யெகோவாவுக்கு உரியவர்களாக இருத்தல் —அவருடைய அளவற்ற கருணையே!
“நாம் . . . யெகோவாவுக்கே உரியவர்களாக இருக்கிறோம்.”—ரோ. 14:8.
1, 2. (அ) நமக்கு என்ன பாக்கியம் இருக்கிறது? (ஆ) என்ன கேள்விகளைச் சிந்திப்போம்?
இஸ்ரவேல் தேசத்தாரிடம் யெகோவா இவ்வாறு சொன்னார்: ‘சகல ஜனங்களிலும் நீங்களே எனக்கு விசேஷ சொத்தாக இருப்பீர்கள்.’ (யாத். 19:5) எப்பேர்ப்பட்ட பாக்கியம்! யெகோவாவுக்கு உரியவர்களாக இருக்கிற பாக்கியம் இன்று கிறிஸ்தவர்களாகிய நமக்கும் இருக்கிறது. (1 பே. 2:9; வெளி. 7:9, 14, 15) இதனால் நாம் என்றென்றும் பயனடையலாம்.
2 யெகோவாவுக்கு உரியவர்களாக இருப்பது ஒரு பாக்கியம் மட்டுமே அல்ல, அது ஒரு பொறுப்பும்கூட. ஆனால், சிலர் இப்படி நினைக்கலாம்: ‘யெகோவா எதிர்பார்க்கிறவற்றை என்னால் செய்ய முடியுமா? நான் ஒருவேளை பாவம் செய்துவிட்டால், அவர் என்னை ஒரேயடியாக நிராகரித்துவிடுவாரா? யெகோவாவுக்கு உரியவனாக(ளாக) இருந்தால் என் சுதந்திரம் பறிபோய்விடுமா?’ இவையெல்லாம் சிந்திக்க வேண்டிய விஷயங்கள்தான்! என்றாலும், யெகோவாவுக்கு உரியவர்களாக இருப்பதால் கிடைக்கும் பயன்கள் என்னவென்பதை முதலில் பார்ப்போம்.
யெகோவாவுக்கு உரியவர்களாக இருப்பது சந்தோஷத்திற்கு வழிவகுக்கிறது
3. யெகோவாவை வழிபட ராகாப் தீர்மானித்ததால், என்ன நன்மைகளைப் பெற்றாள்?
3 யெகோவாவுக்கு உரியவர்களாய் ஆன மக்கள் அதனால் பயனடைந்திருக்கிறார்களா? பூர்வ எரிகோவில் வசித்த விலைமகளான ராகாபின் உதாரணத்தை எடுத்துக்கொள்ளுங்கள். சிறுவயதிலிருந்தே கானான் தேசத்து இழிவான வணக்க முறையில் அவள் ஈடுபட்டுவந்தாள். என்றாலும், இஸ்ரவேலருக்கு யெகோவா அளித்த வெற்றிகளைப் பற்றிக் கேள்விப்பட்டபோது, அவர்தான் உண்மையான கடவுள் என்பதைப் புரிந்துகொண்டாள். அதனால், தன்னுடைய உயிரைக்கூடப் பொருட்படுத்தாமல் அவர்களுக்குத் தஞ்சம் அளித்தாள்; தன்னைக் காப்பாற்றும் பொறுப்பை அவர்களிடம் ஒப்படைத்தாள். ‘ராகாப் என்ற விலைமகள் தூதுவர்களை உபசரித்து வேறு வழியாக அனுப்பி வைத்தபோது, அவளுடைய செயல்களினால் நீதியுள்ளவளாக அங்கீகரிக்கப்பட்டாள்’ என்று பைபிள் சொல்கிறது. (யாக். 2:25) கடவுளுடைய பரிசுத்த மக்களில்—அன்பான, நியாயமான சட்டங்களினால் பயிற்றுவிக்கப்பட்டிருந்த மக்களில்—ஒருத்தியாய் ஆன அவள் நன்மைகளைப் பெற்றாள். கீழ்த்தரமான ஒரு வாழ்க்கை முறையை விட்டுவிட்டதற்காக அவள் எவ்வளவாய்ச் சந்தோஷப்பட்டிருப்பாள் என்று நினைத்துப்பாருங்கள்! ஆம், ஓர் இஸ்ரவேலனுக்கு அவள் மனைவியானாள், போவாஸுக்குத் தாயானாள்; போவாஸைக் கடவுளுக்கு உகந்தவனாக வளர்த்து ஆளாக்கினாள்.—யோசு. 6:25; ரூத் 2:4-12; மத். 1:5, 6.
4. யெகோவாவை வழிபடத் தீர்மானித்ததால் ரூத் எவ்வாறு பயனடைந்தாள்?
4 மோவாபிய பெண் ரூத்தும் யெகோவாவை வழிபடத் தீர்மானித்தாள். அவள் சிறுமியாக இருந்தபோது காமோஸ் தெய்வத்தையோ மற்ற மோவாபிய தெய்வங்களையோ வழிபட்டு வந்திருப்பாள்; பின்பு, உண்மைக் கடவுளாகிய யெகோவாவைப் பற்றி அவள் அறிந்துகொண்டு, தனது தேசத்திற்கு அடைக்கலம் தேடிவந்த ஓர் இஸ்ரவேலனை மணந்துகொண்டாள். (ரூத் 1:1-6-ஐ வாசியுங்கள்.) பிற்பாடு, ரூத்தும் ஒர்பாளும் தங்கள் மாமியார் நகோமியோடு பெத்லெகேமுக்குப் புறப்பட்டுப் போனார்கள்; போகும் வழியில், பிறந்த வீட்டிற்கே திரும்பிச்செல்லும்படி அவ்விருவரிடமும் நகோமி கெஞ்சிக் கேட்டுக்கொண்டாள். இஸ்ரவேல் தேசத்தில் குடியிருப்பது அவர்களுக்கு அவ்வளவு எளிதாக இருக்காதென அவள் நினைத்ததால் அப்படிக் கேட்டுக்கொண்டாள். ஒர்பாள் ‘தன் ஜனங்களிடத்துக்கும் தன் தேவர்களிடத்துக்கும் திரும்பிப் போனாள்,’ ரூத்தோ திரும்பிப் போகவில்லை; விசுவாசத்தோடு நடந்துகொண்டாள், யெகோவாவுக்கு உரியவளாய் ஆக விரும்பினாள். “நான் உம்மைப் பின்பற்றாமல் உம்மைவிட்டுத் திரும்பிப்போவதைக் குறித்து, என்னோடே பேச வேண்டாம்; நீர் போகும் இடத்திற்கு நானும் வருவேன்; நீர் தங்கும் இடத்திலே நானும் தங்குவேன்; உம்முடைய ஜனம் என்னுடைய ஜனம்; உம்முடைய தேவன் என்னுடைய தேவன்” என்று நகோமியிடம் சொன்னாள். (ரூத் 1:15, 16) யெகோவாவை வழிபடத் தீர்மானித்ததால், அவருடைய சட்டங்களிலிருந்து பயனடைந்தாள்; முக்கியமாக, விதவைகளுக்கும் ஏழைகளுக்கும் நிலபுலன்கள் இல்லாதவர்களுக்கும் கிடைத்த விசேஷ சலுகைகளால் பயனடைந்தாள். யெகோவாவின் காக்கும் கரங்களில் சந்தோஷத்தையும் பாதுகாப்பையும் அனுபவித்தாள்.
5. யெகோவாவுக்கு உண்மையோடு சேவை செய்துவருகிற மக்களிடம் நீங்கள் எதைக் கவனித்திருக்கிறீர்கள்?
5 யெகோவாவுக்குத் தங்களை அர்ப்பணித்து, பல வருடங்களாக உண்மையோடு சேவை செய்துவருகிற சிலரை உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். யெகோவாவுக்குச் சேவை செய்துவருவதால் அவர்கள் எப்படியெல்லாம் பயனடைந்திருக்கிறார்கள் எனக் கேட்டுப்பாருங்கள். பிரச்சினை இல்லாதவர்கள் யாருமே இல்லைதான்; என்றாலும், “யெகோவாவைக் கடவுளாகக் கொண்டிருக்கிற மக்கள் சந்தோஷமானவர்கள்” என்று சங்கீதக்காரன் சொன்ன வார்த்தைகள் நூற்றுக்கு நூறு உண்மையே; இதற்கு ஏராளமான அத்தாட்சிகள் உள்ளன.—சங். 144:15.
யெகோவாவின் எதிர்பார்ப்புகள் நியாயமானவை
6. யெகோவா எதிர்பார்ப்பவற்றைச் செய்ய முடியுமா என நினைத்து நாம் ஏன் பயப்படக் கூடாது?
6 ‘யெகோவா என்னிடம் எதிர்பார்க்கிற காரியங்களை என்னால் செய்ய முடியுமா?’ என்று ஒருவேளை நீங்கள் யோசித்திருக்கலாம். அவருடைய ஊழியராக ஆவது, அவருடைய சட்டங்களின்படி நடப்பது, அவரைப் பற்றி மற்றவர்களிடம் பேசுவது என்பதெல்லாம் உங்களுக்குப் படுகஷ்டமாகத் தோன்றலாம். மோசேயின் உதாரணத்தைக் கவனியுங்கள்; இஸ்ரவேல் மக்களிடமும் எகிப்து ராஜாவிடமும் போய்ப் பேசும்படி கடவுள் அவரிடம் சொன்னபோது, தன்னால் முடியாதென அவர் நினைத்தார். என்றாலும், அவரால் செய்ய முடியாத ஒன்றை யெகோவா அவரிடம் எதிர்பார்க்கவில்லை. ‘செய்ய வேண்டியதை [யெகோவா] அவருக்கு உணர்த்தினார்.’ (யாத்திராகமம் 3:11-ஐயும், 4:1, 10, 13-15-ஐயும் வாசியுங்கள்.) யெகோவா அளித்த உதவியை மோசே ஏற்றுக்கொண்டார், அவருடைய சித்தத்தைச் செய்து முடிப்பதில் சந்தோஷம் கண்டார். இன்றும்கூட, நம்மால் செய்ய முடியாத ஒன்றை யெகோவா நம்மிடமிருந்து எதிர்பார்ப்பதில்லை. நாம் அபூரணர் என்பதை அவர் புரிந்திருக்கிறார், அதனால் நமக்கு உதவ விரும்புகிறார். (சங். 103:14) இயேசுவின் சீடராகக் கடவுளுக்குச் சேவை செய்வது கஷ்டமான விஷயமல்ல, அது புத்துணர்ச்சியூட்டுகிற விஷயம்; ஏனென்றால், நாம் அந்தச் சேவையில் ஈடுபடுவது மற்றவர்களுக்குப் பயனளிக்கிறது, யெகோவாவின் இருதயத்தையும் சந்தோஷப்படுத்துகிறது. இயேசு இவ்வாறு சொன்னார்: “நீங்கள் . . . என்னிடம் வாருங்கள், நான் உங்களுக்குப் புத்துணர்ச்சி அளிப்பேன். நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாக இருக்கிறேன்; அதனால் என் நுகத்தை உங்கள்மீது ஏற்றுக்கொண்டு என்னிடமிருந்து கற்றுக்கொள்ளுங்கள்; அப்போது, உங்களுக்குப் புத்துணர்ச்சி கிடைக்கும்.”—மத். 11:28, 29.
7. யெகோவா எதிர்பார்க்கிறவற்றைச் செய்ய அவர் உங்களுக்கு உதவுவார் என ஏன் நம்பிக்கையோடு இருக்கலாம்?
7 நாம் யெகோவாமீது சார்ந்திருந்தால், அவர் நிச்சயம் நம்மை ஊக்கப்படுத்திப் பலப்படுத்துவார். எரேமியாவின் உதாரணத்தை எடுத்துக்கொள்வோம்; அவர் பயந்த சுபாவம் உள்ளவராக இருந்தார். அதனால்தான், யெகோவா அவரைத் தம்முடைய தீர்க்கதரிசியாக நியமித்தபோது, ‘ஆ, ஆண்டவராகிய யெகோவாவே, இதோ, நான் பேச அறியேன்; சிறுபிள்ளையாயிருக்கிறேன்’ என்று சொன்னார். பிற்பாடு, ‘இனி அவருடைய பெயரில் பேசவே மாட்டேன்’ என்றும்கூடச் சொன்னார். (எரே. 1:6; 20:9; NW) ஆனாலும், யெகோவா அவருக்கு ஊக்கமளித்ததால்தான், மக்களுக்குப் பிடிக்காத செய்தியை 40 வருடங்களாக அறிவித்துவந்தார். “உன்னை இரட்சிப்பதற்காகவும், உன்னைத் தப்புவிப்பதற்காகவும், நான் உன்னுடனே இருக்கிறேன்” என்று திரும்பத்திரும்பச் சொல்லி யெகோவா அவரை ஊக்கப்படுத்தினார்.—எரே. 1:8, 19; 15:20.
8. யெகோவாவை முழுமையாக நம்புவதை நாம் எப்படி வெளிக்காட்டலாம்?
8 யெகோவா, அன்று மோசேயையும் எரேமியாவையும் பலப்படுத்தியதைப் போலவே, இன்று கிறிஸ்தவர்களான நம்மையும் பலப்படுத்துவார்; ஆம், அவர் நம்மிடமிருந்து எதிர்பார்க்கிறவற்றைச் செய்ய நம்மைப் பலப்படுத்துவார். ஆனால், நாம் யெகோவாவைச் சார்ந்திருப்பதே முக்கியம். பைபிள் இவ்வாறு சொல்கிறது: ‘உன் சுய புத்தியின்மேல் சாயாமல், உன் முழு இருதயத்தோடும் யெகோவாமீது நம்பிக்கையாயிருந்து, உன் வழிகளிலெல்லாம் அவரை நினைத்துக்கொள்; அப்பொழுது அவர் உன் பாதைகளைச் செவ்வைப்படுத்துவார்.’ (நீதி. 3:5, 6) யெகோவா தம்முடைய வார்த்தையின் மூலமும் சபையின் மூலமும் அளிக்கிற உதவியை நாம் ஏற்றுக்கொள்ளும்போது அவரை முழுமையாக நம்புவதை வெளிக்காட்டுகிறோம். யெகோவா காட்டுகிற வழியில் நடந்தோமென்றால், எந்தச் சூழ்நிலையிலும் அவரைவிட்டு விலக மாட்டோம்.
யெகோவா நம் ஒவ்வொருவர் மீதும் அக்கறை காட்டுகிறார்
9, 10. சங்கீதம் 91 எந்தக் கருத்தை வலியுறுத்துகிறது?
9 யெகோவாவுக்குத் தங்களை அர்ப்பணிப்பதா வேண்டாமா என்று யோசிக்கிற சிலர், ‘நான் ஏதாவது பாவம் செய்து, யெகோவாவுக்குமுன் தகுதியற்றவனாக ஆகிவிடுவேனோ, அவரால் நிராகரிக்கப்படுவேனோ’ என்றெல்லாம் நினைத்துத் தயங்கலாம். ஆனால், அப்படித் தயங்க வேண்டியதில்லை. தம்மோடு உள்ள அருமையான பந்தத்தைப் பாதுகாத்துக்கொள்ள யெகோவா நமக்கு முழுமையாக உதவுவார். 91-ஆம் சங்கீதம் இதை எப்படி விவரிக்கிறது என்பதை இப்போது பார்க்கலாம்.
10 அந்தச் சங்கீதம் இவ்வாறு தொடங்குகிறது: ‘உன்னதமானவரின் மறைவிலிருக்கிறவன் சர்வ வல்லவருடைய நிழலில் தங்குவான். நான் யெகோவாவை நோக்கி: நீர் என் அடைக்கலம், என் கோட்டை, என் தேவன், நான் நம்பியிருக்கிறவர் என்று சொல்லுவேன். அவர் உன்னை வேடனுடைய கண்ணிக்குத் தப்புவிப்பார்.’ (சங். 91:1-3) தம்மீது அன்பும், நம்பிக்கையும் உள்ளவர்களை உயர்ந்த அடைக்கலத்திலே வைப்பதாக, அதாவது பாதுகாப்பதாக, யெகோவா வாக்குறுதி அளித்திருப்பதைக் கவனியுங்கள். (சங்கீதம் 91:9, 14-ஐ வாசியுங்கள்.) எப்படிப்பட்ட பாதுகாப்பை அளிப்பதாக யெகோவா சொல்கிறார்? வாக்குப்பண்ணப்பட்ட மேசியாவின் வம்சாவளி பாதுகாக்கப்படுவதற்காக, தம்முடைய பூர்வகால ஊழியர்கள் சிலருடைய உயிருக்கு அவர் பாதுகாப்பு அளித்தார் என்பது உண்மைதான். என்றாலும், கடவுளுடைய உண்மையுள்ள ஊழியர்கள் பலர் சாத்தானின் கொடூரத் தாக்குதலுக்கு ஆளானார்கள்; சிறையில் அடைக்கப்பட்டார்கள், சித்திரவதை செய்யப்பட்டார்கள், கொலையும் செய்யப்பட்டார்கள். (எபி. 11:34-39) இதையெல்லாம் அவர்களால் தைரியமாகச் சகித்துக்கொள்ள முடிந்தது; ஏனென்றால், உத்தமத்தைவிட்டு விலகிவிடாதபடி யெகோவாவே அவர்களுக்கு ஆன்மீகப் பாதுகாப்பை அளித்தார். ஆகையால், யெகோவா ஆன்மீகப் பாதுகாப்பை அளிப்பார் என்ற கருத்தையே 91-ஆம் சங்கீதம் வலியுறுத்துகிறது.
11. ‘உன்னதமானவரின் மறைவிடம்’ எது, அங்கே கடவுள் யாருக்குப் பாதுகாப்பை அளிக்கிறார்?
11 எனவே, ‘உன்னதமானவரின் மறைவிடம்’ என்று சங்கீதக்காரன் குறிப்பிடுவது ஆன்மீகப் பாதுகாப்பு கிடைக்கிற அடையாளப்பூர்வ இடமாகும். அந்த மறைவிடத்தில் கடவுளுடைய விருந்தாளியாகத் தங்குகிறவர்கள், தங்களுடைய விசுவாசத்திற்கும் கடவுள் மீதுள்ள அன்புக்கும் அச்சுறுத்தலாக இருக்கிற எந்தக் காரியத்திலிருந்தும் எந்த நபரிடமிருந்தும் பாதுகாக்கப்படுகிறார்கள். (சங். 15:1, 2; 121:5) ஆனால், அது ஏன் ஒரு மறைவிடம் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது? ஏனென்றால், விசுவாசத்தில் இல்லாதவர்களால் அதைக் கண்டுணர முடியாது. ‘நீங்கள்தான் என் கடவுள், நான் உங்களை நம்பியிருக்கிறேன்’ என்ற அர்த்தத்தில் ஜெபம் செய்கிறவர்களை யெகோவா அந்த மறைவிடத்தில் வைத்துப் பாதுகாக்கிறார். இந்த மறைவிடத்தில் தங்கியிருந்தோம் என்றால், ‘வேடனாகிய’ சாத்தானின் வலையில் விழுந்துவிடுமோ, கடவுளுடைய தயவை இழந்துவிடுவோமோ என்றெல்லாம் நாம் அநாவசியமாகக் கவலைப்பட வேண்டியதில்லை.
12. கடவுளோடு நமக்குள்ள பந்தத்திற்கு ஆபத்து விளைவிக்கிற காரியங்கள் யாவை?
12 கடவுளோடு நமக்குள்ள அருமையான பந்தத்திற்கு ஆபத்து விளைவிக்கிற காரியங்கள் யாவை? அவற்றைப் பற்றி சங்கீதக்காரன் குறிப்பிடுகிறார். ‘இருளில் நடமாடும் கொள்ளை நோயும், மத்தியானத்தில் பாழாக்கும் சங்காரமும்’ அவற்றில் அடங்கும். (சங். 91:5, 6) ‘வேடனாகிய’ சாத்தான் பல கண்ணிகளை வைத்திருக்கிறான்; சுதந்திர மனப்பான்மை என்ற கண்ணியில் பலர் அகப்பட்டிருக்கிறார்கள். (2 கொ. 11:3) பேராசை, கர்வம், பொருளாசை ஆகிய கண்ணிகளில் இன்னும் பலர் மாட்டியிருக்கிறார்கள். தேசப்பற்று, பரிணாமம், பொய் மதம் போன்ற தத்துவங்களில் வேறு பலர் சிக்கியிருக்கிறார்கள். (கொலோ. 2:8) பாலியல் முறைகேடு என்ற கண்ணியில் ஏராளமானோர் விழுந்திருக்கிறார்கள். ஆன்மீக ரீதியில் ஆபத்து விளைவிக்கிற இத்தகைய கொள்ளைநோய்களின் காரணமாக, லட்சக்கணக்கானோர் கடவுள் மீதுள்ள அன்பை விட்டுவிட்டிருக்கிறார்கள்.—சங்கீதம் 91:7-10-ஐ வாசியுங்கள்; மத். 24:12.
கடவுள் மீதுள்ள அன்பைக் காத்துக்கொள்ளுங்கள்
13. நம்முடைய ஆன்மீக நலனுக்கு ஆபத்தாக இருக்கிற காரியங்களிலிருந்து யெகோவா நம்மை எப்படிப் பாதுகாக்கிறார்?
13 இத்தகைய ஆபத்துகளிலிருந்து யெகோவா எப்படித் தம்முடைய மக்களைப் பாதுகாக்கிறார்? “உன் வழிகளிலெல்லாம் உன்னைக் காக்கும்படி, உனக்காகத் தம்முடைய தூதர்களுக்குக் கட்டளையிடுவார்” என்று அதே சங்கீதம் சொல்கிறது. (சங். 91:11) நற்செய்தியைப் பிரசங்கிக்கிற வேலையில் தேவதூதர்கள் நமக்கு வழிநடத்துதலையும் பாதுகாப்பையும் அளிக்கிறார்கள். (வெளி. 14:6) சபை மூப்பர்கள் வேதவசனங்களை உறுதியாகப் பற்றிக்கொண்டு கற்பிப்பதன் மூலம் பொய்ப் போதனைகளிலிருந்து நமக்குப் பாதுகாப்பு அளிக்கிறார்கள். உலகப்பிரகாரமான மனப்பான்மைகளை மேற்கொள்ளப் போராடிக்கொண்டிருக்கிறவர்களுக்குத் தனிப்பட்ட விதத்தில் உதவி அளிக்கிறார்கள். (தீத். 1:9; 1 பே. 5:2) அதுமட்டுமல்ல, “உண்மையும் விவேகமும் உள்ள அடிமை” வகுப்பார் நமக்கு ஆன்மீக உணவை அளிக்கிறார்கள்; இவ்வாறு, பரிணாமம் என்ற போதனையிலிருந்தும், ஒழுக்கக்கேடான ஆசைகளிலிருந்தும், பண ஆசையிலிருந்தும், பேர்புகழுக்கான ஆசையிலிருந்தும், ஆபத்தான வேறுபல ஆசைகளிலிருந்தும் செல்வாக்கிலிருந்தும் நம்மைப் பாதுகாக்கிறார்கள். (மத். 24:45) இதுபோன்ற ஆபத்துகளில் சிக்கிக்கொள்ளாதிருக்க உங்களுக்கு எது உதவியிருக்கிறது?
14. நமது பாதுகாப்புக்காகக் கடவுள் அளித்திருக்கிற ஏற்பாடுகளை நாம் எவ்வாறு பயன்படுத்திக்கொள்ளலாம்?
14 கடவுளுடைய பாதுகாப்பான ‘மறைவிடத்திலேயே’ இருக்க நாம் என்ன செய்ய வேண்டும்? விபத்துகளிலிருந்தும், தொற்று நோய்களிலிருந்தும், குற்றவாளிகளிடமிருந்தும் நம்மைப் பாதுகாத்துக்கொள்ள தொடர்ந்து எப்படிக் கவனமாக இருக்க வேண்டுமோ அப்படித்தான் இத்தகைய ஆன்மீக ஆபத்துகளிலிருந்தும் நம்மைப் பாதுகாத்துக்கொள்ள தொடர்ந்து கவனமாக இருக்க வேண்டும். ஆகவே, பைபிள் பிரசுரங்கள், சபைக் கூட்டங்கள், மாநாடுகள் ஆகியவற்றின் மூலமாக யெகோவா அளிக்கிற வழிநடத்துதலை நாம் தவறாமல் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். மூப்பர்களுடைய அறிவுரையை நாம் நாடுகிறோம். அதோடு, நம்முடைய சகோதர சகோதரிகள் வெளிக்காட்டுகிற பலவித நற்குணங்களாலும் பயனடைகிறோம். ஆம், சபையாரோடு நாம் வைத்திருக்கும் தோழமை நம்மை ஞானமுள்ளவர்களாக ஆக்குகின்றன.—நீதி. 13:20; 1 பேதுரு 4:10-ஐ வாசியுங்கள்.
15. நீங்கள் எவ்விதத்திலும் யெகோவாவுடைய அங்கீகாரத்தை இழந்துவிடாதபடி அவர் உங்களைப் பாதுகாப்பார் என ஏன் நிச்சயமாய் இருக்கலாம்?
15 நாம் எவ்விதத்திலும் யெகோவாவுடைய அங்கீகாரத்தை இழந்துவிடாதபடி அவர் நம்மைப் பாதுகாப்பார்; இதில் சந்தேகமே இல்லை. (ரோ. 8:38, 39) சக்திவாய்ந்த மத எதிரிகளிடமிருந்தும் அரசியல் எதிரிகளிடமிருந்தும் ஒரு தொகுதியாக நம்மை அவர் பாதுகாத்திருக்கிறார்; பொதுவாக, எதிரிகளுடைய குறி நம் உயிரைப் பறிப்பது அல்ல, பரிசுத்தமான கடவுளிடமிருந்து நம்மைப் பிரிப்பதே. “உனக்கு விரோதமாய் உருவாக்கப்படும் எந்த ஆயுதமும் வாய்க்காதேபோம்” என்று யெகோவா அளித்த வாக்குறுதி பொய்யாகிப்போனதே இல்லை.—ஏசா. 54:17.
நமக்குச் சுதந்திரம் அளிப்பவர் யார்?
16. இந்த உலகம் நமக்கு ஏன் சுதந்திரத்தை அளிக்க முடியாது?
16 நாம் யெகோவாவுக்கு உரியவர்களாகும்போது, நம்முடைய சுதந்திரத்தை இழந்துவிடுவோமா? இல்லவே இல்லை! இந்த உலகத்திற்கு உரியவர்களாக இருக்கும்போதுதான் நம்முடைய சுதந்திரத்தை இழப்போம். இந்த உலகம் யெகோவாவிடமிருந்து பிரிந்திருக்கிறது, மக்களைக் கொத்தடிமைபோல் நடத்துகிற கொடூரமான ஒரு கடவுளால், அதாவது சாத்தானால், ஆளப்படுகிறது. (யோவா. 14:30) உதாரணத்திற்கு, சாத்தானுடைய உலகம் இன்றைய பொருளாதார நெருக்கடியைப் பயன்படுத்தி, மக்களுடைய சுதந்திரத்தைப் பறித்திருக்கிறது. (வெளிப்படுத்துதல் 13:16, 17-ஐ ஒப்பிடுங்கள்.) பாவத்தின் வஞ்சக சக்தியும்கூட அவர்களை அடிமைப்படுத்தியிருக்கிறது. (யோவா. 8:34; எபி. 3:13) உலகப் பாணியின்படி வாழ்ந்தால் சுதந்திரமாய் இருக்கலாமென உலகத்தார் நமக்கு ஆசை காட்டலாம்; ஆனால், அது யெகோவாவின் போதனைகளுக்கு முரணானது என்று நமக்குத் தெரியும். அவர்களுடைய பேச்சைக் கேட்டால் நிச்சயமாகவே பாவக் குழியில் விழுந்துவிடுவோம், கீழ்த்தரமான வாழ்க்கை எனும் சேற்றில் சிக்கிவிடுவோம்.—ரோ. 1:24-32.
17. யெகோவா நமக்கு எதிலிருந்து சுதந்திரத்தை அளிக்கிறார்?
17 யெகோவாவிடம் நம்மை ஒப்படைத்துவிட்டால், ஆபத்து விளைவிக்கிற எல்லாக் காரியங்களிலிருந்தும் அவர் நம்மை விடுவிப்பார். உயிருக்கு ஆபத்தான கட்டத்திலுள்ள ஒரு நோயாளியுடைய சூழ்நிலைக்கு நம்முடைய சூழ்நிலையை ஒப்பிடலாம்; திறம்பட்ட அறுவை சிகிச்சை நிபுணரிடம் அந்த நோயாளி தன்னையே ஒப்படைத்துவிட்டு, எப்படியாவது தன்னை அவர் காப்பாற்றிவிடுவார் என நம்பிக்கையோடு இருக்கிறார். ஒரு விதத்தில் நாம் எல்லாருமே உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கிறோம். ஆம், பாவத்தின் பிடியில் சிக்கிக்கொண்டிருக்கிறோம். கிறிஸ்துவின் பலியில் விசுவாசம் வைத்து, யெகோவாவிடம் நம்மை ஒப்படைத்தால்தான் பாவத்தின் பிடியிலிருந்து விடுபட்டு என்றென்றும் வாழ முடியும். (யோவா. 3:36) அறுவை சிகிச்சை நிபுணருடைய பேரையும் புகழையும் அறிந்துகொள்ளும்போது, அந்த நோயாளிக்கு அவர்மீது வைத்திருக்கிற நம்பிக்கை அதிகரிக்கும்; அவ்வாறே, யெகோவாவைப் பற்றி நாம் அறிந்துகொண்டே இருக்கும்போது அவர்மீது நாம் வைத்திருக்கிற நம்பிக்கை அதிகரிக்கும். எனவே, கடவுளுடைய வார்த்தையைக் கவனமாகப் படிக்கும்போது கடவுள்மீது அன்பு வளரும்; அந்த அன்பு, அவருக்கு உரியவர்களாக ஆவதைக் குறித்து நமக்குள் எழுகிற பயத்தைப் போக்க உதவும்.—1 யோ. 4:18.
18. யெகோவாவுக்கு உரியவர்களாக இருப்போருக்கு என்ன பலன் கிடைக்கும்?
18 தெரிவுசெய்வதற்கான சுதந்திரத்தை யெகோவா எல்லா மக்களுக்கும் கொடுத்திருக்கிறார். அவருடைய வார்த்தை இவ்வாறு சொல்கிறது: ‘நீயும் உன் சந்ததியும் பிழைக்கும்படிக்கு, நீ ஜீவனைத் தெரிந்துகொண்டு, உன் தேவனாகிய யெகோவாமீது அன்புகூருவாயாக.’ (உபா. 30:19, 20) அவர்மீது அன்பு காட்ட நாமாகவே தீர்மானம் எடுக்க வேண்டுமென அவர் விரும்புகிறார். நம் அன்புக்குரிய கடவுளுக்கு நாம் உரியவர்களாக இருந்தால், நிச்சயம் சந்தோஷமாகவே இருப்போம், சுதந்திரத்தை இழந்தவர்களாக உணர மாட்டோம்.
19. அளவற்ற கருணையினால்தான் நாம் யெகோவாவுக்கு உரியவர்களாய் ஆகிறோம் என்று ஏன் சொல்லலாம்?
19 பாவிகளாய்ப் பிறந்த நாம், பரிபூரண கடவுளுக்கு உரியவர்களாக இருக்கத் தகுதியில்லாதவர்கள். என்றாலும், கடவுளுடைய அளவற்ற கருணையினால்தான் நாம் அவருக்கு உரியவர்களாய் ஆகிறோம். (2 தீ. 1:9) பவுல் இவ்வாறு எழுதினார்: “நாம் வாழ்ந்தாலும் யெகோவாவுக்கென்று வாழ்கிறோம்; இறந்தாலும் யெகோவாவுக்கென்று இறக்கிறோம். அதனால், நாம் வாழ்ந்தாலும் இறந்தாலும் யெகோவாவுக்கே உரியவர்களாக இருக்கிறோம்.” (ரோ. 14:8) எனவே, யெகோவாவுக்கு உரியவர்களாய் ஆவதற்கான நம் தீர்மானத்தை நினைத்து பிற்பாடு ஒருபோதும் வருத்தப்பட மாட்டோம்.
உங்கள் பதில்?
• யெகோவாவுக்கு உரியவர்களாக இருப்பதால் கிடைக்கும் பயன்கள் யாவை?
• கடவுள் எதிர்பார்க்கிறவற்றை நம்மால் ஏன் செய்ய முடிகிறது?
• யெகோவா தம்முடைய ஊழியர்களுக்கு எப்படிப் பாதுகாப்பு அளிக்கிறார்?
[பக்கம் 8-ன் படங்கள்]
யெகோவாவுக்கு உரியவர்களாக இருப்பதால் எப்படிப் பயனடைந்திருக்கிறார்கள் என மற்றவர்களிடம் கேட்டுப்பாருங்கள்
[பக்கம் 10-ன் படம்]
யெகோவா எவ்விதங்களில் நமக்குப் பாதுகாப்பு அளிக்கிறார்?