யெகோவாவே நம் அடைக்கலம்
“‘யெகோவா என் அடைக்கலமானவர்’ என்று நீ சொன்னதால், . . . எந்த பேராபத்தும் உனக்கு நேரிடாது.”—சங்கீதம் 91:9, 10, NW.
1. யெகோவா நம் அடைக்கலம் என்று நாம் ஏன் சொல்லலாம்?
யெகோவா தமது ஜனங்களுக்கு மெய்யான அடைக்கலம். நாம் அவரிடம் முழுமையான பக்தியை காண்பிக்கும் பட்சத்தில், நாம் “எப்பக்கத்திலும் நெருக்கப்பட்டும் ஒடுங்கிப்போகிறதில்லை; கலக்கமடைந்தும் மனமுறிவடைகிறதில்லை; துன்பப்படுத்தப்பட்டும் கைவிடப்படுகிறதில்லை; கீழே தள்ளப்பட்டும் மடிந்து போகிறதில்லை.” ஏன்? ஏனெனில், ‘இயல்புக்கு மீறிய வல்லமையை’ (NW) யெகோவா நமக்கு அருளுகிறார். (2 கொரிந்தியர் 4:7-9) ஆம், தேவபக்தியுள்ள வாழ்க்கை நடத்த நம் பரலோகத் தகப்பன் நமக்கு உதவி செய்கிறார், ஆகவே சங்கீதக்காரனுடைய இந்த வார்த்தைகளை நம்முடைய இருதயத்தில் ஏற்கலாம்: ‘யெகோவா என் அடைக்கலமானவர்’ என்று நீ சொன்னதால், மகா உன்னதமானவரையே உனக்கு வாசஸ்தலமாக கொண்டாய்; எந்த பேராபத்தும் உனக்கு நேரிடாது.”—சங்கீதம் 91:9, 10, NW.
2. சங்கீதம் 91-ஐயும், அது அளிக்கும் வாக்குறுதியையும் பற்றி என்ன சொல்லப்படலாம்?
2 சங்கீதம் 91-லுள்ள அந்த வார்த்தைகள் ஒருவேளை மோசேயால் எழுதப்பட்டிருக்கலாம். சங்கீதம் 90-ன் தலைப்பு அதை மோசே இயற்றியதாக குறிப்பிடுகிறது. மேலும், சங்கீதம் 91 மற்றொரு எழுத்தாளரைக் குறிப்பிடாமலேயே தொடருகிறது. சங்கீதம் 91 ஒருவேளை இரு இசைக் குழுக்களால் மாறிமாறி பாடப்பட்டிருக்கலாம்; அதாவது, ஒருவர் முதலில் பாடியிருக்கலாம் (91:1, 2), பிற பாடகர்கள் சேர்ந்து பதிலுக்கு பாடியிருக்கலாம் (91:3-8). அடுத்து ஒருவேளை ஒரு தனிக் குரல் கேட்டிருக்கலாம் (91:9அ); அதற்கு ஒரு குழு பதிலளித்திருக்கலாம் (91:9ஆ-13). பின்பு ஒரு பாடகர் முடிவு வார்த்தைகளைப் பாடியிருக்கலாம் (91:14-16). எவ்வாறாயினும், 91-வது சங்கீதம் அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவ வகுப்பாருக்கு ஆவிக்குரிய பாதுகாப்பை வாக்குறுதியளித்து, கடவுளுக்கு ஒப்புக்கொடுத்திருக்கும் அவர்களுடைய தோழர்களடங்கிய தொகுதிக்கும் அதைப் போன்ற உறுதியை அளிக்கிறது.a யெகோவாவின் அத்தகைய ஊழியர் எல்லாருடைய நோக்குநிலையிலிருந்தும் இந்த சங்கீதத்தை நாம் சிந்திக்கலாம்.
‘கடவுளின் மறைவில்’ பாதுகாப்பாக
3. (அ) ‘உன்னதமானவரின் மறைவிடம்’ எது? (ஆ) ‘சர்வ வல்லவரின் நிழலில் தங்கியிருப்பதால்,’ நாம் எதை அனுபவிக்கிறோம்?
3 “உன்னதமானவரின் மறைவிலிருக்கிறவன் சர்வ வல்லவரின் நிழலில் தங்கியிருப்பான். நான் யெகோவாவினிடம்: நீர் என் அடைக்கலம், என் கோட்டை, நான் நம்பிக்கை வைத்திருக்கிற என் கடவுள் என்று சொல்லுவேன்.” (சங்கீதம் 91:1, 2, தி.மொ.) நமக்கு, முக்கியமாக பிசாசின் முக்கிய இலக்காக இருக்கும் அபிஷேகம் செய்யப்பட்டவர்களுக்கு, ‘உன்னதமானவரின் மறைவிடம்’ அடையாள அர்த்தமுடைய பாதுகாப்பிடமாக இருக்கிறது. (வெளிப்படுத்துதல் 12:15-17) ஆவிக்குரிய விருந்தினராக நாம் கடவுளிடம் தங்கியிருந்து அனுபவிக்கும் பாதுகாப்பு இல்லாவிடில், சாத்தான் நம் எல்லாரையும் அழித்துவிடுவான். ‘சர்வ வல்லவரின் நிழலில் தங்கியிருப்பதால்,’ நாம் கடவுளுடைய பாதுகாப்பான நிழலை அனுபவிக்கிறோம். (சங்கீதம் 15:1, 2; 121:5) நம்முடைய பேரரசரான கர்த்தராகிய யெகோவாவைப் பார்க்கிலும் அதிக பாதுகாப்பான அடைக்கலம் அல்லது அதிக வல்லமைமிகுந்த கோட்டை எதுவுமில்லை.—நீதிமொழிகள் 18:10.
4. ‘பறவை பிடிப்பவனாகிய’ சாத்தான் என்ன சூழ்ச்சிகளை பயன்படுத்துகிறான், நாம் எவ்வாறு தப்புகிறோம்?
4 சங்கீதக்காரன் மேலும் இவ்வாறு சொல்கிறார்: “அவர் [யெகோவா] உன்னை வேடனுடைய [“பறவை பிடிக்கிறவனுடைய,” NW] கண்ணிக்கும், பாழாக்கும் கொள்ளைநோய்க்கும் தப்புவிப்பார்.” (சங்கீதம் 91:3) பூர்வ இஸ்ரவேலில் பறவை பிடிப்பவன் கண்ணிகளை அல்லது பொறிகளைப் பயன்படுத்தி பறவைகளைப் பிடித்தான். ‘பறவை பிடிக்கிறவனாகிய’ சாத்தானின் கண்ணிகளில் அவனுடைய பொல்லாத அமைப்பும் ‘தந்திரச் செயல்களும்’ அடங்கியிருக்கின்றன. (எபேசியர் 6:11, NW அடிக்குறிப்பு) பொல்லாங்குக்குள் நம்மை வசீகரித்து ஆவிக்குரிய அழிவை நமக்குக் கொண்டுவருவதற்கு நம்முடைய பாதையில் மறைவான கண்ணிகள் வைக்கப்பட்டிருக்கின்றன. (சங்கீதம் 142:3) எனினும், அநீதியை நாம் விட்டொழித்ததனால் ‘நம் ஆத்துமா கண்ணியிலிருந்து தப்புகிற குருவியைப்போல’ இருக்கிறது. (சங்கீதம் 124:7, 8) ‘பறவை பிடிப்பவனாகிய’ அந்தப் பொல்லாதவனிடமிருந்து யெகோவா நம்மை விடுவிப்பதற்காக நாம் எவ்வளவு நன்றியுள்ளோராக இருக்கிறோம்!—மத்தேயு 6:13.
5, 6. என்ன ‘கொள்ளைநோய்,’ ‘பாழாக்குதலை’ உண்டுபண்ணியிருக்கிறது, ஆனால் யெகோவாவின் ஜனங்கள் ஏன் அதற்கு ஆளாவதில்லை?
5 “பாழாக்கும் கொள்ளைநோய்” என்று சங்கீதக்காரன் குறிப்பிடுகிறார். தொற்றும் கொள்ளைநோயைப் போல், மனித குடும்பத்தையும் யெகோவாவின் உன்னத அரசதிகாரத்தை ஆதரிப்பவர்களையும் ‘பாழாக்கும்’ ஏதோவொன்று உள்ளது. இந்தக் குறிப்பின்பேரில் சரித்திராசிரியர் ஆர்னல்ட் டாயின்பீ இவ்வாறு எழுதினார்: “இரண்டாம் உலகப் போரின் முடிவு முதற்கொண்டு நாட்டுப்பற்று காரணமாக தனியாட்சி உரிமை பெற்ற நாடுகளின் எண்ணிக்கை இரட்டிப்பாகியிருக்கிறது. . . . மனிதவர்க்கத்தின் தற்போதைய மனப்பான்மை மேன்மேலும் அதிகமாக பிரிவினையை ஏற்படுத்துவதாயுள்ளது.”
6 பல நூற்றாண்டுகளாகவே, ஆட்சியாளர்கள் சிலர் பிரிவினை ஏற்படுத்தும் பூசல்கள் எனும் அக்கினி ஜுவாலையை உலகெங்கும் விசிறியிருக்கிறார்கள். தங்களுக்கோ, பல்வேறு உருவச் சிலைகளுக்கோ, சின்னங்களுக்கோ பக்தி செலுத்தப்பட வேண்டும் என்றும் வற்புறுத்தியிருக்கிறார்கள். ஆனால் அத்தகைய ஒரு ‘கொள்ளைநோய்க்கு’ ஆளாகும்படி யெகோவா தம்முடைய உண்மையுள்ள ஜனங்களை ஒருபோதும் விடவில்லை. (தானியேல் 3:1, 2, 20-27; 6:7-10, 16-22) அன்புள்ள சர்வலோக சகோதரத்துவமாக, நாம் யெகோவாவுக்கு தனிப்பட்ட பக்தி செலுத்துகிறோம், வேதப்பூர்வ நடுநிலை வகிப்பைக் காத்து வருகிறோம், தப்பெண்ணம் இல்லாமல் “எந்த ஜனத்திலாயினும் அவருக்குப் [கடவுளுக்குப்] பயந்திருந்து நீதியைச் செய்கிறவன் எவனோ அவனே அவருக்கு உகந்தவன்” என்பதை பட்சபாதமில்லாமல் ஒப்புக்கொள்கிறோம். (அப்போஸ்தலர் 10:34, 35; யாத்திராகமம் 20:4-6; யோவான் 13:34, 35; 17:16; 1 பேதுரு 5:8, 9) துன்புறுத்துதலின் வாயிலாக கிறிஸ்தவர்களாகிய நாம் ‘பாழாக்குதல்களை’ அனுபவிக்கிறபோதிலும் ‘உன்னதமானவரின் மறைவிடத்தில்’ மகிழ்ச்சியுடனும் ஆவிக்குரிய பாதுகாப்புடனும் இருக்கிறோம்.
7. யெகோவா “தமது சிறகுகளாலே” நம்மை எவ்வாறு பாதுகாக்கிறார்?
7 யெகோவா நம் அடைக்கலமாக இருப்பதால், பின்வரும் இந்த வார்த்தைகளிலிருந்து ஆறுதலை அடைகிறோம்: “அவர் தமது சிறகுகளாலே உன்னை மூடுவார்; அவர் செட்டைகளின்கீழே அடைக்கலம் புகுவாய்; அவருடைய சத்தியம் உனக்குப் பரிசையும் கேடகமுமாகும் [“கேடகமும் கோட்டையுமாகும்,” NW].” (சங்கீதம் 91:4) தாய்ப் பறவை தன் சிறகுகளை விரித்து தன் குஞ்சுகளுக்கு மேலாக பாதுகாப்பாய் பறந்து வட்டமிடுவதுபோல், கடவுள் நம்மைப் பாதுகாக்கிறார். (ஏசாயா 31:5) ‘அவர் தமது சிறகுகளாலே நம்மை மூடுவார்.’ ஒரு பறவை தன் சிறகுகளால் தன் குஞ்சுகளை மூடி, அவற்றைக் கொன்று தின்னும் பிராணிகளினின்று பாதுகாக்கிறது. நாம் யெகோவாவின் மெய்யான கிறிஸ்தவ அமைப்பில் அடைக்கலம் புகுந்திருப்பதால், பறவைகளின் சின்னஞ்சிறு குஞ்சுகளைப்போல் யெகோவாவின் அடையாள அர்த்தமுள்ள சிறகுகளின்கீழ் பாதுகாப்பாய் இருக்கிறோம்.—ரூத் 2:12; சங்கீதம் 5:1, 11, NW.
8. யெகோவாவின் “சத்தியம்” எவ்வாறு பெரிய கேடகத்தைப் போலும் கோட்டையைப் போலும் உள்ளது?
8 “சத்தியம்” அல்லது உண்மைத் தன்மையில் நாம் நம்பிக்கை வைக்கிறோம். அது, பூர்வகாலத்து பெரிய கேடகத்தைப்போல் இருக்கிறது. அது, பெரும்பாலும் ஒரு கதவைப் போன்ற வடிவில், ஒருவரின் முழு உடலையும் மூடத்தக்கதாயுள்ளது. (சங்கீதம் 5:12) அத்தகைய பாதுகாப்பில் நம்பிக்கை வைப்பது, பயத்திலிருந்து நம்மை விடுதலையாக்குகிறது. (ஆதியாகமம் 15:1; சங்கீதம் 84:11) நம்முடைய விசுவாசத்தைப்போல், கடவுளுடைய சத்தியம், சாத்தான் எரியும் அக்கினியாஸ்திரங்களையெல்லாம் தடுத்து நிறுத்தி, சத்துருவின் தாக்குதல்களை ஒழிக்கும் பாதுகாப்பான பெரிய கேடகத்தைப்போல் இருக்கிறது. (எபேசியர் 6:16) மேலும், அது ஒரு கோட்டையாக, அதாவது பாதுகாப்பான அரணாக உள்ளது; அதற்குள்ளே நாம் அசைக்க முடியாமல் உறுதியாய் நிற்கிறோம்.
‘நாம் பயப்படாமல் இருப்போம்’
9. இரவு ஏன் பயமுண்டாக்கும் சமயமாயிருக்கலாம், ஆனால் நாம் ஏன் பயப்படுகிறதில்லை?
9 கடவுளுடைய பாதுகாப்பு இருப்பதைக் கருத்தில் கொண்டு சங்கீதக்காரன் இவ்வாறு சொல்கிறார்: “இரவில் உண்டாகும் பயங்கரத்துக்கும், பகலில் பறக்கும் அம்புக்கும், இருளில் நடமாடும் கொள்ளைநோய்க்கும், மத்தியானத்தில் பாழாக்கும் சங்காரத்துக்கும் பயப்படாதிருப்பாய்.” (சங்கீதம் 91:5, 6) இருள் மூடியிருக்கையில் பல தீய செயல்கள் செய்யப்படுவதால், இரவு பயமுண்டாக்கும் சமயமாயிருக்கலாம். இப்போது பூமியை மூடியிருக்கும் ஆவிக்குரிய இருளின் மத்தியில், ஆவிக்குரிய காரியங்கள் மீது நாம் வைத்திருக்கும் போற்றுதலை அழித்து, நம் பிரசங்க ஊழியத்தை நிறுத்திப்போட நம்முடைய சத்துருக்கள் பெரும்பாலும் வஞ்சக வழிமுறைகளை பயன்படுத்துகிறார்கள். ஆனால், நாம் ‘இரவில் உண்டாகும் பயங்கரத்துக்கு பயப்படாமல் இருப்போம்,’ ஏனெனில் யெகோவா நம்மை காக்கிறார்.—சங்கீதம் 64:1, 2; 121:4; ஏசாயா 60:2.
10. (அ) “பகலில் பறக்கும் அம்பு” எதைக் குறிப்பதாக தோன்றுகிறது, அதற்கு நாம் எவ்வாறு பிரதிபலிக்கிறோம்? (ஆ) ‘இருளில் நடமாடும் கொள்ளைநோயின்’ இயல்பு என்ன, நாம் ஏன் அதற்கு பயப்படுகிறதில்லை?
10 “பகலில் பறக்கும் அம்பு,” சொற்களால் தாக்கப்படுவதைக் குறிப்பதாக தோன்றுகிறது. (சங்கீதம் 64:3-5; 94:20) உண்மை தகவலை அளிப்பதில் விட்டுக்கொடுக்காமல் உறுதியாக நிலைத்திருக்கையில், நம்முடைய பரிசுத்த சேவையை எதிர்க்கும் அத்தகைய வெளிப்படையான எதிர்ப்பு பயனற்றதாக இருக்கிறது. மேலும், “இருளில் நடமாடும் கொள்ளைநோய்க்கும்” நாம் பயப்படுகிறதில்லை. இது, சாத்தானின் அதிகாரத்தின் கீழிருக்கிற, ஒழுக்க சம்பந்தமாயும் மத சம்பந்தமாயும் நோயுற்றிருக்கும் இந்த உலகத்தின் இருளில் பெருகிவரும் அடையாள அர்த்தமுள்ள கொள்ளைநோயாக இருக்கிறது. (1 யோவான் 5:19) இது மோசமான மனநிலையையும் இருதயநிலையையும் உண்டாக்கி, யெகோவாவையும் அவருடைய நோக்கங்களையும் அவருடைய அன்புள்ள ஏற்பாடுகளையும் குறித்ததில் ஜனங்களை அறியாமையில் வைக்கிறது. (1 தீமோத்தேயு 6:4) இந்த இருளின் மத்தியில் நாம் ஆவிக்குரிய ஒளியை ஏராளமாய் அனுபவித்து மகிழ்வதால் நாம் பயப்படுகிறதில்லை.—சங்கீதம் 43:3.
11. ‘மத்தியானத்தில் பாழாக்கும் சங்காரத்தை’ அனுபவிப்போருக்கு என்ன நடக்கிறது?
11 ‘மத்தியானத்தில் பாழாக்கும் சங்காரமும்’ நம்மை பயப்படுத்துகிறதில்லை. ‘மத்தியானம்’ என்பது இந்த உலகத்தின் அறிவொளி என அழைக்கப்படுவதைக் குறிக்கலாம். அதன் பொருளாசைக்கு ஆளாவோர் ஆவிக்குரிய அழிவை சந்திக்கின்றனர். (1 தீமோத்தேயு 6:20, 21) ராஜ்ய செய்தியை நாம் தைரியத்துடன் அறிவிக்கையில், நம்முடைய சத்துருக்கள் எவருக்கும் நாம் பயப்படுகிறதில்லை, ஏனெனில் யெகோவா நம்மை பாதுகாப்பவராக இருக்கிறார்.—சங்கீதம் 64:1; நீதிமொழிகள் 3:25, 26.
12. யாருடைய பக்கத்தில் ஆயிரம்பேர் ‘விழுகிறார்கள்,’ எவ்வகையில்?
12 சங்கீதக்காரன் மேலும் தொடர்ந்து இவ்வாறு சொல்கிறார்: “உன் பக்கத்தில் ஆயிரம்பேரும், உன் வலதுபுறத்தில் பதினாயிரம்பேரும் விழுந்தாலும், அது உன்னை அணுகாது. உன் கண்களால் மாத்திரம் நீ அதைப் பார்த்து, துன்மார்க்கருக்கு வரும் பலனைக் காண்பாய்.” (சங்கீதம் 91:7, 8) யெகோவாவைத் தங்கள் அடைக்கலமாக கொள்ளத் தவறியதால், நம்முடைய ‘பக்கத்தில்தானேயும்’ பலர் ஆவிக்குரிய மரணத்தில் ‘விழுகிறார்கள்.’ சொல்லப்போனால், இன்றைய ஆவிக்குரிய இஸ்ரவேலின் “வலதுபுறத்தில்” ‘பதினாயிரம்பேர்’ விழுந்திருக்கிறார்கள். (கலாத்தியர் 6:16) ஆனால், நாம் அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்களாக இருந்தாலும் சரி, அவர்களுடைய ஒப்புக்கொடுத்த தோழர்களாக இருந்தாலும் சரி, கடவுளுடைய ‘மறைவில்’ பாதுகாப்பாய் இருக்கிறோம். நாம் ‘துன்மார்க்கருக்கு வரும் பலனைக் காண்கிறவர்களாக மாத்திரமே இருக்கிறோம்.’ வியாபார சம்பந்தமாகவும் மத சம்பந்தமாகவும் மற்ற வழிகளிலும் அவர்கள் தொல்லைகளை அறுவடை செய்கிறார்கள்.—கலாத்தியர் 6:7.
‘எந்த பேராபத்தும் நமக்கு நேரிடாது’
13. என்ன பேராபத்துக்கள் நமக்கு நேரிடுவதில்லை, ஏன்?
13 இந்த உலகத்தின் பாதுகாப்பு தகர்ந்துகொண்டிருக்கிற போதிலும், நாம் கடவுளை முதலாவதாக வைத்து சங்கீதக்காரனின் இவ்வார்த்தைகளிலிருந்து தைரியமடைகிறோம்: “‘யெகோவா என் அடைக்கலமானவர்’ என்று நீ சொன்னதால், மகா உன்னதமானவரையே உனக்கு வாசஸ்தலமாக கொண்டாய்; எந்த பேராபத்தும் உனக்கு நேரிடாது; ஒரு வாதைகூட உன் கூடாரத்தை அணுகாது.” (சங்கீதம் 91:9, 10, NW) ஆம், யெகோவா நமக்கு அடைக்கலமாயிருக்கிறார். எனினும், மகா உன்னதமான கடவுளை ‘நம் வாசஸ்தலமாகவும்’ ஆக்குகிறோம், அங்கு நாம் பாதுகாப்பைக் கண்டடைகிறோம். நாம் யெகோவாவை சர்வலோக பேரரசராக போற்றி, நம்முடைய பாதுகாப்பின் மூலகாரணரான அவரில் ‘வாசம்’ செய்து, அவருடைய ராஜ்யத்தைப் பற்றிய நற்செய்தியை அறிவிக்கிறோம். (மத்தேயு 24:14) ஆகையால், ‘எந்த பேராபத்தும் நமக்கு நேரிடாது,’ அதாவது இந்தச் சங்கீதத்தின் தொடக்கத்தில் விவரிக்கப்பட்ட பேராபத்துக்கள் எதுவும் நமக்கு நேரிடாது. பூமியதிர்ச்சிகள், புயற்காற்றுகள், ஜலப்பிரளயங்கள், பஞ்சங்கள், போரின் நாசங்கள் போன்ற பேராபத்துக்களை மற்றவர்களோடுகூட நாம் அனுபவிக்கிறபோதிலும், இவை நம் விசுவாசத்தை அல்லது நம் ஆவிக்குரிய பாதுகாப்பை அழிப்பதில்லை.
14. யெகோவாவின் ஊழியர்களாக நாம் ஏன் நாசகரமான வாதைகளால் பாதிக்கப்படுவதில்லை?
14 அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்கள், இந்தக் காரிய ஒழுங்குமுறைக்குப் புறம்பாக தனியே கூடாரங்களில் வாழும் பரதேசிகளைப்போல் இருக்கிறார்கள். (1 பேதுரு 2:11) ‘ஒரு வாதைகூட அவர்களுடைய கூடாரத்தை அணுகுகிறதில்லை.’ நம்முடைய நம்பிக்கை பரலோகத்திற்குரியதாக இருந்தாலும் பூமிக்குரியதாக இருந்தாலும், நாம் இந்த உலகத்தின் பாகமானவர்களாக இல்லை. ஒழுக்கக்கேடு, பொருளாசை, பொய் மதம், ‘மிருகத்தையும்’ ‘அதன் சொரூபமாகிய’ ஐக்கிய நாட்டு சங்கத்தையும் வணங்குதல் போன்ற ஆவிக்குரிய விதத்தில் நாசகரமான வாதைகளால் நாம் பாதிக்கப்படுவதில்லை.—வெளிப்படுத்துதல் 9:20, 21; 13:1-18; யோவான் 17:16.
15. என்ன முறைகளில் நாம் தேவதூதருடைய உதவியை அனுபவித்து மகிழுகிறோம்?
15 நாம் அனுபவித்து மகிழும் பாதுகாப்பை பற்றி சங்கீதக்காரன் மேலும் இவ்வாறு சொல்கிறார்: “உன் வழிகளிலெல்லாம் உன்னைக் காக்கும்படி, [யெகோவா] உனக்காகத் தம்முடைய தூதர்களுக்குக் கட்டளையிடுவார். உன் பாதம் கல்லில் இடறாதபடிக்கு அவர்கள் உன்னைத் தங்கள் கைகளில் ஏந்திக்கொண்டு போவார்கள்.” (சங்கீதம் 91:11, 12) நம்மைப் பாதுகாக்க தேவதூதர்களுக்கு அதிகாரம் கொடுக்கப்பட்டிருக்கிறது. (2 இராஜாக்கள் 6:17; சங்கீதம் 34:7-9; 104:4; மத்தேயு 26:53; லூக்கா 1:19) அவர்கள் ‘நம் வழிகளிலெல்லாம்’ நம்மை காக்கிறார்கள். (மத்தேயு 18:10) ராஜ்ய அறிவிப்பாளர்களாக நாம் தேவதூதரின் வழிநடத்துதலையும் பாதுகாவலையும் அனுபவித்து மகிழுகிறோம், ஆவிக்குரிய பிரகாரமாய் இடறுகிறதும் இல்லை. (வெளிப்படுத்துதல் 14:6, 7) நம்முடைய ஊழியத்திற்கு எதிராக தடை உத்தரவுகள் போன்ற ‘கற்களும்’கூட நாம் இடறி விழுந்து தேவ தயவை இழக்கும்படி நம்மை செய்விக்கவில்லை.
16. ‘இளம் சிங்கத்தாலும்’ ‘நாகப் பாம்பாலும்’ செய்யப்படுகிற தாக்குதல்கள் எவ்வாறு வேறுபடுகின்றன, நாம் அதற்கு எவ்வாறு பிரதிபலிப்போம்?
16 சங்கீதக்காரன் மேலும் தொடர்ந்து சொல்கிறார்: “இளம் சிங்கத்தின் மீதும் நாகப் பாம்பின் மீதும் நீ நடப்பாய்; பிடரிமயிருள்ள சிங்கத்தையும் வலுசர்ப்பத்தையும் மிதித்துப் போடுவாய்.” (சங்கீதம் 91:13, NW) இளம் சிங்கம் நேரடியாக பாய்ந்து தாக்குவதைப்போல், நம்முடைய சத்துருக்களில் சிலர், நம்முடைய பிரசங்க ஊழியத்தை நிறுத்துவதற்காக திட்டமிட்டு சட்டங்களை இயற்றுவதால் தங்கள் எதிர்ப்பை யாவரறிய காட்டுகிறார்கள். இந்த நேரடியான தாக்குதல் மட்டுமல்லாமல், மறைவிடத்திலிருந்து நாகப் பாம்பு தாக்குவதுபோன்ற எதிர்பாராத தாக்குதல்களும் நம்மீது நடத்தப்படுகின்றன. சட்டம் இயற்றுவோர், நீதிபதிகள், இன்னும் மற்றவர்களின் மூலமாய் மத குருமார் மறைவிலிருந்து நம்மை சிலசமயங்களில் தாக்குகிறார்கள். ஆனால், யெகோவாவின் ஆதரவால் நாம் நீதிமன்றங்களில் சமாதானமாய்க் குறை தீர்த்துக்கொள்ள நாடுகிறோம். இவ்வாறு, ‘நற்செய்திக்கு ஆதரவாக வாதாடி அதை சட்டப்பூர்வமாய் ஸ்தாபிக்கிறோம்.’—பிலிப்பியர் 1:7, NW; சங்கீதம் 94:14, 20-22.
17. “பிடரிமயிருள்ள சிங்கத்தை” நாம் எவ்வாறு மிதித்துப் போடுகிறோம்?
17 “பிடரிமயிருள்ள சிங்கத்தையும் வலுசர்ப்பத்தையும்” மிதித்துப்போடுவதைப் பற்றி சங்கீதக்காரன் பேசுகிறார். பிடரிமயிருள்ள சிங்கம் மிக மூர்க்கமுள்ளதாக இருக்கலாம், வலுசர்ப்பம் பெரிய உருவில் இருக்கும் ஊரும் பிராணியாக இருக்கலாம். (ஏசாயா 31:4) நேரடியாக தாக்குகையில் பிடரிமயிருள்ள சிங்கம் எவ்வளவு மூர்க்கமுள்ளதாக இருந்தாலும், நாம் சிங்கத்தைப் போன்ற மனிதருக்கு அல்லது அமைப்புகளுக்கு அல்லாமல் கடவுளுக்கே கீழ்ப்படிவதன் மூலம் அடையாள அர்த்தத்தில் அதை மிதித்துப் போடுகிறோம். (அப்போஸ்தலர் 5:29) ஆகவே, ஆபத்தான ‘சிங்கம்’ நமக்கு ஆவிக்குரிய தீங்கு செய்வதில்லை.
18. ‘வலுசர்ப்பம்’ யாரை நமக்கு நினைப்பூட்டலாம், நாம் தாக்குதலின்கீழ் இருந்தால் என்ன செய்ய வேண்டும்?
18 ‘வலுசர்ப்பம்’ என சங்கீதத்தில் குறிப்பிடப்பட்டிருப்பது, ‘பிசாசு என்றும் சாத்தான் என்றும் சொல்லப்பட்ட பழைய பாம்பாகிய பெரிய வலுசர்ப்பத்தை’ நமக்கு நினைப்பூட்டலாம். (வெளிப்படுத்துதல் 12:7-9; ஆதியாகமம் 3:15) தன் இரையை நெருக்கி விழுங்கக்கூடிய பெரிய உருவில் இருக்கும் ஓர் ஊரும் பிராணியைப்போல் அவன் இருக்கிறான். (எரேமியா 51:34) சாத்தான் நம்மை சுற்றி வளைத்து, இந்த உலக நெருக்கடிகளை வைத்து நம்மை நெருக்கி விழுங்க முயற்சி செய்கையில், அவனுடைய பிடியிலிருந்து நம்மை விடுவித்துக்கொண்டு, அந்த ‘வலுசர்ப்பத்தை’ மிதித்துப் போடுவோமாக. (1 பேதுரு 5:8) அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்கள் ரோமர் 16:20-ன் நிறைவேற்றத்தில் பங்குகொள்ள வேண்டுமென்றால் இவ்வாறுதான் செய்ய வேண்டும்.
யெகோவா—நம் இரட்சிப்பின் மூலகாரணர்
19. நாம் ஏன் யெகோவாவில் அடைக்கலம் புகுகிறோம்?
19 உண்மையான வணக்கத்தாரைக் குறித்து இவ்வாறு சொல்வதன் மூலம் சங்கீதக்காரன் கடவுளை பிரதிநிதித்துவம் செய்கிறார்: “அவன் என்னிடத்தில் வாஞ்சையாயிருக்கிறபடியால் அவனை விடுவிப்பேன்; என் நாமத்தை அவன் அறிந்திருக்கிறபடியால் அவனை உயர்ந்த அடைக்கலத்திலே வைப்பேன்.” ‘உயர்ந்த அடைக்கலத்தில்’ என்பது எட்டமுடியாத இடத்தில் வைப்பதைக் குறிக்கும். (சங்கீதம் 91:14) யெகோவாவின் வணக்கத்தாராக, முக்கியமாய் நாம் ‘அவரிடம் வாஞ்சையாயிருப்பதால்’ அவரில் அடைக்கலம் புகுகிறோம். (மாற்கு 12:29, 30; 1 யோவான் 4:19) கடவுளும் தமது பங்கில் நம் சத்துருக்களிடமிருந்து ‘நம்மை விடுவிக்கிறார்.’ இந்தப் பூமியிலிருந்து நாம் ஒருபோதும் அழிக்கப்பட மாட்டோம். மாறாக, கடவுளுடைய பெயரை நாம் அறிந்து விசுவாசத்துடன் அந்தப் பெயரில் கூப்பிடுவதால் இரட்சிக்கப்படுவோம். (ரோமர் 10:11-13) மேலும், ‘யெகோவாவின் பெயரில் என்றென்றுமாக நடக்க’ நாம் தீர்மானித்திருக்கிறோம்.—மீகா 4:5, NW; ஏசாயா 43:10-12.
20. சங்கீதம் 91-ன் முடிவில், தம்முடைய உண்மையுள்ள ஊழியனுக்கு யெகோவா என்ன வாக்குறுதியளிக்கிறார்?
20 சங்கீதம் 91-ன் முடிவில், தம்முடைய உண்மையுள்ள ஊழியனைப் பற்றி யெகோவா இவ்வாறு சொல்கிறார்: “அவன் என்னை நோக்கிக் கூப்பிடுவான், நான் அவனுக்கு மறுஉத்தரவு அருளிச்செய்வேன்; ஆபத்தில் நானே அவனோடிருந்து, அவனைத் தப்புவித்து, அவனைக் கனப்படுத்துவேன். நீடித்த நாட்களால் அவனைத் திருப்தியாக்கி, என் இரட்சிப்பை அவனுக்குக் காண்பிப்பேன்.” (சங்கீதம் 91:15, 16) கடவுளுடைய சித்தத்தின்படி ஜெபத்தில் நாம் அவரை நோக்கிக் கூப்பிடுகையில், அவர் நமக்குப் பதிலளிக்கிறார். (1 யோவான் 5:13-15) சாத்தானால் தூண்டிவிடப்பட்ட பகைமையால் நாம் ஏற்கெனவே மிகுந்த வேதனையை அனுபவித்திருக்கிறோம். ஆனால், ‘ஆபத்தில் நானே அவனோடிருப்பேன்’ என்ற வார்த்தைகள், எதிர்கால இக்கட்டுகளுக்கு நம்மை ஆயத்தம் செய்து, இந்தப் பொல்லாத ஒழுங்குமுறை அழிக்கப்படுகையில் கடவுள் நம்மை காத்து ஆதரிப்பார் என்று நமக்கு உறுதியளிக்கின்றன.
21. அபிஷேகம் செய்யப்பட்டவர்கள் எவ்வாறு ஏற்கெனவே கனப்படுத்தப்பட்டிருக்கிறார்கள்?
21 சாத்தானுடைய எதிர்ப்பு வெறித்தனமாக இருக்கிறபோதிலும், நம் மத்தியில் இருக்கும் அபிஷேகம் செய்யப்பட்ட மீதியானோர் பூமியில் ‘நீடித்த நாட்கள்’ வாழ்ந்த பின்பு, யெகோவா குறித்திருக்கும் காலத்தில் பரலோகத்தில் மகிமைப்படுத்தப்படுவார்கள். எனினும், அபிஷேகம் செய்யப்பட்டவர்களை கடவுள் ஒப்பற்ற விதங்களில் தப்புவித்திருப்பது ஏற்கெனவே ஆவிக்குரிய வகையில் அவர்களை கனப்படுத்தியிருக்கிறது. மேலும் இந்தக் கடைசி நாட்களில் பூமியில் யெகோவாவுக்கு சாட்சிகளாக தலைமை வகித்து நடத்தும் எத்தகைய நன்மதிப்பு அவர்களுக்கு கிடைத்திருக்கிறது! (ஏசாயா 43:10-12) தம் அரசதிகாரத்தை மெய்ப்பித்துக் காட்டி, தம்முடைய புனிதமான பெயரை பரிசுத்தப்படுத்தும் சந்தர்ப்பமான தமது மகா யுத்தமாகிய அர்மகெதோனில், யெகோவா தம்முடைய ஜனத்தை மிகப் பெருமளவில் தப்புவிப்பார்.—சங்கீதம் 83:17; எசேக்கியேல் 38:23; வெளிப்படுத்துதல் 16:14, 16.
22. ‘யெகோவாவால் வரும் இரட்சிப்பை’ யார் காண்பார்கள்?
22 நாம் அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்களாக இருந்தாலும் அல்லது அவர்களுடைய ஒப்புக்கொடுத்த தோழர்களாக இருந்தாலும், இரட்சிப்புக்காக கடவுளையே நோக்கியிருக்கிறோம். கடவுளை உண்மையுடன் சேவிப்பவர்கள் ‘யெகோவாவின் பெரிதும் பயங்கரமுமான நாளின்போது’ காக்கப்படுவார்கள். (யோவேல் 2:30-32, தி.மொ.) கடவுளுடைய புதிய உலகிற்குள் தப்பிப்பிழைத்து, கடைசி சோதனையில் உண்மையுடன் நிலைத்திருக்கும் ‘திரள்கூட்டத்தாரை’ ‘நீடித்த நாட்களால்,’ அதாவது முடிவற்ற வாழ்க்கையால் ‘திருப்தியாக்குவார்.’ மேலும், திரளானவர்களை உயிர்த்தெழுப்பவும் போகிறார். (வெளிப்படுத்துதல் 7:9; 20:7-15) நம்மை இயேசு கிறிஸ்துவின் மூலம் ‘இரட்சிப்பைக் காணும்படி’ செய்வதில் யெகோவா நிச்சயமாகவே மிகுந்த இன்பம் கொள்வார். (சங்கீதம் 3:8) இப்பேர்ப்பட்ட மகத்தான எதிர்பார்ப்புகள் நமக்கு இருப்பதால், நம்முடைய நாட்களை கடவுளுக்கு மகிமை உண்டாக்கும் முறையில் பயன்படுத்துவதற்கு உதவிக்காக தொடர்ந்து அவரை நோக்கியிருப்போமாக. யெகோவா நமக்கு அடைக்கலமானவர் என்பதை நம்முடைய சொல்லிலும் செயலிலும் தொடர்ந்து நிரூபித்து வருவோமாக.
[அடிக்குறிப்பு]
a கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தின் எழுத்தாளர்கள் சங்கீதம் 91-ஐ மேசியானிய தீர்க்கதரிசனத்தின் நோக்குநிலையிலிருந்து விவாதிக்கவில்லை. இந்த ‘முடிவு காலத்தில்’ இயேசுவைப் பின்பற்றும் அபிஷேகம் செய்யப்பட்டவர்களுக்கும், ஒப்புக்கொடுத்திருக்கும் அவர்களுடைய தோழர்களான தொகுதியாருக்கும் யெகோவா எப்படி இருக்கிறாரோ, அப்படியே மனிதனான இயேசு கிறிஸ்துவுக்கும், அடைக்கலமும் கோட்டையுமாக இருந்தார்.—தானியேல் 12:4.
நீங்கள் எவ்வாறு பதிலளிப்பீர்கள்?
• ‘உன்னதமானவரின் மறைவிடம்’ எது?
• நாம் ஏன் பயப்படுகிறதில்லை?
• ‘பேராபத்து நமக்கு நேரிடாது’ என்பது எவ்வாறு?
• யெகோவா நம் இரட்சிப்புக்கு மூலகாரணர் என்று நாம் ஏன் சொல்லலாம்?
[பக்கம் 17-ன் படம்]
யெகோவாவின் சத்தியம் எவ்வாறு நமக்கு ஒரு பெரிய கேடகமாக இருக்கிறதென்று உங்களுக்குத் தெரியுமா?
[பக்கம் 18-ன் படங்கள்]
எதிர்பாராத தாக்குதல்கள் மற்றும் நேரடியான எதிர்ப்பின் மத்தியிலும் ஊழியத்தை நிறைவேற்ற யெகோவா தம் ஊழியர்களுக்கு உதவுகிறார்
[படத்திற்கான நன்றி]
நாகப் பாம்பு: A. N. Jagannatha Rao, Trustee, Madras Snake Park Trust