ஞானத்தை சம்பாதித்து சிட்சையை ஏற்றுக்கொள்ளுங்கள்
யெகோவா தேவன் மகத்தான போதகர். தம்மைப் பற்றி மட்டுமல்ல, ஜீவனைப் பற்றிய கல்வியையும் தம்முடைய ஜனங்களுக்கு புகட்டுகிறார். (ஏசாயா 30:20; 54:13; சங்கீதம் 27:11) உதாரணமாக, இஸ்ரவேல் தேசத்தாருக்கு தீர்க்கதரிசிகளையும் லேவியர்களையும்—முக்கியமாக ஆசாரியர்களையும்—ஞானிகளையும் போதகர்களாக யெகோவா கொடுத்தார். (2 நாளாகமம் 35:3; எரேமியா 18:18) கடவுளுடைய நோக்கங்களையும் குணங்களையும் நடக்கவேண்டிய சரியான வழியையும் மக்களுக்கு தீர்க்கதரிசிகள் போதித்தார்கள். யெகோவாவின் சட்டத்தை போதிக்கும் உத்தரவாதம் ஆசாரியருக்கும் லேவியருக்கும் இருந்தது. ஞானிகள் அல்லது மூப்பர்கள் அன்றாட வாழ்க்கை சம்பந்தப்பட்ட விஷயங்களைக் குறித்து நல்ல அறிவுரை வழங்கினார்கள்.
தாவீதின் குமாரனாகிய சாலொமோன் இஸ்ரவேலில் பிரபல ஞானியாக விளங்கினார். (1 இராஜாக்கள் 4:30, 31) அவருடைய மகிமையையும் செல்வத்தையும் பார்த்து, புகழ்மிக்க சேபா தேசத்து ராணி இவ்வாறு மலைத்துப்போய் சொன்னார்: “இவைகளில் பாதியாகிலும் எனக்கு அறிவிக்கப்படவில்லை என்று காண்கிறேன்; நான் கேள்விப்பட்ட பிரஸ்தாபத்தைப் பார்க்கிலும், உம்முடைய ஞானமும் செல்வமும் அதிகமாயிருக்கிறது.” (1 இராஜாக்கள் 10:7) சாலொமோனுடைய ஞானத்தின் இரகசியம் என்ன? பொ.ச.மு. 1037-ல் சாலொமோன் இஸ்ரவேலின் ராஜாவானபோது, ‘ஞானத்திற்காகவும் அறிவிற்காகவும்’ கடவுளிடம் ஜெபித்தார். அவருடைய மன்றாட்டில் யெகோவா மகிழ்ந்து, அவருக்கு அறிவையும் ஞானத்தையும் புரிந்துகொள்ளும் இதயத்தையும் தந்தார். (2 நாளாகமம் [குறிப்பேடு] 1:10-12, பொ.மொ.; 1 இராஜாக்கள் 3:12) இதனால், சாலொமோன் ‘மூவாயிரம் நீதிமொழிகளைச் சொன்ன’தில் ஆச்சரியமில்லை! (1 இராஜாக்கள் 4:32) இவற்றில் சில, பைபிள் புத்தகமாகிய நீதிமொழிகளில் பதிவுசெய்யப்பட்டுள்ளன. ‘ஆகூரின் வசனங்களும்’ ‘ராஜாவாகிய லேமுவேலின் வசனங்களும்’ அதில் உள்ளன. (நீதிமொழிகள் 30:1; 31:1) இந்த நீதிமொழிகளில் சொல்லப்பட்டுள்ள சத்தியங்கள் கடவுளுடைய ஞானத்தைப் பிரதிபலிக்கின்றன, அவை நித்தியமானவை. (1 இராஜாக்கள் 10:23, 24) மகிழ்ச்சியும் வெற்றிகரமுமான வாழ்க்கை வாழ விரும்புகிற எவருக்கும், அன்று போலவே இன்றும் இவை அத்தியாவசியமானவையாக இருக்கின்றன.
வெற்றியும் ஒழுக்க சுத்தமும்—எப்படி?
நீதிமொழிகள் புத்தகத்தின் நோக்கம் அதன் ஆரம்ப வார்த்தைகளில் விளக்கப்பட்டுள்ளது: “தாவீதின் குமாரனும் இஸ்ரவேலின் ராஜாவுமாகிய சாலொமோனின் நீதிமொழிகள்: இவைகளால் ஞானத்தையும் போதகத்தையும் [“சிட்சையையும்,” NW] அறிந்து, புத்திமதிகளை உணர்ந்து, விவேகம், நீதி, நியாயம், நிதானம் என்பவைகளைப் பற்றிய உபதேசத்தை அடையலாம். இவைகள் பேதைகளுக்கு வினாவையும், வாலிபருக்கு அறிவையும் விவேகத்தையும் கொடுக்கும்.”—நீதிமொழிகள் 1:1-4.
எப்பேர்ப்பட்ட உயர்ந்த நோக்கத்திற்கு “சாலொமோனின் நீதிமொழிகள்” துணைபுரிகின்றன! ஒருவர் “ஞானத்தையும் போதகத்தையும் [“சிட்சையையும்,” NW] அறிந்து” கொள்வதற்கே அவை இருக்கின்றன. ஞானம் என்பது காரியங்களை உள்ளபடியே உற்றுநோக்குவதையும், பிரச்சினைகளை தீர்ப்பதற்கும் இலக்குகளை அடைவதற்கும் ஆபத்துக்களை தவிர்ப்பதற்கும் இந்த அறிவை பயன்படுத்துவதையும் அல்லது இப்படி செய்ய பிறருக்கு உதவிசெய்வதையும் உட்படுத்துகிறது. “நீதிமொழிகள் புத்தகத்தில், ‘ஞானம்’ என்பது திறமையோடு வாழ்க்கை நடத்துவதை—ஞானமான தெரிவுகள் செய்து வெற்றிகரமாக வாழ்க்கை நடத்தும் திறமையை—குறிக்கிறது” என ஒரு புத்தகம் கூறுகிறது. அப்படியானால், ஞானத்தைப் பெறுவது எவ்வளவு முக்கியம்!—நீதிமொழிகள் 4:7.
சாலொமோனின் நீதிமொழிகள் சிட்சையைப் பற்றியும் சொல்கின்றன. நமக்கு இந்தப் பயிற்சி அவசியமா? பைபிளில் சிட்சை என்பது திருத்தம் செய்யும், கடிந்துகொள்ளும் அல்லது கண்டனம் செய்யும் கருத்தை தருகிறது. “[அது] முட்டாள்தனமான செயல்கள் அல்லது எண்ணங்களுக்கு வழிநடத்தும் மனச்சாய்வை சரிப்படுத்துவதை உட்படுத்தும் ஒழுக்க சம்பந்தமான விஷயங்களில் பயிற்றுவிப்பை” குறிக்கிறது என பைபிள் அறிஞர் ஒருவர் கூறுகிறார். சிட்சை—அது தாங்களாகவே கொடுத்துக்கொண்டதாக இருந்தாலும்சரி மற்றவர்களால் கொடுக்கப்பட்டதாக இருந்தாலும்சரி—தவறுசெய்வதிலிருந்து அது நம்மை தடைசெய்கிறது. அது மட்டுமல்லாமல், நம்முடைய நன்மைக்காக, நம்மை திருத்திக்கொள்ளவும் உதவுகிறது. ஆம், ஒழுக்க ரீதியில் சுத்தமாக நிலைத்திருக்க விரும்பினால் நமக்கு சிட்சை கண்டிப்பாக அவசியம்.
நீதிமொழிகள் புத்தகத்திற்கு இரண்டு நோக்கமுள்ளது: ஒன்று ஞானத்தை தருவது, மற்றொன்று சிட்சையை அளிப்பது. ஒழுக்க சிட்சையும் மனத் திறமையும் அநேக அம்சங்களைக் கொண்டவை. உதாரணமாக, நீதியும் நேர்மையும் ஒழுக்கநெறி சார்ந்த பண்புகளாகும், அவை யெகோவாவின் உயர்ந்த தராதரங்களைப் பின்பற்ற நமக்கு உதவிபுரிகின்றன.
புரிந்துகொள்ளுதல், உட்பார்வை, விவேகம், சிந்திக்கும் திறன் போன்ற பல அம்சங்களையும் உள்ளிட்ட ஒரு கலவைதான் ஞானம். புரிந்துகொள்ளுதல் என்பது ஒரு விஷயத்தை ஆராய்ந்து அதன் எல்லா அம்சங்களையும் பகுத்துணர்ந்து, இவற்றிற்கும் முழு விஷயத்திற்கும் இடையேயுள்ள பொருத்தங்களை கிரகித்துக் கொள்வதாகும். உட்பார்வைக்கு நியாயங்களை எடுத்துக் காட்டும் அறிவும் ஒரு போக்கு ஏன் சரியானது அல்லது தவறானது என்பதை புரிந்துகொள்ளும் திறமையும் தேவை. உதாரணமாக, தவறான பாதையில் ஒரு நபர் செல்கையில் புரிந்துகொள்ளும் ஒருவர் அதை உணர்ந்துகொள்வார். அந்த ஆபத்தைக் குறித்து உடனடியாக அந்நபருக்கு எச்சரிக்கையும் கொடுப்பார். ஆனால் அந்த நபர் ஏன் அந்தப் பாதையில் செல்கிறார் என்பதைப் புரிந்துகொள்வதற்கும் அவரை காப்பாற்றுவதற்கு மிகவும் திறம்பட்ட வழியை கண்டுபிடிப்பதற்கும் உதவி செய்பவருடைய பங்கில் உட்பார்வை தேவை.
விவேகமுள்ள ஆட்கள் ஜாக்கிரதையுடன் இருக்கிறார்கள்—எளிதில் ஏமாறமாட்டார்கள். (நீதிமொழிகள் 14:15) இவர்களால் தீமையை முன்னரே கண்டுணர்ந்து அதற்காக தயாராக முடிகிறது. வாழ்க்கைக்கு நோக்கமுள்ள வழிநடத்துதலை கொடுக்கும் ஆரோக்கியமுள்ள சிந்தைகளையும் எண்ணங்களையும் உருவாக்குவதற்கு ஞானம் நமக்கு உதவுகிறது. பைபிள் சம்பந்தப்பட்ட நீதிமொழிகளைப் படிப்பது உண்மையிலேயே பலன்தரும் ஒன்று. ஏனெனில் ஞானத்தையும் சிட்சையையும் நாம் அறிந்துகொள்வதற்கு அவை பதிவுசெய்யப்பட்டுள்ளன. நீதிமொழிகளுக்கு கவனம் செலுத்தும் “அனுபவமற்றவர்களும்கூட” (NW) விவேகத்தைப் பெறுவார்கள், ‘வாலிபர்’ அறிவையும் சிந்திக்கும் திறமையையும் பெறுவார்கள்.
ஞானிகளுக்கு நீதிமொழிகள்
ஆனால் பைபிள் நீதிமொழிகள் அனுபவமற்றவர்களுக்கும் வாலிபர்களுக்கும் மட்டுமே உரித்தானதல்ல. அவை செவிசாய்த்து கேட்கும் எந்த ஞானிக்கும் உரித்தானதே. “புத்திமான் இவைகளைக் கேட்டு, அறிவில் தேறுவான்; விவேகி நல்லாலோசனைகளை அடைந்து; நீதிமொழியையும், அதின் அர்த்தத்தையும், ஞானிகளின் வாக்கியங்களையும், அவர்கள் உரைத்த புதைபொருள்களையும் அறிந்துகொள்வான்.” (நீதிமொழிகள் 1:5, 6) ஏற்கெனவே ஞானத்தை அடைந்த ஒரு நபர் இந்த நீதிமொழிகளுக்கு கவனம் செலுத்துவதன் மூலம் தன்னுடைய அறிவை வளர்த்துக்கொள்வார். புரிந்துகொள்ளுதலுள்ள நபர் தன்னுடைய வாழ்க்கையை வெற்றிகரமாக நடத்தும் திறமையை அதிகரித்துக்கொள்வார்.
பொதுவாக, ஒரு நீதிமொழி சில வார்த்தைகளில் ஆழமான சத்தியங்களை வெளிப்படுத்துகிறது. பைபிள் நீதிமொழி புதிர்போடும் முறையில் சொல்லப்பட்டிருக்கலாம். (நீதிமொழிகள் 1:17-19) சில நீதிமொழிகள் புதிர்களாக—குழப்பமும் சிக்கலுமான வாக்கியங்களாக—இருக்கின்றன. நீதிமொழியில் உவமையும் உருவக நடையும் மற்ற அணி நடைகளும் இருக்கலாம். இவற்றைப் புரிந்துகொள்ள நேரமும் தியானமும் அவசியம். அநேக நீதிமொழிகளை எழுதிய சாலொமோன், ஒரு நீதிமொழியில் பொதிந்துள்ள சிக்கலான அர்த்தங்களைப் புரிந்துகொள்ளும் திறமை பெற்றிருந்தார். நீதிமொழிகள் புத்தகத்தில், அந்தத் திறமையை தன்னுடைய வாசகருக்கும் வழங்கும் முயற்சியை மேற்கொள்கிறார். அது ஒரு ஞானி கவனம் செலுத்த விரும்பும் ஒன்று.
இலக்கிற்கு வழிநடத்தும் ஆரம்பம்
ஞானத்தையும் சிட்சையையும் நாடுகிறவர் எங்கிருந்து ஆரம்பிக்கிறார்? சாலொமோன் பதிலளிக்கிறார்: “கர்த்தருக்குப் [“யெகோவாவுக்கு,” NW] பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்; மூடர் ஞானத்தையும் போதகத்தையும் அசட்டை பண்ணுகிறார்கள்.” (நீதிமொழிகள் 1:7) அறிவு என்பது யெகோவாவுக்கு பயப்படும் பயத்திலிருந்து ஆரம்பமாகிறது. அறிவின்றி எந்த ஞானமும் சிட்சையும் இருக்க முடியாது. அப்படியானால், யெகோவாவுக்கு பயப்படுதலே ஞானம் மற்றும் சிட்சையின் ஆரம்பம்.—நீதிமொழிகள் 9:10; 15:33.
தேவனுக்குப் பயப்படுவது என்பது பேரச்சத்தினால் பயந்து நடுங்குவதல்ல. மாறாக, அது ஆழ்ந்த மரியாதையையும் பயபக்தியையும் குறிக்கிறது. இப்படிப்பட்ட பயமின்றி மெய்யறிவு எதுவும் இருக்க முடியாது. உயிர் அவரிடமிருந்தே வருகிறது, ஆகவே எந்த அறிவையும் பெற்றிருப்பதற்கு உயிர் இன்றியமையாதது. (சங்கீதம் 36:9; அப்போஸ்தலர் 17:25, 28) மேலும், கடவுளே எல்லாவற்றையும் படைத்தவர். ஆகவே மனிதனுடைய எல்லா அறிவும் அவருடைய வேலைப்பாடுகளை ஆராய்வதன் அடிப்படையிலேயே சார்ந்துள்ளது. (சங்கீதம் 19:1, 2; வெளிப்படுத்துதல் 4:11) ஏவப்பட்டு எழுதப்பட்ட வார்த்தையையும் கடவுள் தந்திருக்கிறார். அது “உபதேசத்துக்கும், கடிந்துகொள்ளுதலுக்கும், சீர்திருத்தலுக்கும், நீதியைப் படிப்பிக்குதலுக்கும் பிரயோஜமுள்ளவைகளாயிருக்கிறது.” (2 தீமோத்தேயு 3:16, 17) எனவே, எல்லா மெய்யறிவுக்கும் யெகோவாவே மூலகாரணர், அதை நாடுகிற மனிதன் அவரிடம் மரியாதைக்குரிய பயத்தோடிருக்க வேண்டும்.
தேவ பயமற்ற மனித அறிவுக்கும் உலகப்பிரகாரமான ஞானத்திற்கும் என்ன மதிப்பு இருக்கிறது? அப்போஸ்தலன் பவுல் எழுதினார்: “ஞானி எங்கே? வேதபாரகன் எங்கே? இப்பிரபஞ்சத் தர்க்கசாஸ்திரி எங்கே? இவ்வுலகத்தின் ஞானத்தை தேவன் பைத்தியமாக்கவில்லையா?” (1 கொரிந்தியர் 1:20) தேவபயம் இல்லாத உலக ஞானி, அறியப்பட்ட உண்மைகளை வைத்து தவறான முடிவுக்கு வருகிறான், கடைசியில் ‘முட்டாளாகிறான்.’
“உன் கழுத்துக்குச் சரப்பணி”
அடுத்ததாக, இளைஞரிடம் இந்த ஞானி கவனத்தை திருப்புகிறார்: “என் மகனே, உன் தகப்பன் புத்தியைக் கேள், உன் தாயின் போதகத்தைத் தள்ளாதே. அவைகள் உன் சிரசுக்கு அலங்காரமான முடியும், உன் கழுத்துக்குச் சரப்பணியுமாயிருக்கும்.”—நீதிமொழிகள் 1:8, 9.
பூர்வ இஸ்ரவேலில், தங்களுடைய பிள்ளைகளுக்கு போதிக்க வேண்டிய பொறுப்பை பெற்றோருக்கு கடவுள் கொடுத்திருந்தார். தகப்பன்மாருக்கு மோசே இவ்வாறு புத்திமதி கூறினார்: “இன்று நான் உனக்குக் கட்டளையிடுகிற இந்த வார்த்தைகள் உன் இருதயத்தில் இருக்கக்கடவது. நீ அவைகளை உன் பிள்ளைகளுக்குக் கருத்தாய்ப் போதித்து, நீ உன் வீட்டில் உட்கார்ந்திருக்கிறபோதும், வழியில் நடக்கிறபோதும், படுத்துக்கொள்ளுகிறபோதும், எழுந்திருக்கிறபோதும் அவைகளைக் குறித்துப் பே[சு].” (உபாகமம் 6:6, 7) தாய்மாரும் ஓரளவு செல்வாக்கு செலுத்தினார்கள். தன்னுடைய கணவனின் அதிகாரத்திற்கு உட்பட்டு, ஒரு எபிரெய மனைவி குடும்ப சட்டத்தை அமல்படுத்த முடிந்தது.
சொல்லப்போனால், பைபிள் முழுவதிலும் குடும்பமே கல்வியை வழங்கும் ஆரம்ப பாடசாலை. விசுவாசமுள்ள தங்களுடைய பெற்றோருக்கு பிள்ளைகள் கீழ்ப்படிய வேண்டும். இவ்வாறு அவர்கள் செய்வது அடையாள அர்த்தத்தில் சொல்லப்போனால், அவர்கள் தங்களை கனம் எனும் அழகிய ஆபரணங்களால் அலங்கரிப்பதைப் போல் இருக்கிறது.
“தன்னையுடையவர்களின் உயிரை வாங்கும்”
உயர் கல்வி கற்பதற்காக அமெரிக்காவிற்கு அனுப்பும்முன் தன்னுடைய 16 வயது மகனிடம், கெட்ட ஆட்களோடு பழகக்கூடாது என ஆசிய தகப்பன் ஒருவர் அறிவரை கூறினார். இது சாலொமோனின் எச்சரிக்கையை எதிரொலிக்கிறது: “என் மகனே, பாவிகள் உனக்கு நயங்காட்டினாலும் நீ சம்மதியாதே.” (நீதிமொழிகள் 1:10) ஆனால் சாலொமோன் அவர்கள் பயன்படுத்தும் கண்ணியை சுட்டிக்காட்டுகிறார்: “எங்களோடே வா, இரத்தஞ்சிந்தும்படி நாம் பதிவிருந்து, குற்றமற்றிருக்கிறவர்களை முகாந்தரமின்றிப் பிடிக்கும்படி ஒளித்திருப்போம்; பாதாளம் விழுங்குவதுபோல் நாம் அவர்களை உயிரோடே விழுங்குவோம்; குழியில் இறங்குகிறவர்கள் விழுங்கப்படுவதுபோல் அவர்களை முழுமையும் விழுங்குவோம்; விலையுயர்ந்த சகலவிதப் பொருள்களையும் கண்டடைவோம்; கொள்ளைப் பொருளினால் நம்முடைய வீடுகளை நிரப்புவோம். எங்களோடே பங்காளியாயிரு; நம்மெல்லாருக்கும் ஒரே பை இருக்கும்.”—நீதிமொழிகள் 1:11-14.
செல்வந்தராக வேண்டும் என்பதே அந்தக் கண்ணி என்பதில் சந்தேகமில்லை. சீக்கிரம் லாபம் சம்பாதிக்க வேண்டுமென்ற ஆசையில், “பாவிகள்” தங்களுடைய வன்முறைமிக்க அல்லது அநியாயமான திட்டங்களில் மற்றவர்களை கவர்ந்திழுக்கிறார்கள். பொருளாதார ஆதாயத்திற்காக இரத்தம் சிந்தவும் இந்தப் பொல்லாதவர்கள் தயங்குவதில்லை. ‘தங்களுக்கு பலியாகிறவர்களை பாதாளம் விழுங்குவதுபோல் உயிரோடே விழுங்குகிறார்கள், அவர்களை முழுமையாயும் விழுங்குகிறார்கள்.’ பிரேதக் குழி முழு உடலையும் வாங்கிக்கொள்வதுபோல, ஒருவனிடமுள்ள எல்லாவற்றையும் பறித்துக்கொள்கிறார்கள். அவர்கள் விடுக்கும் அழைப்பு குற்றச்செயலையே வாழ்க்கைத் தொழிலாக கொண்டிருப்பதற்கே—அவர்கள் ‘தங்களுடைய வீடுகளை கொள்ளைப் பொருளினால் நிரப்ப’ விரும்புகிறார்கள். அனுபவமற்றவர்கள் ‘தங்களோடே பங்காளியாயிருக்கும்படி’ விரும்புகிறார்கள். இது நமக்கு காலத்திற்கேற்ற எவ்வளவு நல்ல அறிவுரை! தங்களது கோஷ்டியில் ஆட்களை சேர்ப்பதற்கு இளைஞர் கும்பலும் போதை மருந்து வியாபாரிகளும் இதுபோன்ற முறைகளையே பயன்படுத்துகிறார்கள் அல்லவா? சீக்கிரத்தில் பணக்காரராவதற்கு கொடுக்கப்படும் உறுதியே அநேகரை கேள்விக்குரிய வியாபாரத்தில் ஈடுபடுவதற்கு தூண்டுகிறது அல்லவா?
“என் மகனே, நீ அவர்களோடே வழிநடவாமல், உன் காலை அவர்கள் பாதைக்கு விலக்குவாயாக. அவர்கள் கால்கள் தீங்குசெய்ய ஓடி, இரத்தஞ்சிந்தத் தீவிரிக்கிறது” என ஞானமுள்ள அந்த ராஜா அறிவுரை கூறுகிறார். அவர்களுக்கு ஏற்படும் கோரமான முடிவை முன்னுரைத்து தொடர்ந்து இவ்வாறு கூறுகிறார்: “எவ்வகையான பட்சியானாலும்சரி, அதின் கண்களுக்கு முன்பாக வலையை விரிப்பது விருதா. இவர்களோ தங்கள் இரத்தத்திற்கே பதிவிருக்கிறார்கள், தங்கள் பிராணனுக்கே ஒளிவைத்திருக்கிறார்கள். பொருளாசையுள்ள எல்லாருடைய வழியும் இதுவே; இது தன்னையுடையவர்களின் உயிரை வாங்கும்.”—நீதிமொழிகள் 1:15-19.
“தீய முறையில் பணம் சேர்க்கும் அனைவரின் முடிவும்” இப்படியே அழிவுக்கு வழிநடத்தும். மற்றவர்களுக்காக இவர்கள் தோண்டிய குழியில், கடைசியில் இவர்களே விழுவார்கள். பிடிவாதமாக தீமை செய்பவர்கள் தங்களுடைய வழியை மாற்றிக்கொள்வார்களா? இல்லை. வலை நன்றாக தெரியலாம், ஆனால் பறவைகள் சரியாக அதற்குள்ளேயே வந்து மாட்டிக்கொள்கின்றன. அதுபோலவே, பொல்லாதவர்களும் பேராசையால் குருடாக்கப்பட்டவர்களாக, இப்பவோ அப்பவோ பிடிபடுகிறபோதிலும், குற்றச்செயல்களில் தொடர்ந்து ஈடுபடுகிறார்கள்.
ஞானத்தின் கூக்குரலுக்கு யார் செவிசாய்ப்பார்?
தங்களுடைய வழி அழிவுக்குரியது என்பதை பாவிகள் உண்மையிலேயே அறிந்திருக்கிறார்களா? தங்களுடைய வழிகளின் விளைவை பற்றி எச்சரிக்கப்பட்டிருக்கிறார்களா? அறியாமை சாக்குப்போக்கல்ல, ஏனெனில் பொது இடங்களில் நேரடியான செய்தி வெளிப்படையாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சாலொமோன் இவ்வாறு அறிவிக்கிறார்: “ஞானமானது வெளியே நின்று கூப்பிடுகிறது, வீதிகளில் சத்தமிடுகிறது. அது சந்தடியுள்ள தெருக்களின் சந்திலும், ஒலிமுகவாசலிலும் நின்று கூப்பிட்டு, பட்டணத்தில் தன் வார்த்தைகளை வசனித்துச் சொல்லுகிறது.” (நீதிமொழிகள் 1:20, 21) சத்தமான, தெளிவான குரலில், எல்லாரும் கேட்கத்தக்க விதத்தில் பொது இடங்களில் ஞானம் கூக்குரலிடுகிறது. பூர்வ இஸ்ரவேலில் முதியோர்கள் பட்டணத்தின் வாசல்களில் ஞானமான அறிவுரைகளையும் நீதிவிசாரணை தீர்ப்புகளையும் வழங்கினார்கள். யெகோவா நமக்காக தம்முடைய வார்த்தையாகிய பைபிளில் மெய் ஞானத்தைப் பதிவுசெய்து வைத்திருக்கிறார், அது இன்று பரவலாக கிடைக்கிறது. எல்லா இடங்களிலும் வெளிப்படையாக அவருடைய ஊழியர்கள் சுறுசுறுப்பாக அதன் செய்தியை அறிவித்து வருகிறார்கள். நிச்சயமாகவே கடவுள் எல்லாருக்கும் ஞானத்தை அறிவிக்கும்படி செய்திருக்கிறார்.
மெய் ஞானம் என்ன சொல்கிறது? “நீங்கள் பேதைமையை விரும்புவதும், நிந்தனைக்காரரே, நீங்கள் நிந்தனையில் பிரியப்படுவதும், மதியீனரே, நீங்கள் ஞானத்தை வெறுப்பதும், எதுவரைக்கும் இருக்கும். . . . நான் கூப்பிட்டும், நீங்கள் கேட்கமாட்டோம் என்கிறீர்கள்; நான் என் கையை நீட்டியும் கவனிக்கிறவன் ஒருவனும் இல்லை.” மூடர்கள் ஞானத்தின் சத்தத்திற்கு செவிசாய்ப்பதில்லை. அதன் விளைவாக, “அவர்கள் தங்கள் வழியின் பலனைப் புசிப்பார்கள்.” ‘மாறுபாடும் மூடரின் நிர்விசாரம் அவர்களை அழிக்கும்.’—நீதிமொழிகள் 1:22-32.
ஞானத்தின் குரலை கேட்க நேரம் செலவழித்தவர்களைப் பற்றியென்ன? “எனக்குச் செவிகொடுக்கிறவன் எவனோ, அவன் விக்கினமின்றி வாசம்பண்ணி, ஆபத்திற்குப் பயப்படாமல் அமைதியாயிருப்பான்.” (நீதிமொழிகள் 1:33) பைபிள் நீதிமொழிகளுக்கு கவனம் செலுத்துவதன் மூலம் ஞானத்தை அடைந்து சிட்சையை ஏற்றுக்கொள்கிறவர்கள் மத்தியில் நீங்களும் இருப்பீர்களாக.
[பக்கம் 15-ன் படம்]
மெய் ஞானம் பரவலாக கிடைக்கிறது