பைபிளின் பிரதான குறிப்புகள் நீதிமொழிகள் 1:1-31:31
யெகோவாவுக்குப் பயப்படு, நீ சந்தோஷமாய் இருப்பாய்
“யெகோவாவுக்குப் பயப்படுவதே ஞானத்தின் ஆரம்பம்” (9:10, தி.மொ.) நீதிமொழிகளில் இது இவ்வளவு நன்றாக எடுத்துகாட்டப்படுகிறது! சுமார் பொ.ச.மு.716-ல் எழுதிமுடிக்கப்பட்ட இந்தப் பைபிள் புத்தகம், ஞானத்தை வெளிக்காட்டுவதற்கு, அறிவை சரியான விதத்தில் பொருத்திப் பிரயோகிப்பதற்கு நமக்கு உதவுகிறது. இந்த ஞானமுள்ள வார்த்தைகளுக்குச் செவிகொடுத்து சந்தோஷமுள்ளவர்களாய் இருங்கள்.
ஞானத்துக்குச் செவிகொடு
நீதிமொழிகள் 1:1-2:22 வாசியுங்கள். “யெகோவாவுக்குப் பயப்படுவது” அறிவின் சாராம்சமாக இருக்கிறது. நாம் சிட்சையை ஏற்றுக்கொள்வோமானால், தவறிழைப்பதில் பாவிகளுடன் சேர்ந்துகொள்ள மாட்டோம். தமக்குப் பயப்படுகிறவர்களுக்கு யெகோவா தவறு செய்பவர்களிடமிருந்து தங்களைப் பாதுகாக்கும் ஞானத்தைக் கொடுக்கிறார்.
◆ 1:7—“யெகோவாவுக்குப் பயப்படு”வது என்றால் என்ன?
அது பணிவோடுகூடிய அச்சம், ஆழ்ந்த மரியாதை மேலும் அவருடைய தயவான கிருபையையும் நற்குணத்தையும் நாம் போற்றுவதனால் அவரைப் பிரியப்படுத்தாமல் போய்விடுவோமோ என்ற ஒரு ஆரோக்கியமான பயம். “யெகோவாவுக்குப் பயப்படு”தல் அவர் மிகஉயர்ந்த நியாயாதிபதி, சர்வவல்லமையுள்ளவர், அவருக்குக் கீழ்ப்படியாதவர்களுக்குத் தண்டனை அல்லது மரணத்தைக் கொண்டுவர அதிகாரமும் வல்லமையும் உடையவர் என்பதை அங்கீகரிப்பதைக் குறிக்கும். முழுவதுமாக அவரில் நம்பிக்கை வைத்து, அவருடைய பார்வையில் கெட்டதாக இருப்பதை வெறுத்து, அவரை விசுவாசத்துடன் சேவிப்பதையும் அது குறிக்கிறது.—சங்கீதம் 2:11; 115:11; நீதிமொழிகள் 8:13.
◆ 2:7—உத்தமத்தன்மை என்றால் என்ன?
உத்தமத்தன்மையுடன் சம்பந்தப்பட்ட எபிரெய பதங்கள் “முழுமை” “பூரணம்” என்ற மூல அர்த்தத்தை உடையவையாக இருக்கின்றன. அவை ஒழுக்க சம்பந்தமான தூய்மையையும் நேர்மையையும் அடிக்கடி குறிப்பிடுகின்றன. “உத்தமமாய் நடக்கிறவர்கள்” யெகோவாவுக்குத் தங்களுடைய பக்தியில் அசைவற்றவர்களாய் இருக்கிறார்கள். அத்தகைய “நேர்மையுள்ளோருக்கு” அவர் பாதுகாப்பான “கேடகமாவார்” ஏனெனில் அவர்கள் மெய் ஞானத்தை வெளிகாட்டுகிறார்கள், அவருடைய நீதியுள்ள தராதரங்களுக்கு இசைவாக நடக்கிறார்கள்.
நமக்குப் பாடம்: நாம் யெகோவாவுக்குப் பயப்படுவோமானால் அவருடைய வார்த்தை மூலமாகவும் அமைப்பு மூலமாகவும் அவர் ஏற்பாடு செய்யும் சிட்சையை நாம் ஏற்றுக்கொள்வோம். அவ்வாறு செய்யத் தவறுவது நம்மை “மூடர்”களுடன், தெய்வபயமற்ற பாவிகளுடன் சேர்ப்பதாக இருக்கும்.—நீதிமொழிகள் 1:7; எபிரெயர் 12:6.
ஞானத்தை உயர்வாக மதி
நீதிமொழிகள் 3:1-4:27 வாசியுங்கள். நல்ல உட்பார்வை கொண்டிருக்க, “உன் முழு நெஞ்சோடும் யெகோவாவை நம்பு.” (தி.மொ.) ஞானத்தை உயர்வாய் மதிப்பவர்கள் சந்தோஷத்தை அனுபவிக்கிறார்கள். அவர்களுடைய பாதை மேன்மேலும் பிரகாசிக்கும் வெளிச்சத்தைப் போல் இருக்கிறது, ஆனால் இருதயத்தை அவர்கள் பாதுகாக்க வேண்டும்.
◆ 4:18—‘நீதிமான்களுடைய பாதை’ எவ்வாறு அதிகமதிகமாய் பிரகாசிக்கிறது?
சூரியனின் வெளிச்சம் விடியற்காலை துவங்கி “நடுப் பகல்வரைக்கும்” அதிகமதிகமாய் பிரகாசிக்கிறது. அதே விதமாக யெகோவாவின் மக்களுக்குக் காலம் செல்லச் செல்ல ஆவிக்குரிய வெளிச்சம் மேலும் மேலுமாக பிரகாசிக்கிறது. நிகழ்ச்சிகளுக்கு நாம் நெருங்கி வருகையில், யெகோவாவின் நோக்கங்களின் நிறைவேற்றத்தைப் பற்றிய விளக்கம் நமக்கு மேலும் மேலும் தெளிவாகிறது. தெய்வீக தீர்க்கதரிசனங்களைக் கடவுளுடைய பரிசுத்த ஆவியின் வெளிச்சம் தெளிவுபடுத்துகையிலும் மேலும் உலக சம்பவங்களில் அல்லது யெகோவாவின் ஜனங்களின் அனுபவங்களில் அவை நிறைவேற்றமடைகையிலும் அவை நமக்குத் தெளிவாகின்றன. இப்படியாக அவர்களுடைய பாதை ‘அதிகமதிகமாய் பிரகாசிக்கிறது.’
நமக்குப் பாடம்: மெய் ஞானத்தை வெளிகாட்டுவதும், தெய்வீக கட்டளைகளுக்கு இணங்க நடப்பதும் நாம் சீக்கிரமாகவே மரிப்பதற்கு வழிநடத்தும் மூடத்தனமான போக்கைப் பின்பற்றுவதிலிருந்து நம்மைப் பாதுகாக்கும். உதாரணமாக, இன ஒழுக்கக்கேட்டிற்கு எதிராக நம்மை எச்சரிக்கும் கடவுளுடைய கட்டளைகளை அசட்டை செய்பவர்கள் அகாலமான மரணத்தில் விளைவடையக்கூடிய பாலுறவினால் கடத்தப்படும் வியாதிகளைப் பெறக்கூடும். ஆகையால் கடவுளுடைய தேவைகளுக்கு இசைவாக நாம் செயற்படுவோமாக, ஏனெனில் அப்பொழுது ஞானம் நம்முடைய விஷயத்தில் “ஜீவ விருட்ச”மாக இருக்கும்.—நீதிமொழிகள் 3:18.
ஞானத்தை வெளிகாட்டும் வழிகள்
நீதிமொழிகள் 5:1-9:18 வாசியுங்கள். ஒழுக்கக்கேடான நடத்தையை வெறுத்து, “உன் இளவயதின் மனைவியோடே மகிழ்ந்திரு”ப்பது ஞானத்தின் வெளிகாட்டாக இருக்கிறது. யெகோவா வெறுக்கும் ஏழு காரியங்கள் பட்டியலிடப்பட்டிருக்கின்றன, வேசியின் வசீகரிப்பிற்கு எதிராக எச்சரிப்பு கொடுக்கப்படுகிறது. ஞானம் கடவுளுடைய “கைத்தேர்ந்த வேலையாளனாக, (NW)” உரு அமைத்து பேசப்படுகிறது. மேலும், “யெகோவாவுக்குப் பயப்படுவதே ஞானத்தின் ஆரம்பம், (தி. மொ.).”
◆ 6:1-5—இந்தப் புத்திமதி தாராள குணத்தின் ஆவிக்கு எதிர்மாறாக இருக்கிறதா?
மற்றவர்களுடன் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு, விசேஷமாக அந்நியர்களுடன் பிணைக்கப்படுவதற்கு எதிராக இது புத்திமதி அளித்தபோதிலும் இந்த நீதிமொழி தராள குணத்தை உற்சாகப்படுத்தாமல் இல்லை. இஸ்ரவேலர் ‘தரித்திரப்பட்ட’ தங்கள் சகோதரனுக்கு உதவி செய்யவேண்டும். (லேவியராகமம் 25:35-38) ஆனால் சிலர் நிச்சயமில்லாத வியாபாரங்களில் முதலீடு செய்து, தேவைப்பட்டால் கடனாளிகளுக்குப் பணம்கொடுக்க வாக்களிப்பதன் மூலம் தங்களுக்காக ‘கையடித்துக் கொடுக்கும்படி,’ மற்றவர்களை விவாதித்து ஈடுபடுத்துகிறார்கள். ஒருவேளை பெருமையடிப்பதன் மூலம் இத்தகைய இக்கட்டான நிலைக்குள் ஒருவன் வருவானேயாகில், சிறிதும் தாமதிக்காமல் இப்பேர்ப்பட்ட ஈடுபாட்டிலிருந்து தன்னை விடுவித்துக்கொள்வதே ஞானமுள்ள புத்திமதியாகும்.—நீதிமொழிகள் 11:15.
◆ 8:22-31—இது வெறுமென ஞானத்தின் ஒரு விவரிப்பா?
இல்லை, ஏனெனில் ஞானம் நித்திய கடவுளின் ஒரு குணாதிசயமாக எப்போதுமே இருந்துவந்திருக்கிறது. (யோபு 12:13) ஆகிலும் இங்கே, ஞானம் ‘படைக்கப்பட்டதாக’வும் பூமி சிருஷ்டிக்கப்பட்டபோது அது ‘யெகோவாவுக்கு அருகில் கைத்தேர்ந்த வேலையாளனாக, (NW)’ இருந்ததாகவும் சொல்லப்படுகிறது. இங்கே ஞானம் கடவுளுடைய குமாரனாக உரு அமைத்து பேசப்படுகிறது. பொருத்தமாகவே அவர், “அவருக்குள் ஞானம் அறிவு என்பவைகளாகிய பொக்கிஷங்களெல்லாம் அடங்கியிருக்கிறது,” என்ற உண்மைக்கு இசைய இருக்கிறார்.—கொலோசெயர் 1:15, 16; 2:3.
நமக்குப் பாடம்: நீதிமொழிகள் அதிகாரம் 7-ல் பேசப்பட்டிருக்கும் ஒழுக்கக்கேடான ஸ்திரீ தனது “சமாதான பலிகளைப்” பற்றியும் “பொருத்தனைகளைப்” பற்றியும் பேசுவதன் மூலம் தான் ஆவிக்குரிய தன்மையில் குறைவுபடவில்லை என்பதைச் சுட்டிக்காட்டியிருக்கலாம். சமாதான பலிகள் இறைச்சி, மாவு, எண்ணெய், திராட்சரசம் ஆகியவை அடங்கியதாக இருந்தது. (லேவியராகமம் 19:5, 6; 22:21; எண்ணாகமம் 15:8-10) ஆகையால் தன் வீட்டில் சாப்பிடுவதற்கும் குடிப்பதற்கும் ஏராளம் இருந்தது என்பதைச் சுட்டிக்காட்டுகிறாள். “பேதையர்களாகிய வாலிபருக்குள்ளே ஒரு புத்தியீன வாலிபன்” அங்கு வந்து நல்ல வேளையை அனுபவிக்கலாம் என்பதைக் குறிப்பிட்டாள். தவறான உள்நோக்கமுள்ள ஒருவன் ஒழுக்கக்கேடான நடத்தைக்கு எவ்வாறு வழிநடத்தப்படுகிறான் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டாக இருக்கிறது. இந்த எச்சரிப்புக்குச் செவிகொடுத்து கடவுளுக்கு விரோதமான இப்பேர்ப்பட்ட பாவத்தைத் தவிர்ப்பது எவ்வளவு முக்கியம்!—ஆதியாகமம் 39:7-12.
சிந்தனையைத் தூண்டும் வேற்றுமைகள்
நீதிமொழிகள் 10:1-15:33 வாசியுங்கள். சாலொமோனின் நீதிமொழிகள் பெரும்பான்மையானவை வேற்றுமைகளை எடுத்துக்காட்டும் பழமொழிகளுடன் துவங்குகின்றன. “யெகோவாவுக்குப் பயப்படு”தல் அறிவுறுத்தப்படுகிறது.—10:27; 14:26, 27; 15:16, 33.
◆ 10:25—“சுழல்காற்று” ஏன் குறிப்பிடப்படுகிறது?
நீதியான நியமங்களில் அஸ்திபாரம் கொண்டிராதவர்களாய், துன்மார்க்கர் ஸ்திரமற்ற கட்டடங்கள் கடுமையான புயல்காற்றில் விழுவதைப்போல் இருக்கிறார்கள். ஆனால் நீதிமான்கள் நிலையானவர்களாய் இருக்கிறார்கள் ஏனெனில் அவர்களுடைய சிந்தனை தெய்வீக நியமங்களின் மேல் உறுதியாக சார்ந்தவையாக இருக்கின்றன. நல்ல அஸ்திபாரமுடைய ஒரு கட்டடத்தைப் போல், அவர்கள் அழுத்தத்தின் கீழ் நொருங்கிவிழுவதில்லை.—மத்தேயு 7:24-27.
◆ 11:22—ஒரு பெண் பன்றியின் மூக்கிலுள்ள மூக்குத்திக்குச் சமமாய் எப்படி இருக்கமுடியும்?
மூக்கின் ஓரத்தின் வழியாக அல்லது சுவாச துளைகளைப் பிரிக்கும் சுவரின் வழியாக அணியப்படும் பொன் வளையம், அதை அணிந்திருப்பவள் நாகரீகமான ஒருத்தி என்பதைச் சுட்டிக்காட்டிற்று. ஆனால் இஸ்ரவேலர் பன்றிகளை அசுத்தமானவையாகவும் வெறுக்கத்தக்கவையாகவும் கருதினர். ஆகையால் அழகுள்ள ஆனால் மதிகேடாய் நடக்கிற ஒரு பெண் பன்றியின் மூக்கில் பொருத்தமற்றதாக இருக்கும் பொன் மூக்குத்தியைப் போல் இருக்கிறாள்.
◆ 14:14, தி.மொ.—விசுவாசம் இல்லாதவன் எப்படித் திருப்தியடைகிறான்?
“பின்வாங்கும் இருதயமுள்ளவன்” (விசுவாசமற்றவன், NW) பொருளாசையுள்ள ஒரு வாழ்க்கை முறையில் திருப்தியுள்ளவனாக இருக்கிறான். (சங்கீதம் 144:11-15a) கடவுளுடைய கண்பார்வையில் சரியானதைச் செய்வது அவனுக்கு எந்த வித்தியாசத்தையும் உண்டுபண்ணுவதில்லை, மேலும் அவன் யெகோவாவுக்குக் கணக்கு ஒப்புவிக்கவேண்டியதைப் பற்றி சிந்திப்பதே கிடையாது. (1 பேதுரு 4:3-5) ஆனால் “நல்லவன்” “பின்வாங்கும் இருதயமுள்ளவ”னின் நடவடிக்கைகளைத் தள்ளிவிட்டு, அவன் “திருப்தியாவது தன் செய்கைகளிலே.” அவன் ஆவிக்குரிய அக்கறைகளை முதலிடத்தில் வைக்கிறான், கடவுளுடைய தராதரங்களைக் கடைப்பிடிக்கிறான், அவரைச் சேவிப்பதில் வரும் உன்னதமான மகிழ்ச்சியை அனுபவிக்கிறான், தெய்வீக ஆசீர்வாதங்களில் திருப்தியுள்ளவனாக இருக்கிறான்.—சங்கீதம் 144:15b.
◆ 15:23, தி.மொ.—பதில்சொல்வதிலே நாம் எப்படி மகிழ்ச்சி காணலாம்?
நாம் கொடுக்கும் புத்திமதிக்குச் செவிகொடுத்து நல்ல விளைவுகள் ஏற்படும்போது இது நடக்கிறது. ஆனால் ஒருவருக்கு நாம் உதவி செய்யவேண்டுமானால், நாம்தானே அவருக்குக் கவனமாக செவிகொடுக்கவேண்டும், அவருடைய பிரச்னைக்குக் காரணமாயிருக்கும் அம்சங்களைச் சீர்தூக்கிப் பார்த்து, பைபிளின் அடிப்படையில் புத்திமதியைக் கொடுக்க வேண்டும். “ஏற்ற சமயத்தில் சொன்ன வார்த்தை”கள் எவ்வளவு நல்லவையாக இருக்கின்றன!
நமக்குப் பாடம்: “மூடன்” தூஷணைக்கு அல்லது “இலட்சை”க்கு சீக்கிரத்தில், “அதே தினத்தில்,” (NW) கோபமாக பிரதிபலிக்கிறான். “விவேகியோ”—முன்யோசனையுள்ள ஒருவன்—தன்னடக்கத்துடன் இருக்கவும் அவருடைய வார்த்தையைப் பின்பற்றவும் கடவுளுடைய ஆவிக்காக ஜெபிக்கிறான். (நீதிமொழிகள் 12:16) இப்படிச் செய்வதன் மூலம், நமக்கும் மற்றவர்களுக்கும் சரீரப்பிரகாரமான மற்றும் உணர்ச்சி சம்பந்தமான தீங்கு விளைவிக்கக்கூடிய மேலுமான வாய்ச்சண்டைகளை நாம் தவிர்க்கலாம்.
நீதிமொழிகளும் ஒப்புமைகளும்
நீதிமொழிகள் 16:1-24:34 வாசியுங்கள். சாலொமோனின் இந்த ஞானமுள்ள வார்த்தைகளில் பெரும்பான்மையானவை ஒப்புமைகள் உள்ள எண்ணங்களின் மூலம் வழிகாட்டுதலை அளிக்கின்றன. “யெகோவாவுக்குப் பயப்படு”தல் மறுபடியுமாக அறிவுறுத்தப்படுகிறது.—16:6; 19:23; 22:4; 23:17; 24:21.
◆ 17:19—வாசலை உயர்த்திக் கட்டுவதில் என்ன தவறு இருக்கிறது?
தங்களுடைய வீடுகளுக்கும் வெளிப்பிரகாரங்களுக்கும் வாசல்களைத் தாழ்வாக கட்டாதவர்கள் குதிரைகளின் மேல் சவாரி செய்துவரும் ஆட்கள் உள்ளே வந்து தங்களுடைய பொருட்களை எடுத்துக்கொண்டு போகும் ஆபத்தை உடையவர்களாய் இருந்தார்கள். இந்த நீதிமொழி தற்பெருமையான பேச்சின் மூலமாகவும் பெருமைபாராட்டுதலாலும் உயர்த்தப்பட்ட கதவாக சித்தரிக்கப்படும் ஒருவனின் வாயையுங்கூட குறிக்கக்கூடும். இப்பேர்ப்பட்ட பேச்சு சச்சரவுகளுக்கும் கடைசியில் சீரழிவுக்கும் வழிநடத்துகிறது.
◆ 19:17—ஏழைக்கு உதவுவது யெகோவாவுக்குக் கடன் கொடுப்பதுபோல் ஏன் இருக்கிறது?
ஏழ்மையுள்ளவர்கள் கடவுளுக்குச் சொந்தமானவர்கள், நாம் அவர்களுக்குச் செய்யும் காரியம் கடவுளுக்குச் செய்யப்படுவதாக எண்ணப்படுகிறது. (நீதிமொழிகள் 14:31) அவர்களிடமிருந்து பதிலாக ஒன்றும் எதிர்பார்க்காமல், தாழ்மையுள்ளோருக்குக் கரிசனை காட்டும்படி அல்லது எழைக்கு வெகுமதிகள் கொடுக்கும்படி அன்பும் தயாளகுணமும் நம்மைத் தூண்டுமேயானால், யெகோவா அப்பேர்ப்பட்ட கொடுத்தலை தமக்குக் கடன் கொடுப்பதாக கருதுகிறார். தமது பிரியத்தையும் ஆசீர்வாதங்களையும் கொடுப்பதன் மூலமும் அந்தக் கடன்களை அவர் நமக்குத் திரும்பக் கொடுக்கிறார்.—லூக்கா 14:12-14.
◆ 20:1—திராட்சரசம் எவ்வாறு “பரியாசஞ்செய்”கிறது?
மட்டுக்கு மீறி குடிப்பவனை திராட்சரசம் பரியாசம் செய்யும்படியும் அமளிபண்ணும்படியும் செய்யக்கூடும். அளவுக்கு மிஞ்சி குடிப்பதானது இத்தகைய கெட்ட விளைவுகளை உண்டுபண்ணுவதனால், கிறிஸ்தவர்கள் அதைத் தவிர்க்க வேண்டும்.—1 தீமோத்தேயு 3:2, 3, 8; 1 கொரிந்தியர் 6:9, 10; நீதிமொழிகள் 23:20, 21.
◆ 23:27—வேசி எப்படிப் “படுகுழி”யாகவும் “கிணறா”கவும் இருக்கிறாள்?
வேட்டையாடுபவர்களால் “ஆழமான படுகுழி”களில் மிருகங்கள் பிடிக்கப்படுவதுபோல், வேசிகளிடம் செல்பவர்களும் ஒழுக்கக்கேட்டில் அகப்பட்டுக்கொள்கிறார்கள். “பரஸ்திரீ” ஒரு வேசியைக் குறிக்கிறாள், ஏனெனில் இஸ்ரவேலில் இருந்த வேசிகளில் பெரும்பான்மையோர் பரதேசிகளாக இருந்தனர். “இடுக்கமான கிணறி”லிருந்து தண்ணீர் எடுப்பது அதிக கஷ்டம், ஏனெனில் மண்பானைகள் ஓரங்களில் அடிபட்டு நொருங்கிவிடும். அதே விதமாக, வேசியோடு சம்பந்தங்கொள்பவர்கள், உணர்ச்சி சம்பந்தமான மற்றும் சரீர சம்பந்தமான பெருந்துக்கத்தை அனுபவிக்கக்கூடும்.—நீதிமொழிகள் 7:21-27.
நமக்குப் பாடம்: “பொய்ச்சாட்சிக்காரன்” கடவுளுக்கு அவமரியாதையைக் காட்டுகிறான், நியாயப்பிரமாணத்தின் கீழ் அவன் மரணதண்டனைக்குட்படுத்தப்படலாம். இப்படியாக மனிதர் கைகளில் அல்லது யெகோவாவின் கைகளில் “அழியக்”கூடும். (நீதிமொழிகள் 21:28; உபாகமம் 5:20; 19:16-21; அப்போஸ்தலர் 5:1-11-ஐ ஒப்பிட்டுப் பார்க்கவும்) ஆனால் கவனமாக “செவி கொடுப்பவன்” தான் கேட்ட விஷயத்தைக் குறித்து நிச்சயமாக இருந்தால் மட்டுமே பேசுவான். அவனுடைய சாட்சியம் “எப்பொழுதும்” நிலைநிற்கும், பொய்சாட்சி என்று பின்னால் நிராகரிக்கப்படாது. மேலுமாக, அவன் பொய்ச்சாட்சியாக தீர்ப்பளிக்கப்படமாட்டான். யெகோவாவின் சாட்சிகள் மத்தியில் நியாய விசாரணைகளில் சாட்சி கூறுபவர்கள் திருத்தமான விஷயங்கள் கொடுக்கத்தக்கதாக கவனமாக செவிகொடுத்திருக்க வேண்டும், ஏனெனில் திருத்தமற்ற விஷயங்கள் அல்லது பொய்ச்சாட்சி ஆவிக்குரிய சேதத்தை உண்டுபண்ணக்கூடும்.
பிரயோஜனமுள்ள ஒப்புமைகள்
நீதிமொழிகள் 25:1-29:27 வாசியுங்கள். ராஜாவாகிய எசேக்கியாவின் மனிதரால் எழுதப்பட்ட சாலொமோனின் நீதிமொழிகள் அதிகமாக ஒப்புமைகள் மூலமாக கற்பிக்கின்றன. மற்ற காரியங்களோடுகூட, யெகோவாவின் பேரில் சார்ந்திருத்தல் உற்சாகப்படுத்தப்படுகிறது.
◆ 26:6—தன் “கால்களையே தறித்துக்கொள்”வதுடன் உபயோகிக்கப்படும் ஒப்புமை என்ன?
தன் கால்களைத் தறித்துக்கொள்பவன் எப்படித் தன்னை நொண்டியாக்குகிறானோ, அதேவிதமாக, “மூடனை” உபயோகிப்பவன் தன்னுடைய சொந்த அக்கறைகளுக்கு மூர்க்கமான அழிவை உண்டாக்குகிறான். மதியீனனிடம் ஒப்படைக்கப்பட்ட ஒரு வேலை வெற்றியடையாது. ஆகையால் சபை உத்தரவாதங்களுக்கு ஆட்களைச் சிபாரிசு செய்வதற்கு “முன்னதாக இவர்கள் தகுதிக்காக சோதிக்கப்படுவது,” (NW) எவ்வளவு ஞானமுள்ள காரியம்!—1 தீமோத்தேயு 3:10.
◆ 27:17—“முகத்தைக் கருக்கிடுவது” எப்படி?
இரும்பு உலோகத்தால் செய்யப்பட்ட ஒரு கத்தியை இரும்பை உபயோகித்து கூர்மையாக்கலாம். இதைப்போலவே, ஒருவர் மற்றொருவரின் மனதுக்குரிய மற்றும் ஆவிக்குரிய நிலையை கூர்மையாக்குவதில் வெற்றி காணக்கூடும். ஏமாற்றங்களும் மாற்றப்படக்கூடாத ஆட்களுடன் தொடர்பு நம்மை சோர்வடையும்படி செய்தால், உடன் விசுவாசியின் அனுதாபமுள்ள நோக்குநிலையும் வேதப்பூர்வமான உற்சாகமும் அதிக தூண்டுதலளிப்பதாக இருக்கும். நம்முடைய விசனகரமான முகத்தோற்றம் மாறுகிறது, புதிய நம்பிக்கையுடன் மீண்டும் செயற்படுவதற்கு நாம் புத்துயிரளிக்கப்படுகிறோம்.—நீதிமொழிகள் 13:12.
◆ 28:5—“சகலத்தையும்” எது உட்படுத்துகிறது?
கெட்ட காரியங்களைச் செய்பவர்கள் ஆவிக்குரிய விதத்தில் குருடராக இருக்கிறார்கள். (நீதிமொழிகள் 4:14-17; 2 கொரிந்தியர் 4:4) அவர்கள் “நியாயத்தை அறியார்கள்,” அல்லது கடவுளுடைய தராதரங்களின்படி எது சரியானது என்பதை அறியார்கள். அவர்கள் காரியங்களைச் சரியாக நியாயந்தீர்க்கமுடியாது, சரியான தீர்மானங்களைச் செய்யமுடியாது. ஆனால் ஜெபத்தின் மூலமும் அவருடைய வார்த்தையைப் படிப்பதன் மூலமும் “யெகோவாவைத் தேடுபவர்கள்,” அவரைப் பிரியப்படுத்தும் விதத்தில் சேவிக்கத் தேவைப்படும் “சகலத்தையும்” விளங்கிக்கொள்ளுகிறார்கள்.—எபேசியர் 5:15-17.
◆ 29:8—மேட்டிமையாக பேசுபவர்கள் எப்படிப் “பட்டணத்தில் தீக்கொழுத்திவிடுகிறார்கள்?”
அதிகாரத்தை அவமதிக்கும் பெருமை பாராட்டுபவர்கள் அதிக கோபத்துடன் பேசுவார்கள். அப்படிச் செய்வதன் மூலம் ஒரு முழு பட்டணத்தின் வாசிகள் யாவரையுமே தீக்கொளுத்திவிடும் அளவுக்கு வேற்றுமையின் தீயில் எண்ணெய் ஊற்றி அதை வீசுகிறார்கள். ஆனால் ஞானிகள் சாந்தத்தோடும் புத்தியோடும் பேசுவதன் மூலம் “கோபத்தை அகற்று”வார்கள், இப்படியாக எரிச்சலின் தீயை அணைத்து, சமாதானத்தை ஸ்தாபிப்பார்கள்.—நீதிமொழிகள் 15:1.
நமக்குப் பாடம்: நாம் பெருமையுள்ளவர்களாய் இருப்போமானால், நம்முடைய அகந்தை நாம் தாழ்த்தப்படுவதில் விளைவடையும். (நீதிமொழிகள் 29:23) பெருமையுள்ள ஒருவன் துணிகரமுள்ளவனாகவும் இருப்பான், இது அவமானம், தவறு செய்தல், மற்றும் அழிவு ஆகியவற்றிற்கு வழிநடத்தக்கூடும். (நீதிமொழிகள் 11:2; 16:18; 18:12) மேட்டிமையுள்ள ஒருவன் ஏதோ ஒரு விதத்தில் தாழ்த்தப்படும்படி, ஒருவேளை அழிவுக்குக் கொண்டுவரப்படும்படியாகவுங்கூட கடவுள் கவனித்துக்கொள்ளக்கூடும். அப்பேர்ப்பட்ட மனிதன் மகிமையை நாடுகிறான், ஆனால் அவனுடைய வழிகள் வெறுக்கத்தக்கதாக இருப்பதாக மற்றவர்கள் காண்கிறார்கள். ஆகிலும் “மனத்தாழ்மையுள்ளவனோ [முடிவில்] கனமடைவான்.”
‘உபதேச வாக்கியங்கள்’
நீதிமொழிகள் 30:1-31:31 வாசிக்கவும். ஆகூரின் உபதேச வாக்கியங்கள் “தேவனுடைய வசனமெல்லாம் புடமிடப்பட்டவை” என்பதை அங்கீகரிக்கின்றன. மேலும் ‘மிகவும் ஆச்சரியமானவையான’ காரியங்கள் சொல்லப்படுகின்றன. (30:1-33) லேமுவேலுக்கு அவன் தாய் அவனுக்குப் போதித்த “உபதேச”ங்கள், குடிவெறியுண்டாக்கும் மதுபானங்கள் ஒருவன் நியாயத்தைப் புரட்டும்படி செய்யக்கூடும் என்று எச்சரிக்கிறது. நீதியாய் நியாயந்தீர்க்கும்படி ஊக்குவிக்கிறது, மற்றும் ஒரு நல்ல மனைவியை விவரிக்கிறது.—31:1-31.
◆ 30:15, 16—இந்த உதாரணங்களின் குறிப்பு என்ன?
பேராசையை ஒருபோதும் திருப்திசெய்ய முடியாது என்பதை அவை விளக்குகின்றன. அட்டைகள் பெருந்திண்டிகள் போல் இரத்தத்தின் மீதுண்கிறதுபோல், பேராசையுள்ளவர்கள் எப்போதுமே மேலும் அதிக பணத்தையும் வல்லமையையும் கேட்கிறார்கள். அதேவிதமாக, பாதாளமும் ஒருபோதும் திருப்தியடையாமல், மரணத்துக்கு இரையாகிறவர்களைப் பெறத்தக்கதாக எப்போதும் திறந்து இருக்கிறது. மலட்டுக் கர்ப்பமும் குழந்தைகளுக்காக அழுகின்றது. (ஆதியாகமம் 30:1) வறண்ட நிலம் மழைத் தண்ணீரைக் குடித்துவிடுகிறது, மறுபடியும் வறண்டதாகிவிடுகிறது. மேலுமாக அதில் எறியப்பட்ட பொருட்களை விழுங்கிவிட்டிருக்கும் அக்கினி, அருகிலுள்ள மற்ற பொருட்களையும் எரிப்பதற்கு தன் நெருப்பை அனுப்புகிறது. பேராசையுள்ளவர்களும் அப்படியே இருக்கிறார்கள். ஆகிலும் தெய்வீக ஞானத்தால் வழிநடத்தப்படுகிறவர்கள் இப்பேர்ப்பட்ட தன்னலத்தால் முடிவில்லாமல் தூண்டப்பட்டு நடத்தப்படுவதில்லை.
◆ 31:6, 7—“மனங்கசந்தவர்களுக்கு” ஏன் திராட்சரசத்தைக் கொடுக்க வேண்டும்?
மதுபானமும் திராட்சரசமும் மயக்கமுண்டாக்கும் வஸ்துக்கள். ஆகையால் அவை “மடிந்துபோகிறவனுக்கும்” அல்லது சாகப்போகிறவனுக்கும், தங்களுடைய வேதனைகளையும் கஷ்டங்களையும் உணராதபடிக்கு “மனங்கசந்தவர்களுக்கும்” கொடுக்கப்படுகின்றன. இயேசு மரத்தில் அறையப்பட்டபோது ரோம போர்ச்சேவகர்கள் இயேசுவுக்குத் திராட்சரசம் குடிக்கக் கொடுத்ததை, மரணதண்டனை அனுபவிக்கும் வேதனையை மந்தமாக்குவதற்குக் குற்றவாளிகளுக்கு வெள்ளைப்போளம் கலந்த மது கொடுக்கும் பூர்வீக பழக்கம் விளக்குகிறது. அப்பேர்ப்பட்ட திராட்சரசத்தை அவர் குடிக்க மறுத்தார், ஏனெனில் அந்தக் கடுமையான சோதனையின்போது அவர் தம்முடைய முழு மனோசக்தியும் உடையவராக இருந்து, கடவுளுக்குத் தம்முடைய உத்தமத்தைக் காத்துக்கொள்ள விரும்பினார்.—மாற்கு 15:22-24.
◆ 31:15—இந்த “வேலைக்காரிகள்” யார்?
இங்கே வீட்டு வேலைகளைச் செய்யும் பெண்களைக் குறிக்கிறது. அவர்களுக்குப் போதுமான உணவு இல்லை அல்லது வேலை இல்லை என்று குறைகூறுவதற்குக் காரணம் இருக்காது. ஏனெனில், சுறுசுறுப்பான மனைவி தனது வீட்டாருக்கு உணவு அளிப்பதோடுகூட, இந்த வேலைக்காரிகளுக்கு உணவும் வேலை நியமிப்புகளும் இருக்கும்படியாகவும் அவள் கவனித்துக்கொண்டாள்.
நமக்குப் பாடம்: நாம் அபூரணராக இருப்பதால், நாம் புத்தியில்லாமல், சுயமேன்மை அடையும் முயற்சியில் நம்மைநாமே ‘உயர்த்திக்கொள்ளக்’கூடும். நாம் இப்படிச் செய்வோமானால் அல்லது கோபமாக பேசுவோமானால், நாம் நம்முடைய “கையினால் வாயை மூடி” நாம் யாரைப் புண்படுத்தினோமோ அவரை மேலுமாக கோபப்படுத்தாதபடி தொடர்ந்து அப்பேர்ப்பட்ட வார்த்தைகளைப் பேசுவதிலிருந்து நம்மைக் கட்டுப்படுத்த வேண்டும். வெண்ணெயை எடுப்பதற்குப் பாலை எப்படிக் கடையவேண்டுமோ, மூக்கைப் பிசைந்தால் மட்டுமே இரத்தம் எப்படி வருமோ, அதே விதமாகவே, ஆட்கள் கட்டுப்பாடில்லாமல் தங்கள் கோபத்தை வெளியிடும்போது மட்டுமே சண்டை ஏற்படும். (நீதிமொழிகள் 30:32, 33) அப்பேர்ப்பட்ட சம்பவங்களில், அமைதலாக இருந்து, மேலுமான தொந்தரவை தவிர்ப்பது எவ்வளவு ஞானமுள்ள காரியம்!
நீதிமொழிகள் புத்தகத்திலிருந்து நாம் எப்பேர்ப்பட்ட நன்மைகளைப் பெறக்கூடும்! யெகோவாவுக்கு மரியாதைக்குரிய பயத்தை வளர்க்கும் இந்த ஞானமுள்ள வார்த்தைகளை நாம் மதித்துணருவோமாக. அவற்றைப் பொருத்திப் பிரயோகிப்பது நம்மை நிச்சயமாகவே சந்தோஷமுள்ளவர்களாக்கும். (w87 5/15)