திருத்தமான அறிவினால் உங்கள் சமாதானம் பெருகச் செய்யுங்கள்
“கடவுளையும் நம்முடைய கர்த்தராகிய இயேசுவையும் பற்றிய திருத்தமான அறிவினால் தகுதியற்றத் தயவும் சமாதானமும் உங்களுக்குப் பெருகுவதாக.”—2 பேதுரு 1, 2, NW.
உங்கள் முழுக்காட்டின்போது யெகோவா தேவனோடு நிலைநாட்டப்பட்ட சமாதான உறவு, சில வகைகளில், ஒரு திருமணத்தைப் போலிருக்கிறது. திருமண நாள் மகிழ்ச்சி நிரம்பியதாயிருந்தாலும், அது அருமையான உறவின் தொடக்கம் மட்டுமேயாகும். முயற்சி, காலம், அனுபவம் ஆகியவற்றோடு மண உறவு இன்னும் மிக அருமையாகவும் வளரும், துயர காலங்களின்போது புகலிடமாகும். இவ்வாறே, ஊக்கமான உழைப்பாலும் யெகோவாவின் உதவியுடனும் அவரோடு உங்கள் சமாதானத்தை நீங்கள் பெருகச் செய்யமுடியும்.
2 “விசுவாசத்தைப் பெற்றவர்கள்” கடவுளோடு தங்கள் சமாதானத்தை எப்படி உறுதிப்படுத்தலாமென அப்போஸ்தலனாகிய பேதுரு விளக்கினான். அவன் எழுதினதாவது, “கடவுளையும் நம்முடைய கர்த்தராகிய இயேசுவையும் பற்றிய திருத்தமான அறிவினால் தகுதியற்றத் தயவும் சமாதானமும் உங்களுக்குப் பெருகுவதாக.”—2 பேதுரு 1:1, 2, NW.
“கடவுளைப் பற்றிய திருத்தமான அறிவு”
3 இந்தச் சந்தர்ப்பத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள “திருத்தமான அறிவு” என்பதற்குரிய கிரேக்கச் சொல் (எப்பிக்னாஸிஸ்), மேலும் ஆழ்ந்த, மேலும் மிக நெருங்கிய அனுபவ அறிவைக் குறிக்கிறது. இதன் வினைச்சொல், சொந்த அனுபவத்தால் அடைந்த அறிவைக் குறிக்கலாம், இது லூக்கா 1:3-ல் (தி.மொ.), “முற்றும் அறிந்துகொள்” என்று மொழிபெயர்த்திருக்கிறது. கிரேக்கப் புலவர் கல்வெர்வெல், இந்தச் சொல் தனக்கு, “நான் முன்பு அறிந்த ஒன்றுடன் மேலுமதிக நன்றாய் அறிமுகமாதலை, முன்பு நான் தூரத்தில் கண்ட ஒரு பொருளை மேலும் “நுட்பதிருத்தமாய் நோக்குதலைக்” குறிக்கிறதென விளக்குகிறார். இத்தகைய “திருத்தமான அறிவை” அடைவது, யெகோவாவையும் இயேசுவையும் ஆட்களாக மேலும் நெருங்கிய அனுபவத்தில் அறிந்து கொண்டிருப்பதை, அவர்களுடைய பண்புகளோடு மேலும் நன்றாய்ப் பழக்கப்பட்டவர்களாகி வருவதை உட்படுத்துகிறது.
4 நல்ல தனிப்பட்ட படிப்பு பழக்கங்களும் கடவுளுடைய ஜனங்களின் கூட்டங்களுக்குத் தவறாமல் வருவதும் இந்த அறிவை அடைவதற்குரிய இரண்டு வழிகள். கடவுள் தம்மை எப்படி நடத்திக்கொள்கிறார் அவர் என்ன நினைக்கிறார் என்பவற்றை இந்த வழிகளில் நீங்கள் மிகத் தெளிவாய்க் கற்றுக்கொள்வீர்கள். அவருடைய தனி சுபாவத்தின் சாயலைப் பற்றிய அதிகத் தெளிவான மனத்தோற்றம் உங்களுக்கு அமையும். ஆனால் கடவுளை நெருங்கிய அனுபவத்தில் அறிவது, இந்தச் சாயலைப் பின்பற்றி நடப்பதையும் பிரதிபலிப்பதையும் குறிக்கிறது. உதாரணமாக, கடவுளுடையதைப் போன்ற தன்னலமற்றத் தன்மையைப் பிரதிபலித்த ஒருவனைப்பற்றி யெகோவா விவரித்து, அதன்பின் அவர் சொன்னதாவது: “அப்படிச் செய்வதல்லவோ என்னை அறிகிற அறிவு.” (எரேமியா 22:15, 16; எபேசியர் 5:1) கடவுளை மேலும் நெருங்கிய முறையில் பின்பற்றி நடப்பது அவரோடு உங்கள் சமாதானத்தைப் பெருகச் செய்கிறது, ஏனென்றால் புதிய சுபாவத்தைத் தரித்துக்கொள்வதில் நீங்கள் முன்னேறுகிறீர்கள், அது “தன்னைச் சிருஷ்டித்தவரின் சாயலுக்கிசைவாய்த் திருத்தமான அறிவினால் புதிதாக்கப்படுகிறது.” நீங்கள் கடவுளுக்கு மேலுமதிகப் பிரியமுள்ளவர்களாகிறீர்கள்.—கொலோசெயர் 3:10, NW.
5 லின் என்ற கிறிஸ்தவ பெண், உடன் கிறிஸ்தவ பெண்ணுடன் ஏற்பட்ட ஏதோ மனவேறுபாட்டின் காரணமாக அவளுக்கு மன்னிப்பதைக் கடினமாகக் கண்டாள். ஆனால் லின்னின் கவனமான தனிப்பட்ட படிப்பு, அவள் தன் மனப்பான்மையைச் சோதித்துப் பார்க்கச் செய்தது. “யெகோவா எம்மாதிரியான கடவுள், அவர் வன்மத்தை மனதில் பேணி வைக்கிறவரல்ல என்பதை நான் நினைவுக்குக் கொண்டுவந்தேன்,” என்று அவள் ஒப்புக்கொண்டாள். “ஒவ்வொரு நாளும் நாம் யெகோவாவுக்கு விரோதமாகச் செய்கிற எல்லா சிறுசிறு காரியங்களையும் நான் நினைத்துப் பார்த்தேன், என்றாலும் அவர் அவற்றை மனதில் வைக்கிறதில்லை. என் கிறிஸ்தவ சகோதரியோடு ஏற்பட்ட இந்தக் காரியம், ஒப்பிட்டுப் பார்க்கையில் மிகச் சிறியதே. ஆகவே அவளைப் பார்த்தபோதெல்லாம், ‘யெகோவா என்னை நேசிப்பதைப் போலவே அவளையும் நேசிக்கிறார்,’ என்று நான் எனக்குள் சொல்லிக்கொண்டேன். இது அந்தப் பிரச்னையிலிருந்து விடுபட எனக்கு உதவிசெய்தது.” நீங்களுங்கூட யெகோவாவை மேலுமதிக உன்னிப்பாய்க் கவனித்துப் பின்பற்றி நடப்பதற்குத் தேவைப்படும் இடங்களை உங்களில் காண்கிறீர்களா?—சங்கீதம் 18:35; 103:8, 9; லூக்கா 6:36; அப்போஸ்தலர் 10:34, 35; 1 பேதுரு 1:15, 16.
கிறிஸ்துவைப் பற்றிய திருத்தமான அறிவு
6 இயேசுவைப் பற்றிய திருத்தமான அறிவைக் கொண்டிருக்க “கிறிஸ்துவின் சிந்தை”யைக் கொண்டிருந்து அவருடைய மாதிரியைப் பின்பற்ற வேண்டும். (1 கொரிந்தியர் 2:16) இயேசு சத்தியத்தை யாவரறிய மிக ஆர்வத்துடன் பிரசங்கித்தவர். (யோவான் 18:37) நற்செய்தியை எங்கும் பிரசங்கிக்கும் அவருடைய ஊக்கம் மிகுந்த ஆவி, சமுதாய தப்பெண்ணங்களால் தடைசெய்யப்படவில்லை. மற்ற யூதர்கள் சமாரியரைப் பகைத்தப் போதிலும், அவர் கிணற்றண்டையில் சமாரிய ஸ்திரீக்குச் சாட்சி கொடுத்தார். பொது மக்கள் முன்னிலையில் எந்தப் பெண்ணிடமாவது நெடுநேரம் பேசுவதுங்கூட ஒருவேளை அவர்களால் வெறுப்பாய்க் கருதப்பட்டிருக்கலாம்.a ஆனால் இயேசு, சமுதாய உணர்ச்சிகள் தான் சாட்சிகொடுப்பதை நிறுத்த வைக்க இடங்கொடுக்கவில்லை. கடவுளுடைய வேலை களைப்பாற்றி உயிர்ப்பித்தது. அவர் சொன்னதாவது: “என்னை அனுப்பினவருடைய சித்தத்தைச் செய்து அவருடைய வேலையை முடிப்பதே என் போஜனம்.” அந்தச் சமாரிய ஸ்திரீயையும் அந்தப் பட்டணத்து ஜனங்கள் பலரையும் போல், ஆட்கள் பிரதிபலிப்பதைக் காண்பதன் மகிழ்ச்சியே உணவைப்போல் இயேசுவைத் தொடர்ந்து ஊக்குவித்தது.—யோவான் 4:4-42; 8:48.
7 இயேசு உணர்ந்ததைப் போல் நீங்கள் உணருகிறீர்களா? முன்பின் தெரியாத ஒரு அன்னியரிடம் பைபிளைப் பற்றிய உரையாடலைத் தொடங்குவது பலருக்குக் கடினமானது மேலும் சமுதாயத்தில் மற்றவர்கள் அதை அநேகமாய் வெறுப்புடன் நோக்குவார்களென்பதும் மெய்யே. எனினும், இயேசு கொண்டிருந்த அதே மனப்பான்மையைக் கொண்டிருக்க, நாம் சாட்சி கொடுக்க வேண்டும் என்ற இந்த உண்மையை நாம் தப்பிக்கொள்ள முடியாது. நிச்சயமாகவே, எல்லாரும் பிரசங்க வேலையை ஒரே அளவில் செய்ய முடியாது. இது நம்முடைய திறமைகளுக்கும் சூழ்நிலைமைகளுக்கும் தக்கவாறு வேறுபடுகிறது. ஆகவே உங்கள் பரிசுத்த சேவையில் கடவுள் ஒருபோதும் திருப்தியடைய மாட்டாரென உணரவேண்டாம். எனினும், இயேசுவைப் பற்றிய நம்முடைய அறிவு, நம்மால் கூடிய மிகச் சிறந்ததைச் செய்ய நம்மைத் தூண்டுவிக்க வேண்டும். முழு ஆத்துமாவோடும் சேவை செய்யும்படி இயேசு ஊக்குவித்தார்.—மத்தேயு 13:18-23; 22:37.
பொல்லாங்கை வெறுக்க வேண்டும்
8 இயேசுவும் யெகோவாவும் வெறுக்கும் காரியங்களைத் தெரிந்துணரவும் திருத்தமான அறிவு நமக்கு உதவி செய்கிறது. (எபிரெயர் 1:9; ஏசாயா 61:8) “யெகோவா வெறுக்கின்றவைகள் ஆறு, ஏழும் அவருக்கு அருவருப்பே; அகந்தைக் கண், பொய்நாவு, குற்றமில்லா ரத்தம் சிந்துங் கை, தீய சூழ்ச்சி பிணைக்கும் இதயம், பொல்லாங்குக்கு விரைந்தோடுங் கால், பொய் உரைக்கும் கள்ளச் சாட்சி, சகோதரருக்குள் சண்டை விதைப்பது ஆகிய இவையே.” (நீதிமொழிகள் 6:16-19) இந்த மனப்பான்மைகளும் நடத்தை முறைகளும் “அவருடைய ஆத்துமாவுக்கு அருவருப்பானவை.” (NW) இங்கே “அருவருப்பானவை” என்று மொழிபெயர்த்திருக்கும் எபிரெய சொல், “வெறுப்படைவது, குமட்டலுணர்ச்சிகொள்வது,” “எல்லா உணர்வுகளுக்கும் அருவருப்பூட்டுவதைப்போல் வெறுத்துத் திரும்புவது,” “அறவே வெறுப்பது,” “நேர்மையான கோபத்துடன் வெறுப்பது,” என்று பொருள்படும் சொல்லிலிருந்து வருகிறது. ஆகவே கடவுளோடு சமாதானமாயிருக்க, நாமும் இதைப்போன்ற வெறுப்பை நம்மில் வளர்க்க வேண்டும்.
9 உதாரணமாக, “அகந்தைக் கண்”களையும் எவ்வகையான பெருமை பகட்டையும் அறவே வெறுத்துவிலக்க வேண்டும். முழுக்காட்டுக்குப் பின்பு சிலர், தங்களுக்குக் கற்பித்தவர்களின் ஒழுங்கான உதவி தங்களுக்கு இனிமேலும் தேவையில்லையென உணர்ந்திருக்கின்றனர். ஆனால் புதிய கிறிஸ்தவர்கள் சத்தியத்தில் நன்றாய் ஊன்றி உறுதிப்படும்படி மனத்தாழ்மையுடன் உதவியை ஏற்க வேண்டும். (கலாத்தியர் 6:6) மேலும், எளிதில் “சகோதரருக்குள் சண்டை விதை”க்கச் செய்யும் வீண்பேச்சைத் தவிருங்கள். கேள்விப்பட்ட அன்பற்றச் செய்தியை, நேர்மையென நிலைநாட்ட முடியாதக் குறைகூறுதலை, அல்லது பொய்களைப் பரவச் செய்வதால், நாம் “குற்றமில்லா ரத்தம் சிந்”தாதிருக்கலாம், ஆனால் நிச்சயமாகவே நாம் மற்றொரு ஆளின் நற்பெயரை அழித்துப்போடக்கூடும். நம்முடைய சகோதரருடன் நாம் சமாதானமாயிராவிடில் கடவுளுடன் நாம் சமாதானமாயிருக்க முடியாது. (நீதிமொழிகள் 17:9; மத்தேயு 5:23, 24) “மனைவியைத் தள்ளிவிடுவது எனக்கு வெறுப்பு,” எனவும் கடவுள் தம்முடைய வார்த்தையில் சொல்லுகிறார். (மல்கியா 2:14, 16) ஆகவே உங்களுக்குத் திருமணமாகியிருந்தால், உங்கள் திருமண பிணைப்பை உறுதியாய்க் காத்து வைக்க உழைக்கிறீர்களா? மற்றொருவரின் மணத் துணைவருடன் விளையாட்டுக் காதல் புரிவதும் மட்டுக்குமீறி நெருங்கிய பழக்கம் வைத்துக்கொள்வதும் உங்களை அருவருப்படைய செய்கிறதா? யெகோவாவைப் போல் நீங்கள் பால் சம்பந்த ஒழுக்கக்கேட்டை அருவருக்கிறீர்களா? (உபாகமம் 23:17, 18) இத்தகைய பழக்கச் செயல்களை வெறுப்பது எளிதல்ல, ஏனெனில் இவை நம்முடைய பாவ மாம்சத்துக்குக் கவர்ச்சியூட்டலாம், மேலும் இவ்வுலகத்தில் இவை நகையாடலுக்குரிய காரியங்களாயிருக்கின்றன.
10 ஆவிக்கொள்கை, பால் சம்பந்த ஒழுக்கக்கேடு வன்முறைச் செயல்கள் ஆகியவற்றை முதன்மைப்படுத்திக் காட்டும் திரைபடங்களை, டெலிவிஷன் நிகழ்ச்சிநிரல்களை அல்லது புத்தகங்களைப் பொழுதுபோக்காக அனுபவிப்பதைத் தவிருங்கள், இவ்வாறு செய்வது பொல்லாங்கை வெறுக்கும் தன்மையை உங்களில் வளர்ப்பதற்கு உதவியாயிருக்கும். (உபாகமம் 18:10-12; சங்கீதம் 11:5) இத்தகைய பொழுதுபோக்கு, தவறு செய்தலை ‘அவ்வளவு கெட்டதொன்றுமில்லை’ என்பதுபோல் அல்லது சிரிப்பூட்டுவதாகவுங்கூடத் தோன்றச் செய்வதால், அதை வெறுக்கும் தெய்வீக வெறுப்பை வளர்க்க எடுக்கும் முயற்சிகளைக் கெடுத்துப் போடுகிறது. அதற்கு மாறாக, ஊக்கமான ஜெபம் உதவி செய்யும், இயேசு பின்வருமாறு சொன்னார்: “நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு விழித்திருந்து [தொடர்ந்து, NW] ஜெபம்பண்ணுங்கள்; ஆவி உற்சாகமுள்ளதுதான், மாம்சமோ பலவீனமுள்ளது.” (மத்தேயு 26:41) பலத்த மாம்ச இச்சையை எதிர்ப்பட்டிருந்ததைக் குறித்து, கிறிஸ்தவர் ஒருவர் பின்வருமாறு கூறினார்: “ஜெபிக்கும்படி நான் என்னை வற்புறுத்திக் செய்விக்கிறேன். சில சமயங்களில் நான் யெகோவாவை அணுகுவதற்குத் தகுதியற்றவனாக உணருகிறேன், ஆனால் என்னை வற்புறுத்தி அவ்வாறு செய்ய வைப்பதனால், அவரை நோக்கி வேண்டிக்கொள்வதனால், எனக்குத் தேவையான பலத்தை அடைகிறேன்.” தவறு செய்வதன் வேதனையான விளைவுகளை நீங்கள் மனதில் எண்ணிப் பார்த்தால் அதை யெகோவா வெறுப்பதன் காரணத்தை மேலும் நன்றாய் விளங்கிக்கொள்வீர்கள்.—2 பேதுரு 2:12, 13.
11 கடவுளோடு சமாதானம் உங்களுக்கு இருந்தபோதிலும், அன்றாடக நெருக்கடிகளாலும் சோதனைகளாலும் உங்கள் சொந்தப் பலவீனங்களாலுங்கூட நீங்கள் தொல்லைப்படுத்தப்படலாம். நீங்கள் உங்களை, பிசாசின் விசேஷித்தக் குறியிலக்காக்கியிருக்கிறீர்கள் என்பதை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள். கடவுளின் கட்டளைகளைக் கைக்கொள்ளுகிறவர்களும் யெகோவாவின் சாட்சிகளுமாயிருப்போருக்கு விரோதமாக அவன் போரிடுகிறான்! (வெளிப்படுத்துதல் 12:17) அப்படியானால், உங்கள் மனதின் ஆழத்திலுள்ள சமாதானத்தை அழியாமல் காத்துவருவது எப்படி?
சமாதானத்தைக் குலைக்கும் தீங்குகளை எதிர்த்துச் சமாளித்தல்
12 “நீதிமானுக்கு வரும் தீங்குகள் அநேகம்,” என்று தாவீது, சங்கீதம் 34:19-ல் எழுதினான். இந்தச் சங்கீதத்தின் மேற்குறிப்பின் பிரகாரம், தாவீது, மரணத்தை நெருங்க எதிர்ப்பட்டதைப் பின்தொடர்ந்து இதை எழுதினான். தாவீது, அரசனாகிய சவுலுக்குத் தப்பியோடி, காத்தின் பெலிஸ்திய அரசன் ஆகீசிடத்தில் அடைக்கலத்தைத் தேடிச் சென்றான். அந்த அரசனின் ஊழியர்கள் தாவீதை அடையாளங்கண்டுகொண்டு, இஸ்ரவேலுக்காக அவன் முன்பு செய்த இராணுவ வீரச் செயல்களை நினைவுக்குக் கொண்டுவந்து ஆகீசிடம் முறையிட்டார்கள். அவர்கள் பேசுவதை தாவீது உற்றுக்கேட்டபோது, “இந்த வார்த்தைகளைத் தன் மனதிலே வைத்துக்கொண்டு, காத்தின் ராஜாவாகிய ஆகீசுக்கு மிகவும் பயப்பட்”டான். (1 சாமுவேல் 21:10-12) எப்படியும், அது கோலியாத்தின் சொந்த ஊராயிருந்தது, தாவீது அவர்கள் வீரனைக் கொன்றிருந்தான்—அந்த இராட்சதனின் பட்டயத்தையுங்கூட உடன் கொண்டிருந்தான்! அந்த மிகப் பெரிய பட்டயத்தை அவனுடைய தலையை வெட்டுவதற்கு அவர்கள் இப்பொழுது பயன்படுத்துவார்களா? தாவீது என்ன செய்ய முடியும்?—1 சாமுவேல் 17:4; 21:9.
13 தாவீது, உதவிக்காகக் கடவுளை நோக்கி ஊக்கமாய்க் கூப்பிட்டு மன்றாடினான். “இந்த ஏழை கூப்பிட்டான், யெகோவா கேட்டருளி அவனுடைய சகல இடுக்கண்களினின்றும் அவனை விடுவித்து ரட்சித்தார்,” என்று தாவீது சொன்னான். மேலும் அவன்: “என் எல்லாப் பயத்தினின்றும் என்னை விடுவித்தார்,” என்றும் சொன்னான். (சங்கீதம் 34:4, 6, 15, 17, தி.மொ.) கவலைக்கிடமான காலங்களின்போது உங்கள் இருதயத்தை அவர் சமுகத்தில் ஊற்றி, யெகோவாவிடம் மன்றாடுவதற்கு நீங்களும் கற்றிருக்கிறீர்களா? (எபேசியர் 6:18; சங்கீதம் 62:8) உங்களுடைய தனிப்பட்ட இக்கட்டு ஒருவேளை தாவீதினுடையதைப் போல் அவ்வளவு நாடகபாணியான முறையில் இராதென்றாலும், சரியான நேரத்தில் கடவுள் உங்களுக்கு உதவியைக் கொடுப்பதை நீங்கள் காண்பீர்கள். (எபிரெயர் 4:16) ஆனால் தாவீது ஜெபித்தது மட்டுமல்லாமல் மேலுமதிகத்தைச் செய்தான்.
14 தாவீது, “அவர்களுக்கு எதிரே புத்திமாறாட்டமுள்ளவன் போல் நடந்து பித்தங்கொண்டவனாக அவர்கள் நடுவில் நடித்து . . . கொண்டிருந்தான். . . . அது கண்ட ஆகீஸ் தன் ஊழியக்காரரிடம்: இதோ, இந்த மனிதன் பைத்தியம் பிடித்தவன் என்று உங்களுக்குத் தெரிகிறதே; இவனை நீங்கள் என்னிடம் கொண்டுவந்தது என்ன? . . . என்று கேட்டான்.” (1 சாமுவேல் 21:13-15, தி. மொ.) தாவீது ஒரு சூழ்ச்சிமுறையை யோசனை செய்து அதால் தப்பினான். யெகோவா அவனுடைய முயற்சிகளை ஆசீர்வதித்தார். அதைப்போலவே, நாம் சிக்கலான பிரச்னைகளை எதிர்ப்பட்டிருக்கையில், அவற்றை அவர் நமக்காகத் தீர்த்து வைக்கும்படி வெறுமென எதிர்பார்க்கும்படியல்ல, நம்முடைய மனத் திறமைகளைப் பயன்படுத்தும்படி யெகோவா எதிர்பார்க்கிறார். அவர் தம்முடைய ஏவப்பட்ட வார்த்தையை, நமக்குத் தந்திருக்கிறார், அது “பேதையர்க்கு . . . விவேகம் அளிக்கும், . . . அறிவும் யுக்தியும் [யோசிக்கும் திறமையும், NW] தரும்.” (நீதிமொழிகள் 1:4; 2 தீமோத்தேயு 3:16, 17) சபை மூப்பர்களையும் கடவுள் அளித்திருக்கிறார், இவர்கள், கடவுளுடைய தராதரங்களைக் காத்துவருவது எவ்வாறென்று அறிய நமக்கு உதவி செய்வார்கள். (1 தெசலோனிக்கேயர் 4:1, 2) அநேகந் தடவைகளில், இவர்கள், சரியான தீர்மானம் செய்வதில் அல்லது ஒரு பிரச்னையைச் சமாளிப்பதில் உதவிக்காக உவாட்ச் டவர் சங்கத்தின் பிரசுரங்களை ஆராய்வதில் உங்களுக்கு உதவி செய்யக்கூடும்.
15 நம்முடைய சொந்தப் பலவீனங்களின் அல்லது தோல்விகளினிமித்தம் நம்முடைய இருதயம் நம்மை வேதனைப்படுத்துகிறபோதுங்கூட, நாம் சரியான மனப்பான்மையைக் கொண்டிருந்தால், கடவுளுடன் நம்முடைய சமாதானத்தைக் காத்து வரலாம். சங்கீதம் 34:18-ல் தாவீது பின்வருமாறு எழுதினான்: “உடைந்த இருதயமுள்ளவர்களுக்கு யெகோவா சமீபம், நைந்த ஆவியுள்ளவர்களை ரட்சிக்கிறார்.” (தி.மொ.) நாம் மன்னிப்புக் கேட்டு, காரியங்களைத் திருத்துவதற்கு அவசியப்படும் நடவடிக்கைகளை எடுத்தால் (முக்கியமாய் வினைமையான மீறுதல் உட்பட்ட காரியங்களில்), யெகோவா நம் அருகில் இருந்து, உணர்ச்சி பிரகாரமாய் நம்மைத் தாங்குவார்.—நீதிமொழிகள் 28:13; ஏசாயா 55:7; 2 கொரிந்தியர் 7:9-11.
சொந்த அனுபவ அறிவு சமாதானம் தருகிறது
16 கடவுளைப் பற்றிய திருத்தமான அறிவை அடைவதற்கு ஆவிக்குரிய தகவலைப் பெற்று வருவதுமட்டுமல்லாமல், வேறொரு வழி, அவருடைய அன்புள்ள உதவியை நம் சொந்த வாழ்க்கையில் அனுபவிப்பதாகும். (சங்கீதம் 41:10, 11) இக்கட்டிலிருந்து விடுவிக்கப்படுவது ஒரு பிரச்னையின் உடனடியான அல்லது முழு முடிவை எப்பொழுதும் குறிக்கிறதில்லை; நீங்கள் அதைத் தொடர்ந்து சகிக்க வேண்டியதிருக்கும். (1 கொரிந்தியர் 10:13) காத்தில் தாவீதின் உயிர் தப்புவிக்கப்பட்டபோதிலும், ஒன்றன்பின் மற்றொன்றாக அபாயங்களை எதிர்ப்பட்டுக்கொண்டு, பல ஆண்டுகள் ஒளிந்தோடித் திரிபவனாக இருந்தான். இந்த எல்லாவற்றினூடேயும் தாவீது யெகோவாவின் கவனிப்பையும் உதவியையும் உணர்ந்தான். அவன் கடவுளோடு சமாதானத்தை நாடித் தேடிக் கண்டடைந்தான், மேலும் அப்படிச் செய்பவர்களுக்கு “ஒரு நன்மையுங் குறைவுபடாது,” என்று அவன் கற்றறிந்தான். தனக்குத் தீங்குண்டான துயர காலத்தின்போது யெகோவா உதவிசெய்ததைத் தன் சொந்த அனுபவத்தில் கண்டுணர்ந்து, தாவீது பின்வருமாறு சொல்ல முடிந்தது: “யெகோவா நல்லவர் என்று ருசித்தறியுங்கள்; அவரில் அடைக்கலம் புகும் மனுஷன் பாக்கியவான் [சந்தோஷமுள்ளவன், NW].”—சங்கீதம் 34:8-10, 14, 15, தி.மொ.
17 துன்பங்கள் உண்டாயிருக்கும்போது யெகோவாவில் அடைக்கலம், புகுவது “யெகோவா நல்லவர் என்று ருசித்தறிவ”தையும் உங்களுக்குக் கூடியதாக்கும். ஐக்கிய மாகாணங்களின் மத்திப மேற்குப் பகுதியில் ஒரு கிறிஸ்தவர், ஒரு விபத்தின் காரணமாக, 14 ஆண்டுகள் தாம் கொண்டிருந்த நல்ல சம்பளம் தரும் வேலையை இழந்துவிட்டார். அவர்களுக்கு வேறு வருவாய் இராததனால், அவரும் அவருடைய குடும்பமும் கடவுளை நோக்கி மன்றாடினார்கள். எனினும், அதே சமயத்தில், செலவுகளைக் குறைத்தார்கள், உணவுக்காக அருகிலிருந்த வயல்களில் கீழே சிதறிக் கிடப்பவற்றைப் பொறுக்கிச் சேர்த்தார்கள், மீன்களைப் பிடித்தார்கள். சபையிலுள்ள சிலருடைய உதவியாலும், கிடைக்கக் கூடியபோதெல்லாம் பகுதி-நேர வேலை செய்தும், நான்கு பேர்களைக் கொண்ட இந்தக் குடும்பம் சமாளித்தது. இந்த விபத்துக்கு ஓர் ஆண்டுக்குப் பின், அந்தத் தாய் பின்வருமாறு சிந்தனை தரும் விளக்கமளித்தாள்: “நாம் உண்மையில் நம்முடைய சொந்தத் திறமைகளில், நம்முடைய மணத் துணைவரில், அல்லது நம்முடைய தொழிலில் நம்பிக்கை வைத்துக் கொண்டிருக்கையில், யெகோவாவில் நம்பிக்கை வைத்திருப்பதாக எண்ணி நம்மை நாமே ஏமாற்றிக் கொண்டிருக்கலாம். என்றாலும், நாங்கள், அவரில் மட்டுமே நம்பிக்கை வைத்திருக்க உண்மையில் கற்றுக்கொண்டோம். மற்றக் காரியங்கள் எடுத்துப்போடப்படலாம், ஆனால் யெகோவாவோ எங்களை ஒருபோதும் கைவிடவில்லை—ஒரு வினாடியும் விட்டகலவில்லை. குறைந்தத் தேவைப் பொருட்கள் மட்டுமே எங்களுக்கு இருக்கிறபோதிலும், குடும்பமாக யெகோவாவுடன் எங்கள் உறவு மிக அதிகம் நெருங்கியுள்ளது.
18 ஆம், பணசம்பந்த வறுமை விடாது தொடரலாம். அல்லது நாட்பட்ட உடல் நோயினால் தொல்லைப்படுத்தப்படலாம்; மற்றொருவரின் முரண்பட்ட பண்பினிமித்தம் மனச்சங்கடம்; மனச்சோர்வு போன்ற உணர்ச்சிவச கொந்தளிப்பு; அல்லது திரளான மற்றப் பிரச்னைகளில் ஒன்று ஒருவருக்குத் தொந்தரவு கொடுக்கலாம். எனினும், கடவுளை உண்மையில் அறிவதன் மூலம், அவருடைய உதவியில் உங்களுக்கு விசுவாசமிருக்கும். (ஏசாயா 43:10) இந்த முறிக்கமுடியாத நம்பிக்கை நீங்கள் சகித்து நிலைத்திருக்கவும் எல்லாப் புத்திக்கும் மேலான தேவசமாதானத்”தைக் கொண்டிருக்கவும் உங்களுக்கு உதவிசெய்யும்.—பிலிப்பியர் 4:7.
[அடிக்குறிப்புகள்]
a டால்முட்டின்படி, கற்றறிவாளர் ஒருவர் “தெருவில் ஒரு பெண்ணுடன் உரையாடக்கூடாது,” என்று பூர்வ ரபீக்கள் அறிவித்தனர். இயேசுவின் நாளில், இந்த வழக்கம் இருந்ததென்றால், அவருடைய சீஷர்கள், “அவர் ஸ்திரீயுடனே பேசுகிறதைப்பற்றி ஆச்சரியப்பட்ட”தற்கு இது காரணமாயிருக்கலாம்.
உங்களுக்கு நினைவிருக்கிறதா?
◻ கடவுளையும் இயேசுவையும் பற்றிய திருத்தமான அறிவை எவ்வழிகளில் நாம் அடையலாம்?
◻ கடவுளுடைய மற்றும் இயேசுவினுடைய மாதிரியைப் பின்பற்றி நடப்பது என்ன செய்யும்படி நம்மைச் செய்விக்கும்?
◻ கடவுள் பொல்லாங்கை வெறுக்கும் இந்த மாதிரியை நாம் பின்பற்றுவது எப்படி?
◻ தொல்லைகளின் மத்தியிலும் சமாதானத்தை நாம் எப்படிக் காத்துவரலாம்?
[கேள்விகள்]
1, 2. (எ) கடவுளுடன் கொள்ளும் சமாதான உறவை எப்படித் திருமணத்துக்கு ஒப்பிடலாம்? (பி) கடவுளுடன் நம்முடைய சமாதானத்தை நாம் எப்படி உறுதிப்படுத்தலாம்?
3. யெகோவாவையும் இயேசுவையும் பற்றிய திருத்தமான அறிவைக் கொண்டிருப்பதன் கருத்து என்ன?
4. கடவுளைப் பற்றிய நம்முடைய அறிவை நாம் எப்படி அதிகரிக்கலாம்? கடவுளுடன் நம்முடைய சமாதானத்தை இது ஏன் பெருகச் செய்கிறது?
5. (எ) திருத்தமான அறிவு ஒரு கிறிஸ்தவ பெண்ணுக்கு எப்படி உதவி செய்தது? (பி) எந்த வழிகளில் நாம் யெகோவாவை மேலுமதிக உன்னிப்பாய்க் கவனித்துப் பின்பற்றலாம்?
6. பிரசங்க வேலை நமக்கு முதன்மையான முக்கியத்துவமுடையதென இயேசு கிறிஸ்து எப்படிக் காட்டினார்?
7. (எ) இயேசுவைப் பற்றிய அறிவு என்ன செய்யும்படி நம்மைத் தூண்டுவிக்க வேண்டும்? (பி) தம்முடைய ஊழியர் எல்லாரும் பிரசங்க வேலையை ஒரே அளவில் செய்ய வேண்டுமென கடவுள் எதிர்பார்க்கிறாரா? விளக்குங்கள்.
8, 9. கடவுள் வெறுக்கிற காரியங்கள் சில யாவை? இதே வெறுப்பை நாம் எப்படிக் காட்டலாம்?
10. பொல்லாங்கை வெறுக்கும் தன்மையை நம்மில் எப்படி வளர்க்கலாம்?
11. என்ன காரியங்கள் சில சமயங்களில் நம்மைத் தொல்லைப்படுத்தலாம்?
12. (எ) 34-ம் சங்கீதம் என்ன சந்தர்ப்பச் சூழ்நிலைமையில் இயற்றப்பட்டது? (பி) இந்த அனுபவத்தின்போது தாவீதின் உணர்ச்சிகளை வேத எழுத்துக்கள் எவ்வாறு விவரிக்கின்றன?
13. இந்த இக்கட்டின்போது தாவீது என்ன செய்தான்? அவனுடைய முன்மாதிரியை நாம் எப்படிப் பின்பற்றலாம்?
14. தாவீது எப்படி “யோசிக்கும் திறமையைப்” பயன்படுத்தினான், அவ்வாறே செய்யும்படி நமக்கு உதவிசெய்ய கடவுள் என்ன தந்திருக்கிறார்?
15. சங்கீதம் 34:18 ஏன் ஆறுதல் தருகிறது?
16. (எ) கடவுளைப் பற்றிய திருத்தமான அறிவை நாம் அடைவதற்கு மற்றொரு வழி என்ன? (பி) “யெகோவா நல்லவர் என்று ருசித்தறியுங்கள்,” என்ற தாவீதின் கூற்றை விளக்குங்கள்.
17. துன்ப காலத்தின்போது யெகோவாவில் அடைக்கலம் புகுந்தது ஒரு குடும்பத்துக்கு என்ன பலனைக் கொண்டுவந்தது?
18. தொடர்ந்து நீடிக்கும் பிரச்னைகளைச் சகிப்பதற்கு எது உங்களுக்கு உதவிசெய்யும்?
19. நாம் படும் துன்பங்களை யெகோவா அற்பமாகக் கருதுகிறதில்லை என்பதை நாம் எப்படி அறிகிறோம்?
20. கடவுளுடன் நம்முடைய சமாதானத்தை எப்படிப் பெருகச் செய்யலாம்?
[பக்கம் 23-ன் படம்]
சமுதாய பாரம்பரிய தப்பெண்ணங்கள் தாம் சாட்சிகொடுப்பதைத் தடைசெய்ய இயேசு இடங்கொடுக்கவில்லை. பிரசங்கிப்பதற்கு அவருக்கிருந்த ஆர்வத்தை நீங்கள் பின்பற்றுகிறீர்களா?
[பக்கம் 24-ன் படம்]
கவலைக்கிடமான ஒரு பிரச்னையை எதிர்ப்படுகையில் தாவீது யெகோவாவிடம் மன்றாடினான் . . .
[பக்கம் 24-ன் படம்]
. . . மேலும் தப்பித்துக்கொள்ள பித்தங்கொண்டவனாக அவர்கள் நடுவில் நடித்தான். யெகோவா அவனுடைய ஜெபத்திற்கு செவிகொடுத்தார்