடைசல் இல்லாத சிறந்த சிப்பிகளையே வைத்துக்கொள்கிறாள். அதுபோலவே, பழுதில்லாத சிறந்த குணத்தைக் காட்டுகிறவர்களை, அதாவது உத்தமத்தைக் காட்டுகிறவர்களைக் கடவுள் தேடுகிறார்.—2 நா. 16:9.
6 ஆனால், உத்தமத்தைக் காட்டுவதற்குப் பரிபூரணமாக இருக்க வேண்டுமோ என நீங்கள் யோசிக்கலாம். நாம் பாவத்தாலும் அபூரணத்தாலும் பழுதடைந்திருக்கிறோம்; ஆகவே, நாம் அரைகுறையான ஒரு புத்தகத்தைப் போலவோ ஓட்டை உடைசலான ஒரு சிப்பியைப் போலவோ இருப்பதாக நினைத்துக்கொள்ளலாம். நீங்களும் சிலசமயங்களில் அப்படித்தான் நினைக்கிறீர்களா? அப்படியானால், நாம் முழுக்க முழுக்கப் பரிபூரணமாக இருக்க வேண்டுமென்று யெகோவா எதிர்பார்ப்பதில்லை என்பதை மனதில் வையுங்கள். நம்மால் செய்ய முடியாததை அவர் நம்மிடம் எதிர்பார்ப்பதே இல்லை.a (சங். 103:14; யாக். 3:2) அதேசமயத்தில், நாம் உத்தமம் காக்க வேண்டுமென்று அவர் எதிர்பார்க்கிறார். அப்படியென்றால், பரிபூரணத்திற்கும் உத்தமத்திற்கும் வித்தியாசம் இருக்கிறதா? ஆம் இருக்கிறது. இந்த உதாரணத்தைக் கவனியுங்கள்: ஒரு வாலிபன் ஒரு பெண்ணைக் காதலிக்கிறான், அவளைக் கல்யாணமும் செய்துகொள்ளப் போகிறான். அவள் பரிபூரணமாக இருக்க வேண்டுமென்று அவன் எதிர்பார்த்தால் அது முட்டாள்தனமானது. ஆனால், அவள் முழு இருதயத்தோடு தன்னை நேசிக்க வேண்டுமென்று, அதாவது தன்னை மட்டுமே காதலிக்க வேண்டுமென்று, அவன் எதிர்பார்த்தால் அது ஞானமானது. அதுபோலத்தான் யெகோவாவும், ‘தனக்கு மட்டுமே மக்கள் பக்தி காட்ட வேண்டுமென எதிர்பார்க்கிறார்.’ (யாத். 20:5, NW) நாம் பரிபூரணமாக இருக்க வேண்டுமென்று அவர் எதிர்பார்ப்பதில்லை, ஆனால் அவரை முழு இருதயத்தோடு நேசிக்க வேண்டுமென்று, அதாவது அவரை மட்டுமே வணங்க வேண்டுமென்று எதிர்பார்க்கிறார்.
7, 8. (அ) உத்தமம் சம்பந்தமாக இயேசு என்ன முன்மாதிரியை வைத்தார்? (ஆ) பைபிளின்படி உத்தமத்தின் சாராம்சம் என்ன?
7 கட்டளைகளிலேயே முக்கியமான கட்டளை எதுவென்று கேட்கப்பட்டபோது இயேசு கொடுத்த பதிலை இப்போது நாம் நினைத்துப் பார்க்கலாம். (மாற்கு 12:28–30-ஐ வாசியுங்கள்.) அவர் அந்தப் பதிலை வாயளவில் மட்டும் சொல்லவில்லை, அதன்படி வாழ்ந்து காட்டினார். யெகோவாவை முழு மனதோடும் முழு இருதயத்தோடும் முழு மூச்சோடும் முழு பலத்தோடும் அன்புகூருவதில் நிகரற்ற முன்மாதிரியை வைத்தார். உத்தமம் என்பது வாயளவில் மட்டும் காட்டப்படுகிற குணமல்ல, நல்லெண்ணத்தோடு செயலளவிலும் காட்டப்படுகிற குணம் என்பதை அவர் நிரூபித்தார். நாம் உத்தமத்தைக் காட்ட வேண்டுமென்றால் இயேசுவின் அடிச்சுவடுகளைப் பின்பற்ற வேண்டும்.—1 பே. 2:21.
8 ஆகவே பைபிளின்படி, உத்தமத்தின் சாராம்சம் இதுவே: பரலோகத்திலுள்ள யெகோவா தேவனுக்கு மட்டுமே இருதயப்பூர்வ பக்தியைக் காட்ட வேண்டும், அவருடைய சித்தத்தையும் நோக்கத்தையும் செய்வதிலேயே முழு ஈடுபாடு காட்ட வேண்டும். நாம் உத்தமத்தைக் காட்டுவதற்கு, யெகோவா தேவனுக்குப் பிரியமானவற்றைச் செய்யவே அனுதினமும் பாடுபட வேண்டும். அவருக்கு எது முக்கியமோ அதுவே நமக்கும் முக்கியமாக இருக்க வேண்டும். இது ஏன் அவசியம் என்பதற்கு மூன்று காரணங்களைப் பார்ப்போம்.
1. நம் உத்தமமும் உன்னத அரசதிகாரம் குறித்த விவாதமும்
9. உன்னத அரசதிகாரம் குறித்த விவாதமும் நம் உத்தமமும் எப்படிச் சம்பந்தப்பட்டிருக்கின்றன?
9 யெகோவாவின் அரசதிகாரம் நாம் காட்டுகிற உத்தமத்தைச் சார்ந்திருப்பதில்லை. அவரது அரசதிகாரம் நீதியானது, நித்தியமானது, சர்வலோகத்துக்குரியது. இப்பிரபஞ்சத்தில் யார் என்ன சொன்னாலும் சரி செய்தாலும் சரி, இந்த உண்மை என்றென்றும் மாறாது. என்றாலும், கடவுளுடைய அரசதிகாரத்திற்குப் பரலோகத்திலும் பூமியிலும் மிகுந்த களங்கம் ஏற்பட்டுள்ளது. ஆகவே அவரது அரசாட்சியே சரியானது, நீதியானது, அன்பானது என புத்திக்கூர்மையுள்ள படைப்புகள் அனைவருக்கும் முன்பாகத் தெள்ளத்தெளிவாய் நிரூபிக்கப்பட வேண்டியுள்ளது. யெகோவாவின் சாட்சிகளாகிய நாம், ஆர்வமாகக் கேட்கிறவர்களிடம் கடவுளுடைய உன்னத அரசதிகாரத்தைப் பற்றிப் பேச விரும்புகிறோம். ஆனால், அதையே நாம் ஆதரிக்கிறோம் என்பதை நம் வாழ்க்கையில் எப்படிக் காட்டுவோம்? யெகோவாவே நம் பேரரசராக இருக்க வேண்டுமென விரும்புவதை எப்படிக் காட்டுவோம்? நம் உத்தமத்தைக் காப்பதன் மூலமே.
10. மனிதர்களின் உத்தமத்தைக் குறித்து சாத்தான் எப்படிக் குற்றம் சாட்டியிருக்கிறான், அதற்கு நீங்கள் எப்படிப் பதிலடி கொடுப்பீர்கள்?
10 இந்த விஷயத்தில் உங்கள் உத்தமம் வகிக்கிற பங்கைப் பற்றிச் சிந்தித்துப் பாருங்கள். எந்த மனிதனும் கடவுளுடைய உன்னத அரசதிகாரத்தின் பக்கம் நிற்க மாட்டான் என்றும் அவர்மீது சுயநலமற்ற அன்பைக் காட்ட மாட்டான் என்றும் சாத்தான் குற்றம் சாட்டியிருக்கிறான். கோடிக்கணக்கான தேவதூதர்களின் முன்னிலையில் பிசாசு யெகோவாவிடம், “தோலுக்குப் பதிலாகத் தோலையும், தன் ஜீவனுக்குப் பதிலாகத் தனக்கு உண்டான எல்லாவற்றையும், மனுஷன் கொடுத்துவிடுவான்” என்றான். (யோபு 2:4) நீதிமானாகிய யோபுவைப் பற்றி மட்டும் அவன் அப்படிச் சொல்லவில்லை என்பதைக் கவனித்தீர்களா? பொதுவாக மனிதர்கள் அனைவரையும் பற்றித்தான் அவன் அப்படிச் சொன்னான். அதனாலேயே பைபிள் அவனை ‘நம் சகோதரர்மேல் குற்றம்சாட்டுகிறவன்’ என்று அழைக்கிறது. (வெளி. 12:10) கிறிஸ்தவர்கள் உண்மையுள்ளவர்களாக நிலைத்திருக்க மாட்டார்களென்று சொல்லி அவன் யெகோவாவை நிந்தித்துக்கொண்டே இருக்கிறான்; உங்களையும் சேர்த்துத்தான் அப்படிச் சொல்கிறான். உங்கள் உயிர்மீதுள்ள ஆசையால் யெகோவாவுக்குத் துரோகம் செய்வீர்களென அவன் சொல்கிறான். இப்படி அவன் உங்கள்மேல் குவித்திருக்கும் குற்றச்சாட்டுகளைக் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? அவனைப் பொய்யனென்று நிரூபிக்க வாய்ப்பு கிடைத்தால் நன்றாயிருக்குமென நினைக்கிறீர்களா? நீங்கள் உத்தமத்தைக் காட்டினால் அந்த வாய்ப்பு உங்களுக்குக் கிடைத்துவிட்டதாக அர்த்தம்.
11, 12. (அ) தினமும் நாம் எடுக்கும் தீர்மானங்கள் நம் உத்தமம் குறித்து எழுப்பப்பட்டிருக்கும் கேள்வியோடு சம்பந்தப்பட்டிருப்பதற்கு உதாரணங்கள் தருக. (ஆ) உத்தமத்தைக் காத்துக்கொள்வது நமக்குக் கிடைத்த பாக்கியமென ஏன் சொல்லலாம்?
11 உங்கள் உத்தமத்தைக் குறித்துக் கேள்வி எழுப்பப்பட்டிருப்பதால், நீங்கள் தினமும் என்னவெல்லாம் செய்கிறீர்கள் என்பதும் எதையெல்லாம் தேர்ந்தெடுக்கிறீர்கள் என்பதும் மிக முக்கியம். ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்ட மூன்று சூழ்நிலைகளை மறுபடியும் எண்ணிப் பாருங்கள். அந்த மூன்று பேரும் எப்படி உத்தமத்தைக் காட்டுவார்கள்? பள்ளி மாணவர்களால் கேலியும் கிண்டலும் செய்யப்படுகிற பையனுக்கு, அவர்களைக் கண்டபடி திட்டித்தீர்க்க வாய் வருகிறது; ஆனால், பைபிளிலுள்ள இந்த அறிவுரையை அவன் ஞாபகப்படுத்திப் பார்க்கிறான்: “பிரியமானவர்களே, பழிவாங்குதல் எனக்குரியது, நானே பதிற்செய்வேன், என்று கர்த்தர் சொல்லுகிறார் என்று எழுதியிருக்கிறபடியால், நீங்கள் பழிவாங்காமல், கோபாக்கினைக்கு இடங்கொடுங்கள்.” (ரோ. 12:19) ஆகவே, அவன் அங்கிருந்து அமைதியாகப் போய்விடுகிறான். இன்டர்நெட்டில் ஆராய்ச்சி செய்துகொண்டிருக்கும் கணவரால் உடனே ஆபாசத்தைப் பார்த்து ரசிக்க முடியும்; ஆனால், யோபு சொன்ன பின்வரும் வார்த்தைகளிலுள்ள நியமத்தை அவர் நினைத்துப் பார்க்கிறார்: “என் கண்களோடே உடன்படிக்கைபண்ணின நான் ஒரு கன்னிகையின்மேல் நினைப்பாயிருப்பதெப்படி?” (யோபு 31:1) ஆகவே, யோபுவைப் போல் இவரும் ஆபாசத்தைப் பார்க்காதபடி தன் கண்களை ‘மூடிக்கொள்கிறார்,’ தன் உயிரைப் பறிக்கும் நச்சாக நினைத்து அதை ஒதுக்கித் தள்ளுகிறார். மற்ற சகோதரிகளோடு பேசிக்கொண்டிருக்கும் கிறிஸ்தவப் பெண், அவர்கள் இல்லாததையும் பொல்லாததையும் பேச ஆரம்பிப்பதைக் கேட்டவுடனேயே பின்வரும் ஆலோசனையை எண்ணிப் பார்க்கிறார்: “நம்மில் ஒவ்வொருவனும் பிறனுடைய பக்திவிருத்திக்கேதுவான நன்மையுண்டாகும்படி அவனுக்குப் பிரியமாய் நடக்கக்கடவன்.” (ரோ. 15:2) அவரும் வேறொருவரைப் பற்றி இல்லாததையெல்லாம் பேசினால், அது பக்திவிருத்தியை உண்டாக்காது. மாறாக, அந்தக் கிறிஸ்தவரின் பெயரைக் கெடுத்துவிடும்; அதோடு, அப்படிப் பேசுவது பரலோகத் தகப்பனுக்கும் பிடிக்காது. ஆகவே, அவர் தன் நாவை அடக்கிக்கொண்டு, பேச்சை மாற்றிவிடுகிறார்.
12 இந்த ஒவ்வொரு சூழ்நிலையிலும் எடுக்கப்படுகிற தீர்மானங்கள் எதைக் காட்டுகின்றன? அந்தக் கிறிஸ்தவர்கள் ஒவ்வொருவரும், ‘யெகோவாதான் என் அரசர். இந்த விஷயத்தில் யெகோவாவுக்கு எது பிடிக்குமோ அதைத்தான் நான் செய்வேன்’ என்று சொல்லாமல் சொன்னதையே காட்டுகின்றன. நீங்களும்கூட, வாழ்க்கையில் தெரிவுகளும் தீர்மானங்களும் செய்யும்போது அவ்வாறே யெகோவாவைப் பிரியப்படுத்த முயலுகிறீர்களா? அப்படி முயன்றால், நீதிமொழிகள் 27:11-ல் உள்ள கனிவான வார்த்தைகளின்படி வாழ்கிறீர்களென அர்த்தமாகும்: “என் மகனே, என்னை நிந்திக்கிறவனுக்கு நான் உத்தரவுகொடுக்கத்தக்கதாக, நீ ஞானவானாகி, என் இருதயத்தைச் சந்தோஷப்படுத்து.” (நீதி. 27:11) கடவுளுடைய இருதயத்தைச் சந்தோஷப்படுத்துவது நமக்குக் கிடைத்திருக்கும் எப்பேர்ப்பட்ட பாக்கியம்! நம் உத்தமத்தைக் காத்துக்கொள்வதற்காக நாம் எடுக்கும் எந்தவொரு முயற்சியும் தகுந்ததுதான், அல்லவா?
2. கடவுளுடைய நியாயத்தீர்ப்புக்கு அடிப்படை
13. உத்தமத்தின் அடிப்படையிலேயே யெகோவா நம்மை நியாயந்தீர்க்கிறார் என்பதை யோபுவும் தாவீதும் சொன்ன வார்த்தைகள் எவ்வாறு காட்டுகின்றன?
13 நாம் உத்தமத்தைக் காட்டினால் யெகோவாவுடைய அரசதிகாரத்தின் பக்கமாக நிற்க முடியுமென்பதைக் கவனித்தோம். ஆகவே, நாம் காட்டுகிற உத்தமத்தின் அடிப்படையிலேயே கடவுள் நம்மை நியாயந்தீர்க்கிறார். யோபு இந்த உண்மையை நன்றாகப் புரிந்து வைத்திருந்தார். (யோபு 31:6-ஐ வாசியுங்கள்.) மனிதர்களான நம் அனைவரையும் கடவுள் “சுமுத்திரையான தராசிலே” நிறுத்து, தம்முடைய பரிபூரண நீதியின் எடைக்கல்லால் நம் உத்தமத்தை எடைபோடுகிறார் என யோபு அறிந்திருந்தார். அதேவிதமாக தாவீதும் இவ்வாறு சொன்னார்: “கர்த்தர் ஜனங்களுக்கு நியாயஞ் செய்வார்; கர்த்தாவே, என் நீதியின்படியும் என்னிலுள்ள உண்மையின்படியும் [“உத்தமத்தின்படியும்,” NW] எனக்கு நியாயஞ்செய்யும். . . . நீதியுள்ளவராயிருக்கிற தேவரீர் இருதயங்களையும் உள்ளிந்திரியங்களையும் சோதித்தறிகிறவர்.” (சங். 7:8, 9) உள்ளத்தின் ஆழத்தில் உள்ளவற்றை, அதாவது அடையாளப்பூர்வ “இருதயங்களையும் உள்ளிந்திரியங்களையும்” கடவுளால் ஊடுருவிப் பார்க்க முடியுமென நாம் அறிந்திருக்கிறோம். அதேசமயத்தில், அவர் எதைக் கவனிக்கிறாரென நாம் மறந்துவிடக் கூடாது. தாவீது சொன்னதுபோல், யெகோவா நம் உத்தமத்தின்படி நம்மை நியாயந்தீர்க்கிறார்.
14. நாம் அபூரணமும் பாவமும் உள்ளவர்களாக இருப்பதால் உத்தமம் காக்க முடியாதென ஏன் ஒருபோதும் நினைக்கக்கூடாது?
14 இன்று யெகோவா தேவன் கோடிக்கணக்கான மனிதர்களின் இருதயங்களை ஆராய்ந்து பார்ப்பதைக் கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள். (1 நா. 28:9) எத்தனை பேர் உத்தமராக இருப்பதை அவர் கவனிக்கிறார்? வெகு சிலரே! அதற்காக, நாம் உத்தமத்தைக் காட்ட முடியாதளவுக்குக் குறைபாடு உள்ளவர்களென நினைத்துக்கொள்ளக் கூடாது. மாறாக, தாவீதையும் யோபுவையும் போல் நம்பிக்கையோடு இருக்கலாம்; அதாவது, நாம் அபூரணர்களாக இருந்தாலும் நம்மால் உத்தமத்தைக் காத்துக்கொள்ள முடியும் என்ற நம்பிக்கையோடு இருக்கலாம். மனிதர்கள் பரிபூரணராக இருந்தால் மட்டுமே உத்தமத்தைக் காட்ட முடியும் என்று நினைத்துவிடாதீர்கள். இந்தப் பூமியில் வாழ்ந்த பரிபூரண மனிதர்கள் மூன்று பேர்தான்; ஆனாலும் அவர்களில் இரண்டு பேர், அதாவது ஆதாமும் ஏவாளும், உத்தமத்தைக் காட்டத் தவறிவிட்டார்கள். மறுபட்சத்தில், அபூரண மனிதர்களில் லட்சக்கணக்கானவர்கள் உத்தமம் காக்கிறவர்களாக இருந்திருக்கிறார்கள். அப்படியென்றால், உங்களாலும் அதைச் செய்ய முடியும்.
3. நம் நம்பிக்கைக்கு அத்தியாவசியம்
15. நம் உத்தமம் எதிர்கால நம்பிக்கைக்கு அத்தியாவசியமானது என்பதை தாவீது எப்படிக் காட்டினார்?
15 யெகோவா நம் உத்தமத்தின் அடிப்படையிலேயே நம்மை நியாயந்தீர்க்கிறார் என்பதால், அது நம் எதிர்கால நம்பிக்கைக்கு அத்தியாவசியமானது. இந்த உண்மையை தாவீது அறிந்திருந்தார். (சங்கீதம் 41:12-ஐ வாசியுங்கள்.) கடவுளுடைய அருள் என்றென்றும் கிடைக்குமென்ற நம்பிக்கையை தாவீது உயர்வாக மதித்தார். இன்றுள்ள உண்மைக் கிறிஸ்தவர்களைப் போல் தாவீதும், என்றென்றும் வாழப்போகிற நம்பிக்கையுடன் இருந்தார்; தொடர்ந்து யெகோவா தேவனுக்குச் சேவை செய்து மேன்மேலும் அவரிடம் நெருங்கிச் செல்லும் நம்பிக்கையுடன் இருந்தார். தன் நம்பிக்கை நிறைவேறுவதைக் கண்ணாரக் காண வேண்டுமானால் தன் உத்தமத்தைக் காத்துக்கொள்ள வேண்டும் என்பதை அவர் அறிந்திருந்தார். நாமும் நம் உத்தமத்தைக் காத்துக்கொள்கையில் யெகோவா நமக்குப் போதிக்கிறார், நம்மை ஆதரிக்கிறார், வழிநடத்துகிறார், ஆசீர்வதிக்கிறார்.
16, 17. (அ) எப்போதும் உத்தமம் காக்க நீங்கள் ஏன் தீர்மானமாக இருக்கிறீர்கள்? (ஆ) என்னென்ன கேள்விகள் அடுத்த கட்டுரையில் சிந்திக்கப்படும்?
16 இன்று நாம் சந்தோஷமாக வாழ்வதற்கு நம்பிக்கை அவசியமாக இருக்கிறது. கஷ்ட காலங்களின்போது சகித்திருப்பதற்குத் தேவையான மனமகிழ்ச்சியை அது நமக்குத் தருகிறது. அதோடு, நம்பிக்கை நம் சிந்தையையும் பாதுகாக்கிறது. பைபிளில், நம்பிக்கை தலைக்கவசத்திற்கு ஒப்பிடப்படுவதை நினைவில் வையுங்கள். (1 தெ. 5:8) போரின்போது தலைக்கவசம் படைவீரரின் தலையைப் பாதுகாப்பதுபோல், நம்பிக்கை நம் மனதைப் பாதுகாக்கிறது; எப்படியென்றால், அழியப்போகிற இந்த உலகில் சாத்தான் தூண்டிவிடுகிற எதிர்மறையான சிந்தையிலிருந்து நம் மனதைக் காக்கிறது. நம்பிக்கை இல்லாத வாழ்க்கை அர்த்தமற்றது என்றே சொல்லலாம். ஆகவே, நம்மைநாமே நேர்மையோடு சோதித்து, நம் உத்தமத்தையும் அதோடு சம்பந்தப்பட்டிருக்கிற நம்பிக்கையையும் கவனமாகச் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும். நீங்கள் உத்தமத்தைக் காத்துக்கொள்வதன் மூலம் யெகோவாவின் அரசதிகாரத்தை ஆதரிக்கிறீர்கள் என்பதையும் அருமையான எதிர்கால நம்பிக்கையைத் தக்கவைத்துக்கொள்கிறீர்கள் என்பதையும் மறந்துவிடாதீர்கள். நீங்கள் எப்போதும் உங்கள் உத்தமத்தைக் காத்துக்கொள்வீர்களாக!
17 உத்தமம் மிகவும் முக்கியமான குணமாக இருப்பதால், இன்னும் சில கேள்விகளை நாம் சிந்திக்க வேண்டும். நாம் எப்படி உத்தமர்களாக விளங்கலாம்? நம் உத்தமத்தை எப்படிக் காத்துக்கொள்ளலாம்? யாராவது சிறிது காலத்திற்கு உத்தமத்தைக் காட்டவில்லை என்றால் அவர்கள் என்ன செய்யலாம்? இந்தக் கேள்விகள் அடுத்த கட்டுரையில் சிந்திக்கப்படும்.
[அடிக்குறிப்புகள்]
a “பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா பூரண சற்குணராயிருக்கிறதுபோல, நீங்களும் பூரண சற்குணராயிருக்கக்கடவீர்கள்” என்று இயேசு சொன்னார். (மத். 5:48) அப்படியென்றால், அபூரண மனிதர்களும் ஒரு கருத்தில் பரிபூரணமாக அல்லது முழுமையாக இருக்க முடியும் என்பதை அவர் அறிந்திருந்தார். மற்றவர்களை மனதார நேசிக்க வேண்டுமென்ற கட்டளையை நம்மால் கடைப்பிடிக்க முடியும்; இவ்விதத்தில் கடவுளைச் சந்தோஷப்படுத்த முடியும். யெகோவாவோ முழு கருத்தில் பரிபூரணமானவர். அவருடைய விஷயத்தில் “உத்தமம்” என்ற வார்த்தை பரிபூரணத்தையும் உட்படுத்துகிறது.—சங். 18:30, NW.
எப்படிப் பதில் அளிப்பீர்கள்?
• உத்தமம் என்பது என்ன?
• கடவுளுடைய அரசதிகாரம் குறித்த விவாதத்தோடு உத்தமம் எப்படிச் சம்பந்தப்பட்டிருக்கிறது?
• உத்தமம் எவ்வாறு நம் நம்பிக்கைக்கு அடிப்படையாக இருக்கிறது?
[பக்கம் 5-ன் படம்]
தினசரி வாழ்க்கையில் நம் உத்தமத்திற்குப் பல சவால்கள் வருகின்றன